பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 26, 2011

"வங்கிக்கு போன மங்கி" அல்லது "பேங்க்குக்கு போன பேக்கு" என எது வேண்டுமானாலும் தலைப்பா வச்சுக்குங்க!!!

பேங்ல போய் இந்த பணத்தை போட்டு வா என என்னிடம் சொல்லி பணத்தை கொடுத்தால் அந்த மஞ்சள் பையை கக்கத்தில் வைத்துக்கொண்டு போய் பேங் உள்ளே எதுனா நல்ல இடமா பார்த்து டபார்ன்னு போட்டுவிட்டு திரும்பும் அள்வுக்கான மினி சைஸ் மூளைக்கு புரொப்பரைட்டனான என்னிடம் போய் இந்த ஐம்பதாயிரத்தை கொடுத்து போட சொன்னா பேங்கு ஸ்டாப் எல்லாருக்கும் எத்தனை கஷ்டம் வரும் தெரியுமா?

ஒரு பேங் (வங்கி) செட் போடனும்னா ரொம்ப சுலபம். ஒரு பெரிய ஸ்டூடியோ பிளாட். மேலே எங்க திரும்பினாலும் சின்ன பிலாஸ்டிக் குழாய்க்குள் ஒயர்கள். அது கண்டிப்பா ஒட்டடை பின்னி பினைந்து இருக்க வேண்டும். ஓரிரண்டு இடத்தில் சின்ன சின்ன ஸ்பீக்கர்கள். தேவையே இல்லாமல் செக்யூரிட்டியின் தொப்பையையோ அல்லது அடுத்த டோக்கன் டொட்டடொய்ங் பெல்லையோ குறிபார்த்து கொண்டிருக்கும் மூவி கேமிரா, நடுவே யானைக்கு கோமணம் கட்டிய மாதிரி நீட்டு கவுண்ட்டர். அது முடியும் இடத்தில் ஒரு நாய்க்கூண்டு அதிலே 25000 ரூபாய்க்கு மேல் ஸ்பெஷல் நாய்கூண்டும், சின்ன பண பரிமாற்றத்துக்கு சின்ன சைஸ் கூண்டும், இந்த விளையாட்டுக்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என சொல்வது போல ஒரு மேனேஜர் ரூம். காதில் கடுக்கன் மற்றும் பன்னீர் புகையிலை போட்டு வேஷ்டி கட்டிய நகைக்கடனுக்கான அப்ரைசர், அவருக்கு மட்டும் சின்னதா ஒரு ஸ்டூலும் ஒரு தராசும் போதும், நீண்ட ரெட்டை குழல் துப்பாக்கி மற்றும் அதை பிடித்து கொண்டு நிற்க ஒரு வெளக்குமாறு மீசை, அந்த மீசை ஒட்டிக்கொண்டு இருக்க ஒரு சின்ன சைஸ் உடம்பு, குறுந்தாடி பெர்னாண்டஸ் அல்லது செபஸ்டியன் சீனியர் மேனேஜராக, பச்சையாக மழித்த பார்த்தசாரதி ஆப்பீசர், கல்யாணவீட்டில் மாக்கோலம் போடும் மாமியை அவசரத்துக்கு கூட்டி வந்த மாதிரி ஒரு மாமி வித் கஞ்சி போட்ட காட்டன் புடவை அதோடு கூடவே ஆறு தங்க வளையல் அதிலே இரண்டு சிகப்பு கல் இழைத்த ஜோடி, ஒரு நெளி மோதிரம், ஒரு யானைமுடி மோதிரம், ஒரு பவழ மோதிரம் ஓவல் சைஸ்ல இப்படி ஒரு மாமி, இத்தனை இருந்தும் அவங்க வச்சிருக்கும் பேனா இங் ஒழுகி விரலிலே நீலமும் சிகப்பும் படிந்து இருக்க வேண்டும், கம்பேஷன் கிரவுண்டிலே வேலைக்கு வந்த சின்னதாக ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய ஒரு இளம் விதவை பெண், ஒரு பைல்ஸ் வந்த முற்றிய நிலையில் இருக்கும் ஒரு 56 வயது சீவிய மீசை வைத்து சந்தனத்தை பட்டை கோடாக போட்டு அதன் மீது சாந்து பொட்டு வைத்த முகம் முழுக்க மூல வியாதியின் கடுப்பு வியாபித்து இருக்கும் ஒரு ஜன்மம்,அவர் அந்த பெரிய நாய் கூண்டில், இவர்களின் ஊடே கருப்பு முகம், அதிலே பொங்கலுக்கு சுண்ணாம்பு அடித்த மாதிரி கோகுல் சாண்டல் பூசி அதன் நடுவே சிவபெருமான் மாதிரி நெற்றியில் முப்பட்டை பெரிதாக அதன் நடுவே நெற்றிக்கண் மாதிரி செந்தூரம், இரு புருவத்துக்கு நடுவே கருப்பு மை மாதிரி சிலையில் இருந்து வழித்து பூசிய எண்ணெய் ஆக எல்லா கலரும் கலந்து கட்டி ஒரு நெற்றியுடன், மொசுக்கட்டான் மாதிரி "டை" அடித்த மீசை ,வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் "சார் இன்னிக்கு மாத்திரம் செக்கை நிப்பாடி வைச்சிடுங்க சார், சாயந்திரம் பதிமூவாயிரம் வந்துடும் சார், நாளைக்கு கட்டிடுறேன்" என கெஞ்சி குறுந்தாடி ஒத்துக்காததால் சோகமாக வெளியே வரும் பாவப்பட்ட வியாபாரியை தனியே தள்ளிகிட்டு போய் "தம்பி ஆயர்ரூவாய்க்கு ஒரு நாளைக்கு ரெண்டு ரூவா இன்டுரச்டு. இப்ப உம்னு சொல்லுங்க பணத்தை கட்டி இந்த செக்கை பாஸ் பண்ணிடலாம். எனக்கு நாளக்கி கார்த்தால இருபத்தாற்வா சேத்து குடுத்தா போதும்" என அன்றாட குவாட்டருக்கு பணம் தேர்திக்கும் , கை நிறைய லட்ஜர்களோடு அலையும் ஒரு அட்டண்டர். "குளிர்ந்த குடிநீர்" என போடப்பட்ட குழாயில் கொதிக்க கொதிக்க நீர் வரனும் அப்படி ஒரு கூலர் இருக்க வேண்டும். ஆக ஒரு பேங் ரெடி. இப்படிப்பட்ட ஒரு வங்கியில் தான் நான் இன்றைக்கு வந்து மாட்டிகிட்டேன்.

சம்பவம் இது தான் ரொம்ப சிம்பிள். "A " ன்னு ஒருத்தருடைய பணம் 50000ஐ "B" என்கிற ஒருத்தருக்கு "C" ஆகிய நான் பேங்கு வழியாக சேர்ப்பிக்க வேண்டும்.இதுவரை புரிஞ்சுதா. சிம்பிள்.ரைட் மேலே படிக்கலாம். நான் நேராக அந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கே முகத்தில் வீரப்பன் மீசையும் கையில் தேவாரம் துப்பாக்கியையும் வைத்திருக்கும் செக்யூரிட்டியிடமா கேட்க முடியும். நான் துபாய்ல இருந்து பிளைட்லயே வித்தவுட்ல வந்தவன். அந்த திமிர் நேரே சீனியர் மேனேஜர் என்கிற போர்டு போட்ட கண்ணாடி ரூம்குள்ளே போய் "சார் சார் என்கிட்டே ஒரு கதை இருக்கு கேளுங்களேன்" ஆரம்பிக்க அவருக்கு ஏன் தான் இத்தனை கோவம் வருதோ தெரியலை. "சாரி சார் இத்தனை பணமும் இதோ வாசலில் இருக்கும் ஏடி எம்ல சொருகி விடத்தானே தவிர இது நீங்க நினைப்பது போல சினிமா புரக்ஷன் கம்பனி இல்லை" என முகத்தில் அடிக்காத குறையாக சொன்னார். நானும் இது சினிமா படம் எடுக்க சொல்லவந்த கதை இல்லை என்றும் என் சொந்த கதை என்பதையும் சொல்ல முயன்றும் அவர் என் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வேற ஒரு ஆப்பீசரிடம் அனுப்பி வைத்தார். இந்த ஆப்பீசரிடம் என் பிரச்சனை என்ன என்பதை தெளிவாக சொல்லிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

என்னை விட ஒல்லியான ஒருத்தர் கிட்ட தட்ட எனக்கு காலரா வந்த மாதிரி இருந்தாரு. அவருக்கு பேர் ஆப்பீசராம். அந்த பேண்ட்க்கு பெல்ட் போடாம எப்படித்தான் நிக்குதோ? இதிலே "இன்" வேற ஒரு கேடு. என்னை பாகற்காயை பார்ப்பது போலவே பார்த்தது அந்த முருங்கைக்காய். என்ன விஷயம் என கம்பீரமாக அந்த ஒல்லிக்குச்சி உடலில் வந்த வேகம் இருக்குதே... எனக்கு மனோபாலா தான் ஞாபகத்துக்கு வந்தார். சொன்னேன். "சார் "A" ன்னு ஒருத்தரின் பணம். அதை "B" க்கு அனுப்பனும். அதை இந்த "C" வழியா தான் அனுப்பனும்..." என சொல்லிகொண்டு இருந்த போதே "இது ஏற்கனவே மும்பை எக்ஸ்பிரஸ்ல வந்த கதை" தான் என நம்ம வலைப்பதிவர்கள் போல ஆதிமூலத்தை அசைக்க நான் "சார் இல்ல சார் அதாவது ராமசாமி என்பவர் ஒரு 50000 பணத்தை குப்புசாமிக்கு அனுப்பனும். ஆனா அதை கோவிந்தசாமி வழியா அனுப்பனும்" என சொல்லி முடிக்கும் முன்னே அந்த ஆப்பீசர் " செம த்ரில்லிங்கா இருக்கே, இதிலே வில்லன் யாரு" என சப்புகொட்டி கேட்க எனக்கு மெல்ல குருதி அழுத்தம் அதிகரிக்க தொடங்கியது. அவருக்கு அந்த கதை போரடிக்கவே ஒருவர் மாற்றி ஒருவராக நான் அனுப்பப்பட்டு என் கதை ரிஜக்ட் செய்யப்பட்டு நான் வந்து நின்ன இடம் இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் உள்ளே நுழைந்த இடம். அதாவது பேங் வாசல்.

என் நிலைமை அறிந்து பரிதாபப்பட்ட ஒரு வெள்ளை வேட்டி என்னிடம் வந்து " உங்க கதையை என்கிட்டே சொல்லுங்க" என சொன்ன போது திரும்பவும் ஆரம்பித்தேன்.

"அதாவது சார் இதான் கதை"

"சரி "C" க்கு அக்கவுண்ட் இருக்குதா?"

" சார் "C" ன்னா யாரு சார்?"

"அய்யோ அதான்ப்பா கோவிந்தசாமி"

"அது யாரு சார்?"- கிட்டத்தட்ட என் கதையே எனக்கு மறந்து
போயிருந்தது.

பின்னர் எனக்கு அவர் தெளிவு படுத்தி திரும்பவும் கேட்டார்.

" இப்ப சொல்லுங்க அந்த "C" கோவிந்தசாமிக்கு அக்கவுண்ட் இருக்குதா?"

"ம் பாய் கடையிலே இருக்கு சார்" என சொன்ன போது கூட அவர் அமைதியாக எனக்கு ஏதோ நல்லது செய்யனும்னு ஆர்வமா இருக்க அந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரலாம் அல்லது அட்லீஸ்ட் அடுத்த ஜென்மதிலாவது அவருக்கு நல்ல மருமகன் கிடைக்கலாம். அத்தனை ஒரு புண்ணியாத்மா.

"இந்த பேங்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் வச்சிருக்கும் ஒருத்தரை கூட்டிகிட்டு வாங்க.அதாவது "D" என்கிற புது கேரக்டரை அறிமுகப்படுத்துறோம். அவருக்கு கிருஷ்ணசாமின்னு பேர் வச்சுப்போம். அதோ இருக்கும் அந்த வெள்ளை சல்லான்ல பில்லப் பண்ணி 50028 ரூபாய் அந்த பைல்ஸ் ஆளுகிட்டே போய் "D" யின் அக்கவுண்ட்ல கட்டுங்க. நீங்க கூட்டி வந்த ஆள் "D" கிட்டே இப்போ ஒரு வித்ட்ராயல் பாஃம்ல 50000க்கு பில் பண்ணி ஒரு கையெழுத்து வாங்கி வச்சுகிட்டு பின்னே இந்த் சிகப்பு செல்லானை எடுத்து அதிலே அந்த யாருக்கு அனுப்பனுமோ அவரு அக்கவுண்ட் நம்பரை அந்த பேங் எஃப் ஓ சி கோட் நம்பரையும் போட்டு பின்னே 50000 ஃபில் பண்ணி அந்த வித்ட்ராயல் ஸ்லிப்போட சேர்த்து அந்த மாமி கிட்டே குடுங்க"

உங்க யாருக்காவது புரிஞ்சுதா. புரியலை தானே. அனேகமாக இந்த பதிவை படிக்கும் சீனா சார் தவிர யாருக்கும் புரியாது. நான் அப்படியே தாரேஜமீன்பர் பையன் மாதிரி தலையிலே கைவைத்து உட்காந்து கொண்டேன். தலை கிர்ன்னு சுத்துச்சு. "குளிர்ந்த குடிநீர்" என எழுதியிருந்த பைப்பை திறந்து கொதிக்கும் நீரை குடிக்காமல் கீழே ஊத்தினேன்.

என் நிலமையை உணர்ந்த அந்த மனிதர் தானே "D" கேரக்டரா மாறி கிட்ட தட்ட என் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைத்தார். கிட்ட தட்ட பாதி கிணறு தாண்டியாகிவிட்டது.

"இப்ப போய் இந்த வெள்ளை செல்லானையும் இந்த 50028 ரூபாயையும் அந்த கவுண்டர் ஆள் கிட்டே போய் கட்டிட்டு வாங்க" என அவர் சொன்னபடி செய்ய அந்த பெரிய நாய் கூண்டில் இருந்த பைல்ஸை நெருங்கினேன். என்னை கிட்டத்தில் பார்த்ததுமே அவர் எரிஞ்சு விழுந்து "அங்க அங்க அங்க போங்க" என சின்ன நாய்கூண்டை காட்டியதும் அங்கே போனேன். பின்னர் சின்ன நாய்கூண்டு "நீங்க படிச்சவங்க தானே? 25000க்கு மேலே அந்த கவுண்டர்னு தெளிவா எழுதி போட்டிருக்கே" என சொல்ல திரும்பவும் பைல்ஸ் கிட்டே போனேன். ஒரு வழியாக பைல்ஸ் வேலையை முடித்தது.

இப்படியாக அந்த வேலை கிட்ட தட்ட முடியும் தருவாயில் கடைசியாக அந்த ஆப்பீசர் கிட்டே போனேன். அவர் தலையில் அடித்து கொண்டு "தேதிய போடுங்க சார்" என சொன்ன போது அவருடைய டேபிளில் வைத்து தேதியை போட போனேன். பதறிப்போன அவர் "அய்யோ அங்க கஸ்டமர் டேபிள்ல வச்சுதான் தேதி போடனும். இங்க வச்சு போட கூடாது" என அதட்டிய போது நான் அப்பாவியாய் கேட்டேன் "ஏன் சார்?" அதற்கு அவர் சொன்ன பதில் தான் கிட்ட தட்ட இந்த
பதிவுக்கே காரணம். "இங்க வச்சு போட்டா கம்பியூட்டர் கராப் ஆகிடும் சார். சும்மா நொய்யி நொய்யின்னு சந்தேகம் கேட்காம அங்க போங்க சார்"

அடப்பாவமே! என் பையன் இது வரை குழந்தையிலே இருந்து கிட்டத்தட்ட முப்பத்தி ஏழுதடவை என் லேப்டாப்பிலே உச்சா அடிச்சிருக்கான். ஆனா கராப் ஆனதில்லையே ஆனா இங்க வச்சு தேதி போட்டா கராப் ஆகிடுமாம். "அதல்லாம் ஆகாது சார்" என நான் சொல்ல அவர் கோவத்திலே உச்சஸ்தாயில் கத்த அங்கே அவசரப்பட்டு ஓடி வந்த நம்ம "D" ஆப்பீசர் கிட்டே போய் "சார் இவரு இத்தனை நாள் துபாய்ல இருந்துட்டாரு. அதனால இங்க வச்சு தேதி போட்டா கம்பியூட்டர் கராப் ஆகிடும்னு தெரியாது" என சமாதானப்படுத்த ஒட்டு மொத்த பேங்கும் என்னை நோக்கி திரும்பியது. "சார்க்கு சேர் போடு, சாருக்கு சூடா மோரு குடு, சார் இங்க குடுங்க நான் தேதி போடுறேன், சார் ஒரு செம பிளான் இருக்கு. இப்ப மாசா மாசம் ஆயிரம் ரூவா போட்டா காங்கிரஸ் தமிழ்நாட்டுல தனித்து ஆட்சி அமைக்கும் போது 25 கோடி ரூவாய் தருவோம் சார்" "சார் உங்க பேங் எது சார், எது வழியா பணம் அனுப்புவீங்க?"............ நான் உதுமான்அலி காக்கா பேங் வழியா பணம் அனுப்பினதை கடைசி வரை சொல்லவேயில்லை.

கிட்ட தட்ட உலகக்கோப்பையை ஜெயித்த டோனி மாதிரி திரும்பி வரும் முன்னர் அந்த ஆப்பீசரை பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். "ஏன் சார் ஒரே எஸ் எம் எஸ் வழியா நம்பரை மாத்தாம போன் புரொவைடரை மாத்தும் வசதி போல பேங்கை மாத்தும் வசதி எப்ப சார் வரும்?"

இத்தனைக்கும் என் கூடவே இருந்து எனக்கு உதவி செய்த அந்த "D" அடுத்த ஜென்மத்திலும் எனக்கு மாமனாராக கடவ்து!

தற்போதைய செய்தி: அந்த பணம் சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வந்து விட்டதாம். என்ன காரணம் என நாளை போய் கேட்க வேண்டும்.

17 comments:

  1. >>>>
    பேங்ல போய் இந்த பணத்தை போட்டு வா என என்னிடம் சொல்லி பணத்தை கொடுத்தால் அந்த மஞ்சள் பையை கக்கத்தில் வைத்துக்கொண்டு போய் பேங் உள்ளே எதுனா நல்ல இடமா பார்த்து டபார்ன்னு போட்டுவிட்டு திரும்பும் அள்வுக்கான மினி சைஸ் மூளைக்கு புரொப்பரைட்டனான என்னிடம்

    ooppaningkala kool poodalaam.. siksaree adiccuttiingkaLee../ஓப்பனிங்க்ல கோல் போடலாம்.. சிக்சரே அடிச்சுட்டீங்களே.. கலக்கல் காமெடி

    ReplyDelete
  2. என்ன கொடுமை "சரவணா" இது???????????

    ReplyDelete
  3. இன்னும் ரெண்டு வருசம்தான் அப்புறம் நட்டுவே இதெல்லாம் நல்லாச் செய்வான். அப்ப இருக்கு உமக்குக் கச்சேரி

    ReplyDelete
  4. பேங்க்ல வேலை செய்றவங்களை சூப்பரா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க சார்..!!அவங்க மட்டும்தான் அதிபுத்திசாலிங்க மாதிரியும், நாமெல்லாம் அடிமுட்டாளுங்க மாதிரியே நடத்துவாங்க...

    ReplyDelete
  5. பேங்குலே ஒரு கூண்டிலியிருக்கும் புலியும் அடுத்த கூண்டிலிருக்கும் கரடியும் வூட்டுக்கதைகள் பேசிக்கொண்டே நோட்டை எண்ணி நம்மை கடுப்படிக்கும் விவரங்களை விட்டுட்டீங்களே!!!

    மொத்தத்தில் மண்டை காஞ்சுது.

    ReplyDelete
  6. //பேங்கை மாத்தும் வசதி எப்ப சார் வரும்?//
    எத்தனை பேங்க் தான் மாத்துவீங்க!? எல்லாமே அப்டித்தான். Job security.

    அது சரி, அப்புறமும் ஏன் திரும்பி வந்தது. ?
    நாளைக்கு பதிவைப் பார்த்தால்தான் தெரியும்.:))

    ReplyDelete
  7. இதுக்கு நீங்க 'C' இருக்கிற இடத்துக்கே நேர்ல போய்ப் பணத்தைக் கொடுத்திட்டு வந்திருக்கலாம். இல்லன்னா அவர் பேருக்கு டிடி எடுத்துக் கொரியர்ல அனுப்பி இருக்கலாம்.

    என்னது, டிடி, கொரியர் அப்படின்னா என்னவா?

    ReplyDelete
  8. Kadhai ezhudurathuku badhila thirai kadhaiyey ezhuthitingaley... superappu...

    ReplyDelete
  9. நல்ல கலக்கல்! பேங்க்-ல இருக்கிறவங்க அடிக்கிற லூட்டி இருக்கே! அதுவும் எஸ்.பி.ஐ. போன்ற பெரிய வங்கில இன்னும் மோசம். நல்ல காமெடி பதிவு!

    ReplyDelete
  10. நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஸ்டேட் பேங்க் போல தெரிகிறது
    நானும் கடந்த இரண்டு வேகஷன்களாக நெட் பாங்கிங் ஆக்டிவேட் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
    இன்னும் நடந்த பாடில்லை

    ReplyDelete
  11. இத்தனைக்கும் என் கூடவே இருந்து எனக்கு உதவி செய்த அந்த "D" அடுத்த ஜென்மத்திலும் எனக்கு மாமனாராக கடவ்து!

    உங்க வேண்டுதல் பலிக்கட்டும் ................

    ReplyDelete
  12. 'B' கிட்ட நேர்ல வந்து வாங்கிக்க சொல்லுங்க. அதுதான் பெஸ்ட் :))
    ஷோபா

    ReplyDelete
  13. எனக்கு ABCD யே மறந்து போச்சு இப்ப உங்க கத கேட்டு... :))))

    //இத்தனைக்கும் என் கூடவே இருந்து எனக்கு உதவி செய்த அந்த "D" அடுத்த ஜென்மத்திலும் எனக்கு மாமனாராக கடவ்து!//
    அபி அம்மா... நோட் திஸ் பாயிண்ட்... :)))))

    ReplyDelete
  14. வெற்றி! வெற்றி! வெற்றி! 'பி'க்கு பணம் கிடைச்சிடிச்சு :)
    இப்படிக்கு
    பி

    ReplyDelete
  15. விளக்குமாறு மீசை!!!!!!!!!!!!

    மாமி போட்டுருக்கும் செயின் டிசைனைப்பத்தி ஒன்னுமே சொல்லலே?????????????

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))