பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 1, 2011

1.1.11 - நானும் ராதாவும் புத்தாண்டு சபதமும்!!!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2011 நமக்கு நல்லவிதமாக மனநிம்மதியை கொடுக்கட்டும்.

அது 1986ம் ஆண்டு. ஜனவரி முதல் தேதி. அரக்க பரக்க ராதா ஓடி வந்து "ஹேப்பி நியூ இயர்"ன்னு சொல்லிட்டு என்னை தனியா தள்ளிகிட்டு போய் "டேய் நாம புது வருஷத்துக்கு எதுனா ரெசல்யூஷன் எடுத்துக்கனுமே. அது பத்தி பேசிகிட்டு இருந்தோமே. அது என்னன்னு யோசிச்சு வச்சியா?"ன்னு கேட்க நான் அதை மறந்தே போனது பற்றி அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது.

"பேசாம படிப்பை விடுடலாமாடா" என என் ஆசையை சொல்ல பதறிப்போன அவன் "சே சே நமக்காகவாடா படிக்கிறோம்.எல்லாம் அப்பா அம்மாவுக்காகத்தானே.இந்த வயசிலியேயே அப்பா அம்மா ஆசையை பூர்த்தி செய்யும் தியாகத்தை நாம செஞ்சுகிட்டு இருக்கோம். அதனால அதை விட்டுட வேண்டாம். அது பாட்டுக்கு அது இருக்கட்டும். நாம பேசாம டாக்டராகி கிராமத்திலே போய் ஏழகளுக்கு சேவை செய்வோமா?" என கேட்க கொஞ்சம் பதறித்தான் போனேன்.

ஏன்னா நாங்க அப்ப கிட்ட தட்ட டிகிரியையே முடிச்சுட்ட நிலையில் இருந்தோம். டாக்டருக்கு ஸ்னானப்பிராப்தி இல்லாத ஒரு சப்ஜக்ட் எடுத்து படிச்சுகிட்டு இருந்த நேரம். அதும் எந்த யுனிவர்சிட்டில இன்ஸ்டண்ட் டாக்டர் பட்டம் கொடுத்து எந்த கிராமத்துல எங்களை சேவையை தொடங்குவது என ஏகப்பட்ட குழப்பம் இருந்தபடியால் அதை உடனடியா நிராகரித்தேன். தவிர எனகு ரத்தம்னா கொஞ்சம் அலர்ஜியும் கூட.

எல்லாரும் கும்பல் கும்பலாக வந்து ஹேப்பி நியூ இயர் சொல்ல சொல்ல எங்களுக்கு முகத்தில் வாட்டம். ரெசல்யூஷன் கிடைக்காத கவலை முகம் எங்கும் பரவி கிடந்தது.

புத்தாண்டை நல்ல விதமா கொண்டாடவேண்டும் என்கிற அதீத ஆசையில் முதல் நாள் மாலை முதலே குடிக்க ஆரம்பித்த குடிமகன்கள் பத்து மணிக்கு எல்லாம் மட்டையாகி அவர்களை கிராஸ் செய்து புத்தாண்டு போய்விட்ட நிலையிலும் தெளியாமல் ரோட்டோரம் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கொண்டே நாங்கள் இருவரும் நடந்து ஊரை வலம் வந்தாலும் அந்த பாழாய் போன ரெசல்யூஷன் மாத்திரம் எங்களுக்கு சிக்கவில்லை.

இப்படியாக இரவும் வந்து இன்னும் ஒரு நான்கு மணி நேரத்தில் எங்களை விட்டு புத்தாண்டும் போய் விட இருந்த நிலையில் ராதா "டேய் நமக்குன்னு எதுனா கெட்ட பழக்கம் இருந்தாலாவது அதை விட்டுவிடுவதா ரெசல்யூஷன் எடுத்துக்கலாம். நாம தான் அனியாயத்துக்கு ரொம்ப நல்ல பசங்கலா இருந்து தொலைச்சுட்டோமே. ஆண்டவா எங்களை ஏன் நல்லவங்களா படைச்சு தொலைஞ்சுட்டே" என அலுத்துக்கவும் நான் தான் மெல்ல ராதாவிடம் "டேய் இதுக்கு எல்லாம் போய் ஆண்டவனை திட்ட கூடாது. நாம ஏன் ஒரு கெட்ட பழக்கம் ஏற்படுத்திக்க கூடாது? உடனே எதுனா கத்துகிட்டு அதை விட்டுடுவோம்" என சொல்ல அது ராதாவுக்கும் சரியென படவே அந்த கெட்ட பழக்கம் என்ன பழக்கம் என தீமானிப்பது அடுத்த கவலையாக வந்து தொத்தி கொண்டது.

ராதாதான் சொன்னான். அப்போதைய காலகட்டத்தில் "சைட்" அடிப்பது தான் கிட்ட தட்ட கற்பழிப்புக்கு சமமான கெட்டப்பழகம் என அதீதமாக நம்பினோம். அதனால அந்த கெட்ட பழக்கத்தையே ஆரம்பிச்சு அதையே விட்டுவிடுவதாக ரெசல்யூஷன் எடுத்துகிட்டோம். சரி யாரை சைட் அடிப்பது என முடிவெடுத்து கலா தான் இதுக்கு சரியான ஆள் என அப்பாவியாக நம்பி ... நம்பி கலா வீட்டு வாசலுக்கு போய் ரோமியோ மாதிரி சைக்கிளை நிப்பாட்டி காலை ஒரு மாதிரியா மடிச்சு வச்சு கீழே ஊன்றிகிட்டு கலாவை சைட் அடிக்க ஆரம்பித்தோம். கலா வீட்டு வாசலில் இல்லாமையால் கலா வீட்டை சைட் அடிக்க ஆரம்பித்தோம்.

ரொம்ப நேரம் கலா கண்ணில் தென்படாததால் கண் வலி வந்தது தான் மிச்சம். பின்னே ஆண்டவன் கொஞ்சம் இரக்கம் காட்டி கலாவை வெளியே வரவழைக்க வலிக்கும் கண்ணை இன்னும் கொஞ்சம் அகலமாக்கி தீவிரமாக சைட் அடிக்க கலா நேரா கிட்ட வந்து " என்னடா ரொம்ப நேரமா நிக்கிறேள் போலிருக்கு. ஞானவினாயகர் கோவில் டொனேஷனா? அப்பா வெளியே போயிருக்கர். பின்னே வாங்கோ" என சொல்ல அவமானமா போச்சு. எங்களை பார்த்தா கோவில் டொனேஷன் வாங்க மாதிரியா இருக்குது.கலா அப்படி சொன்ன பின்னும் கூட நாங்க ஒரு மாதிரியாக சைட் அடிப்பதை தொடர "என்னடா எதுனா திருடிட்டீங்களா? பேந்த பேந்த முழிச்சுகிட்டு இருக்கீங்க" என கேட்ட போது இனி அவமானப்பட எதும் இல்லை என முடிவெடுத்து சைக்கிளை திருப்பி கொண்டு கச்சேரி பிள்ளையார் வாசலில் வந்து குமுறி குமுறி அழத்தொடங்கினோம். ஒரு ரொமான்ஸ் சைட் அடிக்க கூட லாகக்கில்லாத இந்த கண் இருந்தா என்ன இல்லாம இருந்தா என்ன என்பது போல பிள்ளையாரை முறைத்து கொண்டு நின்றோம். பக்கத்திலே நின்ன ஒரு மாமா "டேய் கொழந்த பிள்ளையாரை என்னவோ லவ் பண்ணுவது போல பார்த்துண்டு இருக்கேளே" என கேட்ட போது அதிர்ந்து தான் போனோம்.

"என்னடா இது, ரொமாண்டிக்கா பார்த்தா திருட்டு முழின்னு சொல்றா ஒருத்தி. கோவமா பார்த்தா அதை சைட் அடிப்பதா சொல்றார் ஒரு மாமா. நாம அனியாயத்துக்கு யோக்கியனா இருந்துட்டோம். அதனால நாம சிகரட் குடிக்க ஆரம்பிசு அதை விட்டுடலாமே?" என ராதா கேட்க எனக்கும் உசிதமாக இருந்தமையால் தலையாட்டினேன்.

அந்த சிகரட்டை எங்க வாங்குவது என திண்டாடி ஒரு வழியா எங்களை தெரியாத ஏரியாவான மேம்பாலம் அடில ஒரு கடையிலே ஏதோ கஞ்சா வாங்குவது போல தலைக்கு காசிதுண்டை போத்திகிட்டு போய் வாங்கி வ்ந்து அதை இறுமிகிட்டே அடிச்சு முடிக்க ஏந்தான் இந்த புத்தாண்டு வந்து தொலைத்தது என்கிற மனநிலைக்கு வந்து பின்னர் அந்த பழக்கத்தை விட்டுவிடலாம் என்கிற எண்ணம் மறைந்து போய் அதிலே ஒரு ஈர்ப்பும் வந்தது. பின்னர் ராதா தான் மெல்ல சொன்னான். "டேய் ரொம்ப நன்னா இருக்குடா. இந்த சிகரட் இருக்குதே சிகரட்..." என வலம்புரி ஜான் மாதிரி எதுவோ சொல்ல சொல்ல எனக்கு ஜிவ்வுன்னு இருந்துச்சு.


கிட்ட தட்ட சிகரட் கையில் இருக்கும் போது எங்களை பார்த்தா எங்களுக்கே ஒரு ரவுடி கெட்டப் வந்த மாதிரி ஒரே பெருமை. அதும் ராதா அதை விரல் இடுக்கில் வைத்து கொண்டு என்னை பார்த்து அவனை சிவாஜியாகவும் என்னை சரோஜாதேவியாகவும் நினைத்து கொண்டு " அப்ப நீ என்கிட்ட பழகினது எல்லாம் பொய்யா" என அஷ்ட்டகோணலாக முகத்தை வைத்து கொண்டு (சிவாஜியை இமிடேட் செய்கிறானாமாம்..) கேட்க நானும் தேமேன்னு முகத்தை வச்சுகிட்டு "இல்லை கோபால் இல்லை" என சரோஜாதேவி மாதிரி சொல்லி தொலைத்தேன். அது சரோஜாதேவி போல இல்லை என்றும் கசாப்புகடை பாய் சொல்வது மாதிரியே இருக்குன்னு சொன்னதும் ராதாமேல் லைட்டா கோவம் வந்து தொலைச்சாலும் உண்மை அது தானே:-(

ஒரே நாளில் எங்களுக்கு மாயவரமே வசப்பட்டுவிட்டது போல ஒரு நம்பிக்கை கொடுத்தது அந்த ஆறாவது விரல். திரும்ப வரும் போது ரோட்டில் சும்மா கிடந்த நாயை ஒரு உதை விட சொன்னது மனது. ராதா கையிடுக்கில் சிகரட்டை வைத்து கொண்டு "டேய் நம்ம ஆளுங்களை வச்சு அந்த பொண்ணை தூக்கிட்டு போய் நம்ம குடோன்ல போடுங்கடா நான் ராத்திரி வர்ரேன்" என காற்றில் கை ஆட்டி பேசி பார்த்த போது நான் கொஞ்சம் மிரண்டு தான் போனேன்.

திரும்ப வரும் போது ராதா சொன்னான்" டேய் நாம சிகரட் வாங்க காசில்லைன்னு எல்லாம் கவலைப்படக்கூடாது. மணிக்கூண்டை வித்தாவது தம் அடிப்போம். பத்தலைன்னா ஏ.ஆர். சியை (ஜுவல்லரி) வித்துடுவோம். இல்லாட்டி இருக்கவே இருக்கு விஜயா தியேட்டர். இப்பல்லாம் சரியாவே படம் போடுவதில்லை. சவுண்ட் சிஸ்டமும் சரியில்லை.குருநாதன் செட்டி சொத்தை வித்து தம் அடிப்போம்" என தன்னம்பிக்கையின் உச்சமாக பேசிகொண்டே வர நாங்கள் ரெசல்யூஷனில் பாதிதானே நிறைவேற்றினோம் மீதி அதாவது சிகரட் விடும் சபதத்தை காற்றில் புகை மாதிரி விட்டுட்டோமே என்பது ஞாபகம் வரவே இல்லை.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தது ராதா " டேய் பிறந்த குழந்தை மாதிரி நமக்கு இப்ப தான் ஒரு நல்ல கெட்ட பழக்கம் வந்திருக்கு. இன்னிக்கே அதை கொல்லனுமா?" என கேட்க நான் அதுக்கும் தலையாட்டி தொலைச்சேன்.

இப்படியாக ஆரம்பித்த பழக்கம்... இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெற்றிலை பாக்கு என டெவலப் ஆகி நிக்குது. இந்த புது வருஷத்தில் அதை விட்டுவிடுவதாக ஒரு ரெசல்யூஷன் எடுக்க வேண்டும். இருங்க ஒரு தபா வெத்தலை போட்டுகிட்டு வர்ரேன்......

16 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள் அபி அப்பா, பதிவை அப்புறம் மெதுவாப் படிச்சுக்கறேன். வழக்கமான மொக்கைதானே? :P

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


    இதையும் படிச்சி பாருங்க

    உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

    ReplyDelete
  3. நல்ல ரெசொல்யூஷன். நகைச்சுவையோடு அதைச் சொன்ன விதம் அருமை.

    உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    //
    மாலா வீட்டு வாசலில் இல்லாமையால் மாலா வீட்டை சைட் அடிக்க ஆரம்பித்தோம்
    //
    ஆஹா.......... என்னே ஒரு கடமை உணர்ச்சி...................

    போயல சேத்து போடுறது இல்லன்னு சபதம் எடுக்க உத்தேசமா? இல்ல அது இல்லாம போடுறது இல்லன்னு எடுக்க உத்தேசமா??

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. // " டேய் பிறந்த குழந்தை மாதிரி நமக்கு இப்ப தான் ஒரு நல்ல கெட்ட பழக்கம் வந்திருக்கு. இன்னிக்கே அதை கொல்லனுமா?" என கேட்க நான் அதுக்கும் தலையாட்டி தொலைச்சேன். //


    இப்படி அ(பிஅ)ப்பாவியாய் எல்லாத்துக்கும்
    தலையாட்டிட்டே, இருங்க.
    சரி... அடுத்து???

    இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
    நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. புகையை விட்டு ,புகை இலையை இணைத்துக் கொண்டீர்களோ ??

    ReplyDelete
  8. //"என்னடா இது, ரொமாண்டிக்கா பார்த்தா திருட்டு முழின்னு சொல்றா ஒருத்தி. கோவமா பார்த்தா அதை சைட் அடிப்பதா சொல்றார் ஒரு மாமா//

    " அப்ப நீ என்கிட்ட பழகினது எல்லாம் பொய்யா" என அஷ்ட்டகோணலாக முகத்தை வைத்து கொண்டு (சிவாஜியை இமிடேட் செய்கிறானாமாம்..) கேட்க நானும் தேமேன்னு முகத்தை வச்சுகிட்டு "இல்லை கோபால் இல்லை" என சரோஜாதேவி மாதிரி சொல்லி தொலைத்தேன்.

    அந்த மாமாவின் விமர்சனத்துக்குப் பிறகும் சிவாஜி சரோஜாதேவி இமிட்டேடிங் தேவையா ?

    சிரிப்பை அடக்க முடியாமல் நான் படிக்க , கஸ்டமர்ஸ் என்னை ஒரு மாதிரி பார்க்க இவர் என்னை முறைக்க ஒரு வழியாகப் படித்து முடித்தேன் .

    ReplyDelete
  9. இந்த மாதிரி ரெசெல்யூசனே எதுவும் எடுக்ககூடாதுங்கறதுதான் இந்த வருஷ ரெசெல்யூசன்..!! :-))

    ReplyDelete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள்..! இதையும் படிச்சுப் பாருங்களேன்..!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அபி அப்பா. எனக்கும் ஒரு நல்ல ரெசல்யூசன்(ஆமா, இதுக்கு தமிழில் என்ன?) சொல்லுங்களேன்.

    ReplyDelete
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஹாஹாஹாஹா

    சென்னைக்கு வரலை தப்பிச்சீங்க.

    கோபால் கொலவெறியோடு இருக்கார்:-)

    ReplyDelete
  14. nalla vela neenga doctor aagala... enga nilamaya yosichu parunga ... ha ha ha

    Super resolution..super flashback...ha ha ha

    ReplyDelete
  15. அபி அப்பா, நீங்க ஏன் அந்த பழைய கலாவ சைட் அடிச்சுட்டு விடுற resolutionaiyum சேர்த்து இந்தவருஷம் பண்ணக்கூடாது... அபி அம்மா கண்ணுல இந்த பின்னூட்டம் பட்டு உங்களுக்கு அடி விழுந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல... ஹா..ஹா... தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))