பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 17, 2012

ஜெயா அரசின் ஓராண்டு கால சாதனைகள்!!! By J.P.பிரகாஷ்.



இதை எழுதியது நான் இல்லை. நண்பர் ஜே பி பிரகாஷ். சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி இல்லை. இருந்தால் இதை எல்லாம் பேசியிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அங்கே ஜால்ரா சத்தம் தான் அதிகம் கேட்கின்றது. அதன் காரணமாக இந்த பதிவு இங்கே பதிக்கப்படுகின்றது. இதை ஜெயகுமார் ஒன்றும் செய்ய இயலாது. இப்போது பதிவை படியுங்கள்.கார்டூன் எங்கயோ சுட்டது. கார்டூன் வரைந்தவருக்கு நன்றி!

*******************************

ஜெயா தலைமையிலான அதிமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைகள் :

1. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு சுமார் 100% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...

2. வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு , சுமார் 200% சதவீதத்துக்கு மேல் கட்டண உயர்வு...

3. பால் விலை கடுமையாக உயர்வு

4. பத்திரபதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது

5. கடுமையான மின் வெட்டு, குறைந்த பட்சம் 7 மணி நேரதிற்கு மேல்

6. வங்கி கொள்ளைகள், படுகொலைகள் அதிகரிப்பு, தினமும் சராசரி 3 கொலை சம்பவங்கள், 5 கொள்ளை சம்பவங்கள், 10 செயின் பறிப்பு சம்பவங்கள் என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மிக சிறப்பாக பேணி காப்பது..

7. எந்த ஒரு பெரிய திட்டத்தையும் அறிவிக்காதது

8. துறைமுக விரைவு சாலை பணியை நிறுத்தியது

9. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட பல மேம்பால பணிகளை தாமதபடுத்துவது

10. அமைச்சர்களை பேசா மடந்தைகள் ஆக்கிவிட்டு, தானே அனைத்து அறிவிப்புகளையும் விதி எண் 110 இன் கீழ் வெளியிடுவது

11. சட்டசபையை, சுய புராண, தற்புகழ்ச்சி, ஜால்ரா மன்றமாக ஆக்கியது

12. உடன்பிறவா சகோதரி சசிகலாவை, சின்னக்காவாக்கி, மக்களை முட்டாளகியது...

13. பொய் வழக்குகளை போடுவதில் புதிய சாதனையை படைத்தது...அந்த பொய் வழக்குகளை நீதி மன்றங்கள் தள்ளுபடி செய்து குட்டுவாங்கியது...

14. கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது

15. வெற்றிகரமாக சொத்துக்குவிப்பு வழக்கை சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டுவருவது..

16. சொத்துக்குவிப்பு வழக்கில் தான் மட்டும் ஜாமீனில் இருந்து கொண்டே, முதல்வர் பதவில் இருந்து கொண்டு , பிறரை குற்றம் சொல்வது..

17. பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடிக்கு வரிகளை போட்டது / உயர்த்தியது.

18. மக்களின் மேல் கடும் விலை உயர்வை சுமத்தியது

19. முந்தய திமுக ஆட்சியில் போடப்பட்ட, திட்டமிடப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை , ஏதோ தான் ஆட்சிக்கு வந்து துவக்குவதாய் ஏமாற்றுவது

20. அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சீட்டு ஆட்டம் போல் மாற்றிக்கொண்டே இருப்பது, அனைவரையும் இடமாற்றம், பதவி மாற்றம் எப்போ வருமோ என்ற பயத்திலேயே வைத்து இருப்பது.

21. ஓராண்டு காலத்தில் நீதிமன்றத்திடம் அதிகமாக குட்டு வாங்கிய அரசு என்று பெயர் வாங்கியது

22. 200 கோடி மதிப்புள்ள , சென்னையின் மையபகுதிலுள்ள, (செம்மொழி பூங்கா எதிரில்) 115 கிரௌண்ட் அரசு நிலத்தை தனியாருக்கு (தோட்டகலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகருக்கு) தாரைவார்த்து கொடுக்கப்பட்டது.

23. விலையில்லா மென்பொருள் பல இருக்க, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது (ஹிலாரியை சந்தித்தவுடன்)

24. சுமார் 500 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை பாழ்படுத்துவது.

25. இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட 3 செம்மொழிகளுள் , தமிழையும் பல ஆண்டு போராடி சேர்த்ததை இருட்டடிப்பு செய்து, செம்மொழி என்ற பெயர்களை மறைப்பது..

26. ஆசியாவின் பெரிய நவீன நூலகமாக திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முயற்சிப்பது

27. சேலத்தில் சுமார் 100 கோடி செலவில் கட்டப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை உபயோக படுத்தாமல் வீணடிப்பது

28. பழைய பாட திட்ட புத்தகங்கள் வீணாக அச்சிட்டு சுமார் 200 கோடி நஷ்டம்

29. 6800 கோடி புது வரி விதிப்பு (பட்ஜெட் அல்லாத)

30. பரமக்குடி காவல்துறை கண்மூடிதனமாக 6 பேரை சுட்டு கொன்றுள்ளது இனவெறியுடன் இருவர் தேடுதல் வேட்டையில் கொலை..

31. தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களை குஜராத்க்கு அனுப்பபடுகிறது.

32. மணல் கொள்ளை

33. காவல் நிலையத்தில் இதுவரை 12 பேர் அடித்து கொலை.

34. வாரம் மூன்று முறை மீனவர்கள் மீது தாக்குதலை கை கட்டி வேடிக்கை பார்ப்பது.

35. செயல்அற்ற மற்றும் செயல்படாத அமைச்சரவை

36. நெசவாளர்கள் போராட்டம்

37. சமசீர் கல்வி போராட்டம், மாணவர்களின் கல்வியில் விளையாடியது

38. மக்கள்நல பணியார்களை வேலையிலிருந்து நீக்கி, அவர்களின் வாழ்கையில் விளையாடியது, பலரின் தற்கொலைக்கு காரணமாயிருப்பது..பதிமூனாயிரம் மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களை நடு தெருவில் நிறுத்தியது

39. செங்கல் விலை ரூபாய் முன்றில் இருந்து ரூபாய் ஏழு ஆக உயர்வு

40. சிமெண்ட் விலை ரூபாய் 230 இல் இருந்து ரூபாய் 320 உயர்வு

41. நியாய விலை கடையில் கலைஞர் ஆட்சியில் வழங்கிய 30 ரூபாய் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது

42. நியாய விலை கடைகளில் கலைஞர் வழங்கிய 25 ரூபாய் மளிகை பொருள்கள் கொடுப்பதில்லை

43. ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெ அளவை குறைத்து, விலையை உயர்த்தியது..

44. அனைத்து எண்ணைகளும், 50 ரூபாய் விலை உயர்வு

45. ஜவுளிகள் விலை உயர்வு

46. செய்யாத சாதனையை செய்ததாக கூறி 4 முழு பக்க விளம்பரங்களை, இந்திய அளவில் பெரும்பாலான நாளிதழ்களில் வெளியிட்டு அரசு கஜானாவை காலி செய்வது

47. செம்மொழி மற்றும் தமிழ் ஆய்வு நூலகங்களை பாழ்படுத்தியது

48. திருப்பூர் சாய பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, அனைத்து தரப்பினருக்கும் பட்டை நாமம் போட்டது..

49. பெரும்பாலான இடங்களில் மக்கள் போக்குவரத்திற்கு ஒத்துவராது என்று புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மோனோ ரயிலை கொண்டுவருவேன் என்று அடம் பிடிப்பது..

50. மெட்ரோ ரயிலின் அடுத்த கட்ட விரிவாக்கங்களை கைவிட்டது
*****************************

உங்கள் கருத்துகளை அதாவது விட்டுப்போன கருத்துகளை பின்னூட்டமாக சொல்லுங்கள் தோழர்களே!

May 15, 2012

தகதகத்தாய சூரியன் பொய்மேகங்கள் கலைத்து வெளியே வந்தது!!!




இரண்டாம் அலைக்கற்றை விவகாரத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொகை ஊடகங்கள் மற்றும் சி ஏ ஜி  மதிப்பில் (???!!!) ஒரு லட்சத்தி எழுபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய் இந்திய பணம் என்பதில் தொடங்கி பின்னர் சி பி ஐ கணக்குப்படி  35000 கோடி  என்று வழக்கு பதிவும் செய்து கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு திமுகவை சேர்ந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் தொலை தொடர்பு அமைச்சருமான ஆ.ராசா அவர்கள்  கைது செய்யப்பட்டு இன்று 15 மாதங்கள் முடிவடைந்து விட்டன.கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி 2010ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கையும் சி பி ஐ ஆல் தாக்கல் செய்யப்பட்டது.  அவருடன் மற்றும் அவருக்கு பின்னர் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மீதம் 16 பேரின் பிணை வழக்குகள் விசாரிக்கப்பட்டு சி பி ஐ நீதிமன்றத்தின், டெல்லி உயர்நீதிமன்றத்தில், சில உச்சநீதிமன்றத்தில் கூட பிணை கொடுக்கப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டு அவர்கள் தினம் தோரும் வழக்கிற்காக நீதிமன்றம் (விடுமுறை நாட்களை தவிர்த்து) வந்து விசாரனை நடைபெற்று கொண்டு இருக்கின்றனர்.


இதுவரை  40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாக்குமூலங்கள் 1500 பக்கங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 100க்கும் மேலான வழக்கு ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அதன் மீதான சரிபார்ப்பு மற்றும் பரிசீலனையும் முடிந்தும் விட்டன. அதாவது கிட்டத்தட்ட வழக்கு பாதிக்கும் மேலாக முடிவடைந்து விட்டது.

இதுவரையிலான வழக்கில் ஆ.ராசா அவர்கள் தரப்பில் இருந்து நீதிமன்றத்துக்கும், வழக்கு தொடுத்துள்ள சி பி ஐ க்கும் எவ்வித முட்டுக்கட்டைகளும் போடப்படவில்லை என்பதும் விசாரணை வாய்தாக்கள் கேட்கப்படவில்லை என்பதும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக சி பி ஐ கூட தெரிவித்து இருப்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. இதே இந்திய நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போன்றவர்கள் தங்கள் மீது நிலுவையில் இருக்கு வழக்குகளில் எப்படி எல்லாம் வழக்கை இழுத்தடிக்கும் கூத்துகளும் நடந்து கொண்டு இருக்கின்றன, அதிலே எல்லாம் எத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதும், தனக்கு வழக்கு விபரங்கள் இன்ன இன்ன மொழியில் வேண்டும் என்றெல்லாம் நீதிக்கு வித்தை காண்பித்து கொண்டு இருக்கின்றனர் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டு தன் உள்ளனர்.

இது இப்படி இருக்க.... இந்த வழக்கு உண்மையா? சி ஏ ஜி அறிக்கை என்பது திராவிட, தலித்தியத்தின் மீதான காழ்புணர்வானதா? அல்லது உண்மையிலேயே அத்தனை இழப்பு ஏற்பட்டதா? அதே போல மற்ற மற்ற துறைகளில் அரசுக்கு இழப்பு என்பதே இல்லையா? அரசுக்கு இழப்பு ஏற்படுவதால் மக்களுக்கு பயன் உண்டா? அல்லது அரசுக்கு இழப்பு ஏற்படும் போதெல்லாம் மக்களுக்கும் இழப்பு தானா? அரசு என்பது ஒரு கார்பரேட் கம்பனி போல மக்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது கனிவான தாயைப்போல நடந்து கொள்ள வேண்டுமா?  ராசா அவர்கள் வழக்கில் தானே பலமுறை வாதாடியும் வருகின்றாரே, அவர் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்கிறார்? சி பி ஐ இதுவரை வழக்கின் போக்கில் சரியான பாதையில் தான் போகின்றதா? பாரபட்சம் காட்டி செயல் படுகின்றதா? யாரால் இந்த வழக்கு பிரபல்யம் அடைந்ததோ அந்த நீரா ராடியா கைது செய்யப்பட்டாரா? ரிலையன்ஸ் இதில் முக்கிய குற்றவாளி என சொன்ன சி பி ஐ அம்பானிகளை கைது செய்யாமல் அவர்கள் கம்பனிகளின் அம்புகளை மட்டும் கைது செய்து விட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு கம்பனியில் கடன் மட்டுமே வாங்கியமைக்காக கனிமொழியையே கைது செய்தது அரசியல் காரணமா? வழக்கின் பின்னனி காரணம் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்க இயலும்? எந்த எந்த கட்சிகள் இதன் பின்னனியில் உள்ளன? என்ன என்ன இயக்கங்கள் இதன் உள்ளே புகுந்து ஆட்டுவிக்கின்றன? ஊடகங்கள் செய்த அயோக்கியத்தனம் இதில் என்ன? என்பன பற்றி எல்லாம் இதோ நவம்பர் 14 , 2010 அன்று தன் அமைச்சர் பதவியை துறந்து விட்டு ராசா அவர்கள் "தி ஹிண்டு" நாளேடுகளுக்கு அளித்த ஒரு முழுமையான நேர்காணலில் காண்போம்.

நாம் மேலே கேட்ட அத்தனை கேள்விக்கான பதிலும் அதில் இருக்கின்றன. ராசா என்பவர் ஒரு சாதாரண அரசியல் வாதி அல்ல. அவர் வாஜ்பாய் அரசில் இருந்து இன்றைக்கு இருக்கும் மன்மோகன் அரசு வரை "கேபினட் அமைச்சராக" பல ஆண்டுகள் பணியாற்றியவர். பல முறை பிரதமர்களால் தனது துறை சம்மந்தமாக பாராட்டுப்பெற்றவர். தனதுதொகுதி மக்களுக்கும், தான் சார்ந்த மாவட்ட மக்களுக்கும் அளவில்லா செயலாற்றியவர். மேலும் தான் ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞர் என இப்போது சி பி ஐ நீதிமன்றத்தில் நிரூபித்தவர். அவருக்காக நாம் யாரும் கட்டுரை எழுதி ஆதரிக்கிறேன் என "வக்காலத்து" வாங்கும் நிலையில் அவர் இல்லை. அதனால் அவர் வாதத்தை அவரே இங்கு வைக்கட்டும். நீதி  என்பது நீதிமன்றம் வழங்குவது மட்டும் அல்ல, மக்களே உங்கள் கையிலும் தான் உள்ளது. அவரது தரப்பு வாதத்தை கூர்ந்து படியுங்கள். அவர் என்னவோ ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக கத்தை கத்தையாக கண்டெய்னரில் பெரம்பலூர் எடுத்து சென்றதாக பரப்பப்பட்ட செய்தியில் உண்மை உண்டா அல்லது தலித்திய காழ்புணர்சி மட்டுமே அதில் உள்ளதா என்பதை நீங்கள் எடை போடுங்கள்.

****************************************

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?

அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற் போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப் புகணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளு மன்றம் மற்றும் மற் றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணை யம், மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவற் றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப் பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள் விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டி யில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளு மன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப் பதால், 2ஜி அலைக்கற் றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கை யில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற் போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுத லும் இன்றி, வெளிப் படையான கொள்கை யாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக் கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப் பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள் ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல் போன் வசதி யைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர் களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத் துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட் டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட் டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜன வரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8-ம் நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அர சால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப் படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்து கிறேன் என்றோ அர்த்த மாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப் படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப் படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந் திருக்கலாம் என்றெல் லாம் வழிகிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை (உயசவநட) நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச் சாட்டுகள் கூறப்படு கின்றன என்று நம்புவ தற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்த வரை யில், எந்த அமைச் சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக் கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யைப் பாருங் கள்; அது அப்போதிருந்த உரி மங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங் கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்ட னங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோ லியப் பொருட்கள், பொது விநியோக முறை யின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன் படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படை யாகக் கொண்டது அல்ல (nடிவiடியேட) என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானி யத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக் கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?


அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப் பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்பி ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்ச கம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்பு டனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப் போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்ட ணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற் கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத் துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரத மர் சில குறிப்புகளை அனுப்பி னார். உத்தேசிக்கப்பட் டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரத மருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற் கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடி தங்கள் எழுதிக்கொள் வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங் கள் அனுப்புவதும் சாதா ரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என் பதை மட்டும் அடிப்படை யாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனை யைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரை யில் பெறப்பட்ட விண் ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக் கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக் கப்பட்டதா அல்லது பின் னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊட கத்துறையில் உள்ள சில தவறான கருத் தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர் கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட் டும்) கும்பல் இருப்ப தாக நினைக்க நான் நிர்ப்பந் தக்கப்படுகிறேன். உதா ரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறா மல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் (ஊயசவநட) ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல் வாக்கு உள்ளது. அதனி டம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித் தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள் கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறு வனங்களுக்குச் கொடுக் கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசி யல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதி காரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவு களின் கீழ் பிரச்சினை களை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனி கள் பதிவாளரிடம் குறிக் கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண் பித்தால் அது தொடர் பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட் டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுய மாக அளிக்கப்படும் சான்றை அடிப்படை யாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய் வது என்பது ஒரு நடை முறை. அந்தப் பதிவாள ரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப் பட்டு கம்பெனி செயலா ளரால் சான்றிதழ் அளிக் கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்க லும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற் போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள் வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத் துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத் துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக் கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறை யும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

*************************
 மேலே இருக்கும் திரு ஆ.ராசா அவர்களின் நவம்பர் 14, 2010 தேதி  "தி ஹிண்டு" பேட்டியை ஒட்டியே இப்போதைய அவரது வாதங்கள் நீதி மன்றத்திலும் போய்க்கொண்டு இருக்கின்றது.


இதோ சிறிது நேரம் முன்னர் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்  ஆ. ராசா அவர்கள் இரு நபர் மற்றும்  20 லட்ச ரூபாய் பிணைத்தொகை, செலுத்த வேண்டும் என்றும், சென்னைக்கு செல்வதாக இருப்பின் நீதிமன்ற உத்தரவு வாங்கி மட்டுமே செல்ல வேண்டும் என்றும் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்கள் , ஆரிய அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் முறியடித்துவிட்டு  பொய் மேகக்கூட்டங்களில் இருந்து தகதகத்தாய சூரியனாக வெளி வந்துவிட்டார். இவரை "உள்ளே" அனுப்பிய கூட்டங்கள் இனி கைகூப்பி தொழுது வரவேற்றாக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!!!

May 13, 2012

அம்மா என்பது ஒரு அவஸ்தையான பதவி போலிருக்கு!!!

முதல்ல இதை படியுங்க மக்கா! http://ultoo.com/login.php?refererCode=2892467E&flag=hide

===================================================================



நல்ல அக்னி நட்சத்திர மதிய  மூன்று மணி வெய்யில். காற்றுக்காக வாசல் கதவில் ஒரு கதவும், கொல்லை கதவில் இரு கதவுகளையும் திறந்து விட்டு ஒரு பலகைக்கட்டையை ஹாலின் நடுவே போடும் மனைவியை என் கம்பியூட்டரில் இருந்து கண் அகலாமல் கவனித்து கொண்டு தான் இருந்தேன். அனேகமாக மதிய தூக்கத்துக்கான முஸ்தீபுகள். பாவம்! விடிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்து பூஜை எல்லாம் முடித்து அன்றைய பொழுதில் பாதிக்கு மேல் வேலை வேலை என கழித்து விட்டு கண் அசந்து போகும் நேரம்.

என் மனைவி என் நான்கு வயது மகனை கூப்பிட்டு "தம்பி, தோ பாரு. அம்மாவுக்கு கண் எல்லாம் எரியுது. கொஞ்ச நேரம் தூங்கப்போறேன். அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி ஒருக்களித்து படுத்து கண் அசரும் வரை பவ்யம் காட்டினான்.கண் அசரும் நேரம்....

"அம்மா, அம்மா, அம்மாவ், அம்மாவ்வ் "

கொஞ்சம் திடுக்கிட்டு விழித்து "என்னப்பா செல்லம்"

"தூங்கிட்டியான்னு பார்த்தேன்"

"ம்" மீண்டும் தூக்கம் வரவழைக்கும் முயற்சியில் கண் மூட...

"ம் ன்னு பதில் சொல்றே. அப்டீன்னா தூங்கலையா. அம்மாவ் அம்மாவ்.."

பதிலே சொல்லாமல் கொஞ்சம் அமைதி. அவன் தன் அம்மாவின் கிட்டே போய் இடுப்பின் மீதமர்ந்து முகம் கிட்டே உற்று  பார்க்கிறான். அவன் அம்மாவிடம் இருந்து சின்னதாய் குரல் "பரவாயில்ல. அப்டியே படுத்துக்கோ. நீயும் தூங்கு"

மெதுவாய் கண்கள் இமையை புட்டு பார்க்கிறான். திடீரென உணர்ந்த அசூசையான வலியால் அவனை உதறிவிட்டு "தம்பி, இங்க பாரு... அம்மா காலைல மூணு மணிக்கு எந்திருச்சனா... ரொம்ப தூக்கம் வருது. அம்மாவை டிஸ்டப் பண்ணக்கூடாது என்ன சரியா? நான் உன் பர்த் டேக்கு புது ட்ரஸ் எல்லாம் வாங்கி தருவனாம்". அம்மா மெல்ல தன்னையறியாமல் தள்ளிவிட்டதில் அவள் மேலேயே சரிந்த அவன் கொஞ்சம் தள்ளி வந்து...

"அம்மா அம்மா அம்மாவ்... இங்க பாரேன்"

"என்னப்பா?" கண்ணை மூடிக்கொண்டே கேட்க,

"எனக்கு ஜூன் மாசம் தான பர்த் டே"

"ஆமா"

"சவண்டீன் தான"

"ஆமா"

"இப்ப என்ன மாசம்?

"மே"

"அம்மாவ் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மேதான? அப்பன்னா மேக்கு அடுத்ததா ஜூன் மாசம் தான"

"ம்"

"அப்படின்னா நாளைக்கு எனக்கு பர்த் டேவா"

"இல்ல. ஜூன் மாசம்" தூங்க நினைத்து மூடிய கண்களில் மட்டுமல்ல குரலிலும் கொஞ்சம் எரிச்சல் இருந்தது.

"அம்மாவ் அம்மாவ்... இப்ப மே மாசம், நீதான மேக்கு அடுத்தது ஜூன்னு சொன்ன, அப்பன்னா நாளைக்கு தான எனக்கு ஆப்பி பர்த் டே"

"இல்ல அதுக்கு நாள் இருக்கு. பேசாம தூங்கு. இல்லாட்டி எதுனா வெள்ளாடு. அம்மா தூங்கிட்டு வந்துடுறேன்"

"அம்மா, அம்மாவ் அம்மாவ்"

"ம் சொல்லு..."

"உச்சா வருது"

"வருதுன்னா போயேன்"

"நீயும் வா... "

"போப்பா, அம்மா ஒரு பத்து நிமிஷமாவது தூங்கிடுறேன்"

"நெசமா வருதும்மா"

" அப்படின்னா டாய்லெட் கதவை திறந்துட்டு போயேன்"

"அம்மாவ் அம்மாவ் அங்க பல்லி இருக்கு. பயமா இருக்கு"

"அப்பன்னா கொல்லை பக்கம் போ"

"அங்க கருப்பு பூனை நிக்கும்"

"தெரு பக்கம் போ"

"அங்க மிளகாய் செடி இருக்கு. அங்க போக்கூடாதுன்னு அன்னிக்கு சொன்னீல்ல"

தினம் தினம் தெருபக்கம் போக கூடாது என சொன்னாலும் வீம்புக்காக போகும் பையன், இன்றைக்குன்னு பார்த்து திடீர் ஒழுக்கசீலனாக மாறியது நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது.

"அம்மாவ்... எனக்கு அவசரமா வருது.சீக்கிரம் வா"

வாரி சுருட்டி எழுந்து அவிழ்ந்த தலைமுடியை கொண்டை போட்டுக்கொண்டு ஒரு கையால் அவன் கையை தோள்பட்டை பக்கம் கொத்தாக பிடித்து அடுத்த கையால் அவன் பிடறியில் வைத்து கொண்டு தள்ளிக்கொண்டு போகாத குறையாக டாய்லெட் பக்கம் போய் பின்னர் திரும்பி வந்து "தம்பி இப்ப நிம்மதியா? நான் இனிமே தூங்கலாமா? இனிமே டிஸ்டப் பண்ணக்கூடாது" என சொல்லி மீண்டும் பலகைக்கட்டையில் தலை வைத்து படுக்க...

"அம்மாவ், அம்மா தூங்கிட்டியா"

"ஆமாம். பேசாம இரு"

"நான் படம் வரையனும். எனக்கு அக்காவோட ஸ்கெட்ச் பென் வேணும்"

"ஊகூம். நீ செவுத்திலே எழுதுவ. தரமாட்டேன். வேற வெள்ளாட்டு வெள்ளாடு"

"அம்மாவ்... ஆய் வருது"

"டேய் இப்ப தான டாய்லெட்  போய் உச்சா போன? அப்ப சொல்ல வேண்டியது தானே?"

"அப்ப வர்ல"

"பொய் சொல்லாத. நான் தூங்கனும்னா உனக்கு பிடிக்காது. அதான?"

"நெசமா படிப்பு மேல சத்தியமா வருது"

"சத்தியம்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. கொஞ்ச நேரம் அடக்கிட்டு இரு. அம்மா தூங்கிட்டு வர்ரேன்"

"அம்மா, அவசரமா வருதும்மா"

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதெப்படி அம்மாக்கள் சாப்பிடும் போதும், தூங்கும் போதும் மாத்திரம் மிகச்சரியாக பசங்களுக்கு கக்கா வருது என்று.

மீண்டும் எழுந்து அதே போல கையை கொத்தாக பிடித்து அழைத்துப்போய் பின்னர் டாய்லெட் கதவு சாத்தப்பட்டது. உள்ளே என்னவோ சம்பாஷனைகள். எனக்கு அத்தனை தெளிவாக காதில் விழவில்லை. மீண்டும் வந்தார்கள். அம்மாக்காரி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. "எனக்கு தெரியும்டா... என்னை தூங்க விடாம செய்யத்தான் நீ இப்டி பொய் சொல்லியிருப்பேன்னு. இனி என்னை எழுப்பினா, உனக்கு சாயந்திரம் எதுனா செஞ்சு தரலாம்னு இருந்தேன். அது கட் தான். ஒரு பத்தே நிமிஷம். அம்மா தூங்கிட்டு வந்துடுறேன். ஓக்கே." என சொல்லிக்கொண்டே மீண்டும் படுக்கை.

"இல்லம்மா. அப்ப வந்துச்சு. ஆனா டாய்லெட் உள்ள போனதும் தான் வர்லை"

எனக்கே கொஞ்சம் பாவமாய் இருந்தது. மெல்ல லேப்டாப்பில் இருந்து தலையை தூக்கி பார்த்தேன். அதற்கு முன்ன நான் தலை தூக்கி இருந்தா "என்னங்க கொஞ்சம் அவனை பார்த்துக்கோங்களேன்" என்றோ அவன் "அம்மாவ்"க்கு பதிலா "அப்பாவ்"ன்னோ கதை மாறியிருக்கும் அபாயம் இருந்ததால் அப்போதெல்லாம் பேசாமல் தலையை லேப்டாப்பின் உள்ளே இருந்து வெளியே எடுக்கவே இல்லை.

"தம்பி இங்க வா, இந்தா ஸ்கெட்ச் பென். உள்ள ரூம்க்கு போய் இஷ்டமான சுவத்துல எதுவேணா எழுது"  பையன் ஆர்வமா ஓடிவிட்டான். சுவற்றில் கிறுக்க அவன் அம்மா விடுவதில்லை. அம்மா முழிச்சுகிட்டா இந்த நல்ல சந்தர்ப்பம் அவனுக்கு கிட்டாமல் போய்விடுமே என அவன் சத்தம் போடாமல் ஓடிவிட... ஒரு இரண்டு நிமிடம் கூட ஆகியிருக்காது. பலகையில் தலை வைத்து படுத்திருந்த அம்மாக்காரி விருட்டென எழுந்து "தம்பி தம்பி... எங்க இருக்க? தம்பி... என்னங்க தம்பிய பார்தீங்களா? அய்யோ கொல்லை கதவும் திறந்து கிடக்கு. தெருகதவும் சாத்தலை. நீங்க இருக்கீங்கன்னு நம்பி தானே செத்த கண்ணசந்தேன். அய்யோ தம்பீ தம்பீ...."

"இரு இரு... அவன் இருக்கான். நீ ரெண்டு நிமிஷம் கூட தூங்கலை. அதுக்குள்ள ஏன் பதறிகிட்டு இருக்கே... அவன் இங்க தான் இருக்கான்" என நான் சொல்லிகிட்டே இருக்கும் போது தன் கையில் இருந்த ஸ்கெட்ச் பென்னை தூக்கி போட்டுவிட்டு எதுவுமே கிறுக்காதது போல "அம்மா ... நான் இங்க தான் இருக்கேன்" என சொல்லி அவன் நல்ல பிள்ளையாய் வர  அவனை தூக்கி மடியில்  வச்சுகிட்டு..."எங்க போயிட்ட. அம்மா கூப்பிடும் போது எங்க இருந்தாலும் "தோ இங்க தான் இருக்கேன் வந்துடுறேன்"ன்னு சொல்லிகிட்டே வந்துட வேண்டாமா? என்ன பிள்ளை போ நீ" என  தூக்கம் தொலைத்த தன்   சிவந்த கண்களுடன் இழுக்க வாசலில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது. என் அம்மா தான் வந்தாங்க. மணி அப்போது மாலை நான்கு ஆகியிருந்தது.

"என்ன ஒரே சத்தம்? மணி நாலு ஆச்சுதே. இவன் (என்னை தான்) நாலு மணிக்கு காபி குடிப்பானே? போடலையா? என்ன பிள்ளையை மடில வச்சுகிட்டு கொஞ்சிகிட்டு இருக்கே. கண்ணு வேற  நல்லா சிவந்து கிடக்கு. நல்ல தூக்கம் போலிருக்கே. ஹூம் நீங்கல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்கப்பா. நாங்கல்லாம் அந்த காலத்திலே மதியம் ஒரு ரெண்டு மணி நேரம் அக்கடான்னு தூங்க முடியாது. அப்ப தான் மாமனாரோ, மாமியாரோ தண்ணி கொண்டுவா, காபி கொண்டுவான்னு ரொம்ப படித்தி  எடுப்பாங்க. சரி சரி தூங்கினவரை போதும். போய் காபி போட்டு இவனுக்கு குடு. இவனுக்கு நேரத்துக்கு காபி குடிக்கலைன்னா தலைவலி வந்துடும்"  என  "என் அம்மா " வரிசையாக பேசிக்கொண்டே வீட்டுக்குள் வந்தாங்க.

மனைவியின் மடியில் இருந்த என் மகன் "அம்மா உன்னை டிஸ்டப் பண்ணாம தூங்கவிட்டா எதுனா செஞ்சு தரேன்னு சொன்னியே... எனக்கு எள்ளடை செஞ்சு தர்ரியா?" என கேட்க "ம் தர்ரேண்டா" என வாஞ்சையாக  வந்தது வார்தைகள் அந்த "அம்மா"விடம் இருந்து!

அன்பான "அன்னையர் தின" வாழ்த்துக்கள்!





May 8, 2012

புதுகை இடைத்தேர்தல்... டண்டனக்கா ஏ டணக்கனக்கா.... டி ராஜேந்தர் பொது வேட்பாளர் ஆகலாமா?



\\ புதுக்கோட்டை தேர்தல் பொது வேட்பாளராக போட்டியிட டி.ராஜேந்தர் முடிவு - செய்தி \\

புதுகை இடைத்தேர்தலில் டி ராஜேந்தரின் லட்சிய திமுக போட்டியிடுகின்றது என்ற முடிவை வேண்டுமானால் டி ராஜேந்தர் எடுக்கலாமே தவிர பொது வேட்பாளராக அவரே அவரை முடிவு செய்து கொள்ள முடியாது என்கிற விஷயம் எல்லாம் விடுங்கள். அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.  ஆனால் இப்போதைய சூழலில் புதுகையின் நிலை என்ன? அங்கே  சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் தோழர் மறைவின் அடுத்த அடுத்த நாட்களில் அதிமுக அங்கே தனது "மெஜாரிட்டி" அரசின் புஜபல பராக்கிரமங்களை எல்லாம் கட்டவிழ்த்து அரசு இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் முடிந்த பின்னர் அவர்களின் கூட்டணி கமிஷன் தேர்தல் தேதியை அறிவிக்கட்டுமா என ஒரு முறைக்கு நான்கு முறை அம்மையாரை கேட்டுக்கொண்டு அறிவித்தது. நல்லவேளை, அவசரத்தில் அம்மையார் தேர்தல் தேதியையும், கமிஷன் அதிமுக வேட்பாளரையும் அறிவிக்கவில்லை:-))
இந்த நிலையில் அங்கே தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் என திமுக  தலைமைக்கும் தெரியும். அதனால் இந்திய ஜனநாயகத்தை நோக்கி கேள்வி கேட்கும் விதமாக திமுக இந்த இடைத்தேர்தலில் பங்கு பெறாமல் புறக்கணிப்பு முடிவை எடுத்தது. இத்தனைக்கும் புதுகை மாவட்ட செயளாலர் திரு.பெரியண்ணன் அரசு அவர்கள் வெறும் 3000 ஓட்டுகள் வித்யாசத்தில் தான் வெற்றி வாய்ப்பினை கடந்த சட்ட மன்ற தேர்தலில் இழந்தார்கள். அப்படி இருப்பினும் திமுக தேர்தல் புறக்கணிப்பு செய்த காரணம் ஜெயாவின் ஹிட்லர் பாணி ஆட்சியும், அதற்கு ஒத்துப்போகும் கமிஷனும் தான்.

இப்படியான நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தது.  அதில் பெரிய ஆச்சர்யமான விஷயம் எதுவும் இல்லை. தா.பாண்டியன் எப்போதுமே அதிமுகவின் துணை அமைப்பாகத்தான்  தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துள்ளார் என்பது அவர்களது தேசிய தலைமைக்கே தெரிந்தும் எதுவும் செய்ய இயலாத நிலை அவர்களுக்கு. அதை விட்டுவிடலாம். ஆனால் இப்போது அதிமுகவின் ஆசியால் எதிர்கட்சியாக சட்டசபையில் அமர்ந்திருக்கும் தேமுதிக தலைமையோ  தனக்கு ஒரு கோடி கொடுத்தால் போட்டி என அதன் பங்கிற்கு மேலும் ஜனநாயகத்தை கேலியாக்கியது. மாக்சிஸ்ட் தோழர்கள் இன்னும் முடிவை அறிவிக்காத நிலையில் டி. ராஜேந்தரின் லட்சிய திமுக  மேற்படி அறிவிப்பை  சூசகமாக பத்திரிக்கைகளுக்கு கசிய விட்டுள்ளது.பர்கூர் சட்டசபை தேர்தலில் ஜெயாவை எதிர்த்து பெற்ற வாக்குகளும் , பழனி நாடாளுமன்ற தேர்தலில் டி. ஆரின் கட்சி பெற்ற வாக்குகள் எல்லாம் கிட்டத்தட்ட திமுகவின் வாக்குகள் தான் எனினும்..... இப்போதைய புதுகை சூழலில்  லட்சிய திமுக என்னும் கட்சி நடத்திவரும் டி ஆர்,   திமுக பங்கெடுக்காத இந்த தேர்தலை  மிகச்சரியாக பயன் படுத்திக்கொள்ள நினைப்பது அருமையான முடிவு தான்.

 அதிமுகவுக்கு எதிராக பணம் செலவு செய்வதாகட்டும், அருமையான தேர்தல் பிரச்சாரமாகட்டும், டி ஆர் கலக்குவார் என்பதில் எள் முனை அளவு சந்தேகமும் இல்லை. அதே போல திமுக வாக்குகளும், அதிமுகவால் பழிவாங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குகளும் நிச்சயமாக டி ஆர் கட்சிக்கு விழ 100 சதம் வாய்ப்புகள் உள்ளன. இதில் காங்கிரஸ் (அதாவது இப்போது திருநாவுக்கரசர் காங்கிரசில் இருப்பதால்) குறுக்கே புகுந்து குட்டையை குழப்பாவிடில், தேமுதிகவுக்கு யாரும் ஒரு கோடி கொடுத்து நீயும் ஆணிபுடுங்கு என சொல்லாவிடில் டி ஆர் புதுகையில் அதிமுகவுக்கு பெரும் சவால் தான்.

சரி, டி ஆர் அவர்களின் லட்சிய திமுக இந்த இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினால் ஒன்று அவரே வேட்பாளர் அல்லது அவரது மனைவி உஷா ராஜேந்தர்  தான் வேட்பாளர் என்பது ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்க அவர்களுக்கு பிரச்சாரம் செய்ய இன்று தமிழக சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்து இருக்கும், இப்போது எஸ்.டி.ஆர் என புதுநாமகரணம் சூட்டப்பட்ட சிம்புவும் கூட பிரச்சாரத்துக்கு வருவார். ஆக புதுகையில் தேர்தல் களம் சூடாக்க இதுவும் ஒரு காரணமாக அமையும். தேமுதிக ஒரு கோடி கொடுத்தால் தேர்தலில் நிற்பேன் என சூசகமாக சிக்னல் கொடுத்து இருப்பதால் ஒரு கோடிக்கு பதில் இரண்டு கோடி வேண்டுமானால் தருகிறேன், நிற்கவே வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் பேரம் பேசி கொடுக்கக்கூடிய தெம்பும் திராணியும் பணபலமும் கூட டி.ஆர் அவர்களுக்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. புதுகையில் கனிசமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கூட "பொது வேட்பாளரை" ஆதரிப்போம் என அறிவிப்பு செய்து விட்டது.

மீதம் இருப்பது காங்கிரஸ் மற்றும் மாக்சிஸ்ட்  கட்சி மட்டுமே. ஆனால் திமுக இப்போது திடீரென டி ஆரை ஆதரிப்பதாக சொன்னால் காங்கிரஸ் அங்கே நின்று டெபாசிட் போகும் நிலைக்கு தன்னை ஆக்கிக்கொள்ளாது. ஆகையால் டி ஆரின் லட்சிய திமுக அங்கே பொதுவேட்பாளர் ஆக வாய்ப்பு அதிகம். (அதாவது திமுக தலைமை லட்சிய திமுகவை ஆதரிப்பதாக சொன்னால்) அதில் இப்போதைக்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவது மாக்சிஸ்ட் கட்சி மட்டுமே.

மாக்சிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில்  திமுக அல்லது அதிமுக என்னும் ஏதாவது ஒரு கட்சியில் கூட்டணி வைத்தால் மட்டுமே இரண்டு எம் பிக்களையாவது மத்திக்கு அனுப்ப இயலும். அப்படி அனுப்பினால் மட்டுமே தமிழக மாக்சிஸ்ட் கட்சிக்கு கொஞ்சமாவது மதிப்பு இருக்கும் அதன் தேசிய தலைமையில். மாக்சிஸ்ட் ஒன்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைமை போல தா.பாண்டியனிடம் கட்சியை கொடுத்து அதிமுகவின் கிளைக்கழகாம இருக்க சொல்லி வேடிக்கைப்பார்க்க! ஆக திமுகவின் ஆதரவோ அல்லது கூட்டணியோ நாடாளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் மாக்சிஸ்ட் "பொதுவேட்பாளருக்கு" ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். திமுக கூட்டணி என்பது ஒரு நம்பகமான கூட்டணி என்பது மாக்சிஸ்ட் தோழர்களுக்கு நன்கு தெரியும். ஏனனில்  2006ல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போது நடந்த ஒரு ஒப்பந்தப்படி ஒரு ராஜ்யசபா எம் பி தருகிறேன் என சொல்லி அதையும் கொடுத்த கட்சி திமுக. ஆனால் அதிமுக என்பது  அதன் பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.மகவுக்கு அது போல ஒப்பந்தம் போட்டும் பின்னர் அன்புமணிக்கு கொடுக்கவில்லை என்பதும், பாமகவினரோ "ஒப்பந்தப்படி ராஜ்யசபா சீட் எங்கே?" என போய் கேட்கவும் திராணியற்று கூட இருந்தனர் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆக மாக்சிஸ்ட் தோழர்கள் என்ன முடிவு செய்யப்போகின்றனர் என்பது இதை எல்லாம் வைத்தே இருக்கும். ஆனால் அதே நேரம் வரக்கூடிய ராஜ்யசபா தேர்தலில் கனிமொழி அவர்களின் பதவிக்காலம் முடியும் நேரம். அவர் மீண்டும் எம் பி ஆக வேண்டும் எனில் இப்போது திமுகவில் இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதாது. அதற்கு மாக்சிஸ்ட் தோழர்களின் உதவியும் வேண்டும் என்கிற பகடைக்காய் மாக்சிஸ்ட் கையில் உள்ளது. இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது கூட்டி கழித்து மாக்சிஸ்ட் தோழர்கள் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

டி .ஆர் அவர்களின் லட்சிய திமுகவுக்கு , திராவிட முன்னேற்ற கழகம் பொது வேட்பாளர் ஆக ஆதரவு கொடுத்தால் அதிமுகவின் பண பலத்தை டி ஆர் கட்சி சுலபமாக எதிர்கொள்ளும். ஆனால் மாக்சிஸ்ட் தோழர்கள் தேர்தலில் பொது வேட்பாளராகவோ அல்லது தனித்தோ நின்றால் அந்த அளவு பணம் செலவழிக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஒரு வேளை திமுக, டி ஆரின் லட்சிய திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் திமுகவினர் டி ஆருக்கு தேர்தல் வேலை செய்யவோ, பூத் கமிட்டியில் உதவுவதோ எவ்வித சுனக்கமும் இருக்காது. ஏனனில் டி ஆர் இதே திமுகவில் எம் ஜி ஆர் உயிருடன் இருந்த போது சந்தித்த பெரிய தோல்வியான உள்ளாட்சி தேர்தல், மயிலாடுதுறை, அண்ணாநகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுகவுக்காக பணியாற்றியவர். திமுகவின் பூங்காநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனி கட்சி கண்ட பின்னரும் கூட 2006 சட்ட மன்ற தேர்தலில் திமுகவுக்காக வாக்கு சேகரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவர். இந்திரா அம்மையார் கலைஞரை "இவர் ஆதரித்தாலும் தீவிரமாக ஆதரிப்பவர், எதிர்த்தாலும் தீவிரமாக எதிர்ப்பவர்" என சொன்னது  போல டி ஆர் அதே போன்ற குணம் கொண்டவர். இவரது  லட்சிய திமுகவுக்கு இப்போது திமுக ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவரது திமுக சார்பு பிரச்சாரம் அதாவாது இப்போது பாக்கியராஜ் கூட திமுகவுக்காக இல்லாத நிலையில் உபகாரமாக இருக்கும். இவர் அடித்தட்டு மக்களிடம் அவர்கள் மொழியில் ஜெயா அரசின் அக்கிரமங்களை பேசும் போது அது சரியாக போய் சேரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதே போல இப்போது இருக்கும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு இதில் எல்லாம் மக்கள் உண்மையிலேயே துவண்டு போய் ஒரு "மாற்றம்" வேண்டும் என நினைத்து வாக்களித்தால் டி ஆர் வெற்றி பெறக்கூட வாய்ப்பு உண்டு. அப்படி நடந்தால் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்பது இன்னும் பிரமாதமாக வெளி உலகுக்கு தெரியவரும். அதிமுகவின் வேட்பாளர் வெற்றி பெற்றால் "அம்மா" புகழ் பாட இன்னும் ஒரு கன்னுக்குட்டி. டி.ஆர் வெற்றி பெற்றால் அடங்கா மாட்டுக்கு ஒரு  நல்ல "கடிவாளம்".

என்ன நடக்க போகின்றது என பார்ப்போம். ஆனால் டி ஆர் என்பவர்  அரசியலில் கிண்டலுக்கும் கேலிக்கும் மட்டும் உரியவர் இல்லை ... அதையும் தாண்டி திமுகவுக்கு  பயன் படுபவர்.... ஆனால் அதே நேரத்தில் அவரை அளவுக்கு அதிகமாக உயர்தியும் விடக்கூடாது என்பதிலும் திமுக கவனமாக இருக்க வேண்டும். இருக்கும்!