பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 15, 2009

வெள்ளயனை வெளியேற்றிய அபிஅப்பா!!!! சுதந்திர தின பெசல் மீள் பதிவு!!!

எதிர்காலத்தில் ஒரு கவுன்சிலர் ஜெயிக்கனும்ன்னா கூட நம்ம வாரிசுகள் கிட்டே தான் கை கட்டி நிற்க வேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையோடு என் தாத்தாக்கள் உழைத்த காலம் அது. ஏதாவது ஒரு பாட்டியின் பிரசவம் தினந்தோறும் வீட்டில் நடந்து கொண்டிருந்த படியால் தாத்தாக்கள் அதற்காகவே ஒரு வீட்டை பிரசவ ஆஸ்பத்திரியாக்கி வைத்திருந்த போது ஏதோ ஒரு தாத்தாவுக்கு ஞானம் பிறக்க தருமை ஆதீனத்திலே கோரிக்கை வைக்கப்பட்டு ஆதீனமும் அதற்காக நகரின் மைய பகுதியான எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு இலவச பிரசவ ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துட்டார்.

ஆஸ்பத்திரின்னா அப்படி இப்படி இருக்காது. சும்மா பத்து கிரவுண்டு நிலத்திலே பிரம்மாண்டமாய் இருக்கும். இரண்டு மகா பெரிய நுழை வாயில். அதன் வழியா மாயூரநாதர் தேரே உள்ளே போய் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வெளியே வரலாம். அப்படி ஒரு நுழை வாயில். உள்ளே நுழைந்தவுடன் ஒரு மாந்தோப்பு. மாந்தோப்பின் நடுவே ஒரு மிகப்பெரிய தாமரை வடிவிலான பூச்செண்டு வடிவத்தில் ஒரு செயற்கை நீரூற்று. அதன் பின் 60 அடி அகலத்தில் 18 படியுடன் கூடிய அரண்மனை மாதிரியான ஆஸ்பத்திரி. அதனை சுற்றியும் மிகப்பெரிய வேப்ப மரங்கள்.படியில் ஏறி உள்ளே போனால் இடப்பக்கம் டாக்டரின் ரூம். டாக்டர் ஜன்னலை திறந்தால் வேப்பம் பூ வாசமும் வேப்பம் காற்றும் அப்படி ஒரு அருமையாக இருக்கும். உள்ளே பிரசவ அறை நடு நாயகமாக, பின்னே நல்ல காற்று வரும்படியான நல்ல படுக்கை வசதிகள்.

அப்படியாக தருமை ஆதீனம் கட்டி கொடுத்த தோடு ஒரு நல்ல ஆங்கிலோ இந்திய பெண் டாக்டரையும் வேலைக்கு அமர்த்தி அது தவிர அத்தனை மருந்து மாத்திரைகளும், பழம், பால், நல்ல ஆரோக்கியமான பிரட் மற்றய அனைத்து வசதிகளோடும் அந்த ஆஸ்பத்திரி ஒரு ஆஸ்பத்திரியின் வாசமின்றி அப்படி ஒரு ரம்மியமாக இருந்தது. எங்க ஊர் மக்கள் "வெளியே" என்று போட்டிருக்கும் வழியாக உள்ளே போய் குழந்தை பெற்று கொண்டு "உள்ளே" வாசல் வழியாக வெளியே வந்து கொண்டு சந்தோஷமாக இன விருத்தி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த டாக்டர் மட்டும் தன் பியட் காரிலே "உள்ளே" வழியாக உள்ளே போய் "வெளியே" வழியாக வெளியே வந்து ஊழியம் செய்து கொண்டிருந்தர். இப்படி ஒரு நல்ல ஆஸ்பத்திரியை ஆதீனம் தங்கள் வீட்டுக்கு எதிரேயே கட்டி கொடுத்ததால் எங்கள் பாட்டிகள் ஆளுக்கு ஒரு பிள்ளை பெற்று கொண்டு முதல் போணி செய்து தங்கள் நன்றியை தெரிவித்தார்கள். இப்போது அந்த டாக்டரை பற்றி சொல்ல வேண்டும். பெயர் "ரோட்ரிஸ்". கவுன் போட்டு கிட்டு புது புது அர்த்தங்கள் சவுகார்ஜானகி மாதிரி டுக் டுக்ன்னு நடந்து வருவாங்க. எங்க ஊரிலே பியட் கார் வச்சிருந்த இரண்டு பேரில் அவங்க ஒருத்தவங்க. அவங்க வீட்டு காரர் பெயர் "சுருட்டு தொரை" அது தான் பெயரான்னு தெரியாது நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம். அவர் ஆங்கிலேயர் என்பதால் கோட் சூட் போட்டுகிட்டு H.வசந்தகுமார் மாதிரி இருப்பார்ன்னு நீங்க நெனச்சா அது தப்பு. ஒரு காக்கி கலர்ல தொள தொள டவுசர் போட்டுகிட்டு சிக்கன் பிராங் மாதிரியான சுருட்டை வாயிலே கவ்விகிட்டு 24 மணி நேரமும் அவர் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றி கொண்டே இருப்பார். சுருக்கமாக சொல்ல போனால் ரயில்வேயில் கரி இஞ்ஜினில் கரி அள்ளி கொட்டுபவர் போல இருப்பார். அவர் இந்திய ரயில்வேயில் இஞினியராக வேலை பார்த்து ரிட்டையர்டு ஆகிவிட்டதாக சொல்வார்கள்.

அந்த தம்பதிக்கு குழந்தைகள் உண்டா இல்லியான்னு எல்லாம் தெரியாது. லண்டனில் இருப்பதாக சொல்லுவார்கள். அவர்களுக்கு தருமை ஆதீனம் சார்பிலே டவுன்ஸ்டேஷன் (ரயில்வே ஸ்டேஷன்) எதிரே அமைதியான வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போதெல்லாம் யாரும் ஆஸ்பத்திரி போய் குழந்தை பெற்று கொள்ள பயந்த காலம். ஆனால் என் குடும்பம் மட்டும் எங்க ஊர் மக்களுக்கு ஒரு அவேர்னஸ் உண்டாக்கும் பொருட்டு அந்த ஆஸ்பத்திரியை எங்கேஜ்டாகவே வைத்திருந்தது

.சும்மா மாலை 7 மணி வரை சாதாரணமாக பேசி கொண்டு இருக்கும் ஏதாவது ஒரு பெரியம்மா " இருங்க ஒரு எட்டு எதிர்க்க ஆஸ்பத்திரி வரை போய் விட்டு வாரேன்"ன்னு போய் அடுத்த நாள் ஒரு தம்பிய கூட்டிகிட்டு வீட்டுக்கு வருவாங்க. கூட துணைக்கு போன ஏதாவது ஒரு சின்ன பாட்டியும் வரும் போது ஒரு குட்டி சித்தப்பாவை கூட்டிகிட்டு வருவாங்க. ஏதோ கடைமுழுக்கு கடைக்கு போய் காதோல கருகமணி வாங்கி வரும் மாதிரி அத்தனை ஒரு சுலபமாக இருந்தது அப்போது.

இப்படி யாராவது குழந்தை பெத்துக்க போனா நாங்களும் பட்டாளமாக போய்விடுவோம். அந்த ராஜாஜி ஹால் மாதிரியான படிகளுக்கு மேலே இருக்கும் திண்னையில் படுத்தால் அப்படி ஒரு வழுவழுப்பு, ஒரு சுகந்தமான காத்து வரும். அண்ணன் தம்பிகள் அத்தனை பேரும் அடுத்த புது வரவான குட்டி சித்தப்பாவுக்கோ, குட்டி தம்பிக்கோ ரொம்ப ஆர்வமா காத்து கிடப்பதாக மற்றவர்கள் நினைத்தாலும் உண்மை அதுவல்ல.

அங்கே கிடைக்கும் பிரட் வகையறாக்களுக்காகவே எங்கள் வம்சம் விருத்தியாக நாங்கள் ஆண்டவனை வேண்டிக்கொண்டது கொஞ்சம் அதிகப்படி. அப்படியாக ஒரு நாள் வார் வச்ச டவுசர் போட்ட நான் உக்காந்து 'பன்'னை பாலில் முக்கி முக்கி கபளீகரம் பண்ணிகிட்டு இருந்த போது நம்ம சவுகார் ஜானகி டாக்டர் ரவுண்ட்ஸ் வந்துட்டாங்க. குழந்தை பெத்த புண்ணியவதி பெரியம்மா மாத்திரம் படுத்திருக்க, சுத்தி உக்காந்து சவாலே சமாளி ஜெயலலிதா என்ன இருந்தாலும் அப்படி அடமண்டா இருக்க கூடாதுன்னு வருத்தபட்டுகிட்டு இருந்த மத்த பெரியம்மாக்களும், சித்திகளும், சில பாட்டிகளும் ( அதான் எல்லோருக்குமே வீடு எதிர் வரிசை தானே, ஆஸ்பத்திரியே கிட்ட தட்ட எங்க சொந்த ஆஸ்பத்திரி மாதிரிதானே... எல்லோருமே பொழுது போக்க வந்திருந்தாங்க) எழுந்து நிற்க ரோட்ரிஸ் டாக்டர் என்னை பார்த்து என்னவோ கேட்டாங்க ஆங்கிலத்தில்.

நானா சும்மா இருப்பேன். எழுந்து நின்னு " மை நேம் ஈஸ் தொல்காப்பியன், ஐ யம் ஸ்டடியிங் இன் நேஷனல் பிரைமரி ஸ்கூல் ஃபோர்த் ஸ்டேண்டர்டு ஏ செக்ஷன், மை சார் நேம் ஈஸ் துண்டு முறுக்கி சார்" ன்னு சொல்ல டாக்டர் முகம் கொஞ்சம் கடுகடுப்பானது. அவங்க வேற "நீ ஏண்டா நாதாறி இங்க உக்காந்து இருக்கே"ன்னு ஏதோ கேட்டிருப்பாங்க போல இருக்கு. அவங்க இந்த தடவை 37 செண்டி மீட்டருக்கு கொஞ்சம் நீட்டா ஏதோ கேட்கவே நானும் 38 செண்டிக்கு ஹம்புலி ரெக்குவஸ்ட் யூ ன்னு லீவ் வெட்டரை ஒப்பிக்க சுத்தி இருந்த தாய்குலங்கள் அத்தனையும் படக்கு படக்குன்னு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகாத குறை தான். அத்தன ஒரு பெருமிதம்.

கடைசியா "காளைமாட்டு சாணி"ன்னு சந்தோஷமா சொல்லிட்டு போயிட்டாங்க. அன்றைக்கு முதலே எனக்கும் அவங்களுக்கும் ஒரு பனிப்போர் தொடங்கிடுச்சு. எப்பவும் அங்கே மாங்காய் அடிச்சுகிட்டு ஜாலியா இருக்கும் என்னை பார்த்தாலே அவங்களுக்கு கோவம் கோவமா வந்துச்சு. அவங்க டிரைவர் பேர் பாரூக்ன்னு பேர். மீசை வச்சுகிட்டு இருப்பார். அவர்கிட்டே சொல்லி என்னை இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கம் பார்க்க கூடாதுன்னு சொல்லி விட்டாங்க. விடுவனா நான். ஆஸ்பத்திரி எல்லைக்கோட்டுக்கு அப்பால் நின்று மாங்காய் அடிக்க ஆரம்பித்தேன். அது தவிர அவங்க டூட்டிக்கு வரும் போதல்லாம் போய் நின்னு "குட்மார்னிங்" சொல்லி அவங்க குருதி அழுத்தத்தை அதிகரிக்க செய்தேன்.

இது போதாதுன்னு எங்க தெருவிலே வாங்கின காத்து பத்தாதுன்னு ரயில்வே ஸ்டேஷனுக்கு காத்து வாங்க போவோம். அப்ப அவங்க வீடு எதிரே தானே இருக்கு அங்கயும் போய் என் ஆங்கில புலமை எல்லாம் காட்ட ஆரம்பிச்சேன். அப்பதான் அவங்க ஒரு நாள் என்னை கூப்பிட்டு "உனக்கு என்னத்தான் பிரச்சனை"ன்னு கேக்க நான் "எனக்கு இங்கிலீஷ் சொல்லி தாங்க டாக்டர்"ன்னு கேட்டேன். சரி இவன் கிட்டே சமாதானமா போயிடலாம்ன்னு நெனச்சு ஒத்து கிட்டாங்க. கொஞ்ச நாள் போச்சு. நல்ல இம்புரூவ்மெண்ட் தெரிஞ்சுது. "போடா கம்மனாட்டி"ன்னு என்னை திட்டும் அளவு தமிழ் கத்துகிட்டங்க டாக்டர். எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுக்கும் போதேல்லாம் "நான் என்ன பாவம் செஞ்சேன்" ன்னு சில சமயம் தலையிலே அடிச்சு பாங்க. சில சமயம் ஜீசஸை திட்டுவாங்க தன்னை படைத்தமைக்கு. ஒரு நாள் child க்கு பண்மை என்னன்னு கேட்டதுக்கு நான் childs ன்னு பட்டுன்னு சொன்ன போது தான் அவங்க அந்த முடிவை எடுத்தாங்க.

வடிவேலு மாதிரி "முடியல என்னால முடியல... லண்டன் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 100 கிமீ தூரத்திலே ''நாட்ராம்பள்ளி"ன்னு எங்க சொந்த கிராமம் இருக்கு நான் அங்க போய் விறகு சுள்ளி பொறுக்கி வரட்டி தட்டி பொழச்சுக்கறேன். என் ஹஸ்பெண்ட் எதுனா கருப்பன் கோவில்ல குறி சொல்லி எனக்கு கஞ்சி ஊத்துவார்"ன்னு லண்டனுக்கே கிளம்பிட்டாங்க. காந்திஜி மாதிரி பல்லாயிரக்கணக்கான ஆங்கிலேயனை விரட்ட முடியாட்டியும் என்னால முடிஞ்ச அளவு ஒரு ஆங்கிலேய குடும்பத்தை கத்தி இன்றி ரத்தமின்றி அகிம்சா முறையிலே நாட்டை விட்டு வெளியேற்றினேன். ஏதோ என்னால முடிஞ்சது இந்த நாட்டுக்காக இவ்வளவு தான்.

குறிப்பு: இது சுதந்திர தின பெசல் மீள் பதிவுங்கோ!

August 8, 2009

உரையாடல்- சிறுகதை போட்டியின் தீர்ப்பு - ஆலோசனையும் சில தனிபட்ட கருத்துகளும்!!

இருபது நபர்களுக்கு 1500 வீதம் என இமாலய பரிசு தொகையை வலையுலகில் அறிவித்து 250 படைப்புகளை படைக்க வைத்த சூத்திரதாரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்.

சில ஆலோசனைகள்:
1. கடைசி கட்ட தேர்வுக்கு முன்னதாக 37 கதைகள் தேர்ந்தெடுக்க பட்டதாக எழுதியிருந்தீர்கள். அந்த மீதி 17 கதைகளின் பெயரையும் அறிவீத்து விட்டால் அவர்களும் காலரை தூக்கி விட்டுக்க ஒரு நல்ல வாய்ப்பு மேலும் அவர்களுக்கு அடுத்தடுத்து தனது சின்ன சின்ன தவறை திருத்தி கொண்டு கதை எழுத ஊக்கம் கொடுத்த மாதிரியும் இருந்திருக்கும்.

2 பின்னூட்டத்ட்தில் ஒரு சகோதரி சொன்ன மாதிரி அத்தனை கதைகளையும் ஈ புத்தகமாக கொண்டு வந்தால் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் படிக்க வாய்ப்பாகவும் அமையும்.

3.கிழக்கு பத்ரி அவர்கள் மீதி இருக்கும் 230ல் சிறந்ததை எடுத்து அச்சு ஊடகத்தில் அடுத்த புத்தகமாக கொண்டு வரலாம்.

அடுத்து கோபி போட்ட பின்னூட்டத்தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

\\

கோபிநாத் said:
முதலில் இப்படி ஒரு போட்டியை நடத்தி பல பதிவர்களின் திறமை வெளிப்படுத்திய உங்கள் இருவருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்...வாழ்த்துக்கள் போட்டியில் வெற்றி பெற்ற அந்த 20 நண்பர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் போட்டியில் பங்கு கொண்ட மற்ற அனைத்து நண்பர்களும் அருமையான கதைகளை எழுதியிருந்தார்கள்...அவர்களின் மூலமாகவும் பல கதைகள் கிடைத்தது..அதனால் அவர்களுக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்

என் மனதில் தோன்றிய ஒன்று போட்டிய நடத்திய இரண்டு தலைகளுக்கும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். போட்டியில் வெற்றி பட்டியலில் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல வெற்றிகளை கண்டவர்கள் புதிய பதிவர்கள் பெரும்பாலும் இல்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.\\இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியின்றி நாங்களே (பைத்தியக்காரன் - ஜ்யோவ்ராம் சுந்தர்) நடுவர்களாக இருந்துவிட்டோம்\\தொடக்கம் முதல் போன பதிவு வரை நடுவர்கள் வேறுயாரேன்னு என்று நினைக்க வைத்து இப்போது வேற வழியில்லை நாங்கள் தான் என்று சொல்லியிருப்பருப்பது பல கேள்விகளை கொண்டு வரும். ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்கள் இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள் & வாழ்த்துக்கள்\\

அடுத்து (இதுஎன் தனிப்பட்ட கருத்து)

நர்சிம் அவர்கள் கதையும், ரசனைக்காரி அவர்கள் கதையும், அமித் அம்மாவின் நாலனா கதையும், ராமலெஷ்மியின் பொட்டலம் கதையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன்.
நாலனா கதையில் ஓடி போன புருஷன், ஒரே பிள்ளை, வறுமை தாய் என இன்னனும் மனதில் ஒட்டி கொண்டிருக்கும் கதை கரு. அவங்க முடிச்ச விதமும் அருமை.

பொட்டலம் கதையில் சமூக அவலம், பையனிம் முடி டிபன் பாக்சில் இருப்பது குப்பையில் வீசிய பேப்பரிலிருக்கும் செய்தி அப்படியே ஏழ்மைக்கு நீதி இல்லை என்பதை காட்டி இருக்கும்.

இருபது வருட வாசிப்பு அனுபவன் உள்ள தங்களுக்கு நான் சொல்ல வேண்டாம். என் ஆசையை தான் சொன்னேன்.

நான் இந்த 4 கதைகளுக்கும் விமர்சனமே எழுத நினைத்தேன். அதை தான் இங்கே கொட்டி தீர்த்துகறேன் அத்தனையே.

அந்த இருபதும் முத்துக்கள். மற்றபடி வலையுலக சம்பிரதாயத்தின்படி லக்கிக்கு "ஸ்பெசல் பரிசு" "ஸ்பெசல் சாதா பரிசு" " ஆனியன் பரிசு" "ரவா பரிசு"ன்னு எதுனா கொடுத்து இருக்கலாம். அவருக்கு பரிசு கொடுத்தால் எங்கே "நண்பர்களுக்கே கொடுத்து கொண்டார்கள்" என்று உங்கள் நேர்மையை சந்தேகபடுவார்களோ என் எண்ணியே ஒதுக்கி விட்டீர்களோ என நான் நினைக்கிறேன்.

அவர் தான் 250 கதைகளில் முதல் கதை எழுதி துவக்கி வைத்தார். அருமையான கதை. அவருக்கு என் பாராட்டுகள்..

உங்களுடைய நேரம் எத்தனை செலவாகி இருகும் என நினைக்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் குருஜி சுந்தர்ஜி அவர்களுக்கும், சிவராமன் அவர்களுக்கும். உங்கள் இலக்கிய பணி தொடரட்டும்.

குறிப்பு: இருபது பேரில் யாராவது 1500 வேண்டாம் என சொன்னால் கீழ்கண்ட முகவரிக்கு தந்தி மணிஆர்டராகவோ, போஸ்டல் ஆர்டராகவோ அனுப்பினால் தன்யனாவேன்.

அபிஅப்பா,
4 வது குறுக்கு சந்து,
விவேகானந்தர் தெரு,
(பஸ்டாண்டு அருகே)
துபாய்!