பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 26, 2012

பள்ளிக்குழந்தைகளுக்கு கட்டாய "ஓவர்டைம்" ! தொழிற்சாலைகளுக்கு கட்டாய "மின் விடுமுறை" - பிரமாதம்!

இந்தக்கட்டுரை ஒரு திமுக ஆதரவு கட்டுரை கிடையாது. கிடையவே கிடையாது. ஒரு சாதாரண இரு நிகழ்வுகள். நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் இரு நிகழ்வுகள். இதில் என் கேள்வி நடுநிலைவாதிகளை நோக்கித்தான். நேரிடையாக பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு இக்கட்டுரை அயற்சியை தரலாம். அதனால் கட்டுரையின் கடைசி பாராவுக்கு நேரிடையாக போய் படித்து விட்டு போகவும்.

2011ம் ஆண்டு மே 13ம் தேதி முதல் இந்த அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது. சுமார் பத்து மாதம் முன்பு. ஆட்சிக்கு வந்து ஒரு பதினைந்து தினத்தில் பள்ளிகள் திறக்க இருந்தன. புதிய பாடங்கள். நிபுனர் குழுவினரை வைத்து நான்கு ஆண்டுகள் பல வித ஆராய்சிகளுக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள். புத்தகங்கள் எல்லாம் தயார். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறிய அதிமுக அடுத்த ஓரிரு நாட்களில் ஒரு அறிவிப்பை வெளியிடுகின்றது. சமச்சீர் பாடத்திட்டம் கிடையாது. பழைய பாடத்திட்டம் தான். அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் எல்லாம் கிடையாது. புதிதாக புத்தகங்கள் அச்சடிக்கப்படும். அது அச்சடித்து வெளிவரும் வரை பள்ளி திறக்கப்படாது என ஒரு அறிவிப்பு செய்கின்றது.

பெற்றவர்கள் தலையில் இடி. அதுவும் பத்தாவது மாணவர்களுக்கு பேரிடி. ஏனனில் பத்தாம் வகுப்பு என்பது அவனுக்கு வாழ்க்கையின் திருப்பு முனை நேரம். ஏற்கனவே இருந்த அரசு இணையத்தில் அந்த சமச்சீர் பாடங்கள் எல்லாம் வெளியிட அதை தரவிறக்கம் செய்து வசதி படைத்த மாணவர்கள் படிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் இப்படி ஒரு அரசு ஆணை எல்லோரையும் செயலிழக்க செய்கின்றது.ஆயிற்று... உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் அரசின் செயலை கண்டித்தது. தண்டித்தது. சமச்சீர் கல்விக்கு ஆதரவாய் நீதி வழங்கியது. அதல்லாம் பழைய கதை. இதில் விஷயம் என்னவெனில் அதற்குள் இரண்டு மாதங்கள் ஆகிவிடுகின்றது. கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து திறந்த பள்ளிகள் எல்லாம் பாடப்புத்தகம் எது என தெரியாமல் செய்வதறியாமல் நிற்க... ஒரு வழியாக சமச்சீர் பாடப்புத்தகங்களே கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட குறிப்பிட்ட சில நாட்கள் குறித்து அந்த நாட்களுக்குள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வினியோகம் செய்து விட வேண்டும் என சொல்லப்பட ஆனால் அதுவும் அரசால் செய்யப்படவில்லை.

அடித்து வைத்த புத்தகங்களை முழுமையாக மாணவர்களுக்கு வினியோகித்து முடித்த போது செப்டம்பர் மாதம் கிட்ட தட்ட முடிந்தே விட்டது. மொத்தம் மூன்று மாதங்கள் யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் வெட்டியாக போனது. நேரிடையாக அரையாண்டு தேர்வுக்கு போகிறார்கள் மாணவர்கள். பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு காலம் போதவில்லை. சரி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வாவது தள்ளிப்போகும் என நினைத்த பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அதற்கும் மேல் ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சி. எல்லா வருடம் போல இந்த வருடமும் அதே மார்ச் மாதம் பள்ளி இறுதித்தேர்வு என அட்டவணை வெளியாகிவிட்டது.

பொதுவாகவே மாணவர்கள் சனி, ஞாயிறு இரு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை பள்ளிக்கு போவதற்கே கொஞ்சம் மன உளைச்சலில் தான் போவர். இது உண்மையோ உண்மை. வாரம் இரு நாட்கள் விடுமுறை கொடுத்தாலே இப்படியான ஒரு மனோநிலையில் இருக்கும் பெரும்பாலான மாணவ மாணவியர்கள் இப்போது இந்த கல்வியாண்டில் முதல் மூன்று மாதங்கள் அரசு செய்த குழப்பத்தால் பாடங்கள் இல்லாமையால் ஆசிரியர்களால் சனிக்கிழமை கண்டிப்பாக பள்ளி உண்டு, ஞாயிறு சிறப்பு வகுப்பு உண்டு என பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதால் ... ஆசிரியர்களுக்கும் வேறு வழி இல்லை, அதே போல பெற்றோர்களுக்கும் வேறு வழியே இல்லை... மாணவர்கள் போய் தான் ஆக வேண்டும். அப்படி போவதால் அவனுக்கு விளையாட போக முடியாது, ஒரு திருமணம், ஒரு கோவில், ஒரு கண்காட்சி, ஒரு குடும்பவிழா என எதிலும் தன் கவனத்தை திசை திருப்ப இயலாத ஒரு சூழல். மிகுந்த மன உளைச்சல் காரணமாக ஆசிரியரை கழுத்தில் கத்தியால் குத்தும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்..... விடுமுறை கொடுத்து, விளையாட சொல்லி, பொழுது போக்காக அவன் மனதை மாற்றி மாற்றி அவனை படிப்பில் ஈடுபட செய்யாமல் தன் சொந்த ஈகோவின் காரணமாக இந்த அரசு செயல்பட்ட விதம் ஒரு மாணவ சமுதாயத்தையே ஒரு படுகுழியில் தள்ளியதை பார்த்தோம். பார்த்து கொண்டு இருக்கின்றோம். விடுமுறையே உனக்கு கிடையாது என குழந்தைகளை மன உளைச்சலுக்கு தள்ளியது இந்த அரசு என்பது ஒருபுறம் இருக்கட்டும்....

நிற்க...

நேற்று முதல் ஒரு புதிய அறிவிப்பு இந்த அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் சற்றே வினோதம். ஆமாம் "தொழிற்சாலைகளுக்கு மின்விடுமுறை". என்ன கொடுமை இதல்லாம். சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாரம் ஒரு நாள் "மின்விடுமுறை" என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் குடும்பத்தலைவர்களில் நாற்பது சதம் பேர் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது தவிர இன்னும் ஒரு நாள் அரசு இப்போது அளித்துள்ள "மின்விடுமுறை" ஒரு முழு நாள். தனக்கு நியாயமாக கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் கூட ஓவர் டைம் செய்து அதன் வருமானத்தை குடும்பத்துக்கு செலவு செய்த அந்த தொழிலாளி இப்போது அதுவும் முடியாமல், அதை தவிர கூடுதலாக இன்னும் ஒரு நாள் வாரத்தில் கட்டாய விடுமுறைக்கு தள்ளப்படுகிறான்.

நன்றாக நினைத்துப்பாருங்கள். ஏற்கனவே சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் முதலாளிகள் அரசின் மின்வெட்டால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் அந்த தொழிலாளி வேலை செய்யாத அரசு அறிவித்த "மின்விடுமுறை"க்கு சம்பளமா கொடுக்கப்போகின்றனர்? ஆக வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளி மாதம் நான்கு நாட்கள் வேலையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகப்போகிறான். ஏற்கனவே ஏறிவிட்ட விலைவாசியால் குறிப்பாக பால்விலை, பேருந்துகட்டணம் இதோ அடுத்த மாதம் ஏறப்போகும் மின்சாரக்கட்டணம் என வரிசையாக அவன் கழுத்தில் விழுந்து அழுத்தும் தூக்கு கயிற்றை சமாளிக்க அவனோ "ஓவர் டைம்" செய்து சமாளிக்கலாம் என இருந்த இந்த நேரத்தில் இருக்கும் வேலைக்கே உலை வைத்து கட்டாய விடுமுறை கொடுத்தால் அவன் இந்த உலகில் வாழ்வதா? அல்லது சாவதா? அதிலும் தொழிற்சாலைக்கு இன்று அரசின் மின்வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது. என்ன தெரியுமா? வாரம் ஒரு நாள் உங்களுக்கான விடுமுறையில் கண்டிப்பாக விடுமுறை அளித்தே தீர வேண்டும். அதே போல இன்னும் ஒரு நாள் அரசு வழங்கும் "மின்விடுமுறையும்" கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். உங்கள் தொழிற்சாலையில் 100 ஹெச் பி மோட்டார் இருந்தால் அந்த "மின்விடுமுறை நாளில்" பத்து சதம் மட்டுமே பயன் படுத்த வேண்டும். (அதாவது மோட்டார் இயக்காமல் சும்மா லைட், ஃபேன் , டிவின்னு போட்டு கிட்டு உட்காந்து இருக்கலாம்) அதை மீறி இயக்கினால் அபராதம் மற்றும் இரண்டு நாட்கள் முழு மின்வெட்டு (இது முதல் முறைக்கான அபராதம்) அடுத்த முறை கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகம்... இப்படியாக....

ஒரு நூறு ஹெச் பி இருக்கும் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு ஆகும் "உற்பத்தி" மதிப்பு சராசரியாக பத்து லட்சம் ரூபாய் எனில் அதற்கு வரியாக 5 சதம் முதல் 14.5 சதம் வரை அரசுக்கு வரும். இது ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்கான மதிப்பீடு மட்டுமே. ஒட்டு மொத்தமாக நமது அரசுக்கு ஏற்படும் நஷ்டம் என கணக்கிட்டு பிரம்மித்து கொள்ளுங்கள்.

ஆக விடுமுறை கொடுக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு கட்டாய ஓவர் டைம். ஓவர் டைம் கொடுக்கப்பட வேண்டிய தொழிற்சாலைக்கு கட்டாய விடுமுறை.... ஒ இதற்கு பெயர் தான் "புரட்சி"யோ????

February 23, 2012

தளபதியின் வருகை - ஒரு மாவட்ட செயலரின் பார்வையில்!!!

பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய அண்ணாமலை பல்கலைகழகம் உருவாக்கிய, குன்னம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளருமாகிய திரு. சிவசங்கர் அவர்கள் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். சமீபத்தில் உலக தர வரிசைப் பட்டியலில் 20வது இடத்திலும், இந்தியாவில் முதல் இடத்திலும் இருக்கின்ற, ஹைதராபாத்தில் உள்ள ISB ( Indian School of Business ) என்ற மேலாண்மை கல்வி நிறுவன வளாகத்தில் , PRS Legislative Research என்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்கின்ற அமைப்பும், ISB நிறுவனமும் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்காக , " India Leadership Workshop " என்ற தலைமைப் பண்புக்கான பயிற்சி பட்டறை நடத்தினர். அது பிப்ரவரி 06 லிருந்து 08 வரை மூன்று நாட்கள் நடந்தேறியது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் Dr.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோருடன் திரு.சிவசங்கரன் ஆகியோரும் இந்த பயிற்சியில் பங்கேற்றார். அரசால் அனுப்பப் படவில்லை. சொந்த விருப்பத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.






இணையத்தை முழுமையாக பயன் படுத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இணையத்தில் தன் தொகுதி நலத்திட்டங்கள் பற்றியும், அங்குள்ள மக்களுக்கு என்ன விதமான உடனடி தேவைகள் என்பன பற்றியும் அவர் தொகுதி மக்களிடம் நேரிடையாக ஆலோசனை பெறுகின்றார். இது சம்மந்தமாக ஆனந்த விகடன் பத்திரிக்கை கூட சமீபத்தில் இவரைப்பற்றி "இவர் ஒரு ட்ரண்டியான சட்டமன்ற உறுப்பினர்" என பாராட்டியது நினைவிருக்கலாம். வெகு ஜன ஊடகமாக தற்போது மாறிவரும் இணையத்தில் ஒரு மாபெரும் கட்சியின் மாவட்ட செயலர் நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருவது அகில இந்திய அளவில் திமுக முன்னிலை வகிக்கின்றது.

உதாரணம் இவரைப் போலவே இணையத்தை தமது பிரச்சார ஊடகமாக பயன்படுத்தும் புதுகை மாவட்ட செயலர் திரு. பெரியண்ணன் அரசு, அண்ணன் டி கே எஸ் இளங்கோவன், அண்ணன் திருச்சி சிவா எம்.பி, தாமரைச்செல்வன் எம் பி, முன்னாள் சென்னை மேயர் அண்ணன் மா.சுப்ரமணியன்,ச.ம.உ.டி ஆர் பி ராஜா, தோழர் அசன் முகமது ஜின்னா , மற்றும் பல செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் இவர்களில் எல்லாம் மேலாக ,முன்னோடியாக முன்னாள் துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர்.

திரு.சிவசங்கர் அவார்கள் ஒரு தலைசிறந்த திராவிட சிந்தனையாளர் என்பதோடு மட்டுமல்லாமல் திராவிட கொள்கைகளில் இருந்து கிஞ்சித்தும் வழுவாமல் வாழ்ந்து வருபவர்.

அப்படிப்பட்ட திரு .சிவசங்கர் அவர்கள் கடந்த பிப்ரவரி 20 ம் தேதி "தளபதி" அவர்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு இளைஞரணி நேர்காணல் செய்ய சுற்றுப்பயணம் செய்த போது அந்த ஒரு நாள் நிகழ்வுகளை தன் "முகநூல்" பக்கம் வழியாக அழகாக வர்ணிக்கின்றார். ஒரு பார்வையாளராக, ஒரு நிருபராக, ஒரு ரசிகராக, ஒரு கட்சித்தொண்டராக ஒரு தலைவன் வருகையை சிலாகித்து எழுதுபவர்களுக்கும், அந்த தலைவர் கூடவே பயணித்து அதில் ஒன்றிப்போய் எழுதுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவருடைய இந்த கட்டுரையில் அதை நீங்கள் உணரலாம். ஒரு தலைவர் ஒரு மாவட்டத்துக்கு வரும் போது அவருடைய அந்த ஒரு நாள் முழுமைக்கும் மாவட்ட எல்லையில் இருந்து , மாவட்டத்தை விட்டு வெளியே அனுப்பிவைக்கும் வரை அவர்களுடைய பாதுகாப்புக்கும், நிகழ்சி ஏற்பாடுகளுக்கும், தங்குவதற்கும் என எல்லா வித சகல பொறுப்புகளையும் சுமக்கும் ஒரு மாவட்ட செயலரின் பார்வையில் இந்த கட்டுரை வடிக்கப்பட்டுள்ளது. இப்போது கட்டுரையை படிக்கவும்.


----------------------------------------------------------------------------------


தளபதி பிப்ரவரி 20ம் தேதி காலை 8.30 மணிக்கு தஞ்சையில் இருந்து எங்கள் மாவட்டத்துக்கு கிளம்புவதாக முடிவு.முதல் நாள் இரவு 12.00 வரை மாவட்டம் முழுதும் ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு, காலை எழுந்து எல்லோருக்கும் அலைபேசிவிட்டு, மாவட்ட எல்லையான திருமானுரில் வரவேற்பு ஏற்பாடுகளை சீர்செய்துவிட்டு, தஞ்சையை நோக்கி விரைந்தேன். பாலம் வேலை நடைபெற்றதால் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. தடைப்பட்டு, தடைப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது எங்கள் வாகனம். நேரம் 8.20, தஞ்சையுள் நுழைந்து விட்டோம். நேரம் 8.28, இளைஞர் அணி மாநிலத்துணைசெயலாளர் சுபா.சந்திரசேகரிடமிருந்து அலைபேசி அழைப்பு, " தளபதி கிளம்பிவிட்டார்கள் ". நேரம் 8.29, சங்கம் ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டோம். காரிலிருந்து இறங்கி ஓடுகிறோம், நானும், ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரனும். தளபதி அவர்களுடைய வாகனம் 10 மீட்டர் நகர்ந்துவிட்டது. எங்களை பார்த்து வாகனத்தை நிறுத்த சொல்கிறார் தளபதி அவர்கள். நேரம் 8.30. அது தான் தளபதி. நேரமென்றால் குறித்த நேரம் தான். நூலாடையை வாங்கிக்கொண்டு , அவரது வாகனத்தில் ஏறச்சொல்கிறார்.


என்னதான் மாவட்ட செயலாளர் என்றாலும் , தளபதி அவர்களோடு பயணமென்பது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி ?
தளபதி அவர்களின் வாகனம் தஞ்சை நகரத்தை ஊர்வலமாக கடக்கிறது. அறிவிக்கப்பட்ட பயணமல்ல. எதிர்ப்பார்க்காமல் தளபதியை பார்த்த மகிழ்ச்சியில் மக்கள் கையசைக்கிறார்கள். கரந்தையை கடக்கும் போது , எதிரில் கல்லூரி வாகனங்கள் வரிசையாக, மாணவிகள் உற்சாகத்தோடு கையாட்டுகிறார்கள். புறவழிச்சாலையில் நுழைந்து வாகனம் வேகமெடுக்கிறது. எதிரில் வரும் லாரி, கார் ஓட்டுனர்கள் வணங்குகிறார்கள்.


அம்மன் பேட்டையில் 50 பேர் கொண்ட குழு மறிக்கிறது. வாகனத்தை நிறுத்த சொல்லி அவர்களது வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். ஒரு பாட்டி குரலெழுப்புகிறார், " கரண்ட் இல்ல, மூனு நாளா தண்ணியில்ல...". தளபதி விடைபெறுகிறார்.


திருவையாறில் முன்னாள் ச.ம.உ துரை.சந்திரசேகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு.
அரியலூர் மாவட்ட எல்லையான திருமானுரில் மாவட்டக் கழகத்தின் சார்பாக , அதிர்வேட்டு முழங்க, மேளம் ஒலிக்க ,பிரம்மாண்ட வரவேற்பு. தளபதி கேட்கிறார் , " திருமானூர் வேட்டா ? ". எங்கள் பகுதியில் புகழ் பெற்ற வெடி குறித்து குறிப்பாக கேட்கிறார்.


வழியில் இரண்டு இடங்களில் வரவேற்பு, வாகனம் கீழப்பழூர் பேருந்து நிலையத்தைக் கடக்கிறது. தூரத்தில் இரண்டடி உயர சிலை கண்ணில் படுகிறது. தளபதி கேட்கிறார் , " தியாகி சின்னசாமி சிலைதானே ?".
ஒவ்வொரு பகுதியை கடக்கும் போதும், அந்த பகுதியின் சிறப்பை நினைவுகூர்ந்து கேட்கிறார் என்றால் , எந்த அளவிற்கு நினைவு கூர்மை.
வழியில் பள்ளிமாணவர்கள் கையசைப்பு, நூறு நாள் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் மகிழ்ச்சி ஆரவாரம் என பயணம் தொடர்கிறது. ஆங்காங்கே வரவேற்புகள், அறிவிப்பில்லாமல்.


சரியாக 10.00 மணி, தளபதி அவர்களது வாகனம், தா.பழூரில் நுழைகிறது. உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. மேடையேறுகிறார். பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார், அறிவுலக பேராசான் அறிஞர் அண்ணா, மு.ச.ம.உறுப்பினர் க.சொ.கணேசன் சிலைகளை திறந்து வைக்கிறார். பெரியார் , அண்ணா பெருமைகளை கூறிவிட்டு, மறைந்த க.சொ.க சிறப்புகளை எடுத்துரைத்தார்.அப்போது ," தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உத்தரவிட்டார்கள், இன்றைக்கு பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைப்பதின் மூலம், முதல் நிகழ்ச்சியை நடத்திய பெருமை, அரியலூர் மாவட்டத்திற்கும், தா.பழூர் ஒன்றியத்திற்கும் கிடைத்திருக்கிறது " என பன்ச் வைக்க , கைத்தட்டல் அடங்க நேரமானது.


பேசி முடித்தப்பின், தொண்டர்களிடமிருந்து குரல், மதனத்தூர் பாலம் குறித்து பேசுங்கள் என்று.
தளபதி கூர்ந்து கவனித்து விட்டு சொன்னார், " அண்ணன் க.சொ.க அவர்கள் நீண்ட நாட்களாக கேட்ட பாலம், 2010ல் நானே அடிக்கல் நாட்டினேன். விரைவில் திறக்கப் படவில்லையென்றால் , போராட்டம் அறிவிக்கப்படும் "
தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, நாம் எழுப்பிய குரலுக்கு தளபதி மதிப்பளித்து பதிலளித்தார் என்று. தளபதி அவர்களுக்கும் மகிழ்ச்சி. பத்திரிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சி, சூடான செய்தி கிடைத்ததென.
திருமண நிகழ்ச்சிக்காக ஜெயங்கொண்டம் நகர் நோக்கி வாகனம் விரைகிறது.
இன்றைக்கு கண்ட வித்தியாசமான காட்சி, வழியெங்கும் காவல் துறையினர் காட்டிய மரியாதை. ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ," ராயல் சல்யூட் தான் ".

காற்று திசைமாறுகிறது..................

தளபதி அவர்களது வாகனம் ஜெயங்கொண்டத்தை அடைகிறது, எல்லையில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் மலர் தூவி வரவேற்பு. திருமணக் கூட வாசலில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், என்.செல்வராஜ் காத்திருக்கின்றனர். மேடையில் தஞ்சை மண்டலத்தின் தளகர்த்தர் கோ.சி.மணி. எனது வரவேற்புரை . அடுத்து மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார் தளபதி அவர்கள்.
வாழ்த்துரை , தஞ்சை மாவட்ட தலைமை செயற்க்குழு உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், ச.ம.உ கோ.வி.செழியன், ச.ம.உ சாக்கோட்டை அன்பழகன், ஒ.செ தனசேகர், விருத்தாசலம் மு.ச.ம.உ குழந்தை. தமிழரசன், பெரம்பலூர் மா.செ துரைசாமி, மாவட்ட அவைத்தலைவர் அரியலூர் ஆறுமுகம், சட்டதிருத்தக்குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன், மு. அமைச்சர் என்.செல்வராஜ், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோ.சி.மணி என நீண்டாலும் தளபதி அமைதியாகக் காத்திருந்தார். மணமகன் சகோதரர் க.சொ.க.கண்ணன் நன்றியுரைக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்கினார் தளபதி.

க.சொ.கணேசன் திருமணத்தையும்,அவரது மகன் கண்ணன் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்றதையும் , அவரது மகள் திருமணத்தையும், தற்போது அவரது இளைய மகன் திருமணத்தையும் தான் தலைமையேற்று நடத்துவதையும் எடுத்துரைத்தார். க.சொ.க அவர்கள் மறைவுற்ற போது தான் வந்து அஞ்சலி செலுத்தியதையும் நினைவு கூர்ந்தார்.


அரசியலை தொட்டவர், திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு திடீரென கசப்பு ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வால் அவதிப் படும் மக்கள் ,மின் கட்டண உயர்வு குறித்து கவலைப்படவில்லை என நிறுத்தினார். எல்லோரும் புருவம் உயர்த்த , " மின்சாரம் இருந்தால் தானே , கட்டண உயர்வு பாதிக்கும் " என பன்ச் வைத்தார்.
மதிய உணவுக்கு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் இல்லம் நோக்கி செல்லும் போதே , மாலை நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை சொல்லிவிட்டார் .


இளைஞரணியில் மாவட்ட துணை அமைப்பாளராக தனது பணியை துவங்கிய சுபா.சந்திரசேகர் அவர்கள் , மாவட்ட அமைப்பாளராக, இன்று மாநில துணைச் செயலாளர் ஆக தளபதியோடு உறுதுணையாக இருப்பவர். அவரது புதிய இல்லத்தில் தான் உணவு. உணவு முடிந்து , கழகத்தில் இணைந்த நகர்மன்ற உறுப்பினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆசைப் பட்ட கழகத் தோழர்களோடு,சலிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கிளம்பும் போது நின்றவர், " என்ன சுபா , குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையா ? " எனக் கேட்க, அவரது குடும்பத்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சி. புகைப்படம் முடிந்து கிளம்பினார்.

ஓய்வறைக்கு செல்லும் போதே மணி 02.00. அப்போதே சொல்லிவிட்டார் 03.00 மணிக்கு கிளம்ப வேண்டுமென்று. நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அனைவரும் அலைபேசிவிட்டு பார்த்தால் மணி 02.40 . நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சுகவனம் அவர்களோடு டீ அருந்திவிட்டு கிளம்பினோம். அண்ணன் எம்.ஆர்.கே கிளம்பிக் கொண்டிருந்தார். மணி 02.58 , தளபதி அறையை விட்டு வெளிவந்து விட்டார்.

பெரம்பலூர் மாவட்ட எல்லையில் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, குன்னத்தை கடக்கிறோம். "இதுதான் தொகுதியின் தலைநகர் குன்னம் " என்கிறேன்." ஓ , சின்ன ஊராக இருக்கிறதே, பேரூராட்சி இல்லையா " என்கிறார். "குன்னம் ஊராட்சி தான் , முழுவதும் கிராம ஊராட்சிகள் தான், ஒரேயொரு பேரூராட்சி, அதுவும் கிராமம் போலத்தான் " என்றேன். ஆர்வத்தோடு கேட்டுக்கொள்கிறார்.
பெரம்பலூரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ,கழக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் ராசா அலுவலகத்தை வாகனம் அடைகிறது. டீ கூட அருந்தாமல், மேடையேறுகிறார் தளபதி. அரங்கு நிறைந்த இளைஞர் கூட்டம். ஆராவாரம், மகிழ்ச்சி கலந்த வாழ்த்தொலி. இரண்டு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களும் வரவேற்புரை வழங்க வாய்ப்பு. மாவட்ட செயலாளர்கள் இருவருக்கும் தலைமையுரையாற்ற வாய்ப்பு. " வந்திருக்கின்ற இளைய தோழர்களே, தளபதி அவர்களை வாழ்க்கையின் வழிகாட்டியாக கொள்ளுங்கள். பெரியாருக்கு பிறகு, தலைவர் கலைஞருக்கு பிறகு , தமிழகத்தை அதிகம் சுற்றி வந்து பணியாற்றுபவர் தளபதி தான். அவரை போல் உழைபோம் ", என்று வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டேன்.

திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேச்சை துவங்கிய தளபதி அவர்கள், மொழிப்போர் இளைஞர்களை இயக்கத்தின் பால் கொண்டு வந்ததை குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு ஏற்றவாறு தனது பேச்சை நகைச்சுவையாக கொண்டு சென்றார். தலைவர் கலைஞரை சந்திக்க வந்த இளைஞரணி நிர்வாகியை , எத்தனை வயது எனக் கேட்க , அவர் 55 என சொல்ல, தலைவர் தளபதியை கிண்டலாக பார்க்க, தான் தவித்ததை தளபதி அவர்கள் சொல்ல, ஒரே சிரிப்பு.


இலக்கிய அணி நிர்வாகியை பார்த்து தலைவர்," கம்ப ராமாயணம் எழுதியது யார் " எனக் கேட்க ,அவர் நீங்கள் தான் என சொன்னார். இதனால் தான் வயதுக் கட்டுபாடு கொண்டு வந்து நேர்காணல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என தளபதி அவர்கள் விளக்கினார்கள்.


இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தளராதீர்கள், மற்ற அணிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என உற்சாகப்படுத்திவிட்டு , நேர்காணலுக்கு அலுவலகம் விரைந்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்ரமணியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், ஜின்னா என புடை சூழ நேர்காணல் துவங்கியது. மேயர் மாசு அவர்கள் கேள்வியை கடகடவென கேட்கத் துவங்கினார். பிறந்த வருடம், தொழில், படிப்பு , கழகத்தில் உறுப்பினரா எனக் கேள்விகள். நிறைய பேர் புதியவர்கள். கல்லூரி மாணவர்கள், தொழில் செய்கிறவர்கள், விவசாயம் செய்கிறவர்கள், ஆட்டோ டிரைவர், வழக்கறிஞர்கள், ஆசிரியர் என பலத்தரப்பினரும் வந்திருந்தனர்.
ஒவ்வொருவரையும் பார்த்து தளபதி குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். சிலரை தளபதியும் கேள்வி கேட்டார். தொழில் செய்கிறவர்களை அரசியலால் பாதிப்பு வராதே என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர்களை எந்த நீதிமன்றம் எனக் கேட்டார். சிலரது பெயர் சிரிப்பை ஏற்படுத்தியது, கவர்னர், எஸ்ஸை, ஹானஸ்ட் அம்பிகாபதி என்று.

இரண்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களையும் நேர்காணல் முடிந்தது. ஒரு கழக நிர்வாகி, சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். "இதற்கு சென்னையிலிருந்து நான் வந்திருக்க வேண்டியதில்லையே " என மறுத்து விட்டார் தளபதி.
புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக் கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டார். குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். பா.ம.க-விலிருந்து இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து வரவேற்றார்.


இதுவரையில் 200 கி.மீ பயணம், பல நிகழ்ச்சிகள், காலை 8 மணி துவங்கி. ஆனாலும் இப்போதும் புத்துணர்வோடு இருந்தார், அப்போது தான் மலர்ந்த மலர் போன்ற புன்னகையோடு, இரவு 7 மணிக்கு.
எல்லோரிடமும் விடைபெற்று வாகனத்தில் ஏறுகிறார், கதவை திறந்து படியில் கால் வைத்து ஏறி நின்று கழகத் தோழர்களை பார்த்து கையசைக்கிறார். உற்சாகக் குரல் அதிர்வேட்டாய் எழுகிறது......


தளபதி இன்னும் 200 கி.மீ செல்ல வேண்டும், சென்னைக்கு.
ஆனால் காரில் தளபதிக்கு செய்தி காத்திருக்கிறது, முன்னாள் அமைச்சர் நேருவை போலீஸ் தேடுகிறது. காலையில் தான் அண்ணன் நேருவை தொடர்பு கொண்டு , திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கிற மு. ச.ம.உறுப்பினர் அண்ணன் குத்தாலம் கல்யாணத்தை பார்க்க சொன்னார் தளபதி. போன இடத்தில் அவரை மறித்த காவல் துறை, பொய் வழக்கு தொடுத்து தேடுகிறது. இனி அது குறித்த ஆலோசனை வழங்க வேண்டும். காரிலேயே இளைஞரணி நிர்வாகிகளோடு மீதமிருக்கிற மாவட்டங்களுக்கு பயணத்திட்டத்தை வகுக்க வேண்டும்.


நிர்வாகிகள் திருவிழா முடித்த கலைப்போடு ஓய்வுக்கு வீடு திரும்புகிறார்கள்.
நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் , புதிய நம்பிக்கையோடு பயணம் துவங்குகிறார்கள்.


அவர் மட்டும் அடுத்த பணியோடு பயணத்தை தொடர்கின்றார்......
ஓய்வில்லா உழைப்பாளி......

-----------------------------------------------------------------------


இக்கட்டுரை பற்றிய எனது பார்வை அல்லது ஒரு சிறிய விமர்சனம்:

என்ன எழுதுவது? எதை எழுதுவது? தஞ்சை நோக்கி நானே ஓடுகிறேன். நானே சங்கம் ஹோட்டல் அருகே போகிறேன். என்னையே தளபதி காரை நிறுத்தி ஏற சொல்கிறார். நானே கரந்தை வழியே தளபதி கூட பயணிக்கிறேன். திருமானூர் வேட்டு சத்தம் என் காதை கிழிக்கிறது. எல்லாம் நானே நானே என்று ஆகிவிட்டேன். மிக அருமையான பகிர்வு என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?


\\ வழியெங்கும் காவல் துறையினர் காட்டிய மரியாதை. ஆய்வாளரோ, துணை ஆய்வாளரோ," ராயல் சல்யூட் தான் ".
காற்று திசைமாறுகிறது....................\\\

இந்த இரண்டு வரிகளில் ஏராளமான பொருள் பதிந்து கிடக்கின்றது. இதை நான் முழுமையாக உணர்கிறேன். புரிந்துகொள்கிறேன். என்னால் இந்த வரிகளின் முழு அர்த்தமும் புரிந்து கொள்ள முடிகின்றது...


அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ....தந்தை பெரியார் மற்றும் நமது அண்ணா ஆகியோர் சிலை வைக்க ஆசைப்பட்டார். சிலையும் செய்தாகிவிட்டது. சிலை திறக்க அனுமதிக்காக இருக்கும் நிலையில் அவரின் மறைவு நடந்து விட்டது. ஆனாலும் அவரது சிலையையும் சேர்த்து திறந்து வைத்து மிகச்சிறந்த நன்றியாளனாய் நீங்கள் உயர்ந்து நிற்பது பெருமையோ பெருமை. ஒரு திமுக காரனாய் இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.


ஒரு திருமணம் - வந்தோமா - மங்கல நாண் எடுத்துக்கொடுத்தோமா என்கிற மாதிரி கடமைக்காக அதை நடத்தாமல் ,மணமகன் தந்தையார் திருமணத்தையும், அவரது பெரிய மகன் திருமணத்தையும் தலைவர் நடத்தியதை நினைவுகூர்ந்து, மணமகன் சகோதரி மற்றும் தற்போது நடைபெறும் திருமணத்தையும் தான் நடத்துவது, அதே போல் மணமகன் தந்தை மறைவுக்கு தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதை எல்லாம் நம் தளபதி குறிப்பிட்டு பேசியது கேட்பவர்களுக்கு ஒரு பங்கு மகிழ்வென்றால் அந்த திருமண குடும்பத்துக்கு எத்தனை மடங்கு அதிகம் மகிழ்வை கொடுத்து இருக்கும் என்பதை உணர்கிறேன். இவ்விஷயம் ஒரு தலைவனுக்கு உரிய பண்பு. நம் தலைவரிடமிருந்து நம் தளபதி கற்றுத் தேர்ந்த சிறந்த பண்பு இது.


மின்சாரக்கட்டண உயர்வு மக்களை பாதிக்கவில்லை என சொல்லி அவர் அதன் பிறகு அடித்த பன்ச்- ஒரு குபீர் சிரிப்பு - தலைவரைப்போலவே டைமிங் நகைச்சுவை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வசிய மருந்து அது!


மதிய உணவை சபா.சந்திரசேகர் வீட்டில் உண்டது விஷயம் இல்லை. ஆனால் அதன் பிறகு அங்கே நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் முடிவில் சபா.சந்திரசேகர் குடும்பத்தினரை பார்த்து "குடும்பப்புகைப்படம் எடுத்துக்கவில்லையா?" எனக்கேட்டு அவர்களை திக்குமுக்காட செய்தாரே.... இது தான் தளபதியின் டச். இதிலே அவர் கழக உறுப்பினர்களின் குடும்பத்தினர் மேல் கொண்ட பாசம் தெரிந்தது.


இளைஞர் அணி தேர்வுக்கு சிபாரிசுக்கு வந்த கழக உறுப்பினரிடம் "நான் இதற்கு இத்தனை தூரம் வந்திருக்க வேண்டாமே" என சொல்லி நிராகரித்தது.... ஒரு தலைவனுக்கான கண்டிப்பும் கம்பீரமும் தளபதிக்கு உள்ளதென்பதை காட்டியது. Law makers should not break the law என்ற பொன்மொழிக்கு உதாரணமாக தளபதி இருப்பதை காட்டியது அந்த நிகழ்வு.

அதன் பின்னர், மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு என சொல்லிவிட்டு மிகச்சரியாக சொன்ன நேரத்தில் தன் அடுத்தடுத்த நிகழ்சிகளில் கலந்து கொள்ள கிளம்பிய போது "இவர் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க இயலுமா?" என இளைஞர்களை பயம் கொள்ள வைத்தது. உண்மைதான்... தளப்தி எடுத்த முடிவு சரிதான் போல. முப்பது வயதுக்குள்ளே இருந்தால் மட்டுமே தளபதிக்கு இனி ஈடுகொடுக்க இயலும் போலிருக்கு என எண்ண வைத்தது:-)


இளைஞரணி நேர்காணலில் தொழில் செய்யும் இளைஞர்களிடம் "இந்த கழக பொறுப்புக்கு வந்தால் தொழிலுக்கு இடைஞ்சல் வராதே" என கேட்ட போது கழகத்தினர் பால் இருக்கும் அக்கரை தெரிந்தது.


எல்லா நிகழ்வும் முடித்து கிளம்பும் போது காரில் ஏறி உட்கார்ந்த பின்னே இன்னும் 200 கிமீ அவர் பயணிக்க வேண்டுமே என்ற கவலை நமக்கு இருந்தாலும்... அவர் அண்ணன் நேரு அவர்களை கைது செய்ய தேடுவது பற்றியும், அடுத்தடுத்த இளைஞர் அணி நேர்காணல் ஆலோசனைகளை நம் சென்னை நிஜ மேயரிடமும், தோழர் ஜின்னா அவர்களிடமும் மேற்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்த போது மொத்தத்தில் தளபதி மீது பிரமிப்பு மட்டுமே இருந்தது.

இத்தனை நிகழ்வுகளையும் மிக அழகாய் தொகுத்து அளித்து பலபேர் மகிழ்வுறச்செய்த அரியலூர் மாவட்ட கழக செயலர் திரு சிவசங்கர் அவர்கள் மீது மதிப்பு வருகின்றது.

February 17, 2012

தமிழக மின்வெட்டு நிலையும் மானம்கெட்ட நமது அரசின் கையாலாகாத தன்மையும்!!!


தமிழகத்தின் ஒரு சாராதரண நகரம் மயிலாடுதுறை. அதன் இன்றைய மின்வெட்டு நிலவரம் என்பது காலை 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 வரை, மாலை 6.30 முதல் 7.30 வரை, இரவு 9 முதல் 10 வரை. ஆக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு எட்டு மணி நேரம் கணக்கு சரியாகிவிட்டது. ஆனால் அதன் பின்னர் நடப்பதை கூட எந்த பத்திரிக்கையும் எழுதுவதில்லை. யாரும் அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதை இதோ சொல்கிறேன். இரவு 10 மணிக்கு வரும் மின்சாரம் 11 மணிக்கு போய்விடும். இது எந்த கணக்கில் வரும். மேலே சொல்கிறேன் கேட்கவும். இரவு 11 முதல் 12 வரை இருக்காது. பின்னர் 12. 30 முதல் 1 மணி வரை, பின்னர் 2 முதல் விடியல்காலை 3 வரை, பின்னர் 4 முதல் 5 வரை இருக்காது. ஆக இரவில் மூன்றரை மணி நேரம். ஆக மொத்தம் 11.30 மணி நேரம். இது தவிர போனஸ் நேரமாக அப்பப்போ பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை. அது ஒரு முப்பது நிமிடம். ஆக ஒரு முழு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இல்லாத மின்சாரத்துக்கு மாதம் ஒரு முறை முழு மின்வெட்டு. அது பராமரிப்புக்காகவாம்.

நாம் எந்த காலத்தில் இருக்கின்றோம்? கிட்டத்தட்ட எல்லோருமே மின்சார வாழ்கைக்கு பழகியாகிவிட்டது. இன்வர்டர் வைத்து கொள்ளும் வசதி இந்த தமிழகத்தின் ஒன்னரை முதல் இரண்டு கோடி குடும்பத்தில் எத்தனை ஆயிரம் பேரிடம் இருக்மும்? சுமாராக பத்தாயிரம் முதல் இருபத்தி ஐந்து ஆயிரம் குடும்பங்கள்? வேண்டாம் ... நாம் அது ஒரு பத்து லட்சம் குடும்பங்களிடம் இருப்பதாகவே கொள்வோம். சரி அப்படியே இன்வர்டர் வைத்து கொண்டாலும் ஒரு லைட், ஒரு ஃபேன் என ஒட்டு மொத்த குடும்பமே அதில் தான் உழண்டு கிடக்க வேண்டும். இதிலே படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஒரு லைட் வசதியை கொடுப்பதா? அல்லது குடும்ப தலைவிக்கு சமைக்க வெளிச்சம் கொடுப்பதா? அப்படி பார்த்தாலும் இன்வர்டர்களுக்கு ஃபீடிங் அதாவது அது வாழ தேவையான மின்சாரம் மீதி நேரம் கிடைக்கின்றதா என்றால் அதும் இல்லை.சரி இன்வர்டர் வைத்து கொள்பவர்களின் நிலை இது என்றால் இல்லாத மீதி ஒன்னேமுக்கால் கோடி குடும்பத்தின் நிலை என்ன?

இங்கே எங்கள் பகுதியில் முக்கிய வாழ்வாதாரமே விவசாயம் மட்டுமே. இங்கே முப்போகம் விளைந்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் , ஏன் தமிழகம் தாண்டியும் சுபிட்சம் இருக்கும். முப்போகம் விளைய நாங்கள் காவிரியை மட்டும் நம்பி இருக்க முடியாது. போர்செட் இல்லாமல் எதுவும் நடக்காது. 24 மணி நேரம் மின்சாரம் கண்டிப்பாக வேண்டும். இப்போது என்ன நடக்கின்றது? விவசாயம் நசிந்து விட்டது. விவசாயிகள் நடுத்தெருவில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த ஆறு மாதத்தில் இவன் விளைவிக்காமல் போன நெல்லால் அரிசி பஞ்சம் வருமே, அரிசி விலை ஏறுமே அது எந்த கணக்கில் வரும். இவன் விளைவிக்காமல் போன கரும்பு காரணமாக ஜீனி கிடைக்காதே, அப்படியெனில் வரும்காலம் கருப்பட்டி காப்பி தானா தமிழகத்தில். நான் மீண்டும் பழங்காலம் நோக்கி பயனிக்கட்தான் வேண்டுமா? இது தான் ஒரு ஆளும் கட்சி ஆளும் அரசு தனக்காக ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் நன்றியா?

நசவுத்தொழில் அந்த காலம் போல காலை கையை ஆட்டி தறி போடுவது என்பது எல்லாம் போயே போச். இப்போது எல்லாமே மின் மோட்டார் சகிதம் தான், எல்லாமே விசைத்தறி தான். கூறைநாடு, திருபுவனம், கும்பகோணம் இங்கெல்லாம் பட்டு தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வயிற்றில் மண். அதே போல துகிலி, கஞ்சனூர் எல்லாம் கைத்தறி நசவாளர்கள் கோவிந்தா கோவிந்தா. சிறு மற்றும் குறுந்தொழில்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.

அத்தனை ஏன்? மீன்பிடி தொழில்..... எங்கள் மாவட்டத்தை எடுத்து கொண்டால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பித்து பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, பொறையாறு பின்னே காரைக்காலை விடுத்து அடுத்து அக்கரைப்பேட்டை, நாகை, வேதாரண்யம், பின்னர் அடுத்த மாவட்ட பகுதிகள் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் எல்லாம் மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதானம். மீன் பிடிக்க மின்சாரம் எதுக்கு எனகேட்கும் மக்களே, மீனை பிடித்து கொண்டு வந்து எங்கே கொட்டுவாங்க. நான் மேலே சொன்ன எல்லா ஊர்களிலும் ஐஸ் பேக்டரி... அது இயங்காவிட்டால்... மீன் கரைக்கு வந்து என்ன பிரயோசனம்? ஐஸ் தயாரிக்க 12 மணி நேர மின்சாரம் பத்தாது. பத்தவே பத்தாது. ஜெனரேட்டர் வைத்து கொள்ளும் வசதி படைத்த ஐஸ் கம்பனிகள் மட்டும் ஐஸ் உற்பத்தி செய்கின்றது. ஆக சின்ன சின்ன ஐஸ் கம்பனிகள் அவுட். அந்த பெரிய கம்பனிகள் வைத்தது தான் விலை. அதை வாங்கும் மீனவர்கள் அந்த விலை ஏற்றத்தை மீன் தலையில் வைக்க ஒட்டு மொத்த மீன் விலையும் கொடிகட்டி பறக்கின்றது. அப்படியே ஆகினும் அந்த கம்பனிகளால் ஓரளவுக்கு மேல் ஐஸ் சப்ளை செய்ய இயலவில்லை. அதனால் மீன் பிடிக்க போகும் முன்னே ஐஸ்க்கு பதிவு செய்து கொண்டு போனவர்களுக்கு மட்டும் தான் ஐஸ். எனவே மற்ற மீனவர்கள் கடலுக்கு போவதில்லை. அவர்கள் வயிற்றில் ஈரத்துணி.மீன் வரத்து குறைந்து போய் அவர்களும் தாங்கள் பிடித்த மத்தி மீன்களை கேரளத்துக்கு மட்டும் அனுப்பி விட்டு இங்கே அசைவ ஹோட்டல்கள் எல்லாம் அதீத விலையேற்றம். அனுபவித்து பார்தவர்களுக்கு வலி புரியும்.

ஆக விவசாயம், நசவு, மீன்பிடி, சிறு மற்றும் குறுந்தொழில் எல்லாம் போயாச்சு. சரி கடைத்தெரு என எடுத்து கொண்டால் ஒரு ஜெராக்ஸ் (போட்டோகாப்பி) கடை, டைலர் கடை,அச்சகம், ஜூஸ்கடை என எதை தொட்டாலும் மின்சாரம் தேவைப்படுது. அவர்கள் வாழ்கை தொலைந்து போய்விட்டது.

சரி மாணவர்கள் நிலை? யாரும் படிக்க இயலவில்லை. +2 படிப்பவன் அவன் பெற்றோர் எல்லாம் இப்போது என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருக்க, அதை விட கொடுமை இப்போது செய்முறை தேர்வும் நடந்து கொண்டிருக்க இயற்பியல், வேதியல், கம்பியூட்டர் சயின்ஸ் என எதை தொட்டாலும் மின்சாரம் தேவை. அவர்கள் பழகி பார்க்க மின் தட்டுப்பாடு காரணமாக நேரிடையாக தேர்வுக்கு சென்று ..... இந்த கஷ்டம் எல்லாம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அதிலே படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் தான். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்த காரணத்தால் அங்கே ஜெனெரேட்டர் வசதி இருக்கு. (அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது) . ஆக இந்த மே மாதம் ரிசல்ட் பார்த்தால் கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களின் தேர்சி சதத்தைவிட குறைவாக இருப்பர். பத்தாவது மாணவர்கள் கதி அதோகதி ஆகிவிட்டது. ஏற்கனவே அவர்களுக்கு மூன்று மாதம் புத்தகம் இல்லாமல் செய்துவிட்டது இந்த அரசு. இப்போது இந்த கொடுமையும் சேர்ந்து விட்டது.

போகட்டும், அரசு மருத்துவமனை எல்லாம் என்ன லட்சனத்தில் இருக்கின்றது? மெழுகுவத்தி வைத்து கொண்டு குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுவதாக பத்திரிக்கை செய்தி.பகலிலேயே பசுமாடு தெரியாது. இதிலே இருட்டிலே எப்படி எருமை மாடு தெரியும்? விளங்கிடும்.... எதை நறுக்கி தொலைக்க போகின்றனரோ?

எல்லாம் போகட்டும்.... எல்லாம் போகட்டும்..... இந்த கட்டுரையில் என் கேள்வி என்பதே இங்கே தான் தொடங்குகின்றது. இப்படி தமிழகத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை காணடிக்க செய்யும் அளவு பூதாகரமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது. மின்சாரம் தயாரிப்பது என்பது மத்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்கும் நிகழ்வு அல்ல. ஆனால் நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவை என்பது எத்தனை மெகாவாட் ஒரு மாதத்துக்கு? தற்போதைய உற்பத்தி எத்தனை மெகாவாட்?பற்றாக்குறை எவ்வளவு? அதை சரி கட்ட என்ன செய்தோம்,அல்லது மின்சிக்கனம் செய்ய என்ன செய்யக்கூடாது? என்றெல்லாம் இந்த தமிழக அரசு யோசித்து பார்த்ததா என்றால் ஒரே பதில் இல்லை என்பது மட்டுமே.

கடந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைக்க நினைத்த பத்திரிக்கைகள் தேர்தலின் போது ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டது மின்வெட்டு பிரச்சனைக்காக தான். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு என்பது மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரே நேரத்தில் போகாது. மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் அறிவிப்பு செய்துவிட்டு நிறுத்தம் செய்யப்பட்டது. தவிர சென்னைக்கு மின்வெட்டு கிடையாது. கிடையாது என்றால் கிடையவே கிடையாது. ஏப்ரல் 13ம் தேதி 2011 அன்று தேர்தல் முடியும் வரை சென்னைக்கு மின்வெட்டு இல்லை. அதன் பின்னர் தேர்தல் முடிவு வெளியான மே 13 2011 வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே சென்னைக்கு மின்வெட்டு. சென்னைக்கு மட்டும் ஏன் மின்வெட்டு இல்லை என காரணம் கேட்ட போது "தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசின் மற்ற மற்ற பிரிவுகளின் தலைமையகமும் இங்கே தான் இருக்கின்றது. தவிர தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கே மின்வெட்டால் பாதிக்க கூடாது" என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஊடகங்கள் "தமிழக மந்திரிகள் எல்லோரும் சென்னையில் இருப்பதால் மின்வெட்டு இல்லை" என கூவின.

ஆனால் இப்போது... தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது எட்டு மணி நேரம். அறிவிக்காமல் ஒரு நான்கு மணி நேரம். சென்னையில் இன்றுவரை ஒரு மணி நேரம். நாளை முதல் அதை அதிகப்படுத்தப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பத்திரிக்கையும் இது பற்றி வாயை திறந்தது போல தெரியவில்லை. மாறாக வாய்கூசாமல் திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கு எதும் செய்யவில்லை என கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளன.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று பார்த்தால் 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சிகாலத்தில் எவ்வித மின் உற்பத்தி திட்டமும் ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஆனால் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதாவது 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வருங்கால மின் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை பார்ப்போம்.

1) எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு முலமாக 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006 யில் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்

2) மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில், 600மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய ஒரு திட்டம் 2-5-2007ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் இயக்கத்திற்கு வரும்.

3) வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007 ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் நடைமுறைக்கு வரும்

4) உடன்குடியில் பி எச் ஈ எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ்; ஒவ்வொன்றும் 800 மெகவாட் மின் உற்பத்தி செய்யகூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007 ல் 8 ஆயிரத்து 362 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஓர் அலகு 2013 ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியை தொடங்கும்

5) வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600மெகவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் 14-7-2008 ல் தொடங்கப்பட்டது.

6) ஆயிரத்து 126 கோடி செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆளைகளில்ருந்து 183 மெகவாட் இணை மின்சாரம் தயாரிக்ககூடிய திட்டம், 14-12-2009 ல் தொடங்கப்பட்டது.

7) மொத்தம் 4183 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி மு கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன.

8) 2006 யில் தி மு கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்கால தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக

2010-2011யில் 1400 மெகவாட் மின்சாரமும்
2011-2012யில் 3316 மெகவாட் மின்சாரமும்
2012-2013யில் 1222 மெகவாட் மின்சாரமும்
2013-2014யில் 1860 மெகவாட் மின்சாரமும்

ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
ஆக இதை எல்லாம் மூடி மறைத்து ஊடகங்கள் திமுக ஆட்சியை கீழே தள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மின்வெட்டு என்பதை ஊதிப்பெரிதாக்கி அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இலவச வண்ண தொலைக்காட்சியால் மின்சாரம் எல்லாம் போய்விட்டது என சொன்ன அதே பத்திரிக்கைகள் இன்று மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைகள் என்னவோ சூரியசக்தியில் இயங்குவதாக நினைத்து கொண்டு வாய்மூடி கிடக்கின்றன.இது தான் பத்திரிக்கை தர்மமா?

ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசோ, தமிழகத்தின் எதிர்கால மின் தேவைகளுக்காக இன்றைய தேதி வரை எத்தனை மின் திட்டங்கள் கொண்டு வந்தன என்பதை பட்டியலிட முடியுமா? போகட்டும் 2001 - 2006 வரை எதும் செய்யவில்லை. போகட்டும். ஆனால் 2011 சட்டமற்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய பிரச்சாரமாக மின்வெட்டு பிரச்சனையை பயன் படுத்திக்கொண்டதே அந்த நன்றிக்காகவாவது இந்த எட்டு மாதத்தில் ஒரே ஒரு மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததா என்றால் அதுவும் இல்லை.

ஆனால் ஊடகங்களோ அதிமுக ஆட்சிக்கு வந்ததும் "குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்" என தலைப்பிட்டு தன் அதிமுக பாசத்தை அறிவித்து கொண்டன. இன்றளவும் அந்த புழுகுமூட்டை பத்திரிக்கைகள் அதிமுக அரசின் மின் வெட்டு பிரச்சனை பற்றி வாயை திறந்தது உண்டா? இல்லை. அவர்களுக்கு தேவை திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளேயன்றி மக்களுக்காக அரசிடம் இடித்துரைத்து திட்டங்கள் பெற்றுக்கொடுப்பது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகின்றது.

அதிமுக அரசுக்கு நிர்வாக திறன் என்பது ஒரு சதம் கூட இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் எனினும் இங்கே சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனவில் இப்போது சில அடிமட்ட அதிமுக பேச்சாளர்களும், அவர்களுக்கான பிரச்சார ஊடகங்களும் "திமுக ஆட்சியில் எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டி கொடுத்து எல்லாரும் அதை பயன்படுத்தி மின்சாரம் விரயமாகி போய்விட்டது" என்று வழக்கம் போல பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல அந்த பத்திரிக்கைகள் அப்போது திமுக ஆட்சியில் இலவசங்கள் அதிகம் கொடுத்து கொடுத்து பணம் இல்லாமல் செய்து விட்டனர். அதனால் தனியாரிடம் இருந்து கூட மின்சாரம் வாங்க காசு இல்லை" என சொன்னது.

திமுக ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கான திட்ட மதிப்பீட்டு தொகை 4500 கோடி ரூபாய். அதும் நன்கு திட்டமிடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் பகிர்ந்து ஐந்தாம் ஆண்டு முடிவில் எல்லோருக்கும் தொலைக்கட்சி பெட்டி போய் சேரும் அளவிலான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடம் 900 கோடி மட்டுமே அதற்கான செலவு.

ஆனால் அதிமுக ஆட்சியில், ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.

அது என்ன கணக்கு? அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடுக்கவேண்டுமாம். என்னே ஒரு கரிசனம் தமிழக மக்கள் மீது! தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஆட்சி இங்கே. ஆனால் அங்கே 4500 கோடி ரூபாய்க்கான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. இப்போது போல விலையில்லா அரிசி இல்லை. கிலோ ஒரு ரூபாய். அதனால் அப்போது அரசுக்கு அதிக இழப்பு இல்லாமல் போனது .அதாவது மாதம் 500 கோடி , வருடத்துக்கு 6000 கோடி ரூபாய். எதை வேண்டுமானாலும் விலை இல்லாமல் கொடுக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவன் சாப்பிடும் அரிசியை விலையில்லாமல் கொடுத்தால் அது அவன் வயிற்றுக்கு சோறு போடும் பிச்சை. அந்த அளவு மாதம் 20 இந்திய ரூபாய் சம்பாதிக்க வக்கில்லாதவன் அல்ல நம் நாட்டு மக்கள் என்பதை திமுக அரசு உணர்ந்தது. அதனால் ஒரு ரூபாய் விலை என நிர்ணயம் செய்தது. அதனால் இப்போது தமிழக அரசுக்கு மாதம் தோறும் ஏற்படும் 500 கோடி இழப்பு அப்போது திமுக அரசுக்கு இல்லை.

இப்படியாக ஒரு இலவச திட்டம் அறிவித்தால் கூட அதை ஐந்து வருடத்துக்குமாக பேலன்ஸ் செய்து கைப்பிடிப்பு இல்லாமல் பட்ஜெட் போட்டு செலவு செய்து , மின்சாரம் தனியாரிடம் விலைக்கு வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர மின்வெட்டு என்கிற நிலையில் வைத்து இருந்த திமுக அரசு நிர்வாக திறமை வாய்ந்த அரசா அல்லது மேலே இருக்கும் பாராவில் இருப்பது போல தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிமுக அரசு நிர்வாகத்தில் சிறந்த அரசா?

இப்போது ஒரு புதுக்கதை விட்டுக்கொண்டு இருக்கின்றனர் அதிமுகவினரும் அவர்களின் அச்சு ஊடகங்களும். அது என்ன தெரியுமா? கூடங்குளம் மின் திட்டம் செயல்பட்டால் ஒட்டு மொத்த நமது மின் தேவையும் தீர்த்து விடுமாம். அதை அந்த பகுதி மக்கள் செயல்படுத்த விடாமையால் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாம். இது என்ன கூத்து என்று தெரியவில்லை. அப்படியே கூடங்குளம் திட்டத்தால் கிடைக்கும் மின்சாரம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கே என மத்திய அரசு கூறினால் கூட இப்போது இருக்கும் 12 மணி நேரம் மின்வெட்டு என்பது 11.30 மணி நேரமாக மட்டுமே ஆகும் என்பதை யாராவது அதிமுக அரசுக்கு காதில் போடுவார்களா? ஆனால் மத்திய அரசு முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கு மட்டுமே கொடுக்கவே கொடுக்காது. மத்திய அரசோடு ஒத்து போகும் திமுக அரசு இருந்தால் ஒருவேளை இது சாத்தியம். ஆனால் அதிமுக அரசு என்பது எல்லோரிடமும் சண்டைக்கோழி. அதன் தலைமைக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது எப்போதும் கிடையவே கிடையாது.

சரி, அந்த மக்கள் அங்கே கூடங்குளம் மின் திட்டம் செயல்படுவதில் பயம் கொள்கின்றனர் என்பது தானே அங்கே பிரச்சனை. உடனே தமிழக அரசு என்ன செய்து இருக்க வேண்டும். தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க வேண்டும். "கூடங்குளம் வேண்டும் அல்லது வேண்டாம்" இதை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசு மாத்திரம் மக்களுடன் போராடி கொண்டு இருக்கும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது ஏன்? கூடங்குளம் மின்சாரம் மட்டும் வந்தால் பிரச்சனை எல்லாம் தீரும் என நீங்கள் சொல்லும் போது கூடம்குளம் மின் திட்டம் வருவதில் உங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று தானே பொருள். அப்படி என்றால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்?

அந்த மக்களின் பிரச்சனையை அதாவது பயத்தை நீக்கும் பொருட்டு "தமிழக சட்டமன்றம் இனி குளிர்கால கூட்ட்த்தொடர் அங்கே ஒரு கட்டிடம் கட்டி அதிலே நடத்தப்படும். அந்த காலங்களில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் அங்கேயே தங்கி பணிபுரிவர், இனி தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒரு பத்து நாட்கள் தங்குவது போல இருந்தால் கூடங்குளம் பகுதியில் தமிழக அரசு விருந்தினர் மாளிகை கட்டி அங்கே தங்க வைக்கப்படுவர், தமிழக அளவிலான மாநில விளையாட்டுப்போட்டிகள் கூடங்குளத்தில் நடத்தப்படும், அத்தனை ஏன் தமிழக முதல்வர் இனி ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு போகாமல் கூடங்குளம் மட்டுமெ போவார்" என சொல்லிப்பாருங்கள். அந்த மக்கள் தெளிவடைந்து உங்களுக்கு மின்சாரம் உற்பத்திக்கு வழி விடுகின்றார்களா என பார்ப்போம். அதை செய்ய தமிழக அரசு தயாரா?
இதே நேரத்தில் இந்த கட்டுரை மின்சார தட்டுப்பாடு என்பதால் மத்திய அரசுக்கும் அதே வேண்டுகோள் தான் விடுக்கின்றோம். மக்களுக்கு அவேர்னஸ் கொடுக்கின்றோம் என்கிற பெயரில் கோடி ரூபாய் கொட்டி தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக இப்படி சொல்லிப் பாருங்களேன்,
1. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு இனி அரசாங்க சார்பாக கொடுக்கப்படும் வீடுகள் இனி கூடங்குளம் பகுதியில் கொடுக்கப்படும். அதற்கு முன்னோடியாக நாளை முதல் திரு அப்துல்கலாம் அங்கே வசிக்க ஆரம்பிப்பார்.

2. இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் மேட்சுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகள் கூடங்குளத்தில் ஒரு அருமையான மைதானம் கட்டி அதிலே நடத்தப்படும்.

3. குடியரசு தின , சுதந்திர தின வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி கூடங்குளத்தில் விருந்தளிப்பார்.

4. வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் சந்திப்புகள் இனி கூடங்குளத்தில் மட்டுமே நடைபெறும்.

5. கூடங்குளம் பிரச்சனைக்காக உழைத்த மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும், முன்னாள் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் கூடங்குளம் மின் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தின் உள்ளேயே அருமையாக நட்சத்திர அந்தஸ்து கூடிய வீடு ஒதுக்கப்படும்....

6.ஊட்டியில், கொடைக்கானலில் நம் தமிழக ஆளுனருக்கு "ராஜ்பவன்" இருப்பது போல ஆளுனருக்கும் கூடங்குளத்தில் ஆளுனர் மாளிகை கட்டப்படும். அதில் அவர் வருடத்துக்கு 3 மாதமாவது தங்கி தன் பணிகளை கவனிப்பார்.

இப்படி எல்லாம் சொல்லிப்பாருங்கள். அந்த பகுதி மக்களை சமாதானம் செய்துவிட்டு விரைவில் உற்பத்தி செய்யுங்கள். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்த தமிழக மின் தேவைகளை கூடங்குளம் தீர்த்துவிடுகின்றதா என பார்ப்போம். எங்களுக்கு தேவை மின்சாரம் மட்டுமே.....

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வசித்து கொண்டு எங்களை எல்லாம் எல்லா தேவைக்கும் மின்சாரத்துக்கு பழக்கிவிட்டு இப்போது பாதி நேரம் மின்சாரம் இல்லை என்று சொல்ல அரசே உங்களுக்கு வெட்கம் இல்லையா? அதற்கு துணை போகும் அதிமுக அரசின் ஆதரவு பத்திரிக்கைகளே இந்த பிழைப்பு தேவையா உங்களுக்கு?????