இந்த முதல் காதல் முதல் முத்தம் எல்லாம் கவிதை எழுதுபவர்களுக்கு எப்படி ஒரு கருப்பொருளோ அதே போல எனக்கு அந்த முதல் விமானப்பயணமும் அப்படியே. அது ஆச்சு இருபது வருஷம். மும்பை - செம்பூர் கமலா லாட்ஜில் கூட்டத்தோடு கூட்டமாக படுத்திருந்த என்னை உசுப்பி விட்டு "அனேகமா காலை 4 மணிக்கு ஏர்போர்ட் போகனும். ரெடியா இருங்க" என சொன்னபோது இரவு 11 இருக்கும். நான் அது முதலே தூங்கவில்லை. ஏரோப்பிளேன் கனவு என்ன ஒரு வருஷ இரு வருஷ கனவா . எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலான கனவு. அதில் பறக்க வேண்டும் என்று பேராசை எல்லாம் கூட இல்லை. அதை கிட்டத்தில் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் அதிஷ்டம் இருந்தால் அந்த படிகளில் ஏறி மேலே இருந்து அன்பேவா எம் ஜி ஆர் போல ஒரு கூலிங் கண்ணாடி போட்டுகிட்டு மத்தவங்களுக்கு டாடா காட்டிவிட்டு இறங்கி விட்டால் கூட போதுமான அளவிலேயே இருந்தன என் கனவுகள்.
இதோ காலை 4 மணிக்கு ஏஜண்ட் வந்து விடுவார். விமானத்தை அருகே பார்ப்பது என்ன, அதன் படியில் ஏறி கூட்டத்தினரை பார்த்து டாடா காட்டுவது என்ன, பறக்கவே செய்ய போகிறேன் என்ற அந்த நினைப்பே தூக்கத்தை விரட்டி விட்டது. இதோ என் கூட வரும் முபாரக், இன்னும் ஒரு பையன் இப்ராகிம் அவனை வழியனுப்ப வந்த அவனது அண்ணன் இப்படியாக நாங்கள் எல்லோருமே விடியல் காலை ஒரு 3 மணிக்கு எல்லாம் மும்பை சாந்தாகுரூஸ் விமானநிலையம் போயாகிவிட்டது. அந்த இப்ராகிமின் அண்ணன் "பசங்கலா அரபில 'தாள்'ன்னு சொன்னா உடனே ஒரு பேப்பரை எடுக்க கூடாது. 'தாள்'ன்னா இங்க வான்னு அர்த்தம் என சொல்லிக்கொடுக்க நான் கர்மசிரத்தையாக அதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன். அரபியில் என் முதல் வார்த்தை பரிட்சியம் அப்போது தான். வாழ்க அந்த வாத்தியார். கடைசி வரை தாள் என்றால் இங்க வா என்பதை தவிர என் அரபிக் புலமை எகிறவே இல்லை. அந்த முதல் வார்தையே எனக்கு அரபிக்ல தெரிஞ்ச கடைசி வார்தையாகவும் ஆகிப்போனது.
ஏஜண்ட் வருவார் வருவார் என நினைத்து மணி நான்கு, ஐந்து என ஓடிக்கொண்டு இருந்ததே தவிர ஆளைக்காணவில்லை. ஒரு வழியாக என் விமான கனவு தகர்ந்து போன நேரத்தில் சாவகாசமாக ஒரு ஆறு மணிக்கு வந்தார். வந்ததுமே "என்னப்பா உங்க பிளைட் 9 மணிக்கு தான். ஆறு மணிக்கு உள்ளே போனா போதும். சிரியன் ஏர்வேஸ், காலை 9 மணிக்கு இங்க எடுத்தா நேரா அபுதாபி தான். நடுப்புற நிக்காது எங்கியும். இங்க பாருப்பா உனக்கு இமிக்ரேஷன் கிளியரன்ஸ் நாட் ரெக்கொயர்டு. ஆனா முபாரக்கும், இப்புராகிமுக்கும் அங்க ஆள் சொல்லிட்டேன். புஷ்ஷிங்ல உள்ள போகனும். சூதனமா நடந்துகுங்க. சரி சரி உள்ள போங்க" என சொல்லி விட்டு டிக்கெட் எங்க பாஸ்போட், விசா காப்பி எல்லாம் கையிலே கொடுத்து விட்டு போயே போயிட்டாரு.
என் கவலை எல்லாம், அடடே ஏர்போர்ட் கிட்டக்க வந்தும் ஒரு ஏரோப்ளேன் கூட கண்ணுல படலையே என்பதிலேயே இருந்தது. இமிக்ரேஷன் எல்லாம் முடிந்தது. பின்னே கஸ்டம்ஸ் செக்கிங். எல்லாம் முடிந்து ஒரு இடத்தில் உட்கார வச்சு பூட்டியவுடன் தான் கண்ணாடிக்கு அந்த பக்கமா ஏரோப்பிளேன் கிட்டக்க பார்த்தேன். பார்த்தேன் என்றால் அப்படி ஒரு பரவசமாக பார்த்தேன். பக்கத்திலே இருந்த ஒருவரிடம் "சிரியன் ஏர்வேஸ்" என்ன கலர்ன்னு கேட்டேன். அவர் தமிழ் தான் என எழுதி ஓட்டியிருந்ததுமுகத்திலேயே. "ஏன் வாங்க போறியா அதை?" என பதில் வந்த போது தமிழன் தான் என கன்பர்ம் ஆனது. இனி அவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை.
கொஞ்ச நேரம் கழித்து வேறு இடத்தில் போய் உட்காந்து கண்டிப்பாக அவன் தமிழனாக இருக்க கூடாது என நினைத்து கொண்டே " சார் திஸ் சிரியன் ஏர்வேஸ் இன்ஜின் குட் கண்டிசன், குட் ரன்னிங்" என "தேர்ந்தெடுத்த நேர்தியான" ஆங்கில வார்த்தைகள் போட்டு பேச்சு கொடுத்தேன். இந்த முறை "இனி இவனிடம் பேசுவதாக உத்தேசம் இல்லை" என இந்தியில் மனதில் நினைத்து கொண்டு அவன் வேறு இடம் பார்த்து போய்விட்டான்.
முபாரக், இப்ராகிம் ஆகியோர் என் சந்தேகம் தெளிவிக்க போதும் என நினைத்து அவர்களிடம் திரும்ப வந்து "சிரியன் பிளைட் இன்ஜின் எல்லாம் நல்லா தானே இருக்கும்? என கேட்டேன். அதற்கு இப்ராகிம் "ஆமாண்ணே கண்டிப்பா நல்லா இருக்கும். ஏன்னா அதான் பாரின் பிளைட் ஆச்சே". எனக்கும் அந்த பதில் திருப்தியாக இருந்து தொலைத்தது. பாரின் மோகம்!
8.30க்கு எல்லாம் அந்த அடைக்கப்பட்ட கதவை திறந்த போது "ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்"ன்னு ஏதோ ஒரு விமானம் மூச்சு வாங்கி கொண்டு நின்றது. சுத்தமாக சத்தமே இல்லாத இடத்தில் கண்ணாடி சிறையில் இருந்து வெளி வந்ததும் அந்த வெட்ட வெளியில் அத்தனை ஒரு சத்தம். ஆனால் காதில் ஹார்லிக்ஸ் ஊற்றியது போல இருந்தது.(எனக்கு தேன் பிடிக்காது) ஏனனில் நான் இத்தனை நள் கண்ட கனவு தேவதைகள் அங்கே ரீங்காரமிட்டு கொண்டு ஒன்று வாலை காட்டியும், ஒன்று வயிற்றை காட்டியும், சிலது வயிற்றின் வழியே மனிதர்களை பிரசவித்து கொண்டும், சில விமான பறவைகள் தன் அடி வயிறு வழியே மூட்டை மூட்டையாக எதையோ ஏற்றிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டும் இருந்தன. அழகாய் சத்தமே இல்லாமல் ஒரு நீண்ண்ண்ட பஸ் வந்து நிற்க நான், முபாரக், இப்ராகிம் ஆகியோர் ஓடி ஏறிக்கொண்டோம். உட்கார சீட் எல்லாம் இல்லை. எல்லாமே ஸ்டாண்டிங் தான். அது என் கனவு தேவதை அருகே கொண்டு செல்லும் வாகனம். மெதுவாக ஊர்ந்து போய் அந்த சிரியன் ஏர்வேஸ் வயிற்று பகுதியின் அருகே நிற்க நான் இறங்கி கூட்டத்தோடு கூட்டமாக பிரம்மித்து போய் அருகே பார்த்தேன். அப்ப்ப்ப்ப்பாடாஆஆ எம்மாம் பெருசு. அதன் இறக்கை அடியில் ஒரு ராட்சத இன் ஜினின் ஃபேன் சுற்றி கொண்டு சத்தம் போட்டுக்கொண்டு இருக்க எல்லோரும் அந்த படி வழியே ஏற நான் மட்டும் அதன் அருகே நின்று கொண்டு பார்த்து கொண்டே அசையாமல் நின்றேன். விமானம் அருகே கீழே தொப்பி போட்ட பைலட்டுகள், விமான பணிப்பெண்கள் சிலர் ஒரு தள்ளு வண்டி போல தன் லக்கேஜ் வைத்து கொண்டு ஏதோ பேசிக்கொண்டு நிற்க ஒரு ஏ கே 47 வைத்திருந்த ஒரு பாதுகாப்பு போலீசின் அந்த துப்பாக்கியை கூட ஆர்வமாக விழுங்குவது போல பார்த்து கொண்டு நின்றேன். அய்யோ இங்கயே ஒரு கூட்டுற வேலை கிடைச்சா கூட போதும். வாழ்நாள் முழுக்க விமானம் பார்த்து கொண்டே இருந்து விடலாம் என நினைத்து கொண்டேன்.
ஏரோப்பிளேன் ஏற படி ஏறும் போது துபாய் பார்ல பெண்கள் ஆட வரும் முன்னே மேடையை தொட்டு கும்பிடுவது போல தொட்டு கும்பிட்டேன் . மேலே உள்ளே நுழையும் முன்னர் திரும்பி அன்பே வா எம் ஜி ஆரை போல கைகாட்ட வேண்டும் பின்னர் பிள்ளையார் மந்திரம் சொல்லனும் என நினைத்து கொண்டேன். அந்த தகர படிகள் என் கால் பதிய பதிய எங்கள் வீட்டு தகர மாட்டு கொட்டகையின் மேலே நின்று ஆணி அடிக்கும் போது சத்தம் வருமே அப்படி வந்தது. மேல் படி வந்ததும் ஒரு அழகான பெண் அத்தனை ஒரு அழகில்லை என்றாலும் விமானப்பணிப்பெண் என்றாலே உலக அழகியாக நான் கற்பனை செய்து கொண்டிருந்த படியால் அந்த பெண் மிகவும் அழகாய் தெரிந்தாள். இருகரம் கூப்பி செயற்கையாக வணக்கம் சொன்ன போது அவள் எனக்கே எனக்காக பிரத்யோகமாக சொல்வதாய் நினைத்து கொண்டு அன்பேவா எம் ஜி ஆர், பிள்ளையார் மந்திரம் போன்றவைகளை மறந்து போனேன். பதிலுக்கு நானும் என் பெட்டியை கீழே வைத்து விட்டு இருகரம் கூப்பி வணக்கம் சொன்ன போது அசூசையாக அவள் பார்த்த பார்வை கூட அப்போது எனக்கு புரியவில்லை. ஒரு வித மோன நிலையில் இருந்தேன். பின்னர் அவள் என்னை தவிர்த்து என் பின்னே வந்த ஒரு அழகில்லா கிழவனுக்கு அதே போல வணக்கம் வந்த போது அந்த கிழவன் மேல் ஆத்திரம் வந்தது.இவனெல்லாம் எதுக்கு பிளைட்ல வர்ரானுங்க என மனதின் உள்ளே மிகவும் கடிந்து கொண்டேன்.
உள்ளே போனதும் அடுத்த அப்சரஸ் என்னை நோக்கி "போர்டிங் கார்ட் ப்ளீஸ்" என கேட்ட போது "அய்யோ இப்பவே சாப்பாடு கொடுத்துடுவாங்க போலிருக்கே" என நினைத்து நீட்டினேன். அவள் " 45 ஏ... கோ டு தட் சீட்" என சொல்லி விமானத்தின் நடுப்பாகம் கிட்ட தட்ட இறக்கைக்கு மேலே நான் உட்காந்து இருப்பது போல ஜன்னல் ஓர சீட் காண்பித்தாள். பின்னர் ஒரு தலைப்பா கட்டின பஞ்சாபி தாத்தா, அடுத்து முபாரக், அடுத்து இப்ராகிம் என நால்வரும் அமர எனக்கு ஏக சந்தோஷம். ஜன்னல் ஓட சீட். எல்லாவற்றையும் கவனிக்கலாம். அப்போது மணி கிட்ட தட்ட 9 நெருங்கியது. சீட் எல்லாம் தடவி பார்த்தேன். ஏதோ என் சொந்த விமானம் போல ஜன்னல் எல்லாம் ஆசையாக தடவிக்கொடுத்தேன். தேவையே இல்லாமல் எங்க வீட்டில் பாத்திரம் தேய்க்கும் இருளாயி கிழவி ஞாபகம் வந்தது. இருளாயி எல்லாம் பிளைட்டில் போகவே முடியாது. நான் தானே பிளைட்டிலே எல்லாம் போனேன் என அதுகிட்டே போய் சொல்லனும் என நினைத்து கொண்டேன். (கருமம்) அப்போது தான் ஞாபகம் வந்தது. ஆகா பிள்ளையார் மந்திரம் சொல்லவே இல்லியே என.
கஷ்ட்கர்த்தே திவ்தேஹாய பக்தேஷ்ட ஜெயதர்மனே .... அட அந்த பொண்ணு ஏன் இத்தனை குட்டை பாவாடை போட்டிருக்கு... ஹய்யோ அந்த சமஸ்க்ரதம் இப்படித்தான் ஸ்டார்டிங் ட்ரபிள் இருககாது, ஆனா பாதில வண்டி நின்னுடும்... அய்யய்யோ இந்த் பிளைட்டுக்கு பெட்ரோல் எல்லாம் போட்டுருப்பாங்க தானே... சமஸ்க்ரதம் வேண்டாம்.. தமிழ்ல முருகன் ஸ்லோகம் இருக்கே... அப்பாடா என்னா ஒரு வாசனை இந்த ஏர்ஹோஸ்டஸ் கிட்டே.. சிலோன் லக்ஸ் போட்டு குளிப்பாளோ?... வால வேல விகாரவா.. என்னது தட்டிலே என்னவோ எடுத்து கிட்டு வர்ரா.. ஒ சாக்லெட்... (பிரித்து வாயில் போட்டேன்) அட புளிப்பு மிட்டாய்.. ஒரு காட்பரீஸ் தரக்கூடாதா... வாரகாமனை நாடிவா... ஹய்யோ ஏன் என் இடுப்புகிட்டே கையை கொண்டு வர்ரா ஆண்டாவா ஆண்டவா... வாடி நாடிடுமோ சிவா... ஓ பெல்ட் போட சொல்றா, ஓக்கே ஓக்கே... எங்கவுட்டேன்...ம் வாடிநாடிடுமோ சிவா... என்னவோ சொல்றாங்க. ம் வாடிநாடிடுமோ சிவா.. வாசிமோகன வேலவா...
பக்கத்தில் பார்த்தேன். இப்ராகிம் என்னவோ முணு முணுத்து கொண்டு இருந்தான். என்னன்னு கேட்டேன். யாசின் ஓதுவதா சொன்னான். அவனும் குட்டை பாவாடை பார்த்திருப்பான் என நினைத்து கொண்டேன். மெல்ல விமானம் ஓடத்துவங்கியது. மெதுவாக ஆரம்பித்து கொஞ்சம் வேகம் எடுத்து அது அதிகமான போது விமானமே குலுங்கியது மெல்ல பயம் வந்தது எனக்கு. ஷஷ்டி கவசம் சொல்லலாமா என நினைத்த போது குபீரென மேலே எழும்பியது. பக்கத்தில் இருந்த பாஜி வலது உள்ளங்கையை நெஞ்சில் வைத்து கொண்டார். ஏற்கனவே அவர் காது டர்பனால் மூடி இருந்தது. மும்பையின் கட்டிடங்கள் எல்லாம் கோணலாக தெரிந்தது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாக சின்னதாகி எறும்பாக ஆனது. பின்னர் பச்சையாக கடல் தெரிந்தது. விமானம் இப்போது சமநிலைக்கு வந்து விட்டது. இதற்காகவே காத்திருந்தது போல சீட் பெல்ட் கழட்டும் சத்தம் சிலம்பொலி போல கேட்டது. நான் முடிச்சு போட்டிருந்த படியால அழகாக சத்தமில்லாமல் அவிழ்து வைத்தேன். அந்த விமான பணிப்பெண் தேவதைஸ் எல்லாரும் குறுக்கும் நெடுக்குமாக எதற்கோ அலைந்தனர்.
எனக்கு மேலே இருந்த பட்டனை தொட்டு பார்க்க ஆசையாக இருந்தமையால் தொட்டேன். ஒரு பெண் வந்தது." ஆர் யூ கால் மீ" என கேட்க நான் "இல்லியே" என தமிழில் செப்பினேன். அவசரத்துக்கு ஆங்கிலம் அடம் பிடிக்கும் எனக்கு. உடனே மேலே இருந்த பட்டனை ஒரு முறை அந்த பெண் அமுக்கி விட்டு என்னவோ சொல்லி விட்டு போனது. நான் பாஜியிடம் " மீ டென் டைம்ஸ் பிளைட். யூ? " என கேட்க அவரு "க்யா"ன்னு கத்த நான் சர்வமும் அடங்கி போனேன். சத்தியமா அவனுக்கு பஞ்சாபி மொழியில் கூட நான் பத்து முறை விமானத்திலே பறந்தேன் என சொன்னால் நம்பவே போவதில்லை. நான் சீட் பெல்ட் முடிச்சி போட்ட அழகை தான் பார்த்து தொலைந்துவிட்டானே!
இப்ராகிம் என்னிடம் "தண்ணி எப்போ தருவாங்க?" என கேட்க மேலே இருக்கும் பட்டனை அமுக்கு. வருவாங்க. அப்ப கேளு அப்படியே பக்கத்து இலைக்கும் பாயாசம் கேளு" என சொன்னேன். ஒருவழியா வந்தது. டின் பீர் ஒன்னே ஒன்னு தான் குடுப்பாங்களாம். பின்னே சாப்பாடுன்னு ஒன்னு கொடுத்தாங்க. எனக்கு பிடிக்காத வஸ்துகளாக இருந்தும் என் கனவு விமானமாச்சே. தேவாமிர்தமா இருந்தது. ஜன்னல் பக்கம் பார்த்தேன். இறக்கையில் சில பிளேட்டுகள் விமானம் திரும்பும் போதெல்லாம் வாய் பிளந்தது. அய்யய்யோ நான் மட்டுமே தான் அதை கவனிக்கிறேன். போய் பைலட் கிட்டே சொல்லலாமா என நினைத்து சொல்லாமல் விட்டுட்டேன்.
சில சமயம் "டும் டும் டுட் டுர்ர்ர்ர்ர்" என காற்று வெற்றிடத்தில் போகும் போது பயங்கர சப்தம் கேட்ட போதெல்லாம் கடலில் குதிக்க தயார் நிலையில் இருக்க வேண்டி காலுக்கடியில் இருந்த உபகரணங்கள் சரியாக உள்ளதா என தொட்டு பார்த்துக்கொண்டேன். ஏனோ தெரியவில்லை. நான் வாடகை சைக்கிள் எடுத்தால் கூட கொஞ்ச நேரத்தில் காற்று இறங்கி விடும் வீக்கான ராசி என் ராசி. என் சீட் முன்பாக இருந்த "வாந்தி எடுக்கும்" பையை கையிலே எடுத்து வாந்திக்கு முயன்றேன். பயத்தில் எச்சில் கூட வரவில்லை. ஒயின் ஷாப்பில் பீரை கொடுக்கும் காதித பை மாதிரியே இருக்குதே என நினைத்து கொண்டேன். கக்கூஸ் எங்கே இருக்கின்றது என தேடிப்பிடித்து போனேன். உபயோகப்படுத்த இல்லை. அதன் "உள்கட்டமைப்பு"கள் எப்படி என பார்க்கவே. கெமிக்கல் டாய்லட் அனியாயத்துக்கு சத்தம் போட்டு உள்ளிழுத்தது. மூல வியாதிக்காரர்கள் ஜாக்கிரதை என போர்டு வைக்க வேண்டும். அந்த நேரத்தில் விமானம் வெடிக்க கூடாது என சாமியை வேண்டிக்கொண்டேன். அப்படி நேரிடின் நான் ஆபாசமாக போட்டோப்படுத்தப்பட்டு எதாவது அரபிக் பேப்பரில் வந்து விடுவேனோ என்கிற அச்சம். உள்ளே இருந்த ஏதேதோ வாசனை ஆஃப்டர் ஷேவிங் திரவியத்தை எல்லாம் கையில் காலில் பூசிக்கொண்டு நாறிப்போய் வெளியே வந்தேன்.
என் பக்கத்து சீட் பாஜி போல கண்ணுக்கு கருப்பு துணி கேட்க வேண்டி மேலே பொத்தானை அமுக்கினேன். வந்த பணிப்பெண்ணிடம் "இங்கிலீஸ் மேகசீன் பிளீஸ். அப்படியே வரும் போது ஒரு பிளாக் துணியும் ப்ளீஸ் ப்ளீஸ்" என சொன்னேன். அந்தம்மாவுக்கு என் ஆங்கிலம் சென்றடைய வில்லை போலிருக்கிறது. ஒரு படமே இல்லாத அரபிக் புத்தகம் கொடுத்த போது அதிலிருந்ததை இடமிருந்து வலமாக முழுவதும் படித்து முடித்தேன்:-) எனக்கு கொடுக்கப்பட்ட புத்தகம் அரபிக் மொழி என புரிய சிலகாலம் ஆனாது என்பது தனி விஷயம்.
விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என தனி மதம் தனி ஜாதி உண்டாக்க வேண்டிடும் என நினைத்து கொண்டேன். இனி நானும் அந்த உயர்சாதியில் ஒருவனாக ஆனதால் பக்கிங்காம் அரண்மனையில் அம்மாவை விட்டு பெண் பார்க்க சொல்லலாம், ஆனால் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அலகாபாத் ஆனந்தபவன்ல பொண்ணு எடுக்கலாம் என்றால் அம்மாவுக்கு அந்த குடும்பமே பிடிக்காது. தினமும் சம்மந்தி சண்டை வரும். அதையும் நிராகரித்தேன். சரி ஒரு செட்டிநாட்டு அரச குடும்பமோ, ஒரு ஊத்துக்குளி ஜமீனோ பார்த்துக்க வேண்டியது தான். ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை.
கீழே சின்னதாக கப்பல் எல்லாம் போனது. உவ்வே.. போயும் போயும் கப்பலில் போகிறானே.. பரம ஏழை போலிருக்கு என முகத்தை திருப்பிக்கொண்டேன். எம்பர்கேஷன் கார்டு கொடுத்து நிரப்ப சொன்ன போது பக்கத்தில் எட்டிப்பார்தேன். முபாரக் ஆக்குபேஷன் இடத்தில் டாக்டர் என எழுதினான். திட்டினேன். ஏன் அப்படி எழுதினாய் என கேட்டேன். இதை பார்த்து விட்டு இன்னும் ஒரு பீர் கொடுத்தாலும் கொடுக்கும் என சொன்னான். அதிர்ந்து விட்டேன். "சரி யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு சொல்லி உன்னை கூப்பிட்டு வைத்தியம் பார்க்க சொன்னா என்ன செய்வாய்? அந்த ஒரு உயிரே போய்விடுமே" என கேட்ட போது அவன் " அது பரவாயில்லை. ஆனா நீ பைலட்ன்னு எழுதினியே. ஒருவேளை இந்த பைலட்டுக்கு நெஞ்சுவலி வந்து உன்னை கூப்பிட்டி ஓட்ட சொன்னா என்ன ஆகும்.ஒட்டுமொத்தமா எல்லா உயிரும் போய்விடுமே" என சொன்னான். அகராதி பிடித்த தமிழன். அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்பதை எப்போது விட்டொழிக்க போறார்களோ?
ஒரு வழியாக கீழே இறங்கும் நேரம் வந்தது. சீட் பெல்ட் முடிச்சு போட்டுக்கொண்டேன். "மீண்டும் வருகிறேன் என் காதலியே. இனி அடிக்கடி வருகிறேன்" என மனதில் நினைத்து கொண்டே என் இருக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டேன். நின்றதும் கீழே இறங்கி ஒரு வாஞ்சையுடன் அதை பார்த்து கொண்டே ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தேன். அபுதாபி என்னை அன்புடன் அரபி மொழியில் வரவேற்றது. ஆச்சு அதல்லாம் இருபது வருஷம். இன்றைக்கு நடந்தது போல இருக்கின்றது!