ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்(!) என படிப்பினை ஊட்டும் நிகழ்ச்சி ஒன்றை நேற்றைக்கு பார்த்தேன். “மானாட மயிலாட” நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக ஓடி வந்து டிவியை போட்டா ஒரு அம்மா அழுதுகிட்டு இருக்காங்க. ராஜ்குமார் என்கிற டான்சரின் அம்மா. அவுங்க அழுக பின்ன பையன் அழுக, நமீதா அழுக நானும் அழுக அய்யோடா அப்படி ஒரு சோகம் போங்க!
பின்ன ஸ்வேதா என்னும் டான்சர். அவங்க புருஷன் கிட்ட பேட்டி எடுத்தாங்க நமீதாவும் கலா மாஸ்ட்டரும்.
“உங்க மனைவி ரத்தீஸ் கூட டான்ஸ் ஆடினாங்களே அது பத்தி என்ன நினைக்கறீங்க”
நா தழுதழுக்க மாப்பிள்ளை சொன்னார் பாருங்க பதில் அப்படியே ஆடிபூட்டேன்!
“நான் குடுத்து வச்சவன்ங்க ஸ்வேதாவை மனைவியா அடைய, இத்தனை நாள் எல்லோரும் அவ கிட்ட வந்து ஆட்டோகிராப் வாங்குவாங்க வாங்கின பின்ன உங்க பேர் என்னான்னு கேப்பாங்க(J) ஆனா இப்போ இந்த நிகழ்ச்சிக்கு பின்ன ஸ்வேதா ஸ்வேதா ன்னு பேர் சொல்லி கூப்பிடும் போது போது ……உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்”
மாப்பிள்ளை பேட்டி குடுத்து கிட்டே இருக்கும் போதே ஸ்வேதா பக்கத்திலே இருக்கும் மத்த டான்ஸர்ஸ் ஸ்வேதா கண்ணை துடைச்சு விட்டு வராத அழுகையை வர வழைக்க இவர் கிட்ட பேட்டி எடுத்தாங்க நீதியரசி நமீதா!
“ஸ்வேதா, உங்க புருசன் நல்லா புருஷா நல்லா சொல்லுது நீங்க என்னா சொல்லுது” இது நமீதா!
மைக்கை வாங்கி கிட்டு ஸ்வேதா “நான் நெம்ப குடுத்து வச்சவ, அவர் எனக்கு புருசன் மாத்திரம் இல்ல”ன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டப்ப என் நண்பர்கள் கத்தியது எல்லாம் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத விஷயங்கள்! தொடர்ந்து ஸ்வேதா “ அவர் எனக்கு தாய் மாதிரி, காரணம் அரையிறுதிக்கு வரும் போது என் குழந்தைக்கு பயங்கரமா டைபாய்டு காய்ச்சல், ஷிவரிங்ல தூக்கி தூக்கி போடுது. அப்போ கூட என் புருசன் சொன்னார் ‘நீ போம்மா (நமக்கு கலைய வளர்க்கனும் அது தான் முக்கியம்) இந்த டென்சனை மனசுல வச்சுக்காம இதை மறந்துட்டு ஆடு’ன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சார்”ன்னு சொல்லிட்டு அழுகையோ அழுகை.
அதை பார்த்து கண் மை கலையாமல் கலா மாஸ்ட்டர் அழுக பின்ன என்ன என் நண்பர்கள் கூட நானும் மூக்கு சிந்தினேன்.
அதை விட அருமை மேடையிலே மழை பெய்யவிட்டு எல்லாரும் என்னமா டான்ஸ் ஆடினாங்கப்பா. அது முடிந்த பின்ன “பாடித்திரிந்த பறவைகளே” “முஸ்தப்பா முஸ்தப்பா டோண்ட் வொர்ரி முஸ்தப்பா”ன்னு மெழுகு வத்தி ஏத்திகிட்டு பாட்டு பாடினாங்க. அவங்க என்னதான் டோண்ட் ஒர்ரி முஸ்தப்பான்னு பாடினாலும் என்னால வொர்ரி பண்ணாம இருக்க முடியலை.
ஒட்டு மொத்த நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி டிவியை ஜட்டி காயப்போடும் உபகரணமாக மட்டுமே பயன் படுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. சரி இதன் தாக்கம் தமிழ்நாட்டிலே எப்படி இருக்குதுன்னு பார்ப்போம்ன்னு வீட்டுக்கு போன் செய்தேன். அபிபாப்பா தான் போன் எடுத்தா. “மானாட மயிலாட பாத்திங்களாடா”ன்னு கேட்டேன். அங்கிருந்து பதில் வந்தது “பாவம்ப்பா அந்த டைபாய்டு வந்த குழந்தை”
எனக்கு நச்சுன்னு நடு மண்டையில் அடிவாங்கின மாதிரி இருந்துச்சு!