
ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. மே மாதம் 2011ல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என்று நினைத்தோம். ஆனால் முன்கூட்டியே வந்தது. ஏப்ரல் 13 அன்று தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எல்லோரும் சொல்லிப்பார்த்தார்கள். அதற்கு அடுத்த நாள் பொது விடுமுறை வருகின்றது. பலரும் பழைய நினைவிலே அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடுவர், சிரமமாய் இருக்கும் என சொல்லியும், +2 , 10 வது பொது தேர்வுகள் நேரம் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தும் தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை.
போகட்டும் என எதிர் கொண்டோம் அதையும். பின்னர் யார் யார் நம்முடன் கூட்டணி என்ற பிரச்சனை. பாமகவை கொண்டு வந்தோம். அதன் முன்னர் பிப்ரவரி முதல் தேதி கலைஞர் டெல்லி பயணம். எத்தனை தொகுதி என பேசி முடிக்கப்படும் என நினைத்தோம். முதல்வர் மாநாடு முடிந்ததும் சோனியா அம்மையாரை, பிரதமரை சந்திக்க முடிந்த போதும் காங்கிரசில் ஐவர் குழு தான் அணைத்தையும் முடிவு செய்யும் என கூறப்பட்டது. பிரச்சனை. சந்திப்பு முன்னர் பாமக எங்களோடு உண்டு என சொன்னார் கலைஞர். மருத்துவர் இல்லை என்றார். அடுத்த பிரச்சனை.அடுத்த நாள் திமுகவின் தொலை தொடர்பு அமைச்சராக இருந்த ராசா கைது. பத்திரிக்கைகள் கொக்கரித்தன. திமுக அழிந்து விட்டதாக அறிவிப்பு செய்தன.பிரச்சனை. பின்னர் ஐவர் குழு அமைக்க தாமதம் ஆனது. இதனிடையில் காங்கிரசில் ஒரு சாரார் பாதிக்கும் மேல் தொகுதிகள் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆரம்பிக்க இதை எல்லாம் ஜுனியர் விகடனும், ரிப்போர்டரும், தினமலரும், தினமணியும் கடந்த சில ஆண்டுகளாக கூட்டணியை உடைக்கும் முயற்சியின் உச்சகட்ட போராட்டத்தை தொடங்கின. இது அதற்கடுத்த பிரச்சனை.
பின்னர் பாமக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே நேரம் காங்கிரஸ் ஐவர் குழு அமைக்கப்பட்டு அதிலே இளங்கோவன் இல்லை என சத்தியமூர்த்தி பவன் அல்லோகலப்பட்டது. இங்கே பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனிடையே தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் சேருமா எது சேரும் எது ஒதுக்கப்படும் என சரியாக தெரியாத நிலை உண்டானது. ஏனனில் திமுக காங்கிரசை கைகழுவினால் அதை இரு கரம் நீட்டி வரவேற்க அதிமுக தயாராக இருந்தது. அதன் காரனமாகவே தேமுதிகவுக்கு சீட் எண்ணிக்கை இத்தனை என சொல்ல முடியாத நிலை அதிமுகவுக்கு. இங்கே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை இழுபறியாகவே இருந்தது. அதிமுக இன்னமும் காங்கிரசுக்கு கதவு திறந்து இருந்தது. உடனே தேமுதிகவை அந்த பக்கம் தள்ளிவிட "மானம் உள்ளவர், ரோசக்காரர் அந்த பக்கம் போகமாட்டார் " என அஞ்சாநெஞ்சன் ஒரு பேட்டி கொடுத்து அங்கே தள்ளிவிட்டார். அன்றே 41 வாங்கி கொண்டு அது அங்கே அடக்கமாகியது. இங்கே அதற்குள் விடுதலை சிறுத்தைகளுக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் இன்னும் இங்கே முரண்டு பிடித்து கொண்டு தான் இருந்தது.
பின்னர் காங்கிரஸ் ஐவர் குழு எல்லாம் டெல்லி போய் அது சுறுங்கி ஒருவர் குழுவாக குலாம்நபி ஆசாத் இங்கே வந்தார். அதற்குள் முஸ்லீம் லீக், மூமுக ஆகியவற்றுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸின் குலாம் வந்து பேசும் போது அந்த 110 என்பது குறைந்து கார்திக் சிதம்பர பார்முலா 72க்கு வந்து பின்னர் 63க்கு வந்து அதும் முடியாமல் குலாம் திரும்பி போக அதே நேரம் கொமுகவுக்கு 7 சீட் கொடுக்கப்பட்டு கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நேரத்தில் அந்த நடுநிலை நாளேடுகள், வாரமிருமுறை ஏடுகள் கொட்டம் அடக்க முடியா குதிரையாக திமிறிக்கொண்டு அலைந்தன. பின்னர் திமுகவின் ராஜினாமா முடிவு, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உடன்பாடு 63 சீட்டுகள் என ஒரு வழியாக எங்கே பயணிக்கிறோம் என தெரியாத பயணத்தை திமுக ஒருமுகப்படுத்தி ஒரு பாதை அமைத்தது. அடுத்த பிரச்சனை எந்த எந்த தொகுதி என பிரிப்பது தான். அது காங்கிரஸ் தவிர மற்றவர்களுக்கு சுலபம் தான் எனினும் காங்கிரஸ் போலவே திமுகவும் நகம் கடிக்க தொடங்கியது. ஏனனில் எல்லோருக்கும் நன்றாக தெரியும். காங்கிரசின் கோஷ்டி பிரச்சனைகள். அது நடந்து கொண்டு இருக்கும் போதே அந்த பக்கம் அதிமுக அடுத்த அடுத்த கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய சூழலுக்கு ஆளானது.
இதனிடையே திமுக தன் கட்சி வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பணியும் சளைக்காமல் நடந்து கொண்டு இருந்தது. அதே வேளையில் திமுக தலைவரின் மனைவியும் மகளும் கூட கலைஞர் டிவியின் காரணமாக விசாரிக்கப்பட்டு கொண்டு இருந்தனர். பத்திரிக்கைகளுக்கு கேட்கவா வேண்டும்? இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே தேர்தல் அறிக்கையும் தயாராகிக்கொண்டு இருந்தது. பின்னர் திமுக, பாமக, விசி, கொமுக என கூட்டணிக்கட்சிகள் தங்கள் வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்க தொடங்கினர். அது போல திமுகவும் அறிவித்தது. வேதைம், கடலூர் போன்ற ஒரு சில தொகுதிகள் தவிர வேறு எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை. மார்ச் 19ம் தேதி தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. மக்களுக்கு உண்மையாக என்ன தேவை என்பதோடு கவர்சியாக என்ன தேவை என்பதும் அதிலே சொல்லப்பட்டது. அதிலே மற்ற கட்சிகள் கவனிக்க தவறிய ஒரு விஷயமும் இருந்தது. அதை இந்த பதிவின் கடைசியில் சொல்கிறேன்.
அதன் பின்னர் இரு நாட்களுக்கு அறிவாலயத்தில் நடந்தது எல்லாமே வியூகம் அமைக்கும் பணி தான். கிட்ட தட்ட இந்த தேர்தலில் கதாநாயகன், கதாநாயகி, பிரச்சார பீரங்கி புண்ணாக்கு புடலங்காய் என எல்லாவற்றையும் விட அந்த 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடந்த அந்த 3 நாட்களில் ந டந்த தேர்தல் போரின் வியூகம் தான் என்னை கேட்டால் இந்த தேர்தலில் திமுக வெற்றிக்கான கதாநாயகன். ஆமாம்.
கலைஞர்,பேராசிரியர், தளபதி, அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி, நட்சத்திர பேச்சாளர்களாக நடிகர் பாக்கியராஜ், நடிகை குஷ்பூ, குமரிமுத்து, வாகைசந்திரசேகர், நெப்போலியன் ஆகியோர் என முதலில் முடிவானது. பின்னர் திண்டுக்கல் லியோனியிடம் கேட்கப்பட்டு அவரும் ஒத்துக்கொண்டார். பின்னர் நடந்த விவாதத்தில் யார் யார் எந்த எந்த ஆயுதம் ஏந்துவது என விவாதிக்கப்பட்டது.அதாவது எப்படி பேச வேண்டும் என்பது தான் ஆயுதம். தேர்கள், சாரதிகள் தயாரானது. தவிர எந்த எந்த திசையில் யார் யாருக்கு செல்வாக்கு என பிரிக்கப்பட்டது. அதன்படி தயாநிதி முதலில் சென்னை முழுமைக்கும், பின்னர் கோவைப்பகுதி எனவும், கனிமொழி விருதுநகர் , நெல்லை, குமரி எனவும், பேராசிரியர் உடல் நிலை கருத்தில் கொண்டும் அவருடைய வில்லிவாக்கம் தொகுதியையும் (முன்னர் போல சின்ன தொகுதி இல்லை இப்போது) பார்க்க வேண்டியும் இருப்பதால் அவரை சில தொகுதிகளில் மட்டும் வைத்து கூட்டம் மட்டும் நடத்துவது என்றும் அன்றைய தினமே அவரை கொண்டு வந்து தலைநகரில் சேர்த்து விடுவது என்றும், தளபதி தன் தொகுதி தலைநகரில் இருப்பதால் காலை 5.30 முதல் காலை 10 மணி வரை தினமும் அங்கே பிரச்சாரம் பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம் என போய் அந்த அந்த மண்டலங்களுக்கு வேன் மூலமாக பிரச்சாரம் எனவும் இரவு கண்டிப்பாக தலைநகருக்கு திரும்பி வந்து விட வேண்டும் என்றும் முடிவானது. பாக்யராஜ் கொங்கு மண்டலத்தில் வேன் மூலமும், குமரி முத்து நாகர்கோவில் மண்டலத்திலும், நெப்போலியன், வாகை சந்திரசேகர் போன்றவர்கள் ஒரு வழி அமைத்தும் வியூகம் அமைக்கப்பட்டது.
கூட்டனி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள், பாமக, காங்கிரஸ், திராவிடர் கழகம், சுபவீ அய்யா ஆகியோரும் தனித்தனியாக சுழன்றனர்.
இதில் அழகிரியோ தன் மதுரை மண்டலம் தென் மண்டலத்தை முழுமையாக பார்த்து கொள்வதாக கூறினாலும் அங்கே கொமுகவுக்கோ, விசி, பாமகவுக்கோ அத்தனை செல்வாக்கு இல்லை என்பதாலும் காங்கிரசை மட்டுமே அவர் கூட்டணியாக நம்பி இருந்ததாலும் தவிர அந்த பகுதி தேமுதிக தலைவர் விசயகாந்து சொந்த தொகுதி அதனால் கொஞ்சம் வாக்குகள் அவர் கட்சிக்கு அங்கே அதிகம் என்பதாலும் கிட்ட தட்ட அவர் வியூகத்தில் தொங்கலில் விடப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். அப்போது தான் அவர் வடிவேலுவை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். (அதை பின்னர் விரிவாக பார்ப்போம்)
இதில் கிட்ட தட்ட எல்லோருமே அதாவது கலைஞர், தளபதி தவிர யாரும் ஜெ, மற்றும் அதிமுகவை பற்றி விமர்சிக்காமல் தாங்கள் செய்த நன்மைகள், செய்ய போகும் நன்மைகள் அதாவது தேர்தல் அறிக்கை மட்டுமே பிரச்சாரம் அதாவது பாசிட்டிவ் அப்ரோச் மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அது போல அதிமுக அணியினர் மூலமாக வரும் தொல்லைகளை உடனுக்குடன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க பொன் முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு குழு. பாவம் அது ஒரு கட்டத்தில் தேர்தல் கமிஷன் மேலேயே குற்றம் சாட்டி நீதிமன்றம் சென்ற சம்பவமும் நடந்ததது என்பது சோகம்.
இப்படியாக வியூகம் அமைக்கப்பட்டு கலைஞரின் முதல் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் திருவாரூரில் நடக்கும் வரை ஒரு திட்டமிட்ட பாதையில் தான் திமுக மெதுவாக அடியெடுத்து வைக்க தொடங்கியது. அங்கே வடிவேல் பேசிய கன்னிப்பேச்சு அதிரடியாக இப்படி ஒரு மாற்றம் கொண்டுவரும் என யாரும் அத்தனை ஏன் கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் அய்யா, திருமா உட்பட யாரும் விசயகாந்தை அதுவரை விமர்சிக்காமல் இருந்த போதும் இவர் தனது அதிரடியால் ஒரே ஒரு கன்னிப்பேச்சால் அந்த மேடையில் இருந்தவர்களை விட அந்த பேச்சை கேட்க விசயகாந்தை அதிகம் அதிர்சியடைய செய்து இருக்க வேண்டும். அன்றைக்கு அடுத்த நாள் தான் விசயகாந்து ஒரு மலிங்கா போல சீண்டி விட்டால் சின்னாபின்னமாகும் ஒரு தண்ணி பாம்பு என்று மற்ற தலைவர்களுக்கு புரிந்து போனது.
அடுத்த நாள் முதல் விசயகாந்தின் குடி, குடித்துவிட்டு தனது வேட்பாளரையே அடி, கூட்டணி கட்சி கொடிகளை இரக்க சொல்லி மிரட்டியது, பொதுவாகவே கொடியை இரக்கு என சொன்னால் அது அசம்பாவிதம் என நினைப்பவன் தொண்டன். தன் தலைமைக்கு ஒரு கேடு வந்தால் மட்டுமே கொடி இரக்கப்படும். அப்படி எல்லாம் விசயகாந்து அடித்த ரகளையால் வடிவேலுவை மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுக்க பயன்படுத்திக்கொள்ள வியூகம் மாற்றி அமைக்கப்பட்டது.
இதனிடையே அந்த பக்கம் அதிமுக தன் பங்குக்கு எல்லாமே திமுகவுக்கு சாதகமாக செய்தது. சாதிக்பாட்ஷா தற்கொலை அன்றைக்கு அதை பூதாகரமாக்கி இருக்க வேண்டிய அதிமுக தன்னிச்சையாக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிக்கும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு சாதிக் பாட்ஷா தற்கொலையை நீர்த்து போக வைத்தது. தன் அணிக்கு எதிராக 3 வது அணி அமைக்கும் விதையை அதுவே போட்டு தண்ணீர் ஊற்றியது. மதிமுகவை கழட்டி விட்டது. அதனால் மதிமுக மீது நடுநிலையாளர்கள் பார்வையும் அனுதாபமும் அதிகரித்தது. அபசகுணமாக இரண்டாவது பட்டியல் வெளியிட நேர்ந்தது. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் அதிமுக இருந்தும் அதை சரியாக செய்ய இருந்த வைகோவை அதிமுக இழந்தது. அதை கொண்டு பட்டி தொட்டியில் சேர்க்கும் வல்லமை படைத்த நாஞ்சில் சம்பத் பாவம் பட்டிமன்றத்தில் நடுநிலை நீதிபதியாகிப்போனார். (ஆனால் இங்கே பட்டிமன்ற நடுவர் லியோனி திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு சென்று கொண்டு இருந்தார்) ஆனால் அந்த பணியை செய்ய தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியனை மக்கள் அதிமுக கிளைக்கழக பிரதிநிதியாக மட்டுமே பார்த்து வருவதால் அதுவும் பயன்படவில்லை. ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பிரச்சாரம் மக்களிடம் அத்தனை பெரிய வரவேற்பை பெறவில்லை. தவிர நெப்போலியன் போன்றவர்கள் தங்கள் செய்த நிறைவேற்றிய திட்டங்களை சர்வர் சுந்தரம் நாகேஷ் பாணியில் வரிசையாக 8 நிமிடம் அடுக்கி கொண்டே போய் மூச்சு வாங்கி நிற்கிறார். ஆனால் விசயகாந்தும் மூச்சு வாங்கி தள்ளாடி நிற்கிறார். இந்த இரண்டு மூச்சு வாங்கலுக்கும் மக்களுக்கு வித்யாசம் புரிந்து போனது. அந்த பக்கம் சீமான் பிரச்சாரம் இருந்தாலும் அது திமுகவை பெரிதும் பாதிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ராகுலுக்கு நெருக்கமான கரூர் ஜோதிமணி "அண்ணா என் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் " என கெஞ்சலாக கடிதம் அனுப்பியது போன்ற சில கேவலமான சம்பவங்கள் தவிர்த்து வேறு எதும் பாதிப்பு திமுக அணிக்கு இல்லை.
விசயகாந்து "ஞாயிறை" பார்த்து சனி என்கிறார். சுற்றி சுழலும் புயலை பார்த்து பிணி என்கிறார். ஆனால் தான் தொண்டை வலி என பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கின்றார். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர். ஜெயலலிதாவோ அட்டையில் வைத்து படிக்கிறார். இங்கே வடிவேலுவோ கருத்தை உள்வாங்கி கொண்டு அவர் பாணியில் நடிக்கிறார், பாடுகிறார், குழந்தைகள் பெண்கள் எல்லாம் சிரிக்கும் அளவு சிரிக்க வைத்து தேர்தல் அறிக்கையை கொண்டு போய் சேர்க்கின்றார். பாக்கியராஜ் குட்டி கதைகள் சொல்லி தேர்தல் அறிக்கையை மக்கள் மனதில் பதிய வைக்கின்றார். குமரி முத்து அரசியல் ஒப்பீடு செய்து பேசுகின்றார். நெப்போலியன் மக்களை கவரும் விதத்தில் பேசுகின்றார். குஷ்பூ பெண்கள் கூட்டத்தை கூட்டுகின்றார். அங்கே ஜெயலலிதாவை தவிர யாரும் பிரச்சாரத்துக்கு இல்லை. இல்லவே இல்லை. அது தேவையும் அங்கு இல்லை என்கிற அளவில் முந்தைய ஆட்சியில் நன்மை எதும் செய்திருக்கவும் இல்லை.
பதிவின் ஆரம்பத்தில் சொன்னதை இப்போது விளக்குகின்றேன். இந்த தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரண்டர் என்பது கவர்சி திட்டம் இல்லை. ஏனனில் அது 1500 முதல் 2000 வரை தான் செலவாகும். ஆனால் மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழகத்தில் பரவலாக ஓட்டு போடும் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒரு குழுவுக்கு 20 பேர். ஒரு குழுவுக்கு 2 லட்சம் அதாவது 10000 ரூபாய் கடன் குறைந்த வட்டியில் கொடுக்கப்படுகின்றது தொழில் தொடங்க. ஆனால் இப்போது அது 4 லட்சம் ரூபாய். அதிலே 2 லட்சம் மானியம். அதாவது ஒரு மகளிருக்கு 20000 ருபாய் அதிலே பத்தாயிரம் ரூபாய் மானியம். இதன் ரீச் அதாவது நீங்கள் யாரும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கப்போகின்றது என்பது சர்வ நிச்சயம்.
அதிமுக பக்கம் மீடியா பரப்புரை என்று பார்த்தால் ஜெயா டிவி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், ரிப்போர்டர், தினமலர், தினமணி என்று பலமாக இருந்தாலும் திமுக அணியில் சன் டிவி, கலைஞர் டிவி, தினகரன் என்ற அளவிலேயே இருக்கின்றது. ஆனாலும் சமாளித்து வருகின்றது திமுக அணி.
அது போல கட்சிகள் சதவீதம் என்று ஒரு புரூடா கணக்கு எப்போது எல்லோரும் போடுவார்களே, அதில் திமுக அணியில் திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள்,கொமுக, காங்கிரஸ் மூமுக, மு.லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், நாடார் பேரவை, கார்த்திக் கட்சி:-)) , மற்றும் மதிமுகவின் தொண்டர்களின் வாக்கு இருக்கின்றது. கொமுகவினால் திமுக அணிக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு: ஆமாம், ஆனால் அதே நேரம் கொமுக அதிமுக பக்கம் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு வந்திருக்கும் திமுக அணிக்கு. அது இப்போது தவிர்க்கப்பட்டுள்ளது.
அங்கே அதிமுக, இரு கம்யூனிஸ்டுகள் மட்டுமே.தவிர சேதுராமன் கட்சி, தவிர மிகப்பெரிய பலம் கமிஷன். தேமுதிகவுக்கான வாக்கு வங்கி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன என்பது கண்கூடு. அவர்களுக்கு இருந்த 9 சத வாக்கு வங்கியில் நடுநிலையாளர்கள் 6 சதம் அப்படியே போய்விட்டது. மீதி இருகும் 3 சத விசயகாந்து ரசிகர்களால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பதே சந்தேகம். அதே போல தேமுதிக வுக்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடுவார்கள் என்று நம்புவதும் தவறானதாகும்.
ஆக எல்லா சாதக பாதகங்களையும் வைத்து ஆராயும் போது, நாங்கள் வெற்றிக்கோட்டை தொட்டு விட்டோம். நான் களப்பணியில் ஒரு மூன்று தொகுதிகளை மட்டுமே பார்த்தேன் என்பதால் என் ஒட்டு மொத்த கணிப்பை சொல்ல முடியாது என்கிற போதும் சில ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் வெறும் 300 பேரை மட்டும் பார்த்துவிட்டு 150 தொகுதிகள் அதிமுக வெல்லும் என சொல்லும் போது நான் கடந்த ஒரு மாதமாக படித்ததை, கேட்டதை, பார்த்ததை வைத்து ஏன் என் கணிப்பை சொல்ல கூடாது? அதனால் சொல்கிறேன்.
திமுக தனியாக 100 முதல் 110 தொகுதி வரை வெல்லும். இந்த கணிப்பு சிலருக்கு எரிச்சலூட்டலாம். அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.ஒரு பூரணம் என்று சொல்வார்களே, ஒரு முழுமை என்று சொல்வார்களே, ஒரு பௌர்ணமி என்று சொல்வார்களே, அது போல ஒரு ஒரு நிலையில் இருக்கின்றோம் இப்போது. தேர்வு நன்றாக எழுதி முடித்த மாணவனின் மனநிலையில் இருக்கின்றோம். மனது நிறைவாக இருக்கின்றது.
வெல்க திமுக! வெல்க திமுக! வெல்க திமுக!