பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

April 26, 2012

கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!!



ராஜீவ் விடுதலைப்புலிகளால் மரணிக்கப்பட்டதற்கு பின்னர் இந்தியாவில் அதிக பலன் அடைந்த கட்சி என சொன்னால் அது "காங்கிரஸ்". மிகப்பெரிய வெற்றியை அந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ல் பெற்றது. அந்த கட்சிக்கு இணையாக அதிக லாபம் அடைந்தது யார் எனில் நிச்சயமாக அதிமுக தான். அதிமுக என்று சொல்வதை விட குறிப்பாக ஜெயலலிதா என்றே சொல்லலாம். அந்த ராஜீவ் மரணத்தால் தான் ஜெயா முதல்வராக முடிந்தது. இல்லாவிடில் நிச்சயம் அதிமுக என்னும் கட்சி இன்று பூண்டற்று போயிருக்கும்.


அதே போல ராஜீவ் மரணத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எனில் கட்சி என பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம். திமுக 1989ல் ஆட்சியை இழந்தது அதே விடுதலைப்புலிகள் பிரச்சனையால் தான். அதே போல விடுதலைப்புலிகள் செய்த இமாலயத்தவறு ராஜீவை தமிழக மண்ணில் மரணிக்க வைத்த சம்பவம். அதனால் திமுகவின் வெற்றி பறிபோனது 1991ல். அப்போது திமுகவினர் சொத்துகள் சூறையாடப்பட்டன. திமுகவினர் அடித்து நொறுக்கப்பட்டனர், திமுகவினர் மீது எல்லா வித வழக்குகளும் பாய்ந்தன. திமுக கட்சியை தடை செய்யலாமா என மத்திய அரசு சோழி உருட்டி பிரசன்னம் பார்க்க ஆரம்பித்தது. அப்போதைய நரசிம்மராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் மத்திய அரசுக்கு மிகுந்த ஆதரவாக எப்படியாவது திமுகவை அழிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்ட ஜெயா அரசு இங்கே மாநிலத்தில் திமுக மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கியது.


 திமுகவை சேர்ந்த பெண் உறுப்பினர், அமைச்சராக பதவி வகித்தவர், சகோதரி திருமதி. சுப்புலெஷ்மி ஜகதீசன் முதலானோர் ஒரு வருட சிறை தண்டனை எல்லாம் பெற்றனர் பொய்வழக்குகளில். அதன் பின்னர் திமுக மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையில் இருந்து விலகி வந்தது. அதற்கு முன்னர் கூட விடுதலைப்புலிகளை திமுக அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும்... இலங்கையில் வசித்த தமிழர்களுக்காக அவர்கள் நலனுக்காக தமிழீழம் அமைய குரல் கொடுக்க ஜனநாயக பாதையில் சமர் செய்த ஈழத்தந்தை செல்வா அவர்கள் மறைவினாலோ , அமிர்ந்தலிங்கம் போன்றவர்கள் அப்போது செயலற்று போனதாலோ(விடுதலைப்புலிகளால்), திமுக நேரிடையாக ஆதரவு தெரிவித்த சீறி சபாரத்தினம் (TELO) போன்ற குழுக்கள் விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டதலோ திமுக விடுதலைப்புலிகள் இயக்கத்தை அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும் தனித்தமிழீழம் கிடைக்க அந்த விடுதலைப்புலிகள் என்னும் ஒரே இயக்கம் மட்டுமே இருந்த காரணத்தால் ஒத்துக்கொள்ள நேர்ந்தது எனினும், அந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆலோசனை சொன்ன உத்தமர்கள் இங்கே தமிழகத்தில் தங்கள் அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டி செய்த துர்போதனைகளால் அவர்களுக்கும் அதாவது விடுதலைப்புலிகளுக்கும் திமுக மீது அத்தனை ஈர்ப்பு இல்லாமலே போனது.


 ஆனாலும் ராஜீவ் மரணத்தின் பின்னர் திமுக பட்ட சிரமங்கள், திமுக தொண்டர்கள் சந்தித்த துயரங்கள் எல்லாம் சீர்தூக்கி திமுக சற்றே ஒதுங்கி இருந்தது. அந்த இடைவெளியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழக துர்போதனை கும்பல்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆலோசனை என்கிற பெயரில் மேலும் மேலும் விஷத்தை மட்டுமே ஊட்டினர்.

எந்த அளவுக்கு விஷம் ஊட்டினர் என்றால் 2009 மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது கூட தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை தொடர்பு கொண்டால் ஏதேனும் வழிபிறக்கும் எனக்கூட தெரியாமல் விடுதலைப்புலிகளின் "போலீஸ் நடேசன்" அவர்கள் எதற்கும் உதவாத நெடுமாறன், வைக்கோ ஆகியோரை தான் தொடர்பு கொண்டு காப்பாற்ற கோரினர் என்னும் அளவு தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானம் இருந்தது, அல்லது அந்த அளவு இந்த துர்போதனை கும்பல்கள் "தாங்கள் தான் தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் வித்தகர்கள், ஆபத்பாந்தவர்கள்" என சொல்லி வைத்ததை நம்பியது விடுதலைப்புலிகள் இயக்கம். : : :நெடுமாறனோ, வைக்கோவோ, மற்றும் சின்ன சின்ன சீமான்களோ விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக குரல் கொடுத்தால் அவர்களை "காமடிபீஸ்" ஆக மட்டுமே இலங்கையும் ஒதுக்கி தள்ளியது. இலங்கையின் அந்த அரசியல் அறிவு உண்மை தான் என மே 17, 2009 நிகழ்வு நடத்தி காண்பித்தது. இலங்கை எப்போதுமே நெடுமாறன், வைக்கோ வகையறாக்களை கணக்கில் எடுத்து கொண்டு பதில் கூட கூறவில்லை.


ஆனால் தற்போது கலைஞர் "ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு" என முழங்கியதும் இலங்கையின் கோத்தபய ராஜபக்ஷே கள் குடித்த குரங்குகிற்கு உச்சந்தலையில் தேள் கொட்டியது போல அலறும் நிலை ஏன் என்பதை உலகலாவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத்தமிழர்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர். ராஜீவ் மரணத்தின் பின்னர் அவர்கள் பட்ட அடி எல்லாம் மறந்துவிட்டு களம் இறங்குவர். நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நெருங்கும் சமயம் இது. திமுக ஆதரவு என்பது மத்தியில் ஆள இருக்கும் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த நேரத்தில் கலைஞர் எடுக்கும் நிலைப்பாடுகள் உலகலாவிய ஈழத்தமிழர்களே, உங்களுக்கு மிகவும் முக்கியம்.... .


கலைஞர் எடுத்த நிலைப்பாட்டினால் அலறியது கோத்தபய ராஜபக்ஷே மட்டுமல்ல, இலங்கை அரசு மட்டுமல்ல. ஈழத்தமிழர்களே, நீங்கள் இத்தனை நாள் யாரை ஆபத்பாந்தவனாக நினைத்தீர்களோ, அந்த வைக்கோ, சீமான், நெடுமாறன் ஆகியோர் அலறிக்கொண்டு இருக்கின்றார்கள். "கலைஞரே நீங்கள் தயவு செய்து ஈழம் என பேசாதீர்கள்" என "சிரித்து" கொண்டே சொல்கின்றனர். என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்? உண்மையிலேயே ஈழம் வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பின் என்ன செய்திருக்க வேண்டும்? "அப்பாடா! இப்போதாவது கலைஞர் இப்படி சொன்னாரே, இனி நாமும் அவர் கூட கரம் கோர்ப்போம்" என குதூகலம் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிடில் அப்படி செய்தால் தங்கள் அரசியல் பிழைப்பு இனி வீணாகுமே என நினைத்தால் இத்தனை நாள் ஈழமக்கள் பெயரை சொல்லி பிழைப்பு ஓட்டியமைக்கான நன்றியாக வாயை மூடிக்கொண்டு "ஈழம் கிடைக்க கலைஞர் அவர் வழியில் போராடட்டும், நாங்கள் தனி வழியே போராடுவோம் " என வாயை மூடிக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் சீமான் போன்ற சின்னதுகள் எல்லாம் "கலைஞரை போராடாதே, வாயை மூடு "என சொன்னால் என்ன அர்த்தம்? சரி! போகட்டும், சீமான் அப்படி சொல்லலாம். எப்போது தெரியுமா? சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் எல்லாம் போராடி கிட்டத்தட்ட தனி ஈழம் கிடைக்க இலங்கை அரசு ஒத்து கொண்ட நிலையில் அதற்கான வரைமுறைகள் தயாராகும் நிலையில் இருக்கும் போது அப்போது கலைஞர் வந்து இப்படி சொன்னால் சீமான் "கலைஞரே வாயை மூடும். வெண்ணை திரண்டு வரும் போது பங்கு போடுகிறேன் என சொல்லி தாழியை உடைக்காதீர்" என சொல்லலாம். ஆனால் நடப்பது என்ன? இவர்களை எல்லாம் மாபெரும் அரசியல் சக்தியாக நம்பி கெட்ட ஈழமக்கள் இன்று அந்த மண்ணில் போராட கூட நாதியில்லாமல் முள்வேலியில் இருக்கும் போது கலைஞர் "டெஸோ" அமைப்பை மீண்டும் துவங்கி ஒரு ஈழப்போராட்டம் ஆரம்பிக்கும் நிலையில் அவரை "வாயை மூடு" என சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை. இந்திரா அம்மையார் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை பிடித்து இருந்தது. பின்னர் அமைதிப்படை அனுப்பிய காலத்தில் இருந்து இந்தியாவை பிடிக்கவில்லை. உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தேவையான காரணம் இருந்தது. இப்போது நெடுமாறன், வைக்கோ,குஞ்சு குளுவான் சீமான் போன்றவர்களால் உங்களுக்கு தமிழ்நாட்டில் பாதி பேருக்கு மேல் ஆதரவு இல்லாமல் போனது, அதனால் மே 17 நிகழ்வெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அவர்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை உங்களுக்கு என இப்போதாவது புரிந்து இருக்கும். மேலும் அவர்கள் உங்கள் வேதனையை இங்கே தங்கள் அரசியல் லாபத்துக்கான மூலதனமாக பயன்படுத்துவதும் தெரிந்திருக்கும். தேவையில்லாமல் உங்கள் தோள் மீது ஏறிக்கிடக்கும் குப்பையை தட்டிவிட்டு அடுத்த நல்ல நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது. அதல்லாம் இல்லை, துர்போதனைக்காரர்கள் பிடியில் தான் இருப்போம் என இப்போதும் சொல்வீர்களானால் உங்களுக்கு தமிழீழம் கிடைக்க வந்த கடைசி நல்ல வாய்ப்பும் பறி போகும் என்பதை உணருங்கள். தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என சொன்ன கலைஞர், இலங்கைஅரசால் "பயங்கரவாதி கருணாநிதி" என பாராட்டப்பட்ட கலைஞர் நேற்று "டெசோ" அமைப்பு (Tamil Elam Supporters Organization) மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என சொல்லி தமிழீழத்துக்கான அடுத்த விடுதலைப்போரை ஆரம்பித்து வைத்துள்ளார். கலைஞர் என்னும் இந்த புளியங்கொம்பை பற்றிக்கொள்வதும் தட்டிவிடுவதும் உங்கள் கையில் தான் உள்ளது!