நான் என்னத்த சொல்ல.எல்லாரும் சொல்லி கிழிச்சு போட்டாச்சு. ஆனா கொஞ்சம் கூட(பரிசில் தவிர) அதையெல்லாம் படிக்காம போய் பார்த்தேன். ஆயிரத்தில் ஒருத்தன் பார்த்தேன் - மாயவரத்தில் ஆயிரத்தில் ஒருத்தன் பார்த்தேன் - இந்த இரண்டுக்கும் வித்யாசம் உண்டு. அதை பின்னே சொல்கிறேன். கதைக்கு வருவோம்.
சோழ பரம்பரையின் கடைசி வாரிசை 800 வருஷம் முன்ன வியட்நாம் அருகே ஒரு தீவிலே கொண்டு போய் வச்சிடுறாங்க. அவங்க போகும் போது உலக வழக்கப்படி பாண்டிய குல சாமி சிலையையும் கொண்டு போய் மறைச்சு வச்சிடுறாங்க. சோழனின் கடைசி வாரிசின் முதல் வாரிசு பார்த்திபன் 30 வயசு வாலிபன் படத்திலே, ஆனா அவங்க ராஜகுருவுக்கு 800 வயசு மேக்கப். படத்தின் முதல் சறுக்கல் அங்க ஆரம்பிச்சு படம் முடியும் வரை பரமபதம் மாதிரி சறுக்கல் விளையாட்டையும் ஏணிப்படி விளையாட்டையும் இயக்குனர் ஆடிகிட்டே இருக்கார். விடுங்க கதைக்கு வருவோம்.அந்த மறைந்து வாழும் சோழனை அவனுடைய சோழ தேசத்துக்கு அழைத்து போக ஒரு தூதுவன் வருவான் என அவனுடைய மூதாதையர் எழுதி வைத்த ஓவியம் சொல்கிறது.
இப்போ படத்தின் முதல் பாகத்துக்கு வருவோம். பிரதாப் ஒரு தொல்லியல் நிபுனர். சோழரின் கடைசி வாரிசை தேடி கிளம்பரார்.அவரை காக்கா தூக்கிட்டு போயிடுது. மத்திய கேபினட் அமைச்சர் வீரபாண்டியன் (பெயரை கவனிக்க வீர பாண்டியன்) ரீமாசென் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அவரை தேட சொல்கிறார். அவர் கூட அவரது மகள் ஆண்ட்ரியா - (அவரும் தொல்லியல் நிபுனர் தான்) கிளம்பி ஒரு கப்பலில் போக அவங்க பொருட்களை எடுத்து போகும் சுமை தூக்கும் தொழிலாளர் குழு மேஸ்த்திரியாக பருத்திவீரன் கார்த்தியும் இன்ன பிறரும். பையில் காண்டம் வைத்திருப்பதாக சொல்லும் சராசரி சுமை தூக்கும் கார்த்தி. டைட்டானிக் கப்பல் கிளம்புவது போல காட்சியமைப்பு துவக்கம். எம்ஜியார் பச்சை குத்தின கார்த்தி கையில் பீரோடும் கண்ணில் போதையோடும் வாயிலே வண்டை வண்டையான கெட்ட வார்த்தைகளோடும் பயணம் துவங்குகிறது. "அதோ அந்த பறவை போல" ரீமிக்ஸ்ல தியேட்டர் கிழிகிறது. இன்னும் எம்ஜியாரின் மாஸ் குறையவே இல்லைப்பா.
வியட்னாம் போய் சேர்ந்தாச்சு.அங்கிருந்து ஒரு தீவுக்கு போயாகனும். அங்க இருந்து சோழனை பார்க்கும் வரை ஏழு சோதனைகள் ஆரம்பம். முதலில் கடலில் கிராபிக்ஸ் பூச்சிகள்(?) அப்பத்திலிருந்து நமக்கும் சோதனை ஆரம்பிக்குது. (சுகமான சோதனைங்க). ஆரம்பம் முதலே கார்த்திக்கு என்ன தான் வேலை, எல்லா ஹீரோயிசத்தையும் ரீமாசென் தானே செஞ்சு கிட்டு இருக்காங்கன்னு நாம் கேட்பதை போலவே செல்வராகவனின் உதவி இயக்குனர்களும் நச்சரித்திருப்பாங்க போல இருக்கு. திடீர்னு ட்விஸ்ட் கதையிலே. அதாவது ரீமாசென், அவர் கூட வரும் துப்பாக்கி படைகள் எல்லாம் பாண்டிய தேசத்தவர்கள். கார்த்தி சோழ தேசம். கார்த்தி தான் உண்மையான சோழ தூதுவன். ரீமா & குரூப் அந்த சிலையை தூக்க வந்தவர்கள். பின்னே நடக்கும் போரில் பார்த்திபனின் குழந்தையை கார்த்தி காப்பாத்தி .... சோழனின் பயணம் தொடரும்ன்னு போட்டு முடிக்கிறாங்க.
******************************
***** இப்ப பார்த்திப சோழனை பத்தி சொல்லியாகனும். பொன்னியின் செல்வன் படித்த போது சோழர்கள் மீது இருந்த காதல் உடையார் படிக்கும் போது கொஞ்சம் குறைந்து இந்த படம் பார்த்து முடிக்கும் போது ஒரு மாதிரியா சோழர்கள் காட்டுமிராண்டியா இருக்காங்களேன்னு ஒரு எண்ணம் தான் வருது. ஆனா சும்மா சொல்ல கூடாது அந்த காலத்து ராஜாக்கள் எல்லாம் திவாரி மாதிரி ஜாலியாத்தான் இருந்திருக்காங்கப்பா. பார்த்திபன் ரோல்ல முதல்ல தனுஷை தான் நடிக்க வைக்க இருந்தாங்கலாம். கடவுள் இருக்காரு கொமாரு.
******* ரீமாசென் - பாவம் இந்த புள்ளைக்கு ஒரு டவுசர் சட்டை மட்டும் காஸ்ட்டியூமா கொடுத்து ரெண்டு டுப்பாக்கியும் குடுத்து கண்ட இடத்தில் சுடுன்னு சொல்லிட்டார் டைரக்டர். அது கார்த்தியின் கண்ட இடத்திலே "குறி" வைக்க ஆரம்பிச்சதிலே இருந்து படம் முழுக்க சுட்டு கிட்டே இருக்குது. ஆயிரத்தில் ஒருத்தி???
******* ஆண்ட்ரியா - நல்லா தான் இருக்குது.
******* கார்த்தி - நல்ல வேஷ பொருத்தம். கொடுத்த மூட்டையை நல்லா தூக்கியிருக்கார். இன்னும் கொஞ்சம் சுமக்க சொல்லியிருக்கலாமோ!
*******செல்வராகவன் - "ஆஃப்" அடிச்சுட்டு மொட்டை மாடியிலே படுத்து கிட்டு தான் கண்ட கற்பனை கதையை அருமையா விஷூவலா ஆக்கி தயாரிப்பாளருக்கு "ஆப்பு" அடித்திருக்கிறார். தியாகி தயாரிப்பாளர் வாழ்க. நேரா கமல் வீட்டுக்கு மிச்ச மீதி பண மூட்டையை எடுத்து கிட்டு போங்க. அவரும் மருதநாயகம் எடுப்பார்.
******** எடிடிங் : ஹேராம் படம் எங்க ஊர்ல முதல் நாள் இரவு காட்சி பார்த்தேன். முதல் காட்சி பார்த்தவங்க கிட்டே கேட்ட போது "அய்யோ நாலு மணி நேரம் படம் ஓடுது. உட்கார முடியலை. சில காட்சிகளை தேவையே இல்லை" என்கிற ரேஞ்சில் பேசிகிட்டு இருந்தாங்க. ஆனால் நான் இரவு காட்சி பார்க்கும் போது படம் இரண்டு மணி நேரம் தான் ஓடியது. நல்லா இருந்துச்சு. தேவை இல்லாம எந்த காட்சியும் இல்லை. அதன் பிறகு சமீபத்தில் டி வியில் அந்த படம் பார்க்கும் போது தான் அந்த படத்தின் மீதி காட்சி எல்லாம் பார்த்தேன். கொடுமையா இருந்துச்சு. ஹாட்ஸ் ஆஃப் பியர்லெஸ் தியேட்டர் ஆபரேட்டர். அது போல கொஞ்ச நேரம் முன்ன கேபிள்சங்கர்ல ஆரம்பிச்சு சந்தனமுல்லை விமர்சனம் வரை படித்தேன்.(அதற்கு முன்ன பரிசல் விமர்சனம் மட்டுமே படித்திருந்தேன்) அவங்க எல்லாரும் மைனஸாகவும் பிளஸ் ஆகவும் சொன்ன பல காட்சிகள் எங்க ஊர் தியேட்டர்ல இல்லை. என்னை பொருத்தவரை படம் அருமை. ஆக எங்க ஊர் ஆபரேட்டருக்கு தான் படத்தின் வெற்றி போய் சேரும்.