பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 29, 2007

"அதபெகொகு"ன்னா என்னா??????ஒரு கிசு கிசு!!!

வேலை பளு நிச்சயம் காரணம் இல்லை மேட்டர் பஞ்சத்துக்கு. அதுக்கும் மேல ஏதோ இருக்கு.மனசு ஒட்ட மாட்டங்குது எதிலேயும். பதிவு போடனும்ன்னு நெனச்சா தூக்கம் தூக்கமா வருது. தூங்க படுத்தா பதிவு போடனும் போல இருக்கு. ஏதாவது மேட்டர் சிக்குனாத்தானே! ஒன்னும் மாட்ட மாட்டங்குது. இதையெல்லாம் போக்க என்ன தான் வழி!

1. அய்யனார் ஒரு பதிவு சுரங்கம். அவர் ஒரு பதிவு போட்டா அவரால பத்து பேர் பொழப்பு நடத்தலாம். அப்படி ஒரு ஜீனியஸ் அவரு. எதிர் பதிவு, பின் பதிவு, சைடு பதிவு, அய்யனார் செய்வது நியாயமா? இப்படின்னு போட்டு தமிழ்மணத்துல ஜொலிக்கலாம். ஆனா அய்ஸ் இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. அய்யனாருக்கு பஞ்சர் ஆச்சு அதனால குசும்பனுக்கு காத்து போச்சு! ஆக அய்யனாரை "பனோரமா" கொண்டு போய் குளிப்பாட்டினா பஞ்சம் போக வழி இருக்கு.பிதுங்கி பிதுங்கி பதிவு போடுவார். நாம அத வச்சி எதுனா பதிவு போடலாம். அடுத்து...

2. ஓசை செல்லா இருக்கவே இருக்காரு! முன்னல்லாம் ஓசை செல்லாவுக்கு ஒரு கேள்வின்னு பதிவு போடலைன்னா அவங்க ஒரு பதிவரே இல்லைன்னு சொல்லும் படி இருந்துச்சு, ஆனா இப்ப ஓசை இல்லாம இருக்காரு அவரும். கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டேன்ன்னு அடம் பிடிக்கிறார். ஓசையோட வாங்க எங்க பஞ்சத்தை போக்க!

3. பொன்ஸ் எங்கன்னே தெரியல, வலைச்சரம் கூட இப்ப முத்து லெஷ்மிதான் நடத்துறாய்ங்க! பொண்ஸையாவது ஏமாத்தி வலைச்சரம் ஆசிரியரா ஆகி பதிவுன்னு ஒப்பேத்தலாம்ன்னு பார்த்தா அவங்க VRS வாங்கிட்டு முத்துலெஷ்மிகிட்ட குடுத்துட்டாங்க, முத்துலெஷ்மிய ஏமாத்த முடியாது. பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாத்தான் வலைச்சரம் ஆசிரியர்ன்னு பிடிவாதமா இருக்காங்க. இது எந்த காலத்துல நடக்கும். ஆஹ இந்த முயற்சி வீண்.

4. ஜி டாக்குல இருக்கும் மெசேஜ்ஜை பதிவா போடலாம்ன்னு பார்த்தா வெட்டி, இளா எல்லாம் "எங்க பொழப்பை கெடுக்காதே"ன்னு கத்துவாங்க. இந்த ஐடியாவும் வீண்.

5.சரி குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை எழுதலாம்ன்னு பார்த்தா பவன்,நிலா,மாதினி,பொடியன்னு தூள் கிளப்பி சூடான இடுகைல துண்டு போட்டு வச்சுட்டாங்க, அதனால இந்த முயற்சி வேணாம்.போற போக்க பார்த்தா “அமரிக்க ஏகாதிபத்திய குடியுரிமை பெற்ற கல்பனா சாவ்லாவுக்கும், சுனிதா வில்லியம்சுக்கும் இந்தியா இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?” என அசுரன் மாதிரி பதிவு போட்டாலும் போடுவாய்ங்க போல இருக்கு!!

6. இளையராஜா போல மாசத்துக்கு ரெண்டு பேர் இங்க வந்தாலாவது பதிவு ஏதாவது தேறும்ன்னு பார்த்தா கோபிதம்பி கோவிச்சுப்பான். அதனால கதிர் தம்பி மாதிரி குரங்கு குல்லா போட்டாகூட காது மட்டும் மூடாம பஸ் பஸ்ஸா ஏறி இறங்கினா ரெண்டு மூணு பதிவு தேற வாய்ப்பு இருக்கு.

7. வெட்டி,அம்பி,கைப்ஸ் எல்லாம் கைகட்டப்பட்டு பெரும் அவஸ்த்தையிலே இருப்பதால் இந்த கேப்பிலே நாம விளையாண்டாதான் உண்டுன்னு எனக்கு மனசிலே தோணுவதை எல்லாம் குசும்பன் போட்டு தாக்கிட்டு இருக்காரு. அதனால மனசிலே எதையும் நினைக்காமல் திடீர்ன்னு பதிவு போடுவது நல்ல வழின்னு படுது எனக்கு. அப்படி போட்டா மாசம் ரெண்டு பதிவாவது தேறும்.


8. குரங்கு ராதா என்னடான்னா ராயல்டி கேக்கறான். ஏதோ ஆயிரம் ஆயிரமா கொட்டுவது போல. வேணுமின்னா பாதி பின்னூட்டம் குடுக்கலாம். இல்லாட்டி "அதபெகொகு "ன்னு கிசு கிசு மாதிரி அவன் பெயரை வச்சு எழுதலாம். அதாங்க அம்பிகாவின் தங்கை பெயர் கொ ண்ட குரங்கு!


9. பெஸ்ட் ஐடியா! அண்ணாச்சி ஆசீப்பை உசுப்பேத்தி "வலைப்பதிவர் பட்டறை" துபாய்ல நடத்த வச்சி "பட்டரைக்கு இன்னும் 30 நாள், 29 நாள் ன்னு பட்டரை நடக்கும் வரை தினமும் ஒரு பதிவா போடலாம். இது எனக்கு என்னவோ சரியா படுது. துபாய் வலைப்பதிவர்களே திரண்டு வாங்க அண்ணாச்சிய பிடிப்போம். (பதிவு போட்டு) வாழ வழி செய்யுங்க அண்ணாச்சின்னு கேப்போம் வாங்க வாங்க!!

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்!!!

காலை எழுந்ததுமே "ஆஹா இன்னிக்கு வியாழக்கிழமையா"ன்னு ஒரு வித சந்தோஷமா இருந்துச்சு. வேலைக்கு போனதுமே ஒரு வித அசமஞ்சமா இருந்துச்சு. நேரம் நகரவேயில்லை. மாச கடைசி வேறயா, இன்னிக்குன்னு பார்த்து வியாழகிழமை வந்துடுச்சேன்னு சலிச்சு கிட்டே எதுக்கும் சம்பளம் கிரெடிட் ஆகிட்டுதான்ன்னு 3138888 க்கு போன் பண்ணினேன். "your account balance is _____ in credit, to repeate your balance press 1"ன்னு கம்பியூட்டர் பெண் கிளி சொன்னுச்சு. சரி எப்படியும் இன்னிக்கு கிரெடிட் ஆகிடும்ன்னு கொஞ்ச நேரம் கழித்து போன் பண்ணினேன் அப்பவும் அதே பதில் தான். முதல் முறை செல்லமாக சொன்ன அந்த பெண் கிளி என்னுடைய 18வது போனில் கர கர குரலில் சொன்னதையும் நான் பொருட்படுத்தாமல் கஜினி முகமதுவாக இருந்தேன். கிட்டத்தட்ட 32 வது போனில் "நாதாறி என்னய மத்தவங்களுக்கும் பதில் சொல்ல வுடுடா...கர்...தூஊஊஊஉ"ன்னு சொல்லவே, கேபின் சாத்தியிருப்பதை உருதி செய்து கொண்டு முகத்தை துடைத்து கொண்டு போனில் மொக்கை போடலாம் யாருக்காவதுன்னு நெனச்சுகிட்டு குசும்பனுக்கு போன் பண்ணினேன். "உங்க அக்கவுண்ட் பேலன்ஸ் மைனஸ் 3 திர்காம், தாங்கள் பேங்க் கம்பியூட்டர் பெண்கிளியிடம் சத்தெடுத்ததை போல என்னிடம் வம்பு பண்ணினா வெட்டிடுவேன் தங்கள் அழைப்புக்கு நன்றி"ன்னு முதல்ல இங்கிலீஷ்லயும் அதையே அரபியிலயும் சொல்லிடுச்சு.

சரி நாம் இதுக்கு பழிக்கு பழி வாங்கியே தீரனும்ன்னு நெனச்சு கிட்டு இருக்கும் போதே ஒரு தமிழ் நண்பன் லொஜிஸ்டிக் இஞினியர் வந்தான். " என்னய்யா டல்லா இருக்க வியாழக்கிழமையும் அதுவுமா...சும்மாதான இருக்க எனக்கு ஒரு லெட்டர் டைப் பண்ணி குடு, நான் இன்னிக்கு ஹெட் ஆபீஸ் போறேன். அங்க குடுக்கனும்"ன்னு சொன்னான். "என்ன லெட்டர்?'ன்னு கேட்டேன். "சேலரி இண்கிரி மெண்ட் லெட்டர் தான்! நான் இந்த கம்பெனில கடுமையா உழைக்கிறத எல்லாம் விலா வாரியா சொல்லி அதனால கூடிய சீக்கிரம் இன்கிரிமெண்ட் கொடுக்க சொல்லி எழுதி குடுய்யா மீதி எது எது சேர்க்கனுமே சேர்த்துக்கோ. அதான் பதிவெல்லாம் போடுறியே இட்டு கட்டி எழுது, அந்த ஒரு லெட்டரிலே என வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரணும்"ன்னு சொன்னான். என் கோவத்தை கொஞ்சம் கூட காட்டிக்காம "அடிச்சு வைக்கிறேன் ஹெட்டாபீஸ் போகும் போது வாங்கிட்டு போ"ன்னு சொல்லிட்டு லெட்டர் அடிக்க ஆரம்பிச்சேன்!



29/11/07
துபாய்

ஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்

அனுப்புனர்:

(*********)
ஆல் இன் ஆல் அழகுராஜா,
*********
*********

பெறுநர்:

உயர் திரு.**********,
*********
*********
********

உயர் திரு அய்யா,

பொருள்: ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பம்

*********

மேற்படி நான் தங்கள் நிர்வாகத்தில் கடந்த ஆறு வருடங்களாக மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து வருவது சமூகம் தங்களுக்கு தெரிந்ததே.

தங்கள் கார் ஒருமுறை மணலில் சிக்கிய போது நான் பின்பக்கமிருந்து 10 பேரோடு சேர்ந்து நம்ம வடிவேலு காமடி மாதிரி "தள்ளு தள்ளு தள்ளு"ன்னு கூவிகிட்டே தள்ளி விட்டதையோ கார் கிளம்பிய பின் தாங்கள் மொத்த கும்பலையும் பார்த்து "நன்றி"ன்னு சொன்ன போது அது எனக்கு மட்டுமேயான தனிப்பட்ட நன்றி என நான் நினைத்து பெருமை பட்டு கொண்டதையோ எல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை.அந்த கார் மணலில் சர்வ சாதாரனமாக போகும் கார் என்பதோ, நான் கார் தள்ள உதவிக்கு கூப்பிட்ட பத்து பேரும் கிரீஸ் கையோடு இருந்தவர்கள் என்பதோ தங்கள் உதவியாளர் அடுத்த நாள் சொல்லித்தான் தெரியும்.

அதே போல் நம் நிர்வாகத்தின் இஃப்தார் விருந்தின் போது நோம்பு கஞ்சி உங்க மீசையில் ஒட்டியது பார்த்து நான் துடித்து போய் டிஷ்யூ கொண்டு உங்க மேல் பாய்ந்து மீதி இருந்த கஞ்சியை உங்க கோட் மேல தட்டிவிட்டேனே, அப்போது கூட டிஷ்யூ கொடுக்க வந்த என் நல்ல எண்ணத்தை பாராட்டி "நன்றி" ன்னு பாராட்டினீங்களே அதையெல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்டால் அது அசிங்கம் என்பதை நானும் அறிவேன்!

மேலும் ஒருமுறை தங்கள் தலையில் மாட்டிகொண்ட தலைகவசத்தை கழட்ட நான் உதவி செய்து அந்த என் பெரு முயற்சியில் உங்கள் விக்கும் சேர்ந்து வந்துவிட்டதே அப்போது என்னை நீங்கள் "உற்று" பார்த்ததை எண்ணி பல நாள் பலபேரிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன்.அப்போது கூட தாங்கள் என் பெயரையும், என் அடையாள அட்டை எண்ணையும் குறித்து வாங்கி கொண்டீர்கள், அத்தனை அன்பு என் மேல் உங்களுக்கு. அதை எல்லாம் சொல்லி நான் ஊதிய உயர்வு கேட்கப்போவதில்லை."பின் எதற்காக தர வேண்டும்?" என தாங்கள் நினைப்பது புரிகின்றது.

"உயர"மான இடத்தில் அமர்ந்திருக்கும் டவர் கிரேன் ஆப்பரேட்டரை கூட நிர்வாகத்தின் தொலை பேசி வழி கூப்பிடாமல் விசில் "ஊதி"யே கூப்பிட்டு வேலை வாங்கும் எனக்கு நீங்கள் ஏன் "ஊதி"ய உயர்வு தரக்கூடாது? இதை சிந்தித்து சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள

****************
ஆல் இன் ஆல் அழகுராஜா


**********************************************************************************************

லெட்டர் டைப் செய்து கவரில் போட்டு, நண்பன் வந்த பின்ன கொடுத்தேன். படித்து பார்த்து கையெழுத்து போட்டு கொடுக்க சொன்னதுக்கு, "யோவ், உன் லெட்டர் டிராஃப்டிங்க சந்தேகப்பட்டா நானெல்லாம் மனுஷனே இல்லய்யா, படிக்க நேரமில்ல ஹெட் ஆபீஸ் அவசரமா போறேன். அங்க போய் கையெழுத்து போட்டுக்கறேன்"ன்னு சொல்லிட்டு ஓடிட்டான். நாளை நடப்பதை யார் அறிவார்!!!

November 25, 2007

நலிவடையும் தொழில்கள்!!!

பத்தாவது வரலாறு -புவியியல் கடைசி பரிச்சை எழுதி முடித்த அடுத்த நாளே ஒட்டு மொத்த மாயவரத்து அரும்பு மீசைகளும், அரை தாவணிகளும் மயூரா டைப்பிங் செண்டருக்கு தான் ஓடும். டைபிங் கத்துக்க ஆசை என்பதை விட எதிபால் ஈர்ப்புதான் பிரதான காரணமாக இருக்கும். மேலும் இத்தனை நாள் யூனிஃபார்ம் யூனிஃபார்ம்ன்னு இருந்த பசங்களுக்கு தன் பட்டு பாவாடையையோ, கலர் பேண்ட், ஜீன்ஸ்களையோ காட்ட இது நல்ல வாய்ப்பு. மயூரா இண்ஸ்ட்டிடியூட் வாத்தியார் ராமனாதனுக்கு வயிறு கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால் மெக்கானிக் பை ஓட்டுவது போல ஒரு பக்கமா உக்காந்துதான் டைப்புவார்.ஆனா நாம மட்டும் நேரா நிமிர்ந்து கூன் விழாம உக்காரனும் என்பதில் கண்டிப்பா இருப்பார். asdfgf ; lkjhj முதல் 1 வாரத்துக்கு ஓடும். அப்போ தடவி தடவி நாம் அடிப்பதை நம் சீனியர் தாவணிகள் ஒரு வித நக்கலை உதட்டில் வழிய விட்டு பார்க்கும் போது மானமே போகும். இப்படியாக ஒரு வழியா zyxwன்னு தலை கீழா அடிக்கும் போது கொஞ்சம் ஸ்பீடு வந்திருக்கும். ஏபிசிடி தலை கீழா சொல்ல தெரியுமான்னு வீட்டிலே வந்து பீத்திக்க தோணும். ஸ்பீடு வரும் வரை ரெமிங்டன் மிஷின் தான். ஏறி அதன் மேல உக்காந்து அடிக்கனும் அத்தனை கஷ்டமா இருக்கும். ஃபேசிட் மிஷின் சார் தருவதே ஒரு சடங்கு மாதிரி விஷேஷமா இருக்கும். காலை பேட்சில் ஒருத்தனுக்கு கொடுத்துட்டா அது தலைப்பு செய்தி மாதிரி இரவு பேட்ச் வரை டாக் ஆஃப் த இண்ஸ்ட்டிட்டூட்டா இருக்கும். புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்.

சைக்கிள் பாரிலே 4 டிம்மி பேப்பரை சுத்தி வச்சுகிட்டு டைப் கிளாஸ்க்கு போவதே அந்த காலை நேரத்தில் ஒரு வித சந்தோஷமா இருக்கும்.சத்தமில்லாமல் சில காதல்களும், பலத்த சத்தத்தோடு சில காதல்களும், காதலிக்க பொண்ணு கிடைக்காத வயித்தெரிச்சல் கோஷ்டிகள் காதலிப்பவர்களின் வீட்டுக்கு போட்டு கொடுக்கும் புண்ணிய வேலை செய்து கொண்டும், சும்மா கல கலன்னு இருக்கும் ஊரே!

ஆனால் இப்போ அதல்லாம் ஒன்னும் இல்லை. வெறிச்சோடி கிடக்கு அந்த இண்ட்டிடியூட். மயூராவின் பிரான்ச் எல்லாம் மூடியாச்சு. கேட்டா அந்த தொழிலே அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. கம்பியூட்டர் வகுப்புக்கு கூட்டம் கூட்டமா போறாங்க. வீட்டுக்கு வீடு கம்ப்பியூட்டர் வந்தாச்சு. பல பேர் டை கத்துக்காமயே 'ஒருவிரல்"கிருஷ்ணாராவாக ஸ்பீடில் கலக்குதுங்க. டைப் மிஷின் மாதிரி ஒரே ஃபோண்ட் இல்லை. எந்த டிசைன் வேணுமோ அதில கலக்குறாங்க. தமிழ் டைப் கத்துக்க தேவையே இல்லை. அதான் கலப்பை வச்சு உழுதுடுறாங்களே! ஆஹ இனி எதிர் காலத்தில் நான் டைப் மிஷினை மியூசியத்துல தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை!!!

அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்!! பிரஸ் உள்ளே நுழைந்தாலே அந்த பிர்ண்டிங் இங்கின் வாசனையும், தோசையில் நெய் தடவுவது போல இங்க்கை மிஷினில் தடவும் அழகும் ஆஹா சூப்பர். பிரஸ்ஸில் பிரதான பணியே அச்சு கோர்க்கும் வேலை தான்.குழியில் கிடக்கும் முழி, பொடி ஒழுகும் மூக்கின் நுனியில் வெள்ளெழுத்து கண்ணாடி, கூர்ந்து கவனிக்கும் போது வெற்றிலை காவி கலரில் 32 பல்லும் தெரிய தொழிலில் காட்டும் சிரத்தை.... அவர் தான் அச்சு கோர்ப்பவர். கண்ணை இடுக்கி இடுக்கி கவனித்து வேலை முடிந்து வெளியே வந்து ரோட்டில் போகும் அத்தனை பெரிய பஸ்ஸை கூட கண்னை இடுக்கி கொண்டே தான் பார்ப்பார். முதலாளி சம்பளம் குடுக்க லேட் ஆனால் ஒரு கொத்தாக எழுத்துகளை அள்ளி கோவணத்தில் முடிந்து கொண்டு ஈயம் பித்தளைக்கு போடும் வேலையோ, பக்கத்து பிரஸ்ஸில் "பா" "லூ" கடனா குடுன்னு சொல்லும் வேலையோ இனி இல்லை! முதல்ல எல்லாம் பிரிண்டிங்க்கு கொடுத்துட்டு ப்ஃரூப் பார்க்க ஒரு தடவை, எழுத்து டிசைன் மாத்த ஒரு தடவை, பத்திரிக்கையோ நோட்டீசோ அடிச்சு வாங்கங்காட்டிலும் தாவு தீர்ந்துடும். ஆனா இப்ப அந்த பிரஸ் எல்லாம் ஆஃப்செட் பிரஸ்ஸா மாறிடுச்சு. எல்லாம் படாபட் தான். இப்பல்லாம் கிராமத்தில் மட்டுமே அது போல பிரஸ் இருக்கு. கட்சி நோட்டீசோ, டூரிங் தியேட்டர் போஸ்டரோ அடிச்சுகிட்டு மத்த நேரத்துல ஈ ஓடிகிட்டு இருக்கு. இனி எத்தனை காலத்துக்கு இருக்குமோ! நம் சந்ததியினருக்கு இப்படியெல்லாம் பிரஸ் இருந்துச்சுன்னு தெரியாமலே போக நேரிடும்.

அடுத்து ரெக்கார்டு பிளேயர், அந்த கருப்பு தோசை ரெக்கார்டு, அது தயாரிக்கும் HMV கம்பனி, அந்த முள் மாட்டிகிட்டு "அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான்" என வினாயகர் கதருவது எல்லாம் இப்போ ஐப்போட் உள்ளே அடங்கி நம்ம சட்டை பாக்கெட்டில் உக்காந்துகிச்சு!!

அதே போல பிலிம் ரோல்! இன்னும் அதிகமா போனா 10 வருஷம் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை! இது போல காலப்போக்கில் அழிந்து வரும் வேற என்னன்ன தொழில் இருக்குதோ! விஞ்ஞானத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி சரியா தப்பான்னே தெரியலையே!

November 22, 2007

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு!!!!

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமல் அவர்களுக்கு!

தங்கள் விருமாண்டி படம் பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தாக! நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு அப்பாவி! உதாரணமாக ராஜபார்வை முதல் அன்பேசிவம்,ஆளவந்தான் வரை!!

ஆனால் நீங்க குரு முதல் எடுத்த கமர்சியல் படம் பத்தி பேச நான் வரவில்லை! ஆனால் கமர்சியல் கம் டெக்னிக்கல் படம்ன்னு நீங்க பில்டப் குடுத்த படம் பத்தி பேச போறேங்க!! அதாங்க அதில ஒன்னு "விருமாண்டி"

சாரே! சிறைத்துறை என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு? உங்க பேய்க்காமன் கேரக்டர் நீங்க ஊர்ல இருந்த போது ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை
யில போகும் போது சிறையிலே வற்றாறு! ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா?

சிறைதுறையும், காவல்துறையும் தனி தனி டிபார்ட்மெண்ட்னு உங்களுக்கு தெரியுமா?

டெபுடேஷன்ல கூட வரமுடியாது இந்த ரெண்டு டிபார்ட்மெண்டிலே அது தெரியுமா????(நான் ஒரு முக்கிய அதிகாரிகிட்ட கேட்டேன்!! அது முடிடியாதாம்!!!)

பேய்காமன் இங்க சிறைல வர்ராராமா, அவர் இங்கிட்டும் வந்து பழி வாங்குராராம்!!\\

நல்ல காமடி படமா இருந்துச்சு எனக்கு:-)))

சிறை என்றாலே ஜெயிலர் எல்லாம் காலர்ல கருப்பு பட்டை போட்டுகிட்டு இருப்பானுங்க! டேய் டேய்ன்னு கூவ தோனுது!! அட பாவிகளா தமிழ் நாட்டிலே 8 பெரிய ஜெயில் இருக்கு ஆனா டி.ஐ.ஜி 2 பேர், ஐ.ஜி 1 பேர் ஆஹ 3 பேர் தவிர, 8 எஸ்.பி 11 பேர் தவிர யாரும் காலர்ல கருப்பு பட்டை கிடையாது! லூசு பசங்களா! தமிழ் சினிமாவிலே விட்டா கண்விக்ட் விக்டர் கூட கருப்பு பட்டை போடுவான் போல இருக்கே!!

கன்விக்ட் வார்டன் என்பவன், போலீஸ் லாகபப்புல வச்சிருக்கும் அவங்க நம்பிக்கையுரிய கைதி அவ்வளவே!!

வார்டன் என்பது போலீஸ்காரன் அதாவது PC

சப் ஜெயிலர் என்பது ஈக்குவல் to சப் இண்பெக்டர்

ஜெயிலர் என்பது இண்ஸ்பெக்டர்

அதுக்கு அடுத்ததே சிறைதுறையில் டி எஸ் பி கேடரில் உள்ள ADSP

அவர் சீக்கிரமா SP ஆகிடுவாரு

காரணம் சிறை துறை என்பது சின்ன துறை!!

ஆனா வருமானம் உள்ள துறை!!!

கமல்! கவனிங்க! இனிமே ஜாக்கிரைதையா இருங்க!!!


இப்படிக்கு


அபிஅப்பா

ஏண்டா தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்க!!!!

நம்ம தமிழ் நாடு இன்ஃப்ரா ஸ்ட்டெக்சர் நல்லா இருக்கு! ஆனா இது போல படம் பார்த்தா எல்லாம் காக்கி சட்டை போட்டவன் எல்லாம் கூர்க்கான்னு சொல்லும் காலம் வரும், இது போல படம் வந்தா!!!!!

உங்களுக்கு தெரியுமா? தான் பிறந்த ஊரில் ஒருத்தன் தாசில்தாரா, ஆர்டிவோவா,கலெக்ட்டரோ இருக்க முடியாது இந்த தமிழ் நாட்டில்!!!! ஆனா தமிழ் சினிமாவில் முடியும் !!!! எத்தனை அபத்தம்!!!!

November 20, 2007

நாங்களும் ரவுடிதான்! ஜீப்புல ஏத்திகோங்க!!!

பத்தாவது முடிச்ச உடனே எங்க கூட படிச்சதுல ஒரு குரூப் பசங்க சிதம்பரம், நாகை, புத்தூர்ன்னு பாலிடெக்னிக்ல சேர்ந்துட்டானுங்க. நாங்க மட்டும் அழுத்தி முக்கியாவது அட்லீஸ்ட்(!) ஒரு டாக்டராகி செல்வம் டாகடருக்கு எதிர்த்தாப்புல கடை விரிச்சிடலாம்ன்னு 'ஏ' குரூப் சேர்ந்துட்டோம். பின்னதான் தெரிஞ்சுது பாட்டனி ஒரு பாடாவதின்னு. வரிசையா எல்லா டெஸ்டிலும் 75க்கு 1 மார்க்குக்கு மேல என்னால தாண்ட முடியலை. பின்ன 1க்கு பக்கத்துல ரெண்டு முட்டை போட்டு நான் 100க்கு 75 மார்க்காக்கும்ன்னு வீட்டிலே சொல்லி கையெழுத்து வாங்கியது இந்த பதிவுக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். விஷயம் என்னான்னா அந்த பாலிடெக்னிக் பசங்க எல்லாம் விடிய காலைல ஏக்கே 47 மாதிரி மினி டிராஃப்ட்ர் தூக்கிட்டு சைக்கிள்ள ரயில்வே ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிதம்பரமோ, புத்தூரோ போய் படிச்சுட்டு, அதோட விடாம எங்களை சீண்டுவதே தொழிலா இருந்தானுங்க.

"மாப்ள எங்க பிரின்சி இருக்காரே பொல்லாத ஆளுடா, ஆனா எங்க புரபசர் தங்கம் தெரியுமா, சரி உங்க வாத்தியார் எப்படி இருக்கார், ஹெட்மாஸ்டர் இப்பவும் பொடி போடுறத விடலையா?" அவுக எல்லாம் காலேஜ்ல படிக்கிறாய்ங்கலாம்!! அது தான் போகட்டும்ன்னா "டேய் எங்க சீனியர்ஸ் தொல்ல தாங்கலைடா, ராகிங் எந்த வருஷமும் இல்லாத அளவு இந்த வருஷம் அதிகம்"ன்னு வெயில் பற்றிய வானிலை அறிக்கை வாசிப்பானுங்க! அய்யோ எங்களை ஒருத்தனும் ராகிங் பண்ண மாட்டங்குறாங்களேன்னு ஏக்கமா இருக்கும். பின்ன திடீர்ன்னு வந்து "மாப்ள இன்னிக்கு ஜூனியர் வெல்கம்டா, எங்க சீனியர்ஸ் எல்லாம் தங்கம்டா, அவனவன் வந்து அவன் பிடிச்ச சிகரட்டை எங்க வாயில் வச்சி பீர் பாட்டிலை குலுக்கி தலையில ஊத்தி செம கவனிப்புடா, நாங்களும் பீர், தம்முன்னு அவனுங்க கூட செம் டான்ஸ்டா, அது கிடக்கட்டும் மந்த்லி டெஸ்ட் எல்லாம் நடத்துராங்களா உங்க வாத்தியார் எல்லாம்? எங்க புரபசர் அசைன்மெண்ட் எழுத சொல்லி படுத்தறார்டா, சரி எங்களை பார்த்த்து பீர், தம்முன்னு கெட்டு போயிடாதீங்கடா, ஸ்கூல் பசங்களா லெச்சனமா இருங்க அதல்லாம் எங்களை மாதிரி காலேஜ் எல்லாம் போன பின்ன பார்த்துக்கலாம்...வர்ட்டா". இப்படியே தான் கொல்லுவானுங்க.

11 வது தான் அப்படி போச்சுன்னா, 12 வது படிக்கும் போதும் அவனுங்க தொல்லை தாங்க முடியலை. " மாப்ள, இந்த வருஷம் ராகிங் போன வருஷத்தை விட டாப், எங்க சீனியர்ஸ் அசந்துட்டானுங்க, அடிச்சு தூள் பண்றோம்ல...ஒருத்தனை ரயில்ல பிச்சை எடுக்க விட்டேன் பாரு செம சிரிப்பு, ஆமா கேக்க மறந்துட்டேனே இலக்கிய மன்றம் எல்லாம் நடக்குதா, எங்களுக்கு இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்ல இருந்து வர்ர வாரம் செமினார் எடுக்க வர்ரானுங்க, செம போர் அடிக்கும், சரி வர்ட்டா"ன்னுட்டு போயிடுவானுங்க!

திடீர்ன்னு ஒரு நாள் வருவானுங்க! " மாப்ள எங்க குரூப்புக்கும், கடலூர் குரூப்புக்கும் சிதம்பரம் ஸ்டேஷன்ல முட்டிகிச்சு, நாங்க லோக்கல் பசங்களை வச்சு பிரிச்சு எடுத்துட்டோம் அவனுங்களை, அது காலேஜ்ல பெரிய பிரச்சனை ஆயி ஸ்ட்ரைக்குடா, மாயவரம் பேர காப்பாத்திட்டோம்ல. பிரின்சியே எங்களை பார்த்தா "குட்மார்னிங் சார்"ன்னுட்டு போறாருல்ல இப்ப"ன்னு கிழிச்சு போடுவாங்க. இதல்லாம் கேக்க கேக்க எங்களுக்கு காலேஜ் மேல் ஒரு வெறித்தனமான ஆசை வந்துடுச்சு, என்ன கோர்ஸ் எடுக்கலாம் என்பதை விட ரேகிங், ஸ்ட்ரைக் இதிலே நாட்டம் அதிகமா ஆகிடுச்சு! காலேஜ் போன பின்ன பிரின்சிபாலை பார்த்து "குட்மார்னிங் பிரின்சிபால்"ன்னு எப்படி சொல்வதுன்னு பலவிதங்களிள் கண்ணாடிக்கு முன்னாடி நின்னு கிட்டு கோணிகிட்டு, ராணுவ ஸ்டைலில் எல்லாம் சொல்லி பார்த்து கிட்டோம். மாலை வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது அம்மா "ஏண்டா டல்லா இருக்கே"ன்னு கேட்பது போலவும் அதற்கு நாங்கள்"அந்த புரபசர் சரியான முசுடும்மா"ன்னு சொல்வது போலவும் கனவுபோல நினைத்து பார்த்து கொண்டோம். ஆனா இப்ப பாருங்க அபிபாப்பா சொல்லுது "எங்க பிரின்சி நாளைக்கு எல்லாரையும் கலர் டிரஸ்ல வர சொன்னாங்க"ன்னு. நான் கூட கேட்பேன் அதுகிட்ட "உங்க டீன், ரீடர், புரபசர் எல்லாம் என்னா சொன்னாங்கன்னு! அதுக்கு என் கிட்ட ஒன்னும் சொல்லாது அவங்க அம்மா கிட்ட போய் "ஏம்மா நல்ல மாப்பிள்ளையே உனக்கு கிடைக்கலையா"ன்னு கேட்டுட்டு போகும்:-))

இப்படியாக நாங்க கஷ்டப்பட்டு பின்ன காலேஜ்ல சேர்ந்தோம் பலவித ரேகிங் கனவுகளோட! எல்லாரும் புது சைக்கிள் சகிதமா முதல் நாள் போனா, எங்களுக்கு பெரிய ஏமாற்றம். வாசல்ல சாக்லெட் வச்சிகிட்டு, ஜீனி தட்டு வச்சிகிட்டு சீனியர்ஸ். அடப்பாவமே எங்க காலேஜ்ல ரேகிங் என்பதே இல்லியாம். என்ன கொடுமை இது. கெஞ்சவா முடியும் அவங்களை பார்த்து "எங்களை ரேகிங் பண்னுங்க ரேகிங் பண்ணுங்க"ன்னு. சரி நாம் குடுத்து வச்சது அவ்வளவு தான்ன்னு நெனச்சுகிட்டு, ஸ்டைக் வரும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தோம். ஒருதலை ராகம் படத்திலே பார்த்திருப்பீங்க எங்க காலேஜை, ஒரு வாய்க்கால் இருக்கும் அதை தாண்டிதான் போனனும். அந்த மதில் மேல வரிசையா சீனியர்ஸ்தான் உக்காந்து இருப்பாங்க. ஆனா நாங்க அந்த மதிலை கைப்பற்றி ராஜ பரிபாலனம் செஞ்சு கிட்டே இருந்தோம். எப்படா ஸ்ட்ரைக் வர்ரும்ன்னு இளவு காத்த கிளியா காத்து கிடந்தோம்.

ஒன்னும் வர்ர மாதிரி தெரியல. அப்படித்தான் ஒருநாள் மதில்ல உக்காந்து அரட்டை அடிச்சுகிட்டு இருந்தப்ப நெய்வேலி குரூப் பசங்க ட்ரெயின்ல இருந்து வந்தானுங்க. அப்ப நான் "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு அவுத்து விட அதையே வேத வாக்கா நம்பி அவனுங்களுக் திரும்ப போய் காலேஜ் எதிர்ல நின்னுட்டானுங்க. அவனுங்க கூட்டமா நிற்பதை பார்த்து வரும் கூட்டம் எல்லாம் அங்கயே நிக்க ஸ்ட்ரைக்குக்கான மேக மூட்டம் கருப்பா கண்ணுக்கு தெரிஞ்சுது. சரின்னு நாங்களும் வெளியே வந்து அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.

பின்ன தான் விஷயம் கேள்விப்பட்டு மனோகரன் என்ற எங்க காலேஜ் சேர்மன்(மாணவர் தலைவர்) ஓடி வந்தான். வந்தவனுக்கு ஆனந்த கண்ணீர்! நம்மால சாதிக்க முடியாதது தானா எப்படியோ நடந்துடுச்சேன்னு. வந்தவன் நேரா கொடிகம்பம் பக்கத்துக மேடை மாதிரி இருக்கும் ரோட்டிலே அதிலே ஏறி நின்னு "மாணவர்களே! நான் பலமுறை நிர்வாகத்தை எச்சரித்தும் நமக்கு குடிதண்ணீரோ, கழிவறை வசதிகளோ இன்னும் செய்து கொடுக்காத காரணத்தால் நான் வேறு வழி இல்லாமல் இந்த ஸ்ட்ரைக் நடாத்துபடி ஆகிவிட்டது, உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் நாளையும் இது தொடரும், அமைதியாக கலைந்து செல்லுங்கள்"ன்னு பெருமையை தட்டிகிட்டு போனான்.

பின்னதான் வந்துச்சு பிரச்சனை. 2 நாள்ல ஸ்ட்ரைக் முடிஞ்ச பின்ன ஒரு குரூப் லெக்சரர்ஸ் தன்னோட உளவு வேலையை ஆரம்பிச்சு ஸ்ட்ரைக்குக்கு காரணம் என்னன்னு கண்டு பிடிக்க முயற்சி பண்ணி மொத்தமா ஒரு 30 பேரை சந்தேகத்தின் பேரில் பிடிச்சாங்க.அவங்களை திருவாளர் திருமதி மாதிரி தனி தனியா விசாரிச்சா ஒருத்தனும் சரியா பதில் சொல்லலை! அதிலே இந்த அப்பாவியும் ஒருத்தன். எல்லாரும் அப்பாவை அழைச்சுகிட்டு வரனும்ன்னு சொல்ல ஆஹா நாமலும் ரவுடிதான் ரவுடிதான்ன்னு வண்டில தொத்திட்டோம்டான்னு சந்தோஷமா வீட்டுக்கு போனா அப்பா ருத்ரதாண்டவம் ஆடுறாங்க! அப்பவும் நான் நக்கலா "விடுங்கப்பா நான் தான் அப்பவின்னு சொல்றேன்ல, சும்மா வாங்க நீங்களும் காலேஜ் வாசலை மிதிச்ச மாதிரி இருக்கும்"ன்னு நக்கல் பண்ண அப்பாவும் ஒத்துகிட்டாங்க.

காலேஜ் போனா அங்க எல்லா அப்பாவும் ஒன்னுகூடிட்டாங்க! அது அது எங்களை போட்டு வார்த்தையால துவம்சம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. உளவு துறை புரபசர் வந்தார். எல்லா அப்பாவும் ஆளுக்கு ஒன்னா பேச எங்கப்பாவும் ஏதோ பேசாட்டி தெய்வ குத்தம் மாதிரின்னு நெனச்சுகிட்டு "சார் யார் தப்பு செஞ்சாங்களோ அவங்களை சஸ்பெண்ட் பண்ணுங்க, பாருங்க என் பையன் அப்பாவி, நீங்க பண்ண காரியத்தால நான் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன்"ன்னு சொல்லி வைக்க, ஆஹா அப்பா சும்மா இல்லாம கவுத்திட்டீங்களெ அப்பான்னு நெனச்சுகிட்டேன்.

கஷ்டப்பட்டு உளவு துறை மூலமா கண்டுபிடிச்ச புரபசர் தன் திறமை குறைத்து மதிப்பிடுவதை ஒத்துப்பாரா. "யார் சார் இவனா உங்க பையனா அப்பாவி, இவன் தான் 1 வாரமா இந்த பசங்களை ராத்திரி ராத்திரி சந்திச்சு ரகசிய கூட்டம் போட்டு, பிட் நோட்டீஸ் குடுத்து, சுவத்திலே எழுதி, ஸ்ட்ரைக் நடந்த அன்னிக்கு காலையிலே வந்து ஆட்கள் திரட்டி, போதா குறைக்கு அடியாட்கள் செட் பண்ணி கல்லூரி சொத்துகளுக்கு சேதம் உண்டு பண்ண திட்டம் போட்டிருந்தான். நாங்க சரியான நேரத்திலே கவனிச்சு தடுத்தோம், எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு"ன்னு ஒட்டு மொத்த பழியையும் என் மேல போட்டாரு. ஆஹா " "டேய் இன்னிக்கு ஸ்ட்ரைக்காம்டா உள்ளே ஒரே ரணகளமா இருக்கு"ன்னு சொன்ன இந்த 6 வார்த்தைக்கு பின்ன இத்தன இருக்கா, அப்பா பழிவாங்கிட்டீங்களே அப்பா, என்னை ஒரு தீவிர வாதி அளவு ஆக்கிட்டீங்களே ஒரு வரி மீட்டிங்ல பேசி!!!வெளியே வந்தா நான் ஏதோ வெடிகுண்டு தயாரிச்சதா பேசிகிட்டானுங்க ரகசியமா!!!

பின்ன என்னாச்சு, மன்னிப்பு கேட்டு காலேஜ்க்கு வந்தாச்சு! மதிலுக்கு மேல யாரும் உக்காராத மாதிரி கூர்மையா கட்டிட்டாங்க! அதுக்கு பின்ன எப்ப ஸ்ட்ரைக்கு நடந்தாலும் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படாத குறை தான், டக்குன்னு அப்பாவுக்கு லெட்டர் போகும் நிர்வாகத்தில் இருந்து. அப்பாவும் பதிலுக்கு லெட்டர் போடுவாங்க.இப்படி அடிக்கடி அப்பாவுக்கும் நிர்வாகத்துக்கும் நிறைய கடித தொடர்பு என்னால் நீடித்ததால் அது இரு பக்கமும் பழகி போய் நான் காலேஜ் விட்டு வந்த பின்னயும் தொடர்ந்தது."உங்க கார் நம்பர் YMZ 5454 சூப்பர்"ன்னு அப்பாவும், பதிலுக்கு நிர்வாகம் "நீங்க ஏன் surf க்கு மாற கூடாது"ன்னு பதிலும் ....இப்பவும் லெட்டர் தொடர்பு இருக்கான்னு அப்பாகிட்டே கேக்கனும்!!!

November 19, 2007

என் சின்னக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்!!!

என் பெரியக்காவை அனேகமமக அத்தனை பிளாக்கர்ஸ் அததவது என்னோடு தொடர்பு உடையவர்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு! ஆனால் எனக்கு ஒரு சின்ன அக்கா உண்டு! கோபத்திலும், குணத்திலும்,அழகிலும், அன்பிலும் எல்லலம் எனக்கு கிட்டத்தட்ட un predictable charector அவங்மாதிரியே ஒருத்தங்க எனக்கு சகோதரியய கிடைச்சாங்க வலை உலகில்!!

ரெண்டு அக்காவும் நானும் தம்பியும் சேர்ந்துட்டால் வீட்டில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. தம்பி தான் ஆரம்பிப்பான், "அம்மா பெரியக்காவுக்கு வருஷ புளியும், கூழ் வடகமும் குடுத்தியே, நான் கொண்டு போய் கொடுத்தனே, அது குறை சொல்லுதும்மா, பத்தலைன்னு"ன்னு ஆரம்பிப்பான். பெரியக்கா பேந்த பேந்த முழிக்கும்!!

அப்ப ஆரம்பிக்கும் சண்டை! சும்மா ஜக ஜோரா சின்னக்கா இருக்கும் 1 வாரமும் எங்களுக்கு களை கட்டும். பாவம் அம்மாவுக்கு தான் கண்னை கட்டும்!!

வழக்கம் போல என் சின்னக்கா என் கூட பேசுவதில்லை! ஆனா தங்கமணி, குழந்தைகள்ளோடு நல்ல உறவு! எனக்கு அந்த குறை இல்லாமல் தணிக்கும் என்னை திட்டிகொண்டே இருக்கும் என் சகோதரி, என் கல்லூரி ஜூனியர், என் பள்ளி கால மஹா ஜூனியர் முத்து லெஷ்மிக்கு இன்று பிறந்த நாள்! இடட்டை வாழ்த்து! ஆனந்த விகடனிலும் வந்தாச்சு!!!

வாழ்க வாழ்கப்பா!!!!!

November 13, 2007

நன்றி! இனி எல்லாம் சுகமே!!!

இன்றைக்கு எங்க ஊர் மகாராஜாவும் மகாராணியும் ஜம்முன்னு கல்யாணம் பண்ணிகிட்டு தேர்ல ஊர்வளம் வரும் நாள்.ஆமாம் மாயூரநாதரும், அவயாம்பிகையும் திருக்கல்யாணம் செய்து கொண்டு தேரில் வரும் நாள். இதே போல சமீபத்துல! கொஞ்சம் வருஷம் முன்னதான் நான் இதே நாளிள் பிறந்தேன். பெரிய குடும்பம் அதனால இப்ப அபிக்கோ, தம்பி நட்ராஜ்க்கோ இருக்கும் முக்கியத்துவம் எல்லாம் அப்போ இல்லை. நான் பிறந்தது உறவுகாரங்களுக்கு ஒரு கால்கிலோ ஜீனி செலவு, அவ்வளவே! எங்க வீட்டுக்கு ஒரு பத்து காப்பி செலவு. ஆனா அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் சந்தோஷம் இருந்திருக்கும். இப்படியாக நான் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் காலங்களில் பள்ளி நாட்களில் திடீரென புது சட்டை போட்டுகிட்டு ARC ஜுவல்லரி பசங்களோ, வேறு சிலரோ எல்லாருக்கும் சாக்லெட் குடுக்கும் போது "இது அவங்களுக்கு மட்டுமேயான விஷேஷம் போலயிருக்கு"ன்னு நெனச்சுப்பேன்.மேலும் எனக்கு என் பிறந்த தேதி என்பது 27\6\66 தான். எனக்கு மட்டுமல்ல குரங்குராதா முதல் அன்றைக்கு யார் யாரெல்லாம் ஸ்கூலில் சேர்ந்தார்களோ எல்லாருக்குமே அது தான் பிறந்த நாள்.

பின்பு ஏழாவது எட்டாவது படிக்கும் காலங்களில் எனக்கும் சாக்லெட் கொடுக்க ஆசை வந்தது. ஆசை மட்டுமே வந்தது. கொடுக்கவில்லை. பின்பு கல்லூரி நாட்களில் கேக் வெட்ட ஆசை வந்தது. ஆனால் வெட்டவில்லை. பின்பு அந்த சிந்தனையே இல்லாமல் வளர்ந்துவிட்டேன். பின் திடீரென 1995ம் ஆண்டு நவம்பர் 13 அன்று காலையில் ஒரு போன் "என்னங்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்"ன்னு. எனக்கு சொரேர்ன்னு இருந்துச்சு. அப்போது எனக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. வேற யாரு தங்கமணிதான்! சரின்னு சுதாரிச்சுகிட்டு "சரி உங்களுக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு ஏதோ கேட்டு வச்சேன். என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இல்லை. அது தான் எனக்கு முதன் முதலாக மத்தவங்க கிட்ட இருந்து வந்த என் வாழ்க்கையின் முதல் வாழ்த்து. உடனே அம்மாவுக்கு போன் பன்ணி "அம்ம்ம்ம்மா, எனக்கு எப்போ பிறந்த நாள்?"ன்னு கேட்டேன். அதுக்கு அம்மா "அய்ப்பசி இருவத்திஏழு"ன்னு சொன்னாங்க. அதுக்கு நான் "இங்கிலீஷ்ல சொல்லும்மா"ன்னு சொன்னதுக்கு "அய்ப்ஸ் டொண்டிசவன்"ன்னு சொன்னாங்க! ( நக்கல் பிறவியில இருந்தே வந்துடுச்சுங்கப்பூ)

இப்படியாக 13 வருடங்களாக தவறாமல் தங்கமணி வாழ்த்தும், பெத்தவங்க வாழ்த்தும், கூட பிறந்தவங்க வாழ்த்தும், அபிபாப்பா, இந்த வருடம் முதல் நட்ராஜ் வாழ்த்தும்(ஆமாங்க காலையில போன்ல விசில் அடிச்சான்) கிடைத்து கொண்டிருக்க இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வாழ்த்து மழையில் நனைந்து விட்டேன். காரணம் தமிழ்மணம்!

நேற்று இரவு முதன் முதலாக வந்த வாழ்த்து தல பால பாரதிகிட்டயிருந்து வந்த போன்! ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது! பின் வரிசையா போன்! பின் இரவு 12 வரை நெட்டில் உலாத்திட்டு படுத்து காலை 4க்கு எழுந்து பின் இபோதான் வர்ரேன்.

இடையிடையே நிறைய போன்கள், ரொம்ப மிகிழ்வாய் இருந்தது!! இப்போ வந்து பார்த்தா நெட்ல எப்போதும் போல நிறைய பின்னூட்டம் வந்திருக்கும்ன்னு பார்த்தா நிறைய பதிவு வந்திருந்தது!! அதைப்பற்றி நாளை விரிவான பதிவு போடலாம் என இருக்கிறேன்! ஆக்சுவலி இந்த பதிவு வாழ்த்து சொன்னவங்களுக்கு நன்றி சொல்லும் பதிவு இல்லைப்பா! அது நாளைக்கு! நான் உங்க எல்லாரையும் கேட்க நினைத்த கேள்வி ஒன்னுதான்! எனக்கு என்ன பரிசு குடுத்தீங்க???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

என்னடா இவன் இப்படி கேட்கிறானேன்னு நினைக்காதீங்க! எனக்கு ஒரு பரிசு வேணும்! தருவீங்களா?

உடனே “ஆஹா அபிஅப்பா எதுக்கோ அடிபோடறான், அவன் ஊர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பணம் கேக்க போகிறான், ஸ்கூலுக்கு கேக்க போகிறான் என பயப்பட வேணாம்! அது போல விஷயங்களுக்கு அபிஅப்பா வரமாட்டான்!

என் வலையுலக நண்பர்களே! உங்களை எல்லாம் எனக்கு எப்படி தெரியும்? வலையுலகம் மூலமாகத்தானே? அதே போல நம்மோடு நம்மாக வலையில் சந்தோஷமாக சுற்றி திரிந்த நம் சகோதரி அனுராதா அவர்கள் கொஞ்சம் கஷ்டத்துல இருக்காங்க! நாம் ஏன் அவங்களுக்காக வரும் வெள்ளிகிழமை 16\11\07 அன்று காலை 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை செய்ய கூடாது? அப்படி செய்தால் இது உலகலாவிய கூட்டு பிரார்த்தனையாக இருக்குமே?? அது கடவுளின் காதை எட்டுமே? செய்வீங்களா? இல்லை பெரியவங்களா பார்த்து ஏதாவது ஒரு உகந்த தேதி நேரம் சொல்லுங்க! அப்ப வச்சுப்போம்! இதை பத்தி பின்னூட்டத்துல டிஸ்கஸ் பண்ணுங்க! இதுவே நான் எதிபார்க்கும் பரிசு!!

இதிலே கடவுள் கொள்கை\மறுப்பு கொள்கை இதல்லாம் வேணாமே ப்ளீஸ்!! மறுப்பவர்கள் “உளமாற” அவங்க நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சா போதுமே!!

மதம் கூட வேண்டாமே!! அவங்க அவங்க இஷ்டபடி கும்பிடலாமே!

பரிசு கிடைக்குமா எனக்கு உங்களிடமிருந்து??????
ஆனால் ஆசையுடன் எதிர்பார்க்கிறேன்!!!!

November 12, 2007

அன்புள்ள என் இனிய தமிழ்மண சொந்தங்களே!!

அன்புள்ள தமிழ்மண சொந்தங்களுக்கு, நான் அபிஅப்பா எழுதுவது. நான் மிக்க நலம். அது போல் அங்கு தாங்கள் சுகமறிய ஆவல். என்ன! நான் கொஞ்சம் பிசியாகி போன பின்ன என்னை மறந்துட்டா என்ன பண்றதுன்னு தான் இந்த அவசர கடிதம்!

சரி நான் தான் பிஸியாச்சேன்னு மத்தவங்களுக்கு போன் பண்ணி தமிழ்மணம் எப்படி இருக்குன்னு விசாரிச்சா, நான் கேட்ட 15 பேருமே "என்னங்க அபிஅப்பா, நான் இருக்கும் பிசில தமிழ்மனம் பக்கம் தலை வச்சு படுக்கவே நேரம் இல்லை"ன்னு இன்ஸ்டண்ட் பதில் சொல்றாங்க. ஆனா நான் நடு நடுவே எட்டி பார்க்கும் போது பதிவு போட்டுகிட்டும், பின்னூட்டம் போட்டுகிட்டும் தமிழை வளர்த்துகிட்டு இருக்காய்ங்க(ஜஸீலா மன்னிக்கனும் நான் பொதுவாதான் சொன்னேன்:-))

மத்தபடி துபாய்ல என்னா விஷேஷம்ன்னு கேட்டா, வரும் 15ம் தேதி வெள்ளி கிழமை ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்துல இளையராஜா பிரபல பாடகர்களோட பின்னி பெடலெடுக்க போறார். நான் நேரமின்மையை காரணம் காட்டி (பாட) வர இயலாமையை தெரிவித்து விட்டேன். ஆனாலும் நல்ல ஆரோக்கியமான ஸ்பான்சர் கிடைக்கும் பட்சத்தில் 4 மணி நேரமானாலும் பங்கேற்க உத்தேசம். இந்த நேரத்தில் நான் சென்ர முறை A.R.ரஹ்மான் கச்சேரி அல் அஹல்யா ஸ்டேடியத்தில் நடந்த போது போய் முஸ்தபா முஸ்தபா பாடலுக்கு சிகர் லைட்டரை பத்தவச்சி தூக்கி பிடிச்சு என்னை பார்த்து பலரும் அப்படியே செய்து என்னடா முதுகு பக்கம் சூடா இருக்குதேன்னு திரும்பி பார்த்து அலறி பத்தவச்ச பலாச்சுலாக்கிய திட்டிகிட்டே அந்த உயரத்தில் இருந்து விழுந்து, ஒரு பிரபல வலைப்பதிவர் கீழே விழுந்து கிடக்காரேன்னு கூட பார்க்காம என் மேல் பூனை வாக் நடத்திய யானை மாமி ஞாபகத்துக்கு வர்ராங்க.

அது போகட்டும்! என் முதுகுவலிக்கு கணினி தான் காரணம் என டாக்டர் கண்டபடி சொன்னாலும், எனக்கு என்னவோ ராமன் சேட்டா “பிரியாணி” என்ற பெயரில் தரும் மஞ்ச சோறுதான் காரணம் என நினைத்து என் மாஞ்சா சோத்தை காப்பாத்திக்க திரும்பவும் சொந்த சமையல் ஆரம்பித்து விட்டது இந்த வார உபரி செய்தி. மேலும் “இட்லி”யை இட்லி என்றும் தோசையை தோசை என்று சொல்லாமலும் “இட்டேலி” “தோஷா”ன்னு சொல்லும் ராமன் சேட்டாவின் கொலவெறி கூட நான் சொந்த சமையலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

தமிழ்மணத்துலதான் வரலியே தவிர போன் மொக்கை எப்போதும் போல தொடர்கிறது. கோபி வழக்கம் போல போன் செய்து “ம் சொல்லுங்க வேர என்ன சேதி” என்பதும், சென்ஷி மெனக்கெட்டு போன் செய்து “நான் ரொம்ப பிசியா இருக்கேன், பின்ன பேசறேன்”ன்னு சொல்வதும், லொடுக்கு போன் செய்து “என்ன அபிஅப்பா, பிரகாஷ்ராஜ் தன் அடுத்த படத்துக்கு “அபியும் அபிஅப்பாவும்”ன்னு பேர் வச்சிருக்காரே, உங்க கருத்து என்ன அது பத்தி”ன்னு கேட்டப்ப “அது ஒரு இன்பியல் சம்பவம்”ன்னு நான் சொல்லியதும், கதிர் தம்பி போன் செய்து “எனக்கு அம்மை போட்டிருக்கு யார்கிட்டயும் சொல்லவேணாம் வருத்த படுவாங்க”ன்னு சொல்லியதும் அதற்கு நான் “என் வாயாலே சொல்ல மாட்டேன்”ன்னு சொல்லியதும்,ஜஸீலா தீபாவளி வாழ்த்து சொல்ல போன் செஞ்சு வாழ்த்து 2 செகண்டும் மீதி கம்பனி நிகழ்வுகளும் பேசியதும், ஜூபைர்,மின்னல்,எல்லாம் தீபாவளி வாழ்த்து சொன்னதும் இந்த வார நிகழ்வுகளில் சில!!

சரி விஷயத்துக்கு வாரேன்! நான் வழக்கம் போல இந்த வருடமும் மலைஏற போறேன்! அதாங்க இமயமலை. ரசிகர்கள் வழக்கம் போல என் பி.ஏ. கத்திய நாராயனா(அதாங்க என் கூட எப்பவும் கத்திகிட்டே இருப்பானே)கிட்ட உங்க பொக்கே, பரிசு பொருட்கள் எல்லாத்தையும் தந்திடுங்க:-)), வெளியூர் அன்பர்கள் வசதிக்காக அபிஅப்பாவின் உலக சுற்று பயணம் பின்னர் வெளியிடப்படும். அப்போது நேரிடையாக பரிசுகளை தந்து விடலாம்.

என்றும் அன்புடன்

அபி&நட்ராஜ் அப்பா

தமிழ்மணத்தின் திஸ்கி: அடங்கொய்யால, ஆள் கிடைக்காம உன்னை தெரியாதனமா 1 வாரத்துக்கு ஸ்டார் ஆக்கினா நீ “சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு பில்டப்பு குடுக்கிறியா???

November 8, 2007

"தீபா"வளி!! from அபிஅப்பா!!!!

இந்த "தீபா"வளிங்குற பேரே எனக்கு இப்பல்லாம் அல்வா சாப்பிடும் அளவு இனிக்குதே அது ஏன்? அது சம்மந்தமா பின்ன பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அப்ப சின்ன பையனா வால் பையனா இருந்த போது எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அசை போட்டால் ஒரு 4 பதிவு போடலாம். அத்தனை சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அத்தனையும்.

ஜனவரி 1 ம் தேதி தேதி காலண்டர் வாங்கி வந்த உடனே அவசர அவசரமாக திருப்பி பார்த்து பின் பக்கம் "இந்து பண்டிகைகளில் தீபாவளி என்ன்னிக்குன்னு பார்த்து அன்று முதல் தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என கணக்கு போட்டு "ஆண்டவா இன்னும் இத்தனை நாள் இருக்கான்னு ஏங்கி சோர்ந்து போவதும் பின்ன தீபாவளிக்கு 1 மாதம் முன்னமேயே அந்த தீவாளி ஜுரம் பத்திப்பதும் ஆஹா அந்த 1 மாதம் தினமும் கொண்டாடம் தான்.

உனக்கு சட்டை எடுத்தாச்சான்னு ராதா பேச்சை ஆரம்பிச்சு வச்சு தீபாவளி வெடியை பத்த வைப்பான். "இல்லைடா, அப்பா மெட்ராஸ்ல போய் எடுத்து வரேன்ன்னு சொல்லியிருக்காங்க"ன்னு மெதுவா பிட்டை போடுவேன். அதுக்கு அவன்"எனக்கு எடுத்தாச்சுடா, அப்படியே தங்கம் ஜரிகைல தக தகன்னு இருக்கு" - இது ராதா! டேய் ராதா அதையும் நம்பி வச்சேனேடா பாவி, அது கூட பரவாயில்லை, 7 வது படிக்கும் போது "திரிசூலம்" 200 வது நாள் வெற்றி விழாவுக்கு K.R.விசயா அந்த படத்துல நடிச்ச எல்லாரையும் சிவாஜி உள்பட தன்னோட சொந்த பிளைட்டுல ஏத்திகிட்டு மெட்ராஸ்ல இருந்து மதுரைக்கு தானே தானே ஓட்டிகிட்டு போனாங்கன்னும் அதுல வளைச்சு வளைச்சு டைவ் எல்லாம் அடிச்சு கூட்டிகிட்டு போனாங்கன்னும் சொன்னியே ராஸ்கோல், நானும் அதை என் கல்யாணத்து வரை நம்பி அதை பெருமையா தங்கமணி கிட்ட சொல்லி அவங்களும் "பே"ன்னு அழுது "போயும் போயும் ஒரு மகா அப்பாவியை என் தலையில கட்டி வச்சுட்டாங்களே"ன்னு என் மானத்தை வாங்கினாங்களே...ரைட்டு விடுடா ராதா..தீபாவளி கதைக்கு வருவோம்.

முதல் விஷயம் புது சட்டை தான். பின்ன தான் கங்காதரன் சைக்கிள் கம்பனியின் வெடி சமாச்சாரம் எல்லாம். அப்பல்லாம் வார் வைக்காத டிராயரும், ஸ்டிப் காலர் சட்டையும், தொள தொள சட்டையாக இல்லாமல் டைட் பிட்டிங்குமே எனக்கும் என் தம்பிக்கும் பிராதானமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" கடையில் தான் தைக்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட லட்சியமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" என்பது ஆண்களுக்கான தையலகம் என்பது எங்களுக்கு தெரியாது. உசத்தியான டைலர் அது மட்டுமே தெரியும். ஆனால் அதிலே எல்லாம் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மட்டுமேயான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு வீட்டு திண்ணை டைலரோ அல்லது கார்ஷெட் டைலரோ தான் கதி.

இந்த கதையெல்லாம் அடுத்த தீபாவளிக்கு சொல்லிக்கலாம்! இன்னிக்கு நடந்த கதை கேளுங்க! காலை நானே ஊருக்கு போக முடியாத கோவத்தில் தூக்கம் இல்லாம தூங்கிட்டு இருந்தேன்! நம்ம கோபிக்கு நைட் டூட்டியா, அவன் அழும்பு தாங்காது! எப்போதும் போல எழுப்பினான்! ஆனா காலை 6க்கு இல்லை 4.30க்கு. “ஹலோ! வணக்கம், வெடி வெடிச்சீங்கலா?- இது கோபி! அதற்க்கு நான் “இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துலப்பா”ன்னு சொல்லி வச்சுட்டேன்.

உடனே அடுத்த போன்! என் ரூம் மெட்க்கு! ஒரே அழுகை சத்தம்! அதிலேயே வாழ்த்தும் கூட, “அண்ணே உனக்கு தலை தீவாளி வாழ்த்து, இருந்தாலும் நான் அழுவறத்துக்கு காரணம் நீ கேக்கவே இல்லியே?””

“சொல்லும்மா கேக்கறேன்””—இது நண்பர்

“கலையிலே இருந்து என் போன் காணும்ண்ணே, நீ ஆசை ஆசையா வாங்கி குடுத்தது எனக்கு”

“சரி சரி ஓக்கே, நான் ஜனவரி வரும் போது வாங்கியாறேன்”

“சரிங்கண்ணே”

கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் போன் வந்தது!

“என்னங்க தீவாளி வாழ்த்து!”

“சரி செல்லம், என்ன இன்னிக்கு இத்தன சந்தோஷம்”

“நான் திருந்திட்டேங்க, உங்க தங்கச்சி கூட இனிமே சண்டை எல்லாம் போடமாட்டேன், காலையில கூட இங்க வந்தாங்க, என்னமா பேசி அனுப்பினேன் தெரியுமா?””

“ரொம்ப சந்தோஷம், சரி நான் விடிஞ்ச பின்ன பேசறேன்””

கொஞ்ச நேரம் பின்ன அடுத்த போன்!

“அண்ணே அவரு மிலிட்டரில இருந்து இப்ப போன் பண்ணுவாரு, என் கிட்ட போன் இல்லன்னா ரொம்ப கோவமாயிடுவாரு, அதனால அவருக்கு போன் பண்ணி சொல்லுன்னே”

அப்போ எனக்கு சுத்தமா தூக்கம் தெளிஞ்சு போச்சா, நான் தலையை தூக்கி “ஹல்லோ நான் அப்பவே சொல்லனும்ன்னு நெனச்சேன்ப்பா, ஒரு வேளை உன் பொண்டாட்டி காலைல போனை தூக்கி சாக்கடையிலே போட்டிருக்குமோ?””

அவ்வளவுதான் சத்தமா கேட்டேன்!

திரும்பவும் போன் சென்ஷிடமிருந்து எனக்கு! “அண்ணே வெடி வெடிச்சாச்சா?”

அதற்கு நான் “வெடிச்சாச்சு! மீதியை காலையில் விலாவாரியா பேசிக்கலாம்”ன்னு சொல்லி வச்சேன்!

அப்பாடா வெடி வெடிச்சாச்சு தீபாவளிக்கு!!!

November 1, 2007

இவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி! நம்புவீங்களா???



இவர் பெயர் மைன்கான். வயது 67 ஆகிறது. ஒரு வருடம் முன்ன என் கம்பெனியில் ஒரு 300 பேர் கொண்ட குழுவாக கூலி தொழிலாளிகள் பங்ளாதேஷிலிருந்து வந்து இறங்கினர். நேரிடையாக ஏர்ப்போட்டில இருந்து சைட்டுக்கு வந்துட்டாங்க. எல்லோரையும் ஐம்பது ஐம்பது பேரா வரிசையா நிக்க வச்சு ஸ்டீல் செக்ஷன், மேசனரி செக்ஷன், கார்பெண்ட்ரி செக்ஷன், கான்கிரீட் செக்ஷன் ன்னு யார் யாருக்கு தேவையோ பிரிச்சு கொடுத்து கிட்டு இருந்தாங்க. அப்போ மேலே சொன்ன மைன்கான் எல்லா வரிசையிலும் முதல்ல போய் நிற்பதும் அவரை கையை பிடித்து இழுத்து வரிசையில் இருந்து அப்புறப்படுத்தி "ஹய்யோ இத நான் வச்சிகிட்டு மாரடிக்க முடியாது" என்பதைப்போல எல்லோரும் நிராகரிப்பதும், இவரும் சளைக்காமல் ஊமை பாஷை மாதிரி ஏதோ சொல்வது அதாவது அவர் சொல்லும் தொணி"நான் நல்லா வேலை செய்வேன் என்னையும் ஆட்டையிலே சேர்த்து கோங்க" என்பதை போலவும் இருந்தது. ஒரு கட்டத்திலே 299 பேருக்கும் யூனிஃபாம் எல்லாம் குடுத்து அங்கிருந்த படியே வேலைக்கு அனுப்பி விட இவர் மாத்திரம் அவமானத்தாலும், எங்கே தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பிடுவாங்களோன்னு ஒரு வித மிரட்ச்சியிலும் இருந்தார். பங்களாதேஷ் பணம் இரண்டு லெட்சம் குடுத்து வந்திருக்கார். கொஞ்ச நேரம் பின்னே உயர்ரக தொழிலாளர் குடியிருப்பு(என்னமா தமிழ் படுத்தியாச்சு) கேம்ப் பாஸ் வந்தார் தனக்கு 12 கூலிகள் வேண்டும் துப்புரவு பணிக்காகன்னு, பின்ன அங்க இங்கன்னு தேத்தி இவரையும் உப்புக்கு சப்பாணியா கேம்ப் கிளீனிங்க்கு அனுப்பி விட்டாங்க.

அந்த கேம்ப் கீழ்தளம் 80 ரூம், முதல் மாடி 80 ரூம் இரண்டாவது மாடி 80 ரூம் அப்படின்னு இருக்கும். ஒவ்வொறு தளத்துக்கும் 4 பேர் வீதம் சுத்தம் செய்ய பணிக்கப்பட்டனர். நம்ம கதாநாயகனை தவிர மீதி எல்லாரும் வாலிப வயசு ஜவான்கள். சின்ன பசங்க தான். ஆனா கீழ்த்தளத்தில் இவருக்கு பணி கொடுக்காமல் இவரை நைசா இரண்டாம் மாடிக்கு அனுப்பிட்டாங்க அந்த பசங்க. இந்த 12 பேருக்கும் அங்கேயே ஒரு ரூமில் தங்குமிடம்.

இவருக்கு வேலை காலை 4.00 மணிக்கு ஆரம்பம். எழுந்து இரண்டாம் தளத்தில் உள்ள அத்தனை கச்சடா கூடையையும் சேகரித்து கீழ்த்தளத்தில் ரோட்டோரமாக இருக்கும் கச்சடா ஸ்கிப்பில் கொண்டு வந்து போட வேண்டும். அது முடியவே காலை 7.00 ஆகிவிடும். கிட்டத்தட்ட 30 தடவை இரண்டாம் மாடிக்கும் ரோட்டுக்கும் போய் வரணும். 80 ரூம் என்றால் சுத்தளவு எப்படியிருக்கும் நெனச்சு பாருங்க. பின்ன அந்த இரண்டாம் தளத்தை முழுவதும் பிரஷ் பண்ணி மோப் போட்டு முடிக்கணும். இது தான் அவர் வேலை. சொல்வது சுலபம் ஆனா 30 தடவை மாடிக்கும் ரோட்டுக்கும் வெயிட்டை தூக்கி இறக்கினாலோ அல்லது இறக்கும் போது பார்த்தாலே கூட போதும் நமக்கு மூச்சு முட்டும். இவர் வேலை முடிய 12.00 ஆகும் அதுக்கு பின்ன ரெஸ்ட் தான். எங்கிருந்து ரெஸ்ட், சமைக்கனும் சாப்பிடனும் இதல்லாம் முடிய அவருக்கு 2.30 ஆகும். பின்ன மாலை சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சு கீழே கிடக்கும் கச்சடாவை எடுத்து கூடையில் போடனும். 8 மணி நேரம் வேலை என்றாலும் 3 மணி நேரம் ஓவர்டைம் போட்டு அவருக்கு சம்பளம்ன்னு பார்த்தா 800 திர்காம் கிடைக்கும். இவர் கூட வந்த எல்லாருக்கும் சைட்டில் வேலை செய்பவர்களுக்கும் அதே 800 தான் கிடைக்கும்.

முதல் இரண்டு நாள் அவர் வேலை செய்வதை பார்த்து எனக்கு ரொம்ப பாவமா போயிடுச்சு. 3 வது நாள் நான் வேலை முடித்து வரும் போது பார்த்தா இவர் மூக்கு உடைந்து ரத்தமா பிலாஸ்ட்டர் போட்டு, பல் உதட்டில் குத்தி ரத்தம், முகமும் வீங்கி போய்.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. 67 வயது பெரியவர் இப்படி தூர தேசத்துல வந்து துணைக்கு ஆள் கூட இல்லாம....ரொம்ப கொடுமை இது. மோப் அடிச்ச சோப் தண்ணியில் மாடிப்படியில் வழுக்கி விழுந்துட்டாராம்.

நாங்க எல்லாம் பேசிக்கிட்டோம், சரி இவர் ஊருக்கு போவது தான் நல்லது ரெண்டு லெட்சம் போனாலும் உயிராவது மிஞ்சுமேன்னு. பின்ன இவருக்கு வைத்தியம் பார்த்த கேம்ப் டாக்டர் 3 நாள் ஓய்வுக்கு எழுதி குடுத்துட்டார். 3 நாள் லீவ் முடிஞ்சு வந்தார் இரண்டாம் மாடிக்கு, திரும்ப வேலை செய்ய ஆரம்பிச்சுட்டார்.

திடீர்ன்னு ஒரு நாள் வந்து கேட்டார் சிகரட் வேணுமான்னு. இரண்டு மாடி இறங்கி ரோட்டுக்கு போய் வாங்கி வர எல்லாருக்குமே ஒரு அலுப்பு இருக்கும். சரி அதனால இவரிடமே வாங்கிகலாம் என நண்பர்கள் முடிவெடுத்து அவரிடம் வாங்க ஆரம்பிச்சாங்க. கடையில் விற்கும் அதே ரேட் தான். அவர் மனித வெடிகுண்டு மதிரி இடுப்பிலேயே ஒரு மினி சிகரட் கடை வச்சுட்டார். மாலை 5.00க்கு எலோரும் வர ஆரம்பிச்சதும் இவர் வியாபாரம் ஆரம்பிச்சுடும். நான் கூப்பிட்டு கேட்டேன் ஒரு நாள் "இதுல என்ன கிடைச்சுட போவுது"ன்னு. அதுக்கு அவர் ''ஒரு நாளைக்கு 50 பாக்கெட் விக்குது அதனால எனக்கு 15 திர்காம் கிடைக்குது"ன்னு சொன்னாரு. அப்படின்னா 450 ரூபாய் சம்பாதிக்கிறார். வெரிகுட் நல்லதுன்னு நெனச்சு கிட்டேன். பின்ன ஒரு நாள் சமைக்க அலுப்பு பட்டு கிட்டு ஹோட்டல் போனேன் இரவு. அப்போது அவர் ஒரு பத்து பதினைந்து சாப்பாடு பார்சல் வாங்கிட்டு இருந்தார். நான் கூப்பிட்டு என்ன இது யாருக்குன்னு கேட்டேன். அதுக்கு அவர் "ஒரு சாப்பாடு வாங்கி வந்து குடுத்தா 1 திர்காம் குடுப்பாங்க, சில சமயம் 50 பில்ஸ் குடுப்பாங்க ஆனா தினமும் 15 பேருக்காவது வாங்கி குடுப்பேன். நான் தினமும் இந்த ஹோடல்ல வந்து 15, 20 சாப்பாடு நான் வங்கறதால எனக்கு ஒரு சாப்பாடு ஃப்ரீ"ன்னு சொன்னார். ஹய் குட் குட் இதிலே ஒரு 450 வந்துடுமே, பாவம் இவர் ஆண்டவன் இப்பத்தான் லைட்டா கண்ணை தொறக்கறார் இவர் விஷயத்துலன்னு நெனச்சு கிட்டேன்.

இங்கே எல்லாருக்கும் வாஷிங் மிஷின் இருந்தாலும் டூட்டி முடிந்து வந்தால் சன் டிவி/சேட்டிங்ன்னு செம பிசியா ஆகிடுவதால?? யாருக்கும் தன் துணிகளை துவைக்க நேரம் இருக்காது. எங்களை நம்பியே ஒரு பெரிய லாண்டரி கம்பனி இருக்குது. இன்றைக்கு துணி எடுத்து போனால் 2 நாள் பின்ன வரும் அதுவும் துணிகளை மாற்றி மாற்றி பாடாவதியா இருக்கும். சில சமயம் அழுக்கே போகாது. ஆனாலும் எங்க வாஷிங் மெஷின் சும்மாவே கிடக்கும். தொட மாட்டோம்ல்ல! ஒரு நாள் நம்ம மைன்கான் வந்து தான் அந்த துணிகளை துவைத்து தருவதாகவும் இன்று கொடுத்தால் அடுத்த நாள் டெலிவரின்னும் சொன்னார். சரின்னு கொடுத்தோம். வாங்கிட்டு போனார். இங்கே ஒரு உருப்படிக்கு 1 திர்காம். அதான் வாஷிங் மிஷின் நிறைய இருக்கே, இவர் சர்ஃப் மாத்திரம் வாங்கி எல்லாத்திலயும் போட்டு மொட்டை மாடில காய வைத்து காலை 3.30க்கு எடுத்து போய் அவர் ரூமிலே போட்டு விட்டு கச்சடா எடுக்க கிளம்பி விடுவார். 12.00 மணிக்கு வேலை முடிந்ததும் சாப்பிட்டு விட்டு அயர்ன் பண்ண ஆரம்பிச்சு ,அயர்ன் பண்ண தெரியும் ஆனா மடிக்க தெரியாது அதனால் ஹேங்கரில் மாட்டி மாட்டி மாலை நாங்க வந்த் உடனே வந்து கொடுத்து விடுவார்.

இப்படியாக ஒரு நாளைக்கு 50 உருப்படிகள் தேறிடும் அவருக்கு. சரியான சுத்தம் நல்ல சர்வீஸ் என்பதால் மேலும் சில பேர் குடுக்க முன் வந்த போது தனக்கு அயனிங் தெரிய வில்லை என சொல்லி வாங்க மட்டேன்னு சொல்லிட்டார். இப்போது அவரின் மாத வருமானமே 3200 திர்காமாக ஆகி விட்டதே. ஆனால் தொடந்து எல்லோ ரும் வற்புறுத்தவே அவர் கூட வந்த கிளீனிங் ஜவான் இலங்கை பையன் அவனிடம் அயனிங் மட்டும் "சப் காண்டிராக்ட்" விட்டார். அவனுக்கு ஒரு உருப்படிக்கு 25 பில்ஸ் இவருக்கு 75 பில்ஸ், ஆனால் ஒரு நாளைக்கு 100 உருப்படி கலெக்ட் பண்ன ஆரம்பிச்சுட்டார். பின்ன முதல் மாடியில் உள்ளவர்கள் துணி போட ஆரம்பித்ததும் ஒரு பீகாரி பையனை வச்சுகிட்டார். அதே காண்டிராக்ட் பேசிஸ்ல. உருப்படிக்கு அவனுக்கு 25 பைசா அயர்னிங்க்கு. இப்போ அவருக்கு 150 உருப்படிகள் வர ஆரம்பிச்சதால துணி கலெக்ட் செய்ய உலர்த்தி எடுக்க ஒரு நேப்பாளி பையன் போட்டுட்டார். ஆனால் இவனை சம்பளத்துக்கு வச்சுகிட்டார்

ஆனால் இவர் கூட வந்த ஜவான்கள் 800 தான் சம்பாதிக்கிறங்க. இவரை வேலைக்கு சேர்த்துக மாட்டேன்ன்னு உதாசீன படுத்தியவர்களை காட்டிலும் இவர் 2 மடங்கு சம்பாதிக்கிறார். மனுஷன் கொஞ்ச நேரம் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. அவரை கூப்பிட்டு பேசுவேன், அப்போது சொன்னார், இவர் கூலி வேலை செய்து சம்பாதிச்சதை உறவு காரங்க ஏமாத்திட்டதாகவும், பின்ன தனக்கும் தன் மனைவிக்கும் எந்த ஆதரவும் இல்லாம போனதாகவும் சேர்த்து வச்ச 2 லெட்சத்தை 45 வயசுன்னு போட்டு பாஸ்போர்ட் எடுத்து இங்க வந்ததாகவும் சொன்னாரு.

பாஷைன்னு பார்த்தா இவருக்கு வங்காளி மட்டுமே தெரியும். வேற ஒன்னுமே தெரியாது. எல்லாம் ஊமை பாஷை தான். சரி, இசைக்கும், உழைப்புக்கும் என்ன பாஷை வேண்டி கிடக்கு. இப்ப சொல்லுங்க வங்காளியான இவர்கிட்ட நேப்பாளி,இந்தியன், ஸ்ரீலங்கன்,எல்லாம் வேலை பார்க்கிறாங்க அதனால "மைன்கான் A to Z" கம்பனியை நாம் ஏன் "மல்டி நேஷனல்(வேலை பார்க்கும்) கம்பனின்னு சொல்லக்கூடாது???"

வெட்டி தம்பிகிட்ட ஜாலியா ஒரு கலாட்டா!!!

வெட்டி தம்பி ஒரு பதிவு போட்டிருந்தாரு, அதிலே எனக்கு ஒத்து வராத சில கருத்துகள் மட்டும் இங்க விமர்சிக்கறேன். கோவிக்காதீங்க வெட்டி தம்பி, இது சும்மா ஜாலிக்கு தான்!

//மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.//

அதாவது அந்த 100 ரூபா இருந்தா சாதா பஸ்ஸிலே போயிடலாம்! அப்படின்னா கிட்ட தட்ட 75% உங்க சாப்ட் வேர் கம்பனி அதிகமா விலை கொடுக்க தயாரா இருக்குது, பஸ்ஸிலே மட்டுமல்ல தனக்கு தேவைப்பட்ட எதையுமே, அப்படித்தானே! ஒரு 10% அதிகமா கொடுத்து பிலாக்கிலே போனா கூட ஒத்துக்கலாம். இல்ல ஒரு அவசர ஆத்திரம்ன்னா 25% அதிகமா கொடுக்கலாம். ஆனா 75% அதிகமா பஸ்காரன் கேட்டான்னா என்னா காரணம் ஏற்கனவே "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" சாப்ட்வேர் கிட்ட அவன் இது போல பல தடவை சுகம் அனுபவிச்சு இருக்கணும். நீங்க பழக்க படுத்தீட்டிங்க அப்படி! எங்க ஒரு கிராமத்து விவசாயிகிட்ட கேட்டு பார்க்க சொல்லுங்க, நீங்க சொன்னாலும் பஸ்காரன் கேக்க மாட்டான். என்னவோ 100 ரூபாய் அதிகம் குடுத்துட்டு அந்த சாப்ட்வேர் ஊர் போய் சேரும் வரை குலுங்கி குலுங்கி அழுத மாதிரில்ல "ஏமாந்தவன்"ன்னு சொல்லியிருக்கிய தம்பி! ஜஸ்ட் லைக் தட் 100ஐ "வெட்டி" விட்டுட்டு லேப்பிய மடில வச்சுகிட்டு ASL அடிச்சு கிட்டு போன பார்ட்டிய "ஏமாந்தவன்"ன்னு அடைமொழி சொல்வதை விட "பேட் மேன்"ன்னு சொல்லலாம். அய்யய்யோ அடிக்க வராதீங்க பாலாஜி, "ஃபேட் மேன்" அதாவது "கொழுப்பு மனிதன்"ன்னு சொல்லலாம்.

//இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?//

அங்க என்ன தெரியுமா ஆகியிருக்கும், முதல்ல பொதுமக்களுக்கு கொடுக்கும் அதே விலைக்கு தாங்க கொடுத்திருப்பாங்க ஹோட்டல் காரங்க, அங்க போன சாப்ட்வேர் சர்வருக்கு 200 ரூவா டிப்ஸ் கொடுத்திருக்கும்.(எனக்கு தெரிஞ்ச நண்பன் கொடுத்தான், நான் பார்த்தேன்) இப்படி 4 பார்ட்டி வந்துட்டு 200 200ன்னு டிப்ஸ் கொடுத்துட்டு போன பின்ன அந்த சர்வர் 800 ரூபாயை ஆட்டிகிட்டே போயிருப்பான் முதலாளி முன்னாடி! ஆஹா நாம முதல் போட்டு ஹோட்டல் வச்சா நம்ம விட அதிகமா சர்வர் லாபம் பார்க்கிறானே, சர்வருக்கே 200 டிப்ஸ்ன்னா நாம இந்த பார்ட்டிகளுக்கு விலை ஏத்தினா தப்பே இல்லை, அதுங்களுக்கும் பெருமையா இருக்கும் ச்சார் ஆத்மி சாப்பிட்டோம் ஏக்கசார் ஆச்சுன்னு அதுங்களும் சந்தோஷமா பீத்திகிட்டுமேன்னு நெனச்ச முதலாளி ஏத்திட்டான். இதுல அவன் தப்பு என்னா இருக்கு. 1000 ரூவாய் செலவு பண்ணிய சாப்ட்வேர் அடுத்த தடவை அந்த ஹோட்டலுக்கு போகலைன்னு சொல்லுங்க முதலாளி சர்ன்னு பேக் வாங்கிடுவார்! இப்ப என்னாச்சு, உங்களால எல்லாருக்கும் கஷ்டம்.

//சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா?//

எப்படி சேமிக்க முடியும், இல்ல எப்படி சேமிக்க முடியும்! இப்படி தெண்ட செலவு செஞ்சா??


//ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். //

ஊக்கூம், ஒருகாலும் முடியாது, 1வது வாத்தியாரின் சம்பளம் தெரியாம பேசாதீங்க, அது தவிர எங்க அவருக்கு நிலம் இருக்குதோ அங்க மாத்தல் வாங்கிட்டு போய் சுகமா இருக்கும் வாத்தியாரையும் தெரியும். 4 , 5 வாத்தியார் சேர்ந்துகிட்டு லோன் போட்டு வட்டிக்கு விடும் ஆயிரக்கணக்காண வாத்தியாரையும் எனக்கு தெரியும். அவங்க சாமர்த்தியம் உங்களுக்கு வராது!

//இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. //

இது சாப்ட்வேர் மாத்திரம் அல்ல பொது தான் எல்லா துறைக்கும். அதான் நீங்களே ஒத்துகிட்டீங்களே!

//சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது.//

ஆஹ நீங்க சொல்ல வர்ரது என்னான்னா, ரியல் எஸ்டேட்காரனும், ஹோட்டல் ஓனரும் , செல்கம்பனி காரனும் தான் உங்க காசை கொள்ளை அடிச்சுட்டான். அப்படித்தானே. அதனால அவன் தான் உங்க சாப்ட்வேர் கம்பெனி ஆளுங்களை விட பணக்காரன். ஆனா பணத்தை தண்ணியா செலவழிக்கும், தெண்டமா செலவழிக்கும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றச்சாட்டு அவனுங்க மேல வராம உங்க மேல ஸாரி சாப்ட்வேர் மேல மட்டும் வர காரணம் என்ன வெட்டி தம்பி, காரணம் என்னான்னா இவனுங்க எந்த காரணம் கொண்டும் 75% அதிகம் கொடுத்து ஆம்னில போக மாட்டான். எதிர்ப்பான், இல்லாட்டி அட்லீஸ்ட் "ஹிண்டு"க்கு லெட்டர் எழுதுவான்.

//பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. //

லேபிளை மாத்துங்க, நாப்பத்தி ஐந்தா ஆகட்டும்:-))

//அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க//
அப்படி யாரும் புலம்பவில்லை பாலாஜி, தெண்டமா செலவு பண்ணி மத்தவங்களுக்கு தொல்லை குடுக்காதீங்க, இதால பாதிக்கப்டுவது ஏழைகள் இல்லை. நடுத்தர வர்க்கம் தான். கொஞ்சம் யோசிங்கப்பா!!!
.