பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 20, 2008

அரையாண்டு தேர்வுக்கு சில டிப்ஸ்!!! (பிட் அடிப்பது எப்படி?)

அது நான் பத்தாவது படித்து கொண்டிருந்த நேரம். அரையாண்டு பரிட்சை வந்து விட்டது. எனக்கும் ராதாவுக்கும் அதுக்கு படிக்கவெல்லாம் சுத்தமா நேரம் இல்லை. தினமும் சின்னகடை தெரு கங்காதரன் சைக்கிள் கம்பனியிலே ஒத்த வெடி, லெஷ்மி வெடி வாங்கி வந்து வெடித்து அது வெடிக்காட்டி அதை பிரித்து மருந்து எடுத்து புஸ் விடுவதிலேயே நாங்க ரொம்ப பிசியா இருந்தோம். அது தீபாவளி நெருக்கம். பரிட்சை முடிஞ்சு பேப்பர் திருத்தி கையிலே கொடுக்கும் நேரம் தீபாவளி டான்ன்னு வந்துடும். வரலாறு/புவியியல், தமிழ், டிராயிங் பேப்பரை மட்டும் வீட்டில் காட்டிவிட்டு மத்த பேப்பரை மாட்டு கொட்டகை கீத்திலே சொறுகி வச்சிட்டு திக்கு திக்குன்னு தீபாவளி கொண்டாடுவதா, இல்லை பேப்பரை காமிச்சுட்டு எங்க முதுகிலே ஒத்தவெடியை அப்பாவை விட்டு வெடிக்க சொல்லிவிட்டு ஒரு நிம்மதியோட தீபாவளியை கொண்டாடுவதா என மனசுக்குள் பட்டி மன்றமே நடக்கும். ராதா தான் சொன்னான்,"டேய் இந்த தடவ நாம கணக்கிலே 100 வாங்கிடுவோம் பேசாம" . அவன் சிரிக்காம பேசுவான். ஆனா எனக்கு தான் பத்திகிட்டு வரும். "எலேய் நாம என்ன ஆசைப்பட்டா 25 வாங்குறோம். பேசாம 100 வாங்குவோம், பேசிகிட்டே 100 வாங்குவோம்ன்னு பெனாத்திகிட்டு, சும்மா இருடா...வேற எதுனா ஐடியா இருந்தா சொல்லு" என்றேன். மாட்டு கொட்டகையிலே மார்க் பேப்பரை மறைத்து வைப்பது உசிதமான ஐடியா தான் எனினும் என் கூட பிறந்த சொக்க தங்கம் இருக்கே சக்கரை கட்டி நான் எங்க ஒளித்து வச்சாலும் கண்டுபிடிச்சுடும். கண்டுபிடிச்சு வீட்டிலே சொன்னா கூட பரவாயில்லை. அதை வைத்து என்னை மிரட்டியே தீபாவளி வரை எனக்கு கிடைக்கும் ஆசீர்வாத வருமானம் முதல் கொண்டு, வெடி பங்கு வரை 50% அக்ரிமெண்ட் போட்டுக்கும். அதுக்கு பேசாம அப்பாகிட்டே அடிவாங்கியே சாகலாம்.

அடுத்த நாள் ராதா சொன்னான்" மாப்ள நான் ராத்திரி முழுக்க மல்லாக்க படுத்து யோசனை பண்ணி பார்த்தேன். நாம பேசாம பிட் அடிச்சுடுவோம்". எனக்கு பக்குன்னு ஆகி போச்சு. மாட்டினா மானமே போகும். அதிலே எங்க ஸ்கூல் தண்டனை கொஞ்சம் வித்யாசமானது. பிட் அடிச்சவனை மனோகரா சிவாஜி ரேஞ்சுக்கு சங்கிலி மாட்டாத குறையா ஹெட்மாஸ்டர் ரூமுக்கு கொண்டு போவாங்க. அடுத்த பத்தாவது நிமிஷத்திலே வகுப்பில் இருக்கும் ஸ்பீக்கர்ல "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்"ன்னு ஊதும் சத்தம் கேட்கும். ஆஹா ஆரம்பிட்டாருய்யா எங்க ஹெட்மாஸ்டர் திரு.பி.ராமசாமி அய்யர்"ன்னு மனசு படபடக்கும். உதாரணத்துக்கு நானும் ராதாவும் மாட்டிகிட்டோம்ன்னு வச்சுகோங்க "புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாரும் நன்னா கேட்டுகோங்கோ, நம்ம வைத்தாவும், சித்துளி சுப்புவும் பிட் அடிச்சுண்டு இருக்கறச்சே நம்ம வெங்கட்ராமன் கையும் களவுமா பிடிச்சுட்டார். இவா ரெண்டு பேரும் ஆடு திருடின கள்வனாட்டமா ஆகிட்டா. இப்போ நேக்கு முன்னால நின்னு "விட்டுடுங்கோ சார்"ன்னு கெஞ்சறா. அழுதுண்டு இருக்கா. அழறத கேக்கறேளா, டேய் சித்த மைக்குண்ட வாடா ... வந்தாச்சா இப்ப சத்தமா அழனும்". மானமே போயிடும். அழுகையே வராட்டியும் அழுதாகனும். ராதா நல்லா அழுவான், அய்யோ எனக்கு நடிக்க வேற தெரியாதே....(வைத்தாவும், சுப்புவும் எங்க ரெண்டு பேர் அப்பா பெயர்.அவங்களும் அவர் கிட்ட தான் படிச்சாங்க அதனால அவர் எங்களை அப்படித்தான் கூப்பிடுவார்) டக்குன்னு கனவுலகிலே இருந்து மீண்டு வந்தேன். "டேய் ராதா எனக்கு என்னவோ பயமா இருக்குடா, நம்ம கணக்கு சார் தான் எப்படியும் சூப்பரவைசரா வர போரார். இதல்லாம் நடக்காதுடான்னு சொன்னேன்.

எங்க கணக்கு சார் மத்த சார் மாதிரி இல்லை. ஒரு வித்யாசமானவர். பசங்களை ஹால் உள்ளே விடும் போதே தரோவா செக் பண்ணிடுவார். பசங்க எங்க எங்க பிட் வச்சிருப்பாங்கன்னு அவருக்கு அத்துபடி. அப்படி செக் பண்னிட்டு உள்ளே அனுப்பின பின்னே கண்டுக்க மாட்டார். வாசல்ல நின்னு பக்கத்து வகுப்பு சூப்பர்வைசர் சார்கிட்டே பேசிகிட்டு இருப்பார். அப்பப்ப உள்ளே எட்டி பார்ப்பதோடு சரி. சரி பிட்டை உள்ளே கொண்டு போவது எப்படி என்பதே எனக்கும் ராதாவுக்குமான சவாலாக இருந்தது. ராதா பல ஐடியா சொல்லியும் எனக்கு அது ஒத்து வரலை. அவனும் மண்டையை பிச்சுகறான். சரி இன்னும் 1 வாரம் இருக்குதே பார்த்துப்போம் என நினைத்து பொறுமையா யோசிக்க ஆரம்பிச்சோம். அதிலே சார் வேற கடைசி நாள் வகுப்பிலே "நான் சூப்பர்வைசரா இருக்கும் போது என்னை மீரி யாராவது பிட் அடிச்சுட்டா 25 ரூவா பரிசு தர்றேண்டா"ன்னு சவால் வேற விடுறார்.

பரிட்சயும் வந்துச்சு. பரிட்சை அன்னிக்கு காலயிலே 6 மணிக்கு ராதா வந்தான். "என்னடா எதுனா ஐடியா தோணுச்சாடா"ன்னு கேட்டான். நான் ரொம்ப கூலாக சொன்னேன்"டேய் பிரைன ஃபிரிட்ஜ்க்கு உள்ளே வச்சுட்டு பிளேன் ஓட்ட ஆசைப்பட கூடாதுடா, போ போ உங்க அப்பாகிட்டே அடிவாங்க முதுகை தயார் பண்ணி வைடா"ன்னு சொன்னேன். ராதாவுக்கு பயமா போச்சு. அதுக்கு அவன் "டேய் அந்த அய்டியாவை எனக்கும் சொல்லுடா"ன்னு கேக்க நான் "டேய் நான் பண்ணின இந்த ஐடியாவுக்கு நம்ம சாரே 25 ரூவா குடுப்பார் பாருடா. ஆனா உலகத்திலேயே நான் தான் இந்த ஐடியாவை கண்டுபிடிச்ச முதல் ஆள். அத்தன ஏன் அதுக்கு காபிரைட் கூட வாங்க போறேன் பாரு"ன்னு சும்மா அளந்துகிட்டே போனேன். ராதாவுக்கு பொச பொசன்னு வந்துச்சு. அதானே வேணும் எனக்கு! கடைசியா ராதா "சரி எனக்கு தான் சொல்ல மாட்ட அப்படி என்ன ஐடியாவை சொல்லு, டேய் உனக்கு பயம்டா நானும் அதை செஞ்சுட்டா 25 ரூவாயிலே பாதி போயிடுமேன்னு"ன்னு என்னை உசுப்பேத்த நான் "டேய் நான் இப்ப அதை உனக்கு சொன்னாகூட உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா ஏன்னா அய்யாவோட ஐடியா அப்பட்டி"ன்னு சொல்ல ராதா "சரி அப்ப சொல்லு முடிஞ்சா"ன்னு திரும்பவும் உசுப்பேத்த நான் மெதுவா சொல்ல ஆரம்பிச்சேன்.

அதுக்கு முன்ன ஒரு சின்ன பிர்ரேக்க்க்க்க்க்க்.....

(வலை மக்களே இப்பவும் சொல்றேன், இந்த பிட் ஐடியாவுக்கு நான் தான் காப்பிரைட் வச்சிருக்கேன்...ஒக்கேய்)

"ராதா நான் நேத்து ஒரு இன்லேண்டு லெட்டர் வாங்கி அதிலே டூ அட்ரசிலே எங்க அப்பா பெயரை போட்டு என் வீட்டு அட்ரஸ் எழுதினேன். பிரம் அட்ரசிலே அக்கா வீட்டு அட்ரசை எழுதினேன். (என் பெரியக்காவுக்கு அப்போது தான் கல்யாணம் ஆகி கும்பகோணத்தில் இருந்தாங்க) அக்கா அப்பாவுக்கு லெட்டர் போடுவது போல , ஆனா உள்ளே நம்ம கணக்கு பார்முலா எல்லாம் எழுதி வச்சுட்டேன். நேத்து அதை போய் போஸ்ட் பண்ணிட்டேன். அது இப்போ 9.30க்கு நம்ம ஸ்கூலை கிராஸ் பண்ணும் காமராஜ் அப்பா(போஸ்ட்மேன்) கையிலே இருக்கும். நான் ஸ்கூல் வாசல்லயே அதை வாங்கி ஆனா அதை பிரிக்காம என் சட்டை பாக்கெட்டிலே வச்சிப்பேன். சார் செக் பண்ணி உள்ளே அனுப்பும் போது இந்த லெட்டரை எடுத்து பார்ப்பார் அப்போ நான் சொல்லுவேன்"சார் அக்கா அப்பாவுக்கு லெட்டர் போட்டிருக்காங்க சாரி. இப்ப உள்ள வரும் போது போஸ்ட்மேன் கொடுத்தார் சார்"ன்னு சொல்லுவேன். அவரும் அதை என் பாக்கெட்டிலே வச்சிடுவார், பின்ன என்ன உள்ளே போய் பிரிச்சுக்க வேண்டியது தான்"

அசந்து போயிட்டான் ராதா. சார் கையாலயே பிட்டை பாக்கெட்டில் வச்சி அனுப்பும் படி செஞ்சுட்டானேன்னு. அப்ப அவன் "டேய் ஒரு வேளை நீ லெட்டரை பிரிச்சு வச்சு எழுதும் போது அதிலே நியூமெரிக்கல் லெட்டர்ஸ்ம், சைன்ஸ்ம் இருக்குமே அதை வச்சி கண்டு பிடிச்சா என்ன பண்ணுவே"ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நான் என்ன உன்னைய மாதிரி கேனையனா, இதோ அந்த லெட்டரிலே என்ன எழுதினேன்ன்னு இருக்கு பார் இந்த பேப்பரிலே, இதிலே பிள்ளையார் சுழியை தவிர எங்கயாவது நியூமெரிகல் எழுத்து வந்திருக்கா, இல்லை சைன் வந்திருக்கா, டே எல்லாத்துக்கும் கிட்னி வேணும்டா" ராதா அந்த லெட்டரை பார்த்து பிரம்மிச்சு நின்னான்.இதோ அந்த லெட்டர்! படிங்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கு உங்கள் மகள் வணக்கம் செய்து எழுதி கொண்டது. இங்கு நான், அத்தான் முதல் எல்லோரும் நலம். அது போல் அங்கு உங்கள் எல்லார் நலனையும் அறிய ஆவல்.

விரிவான சூத்திரம், அத்தை தலையிலே அடி மைனஸ் மாமா தலையிலேஅடி சமம் திற அத்தை மைனஸ் மாமாமூடு திற அத்தை தலையிலே குட்டு கூட்டுஅத்தைமாமா கூட்டு மாமா தலையிலே குட்டு மூடு .

குவாட்டர் அடித்தால் அத்தை சமம் மைனஸ் அப்பா சமமோ, சமம் இல்லியோ பெரிய தலையின் குட்டுக்கு உள்ளே, அப்பா தலையிலே குட்டு மைனஸ்நாலுஅம்மா அக்கா அதை வகுக்குவம் இரண்டு அம்மாவால்.
@@@@@@@@

@@@@@@

@@@@@

இப்படிக்கு உங்கள் மகள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

படிச்சுட்டு ராதா ஒன்னுமே புரியாம சொன்னான்"என்னடா இது ஏதோ குடும்ப சண்டை போல இருக்கு". அதுக்கு நான் சொன்னேன்"இல்லடா சில அருஞ்சொற்பொருள் மனப்பாடம் செஞ்சு வச்சிருக்கேன். அது புரிஞ்சா இது புரியும்"ன்னு சொன்னேன். அவன் கேட்டதுக்கு அந்த விஷயத்தையும் சொன்னேன். அது இது தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

1.a=அம்மா
2.b=அப்பா
3.c=அக்கா
4.ஸ்கொயர் = தலையிலே குட்டு
5.x=அத்தை
6.y=மாமா
7.cubic = அடி
8.bracket open = திற
9.bracket close = மூடு
10. விரிவான சூத்திரம் = expansion formula
11. குவாட்டர் அடித்தால் = quardratic equation

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



படிச்சு முடிச்ச ராதா தன் தோல்வியை ஒத்துகிட்டு போயிட்டான். நான் 9 மணிக்கு கிளம்பி சின்ன கடைதெரு பிள்ளையாருக்கு 10 பைசா சூடம் கொளுத்தி "என்னோட இந்த பிராஜட் நல்லா நடக்கனும்"ன்னு வேண்டிகிட்டு ஸ்கூல் வாசல்ல நின்னு காமராஜ் அப்பாவுக்காக வெயிட் பண்ணினேன். அப்போ ராதா வந்தான். நல்லா ரிலையன்ஸ் பிரஷ்ஷா வந்து "வாடா உள்ளே போகலாம்"ன்னு கூப்பிட்டான். எனக்கு சரியான கோவம். மணி 9.40 அப்போ. எப்போதும் 9.30க்கு அந்த இடத்துக்கு வரும் போஸ்ட்மேன் இன்னும் வரலியேன்னு."நீ போடா உன் வேலைய பார்த்துகிட்டு, நான் காமராஜ் அப்பா வந்தா தான் வருவேன்"ன்னு சொல்லி அவனை அனுப்பி விட்டு நகத்தை கடித்து துப்ப தொடங்கினேன். மணி 9.50,51,52 அவர் வரவில்லை. எனக்கு கண்ணு பூத்து போச்சு. பயம் மனசை நிரப்பிகிச்சு. மணி 10.10 ஆச்சு. 10 மணிக்கு பரிட்சை. சரி உள்ளே போவோம்ன்னு போனேன். எனக்கு பரி"சோதனை" எல்லாம் முடிஞ்சு 10.20க்கு கொஸ்ட்டின் பேப்பரை வாங்கிகிட்டு எழுத உக்காந்தேன். "சார் ஒரு பேப்பர்"ன்னு ராதா குரல் கொடுத்தான். ஆஹா 20 நிமிஷத்திலே அடிஷனல் பேப்பர் எல்லாம் வாங்குறானே, ஒரு வேளை பார்முலா எல்லாம் படிச்சு இருப்பானோன்னு எனக்கு ஒரு டவுட். பேப்பரை வாங்கி கிட்டு என்னை பார்த்து ஒரு மந்தகாச புன்னகையை வீசுறான். எனக்கு கொஸ்டின் பேப்பரை பார்த்ததும் அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு. ஏன்னா நான் பிட்டிலே எழுதின அத்தனை பார்முலாக்கு உள்ள கேள்வியே வந்திருந்துச்சு. அது மட்டும் இருந்தா ஒரு 70 மார்க் எடுத்து இருப்பேன். சரின்னு மெதுவா எழுத ஆரம்பிச்ச போது ராதா அடுத்த பேப்பரை வாங்குறான். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.

இப்படியாக நான் ஒரு 25 மார்க்குக்கு தேத்திகிட்டு இருக்கும் போது வைத்தா (இது ஸ்கூல் பியூன் சமீபத்தில் சிதம்பரம் கோவிலில் பார்த்தேன், ரொம்ப வயசாகிடுச்சு) வந்து பேப்பர் கட்ட நூல் வச்சிட்டு போறார். 3 மணி நேரம் முடிஞ்சதும் டக்குன்னு சார் வந்து எல்லார் பேப்பரையும் அவசர அவசரமாக எடுத்துட்டு போனார். எல்லாரும் வெளியே போன பின்னவும் ராதா ஏதோ ஒரு படபடப்போட கிளாஸ் ரூம் உள்ளே நின்னு கிட்டு எதையோ தேடிகிட்டு இருந்தான். நான் போய் "என்னடா"ன்னு கேட்டேன். அப்பதான் மெதுவா சொன்னான். "டேய் நான் உனக்கு வழக்கம் போல துரோகம் பண்னிட்டண்டா, காலையிலே நான் போய் போஸ்ட் ஆபீஸ்ல காமராஜ் அப்பா லெட்டர் பிரிச்சுகிட்டு இருக்கும் போதே அக்கா லெட்டர் போட்டிருக்கும் விஷயத்தை சொல்லி உன் அம்மா அந்த லெட்டரை வாங்கி வர சொன்னதா சொல்லி நான் வாங்கி வந்துட்டேன். சார் செக் பண்ணும் போது இது என்னான்னு கேட்டார். உங்க வீட்டு லெட்டர் போஸ்ட் மேன் கொடுத்தார்ன்னு சொல்லி பின்ன உள்ளே போய் பிரிச்சு நல்லா எழுதினேன். ஆனா அவசரத்திலே அந்த லெட்டரையும் பேப்பர் உள்ளயே வச்சுட்டேன் போல இருக்கு நல்லா மாட்டிகிட்டேன்"ன்னு சொன்னான்.

எனக்கு ஒரு பக்கம் ஆத்திரம் வந்தாலும் ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா வழக்கம் போல வரும் போஸ்ட் மேன் லேட்டா வந்ததினால நான் பரிட்சை ஹாலுக்கு வந்த பின்னே லெட்டர் நேரா அம்மா கைக்கு போயிருக்கும். அம்மா பிரிச்சு பார்த்து விட்டு அப்பா கிட்டே குடுத்து இருப்பாங்க. பின்ன என்ன வழக்கம் போல ஊருகாய் போட்டிருப்பாங்க. அதில இருந்து தப்பிச்சேனே ராதா போய் லெட்டரை வாங்கி வந்ததால. அடுத்த சந்தோஷம் ராதா அந்த லெட்டரை பேப்பர் உள்ளே வச்சு குடுத்ததினால சார் கிட்டே அடி வாங்க போவதை நினைத்து மகா சந்தோஷம். இதை ராதா கிட்டே சொன்ன போது அவன் சொன்னான்" டேய் நான் என்னிக்கு தனியா அடி வாங்கியிருக்கேன். சார் கிட்டே அந்த லெட்டர் மாட்டினா நீ தானடா முதல்ல அடி வாங்குவே, ஏன்னா அது உன் லெட்டர் தானடா".

தவிர 2 பேருக்கும் ஒரு சந்தோஷம் என்னான்னா சார் தான் சொல்லியிருக்காரே அவரை மீறி பிட் அடிச்சா 25 ரூபார் ரிவார்டு உண்டுன்னு. சரி அதை வச்சி தீபாவளியை சந்தோஷமா கொண்டாடிடலாம்.