பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 25, 2007

நலிவடையும் தொழில்கள்!!!

பத்தாவது வரலாறு -புவியியல் கடைசி பரிச்சை எழுதி முடித்த அடுத்த நாளே ஒட்டு மொத்த மாயவரத்து அரும்பு மீசைகளும், அரை தாவணிகளும் மயூரா டைப்பிங் செண்டருக்கு தான் ஓடும். டைபிங் கத்துக்க ஆசை என்பதை விட எதிபால் ஈர்ப்புதான் பிரதான காரணமாக இருக்கும். மேலும் இத்தனை நாள் யூனிஃபார்ம் யூனிஃபார்ம்ன்னு இருந்த பசங்களுக்கு தன் பட்டு பாவாடையையோ, கலர் பேண்ட், ஜீன்ஸ்களையோ காட்ட இது நல்ல வாய்ப்பு. மயூரா இண்ஸ்ட்டிடியூட் வாத்தியார் ராமனாதனுக்கு வயிறு கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால் மெக்கானிக் பை ஓட்டுவது போல ஒரு பக்கமா உக்காந்துதான் டைப்புவார்.ஆனா நாம மட்டும் நேரா நிமிர்ந்து கூன் விழாம உக்காரனும் என்பதில் கண்டிப்பா இருப்பார். asdfgf ; lkjhj முதல் 1 வாரத்துக்கு ஓடும். அப்போ தடவி தடவி நாம் அடிப்பதை நம் சீனியர் தாவணிகள் ஒரு வித நக்கலை உதட்டில் வழிய விட்டு பார்க்கும் போது மானமே போகும். இப்படியாக ஒரு வழியா zyxwன்னு தலை கீழா அடிக்கும் போது கொஞ்சம் ஸ்பீடு வந்திருக்கும். ஏபிசிடி தலை கீழா சொல்ல தெரியுமான்னு வீட்டிலே வந்து பீத்திக்க தோணும். ஸ்பீடு வரும் வரை ரெமிங்டன் மிஷின் தான். ஏறி அதன் மேல உக்காந்து அடிக்கனும் அத்தனை கஷ்டமா இருக்கும். ஃபேசிட் மிஷின் சார் தருவதே ஒரு சடங்கு மாதிரி விஷேஷமா இருக்கும். காலை பேட்சில் ஒருத்தனுக்கு கொடுத்துட்டா அது தலைப்பு செய்தி மாதிரி இரவு பேட்ச் வரை டாக் ஆஃப் த இண்ஸ்ட்டிட்டூட்டா இருக்கும். புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்.

சைக்கிள் பாரிலே 4 டிம்மி பேப்பரை சுத்தி வச்சுகிட்டு டைப் கிளாஸ்க்கு போவதே அந்த காலை நேரத்தில் ஒரு வித சந்தோஷமா இருக்கும்.சத்தமில்லாமல் சில காதல்களும், பலத்த சத்தத்தோடு சில காதல்களும், காதலிக்க பொண்ணு கிடைக்காத வயித்தெரிச்சல் கோஷ்டிகள் காதலிப்பவர்களின் வீட்டுக்கு போட்டு கொடுக்கும் புண்ணிய வேலை செய்து கொண்டும், சும்மா கல கலன்னு இருக்கும் ஊரே!

ஆனால் இப்போ அதல்லாம் ஒன்னும் இல்லை. வெறிச்சோடி கிடக்கு அந்த இண்ட்டிடியூட். மயூராவின் பிரான்ச் எல்லாம் மூடியாச்சு. கேட்டா அந்த தொழிலே அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. கம்பியூட்டர் வகுப்புக்கு கூட்டம் கூட்டமா போறாங்க. வீட்டுக்கு வீடு கம்ப்பியூட்டர் வந்தாச்சு. பல பேர் டை கத்துக்காமயே 'ஒருவிரல்"கிருஷ்ணாராவாக ஸ்பீடில் கலக்குதுங்க. டைப் மிஷின் மாதிரி ஒரே ஃபோண்ட் இல்லை. எந்த டிசைன் வேணுமோ அதில கலக்குறாங்க. தமிழ் டைப் கத்துக்க தேவையே இல்லை. அதான் கலப்பை வச்சு உழுதுடுறாங்களே! ஆஹ இனி எதிர் காலத்தில் நான் டைப் மிஷினை மியூசியத்துல தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை!!!

அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்!! பிரஸ் உள்ளே நுழைந்தாலே அந்த பிர்ண்டிங் இங்கின் வாசனையும், தோசையில் நெய் தடவுவது போல இங்க்கை மிஷினில் தடவும் அழகும் ஆஹா சூப்பர். பிரஸ்ஸில் பிரதான பணியே அச்சு கோர்க்கும் வேலை தான்.குழியில் கிடக்கும் முழி, பொடி ஒழுகும் மூக்கின் நுனியில் வெள்ளெழுத்து கண்ணாடி, கூர்ந்து கவனிக்கும் போது வெற்றிலை காவி கலரில் 32 பல்லும் தெரிய தொழிலில் காட்டும் சிரத்தை.... அவர் தான் அச்சு கோர்ப்பவர். கண்ணை இடுக்கி இடுக்கி கவனித்து வேலை முடிந்து வெளியே வந்து ரோட்டில் போகும் அத்தனை பெரிய பஸ்ஸை கூட கண்னை இடுக்கி கொண்டே தான் பார்ப்பார். முதலாளி சம்பளம் குடுக்க லேட் ஆனால் ஒரு கொத்தாக எழுத்துகளை அள்ளி கோவணத்தில் முடிந்து கொண்டு ஈயம் பித்தளைக்கு போடும் வேலையோ, பக்கத்து பிரஸ்ஸில் "பா" "லூ" கடனா குடுன்னு சொல்லும் வேலையோ இனி இல்லை! முதல்ல எல்லாம் பிரிண்டிங்க்கு கொடுத்துட்டு ப்ஃரூப் பார்க்க ஒரு தடவை, எழுத்து டிசைன் மாத்த ஒரு தடவை, பத்திரிக்கையோ நோட்டீசோ அடிச்சு வாங்கங்காட்டிலும் தாவு தீர்ந்துடும். ஆனா இப்ப அந்த பிரஸ் எல்லாம் ஆஃப்செட் பிரஸ்ஸா மாறிடுச்சு. எல்லாம் படாபட் தான். இப்பல்லாம் கிராமத்தில் மட்டுமே அது போல பிரஸ் இருக்கு. கட்சி நோட்டீசோ, டூரிங் தியேட்டர் போஸ்டரோ அடிச்சுகிட்டு மத்த நேரத்துல ஈ ஓடிகிட்டு இருக்கு. இனி எத்தனை காலத்துக்கு இருக்குமோ! நம் சந்ததியினருக்கு இப்படியெல்லாம் பிரஸ் இருந்துச்சுன்னு தெரியாமலே போக நேரிடும்.

அடுத்து ரெக்கார்டு பிளேயர், அந்த கருப்பு தோசை ரெக்கார்டு, அது தயாரிக்கும் HMV கம்பனி, அந்த முள் மாட்டிகிட்டு "அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான்" என வினாயகர் கதருவது எல்லாம் இப்போ ஐப்போட் உள்ளே அடங்கி நம்ம சட்டை பாக்கெட்டில் உக்காந்துகிச்சு!!

அதே போல பிலிம் ரோல்! இன்னும் அதிகமா போனா 10 வருஷம் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை! இது போல காலப்போக்கில் அழிந்து வரும் வேற என்னன்ன தொழில் இருக்குதோ! விஞ்ஞானத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி சரியா தப்பான்னே தெரியலையே!

10 comments:

  1. //
    அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்
    //

    அதுக்கு பேரு letter press

    ப்ரிண்டிங் ஒரு அருமையான் ஃபீல்ட்.

    மத்தபடி டைப்பிங், ரெக்கார்ட் எல்லாம் எப்பவோ போயிடிச்சு.

    நல்ல பதிவு

    ReplyDelete
  2. நல்ல அலசல் தொல்ஸ்

    தட்டச்சு அடிக்க போகும் போது பல கலாட்டாக்கள் நடந்து இருக்கு. அது ஒரு தனி கதை. அப்ப 9 வது தான் நான் :)

    வீட்டுக்கு அருகில் தான் தட்டச்சு நிலையம். இந்த பக்கம் பிரஸ்... அதில் பேப்பர் வச்சு வச்சு எடுப்பதை பல தடவை ரசித்து இருக்கேன்.

    ReplyDelete
  3. //புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்//

    உங்க எழுத்துல ஒரு நல்ல காமெடி இருக்கு..


    நானும் ஒரு காலத்துல காத்துல டைப் அடிச்சிக்கிட்டே இருந்திருக்கேன்..

    அன்புடன்

    சீமாச்சு

    ReplyDelete
  4. தலைவா..துறை சார்ந்த பதிவா? ;)

    இந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் எல்லாத்தையும் இப்ப டிடிபி, பிரவுசிங் செண்டர்னு மாத்திடாங்க தல..சும்மா நாலு டைப் ரைட்டிங் மிஷினை வச்சு ஓட்டிட்டிருக்காங்க...

    நானும்கூட டைப் ரைட்டிங் கத்துக்க போய் அந்த வாத்தியார்ர் கூட சண்டை போட்டு ரெண்டு வாரத்துல நின்னுட்டேன் :))

    எழுத்து கோர்த்து அச்சடிக்கறதெல்லாம் தொலைஞ்சு போய் பல நாட்கள் ஆயிடுச்சு...இப்பல்லாம் டிஜிட்டல் வந்ததில இருந்து மொத்தமாவே பிரிண்டிங் பிரஸ் எல்லாம் மாறிடுச்சு..

    ReplyDelete
  5. அண்ணாத்தே மயூராவிலயா? அப்ப டைப் அடிக்கும்போது நடந்த சம்பவங்கள சொல்லாம்ல
    உதாரணத்துக்கு டைப் அடிச்சுட்டு அப்புறம் கடைத்தெரு சுத்துனது,எக்ஸாம் எழுதுனது இப்படி பல விஷயங்கள் இருக்கே..! ( நான் வேற எதப்பத்தியும் கேட்கலை..!?!)

    ReplyDelete
  6. டுபுக்கு போட்ட டைப்பிங் பதிவு படிச்சீங்களா? செம காமெடியா இருக்கும். அதில் இந்த துறை சார்ந்த என் பின்னூட்டம் இருக்கு. பார்த்துக்குங்க.

    ReplyDelete
  7. டைப் கம்ப்யூட்டரின் வரவாலும், ரெக்கார்டு, கேசட், CD எல்லாம் MP3 வந்ததாலும் நசிந்துவிட்டது.

    ஆனால் பிரின்டிங் தொழில் கம்ப்யூடர் வரவால் மேண்மையடைந்திருக்கிறது. ஆச்சுக் கோர்த்தல் இல்லை. DTP யில் வித்தை காட்டுகிறார்கள். பிரின்டிங்கிலும் லேட்டஸ்ட் மெசின் மூலம் தரமாகவும் விரைவாகவும் டெலிவெரி கிடைக்கிறது.

    லெட்டர் பிரஸ் வைத்திருந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஆப்செட் மெசின் நிறுவியுள்ளனர். மற்றவர்கள் ஸ்கிரின் பிரின்டிங்-ல் இறங்கி விட்டார்கள். லெட்டர் ஹெட், விசிட்டிங் கார்டு மற்றும் அழைப்பிதழ்கள் எல்லாம் ஸ்கிரினில்தான் தயராகிறது. அதே பெயின்ட் வாசம், கட்டிங் பேப்பர், கலர் டிரஸ் என்று எதுவும் மாறவில்லை.

    தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் எல்லாம் காட்டியிருந்தார்

    ReplyDelete
  8. நல்ல பதிவு...


    ஹிம் விஜய் டைப்ரைட்டிங் இண்ஸ்டியூட் ஞாபகம் வர வைச்சிட்டிங்க... :)

    ReplyDelete
  9. நல்ல பதிவு தல :)

    \\அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்!! \\

    மங்களூர் சிவா சொன்னாது போல பிரிண்டிங்கில் அது ஒருவகை அம்புட்டு தான். பிரிண்டிங்கில் பலவகைள் உள்ளது.

    படிக்கும் போது நானும் எழுத்து எல்லாம் கோர்த்து இருக்கேன். அது ஒரு தனி பாடமாகவே இருந்திருக்கு.

    டைப்பிங் எல்லாம் நமக்கு 1 மாசம் தான் அப்புறம் தூங்கத்தை கொடுத்துக்க விரும்பல...வுட்டுட்டேன் ;)

    ReplyDelete
  10. மதுரையிலே மேல ஆவணிமூலவீதி மஹாகணபதி டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட், அது பத்தித் தான் ஏதோ எழுதி இருக்கீங்க, டைப்பிங் பத்தி, படிக்கப் போறதில்லைனு வச்சுட்டேன், கண்ணிலே தண்ணி வருதா, படிச்சா!!!!! :P

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))