தலைப்பை பார்த்து விட்டு அரசியல் பதிவுன்னு ஆசையா வந்து ஏமாந்து போன கனவான்களே, அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! இது ச்சும்மா ஒரு சுயபுலம்பல் பதிவு தான்.
அவன் எனக்கு இரண்டு வயது இளையவன். வயது வித்யாசம் குறைவாக இருந்த போதும் நெம்ப மரியாதையா இருப்பான் என் மீது:-)) "எலே அண்ணன் இங்க பாரண்டா" என ஏகப்பட்ட டா டா டட்டடா டால்பா டப்பா எல்லாம் போட்டு கூப்பிட்டாலும் அண்ணன் பெயரை சொல்லி எல்லாம் மரியாதை குறைவா நடந்துக்க மாட்டான். நாங்க பிறந்தது முதல் லக்கிலுக் வலைப்பூவுக்கு ஆன ஆனா ஹிட் எண்ணிக்கையை விட பத்தோ இருபதோ எண்ணிக்கை குறைவாகத்தான் சண்டை போட்டிருப்போம்.
ஆனால் பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே அதிக பட்சமாக. உடனே "உனக்கும் எனக்கும் செத்தா வாழ்ந்தா கிடையாது" அப்படீன்னு இரு பக்கமும் இருந்து சவால்களும் சாபங்களும் பறக்கும். எப்போ அதல்லாம் ஒரு ஏழு, எட்டு வயசிலேயே.
பின்ன சமாதான உடன்படிக்கை எல்லாம் போட்டுப்போம். சில சமயம் அதிக சேதாரம் ஆனவங்களுக்கு ஜெயிச்சவங்க உண்டியல் காசு எல்லாம் நிவாரண நிதியாகக்கூட போகும். சில சமயம் நானும் அவன் என்னை வாடா போடான்னு கூப்பிட கூடாது ஒரு வருஷத்துக்குன்னு நான் சொல்ல அந்த ஒரு வருசம் என்பது எங்க சமாதான உடன்படிக்கை முடியும் போது ஒரு மணி நேரமா ஆகியிருக்கும்.உடன்படிக்கையின் அந்த சிறப்பு தீர்மானத்திலே உட்பிரிவா "அந்த ஒரு மணி நேரம் எது என்பதை அவனே முடிவு செய்வது" என சொல்லி சேர்த்துடுவான். பின்னே அதன் படி அவன் இரவு தூங்கும் போது அந்த ஒரு மணிநேரத்தைன்னு சொல்லிடுவான்.
இப்படியாக நாளொரு சமாதானமாகவும் பொழுதொரு சண்டையுமாக வளர்ந்தோம்.தூங்கும் போதும், சாப்பிடும் போதும், அத்தனை ஏன் தென்னந்தோப்புக்கு காலைகடன் கழிக்க போனா கூட ஒன்னாதான் இருப்போம். சாப்பிட ஆரம்பிக்கும் போது இரண்டு பேர் தட்டையும் அவன் கழுவிட்டு வந்து "டேய் உனக்காக நானே தட்டு கழுவிட்டேன்"ன்னு சொல்லும் போது ஆஹா இப்படி ஒரு தம்பி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்ன்னு அப்படியா ஜிவாஜி ரேஞ்சுக்கு அவன் உச்சி முகர்ந்து பீலிங்ஸ் விடுவேன். அதுக்கு அவன் "வுடுடா வுடுடா உனக்கு நான் தட்டு கழுவாம யாருக்கு கழுவ போறேன் நோ பீலிங்ஸ் ஆஃப் இந்தியா"ன்னு சொல்லும் போது எங்க பாசத்தை பார்த்து அம்மாவும் படக்குன்னு தாலிய எடுத்து கண்ணு ஒத்திப்பாங்க( எது எதுக்கு தாலிய கண்ணுல ஒத்திகிறதுன்னு இல்லியா)
சாப்பிட்டு முடியும் போது மெதுவா சொல்லுவான் "டேய் நான் சாப்பிடும் முன்ன கழுவினேன்ல அதனால நீ இப்ப என் தட்டை கழுவிடு"ன்னு சொல்லிட்டு ஓடிடுவான். ஆகா கழுவின தட்டை சும்மா அலசிட்டு இப்ப கொத்ஸு எண்ணெய் பிசுக்கு தட்டை நான் கழுவும் படி ஆகிடுச்சென்னு சண்டை ஆரம்பமாகும். அம்மா அநியாயமா அவசரப்பட்டு ஒரு தாலி ஒத்தல் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பாரபட்சமே இல்லாம ரெண்டு பேருக்குமே வெளக்குமாறு மந்திரித்தல் வைத்தியம் பண்ணுவாங்க.
அதிக சேதாரம் இரு தரப்புக்கும் ஆகிவிடும் சிலசமயம். அப்போதே முடிவு செஞ்சிடுவோம். 'வாடா இன்னிக்கு கச்சேரி பிள்ளையாருக்கு போய் சத்தியம் செஞ்சிடுவோம் இனி சண்டையா போடாம ஒத்துமையா இருந்துடுவோம்"ன்னு சொல்லிட்டு சூடம் வாங்கிட்டு கிளம்பி போய் சூடத்தை கொளுத்தும் போது சொல்லுவான் "டேய் அண்ணா உன் கையால அடிச்சு சத்தியம் செய்வதா வேண்டிகிட்டேன் அதனால கையால அந்த சூடத்தை அடி"ன்னு சொல்லுவான். நான் எப்படா வேண்டிக்கிட்டன்னு கேட்டா "ஜஸ்ட் நவ்"ன்னு கூலா சொல்லுவான். பின்ன என்ன ஒத்துமையா இருப்போம்ன்னு சத்தியம் பண்ண போன இடத்திலே கட்டி புரண்டு சண்டை தான். இப்படி அடிக்கடி கச்சேரி பிள்ளையாரை டார்ச்சர் கொடுக்க டார்ச்சர் கொடுக்க எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்டுட்டாளே அவருக்கு குலை நடுங்கி போய் திரும்பி உட்காந்துப்பார்.
இப்ப அதுக்கு என்னன்னு கேட்குறீங்களா? இப்படி அழகா போய்கிட்டு இருந்த எங்க சண்டை வளர வளர அதும் பெரிசா வளர்ந்துச்சு. ஈசல் ஆயுளா இருந்த "அந்த பேசா" நேரமும் அதிகமா ஆகிடுச்சு. சமீபத்துல ஒரு ரெண்டு வருஷமா சுத்தமா பேச்சுவார்த்தை இல்லாம போயிடுச்சு:-((
நல்லா எழுதுவான். அரசியல் அருமையா பேசுவான். நல்ல உக்கிரமா எழுதுவான். அவனும் ஒரு மூனு வருஷமா தொழிலில் பிசியாகிவிட்ட காரணத்தால் எழுதுவது கிடையாது. ஆனா நேத்து சீமாச்சு அண்ணா, முத்துகுமார் இருவரும் ஒரு லிங் கொடுத்து இருந்தாங்க. ஓப்பன் பண்ணி பார்த்தா ஆச்சர்யம். அவன் தட்ஸ் தமிழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கான். இதோ அந்த லிங்.தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.
மேலே போட்டோ பார்தீங்களே அது நானும் அவனும். பார்த்தா அழகிரி ஸ்டாலின் மாதிரி இருக்கீங்க. அவங்களே ஒன்னு சேர்ந்தாச்சு. நீங்க அது போல ஒன்னு சேர்ந்தா என்ன? அப்படின்னு என் பிரண்ட் ஒருத்தாங்க கேட்டாங்க! அதுக்கு நான் "அழகிரி ஸ்டாலின் எல்லாம் சரிதான் பிரண்ட், நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும் "அப்படீன்னு பெருமூச்சு விட்டுகிட்டேன்.
