இன்னிக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதனால நீங்களே போய் தெஷ்ணாமூர்த்திக்கு விளக்கு போட்டுட்டு வாங்கன்னு காலையிலேயே விரட்டப்பட்டேன். எங்க ஊர்ல பல சிவன் கோவில் இருந்தாலும் ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீ சுவேதாண்யேஸ்வரர் கோவில் அழகு தனி தான். அங்கே இருக்கும் வல்லளார் எனப்படும் ஸ்ரீ மேதா தெட்ஷிணாமூர்த்தி சிறப்பு வாய்ந்த குருஸ்தலம். தருமை ஆதீனத்துக்கு சொந்தமான இந்த கோவில் காவிரிக்கு வடப்பக்கம் இருக்கு. இதோ கிளம்பிட்டேன் கோவிலுக்கு நீங்களும் வாங்களேன் ஒரு ரவுண்டு போய்விட்டு வரலாம்
(கோவில் உள்ளே இருந்து எடுத்த படம். ராஜகோபுரம் கொடி மரம், அலுவலகம்)
நான் சின்ன பையனா இருக்கும் போது அந்த கோவிலுக்கு அடிக்கடி போனது இல்லை. குருபெயர்சிக்கு அழைத்து போவாங்க வீட்டிலே. அப்போது கோவில் ரொம்ப பெரியதாக இருக்கும். இப்போ சின்னதா தெரியுது. இப்போ மாதிரி அப்போ அந்த சன்னதி தெருவில் அத்தனை மரம் இல்லை. இப்போது புங்கைமரங்களும், வேப்ப மரங்களும் அதிகமா ரெண்டு பக்கமும் இருக்கு. பி டி பிள்ளை வீட்டு கால்டெக்ஸ் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு கோவில் சன்னதியில் நுழையும் போதே சமீபத்திய கும்பாபிஷேகத்தில் கட்டப்பட்ட ஆர்ச் வரவேற்பு. பின்னர் அதே புராதன ஓட்டு வீடுகள் இரு பக்கமும் பார்க்க அதே அழகு. முன்பு அண்ணாசார் என்கிற வெங்கடேசன் என்கிற வாத்தியார் கிட்டே டியூஷன் படிக்கும் மாணவர்கள் சைக்கிள் அந்த வீட்டு வாசலில் ஏகப்பட்டது இருக்கும். இப்போ அவரின் மறைவுக்கு பின்னர் இங்க யாரும் டியூஷன் படிப்பதில்லை போலிருக்கு. ரொம்ப திறமை வாயந்த நல்ல வாத்தியார். அவர் ஒரு மாற்று திறனாளி. உட்காந்த இடத்தை விட்டு எழுத்து எங்கும் போக கூட முடியாது. வீட்டில் முற்றத்தில் தான் டியூஷன். விபூசி வாசனை அவர் இருக்கும் இடத்தில் கமகமன்னு இருக்கும். அவங்க அம்மா தான் அவருக்கு எல்லா பணிவிடையும். அவர் வீட்டு வாசலில் வண்டி வைத்து விட்டு அவரின் நினைவுகளுடன் கோவில் போனேன். முன்பு திறந்தவெளியாக இருந்த கோவிலின் பல பகுதிகள் இப்போது கான்கிரீட் கூரை போடப்பட்டு அந்த பழைய அழகு இல்லாவிடினும் இதுவும் ஒரு புதுமாதிரியான அழகாக இருக்கு.
கோவில் கொடிமரத்துக்கு பக்கத்தில் கூட மார்பிள் போட்டு "ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் இடம்" என எழுதப்பட்டு அத்தனை ஒரு சுத்தமாக இருக்கு. அலுவலக வாசலில் ஒரு கரும்பலகையில் "இன்னும் ஒரு மாதத்தில் தேர் தயாராகிவிடும். ஆகையால் நன்கொடை தந்து ரசீது பெற்று கொள்ளவும்" என எழுதியிருந்த இடத்தை தீண்ட தகாத இடமாக பாவித்து அதன் அருகில் யாரும் செல்லாமல் ஒதுங்கி வந்தனர். அடுத்து ஊற வைத்த கொண்ட கடலை மாலை 5 ரூபாய், கோசாலை பசுக்களுக்கு அகத்திகீரை கட்டு 3 ரூபாய், நெய்விளக்கு 2 ரூபாய் என விற்பனை ஆகி கொண்டு இருந்தது. தத்தமது பாவங்களுக்கு ஏற்ற வகையில் மக்கள் வாங்கி கொண்டு இருந்தனர். இதோ கொடி மரத்து பிள்ளையார் கிட்டே மனம் உருகி வேண்டி கொண்டு இருக்காரே அவரு தான் ராமலிங்க பத்தர். இன்னும் காசு வேண்டும் போலிருக்கு. நமக்கு ஏன் ஊர் வம்பு.
(இது ஞானாம்பிகை சன்னதி)
கோவில் உள்ளே நுழைந்ததும் நேராக சிவபெருமான் மேற்கு பார்த்த சிவன் ஸ்ரீ சுவேதாரண்யேச்வரர். அதன் முன்பாகவே ஸ்ரீ ஞானாம்பிகை அம்பாள் தெற்கு பார்த்த சன்னதி. சின்னதா இரண்டரை அடி தான். அழகிய குழந்தை மாதிரி ஆனா கொசுவம் வச்சு கட்டின சேலை. பார்க்க அம்சமா இருக்கு. அந்த அம்பாள் பெயரில் தான் எங்க ஊர் பெண்கள் கல்லூரி. அப்போது எங்கள் கல்லூரியில் கோ - எட் இல்லை. மாலை வகுப்பில் தனியே பெண்கள் படிக்க வேண்டும். தேர்வு சமயத்தில் தான் நாங்க எங்க கல்லூரி பெண்களை பார்க்க முடியும். அதன் காரணமாகவே அந்த ஞானாம்பிகா கல்லூரி மீது ஒரு ஈர்ப்பு. அப்போது அந்த ஞானாம்பிகா கல்லூரி பெண்கள் தாவணி போட்டு வரும் அழகே தனி தான். அவர்களுக்கு பத்து மணிக்கு கல்லூரி. எங்களுக்கு 10.30க்கு. அவர்களை ஜாக்கிரதையா கொண்டு விட்டு விட்டு தான் நாங்க கல்லூரிக்கு போகவேண்டும்:-)) அது எழுதாத ஒரு சட்டம். நான் நிற்பது தான் ஞானாம்பிகை சன்னதி ஆனா மனம் நிற்பது ஞானாம்பிகா கல்லூரி. ச்சே என்ன மனசு இது குரங்கு மாதிரி அலையுது. பேசாம சாமி கும்பிடுடா.... அட இது ஜூலி தானே. ஆமாம் ஜூலி தான். என் வி சாரின் பெண். நான் பத்தாவது டியூஷன் படிக்கும் போது அது 2 வயது குழந்தை. நான் தூக்கி வளர்த்த பெண். இப்போ அதுக்கு 2 வயது பெண் குழந்தையோட சாமி கும்பிடுது. அபி மாத்திரம் பக்கத்தில் இருந்தா "இது நான் தூக்கி வளர்த்த குழந்தை" என சொல்லியிருப்பேன். க்கூம் அதும் அவ"தூக்கினேன்னு சொல்லுங்க ஆனா வளர்கலை"ன்னு சொல்லியிருப்பா. ஆமா ஜூலி ரொம்ப குள்ளமா இருந்தா. ஒரு புன்னகை பின்னே ஜாடையில் இதான் என் குழந்தைன்னு சொல்லிட்டு போனா. கோவிலில் பேசக்கூடாதாமாம்.
இடது பக்கம் நாதசர்மா அனவித்தை, சுப்ரமண்யர் - வள்ளி- தெய்வாணை பேமிலி, வினாயகர், நாகர் கோவில் எல்லாம் தனித்தனியாக இருந்தது. ஞானாம்பிகையை சுற்றி வந்தேன். பின்னர் பிரகாரம் ஆரம்பித்தது. நான் சின்னதா இருக்கும் போது இதல்லாம் ஓப்பன் டெரஸ். கீழே மண் தரை. குருபெயர்சிக்கு கூட்டம் அலை மோதும். அப்போ ஷோலே வந்த நேரம். ஒரு குருபெயர்சி கூட்டத்தில் ஒரு சித்தப்பா அந்த கதையை சொல்ல சொல்ல (அவர் சென்னைல போய் பார்த்து வந்தாரு) கபர்சிங் ரோல் எனக்கு ரொம்ப பிடித்து போனது. கப்பர்சிங் சாட்டையை சொடுக்க ஹேமமாலினியோ யாரோ டான்ஸ் ஆடுவது சிரிப்பு சிரிப்பா வந்தது அப்போது. அந்த நேரம் பார்த்து குரு பெயர்ந்துட்டார். அத்தோட அந்த கதையை நிப்பாட்டிட்டு சாமி கும்பிட போயிட்டாங்க. எனக்கு அழுகை அழுகையா வந்தது. தவிர குருவை ரொம்ப கோவிச்சுகிட்டேன். நீ ஏன் இந்த நேரம் பார்த்து பெயர்ந்தேன்னு. அதல்லாம் நியாபகம் வந்தது அந்த பிரகாரம் பார்த்ததும். அதிலேயே பாதி அடைத்து தோட்டம் போட்டிருந்தனர். பவழகல்லி வாசனை பிச்சுகிட்டு போச்சு. நான் கும்பகோணத்தில் இருந்து கொண்டு வந்து வீட்டில் வைத்த பவழமல்லி எப்போது பூக்கும் என நினைத்து கொண்டேன். மரியாதையா சாமி கும்பிட வேண்டும். மனசை கட்டு படுத்தி கொண்டேன்.
தொடர்ந்து நவகிரகம் நோக்கி நடக்கும் போது யாரோ தோள் தொட்டு திருப்ப "எப்ப வந்தே?துபாய்ல தானே இருக்க?" என கேட்ட அந்த மாமாவுக்கு இந்த ஒரு வருஷத்தில் எனக்கு நியாபகத்தில் இருக்கும் வரை ஒரு நான்கு தடவையாவது ஏற்கனவே பதில் சொன்னது நியாபகம் வந்தது. "ஆமாம் துபாய் தான்" என்றேன். உடனே அவர் 'அங்க இதே போல கோவில் இருக்குமா?" என கேட்ட போது "இல்லை அவங்க எல்லாம் வைஷ்ணவ கோத்ரம்.. அதனால ஒன்லி பெருமாள் கோவிலும் மூலைக்கு மூலை ஆஞ்சநேயர் கோவிலும் தான்" என சொன்னேன். அவர் அதற்கும் அசராமல் "அங்க அரிசி கிடைக்குமா?" என அடுத்த அஸ்திரம் வீச நான் "ரேஷன் கார்டு இருந்தா மட்டும் தான் ஒரு ரூபா அரிசி கிடைக்கும்" என சொல்லிவிட்டு நடந்தேன். வலப்பக்கம் துர்க்கையை கும்மிட போனேன். அங்க ஒரு மாமி என்னிடம் "ஆக்சுவலி நான் பைரவருக்கு தான் தீபம் போவ வந்தேன். ஆனா நாளைக்கு தானாமே அஸ்டமி. அதனால அவருக்கு நாளைக்கு போடலாம்னு இன்னிக்கு துர்கைக்கும் குருவுக்கும் மட்டும் போட போறேன். கடன்காரன் நெய் தீபம் 3 ரூவா வாங்கிண்டு டால்டா தீபம் தர்ரான்" என என்னிடம் பிராது கொடுத்தாங்க. ஆகா பைரவருக்கு வட போச்சேன்னு நினைச்சுகிட்டே நவகிரகம் கிட்டே வந்தேன். "இங்க நவகிரகமும் வரிசைல இருக்கும். ரொம்ப விஷேஷம் தெரியுமோ?" என ஒரு மாமா சொல்லிகிட்டு இருந்தார் யாரிடமோ. அதை தாண்டி சண்டிகேஸ்வரர் கிட்டே வந்தேன். யாரோ சட்டையை கிழித்து நூல் எடுத்து போட்டு விட்டு கைதட்டினார். சின்ன குழந்தை ஒன்று சொடுக்கு போட வராமல் அழுதது.
அடுத்து நேரா வந்தா மடப்பள்ளி. புளியோதரை வாசனை வந்தது. நம் வீட்டில் செய்தால் ஏன் இத்தனை டேஸ்ட் வரவில்லை என நினைத்து கொண்டேன். அந்த கிணறு இப்போது கம்பி வலை போடப்பட்டு பாதுகாப்பா இருக்கு. நான் அதை எட்டி பார்த்து அம்மாவிடம் முதுகில் அறை வாங்கியது நியாபகம் வந்தது. மடப்பள்ளியில் இருந்து ஒரு ஈயம் பூசின பித்தளை வட்ட வடிவ பாத்திரத்தில் பிரசாதம் வைத்து மழிக்காத அக்குளுடன் ஒரு அழுக்கு பிராமணன் கர்ம சிதத்தையாய் தூக்கிகிட்டு சிவன் கோவில் பக்கம் போறார். கொஞ்சம் குடுத்தா உப்பு பார்ப்பேன். தரவில்லை
அடுத்து குருபகவான் சன்னதி. கூட்டம் இடித்து தள்ளியது. அது யாரு? யெஸ் கண்டக்டர் வெங்கடாசலம் தான். ரிட்டையர்டு ஆகிட்டாரு போல. அடையாளம் தெரியலை. பஞ்சகச்சம் கட்டி சிகப்பு உடம்பை போர்தாமல் நேரே குருவின் அருட்கடாஷம் கிட்ட கிட்டத்துல போகிறார். இது என்ன நாராயணன் ஜூவல்லரி காலண்டர் தேதி டிசம்பர் மாதம் காட்டுது? சரி நமக்கு என்ன அது பத்தி. நாம சாமி கும்பிடுவோம்
(குருபகவான் சன்னதி)
இங்க பாருங்க. பின்னாடி இத்தனை பேர் நிக்கிறோமேன்னு லஜ்ஜையே இல்லாம ரெண்டு கையும் மேலே தூக்கி கும்பிடுறாரு. அட இந்த ஆளா? இந்த ஆள் ஒரு போலீஸ்காரன். அனேகமா ரிட்டையர்டு ஆகியிருக்கனும். இவனுக்கும் எனக்கும் ஜென்ம பகை. நான் 6 வது படிக்கும் போது என் தம்பியை இவன் " டேய் ஓரமா போடா"ன்னு அதட்டிட்டான். பெரிய மீசை வச்சிருப்பான். அவன் வீட்டில் வந்து அழுது அழுது ஜுரமே வந்தாச்சு. நானும் நம்ம ராதாவும் அந்த ஆளை பழிவாங்க ரோடு போட வச்சிருந்த ஜல்லி எல்லாம் பையிலே வச்சுகிட்டு கச்சேரி பிள்ளையார் வாசலில் அவன் சாமி கும்பிட வரும் போது அடித்து காலி பண்ணிவிட பல்நாள் திட்டம் போட்டு ஒரு நாள் ஒரு நூறு அடி தூரத்தில் இருந்து கல் வீசினோம். எங்க கைநடுக்க காரணமாக கல் எங்களுக்கு பத்து அடி தூரத்திலேயே விழுந்தது. ராதா "ஜஸ்ட்டு மிஸ்சு"ன்னு சொன்னான். அப்போது எனக்கும் அவனுக்கும் ஜஸ்ட் மிஸ்க்கு அர்த்தம் தெரியாது என்பது வேற விஷயம். அவர் தான் இதோ சாமியை யாருக்கும் தெரியாமல் என் தம்பியை அதட்டியமைக்கு இரு கை தூக்கி பாவமன்னிப்பு கேட்பதாக மனதில் அபத்தமாக நினைத்து கொண்டேன். இங்க பாருங்க வாசன் மளிகை வாசன் விபூதி மடிக்க நாராயனன் ஜூவல்லரி டிசம்பர் 18ஐ 19 ஆக்குகிறான். காலம் என்னமா ஓடுது...
பின்னே ஸ்ரீ சுவேதாரேண்யவரர் தரிசனம் முடித்து அமைதியாக உட்காந்து தியானம் செய்யலாம் என நினைத்து உட்காந்தேன். என் அருகிலேயே இரு அம்மணிகள்.
“நான் சொல்றது தான் நடக்கும் பாரு. நான் அனுபவஸ்தி. அகலக்கால் வச்சா ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தாலே ஒன்னும் கதைக்கு ஆவாது”
“போங்கக்கா, நாளைக்கு நீங்களே ஒத்துப்பீங்க பாருங்க. இன்னும் ஒரு நாள் தானே. எல்லாம் தெரிஞ்சுட போவுது”
அனேகமா எந்திரன் சினிமா பத்தி தான் பேசிப்பாங்க போலிருக்குன்னு நினைத்து கொண்டே இருக்கும் போது குருவுக்கு சாத்திய கொண்டைகடலை மாலை எல்லாம் ஒருத்தர் கோசாலை பசுவுக்கு போட எடுத்துகிட்டு போனாரு. நான் அந்த கடலை மாலை விற்கும் அம்மாவிடம் கேட்டேன். ஒவ்வொறு விழானுக்கும் 2 கிலோ வாங்கி ஊற வைத்து 108 கோர்த்து 150 ரூபாய் லாபம் பார்ப்பாங்களாம். பலர் வீட்டில் இருந்தே கோர்த்து எடுத்து வந்து விடுகின்றனர். ஆகா அத்தனை மாலையையும் உருவி பிரித்து மடப்பள்ளியில் ஒரு கொதி வேகவைத்து கால்லிட்டர் பாமாயில், 100 கடுகு, கொஞ்சம் கறிவேப்பில்லை, 25 காசு உப்பு, போட்டு தாளித்து இறக்கும் போது கொஞ்சம் 2 ரூபா எல்ஜி பெருங்காய பவுடர் போட்டு தாளித்து 500 பொட்டலமா போட்டு குருபகவான் பிரசாதம்னு 2 ரூபாய்க்கு வித்தா கூட 1000 ரூபாய் கல்லா கட்டலாமே, அதிலே பசுவுக்கு 100 ரூபாய்க்கு புல்லு கட்டு போக மீதியை தேர் செய்ய வரவு வச்சுகலாமேன்னு நினைத்து கொண்டேன். டேய் அபிஅப்பா உனக்குள்ள ஒரு அம்பானி சம்மணம் போட்டு உட்காந்து இருக்காண்டா என்னவோ போடா…
வெளியே வந்தேன். கோசாலை நல்லா பாராமரிக்கப்பட்டு எல்லாரும் பசுவுக்கு அகத்திகீரை கொடுத்து பின்பக்கம் தொட்டு கும்பிட்டு போனாங்க. இராமநாராயனன் படத்திலே யானைக்கு சட்டை போடுவது போல பசுவுக்கு ஜட்டி போட்டு விடனும்.
வெளியே வந்து வண்டி எடுத்து கொண்டு இருந்த போது சண்டிகேஸ்வரர் கிட்டே சொடக்கு போட அழுத பையன் சொடக்கு போட்டு சிரித்தான். சாமியே கும்பிடலை போல இருக்கு,இதையே தான் பிராக்டிஸ் பண்ணிகிட்டு இருந்திருக்கன் போல... பேட் பாய்...
வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
“என்னாச்சு? போனீங்களா?”
“ம் செம கூட்டம். நேரா குருக்கள் ஸ்வாமிகிட்ட அழைச்சுட்டு போய் பிரமாதமா தரிசனம் பண்ணி வச்சாரு”
“உம் நான் கூட அவர் வீட்டு மாமிக்கு போன் பண்ணி சொன்னேன். நீங்க வர்ரீங்கன்னு. அதனாலத்தான் அந்த தரிசனம். பாருங்க கைமேல பலன் இருக்கும் குரு பார்வை பட்டாலே”