பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 28, 2014

மகேந்திரன் என்னும் திமுக தொண்டன்!

அது 1997. அப்போது நான் வெளிநாட்டில் சம்பாதிச்சது போதும் என முடிவெடுத்து இந்தியா வந்து பெரிய தொழிலதிபர்(???!) ஆகனும்னு நினைச்ச நேரம்! வெளிநாடு போய் பொண்டாட்டி புள்ளைகளை பார்க்காமல் இரவு பகல் என உழைத்து கையில் கொஞ்சம் காசு வந்த பின்னே வருமே ஒரு ஆசை. அது தான் எனக்கும் வந்தது!

வந்து ஆரம்பிச்ச பிஸினஸ் என்பது ஒரு மெத்தை கடை! duroflex, kurlon, fibroflex, sleep வெல், என எல்லாத்துக்கும் மாவட்ட டீலர்! ஓஹோன்னு போச்சுது. அப்போது என் கடைக்கு ஒரு ஆள் தேவைப்பட்ட போது என் நண்பன் அப்சரா கார்த்தி கிட்டே கேட்டேன். அவன் சொன்னான்... “ஒழுங்கா உழைக்கும் வர்க்கம் எனில்... சும்மா ஓப்பி அடிக்காம உழைக்கும் வர்க்கம் எனில் தாழ்த்தப்பட்ட வர்க்கம் தான். அவர்கள் தான் உண்மையான உழைப்பாளிகள்” என சொல்லி தன் கடையில் வேலை செய்த பகலவன் தம்பி மகேந்திரனை அனுப்பினான்.

கடை என்பதோ ஒரு மயிலாடுதுறையின் பிரபல மருத்துவமனை இருக்கும் கட்டிடம். அது முதல் மாடி! கீழே கடை . இரண்டாவது மாடியில் 12 வீடுகள். கிட்டதட்ட பத்து வீடுகள் டாக்டர்கள் வீடுகள். அதிலே என் வீடு 12ம் வீடு.

இவன் மகேந்திரன் காலை 9 மணிக்கு வருவான். இரவு 9 மணிக்கு போவான். அப்போது அபிபாப்பா அவங்க அம்மா வயிற்றில் 6 மாத குழந்தை!

இந்த மகேந்திரன் மற்றும் நான், என் மனைவி .... இது தான் குடும்பம். மதிய சாப்பாடு எங்கள் இருவருக்கும் (அல்ல மூவருக்கும்) என் மனைவி பிள்ளைதாச்சி எடுத்து இரண்டு மாடி இறங்கி எடுத்து வரும்.

கடையை பாதி ஷட்டர் எடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுவோம்.

பின்னர் என் மனைவி பிரசவத்துக்கு அவங்க வீட்டுக்கு போன பின்னே நானும் மகேந்திரன் மட்டுமே! மதிய சாப்பாடு அய்யப்பன்ல ஏதோ புரோட்டா வாங்கி வருவான். சாப்பிடுவோம். ஒரு நாள் என் மனைவிக்கு பிரசவ வலி என போன் வந்ததும் நான் ஓடினேன். அடுத்த நாள் காலை அவனும் வந்து விட்டான். வரும் போதே குழந்தைகளுக்கான ஒரு சின்ன Bet set வாங்கி வந்தான். வாங்கி வந்தான் என சொல்லக்கூடாது. எடுத்து வந்தான். ஏனனில் அது என் கடையில் இருக்கு. கொடுக்கும் போதே “அண்ணே, இது நான் எடுத்து வரலை, வாங்கிகிட்டு வந்திருக்கேன். என் சம்பளத்தில் கழிச்சுகுங்க” என சொன்ன போது சிரித்துக்கொண்டேன்.


பின்னர் அபி பிறந்து 3 மாதம் ஆன போது அவளுக்கு தாய் தந்தை முகம் தவிர மகேந்திரன் முகம் கூட தெரிந்தது. அவள் வளர வளர “அண்ணே, அண்ணே”ன்னு அவன் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு போகும் போது அழ ஆரம்பித்தாள்.

இப்படியாக இருக்கும் போது ஒரு நாள்... விடுதலை சிறுத்தைகள் ஒரு ஊர்வலம். என் கடையின் எதிரே தான் ஊராட்சி மன்ற அலுவலகம மற்றும் ஆர். டி ஓ ஆபீஸ். அதை நோக்கி ஊர்வலம். மிக கோபமாக சிறுத்தைகள் வர வர அங்கே கடைத்தெருவில் பல கடைகள் கண்ணாடிகள் உடைந்து விட்டது. விஷயம் போனில் வந்தது.

இங்கே போஸ்ட் ஆபீஸ் வழியே கூட்டம் நுழைந்ததும் மகேந்திரன் என் கடையின் முன்னே நின்று கண்ணாடி சைன் போர்ட் முன்னே நின்று கொண்டு ஊர்வலம் பார்த்து “உம் போங்க போங்க”ன்னு கத்தினான். அதனால் என் கடை போர்டு தப்பியது! அப்போது ஆர். டி ஓ ஆபீஸ் முன்பாக இருந்த போலீஸ் படை முன்னேறி சுட ஆரம்பித்தது. சுட என்றால்... தோசை சுட இல்லை... நிஜ துப்பாக்கி சூடு. அதிலே நடுவே மாட்டிக்கொண்டது என் தம்பி கொக்கரக்கோ சௌம்யனின் மனைவியின் தோழியும் தான். அவங்க ஒரு காலேஜ்ல வேலை செஞ்சு கிட்டு இருந்தாங்க. அவங்க எக்கு தப்பா நடுவே மாட்டிகிட்டாங்க.

நான் மகேந்திரனிடம் சொன்னேன். “டேய் போய் காப்பாத்துடா”ன்னு கத்தினேன். அதுக்குள்ள ரெண்டு ரவுண்டு சுட்டு முடிஞ்சுது. நாலு பேர் சுருண்டு கிடக்காங்க. ஓடிப்போய் அவங்களை இழுத்துட்டு வந்தான். அவங்க ரெண்டு மாடி ஓடி என் வீட்டில் மேலே ஒடுங்கிட்டாங்க.

துப்பாக்கி சூடு நடக்கும் போதே ஒரு வண்டில இருந்து போலீஸ் வீடியோ எடுத்து கிட்டு இருந்துச்சு.

பின்னே தான் தெரிந்தது “துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு” என!

அடுத்து அடுத்து.... அரசு தன் வேலையை செய்ய தொடங்கியது! துப்பாக்கி சூடு நடந்த என் கடை முன்னே தன் கடை சைன் போர்டு காப்பாத்த நின்ன மகேந்திரன் கைது செய்யப்பட்டான். அது போல பலரும். ஆனால் மகேந்திரன் சின்ன வயசு. 18 கூட ஆகலை என்பதால் அவன் மயிலாடுதுறை கிளை சிறைச்சாலையில் வைக்கப்பட்டான். வைக்கும் படி செய்தேன் என கூட சொல்லலாம். ஏனனில் அப்போது திருச்சி ஜெயில் சூப்பரிண்டெண்ட் என் மைத்துனர் திரு தாஸ் அவர்கள். தாஸ் அத்தான் கிட்டே விஷயம் சொன்ன போது “ சரிடா மாப்ள! பையன் சின்ன பையன். செஞ்ச குத்தாமோ பெரிசு. என்ன செய்யலாம் சொல்லு” என்றே ஆரம்பித்தார். அத்தானிடம் விபரம் சொல்லி அவன் வயதை காரணம் காட்டி மயிலாடுதுறை கிளை சிறையில் வைத்தோம்!

அதற்கு அடுத்த நாள் அபிக்கு ஒரு வயது பூர்த்தியாகி மொட்டை போட்டு காது குத்தனும். அதும் முடிஞ்சுது!

இங்கே நான் போய் சிறையில் “எலேய் தம்பி பாப்பாக்கு மொட்டை போட்டு காது குத்தியாச்சு” என்றேன். அழுதான்.

“ஏண்டா அழுவுற?”

“போங்கண்ணே, அது பச்ச புள்ள... வலிக்கும்ல”

சந்தானம் மாதிரி “அட கிருக்குபயபுள்ள”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

அடுத்த நாள் அபிஅம்மா கோழி குழம்பு வச்சி “ஏங்க மகேந்திரனுக்கு இது” என கொடுக்க கொண்டு போய் கொடுத்தேன்! அங்கே எனக்கு கெடுபிடிகள் கிடையாது! மொட்டை தலையுடன் காதில் தோடு தொங்கட்டான் கூட அபியை தூக்கி கிட்டு ஜெயிலுக்கு போனேன். தூக்கி கொஞ்சினான். அவனுக்கு யாரோ கொடுத்த பிரட் கொடுத்தான்.ஊட்டி விட்டான். சாப்பிட்டது குழந்தை! நாங்க கொடுத்தா எதும் சாப்பிடாத குழந்தை சாப்பிட்டது! கண் கலங்கினேன்!

இப்படியாக எங்கள் குடும்ப உறுப்பினர் மகேந்திரன்!

பின்னர் வழக்கம போல ஃபாரின் போனவன் வாழ்க்கை ஃபாரின்ல தான் போய் முடியும் என்னும் சாபத்தின் படி நான் மீண்டும் துபாய் போனேன். ஆச்சு அதன் பின்னர் பல வருஷம்....


கவனிக்க இந்த கதை எல்லாம் 1997-98 , 99 ல் இப்போ வருஷம் 2014.



-------------------------------------------

இரு நாட்கள் முன்பாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை சீர்கேடு போராட்டம்!

அப்போது ஒருத்தன் என் கிட்டே வந்தான். பளீர் வெள்ளை  கருப்பு சிவப்பு கரை வேட்டி! ஆலயா சட்டை.! குண்டாண உருவம்!

“என்னை தெரியுதா அண்ணே”

“தெரியலையே”

“திரும்ப பாருங்க... என்னை இன்னுமா தெரியலை?”

“தெரியலைங்க...”

“என்னாண்ணே,  இங்க போட்டு பேசுறீங்க? நான் தான் உங்க மகேந்திரன்”

எனக்கு அப்போதும் நியாபகம் வரலை.....

“ நீங்க பேஸ்புக்ல இருக்கீங்கலா?”

“அப்டீன்னா?”

“எனக்கு தெரிஞ்சு S.P. மகேந்திரன்ன்னு ஒருத்தரு பேஸ்புக்ல இருக்காரு.. சாரி அதான் கேட்டேன்”

“அண்ணே, அண்ணி நல்லா இருக்காங்கலா? அபிபாப்பா எப்டி இருக்கு? இப்ப என்ன படிக்குது? என்னை அதுக்கு தெரியுமா?”

“புரியலைப்பா... நீங்க யாருன்னு?”


இடி இடிச்சது போல சிரிச்சான்.

“அண்ணே, சொல்வீங்களே! அப்போ சொல்வீங்களே!  திமுக என்பது தான் உண்மையான இயக்கம். அங்கே சாதி மத பேதம் ஏதுமில்லை. கட்சிக்கு வரனும். வாடா வான்னு சொல்லுவீங்களே, நான் அப்போ எந்த கட்சியும் இல்லை. இப்போ திமுக! தவிர நத்தம் வைஸ் பிரசிடண்ட் அண்ணே! வைஸ் பிரசிடண்ட். ஒன்றியத்தில் நான் பெரிய ஆளு அண்ணே. எனக்கு இப்பவே என் பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அண்ணிய பார்க்கனும் போல இருக்கு. எல்லாரும்  நல்லா இருக்காங்கலா அண்ணே....”

மகேந்திரன் பேச பேச என் மண்டையில் திமுக ரத்தம் இன்னும் பீறிட்டு பாய்ந்தது!

அங்கே மைக்கில் எங்கள் மாவட்டம் “ நாம எல்லாம் ஒரே ரத்தம்தான்யா.... “ன்னு ஏதோ பேசிக்கிட்டு இருந்தது காதில் வந்து விழுந்தது!

அப்போது ரோட்டரி மிட் டவுன் இளங்கோ எனும் திமுக நண்பர் வந்து “வாங்க அபிஅப்பா உங்க வண்டி அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தானே இருக்கு. அங்க கொண்டு விடுகிறேன்” என சொல்லி அழைத்து போனார்.


அடடே! எனக்கே தெரியாமல் ஒரு கட்சி காரனை உண்டாக்கி இருக்கேன் என்னும் பெருமிதத்தில் வீடு வந்து சேர்தேன்!

6 comments:

  1. மிகவும் நன்றான நடையில் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. இதே போன்று தற்போதைய தி.மு.க பற்றியும் ஒரு பதிவினை இடலாமே... ஏன்னா 2ஜி, 3ஜி, குடும்ப அரசியல் , வாரிசு அரசியல், தமிழ் இன துரோகம், அப்படின்னு நிறைய சுவாரஸ்யமா எழுத தலைப்புகள் இருக்குல்ல.
    ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.. உண்மையிலேயே இது 15 வருடங்கள் முன்பு நடந்தது என சொன்னதற்கு. அட போய்யா இந்த மாதிரி தி.மு.க பாலிஸிங் வேலை எல்லாம் இந்த தலைமுறைக்கிட்ட வேண்டாம். வந்துட்டான்ய்யா கொடி புடிக்க.. அது சரி முதல்ல கனிமொழி, அழகிரி, ஸ்டாலின், தயாநிதி,....(மீதி ஸப்பா முடியல) இதுல எந்த அணி நீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா.......

    ReplyDelete
    Replies
    1. PRIYA ;;DMK FAMILY PARTY ;YOU DON'T WORRY [nakkal; 'vendam ;priya] YOU ARE TAMILENA 'DORGI' ;PRIYA JEEVANANTHAM;

      Delete
  2. Sir, it's really very nice to read, and much interesting. .

    ReplyDelete
  3. பொடி டப்பாMarch 1, 2014 at 1:52 AM

    //மகேந்திரன் பேச பேச என் மண்டையில் திமுக ரத்தம் இன்னும் பீறிட்டு பாய்ந்தது!//

    பயபுள்ள இன்னும் உருப்படாதுல்ல!!!

    ReplyDelete
  4. பல வருடங்களாக நான் என் நண்பர்களுக்கு சொல்வது.. நம் ஊரிலிருந்து வெளி நாட்டிற்கு வாழ சென்றவர்கள் எல்லோருமே Frozen In Time. அதனால் தான், ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் பார்க்கும் மாற்றங்கள் பிரமிக்க வைக்கிறது.

    உங்கள் எழுத்தை படித்தபோது அதே உணர்ச்சி.. நீங்கள் இன்னும் பதினைந்து வருடம் பின் தங்கி இருக்கிறீர்கள்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))