பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 27, 2020

மயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு!


1991 வரை நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் தான். தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டம் அது. சுமார் 20 சட்டமன்ற தொகுதிகள். மேற்கே பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு  என்றும் கிழக்கே மயிலாடுதுறை, நாகை, பூம்புகார், வேதாரண்யம்  என்றும் வடக்கே சீர்காழி என்றும் தெற்கே திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி என்றும் மிகப்பெரிய மாவட்டம் தஞ்சாவூர். அதன் தலைநகரம் தஞ்சாவூர் தான். கொள்ளிடத்தில் இருந்தோ, கோடியக்கரையில் இருந்தோ தலைநகருக்கு வர வேண்டும் எனில் ஒரு 5 முதல் 6 மணி நேர பஸ் பயணம். மாவட்ட மருத்துவமனை கூட தஞ்சையில் தான். ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் என எல்லாமே தஞ்சாவூரில் தான்.


பத்தாவது படித்து முடித்து கையில் சான்றிதழ் வாங்கிய அன்று எங்கள் பகுதியில் இருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர் சகிதமாக பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக வருவார்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியவைக்க வேண்டி!  அங்கு பதிந்தால் உடனே வேலை கிடைத்து விடும் என ஒரு நம்பிக்கை. தவிர போட்டி தேர்வுகள் எழுதினால் கூட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருந்தால் மட்டும்  தான் வேலை என்பதால் கூட்டம் அலைமோதும். கிழக்கு பக்கம் இருந்து நாங்கள் செல்வதைப்போலவே மாவட்டத்தின் 20 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் கூட்டம் வரும். பதிய வைத்து முடியும் போது உயிர் போய் உயிர் வரும். அதுவும் அங்கே நடக்கும் கூத்துகள்... சொல்லி மாளாது. அந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு மாற்று திறனாளி அலுவலக உதவியாளர். மிகக்கொடூரமானவன். 1980ல் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியப்போகும் எல்லோரையும் அவன் ட்ரீட் செய்யும் விதம் அகங்காரத்தின் உச்சமாக இருக்கும். அழுகையே வந்து விடும். அப்போதெல்லாம் நாங்கள் எங்களை கீழத்தஞ்சை என சொல்லிக்கொள்வோம்.


 மாவட்டம் பெரியது என்பதால் அந்த தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் இரண்டு எஸ்.பிக்கள் உண்டு. அதை நிர்வாக ரீதியாக பிரிக்காவிட்டாலும் மறைமுகமாக தஞ்சை மாவட்டம் என்பது கீழத்தஞ்சை மாவட்டம், மேலத்தஞ்சை மாவட்டம் என்றே இரண்டு எஸ்.பிக்கள் ஆளுமையில் ஆனால் ஒரே ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருந்தது. போலீஸ் வாகனங்களில் கூட “கீழத்தஞ்சை”, “மேலத்தஞ்சை” என்றே எழுதியிருக்கும். நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை, குத்தாலம், பூம்புகார், சீர்காழி,  ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கீழ தஞ்சை மாவட்டத்தில் வரும். அதற்கெல்லாம் நடுநாயகமாக மயிலாடுதுறை தான் இருந்தது.



வேலை வாய்ப்பு அலுகவலகம் செல்லும் போதெல்லாம் கீழத்தஞ்சையை பிரித்தால் மயிலாடுதுறை மாவட்ட தலைநகராகிவிடும். இனி பதிவது மிகச்சுலபம் என மனதில் நினைத்துக் கொள்வோம். நான் சொல்வது 1980 காலகட்டம்... அப்போதெல்லாம் மயிலாடுதுறைக்கு “மாயூரம்” என்ற வடமொழிப்பெயர் தான். எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. நாங்கள் “தஞ்சாவூர்க்காரர்கள்” என்னும் பெருமிதம் இருந்தாலும் அந்த பெருமிதம் என்பது நிர்வாக நீதியில் கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு கிஞ்சித்தும் உதவவில்லை என்பதே உண்மை. மெல்ல மெல்ல கீழத்தஞ்சை மாவட்ட மக்கள் முனுமுனுக்க தொடங்கினர்.  அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தஞ்சை மாவட்டத்தை பிரிப்பதற்கான காரணம் இரண்டு இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை திமுகவே தன் வசமாக்கி வந்தது. மன்னார்குடி அம்பிகாபதி, பட்டுக்கோட்டையில் எஸ்.டி.எஸ் ஆகியோர் மட்டும் அதிமுக. மீதியை பிடிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் தான் கீழத்தஞ்சையில் மக்கள் முனுமுனுப்பு அதிகமாகியது. ஒரு வேளை தஞ்சை மாவட்டத்தை பிரித்து விட்டால் அந்த கீழத்தஞ்சையை தன் வசமாக்கலாம் என்பதால் பிரிக்க முடிவு செய்தார். ஆனால் அப்படி பிரிக்கும் போது பூகோள ரீதியில் மாயூரத்தை தான் தலைநகராக ஆக்க வேண்டும். ஆனால் மாயூரத்தை திரு.கிட்டப்பா (திமுக சட்டமன்ற உறுப்பினர்) தன் கோட்டையாக வைத்திருந்தார்.  சரி... அப்படியெனில் மாயூரத்தை முதலில் பிடிக்க வேண்டும். அந்த மக்களை தன் வசமாக்க என்ன செய்யலாம் என யோசித்தார் எம்.ஜி.ஆர். அப்போது மாயூரம் எம்.எல்.ஏ வாக சிங்கம் போல கர்ஜித்த திரு கிட்டப்பா (திமுக சட்டமன்ற கொறடா) அவர்கள் மாயூரம் என்னும் வடமொழி பெயரை மயிலாடுதுறை என சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என சட்டமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதே நேரம்  தஞ்சையை பிரித்து மயிலாடுதுறையை தலைநகரமாக்கி  மாவட்டம் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வலியுறுத்தினார்.  அதற்கான அரசியல் காரணங்கள் சில உண்டு.


திமுக என்பது கட்டுக்கோப்பான கட்சி தான் எனினும் கட்சியின் தொடக்க காலம் தொட்டே கட்சியின் சீனியர் உறுப்பினர் ஆன திரு.கிட்டப்பா அவர்களுக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட செயலாளர் ஆவதில் ஒரு விருப்பம் நீண்ட நாளாக இருந்து வந்தது. திரு மன்னை நாராயணசாமி, திரு. தாழை.மு.கருணாநிதி,  திரு.கோசி.மணி போன்ற ஜாம்பவார்கள் வரிசையில் திரு கிட்டப்பா அவர்களும் தஞ்சை தரணியில் இருந்து வந்தார். ஒரு வேளை தஞ்சாவூர் பிரிக்கப்பட்டால் மேலத்தஞ்சை மாவட்டம் பகுதிக்கு திரு.கோசி.மணி என்றும் மயிலாடுதுறையை தலைநகரமாக கொண்ட கீழத்தஞ்சை மாவட்டத்துக்கு தாமும் மாவட்ட செயலாளர்கள் ஆகலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் திரு.கிட்டப்பா அவர்கள். அப்போது அவர் தஞ்சை மாவட்ட திமுக அவைத்தலைவர் ஆக இருந்தார் என்பது என் நினைவு.


ஆக மயிலாடுதுறை என தமிழ்ப்பெயர் சூட்டவும், மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவும் முதலில் போராடியவர், குரல் கொடுத்தவர் திரு. என்.கிட்டப்பா அவர்கள் தான்.


இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆர் அவர்கள் மயிலாடுதுறை மக்களை கவர பரிட்சாத்த முறையில் ஒரு திட்டம் தீட்டினார். அதன் படி “மாயூரம்” என்னும் வடமொழிப்பெயரை  “மயிலாடுதுறை” என மாற்ற முன்வந்தார். அப்போதே கோடியக்கரையை திருமறைக்காடு எனவும், மெட்ராஸ் என்பதை சென்னை எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இருப்பினும் எம்.ஜி.ஆர் அரசியல் காரணங்களுக்காக முதலில் “மாயூரத்தை” மட்டும் “மயிலாடுதுறை” என பெயர் மாற்றி 08.06.1982 ல்  (அரசாணை # 974) ஒரு உத்தரவிட்டார். அப்போது நெடுஞ்செழியன் அவர்கள் நிதி அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் வருவாய்த்துறை அமைச்சர். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் தான் அப்போதைக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதி என்பதால் அவருக்கு எம்.ஜி.ஆரிடம் நல்ல பெயர் மற்றும் நட்பு இருந்தமையால் மாவட்டத்தை பிரித்தால் தன் பவர் குறைந்து விடும் என்பதால் மாவட்டத்தை பிரிக்க தடை போட்டார் என்றும் அப்போது பேச்சுகள் இருந்தன.  அதனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மாவட்டத்தை பிரிக்காமல் மாயூரம் என்னும் பெயரை மட்டும் மாற்றி மயிலாடுதுறை ஆக்கினார். அதன் காரணமாக  27.06.1982  அன்று  மயிலாடுதுறை  கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடக்கே ஒரு மேடை போடப்பட்டு (தெற்கு பார்த்த மேடை) அதிலே தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் திரு நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் பெயர் மாற்று பெரு விழா நடந்தது. அன்று மாலை அதே கச்சேரி சாலையில் இருக்கும் மலைக்கோவில் வளாகத்தில் இந்துமுன்னனி மற்றும் பாஜக ஆகியவை இணைந்து “மயிலாடுதுறை என பெயர் வைக்கக்கூடாது. மாயூரம் என்னும் வட மொழி பெயரே நீடிக்க வேண்டும்” என கூறி மக்கள் மனதை அறிய வாக்குப்பெட்டி வைத்து வாக்கு கேட்டது. அது அதிமுக அரசு விழாவெனினும் திமுகவினர் பெருவாரியாக கலந்து கொண்ட்னர். காரணம் ஒரு வடமொழி பெயர் ஒழிந்து தூய தமிழ்ப்பெயர் வருகின்றதே என்னும் ஆசை மற்றும் தமிழக அரசின் அந்த முடிவை தலைவர் கலைஞர் மனதார வரவேற்றிருந்தார். எனவே திமுகவினர் மிக்க மகிழ்வுடன் அதில் கலந்து கொண்டனர். அப்போது நாவலர் பேசிய பேச்சுகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதை இப்போது இங்கே பதிந்தால் சிலர் மனது புண்படும் என்பதால் அதை தவிர்க்கிறேன்.



ஆக அப்போதே மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு கீழத்தஞ்சை மாவட்டம் பிரிந்திருக்க வேண்டும். எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களால் அது முடியாமல் போனது. ஆனாலும் எம்.ஜி.ஆருக்கு கீழத்தஞ்சை மீது வைத்த கண் அகலவேயில்லை. எப்படியாவது கீழத்தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு திமுக எம்.எல்.ஏ வாவது இருக்க வேண்டும் என நினைத்தார். பின்னர் எப்படியோ அண்ணன் திரு.கிட்டப்பா அவர்களை அதிமுகவுக்கு இழுந்து விட்டார். அந்த காலகட்டத்தில் தான் ஜெயாவை முதன் முதலாக 1983ல் அதிமுகவுக்கு உள்ளே கொண்டு வந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கினார். அப்படி ஆக்கிய பின்னர் முதல் கூட்டத்தை அண்ணன் கிட்டப்பா அவர்களை விட்டு மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தில் (எம்.ஜி.,ஆர் வந்தால் பேசும் இடம் அது தான்) கூட்டம் போட்டார். பிரம்மாண்ட கூட்டம்.  அதே நேரம் திரு கிட்டப்பா அவர்களும் மயிலாடுதுறை மாவட்டம் ஆவதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் வலியுறுத்தி வந்தார். அந்த நேரத்தில் தான் எதிர்பாரா விதமாக அண்ணன் கிட்டப்பா அவர்கள் இயற்கை எய்தினார்.  இது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பேரிடியாக அமைந்தது. திரு கிட்டப்பா அவர்கள் மறைவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் நேரிடையாக கலந்து கொண்டார்.

ஆனால் எம்.ஜி.ஆர் அவர்களோ , ஜெயாவோ வரவில்லை. அதன் பின்னர் 20.05.1984 அன்று மயிலாடுதுறை சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் வந்தது. அண்ணாநகர், உப்பிலியாபுரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல். எம்.ஜி.ஆருக்கு அப்போதெல்லாம் சென்னை மற்றும் தஞ்சை மாவட்டங்கள் தான் பெரிய தலைவலி. முழுவதும் திமுக வின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர் சென்னை அண்ணாநகரைக்கூட கண்டு கொள்ளவில்லை. ஆனால் மயிலாடுதுறையில் தன் முழு கவனத்தையும் செலுத்தி தன் கட்சி பாலவேலாயுதத்துக்கு ஓட்டு சேகரித்தார். திமுக சார்பில் சத்தியசீலன் அவர்கள் வேட்பாளர். தான் தான் இங்கே வேட்பாளர். இது தனக்கும் கலைஞருக்குமான நேரடி போட்டி என அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும் மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகரில் திமுக வென்றது.  இது எம்.ஜி.ஆருக்கு மயிலாடுதுறை மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதிமுகவில் எப்படி ஜெயாவை கட்சிக்குள் எம்.ஜி.ஆர் நுழைத்தாரோ அதே போல திமுகவில் டி.ராஜேந்தர் நுழைந்த நேரம். ஆக எப்போதும் தோல்வியே காணாத எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்வில் முதல் தோல்வியை எழுதியது மயிலாடுதுறை.


 உடனே மாவட்ட பிரிப்பை தள்ளிப்போட்டார் எம்.ஜி.ஆர். மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக ஆக்க அவர் விரும்பவில்லை போல! ஆனால் அடுத்த 18 மாதத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் அமரிக்காவில் அவர் இருந்த போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. மயிலாடுதுறையில் முதன் முறையாக அதிமுகவின் தங்கமணி எம்.எல்.ஏ ஆனார். ஆனால் அவர் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்க குரல் கொடுக்கவில்லை.   அதன் பின்னர் இந்திரா மறைந்தார். ராஜீவ் ஆட்சி வந்தது. கட்சித்தாவல் தடை சட்டம் எல்லாம் வந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தது. அதன் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது. மாநகராட்சிகளை தவிர்த்து நகராட்சி, ஒன்றியம், பேரூருக்கு தேர்தல். தமிழகம் முழுமையும் மிக மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. எம்.ஜி.ஆருக்கு அது பெரிய இடியாக விழுந்தது. இதனிடையே கீழத்தஞ்சை மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்கிற குraல் அதிகமாகியது.




உடனே எம்.ஜி.ஆர் ஒரு வேளை செய்தார். மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு வர இருக்கும் புதிய மாவட்டத்தை கிடப்பில் போட்டு தில்லையாடி வள்ளியம்மை மாவட்டம் என்கிற பெயரில் திருவாரூரை தலைநகராக ஆக்கி  ஒரு மாவட்டம் அமைக்கப்படும் என்றார். ஆனால் பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட எல்லையில் வராது அந்த தில்லையாடி என்பது. அது பொறையார் - தரங்கம்பாடி அருகே இருக்கும் கிராமம். மயிலாடுதுறை மக்களை பழிவாங்கியது போலவும் ஆயிற்று எம்.ஜி.ஆருக்கு. அதே நேரம் திருவாரூர் ... கலைஞர் பிறந்த ஊரை தான் தான் தலைநகர் ஆக்கினோம் என சொல்லியும் அந்த பக்கம் இருக்கும் மக்களை இழுக்கலாம் என்னும் அரசியல் கணக்கை போட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் துரதிஷ்டவசமாக எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அத்தோடு மாவட்ட பிரிப்பு என்னும் பேச்சு நின்று போனது. காரணம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்னர் ஜானகி ஆட்சி, பின்னர் ஆளுனர் அலக்ஸாண்டர் ஆட்சி, பின்னர் 1989ல் திமுக ஆட்சி, அதிலே மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக திமுகவை சார்ந்த அ.செங்குட்டுவன் அவர்கள் வந்தார். அவர் அப்போது எம்.எல்.ஏ, நகராட்சி தலைவர் உள்ளிட்ட 7 பதவிகளை கையில் வைத்திருந்தார். அவர் தான் மயிலாடுதுறை தலைநகராக ஆக வேண்டும் என  கிட்டப்பா அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவதாக குரல் கொடுத்தவர்.  அதுவும் இரண்டு ஆண்டுகளில் கலைப்பு என ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது தமிழ்நாடு. அதனால் அந்த அறிவிப்பு அப்படியே முடங்கிப்போனது. அதன் பின்னர் 1991ல் ராஜீவ் மரணம், பின்னர் ஜெயா ஆட்சி என வரிசை கட்டி வந்தது. 1991 முதல் 2001 வரை அதிராம்பட்டினம் சார்ந்த எம்.எம். அபுல்ஹாசன் அவர்கள் (91ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, 1996ல் த.மா.கா எம்.எல்.ஏ) பத்தாண்டுகள் மயிலாடுதுறை எம்.எல்.ஏ வாக இருந்தார். அந்த கால கட்டத்தில் மயிலாடுதுறைக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க நாதி இல்லாமல் போனது. அபுல்ஹாசன் அவர்கள் நல்லவர் தானேயொழிய வல்லவரோ அல்லது சட்டமன்றத்தில் தொகுதிக்காக குரல் கொடுக்கக்கூடியவரோ அல்லர்.
1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையையும் காதில் வாங்காமல், எம்.ஜி.ஆர் அறிவித்த தில்லையாடி வள்ளியம்மை பெயரில் அமைக்க அறிவிப்பு செய்த திருவாரூர் மாவட்டத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு நாகப்பட்டினத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்து 18.09.1991 முதல் செயல்படுத்தினார்.  அதற்கு பெயர் நாகை காயிதே மில்லத் மாவட்டம்.

போச்சுதா... மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்களின் கனவாகவே போய்விட்டது. மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டிணம் செல்ல வேண்டுமாகின் பாண்டிச்சேரியின் காரைக்கால் (வேறு யூனியன் பிரதேச மாநிலம்) கடந்து போக வேண்டும்.  அல்லது திருவாரூர் மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டும். அதன் பாதகங்களை பின்னர் விரிவாக பார்க்கலாம்.


மீண்டும்  1996ல் ஆட்சிக்கு வந்தது. அப்போதும் மயிலாடுதுறை மக்கள் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க பல முறை தங்கள் தொகுதி எம்.எல்.ஏ விடம்  (அப்போது அதே எம்.எம்.எஸ் அபுல்ஹாசன் அவர்கள் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் நின்று வென்றிருந்தார்) கேட்க அவர் அது பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால்  தலைவர் கலைஞர் அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் திருவாரூரை தலைநகராக கொண்டு (திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் தொகுதிகள்) ஒரு மாவட்டம் அமையும் என அமைத்து விட்டார். அப்போதும் மயிலாடுதுறை மக்களின் கனவு தகர்ந்து விட்டது.
மீண்டும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு மாவட்டம் வருமா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.  2001 முதல் 2006 வரை மீண்டும் அதிமுக ஆட்சி. அப்போது மயிலாடுதுறை எம்.எல்.ஏவாக இருந்தவர் அப்போது பாஜக கட்சி (திமுகவுடன் கூட்டணி அமைத்து)யை சார்ந்த ஜெக.வீர.பாண்டியன் அவர்கள் 23-4-2002 அன்று சட்டமன்ற மானியக்கோரிக்கை மீதான முதல் கன்னிப்பேச்சியிலேயே அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில், வாக்களித்த தொகுதி மக்களுக்கும் வாய்ப்புஅளித்த இந்திய பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கும், கூட்டணிக்கட்சி தலைவர் கலைஞர் அவர்களுக்கும் சோழமண்டல தளபதி கோசி. மணி அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசிய முதல்கூட்டத்திலேயே  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைத்திட வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்கள். ஜெயா ஆட்சியில் அது நடக்குமா என்ன? முடியவில்லை.



மீண்டும் 2006ல் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது மயிலாடுதுறையில் காங்கிரஸ் (திமுகவுடன் கூட்டணி அமைத்து வென்றது) எஸ்.ராஜ்குமார் அவர்கள். திமுக ஆட்சியில் லட்டு போல மயிலாடுதுறையை மாவட்டம் ஆக்கியிருக்கலாம். கையில் வெண்ணை இருந்தும்  அதை நெய்யாய் ஆக்காமல் அழகாய் தவற விட்ட பெருமை இவருக்கே சேரும். ஆனால் அதிஷ்ட வசமாக பக்கத்து தொகுதியான குத்தாலம் தொகுதியில் குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் எம்.எல்.ஏ வாக இருந்தார். மேலும் ஒரு வரப்பிரசாதமாக அப்போது அவர் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவராகவும் அமர்த்தப்பட்டார். அவரைப்பயன் படுத்தி மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் எத்தனையோ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. இதையெல்லாம் இப்போது பேசி பயனில்லை என்பினும் வரலாறு என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதால் எழுதுகிறேன்.



இதே குத்தாலம் க. அன்பழகன் அவர்கள் குத்தாலம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவராக இருந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி (20.01.2010) காலை 9.00 மணிக்கு மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் கூடியது. அதன் தலைவர் குத்தாலம் க.அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சதன் திருமலைக்குமார், விடியல் சேகர், நன்மாறன், லெட்சுமனன்,ஹசன் அலி  போன்றவர்களும் தலைமை செயலக அதிகாரி சார்பு செயலாளர் சக்திவேலு மற்றும் நாகை மாவட்ட ஆட்சித்தலைவர், மயிலாடுதுறை கோட்டாட்சியர், வட்டாட்சியர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பல பரிந்துரைகளை சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு அளித்தது. அதில் மிகக்குறிப்பாக பரிந்துரை எண் 42 மற்றும் 43 ஆகியவைகள் மயிலாடுதுறையை ஏன் நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. (படத்தை பார்க்கவும்)  அந்த மதிப்பீட்டுக்குழு  தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சுற்றி வந்து தன் முழு அறிக்கையை 06.05.2010 அன்று பேரவைக்கு அளித்தது.  அந்த அறிக்கை தாக்கல் செய்த பின் திமுக ஆட்சி முழுமையாக ஒரு வருடம் இருந்தது. 2011 மே மாதம் வரை திமுக ஆட்சி இருந்தது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ அந்த ஒரு வருடத்தில் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வருடத்தில் தரையில் புரண்டு போராடி அமல் படுத்தியிருக்க வேண்டுமா இல்லையா? நடக்கவில்லை.


ஒரு நல்ல வாய்ப்பு பறிபோனது. அதன் பின்னர்  2011 மே மாதம் முதல் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தது. தேமுதிகவில் இருந்து தேர்வான தற்போதைய திமுக மாநில விவசாய அணி இணைச்செயலாளர் ஆர். அருள்செல்வன் அவர்கள்  எம்.எல்.ஏ வாக தேர்வாகியிருந்தார். முதல் ஆறு மாதங்கள் தேமுதிகவுக்கும் அதிமுகவுக்கும் நல்ல உறவு இருந்தது. அப்போது தான் மயிலாடுதுறை தீபாய்ந்தாள் அம்மன் கோவில் காவிரி பாலம், வரதம்பட்டு பாலம் எல்லாம் வந்தது மயிலாடுதுறைக்கு. பின்னர் விஜயகாந்துக்கும் ஜெயாவுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ அருள்செல்வன் அவர்கள் 6 மாதம் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது எம்.எல்.ஏ அலுவலகம் கூட மூடப்பட்ட அவலம் ஜெயா ஆட்சியில் நடந்தது.  பின்னர் அரசின் ஒத்துழைப்பு இல்லாமலே அவரால் இயன்ற பணிகளை மயிலாடுதுறைக்கு செயல்படுத்த அவர் தவறவில்லை. மயிலாடுதுறை மணல் மேட்டில் புதிய அரசு கலைக்கல்லூரி பெற்றுக் கொடுத்தார்.   மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைக்க 13 ஏக்கர் நிலத்தை தருமை ஆதீனத்திடம் பேசி  பூம்புகார் சாலையில் வாங்கி கொடுத்தார் ஆர். அருள்செல்வன் அவர்கள். இதோ அதன் பின்னர் ஐந்து முழு  ஆண்டுகள் ஆகிவிட்டது அதன் பின்னர் அதிமுகவில் இருந்து ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவாக தேர்வாகி! இன்னமும் பேருந்து நிலையம் வந்தபாடில்லை. தமிழக அரசு, தருமை ஆதீனத்திடம் இருந்து வாங்கிய நிலம் அப்படியே வேலி போடப்பட்டு அமைதி காக்கின்றது.  இதனிடையே அரசு தன் சட்டமன்ற பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை ,  இடம் வாங்கி கொடுத்தும் பேருந்து நிலையம் அமைக்க முன்வரவில்லை, மேலும் மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.  தன் சக்திக்கு மேல் போராடினார். ஆனாலும் ஜெயா அரசு ஒத்துழைக்கவில்லை. இதோ 2016 முதல் இன்று தேதி 27.03.2020 ஆகிவிட்டது. மயிலாடுதுறையை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டங்கள் வலுவடைந்த பின்னரும் கூட வக்கீல் சங்கம் எல்லாம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம், வர்த்தகர் சங்கம் போராட்டம், தமிழ்ச்சங்கம் போராட்டம், பேராசிரியர் முரளி தலைமையில் போராட்டம் இப்படி பல போராட்டங்கள் நடந்த போதும் அதிமுக எம்.எல்.ஏ காதில் விழவில்லை.



எத்தனை போராட்டம் எத்தனை போராட்டம்? வக்கீல் சேயோன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து பல போராட்டங்கள், வர்த்தகர் சங்கம் திரு செந்தில்வேல் தலைமையில் பல போராட்டங்கள், அனைத்து கட்சிகள் சேர்ந்து கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்.கே.சங்கர்,  வக்கீல் சிவதாஸ், வக்கீல் அருள்தாஸ், வக்கீல் புகழ், வக்கீல் சங்கரநாராயணன், கோமல் அன்பரசன் தலைமையில் காவிரி கதிர் குழுமங்களின், மயூரயுத்தம் குழுவினரின் பல போராட்டங்கள், கடைசியாக ஒடிசா பாலு வரை, மயிலாடுதுறை தமிழ்சங்கங்கள், ஜெனீபர் ஓனர் வரை எத்தனை எத்தனை போராட்டங்கள்.... 
இந்த நேரத்தில் தான் மத்திய அரசு நாகை மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் முடிவை எடுத்த போது அந்த மருத்துவக்கல்லூரி மயிலாடுதுறைக்கு வேண்டும் என போராட்டம் உச்சம் அடைந்தது. ஆனால் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நின்று வென்று பாராளுமன்றம் சென்ற ஓ.எஸ் மணியன் அவர்கள் தான் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்தவர் ஆகினும் நம்மை வெற்றி பெறச்செய்தார்களே மயிலாடுதுறை மக்கள் என்னும் நன்றி கூட இல்லாமல் “மயிலாடுதுதுறைக்கு மருத்துவக்கல்லூரி கிடையாது. நாகைக்கு தான் அந்த கல்லூரி” என பேட்டி கொடுத்த போது தான் மயிலாடுதுறை மக்களின் கோபம் அதிகமாகியது. இத்தனைக்கும் நாகைக்கும் காரைகாலுக்கும் இடையே 15 கிமீ தூரம் தான். காரைக்காலில் வினாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. அதே போல நாகைக்கும் திருவாரூருக்கும் வெறும் 20 கிமீ தான். அங்கே திருவாரூரில் மருத்துவக்கல்லூரி இருக்கின்றது. நாகை மக்களுக்கு ஒரு ஆபத்து எனில் வெறும் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் மயிலாடுதுறை மக்கள்????  சிதம்பரத்துக்கு 43 கிமீ தூரம் போக வேண்டும், அல்லது திருவாரூருக்கு 40 கிமீ தூரம் போக வேண்டும். (இந்த கணக்கு மயிலாடுதுறை டவுனில் இருந்து மட்டும்) மயிலாடுதுறையில் உயிர்காக்கும் மருத்துவமனைகள் என்பது கிடையாது. அதுவும் ஞாயிறு அன்று மயிலாடுதுறையில் வசிப்பதே நரகத்தில் வசிப்பதற்கு சமம். ஒரு சாதாரண காய்ச்சலுக்கு கூட எந்த டாக்டர்களும் இருக்க மாட்டார்கள். இது தான் மயிலாடுதுறையின் நிலை. இப்படி இருக்கும் போது அந்த மருத்துவக்கல்லூரியை மயிலாடுதுறைக்கு கொண்டு வர வேண்டும் என மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணனோ அல்லது சீர்காழி எம்.எல்.ஏ பாரதியோ கேட்டார்களா எனில் இல்லை என்பதே உண்மை. ஆனால் நான் இந்த விஷயத்தில் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். புவுன்ராஜ் எம்.எல்.ஏ அவர்கள் இது விஷயமாக முதல்வரை சந்திக்க போகலாம் என ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதியை கேட்ட போது அவர்கள் வர மறுத்து விட்டதாக இங்கே அனைத்து நாளிதழும் செய்தி வெளியிட்டதே! பேராசிரியர் முரளி கூட தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருந்தாரே?  போனதெல்லாம் போகட்டும். இனி மயிலாடுதுறை மாவட்டம் அமைய பாடுபடுங்கள். நாங்கள் எப்போதும் நன்றியோடு இருப்போம்.



மயிலாடுதுறை பேருந்து நிலையம் என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மாப்படுகை மேம்பாலம் உறுதி அளித்தது என்ன ஆனது இந்த 4 ஆண்டுகளில்? மயிலாடுதுறை சுற்று வட்ட சாலை நிலம் ஆக்க்கிரமிப்பு எல்லாம் முடிந்தும் 4 ஆண்டுகள் ஆகின்றதே? எங்கே அந்த சுற்று வட்ட சாலை? ஆக இப்போது மயிலாடுதுறை மாவட்டம் என்பது மக்கள் போராட்டத்தால் வந்தது என்பதை உணர்க! முதலில் குரல் கொடுத்தது என்.கிட்டப்பா திமுக எம்.எல்.ஏ, அடுத்து அ.செங்குட்டுவன் திமுக எம்.எல்.ஏ, குத்தாலம் பி.கல்யாணம் (குத்தாலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ) (மயிலாடுதுறை எம்.எல்.ஏ அபுல்ஹாசன் பேசாமல் இருந்த போது மயிலாடுதுறை தொகுதிக்காகவும் பேசியவர் குத்தாலம் கல்யாணம் அவர்கள்) ,  ஜெகவீரபாண்டியன் எம்.எல்.ஏ ( திமுக)ஆர்.அருள்செல்வன் எம்.எல்.ஏ (திமுக மாநில விவசாய அணி இணை செயலாளர்),  பவுன்ராஜ் (பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ), அதிமுக நகர செயலாளர் வி.ஜி.கே செந்தில் அவர்கள் மற்றும் வர்த்தகர் சங்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், அறம் அமைப்பினர், பேராசிரியர் முரளி, மயூரயுத்தம் கோமல் அன்பரசனின் காவிரி குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் சாதித்து காட்டிவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் உண்டானது.  மிக முக்கியமாக தருமை ஆதீனம் அவர்கள். கேட்டதும் 60 ஏக்கர் நிலத்தை அள்ளிக்கொடுத்து மயிலாடுதுறையில் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவைகள் கட்ட இடம் கொடுத்த தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் ஸ்வாமிகள் அவர்களுக்கு நன்றிகள்! மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி, பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மற்றும் இந்த இனிய அறிவிப்பை மயிலாடுதுறை மக்கள் மனம் மகிழும் அறிவிப்பை செய்து செயல்படுத்த தயாராக இருக்கும் தமிழக முதல்வர் திரு எடப்பாடியார் அவர்களுக்கும் துணை முதல்வர் திரு ஓ.பி.எஸ் அவர்களுக்கும் மயிலாடுதுறை மக்கள் சார்பாக என் நன்றிகள்!



அதே போல பல முறை மயிலாடுதுறை மாவட்டம் ஆக வேண்டும் என புலம்பும் போதெல்லாம் செவிமடுத்து மயிலாடுதுறை மாவட்ட தலைநகர் ஆன உடனேயே தன் உணர்வுகளை தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவாக வெளியிட்ட எங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் சாருக்கு என் நன்றிகள். இதோ அவரது பதிவு...


// “ ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது!”
மயிலாடுதுறை மாயூரமாகி , பின்னர் மாயவரமாகி, மீண்டும் மயிலாடுதுறையாகவே மாறி இன்று தனி மாவட்டமாகவே ஆகியிருக்கின்றது.
பெருமகிழ்ச்சி!😊👏🏻
வறண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் தொட்டுத் தொடரும் தொடர்புகள் பன்னெடுங்காலமாக உண்டு. திருத்தல யாத்திரையாக பாஸ்கர சேதுபதி மன்னர் தஞ்சை மாவட்டத்திற்குத் தன் பரிவாரங்களோடு போனது மட்டுமல்ல; வானம் பார்த்த எங்கள் பகுதியில் இருந்து விவசாயத் தொழிலாளர்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சைத் தரணிக்குப் புலம் பெயர்வதும், விவசாயப் பணிகள் முடிந்த பின் மீண்டும் திரும்புவதும் எளிய மக்களுக்கான வரலாறேயாகும்.
சோழ வளநாட்டில் மனங்கவர்ந்த பகுதிகள் பல இருந்தாலும், மயிலாடுதுறை மீதான ஒரு தனி மையல் இருக்கத்தான் செய்கின்றது.❤️எண்பதுகளின் துவக்கத்தில் அந்த நகரத்தில்தான் எனது விடுமுறை நாட்கள் அனைத்தும் செலவழிந்திருக்கின்றன. ராஜன் தோட்டமும், மணிக்கூண்டும், மகாதான-பட்டமங்கலத் தெருக்களும், அவயாம்பிகை கோவிலும், தருமையாதீனமும், காவிரிப் பாலமும், ரயில் நிலையமும், இன்னும் நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே உணர வைக்கின்றன. சிதம்பரத்தில் இருந்து வந்து இறங்கி குடந்தைக்கு மாறும் அந்தப் பேருந்து நிலையம் இன்றைக்கும் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொண்டு; ஆனால், எனக்கு மட்டும் சில இன்பக்கதைகளை ரகசியமாகச் சொல்லிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றது.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்; எத்தனை மாற்றங்கள் வந்தாலும்; மயிலாடுதுறை என் உணர்வில் கலந்த ஒரு பெயர்!
இன்று நான் போற்றும் பல நல்ல நண்பர்களை எனக்குத் தந்து, தனி மாவட்டமாக மிளிரக் காத்திருக்கின்றது. அதற்கான முன்னெடுப்பு மேற்கொண்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
“வாள்நிலா மயிலாடுதுறைதனைக்
காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.!”
- திருநாவுக்கரசர்.//

மீண்டும் என் நன்றிகள் எங்கள் தங்கம் சாருக்கு! 


சரி.... மயிலாடுதுறைக்கு மாவட்ட தலைநகர் என்னும் அந்தஸ்து வந்தாகிவிட்டது. அடுத்து என்ன வளம் இருக்கின்றது எங்கள் மாவட்டத்தில் என்போர்களுக்காக....


மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய  மூன்று சட்டமன்ற தொகுதிகளை முழுமையாக கொண்டது எங்கள் மாவட்டம். அதே போல மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்ந்தது.  கொள்ளிடத்தில் இருந்து ஆறுகள் எத்தனை தெரியுமா? கொள்ளிடம், ராஜா வாய்க்கால், காவிரி, மஞ்சளாறு, கடலாழி, வீரசோழன் ஆறு,  நண்டலாறு ஆகிய பெரிய ஆறுகள் பாய்கின்றன. கூழையார் முதல் தரங்கம்பாடி வரை கடல் பகுதிகள். மீன் வளம் குறைவில்லை. முழுக்க முழுக்க டெல்டாவின் கடைமடை பகுதி, காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் எங்கள் மாவட்டம். டச்சு கோட்டை அமைந்திருக்கும் கோட்டை அமைந்திருக்கும் தரங்கம்பாடி, மாயூரநாதர், பரிமள ரங்கநாதர் போன்ற சிவ, வைஷ்ணவ தளங்கள், குதம்பை சித்தர்,திருமூலர் ஆகியோர் ஜீவசமாதிகள், சித்தர்காட்டில் 63 சித்தர்கள் சிவ அடக்கம் ஆன ஸ்தலம், உலகப்புகழ் பெற்ற  தருமை ஆதீனம், மயிலாடுதுறை இரயில்வே சந்திப்பு 1867 முதல் மயிலாடுதுறையில் புகை வண்டி செல்லும் வழித்தடம். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் மார்க்கம், திருச்சி மார்க்கம், திருவாரூர் மார்க்கம் என மூன்றாக பிரியும் பெரிய இரயில்வே சந்திப்பு. ஏற்கனவே நின்று போன தரங்கம்பாடி சந்திப்பை இனி வரும் எம்.எல்.ஏக்கள் மாநில தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அவைகள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில்வே பாதை மீண்டும் துளிர்க்கும். தரங்கம்பாடியில் இருந்து புதிய வழித்தடம் காரைக்காலுக்கு இணைத்தால்  காரைக்கால் துறைமுகத்தில் வரும் பொருட்கள் சென்னை வரை அழகாய் சென்று விடும். லாரி வழியே சாலை போக்குவரத்தை தவிர்கலாம். அதே போல மயிலாடுதுறையில் இருந்து திருவையாறு, அரியலூர் வரை புதிய  ரயில் வழித்தடம் அமைத்தால் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு தேவையான சுண்ணாம்புக்கல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நேரிடையாக செல்லும், அதே நேரம் பழையார்( கூழையார்), பூம்புகார் பகுதிகளில் மீன் பிடி துறைமுகங்களை விரிவு செய்தால் மிகப்பெரிய வர்த்தகம் உண்டாகும். தரங்கம்பாடியில் காரைக்கால் போல ஒரு செயற்கை துறைமுகம் அமைத்தால் மிகச்சிறப்பு. விவசாயம், மீன்பிடி ஆகியவைகள் போதுமானது எங்கள் வாழ்வாதாரத்துக்கு! இன்னும் எத்தனையோ சொல்லலாம். நான் மேலே சொன்னவைகளை செய்ய நல்ல எம்.எல்.ஏக்கள், மற்றும் எம்.பி இருந்தால் போதும் இன்னும் 15 ஆண்டுகளில் மயிலாடுதுறை மாவட்டம் ஒரு முதன்மையான மாவட்டமாக திகழும் தமிழகத்தில்!
மயிலாடுதுறையை மாவட்டமாக்க போராடிய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும், முதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் என் நன்றிகள்! 
- அபி அப்பா என்கிற தொல்காப்பியன்
மயிலாடுதுறை மாவட்டம்





No comments:

Post a Comment

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))