பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 29, 2018

காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா?


காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? 


நம் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி. கிட்டத்தட்ட 56 ஆண்டுகளுக்கு முன்பாக நம் திமுகவின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவின் அடிவேர் கொள்கையான “திராவிட நாடு” என்னும் கொள்கையை 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம், வேலூர் சிறையில் இருந்து வெளி வந்ததும் கைவிட்டார். அப்போது அண்ணா அவர்களை பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. செயற்குழுவை கூட்டி ஆலோசிக்கவில்லை. கட்சியின் முக்கிய முன்னோடிகளை கலந்தாலோசிக்கவில்லை. அவசர அவசரமாக ஆனால் தீர்க்கமாக முடிவெடுத்து அதை அறிவித்தார். அப்போது திமுகவில் இது பற்றி எவ்வித முனகல்களும் கூட கேட்கவில்லை. சிறந்த அறிஞர் அண்ணா அவர்கள் எதை செய்தாலும் அது கட்சிக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் செயலாகவே அமையும் என நம்பினார்கள். தலைமையின் மீது அதீத நம்பிக்கையுடன் அண்ணாவின் அந்த திராவிட நாடு கொள்கையை கைகழுவியதை ஏற்றுக் கொண்டனர்.

அண்ணா அந்த திராவிட நாடு கொள்கையை கை கழுவ காரணம் ... இந்திய சீன போர் நேரம் அது. அந்த நேரத்தில் நாம் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் மத்திய ஆளும் காங்கிரசுக்கு எவ்வித நெருக்கடியும், குடைச்சலையும் கொடுக்கக்கூடாது என்கிற மனோபாவம். அடுத்து அந்த நேரத்தில் மத்திய அரசு “பிரிவினைவாத தடைச்சட்டம்” கொண்டு வந்திருந்தது மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சி. அதன் படி மிக சுலபமாக திமுக என்னும் இயக்கத்தையே தடை செய்து விட இயலும். அப்படி நடந்தால் என்ன ஆகியிருக்கும். தமிழகத்தில் திமுகவில் இருந்த இளைஞர்கள்  தீவிரவாத புரட்சிப்பாதைக்கு திரும்பியிருக்கக்கூடும். அது வெற்றி பெற்றால் திராவிட நாடு கிட்டும். ஒருவேளை மிருக பலத்துடன் இருக்கும் இந்தியா என்னும் தேசத்தை எதிர்த்து நிற்கும் போது தோல்வி கண்டால் என்ன ஆகும். அந்த தீவிரவாதப்போர் என்பது பாரத யுத்தம் போல 16 நாட்களில் முடியும் சமாச்சாரமாக இருந்திருக்காது. அது பல ஆண்டுகள் நடந்து பின்னர் தான் ஒரு முடிவை எட்டியிருக்க இயலும். தமிழகம் பாழ்பட்டு போயிருக்கும். இனப்படுகொலை கூட சாத்தியமாகிப்போயிருக்கும். தமிழர்கள் கனடா, அமரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நாடோடிகளாக திரிந்து அடிமை வாழ்வு வாந்திருப்பர். பல தலைமுறை தமிழர்கள் ஆண்களை இழந்து மிஞ்சி இருக்கும் தமிழச்சிகள் சின்னாபின்னமாக்கப்பட்டு தமிழ் கலாச்சாரம் இல்லாமல் ஆனால் தமிழச்சிகளுக்கு தகாத முறையில் பிறந்த பிள்ளைகளாக அப்பன் பெயர் தெரியாத இனமாக ஆகியிருக்கும். திராவிட நாட்டை வென்று விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சேதாரங்கள் என்பது கற்பனை செய்து கூட பார்க்க இயலாத நிலையில் இருந்திருக்கும். அதன் பின்னர் திராவிட நாட்டை கட்டியெழுப்ப பெரும் பொருளாதார சரிவை சந்திக்க வேண்டியிருக்கும். அண்ணா யோசித்தார். கொஞ்சமும் வெட்கப்படாமல் “திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டார். ஆனால் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டினார்.

“வீடு இருந்தால் தான் ஓடு மாற்ற இயலும். நாடு இருந்தால் தான் கட்சி நடத்த முடியும்”  எனவே திராவிட நாடு கொள்கையை கைவிடுகின்றோம். ஆனால் “மாநில சுயாட்சி”யை பலமாக கோருகின்றோம். மத்திய அரசின் குறைகளை இப்போது பேச வேண்டாம் தோழர்களே! மணமேடையில் அமர்ந்திருக்கின்றோம். தாலி கட்டும் வேலையை இப்போது பார்ப்போம். மணப்பெண் கழுத்தில் இருக்கும் மச்சங்களின் எண்ணிக்கை பற்றி இப்போது சிந்திக்க வேண்டாம். மச்சங்கள் எண்ணிக்கையை அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று தோழர்களே....திராவிட நாடு கோரிக்கையை நாம் இப்போது கைவிட்டோமே தவிர்த்து, அந்த கோரிக்கைக்கான காரணங்கள் இன்னமும் அப்படியேத்தான் இருக்கின்றன”என்றார். 

அண்ணாவை கோழை, பயந்தாங்கொளி ஒரு சட்டத்தை பார்த்து தன் கொள்கையையே காற்றில் விட்டவர் என பழிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம் அந்த 1962ல். அத்தனை ஏன்??? இதை பாராட்டி தேச ஒற்றுமைக்கு தோள்கொடுத்த அண்ணாவை தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய காங்கிரசே கேலி பேசியது கொடுமை எனில், இரட்டை குழல் துப்பாக்கியில் ஒன்றான திராவிடர் கழகம் எள்ளி நகையாடியது அந்த “கண்ணீர் துளி பாய்ஸ்களை” பார்த்து. ஆனால் அண்ணா அவர்களோ தேச ஒற்றுமைக்காக சீனப்போருக்கு நிதி திரட்டி மத்திய அரசுக்கு தருவதில் மும்மரமானார்.

ஆக திமுகவின் தேசிய பார்வை என்பது விசாலமானது. இந்த கட்டுரைக்கு முன்னுரை மட்டுமே இது வரை எழுதியவை. இப்போது தான் கட்டுரையின் சாராம்சத்துக்கே வருகின்றேன்.

அண்ணா அவர்கள் மேற்படி “திராவிட நாடு” கொள்கையை கைவிட்டு சுமார் 56 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அண்ணா சொன்னது போல “திராவிட நாடு கோரிக்கைக்கான காரணிகள் இன்னமும் அப்படியே தான் உள்ளது என சொன்னாரே... இதோ ஆயிற்று 56 ஆண்டுகள். அதில் கொஞ்சமாவது மாறியுள்ளதா என்பதற்கான பதில் தான் இன்று 29.03.2018 மாலை 5.00 மணிக்கு மத்திய பாஜக அரசு உணர்த்தியுள்ளது.




நம் நாட்டின் உச்சபட்ச சட்ட எல்லை என்பது உச்சநீதிமன்றம் தான். ஆளானப்பட்ட ஜனாதிபதிக்கே பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதி கொண்டவர் இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஆவார். கடைக்கோடி இந்தியனுக்கும் கடைசி நம்பிக்கை என்பது உச்சநீதிமன்றமே என்னும் நிலை தான் இந்தியாவின் நிர்வாணமான உண்மை. தமிழ்நாட்டின் தென்பகுதி கடைக்கோடி மாநிலங்களான கர்நாடகாவும், தமிழ்நாடும் பல ஆண்டுகளாக இந்த காவிரி நீர் பிரச்சனையில் சண்டை போடுவதை நிறுத்தவே இல்லை. சமாதானம் செய்து வைக்க வேண்டிய மத்திய அரசோ, அப்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த இரண்டில் எந்த பகுதியில் இருந்து தமக்கு அதிக எம்.பிக்கள் வருவார்கள் என்பதையே “நியாய தராசாக” வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 1967ல் அண்ணா அவர்கள் போட்ட பிராந்திய அஸ்திவாரம் என்பது மிகப்பலம் என்பதால் இதோ இன்றைக்கு 2018 வரை கூட தேசிய கட்சிகள் இங்கே நுழையவோ அல்லது காலூன்றவோ இயலா நிலை. அப்படியே அவர்களுக்கு இங்கே ஒரு பிடிப்பு ஏற்படின் கூட ஏதாவது ஒரு பிராந்திய கட்சியின் முதுகு தான் தேவைப்படுகின்றது. திமுகவும், அதிமுகவும் மிக புத்திசாலித்தனமாக “உங்களை தூக்கி சுமக்கத்தயார் தமிழகத்தில். ஆனால் மத்தியில் எங்களுக்கு முதல் பந்தியில் உரிய மரியாதையுடன் தான் சாப்பாடு. அதிகாரத்தில் பங்கும் எங்களுக்கு கண்டிப்பாக உண்டு ” என சொல்லி சொல்லி தான் சுமந்தன எனில் அது பொய்யில்லை. அதிமுக மத்திய அமைச்சரவையில் எட்மண்ட், பாலாபழனூர் என தொடங்கி தம்பி துரையை பாராளுமன்ற துணை சபாநாயகர் என கொண்டு வந்தது வரை, அது போல திமுகவோ முரசொலி மாறன் தொடங்கி மத்தியில் பல கேபினட் அமைச்சர்கள், இணை, துணை அமைச்சர்கள் என முக்கிய துறைகளான வர்த்தகம், தொலை தொடர்பு, இராணுவம், மருத்துவம், ஜவுளி, உரம், நெடுஞ்சாலை, கப்பல், சுற்றுச்சூழல் என தொடாத துறைகளே இல்லை என்னும் அளவு அதிகார பகிர்வில் தன்னை இணைத்துக் கொண்டு மத்தியிலும் கூட்டாட்சியாக இருந்தது. கூட்டணி ஆட்சியாக இருந்தது. மாநிலத்தில் கூட மைனாரிட்டியாக திமுக இருந்த போது கூட காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்க சொன்னதே தவிர்த்து மாநில மந்திரிசபையில் உள்நுழைக்கவில்லை என்பதில் இருந்து ஒன்று விளங்கும். அதாவது மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி என்னும் அண்ணாவின் கோட்பாட்டை திமுக, அதிமுக ஆகியவை கடைசி வரை விடவில்லை. (நான் இங்கே திமுகவோடு அதிமுகவை சேர்த்து சேர்த்து இழுத்து வருகின்றேன் எனில் காரணம் உண்டு. அதிமுக என்பது இரண்டு சகாப்தங்கள் மட்டுமே. எம் ஜி ஆர் சகாப்தம், அடுத்து ஜெயலலிதா சகாப்தம். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அதிமுக என்பது உயிரோடு இருந்தது. அதற்கு பின்னர் இப்போது இருக்கும் அதிமுகவை நான் அதிமுகவாக நினைத்து இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை. ஏனனில் ஜெயா அவர்களுக்கோ அல்லது கலைஞருக்கோ மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை என்பது எப்போதும் இல்லை. இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப்பிழைப்பது என்பது முற்றிலும் வேறு என்பதை தயவு செய்து உணர வேண்டும் இதை வாசிக்கும் அன்பர்கள். எம் ஜி ஆர் அவர்கள் தான் ஆட்சியில் முதல்வராக இருந்த அந்த 13 ஆண்டுகளும் மத்திய அரசுகளுக்கு இணக்கமாக இருந்தார். முதலில் மொரார்ஜி தேசாய் முதல்இந்திரா, ராஜீவ் வரை இணக்கமாக இருந்தார். மொரார்ஜியே கூட எம் ஜி ஆர் ஆட்சியை கலைத்தால் கூட மத்திய அரசை தவிர்த்து விட்டு தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறும் அளவு அவருக்கு தைரியம் இருந்தது. அதே போலத்தான் திமுகவும் காங்கிரஸ் அல்லாமல், ஜனதா அல்லாமல் , பாஜக அல்லாமல் கூட தனித்து நின்று அதிமுகவை வீழ்த்தும் சக்தி பெற்றவராகவே இருந்தது. ஜெயா அவர்களும் இதே நிலை தான். ஆனால் ஜெயா அவர்களுக்கு பின்னர் இதோ இப்போது இருக்கும் எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள், தினகரன் கோஷ்டிகள் எல்லாம் மத்திய அரசை அண்டிப்பிழைக்கும் நிலை தான் என்பதே உண்மை. எனவே இந்த கோஷ்டிகளை நாம் அதிமுக என்னும் வட்டத்தின் உள்ளே சேர்க்கக்கூடாது.




ஆக அண்ணா இட்ட  பிராந்திய அடித்தளம் என்பது தமிழகத்தில் மிகப்பலமானது என்பதால் இங்கே பாஜகவோ அல்லது காங்கிரசோ தனித்து நின்று இந்த தமிழக பிராந்தியத்தை வெல்ல முடியாது என்னும் நிலையில் மத்திய அரசுகள் என்பது தமிழகத்துக்கு எப்போதும் அநீதிகளை மட்டுமே பரிசாக கொடுத்துக் கொண்டுள்ளன. ஆனால் கர்நாடகம் என்பது பலமுறை காங்கிரஸ் வெற்ற மாநிலம், பல முறை ஜனதா, ஒரு முறை பாஜக, மதச்சார்பு அற்ற ஜனதாதளம் (பிராந்தியமாக சுருங்கிய தேசிய கட்சி எனலாம்) என தேசிய கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. ஆகவே கர்நாடகத்தில் மத்தியல் ஆளும் அல்லது ஆண்ட ஜனதாவோ, காங்கிரசோ, பாஜகவோ அல்லது யாராக இருந்தாலும் அவர்கள் மாநில முதல்வராக வந்து அமர ஒரு வாய்ப்பு கண்டிக்காக அங்கே உண்டு. இன்னும் சுறுக்கமாக சொன்னால் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த மத்திய கட்சி அழகான துரோகம் செய்கின்றதோ அதற்கு அடுத்த முறை அங்கே முதல்வர் நாற்காலி நிச்சயம் என்னும் நிலை.



இதற்காகத்தான் கலைஞர் இந்த காவிரி விஷயத்தை இனியும் மத்திய அரசின் கட்டபஞ்சாயத்து சரி வ்ராது என முடிவெடுத்து தான் அப்போது இந்தியாவை பிரதமார இருந்து பிரமாதமாக  ஆண்ட நல்ல நியாயமான மனிதர் சமூகநீதி காவலர் திரு. வி.பி.சிங் அவர்களிடம் பேசி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வழி வகுத்தார். அந்த காவிரி நடுவர் மன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை கொடுத்து அதை கர்நாடகம் உதாசீனப்படுத்தியது , பின்னர்  அதை கர்நாடகா எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது, பின்னர் காவிரி நடுவர் மன்றம் பல வித சட்ட போராட்டங்களை சந்தித்து தன் இறுதி தீர்ப்பை அளித்து, அதையும் கர்நாடகம் உதாசீனம் செய்தது,  பின்னர் கர்நாடகம் உச்சநீதி மன்றம் சென்று  அங்கே தீர்ப்பு வந்து அதையும் கர்நாடகம் அலட்சியம் செய்தது,  பின்னரும் கர்நாடகம் அதை மதிக்காமல் உச்சநீதிமன்றம் சென்றது, இதனிடையே தீர்ப்பு அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று அதை பெற்றதாக “பொன்னியின் செல்வி” பட்டம் வாங்கி திருப்தி பட்டுக் கொண்டது, அரசிதழில் வந்து விட்டாலே காவிரியில் தண்ணீர் வந்து விட்டது என நினைத்து தமிழக மக்கள் ஏமாந்தது, என எல்லாவித கூத்துகளும் நடந்து முடிந்து இதோ கால் நூற்றாண்டு காலமாக நடந்த சட்ட போராட்டம் வாயிலாக இன்றைக்கு சுமார் 42 நாட்கள் முன்பாக முதலில் வந்த தீர்ப்பில் இருந்து கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக கடைசியாக 172 டி எம் சி தண்ணீர் தான் தமிழகத்துக்கும் என இறுதி தீர்ப்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதில் முத்தாய்ப்பாக இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து ஆறு வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டும், இன்னும் அதி முத்தாய்ப்பாக இது சம்பந்தமாக இனி யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது, கூடாது என்றும் முடித்து விட்டது. உடனே கர்நாடகம் அந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழகம் தான் வஞ்சிக்கப்பட்டதை குமுறியும் தீர்த்து விட்டன. காரணம் தமிழகம் முதலில் கோரிய 400 டி.எம் சி என்பது காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 210 டி எம் சியாகி அது இறுதி தீர்ப்பில் இன்னும் குறைந்து, கடைசியாக உச்சநீதிமன்றத்தில் 172 டி எம் சி என ஆகி விட்டது. அதையாவது கொடுங்கள் என்னும் நிலைக்கு தமிழகம் வந்து விட்டதாகவே தெரிகின்றது. ஆனால் அதையும் தர தயார் நிலையில் கர்நாடகா இல்லை என்பதும் அவர்களது பேச்சின் வழி தெரிகின்றது.




இந்த நிலையில் தான் இந்த ஆறு வாரகாலத்தில் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய பாஜக என்பது ஒரு சின்ன துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. ஆனால் தொலைக்காட்சி விவாதம், பொது பேட்டிகளில் இதோ கெடு முடிவடையும் 29.03.2018 மாலை 4.50 வரை கூட “இன்னும் நேரமுள்ளது. அதற்குள் ஏன் நாம் அவசரப்பட வேண்டும்” என்கிற தொணியில்  அதிமுகவினரும், பாஜகவினரும் பேசுவது என்பது கொடுமை. அதே போல மாலை 5 மணி ஆகியும் இது வ்ரை இப்போது இரவு 11 மணி ஆகியும் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.  ஆனால் இதற்கான சலசலப்புகள் கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் ஆரம்பித்து விட்டன.

இதனிடையே மத்தியல் கூட்டணியாக இருந்த சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து வேண்டி பாராளுமன்றத்தை முடக்க, அதே நேரம் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வர, யோசித்தது பாஜக. பாராளுமன்றம் நடந்தால் தானே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்கள் என்னும் நிலைப்பாட்டை எடுத்து அதிமுகவின் 37 எம் பிக்களை கொண்டு தினமும் ரகளை செய்து பாராளுமன்றத்தை முடங்கியது. அதற்கு அதிமுகவினர் சொன்ன காரணம் தான் அழகான அசிங்கம். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டுமாமாம். ஆனால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்களாம். காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வராத மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என வரிந்து கட்டிக் கொண்டு, சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டியது தானே? அதற்கு காரணம் சொல்கின்றார்கள் இப்போதைய அதிமுக என்னும் போர்வையில் இருக்கும் சுரண்டிகள்.... எங்கள் அம்மா அவர்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என  மோடிக்குகடிதம் எழுதினார் . அதனால் அதன் காரணமாக சந்திரபாபு நாயுடு கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க இயலாது. ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தை  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முடக்குவோம், என பாஜக சொல்லிக்கொடுத்ததை கிளிப்பிள்ளை போல சொல்லி வருகின்றன. இதே ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜி எஸ் டி போன்றவைகளில் ஜெயா அவ்ர்கள் மத்திய அரசுக்கு எதிராக எடுத்த அதே நிலைப்பாட்டை தான் இவர்கள் அதாவது எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் எடுத்தனவா? இப்போது மட்டும் என்ன ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்த்து கூடாது என ஜெயா அம்மையார் சொன்னதை பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்? கடைசி நேரம் வரை நீட் தேர்வு வராது என மத்திய அரசு  சொன்னதை அந்த தேர்வு வரும் என தெரிந்தும் நம்புவது போல நம்பி அனிதா  என்னும் பெண்ணை கொன்றவர்கள் தான் இந்த எடப்பாடி, பன்னீர் கோஷ்டிகள் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? சரி அப்படியே ஜெயா அம்மையார் பேச்சை கேட்பவர்கள் என வைத்துக் கொண்டாலும், காவிரி மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தாக மத்திய அரசை சந்திரபாபு நாயுடுவோடு சேர்ந்து கலைத்து விட்டு, அடுத்து வரும் மத்திய அரசு அமையும் போது அதிமுக போர்வை கோஷ்டிகள் ஒரு வேளை வெற்றி பெற்று எம்.பிக்கள் வைத்திருந்தால் அப்போது பாராளுமன்றத்தை முடக்கி எங்கள் அம்மா சொன்னாங்க. அதனால ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க கூடாது என போராட வேண்டியது தானே?





அல்லது திமுகவின் செயல்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் சொன்னார்களே? அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வோம். அப்போது தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என  சொன்னாரே? அப்போது என்ன சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார்? “அவர்களிடம் ஒரு லோக் சபா எம்.பி யும் இல்லை. எங்களிடம் 37 பேர் இருக்காங்க. மேலும் கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி பதவியை பறிக்க ஸ்டாலின் சதி செய்கின்றார்” என அபாண்டமாக சொன்னாரே...  அடுத்து சில அதிமுக போர்வையாளர்கள்,  தமிழ் தேசியவாதிகள் அல்லது நடுநிலை போர்வை போர்த்திய ஒருதலைபட்சவாதிகள் “எம் பிக்கள் ராஜினாமா செய்தால் என்ன பெரியதாக நடந்து விடும். அதனால ராஜினாமா தேவையில்லை” என்கிறார்களே.  இன்னும் லோக்சபா எம்.பிக்களுக்கு ஒரு வருடம் தான் பதவிக்காலம் உள்ளது. இத்தனைக்கும் அதிமுகவின் இந்த 37 பேரும் மத்திய அரசில் அமைச்சர்களாக இல்லை. அதனால் தமிழக நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் அவர்களால் பிரயோஜனம் கிடையாது. ஆனால் அவர்கள் உள் நாட்டு வாழ்வாதார பிரச்சனையான காவிரிக்காக ராஜினாமா செய்ய தேவையில்லையாம். ஆனால் இதே வாய்கள் தான் 2009ல் திமுக எம் பிக்கள்  மத்திய அமைச்சரவையில் இருந்து தமிழக இரயில்வே, தொலைதொடர்பு, நெடுஞ்சாலை என எல்லா துறைகளிலும் இது வரை தமிழகம் செய்யாத சாதனைகளை தமிழக உட்கட்டமைப்புகளை நடத்திக் கொண்டு இருக்கும் போது இலங்கை என்னும் வெளி நாட்டு விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கோஷமிட்டது. அது ஏன்? வெளி நாட்டு விவகார விஷயத்தில் திமுக எம் பிக்கள் ராஜினாமா செய்தால் அது தீர்ந்து விடும் என நம்பிய, பேசிய வாய்கள் இப்போது தமிழக பிரச்சனை காவிரிக்காக இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் ராஜினாமா செய்யவது பிரயோசஜனம் இல்லை என்பது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. கனிமொழியை பழிவாங்கத்தான் ஸ்டாலின் அப்படி சொன்னார் என சொல்லும் ஜெயகுமார் அவர்கள் அரசியல் தெரிந்து பேசுகின்றாரா என்பது தான் புரியவில்லை. இதோ கையில் திமுக 89 எம்.எல்.ஏக்கள் வைத்திருக்கும் போது மீண்டும் கனிமொழியை எம்.பி ஆக்க இயலாதா திரு. ஸ்டாலின் அவர்களால்? சென்ற முறை மூன்று, நான்கு வாக்குகள் குறைவாக இருந்த போதே இதே ஸ்டாலின் அவர்கள் பாமக முதல்  அப்போது கூட்டணியில் இல்லாத புதிய தமிழகம், ம.ம.க என போய் நேரில் வாக்கு கேட்டு எம்.பி ஆக்கவில்லையா? இன்றைக்கு அதே கனிமொழி அவர்களால் திமுகவுக்கு ராஜ்யசபாவில் பெரும் புகழ் கிடைத்துக் கொண்டிருக்கும் போது 89 எம் எல் ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்குமா திமுக? அரசியல் தெரியாத அரை வேக்காடுகள் எல்லாம் பேசுவதெல்லாம் காலக் கொடுமை!



அடுத்து பாஜக... மனநலமில்லா தமிழக பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம்  வைக்கும் சொத்தை வாதங்கள் தான் முகம் சுழிக்கவைக்கும் கொடூரம். “ திமுகவும், காங்கிரசும் கூட்டணி தானே. அங்கே கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவிடம், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும், அவர் புதல்வர் ராகுலிடம் சென்று பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டியது தானே?”. அதாவது திமுகவை மடக்கி விட்டார்களாம். அதாவது  இன்னமும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் என தமிழக மனநலமில்லா பாஜகவினர் அப்டேட் ஆகவில்லை என்பது ஒரு பக்கம்.  அடுத்து அவர்கள் சொல்வது திமுகவும் காங்கிரசும் கூட்டணி என்னும் பிணைப்பில் இருப்பதால் திமுக சென்று அவர்களிடம் சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்ல வேண்டுமாம்.  அடடே... என்ன ஒரு வாதம்... காவிரி நடுவர் மன்றம் அமைத்த போது வி பி சிங் ஆட்சி, பின்னர் சந்திரசேகர், வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன், மோடி என பல ஆட்சி கடந்து பல நீதிமன்றம் பார்த்து இப்போது உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு தந்து விட்டது. உச்சநீதி மன்றத்தை விட, அதை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய மத்திய அரசை விட  ராகுல் அல்லது சோனியா அம்மையார்  தான் சக்தி மிகுந்தவர்கள் என  கூறுகின்றார்களா? சரி... புரியாதவர்களுக்கு புரியும் படி சொல்கிறேன்... அதாவது திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி என்கிற பிணைப்பு என்ற ஒன்றை வைத்து தானே அப்படி ஒரு சொத்தை வாதம் வைக்கின்றார்கள். அதே போல பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தமிழகம் சார்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர்கள் தானே. போகட்டும் ஹெச்.ராஜா அவர்களோ பாவம் அவர் வேண்டாம் அவரோ மனோநிலை பிரச்சனை காரணமாக நீதிமன்ற கேள்வியில் சிக்குண்டுள்ளார், அவரை தவிர்த்து  ராகவன், நாராயணன் போன்றவர்கள் தங்களை தமிழர்களாக ஒப்புக்கொண்டதில்லை அல்லது அதற்காக வெட்கப்படுவார்கள் ஆகவே தமிழிசை, பொன்னார் போன்றவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழக நலன் கருதி மோடியிடமோ அல்லது அங்கே முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவிடமோ சொல்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னால் என்ன? மாட்டார்கள். ஏனனில் தமிழகம் அல்லது தமிழர்கள் நலன் அவர்களுக்கு முக்கியம் கிடையாது என்பதே உண்மை. இந்த லெட்சனத்தில் தமிழகத்தில் தாமரை மலரும் என எந்த வாய் வைத்து சொல்கின்றார்கள் என்பது தான் புரியவில்லை.




 தற்போது கர்நாடகாவில் இரண்டு நாட்கள் முன்பாக தேர்தல் தேதி அறிவித்தாகிவிட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கின்றது. ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் மனநலம் குன்றிய பாஜகவினர்  காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டிமா, காவிரி மேற்பார்வை குழுன்னு ஏதாவது வச்சுகிட்டு இருக்க கூடாதா... பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா” என கேலி பேசுகின்றன. இல்லை... எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியமே தான் வேண்டும் என்பதில் நாங்கள் ஏன் குறியாக இருக்கின்றோம்? ஒரே விஷயம்... அதை இப்படி பார்க்காதீர்கள்.. எதிர்ப்பக்கம் என்ன நடக்கின்றது என பாருங்கள். கர்நாடகாவிடம் சென்று “ஏன் காவிரி மேற்பார்வை குழு போதும் என்கிறீர்கள்? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா? ஏன் காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க திராணி இருக்கின்றதா அவ்ர்களிடம். ஏனனில் காவிரி மேலாண்மை வாரியம் என்பது கர்நாடகத்தில் இருக்கும் நான்கு அணைகள், தமிழகத்தில் இருக்கும் நான்கு அணைகள் உள்ளிட்டவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் சக்தி கொண்டது. அணைகள் பாதுகாபு என்பதை தவிர்த்து அந்த அணைகள் மீது அந்த மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது. அது போல உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அந்த குறைந்த பட்ச அந்த 172 டி எம் சியாவது கண்டிப்பாக தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதன் தலைவராக தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி, கேரளா ஆகியவைகள் தவிர்த்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இருப்பார். நான்கு பக்கமும் இருந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி மேற்ப்பார்வை குழு என்பது ஒரு பல் இல்லாத குழு. “கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. அதனால் தரவில்லை” என சுலபமாக கைவிரித்து போக இயலும்.



ஆக முடிவென்பது..... கர்நாடகம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க தயாரில்லை. சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாத காரணத்தால் அந்த அரசை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கலைக்க அதிகாரம் உள்ளதா எனில் கண்டிப்பாக உண்டு. ஆனால் செய்வார்களா எனில் மத்தியில் ஆள்பவர்கள் மாட்டார்கள். அடடே அப்படி எனில் உச்சநீதிமன்ற தீர்ப்பு???? அது தமிழகத்துக்கு மட்டும் தான்... எல்லா சட்டதிட்டங்களும் தமிழகத்துக்கு மட்டும் தான். நீட் தேர்வு பற்றி ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தால் அதை உடனடியாக இந்த ஆண்டு முதலே செயல்படுத்துவோம், எத்தனை அனிதாக்கள் மரித்தால் என்ன? தமிழகத்துக்கு ஒரு கேடு விளைவிக்கின்ரதா... உடனே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்து... ஜல்லிக்கட்டு பிரச்சனையா.... விலங்கு நலவாரியம் ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? அல்லது அமரிக்க அமைப்பு பீட்டா போன்றவை  ஏதாவது வழக்கு தொடர்ந்ததா? தீர்ப்பு வந்ததா? உடனே அமல்படுத்து... அது தமிழகமே பற்றி எரிந்தால் கூட பரவாயில்லை. உடனே அமல் படுத்து. தமிழகம் மத்திய அரசிடம் நீட் தேர்வு வேண்டாம் என சட்டசபையில் இரண்டு தீர்மானம் போட்டதா? அதை உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி புட்டத்தின் கீழே முட்டுக்கொடுத்துக்கொள். தமிழக சட்டசபை தீர்மானத்தை அமல் படுத்தாதே. ஆனால் கர்நாடகா உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தவில்லையா? பரவாயில்லை விடு. அங்கிருந்து நமக்கு எம்.பி கிடைப்பார்கள். முதல்வர் நாற்காலி கிடைக்கும், அதனால் கண்டுக்காதே போய் கொண்டே இரு... இது தானா மத்திய அரசின் நிலைப்பாடு....

இப்போது இந்த கட்டுரையின் ஆரம்ப கட்டத்துக்கு வருகின்றேன்... அண்ணா சொன்னாரே... திராவிட நாடு கோரிக்கையை கைவிடுகின்றோம். ஆனால் அதற்கான காரணங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றது என்றாரே அண்ணா. அப்போது கை கொட்டி சிரித்தவர்கள் இப்போது என்ன செய்ய போகின்றார்கள்? 56 ஆண்டுகள் முன்பாக 
 அண்ணா சொன்ன அந்த காரணிகள் இப்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளன என்பதைத்தானே இன்று மாலை 5 மணி (29.03.1018) வரை தமிழகத்துக்கு மறுக்கப்பட்ட நீதி உணர்த்துகின்றது.
  தமிழகத்தில் காவிரி டெல்டா முழுவதும் காவிரி தண்ணீர் கொடுத்தால் அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுவான். டெல்டாவை  மத்திய அரசு பெட்ரோல் மண்டலமாக ஆக்கி ஒரு மாதம் ஆகி விட்டது. இப்போது காவிரி கொடுத்தால் டெல்டா விவசாயி மீண்டும் விவசாயம் பார்க்க ஆரம்பித்து விட்டால் நிலத்தை விற்க மாட்டான். அப்படியே அரசு தன் இரும்புக்கரம் கொண்டு அவன் நிலத்தை கையகப்படுத்தினாலும் உயிர் கொடுத்து போராடுவான். ஆகவே இப்போதைக்கு தண்ணீர் கொடுத்து அவனை மீண்டும் விவசாயி ஆக்காதே. இதனிடையே  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தி வரண்ட பாலைவனம் ஆக்கி விட்டால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் அங்கே விவசாயிகள் செயலிழந்து விடுவார்கள். அப்போது தாமாக முன் வந்து அந்த பாலைவனத்தை விற்று விடுவார்கள். எனவே இப்போதைக்கு காவிரியில் தண்ணீர் விடாதே என நினைக்கின்றது மத்திய பாஜக அரசு என பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகின்றேன். தமிழகத்தை அழித்து மற்ற இந்தியாவை வளமாக்கித்தான் இந்திய ஒருமைப்பாட்டை காக்க வேண்டும் என்னும் நிலை எங்களுக்கு தேவையா? அல்லது அண்ணா சொன்னது போல அண்ணன் முரசொலி மாறன் சொன்னது போல “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?’ என நாங்கள் பழைய வழிக்கு திரும்ப வேண்டுமா? இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பது மத்திய அரசா? அல்லது தமிழர்களா? தேச துரோகிகள் யார்? 

நீங்கள் கேட்கும் திராவிடத்தில் கர்நாடகமும் தானே வருகின்றது? பின் அவ்ர்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தருவார்கள்? என நீங்கள் கேட்கலாம். அப்படி எங்களுக்கு திராவிட நாடு கிட்டின் அப்போது அது  எங்கள் நாட்டின் பிரச்சனை. நாங்கள் எப்படி தீர்த்துக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். ஒத்துவரவில்லை எனில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஒத்து வராத கோட்பாடான தமிழ் தேசியம் கூட கையிலெடுக்கலாம்? யார் கண்டது? 1949 திமுக ஆரம்பித்தது முதல் 1962 வரை திராவிட நாடு என்னும் கோட்பாட்டில் இருந்த திமுக 1962 அக்டோபர் மாதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது நாட்டின் நலனுக்காகத்தானே? இப்போது அதே நாட்டின் நலம் கருதி எந்த முடிவு வேண்டுமாகின் எடுத்தால் என்ன செய்வீர்கள்?  சரி, நீங்கள் கேட்டபடி தமிழ் தேசியம் அடைந்தால் அப்போது இந்திய தேசியத்தில் இருக்கும், கர்நாடகாவில் குடகு மலையில் தொடங்கும் காவிரி தமிழகத்துக்கு கிடைத்து விடுமா என கேட்பீர்கள். அது மிகச்சுலபம். அப்போது நதி நீர் பிரிப்பு என்பது அதன் வழக்கு என்பது இதோ இன்று போல பல் இல்லாத இந்திய உச்ச நீதிமன்றத்திலா நடக்கும்? சர்வதேச நீதிமன்றத்தில் அல்லவா நடக்கும். சர்வதேச சட்டப்படி ஒரு ஆறு எங்கே ஆரம்பிக்கின்றதோ அவர்களுக்கு சொந்தமில்லை. அது முடியும் நாடு தான் அதற்கு சொந்தம். பிரம்மபுத்திரா கதை தெரியுமா உங்களுக்கு? சீனா, நேப்பாளம், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் என 5 நாடுகளில் பாய்கின்றது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை, வங்கதேசமும், பாகிஸ்தானும் சண்டை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சண்டை.... இதல்லாம் நடந்தும் அந்த நதி நீர் பங்கீட்டில் இது வ்ரை பிரச்சனை என்பது இருந்தது உண்டா? கிடையாது. ஏனனில் அது  “சர்வதேச பிரம்பபுத்திரா மேலாண்மை வாரியம்” கவனிக்கின்றது? கங்கை எத்தனை நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பாய்கின்றது என்கிற விபரம் வேண்டுமா? அதை எல்லாம் விடுங்கள். இந்த கட்டுரையின் ஒரே கேள்வி.... தமிழகத்தை அழித்து தான் இந்திய தேசியம் வாழ வேண்டுமா? தமிழன் என்பின் உங்களுக்கு சொம்பையா? கிள்ளுக்கீரையா? தமிழகம் கொதித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் இல்லவே இல்லை. பசியும் பஞ்சமுமாக தமிழக டெல்டாவை ஆக்கி விட்டு, அதனை பெட்ரோல் மண்டலமாக மாற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளை மட்டும் சுகம் காண நாங்கள் இங்கே சாக வேண்டுமா?  கடைசியாக ஒரே கேள்வி......



ஆகவே இந்திய அரசால் அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா? அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா? என்பதே இந்த கட்டுரையின் ஒற்றை கேள்வி!