தேர்தல் ரிசல்ட் வந்த பின்னே ரங்கன் மாமாவை பார்த்தது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டதே என நினைத்து கொண்டிருந்த போதே "என்ன மாப்ள? புது ஆட்சி எப்படி இருக்கு?" என கேட்டபடி வந்தாரு. "அடடே என்ன மாமா நானே உன் கிட்டே கேட்க இருந்தேன். அதை நீ என்கிட்டே கேக்குறியே. சரி திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கு? திமுகவின் தலைமைக்கு அடுத்தது யாரு? திமுக மேலே கேஸ் எல்லாம் எப்படி போகுது? சமச்சீர் கல்வி பத்தி உன் கருத்து என்ன மாமா? என கேட்டதும், "என்ன மாப்ள, என்னை கைரேகை பார்ப்பவன் ரேஞ்சுக்கு ஆக்கிட்ட. சரி உனக்கு என்ன என்ன கேட்கனுமே வரிசையா கேளு. தெரிஞ்சா சொல்றேன்" என சொல்ல வரிசையா கேட்க ஆரம்பிச்சேன்.
அபிஅப்பா: போன ஆட்சில கலைஞர் ஆட்சியிலே சிறந்த திட்டம் எது மாமா?
ரங்கன்: ஒரு ரூபாய் அரிசி திட்டம் தான் மாப்ள! இனி உலகில் யாராலும் ஒரு ரூபாய்க்கு அரிசி போட முடியாது. உலகிலேயே கலைஞர் மட்டுமே திரும்பவும் சொல்றேன் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் அரிசி இனி எவனாலும் வியாபாரம் செய்ய முடியாது.
அபிஅப்பா: ஹி ஹி மாமா முதல் கேள்வியிலேயே நீங்க அவுட் மாமா. அதான் இந்தம்மா அதை சும்மாவே போடுதே. பின்னே என்ன ரொம்ப பெருசா அலட்டிகிறீங்க?
ரங்கன்: மாப்ள! நான் சொல்றதை நல்லா கவனி. அந்தம்மா போடுவது இலவச அரிசி. அது ஏற்கனவே இருந்த ஒரு திட்டம். அனாதை அரிசி திட்டம். அனாதைகளுக்கு ஓ ஏ பி திட்ட அரிசி என மாதம் பத்து கிலோ இலவசம் உண்டு. இந்தம்மா செஞ்சது அந்த திட்டத்தின் விரிவாக்கம் மட்டுமே. இப்ப மதிய உணவு கொண்டு வந்தது யாரு? காமராசர். அதை இன்னும் விரிவா செயல்படுத்தியது பாரு? எம் ஜி ஆர். அதை முட்டை, வாழைப்பழம் என சத்துணவா ஆக்கினது கலைஞர். அதாவது காமராசர் கொண்டு வந்த ஒரு திட்டத்தின் விரிவாக்கம் தான் அது. அதே போல ஓ ஏ பி அனாதை அரிசி திட்டத்தின் விரிவாக்கம் தான் இது.ஆகவே அதன் கிரடிட் முன்னாள் முதல்வருக்கு மட்டுமே போகும். மத்தபடி நான் மேலே சொல்லியிருப்பதை கவனி. குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு அரிசி 'விற்பனை" செய்தது கலைஞர் மட்டுமே. இனி அந்தம்மா வந்து நான் 50 பைசாவுக்கு போடுகிறேன் என சொன்னாலும் செல்லாது. ஏன்னா 50 பைசாவே இனி செல்லாது என்கிற போது அந்த 50 பைசாவுக்கு ஒரு கிலோ என்று சட்டப்படி கொண்டு வர முடியாது:-))
ஒரு ரூபாய்க்கு அரிசி என்ற போது புழுத்து போன அரிசியை ஒரு ரூபாய்க்கு விற்று அதையும்வாங்கி தின்னும் அளவு மக்களை ஏழைகளாக வைத்திருப்பவர் கருணாநிதி என மேடையில் முழங்கிய சீமான்கள் இப்போது "அனாதைகளை அதிகமாக்கிய அம்மா வாழ்க" என முழங்கினாலும் ஆச்சர்யம் இல்லை.
அபிஅப்பா: இப்படில்லாமா எடக்கு மடக்கா சிந்திப்பீங்க? சரி விடுங்க. மாமா, திமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? திமுகவின் அடுத்த தலைமை எப்படி அல்லது யார்? எதிர் வரும் பொதுக்குழுவிலே எதுனா காரசாரமா இருக்குமா?
ரங்கன்: திமுகவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என இப்ப நேத்து இல்ல. 1957 முதலே கேட்டுகிட்டு தான் இருக்காங்க. 1957 முதன் முதலாக திமுக தேர்தலை சந்தித்தது. அப்போ திமுக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை தெரியுமா? சொன்னா நம்ப மாட்ட. இதோ இப்ப போட்டியிட்டோமே 124 தொகுதிகள்... அதே நம்பர் தான். திமுக முதன் முதலாக போட்டியிட்ட தொகுதி 124. அதிலே ஜெயிச்சது 15, அப்போ பார்லிமெண்ட்க்கு 11 தொகுதில நின்னு 2 தொகுதில ஜெயிச்சோம். அப்போ காங்கிரஸ்காரன் எல்லாம் திமுகவின் எதிர்காலம் என்ன? என கேட்ட தொணிக்கும் இப்போ அதே போல 124 தொகுதில நின்னு 24 ஜெயிச்ச போது நீ திமுகவின் எதிர்காலம் என்ன என்று கேட்கும் தொணிக்கும் வித்யாசம் இருக்கு. அப்போ திமுகவின் அசுர வளர்ச்சியால் கேட்டாங்க மத்தவங்க. இப்ப திமுகவின் மீதான ஒரு சலிப்பினால் நீ கேட்கிறாய் திமுகவின் எதிர்காலம் என்ன என்று. நான் உறுதியா சொல்றேன் கேளு. திமுக தன் அடுத்த தலைவனை தானே தேர்ந்தெடுத்து கொண்டு விட்டது. அவன் தலைமையிலே பீடு நடை போடத்தொடங்கியாச்சு. திமுகவுக்கு அழிவு என்பதே இல்லை.
தேர்தல் போரில் "தளபதி"யாக இருந்த நம் ஸ்டாலின் இன்று படைக்கு தலைமை ஏற்கும் நிலைக்கு தானாகவே வந்தாகிவிட்டது. மலை குலைந்தாலும் நிலை குலையாத என் தலைவன் எந்த தேர்தல் தோல்வியிலேயும் அடுத்த நாள் புள்ளி விபரம் கொடுத்து தொண்டனை துவளச்செய்யாத தலைவன் அமைதி காக்கும் நேரம்... என்ன செய்வது என தொண்டன் குழம்பிய நேரம் தளபதி ஸ்டாலின் தன் தொகுதி மக்களை காண நன்றி சொல்ல எப்போ துண்டை முறுக்கி தோளிள் போட்டு கொண்டு கிளம்பினானோ அந்த நேரம் மிகச்சரியாக குறிப்பிட்டால் அந்த நேரம் அவன் எம் தலைவனாகிவிட்டான். "ராஜா வீட்டு கன்னுக்குட்டி எஜமான் ராஜாவாக இருக்கும் போது மட்டும் துள்ளும், ஆனால் நான் காயம் பட்ட தலைவனின் தளபதி.. இப்போது அதிகமாக என் கடமையை செய்வேன் என சீறிக்கிளம்பினானோ.. எம் கட்சிக்கு அடுத்த தலைவன் உண்டாகிவிட்டான்.
தனக்கு கட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி, ஆட்சிப்பொறுப்பு கொடுக்கப்பட்ட போதும் சரி தனக்கான பதவியை அலங்கார நாற்காலியாக பயன் படுத்தாமல் முள்கிரீடமாக அணிந்து சுற்றி சுழண்டு வந்தானே இதோ என் அடுத்த தலைவன் தயாராகிவிட்டான்.
மாப்ள! உனக்கு ஒரு சேதி தெரியுமா? தெஷ்ணாமூர்த்தி கருணாநிதி ஆனார். ஆனால் அவரை தவிர அவர் பெற்ற பிள்ளைகளுக்கு நிதி விகுதி இல்லை. முத்து,அழகிரி, ஸ்டாலின், தமிழரசு... இவைகள் தான் பெயர். ஆனால் தன் பேரப்பசங்க எல்லாருக்கும் நிதி விகுதி உண்டு. கலைஞரே தன் மகன்களுக்கு நிதி விகுதி கொடுக்காவிட்டால் என்ன, நாங்கள் தருகிறோம் நிதி விகுதி என நினைச்சாங்க .. யார் திமுக தொண்டர்களா? இல்லை... தமிழக பெண்கள். ஆமாம் எப்போ அவர் 385 மணி நேரம் நின்று கொண்டே தமிழக தாய்குலங்களுக்கு "சுழல் நிதி" கொடுத்தாரோ அன்றே அவர் நிதி விகுதிக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆமாம் இனியும் அவர் நமக்கு தளபதி இல்லை. "தலைவன் சுழல்நிதி(எதிர்கால முதல்வர் ) S/o கருணாநிதி( முன்னாள் முதல்வர்)"
அபிஅப்பா: என்ன மாமா திடீர்ன்னு பட்டம் எல்லாம் குடுத்துட்டீங்க? சுழல்நிதி கொடுத்தாரு. அது ஒரு அரசு திட்டத்தின் ஒரு செயல்பாடு அத்தனையே. அதுக்கு ஏன் அத்தனை ஒரு முக்கியத்துவம்?
ரங்கன்: மாப்ள! பட்டம் என்பது ஒரு பேப்பரில் அச்சடித்து கண்ணாடி சட்டம் போட்டு சால்வை போர்த்தி கையிலே கொடுப்பது மட்டும் இல்லை. ஒரு ஸ்பார்க். ஒரு பொறி தான். அதுவே பட்டமாக ஆகும் வரலாறு திமுகவில் நிறையவே உண்டு. "நடமாடும் பல்கலைகழகம்" என அண்ணா ஒரு மேடையில் சொன்னார் எங்கள் நெஞ்செழியனை பார்த்து. அது பட்டமாகிப்போனது. அது போலவே "நாவலர்". அதே போல ஒரு முறை மனோகரனை " வாய்யா நாஞ்சிலாரே" என அழைத்த போது அன்று முதல் அவர் நாஞ்சிலார் ஆனார். இது போல இப்போது கூட கலைஞர் ஒரு மேடையில் பெரியசாமியை "இவர் என் முரட்டு பக்தர்" என சொன்னது பட்டமாகி போனது. இதே தளபதி ஒரு பொதுக்கூட்டத்தில் அய்யா பெரியார், அண்ணாதுரை ஆகிய பெயர்களை கலந்து எனக்கு அய்யாதுரை என முதலில் பெயர் சூட்டினார் தலைவர் என பேசப்போக அது கூட இப்போது தளபதிக்கு பட்டமாகிப்போனது. நான் இப்போது சொல்கிறேன். தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி, தலைவர் சுழல்நிதி வாழ்க வாழ்க வாழ்க!
மாப்ள! நீ சொல்வது போல சுழல்நிதி என்பது மகளிர் சுய உதவிக்குழுவின் ஒரு சாதாரண செயல்பாடு தான். ஆனால் அதையே அசாதாரணம் ஆக்கியது தலைவர் சுழல்நிதி அவர்கள்!நல்லா நினைச்சுப்பாரு. என் தலைவன் சுழல்நிதி 385 மணி நேரம் நின்று கொண்டே அந்த நிதி ஒரு ஒரு பெண்ணுக்கும் சுய உதவி குழு பெண்ணுக்கும் வழங்குகிறார். அப்படின்னா எத்தனை தொகை வழங்கி இருப்பாரு சொல்லு பார்ப்போம்.
அபிஅப்பா: தெரியலையே மாமா. எத்தனை கோடி இருக்கும்? அப்படி எத்தனை பெண்களுக்கு குடுத்து இருப்பாரு. ம்ம் டேட்டா கலக்ட் பண்ணிட்டு சொல்றேன்.
ரங்கன்: மாப்ள! நாம என்ன இந்தியாவோட பட்ஜெட்டா போடப்போறோம் நம்ம அப்பச்சி மாதிரி. பக்கத்துல இருக்கும் பி ஏவை கேட்கனுமா இதுக்கு? இப்படித்தான் பாரதியாரு ஒரு தெருக்கூத்து பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போ மகாராஜா மந்திரியை பார்த்து " மந்திரி மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என கேட்க கூட்டத்தில் இருந்த பாரதி " அந்த எழவு கூட தெரியாம நீ என்னத்துக்கு நாட்டை ஆண்டுகிட்டு இருக்கே"ன்னு சத்தம் போட்டு கத்திகிட்டே எந்திரிச்சு போயிட்டாரு. அது போல நாம திமுககாரன்! தானே கணக்கு போட்டுக்கனும். அப்பச்சி வாயால கணக்கு போடுறாருன்னா நாம கண்ணால கணக்கு போடனும் மாப்ள.
இப்ப தலைவர் சுழல்நிதி 385 மணி நேரம் நின்னுகிட்டே சுழல்நிதி தலா பத்தாயிரம் கொடுத்தாரு. இது மேட்டரு. 385 மணி நேரம்ன்னா 23000 நிமிஷம் ஆச்சு. அதாவது கிட்ட தட்ட 14 லட்சம் வினாடி ஆகுது. ஒரு துணை முதல்வர் ஒரு பெண்மணிக்கு நேரிடையா நிதி கொடுக்க 3 வினாடிக்கு மேல அதிகாரிங்க விட மாட்டாங்க தானே. அப்படின்னா நாலே முக்கால் லட்சம் பெண்களுக்கு கொடுத்திருக்காரு. அதாவது அதையும் தாண்டி பயனாளிகள் இருக்கலாம். ஆனா அவரு நேரிடையா கொடுத்த பெண்கள் 5 லட்சம் ஆகுது. ஒருத்தருக்கு பத்தாயிரம்னா 500 கோடி ரூபாய் வருது மாப்ள! அதாவது 5 லட்சம் குடும்ப பெண்கள் இது வரை 2 ரவுண்டு வாங்கி திருப்பி குடுத்தாச்சு. அப்படின்னா 1500 கோடி ரூபாய் சுத்தி வந்துடுச்சு. 1500 கோடி ரூபாய் பணப்புழக்கம் தமிழகத்துல இருந்துச்சுன்னா.. அதும் குடிக்காத அதாவது மதுஅருந்தாத பெண் இனத்து வசம் 1500 கோடி சுத்துச்சுன்னா..... இப்ப சொல்லு மாப்ள... நம்ம தலைவர் சுழல்நிதி தானே? மாசத்துக்கு 30 நாள். அவர் பொண்டாட்டி புள்ளய்ங்க கூட இருப்பது 4 நாள். மீதி நாள் எல்லாம் தமிழகத்தில் மூலை முடுக்கு எல்லாம் சுற்றி சுழண்ட சுழல்நிதி தானே அவரு? இப்ப சொல்லு.. தவிர எனக்கு தெரிஞ்சு எத்தனை பெண்கள் ஒயர் கூடை பின்றாங்க, முறுக்கு சுட்டு விக்கிறாங்க, கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் இடத்துக்கு போய் புளிசாதம் பொட்டலம் 10 ரூபாய்க்கு விற்கும் பெண்கள் எனக்கு தெரியும். அத்தனை ஏன்? யாரோ சொன்ன மாதிரி "வெறும் கை என்பது கோழைத்தனம்.. விரல்களே மூலதனம்"ன்னு சொன்ன மாதிரி ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணு இந்த போன் கார்டு எல்லாம் 5 மொபைல் போன் வாங்கி வச்சுகிட்டு அதுக்கு போன் செஞ்சா போதும் ராத்திரி ஆனாலும் சரி "ஈசி" பண்ணிட்டு (அடுத்த நாள் அதுவே வந்து காசு வாங்கிக்கும்) தினத்துக்கு 250 ரூவா சம்பாதிக்குது. அதுக்கு போன், விரல்... சுழல்நிதி இதான் மூலதனம்.. தான் வாழ எவனையும் நம்பலை அது!
அபிஅப்பா: வாவ்... மாமா ஒரு திட்டத்தின் மதிப்பீட்டு தொகையை இப்படிக்கூட மதிப்பீடு செய்யலாமா? அதல்லாம் சரி மாமா. சுழல்நிதி என்பது எல்லாம் சரி தான். இந்தம்மா நாளைக்கே சும்மா இருக்காது. எதுனா கேஸ் போடும் .உள்ள வைக்கும். அப்ப வலையுலகம் வலையுலகம்னு ஒன்னு இருக்கு. அதுல மணீஜி மணீஜின்னு ஒருத்தர் இருக்காரு. மாயவரத்தான்னு நம்ம ஊர்காரரு இருக்காரு. உடனே சுழல்நிதி இப்போ புழல்நிதி ன்னு ட்விட்டுவாங்க. உடனே அதை ஆனந்தவிகடன்ல போட்டு ஆனந்தப்படுவாங்களே மாமா!
ரங்கன்: படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவன் ஏட்டை கெடுத்தான். எனக்கு உங்க உலகம் எல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு! தப்பு செஞ்சா தண்ணி குடிக்கனும். வைக்கோவை சைக்கோன்னு சொன்னீங்கதானே! அப்ப சிரிச்சோம் தானே ரைமிங்கா இருக்கேன்னு. அப்படின்னா இதையும் எதிர்கொள்ளனும் தான். அதை விட நாங்க பாளையங்கோட்டை இருக்கும் திசை நாங்கள் வணங்கும் இடம் என பாசிட்டிவா ஆக்கினோம்ல. அது போல எதுனா போராட்டத்துலே தலைவன் புழலுக்கு போனா நீ முதல்ல போஸ்டர் அடிச்சு ஒட்டு "தாய்குலத்தின் சுழல்நிதியே, கருணாநிதி பெற்றெடுத்த புழல்நிதியே"ன்னு அடிச்சு ஒட்டு. அதை பாசிட்டிவா ஆக்கு! தேர்தலில் தோற்றோம் என என்றைக்காவது நாம சொல்லியிருக்கோமா? வெற்றி வாய்ப்பை இழந்தோம்னு தானே சொல்ல நமக்கு அண்ணா கத்து கொடுத்திருக்காரு!
அபிஅப்பா: சரி மாமா! இந்த சமச்சீர் கல்வி பத்தி...
ரங்கன்: மாப்ள! இந்த சமச்சீர் கல்வி இருக்கே. அது பத்தி நிறைய பேசலாம். யார் வேணா பேசலாம். ஏன்னா இப்போ கேஸ் கோர்ட்டிலே இருக்கு. கேஸ் கோர்டிலே இருக்கும் போது அதுசம்மந்தமா பேசக்கூடாது என சொல்ல நான் என்ன அப்பச்சியா?இல்லாட்டி அர்ஜூன் சம்பத்தா? இல்லை அப்படி பேசினா கண்டம்டு ஆஃப் கோர்டுன்னு ஜெயலலிதாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. இல்லாட்டி நித்யானந்தாவை பிடிச்சு உள்ள போட்டுச்சா கோர்ட்டு. அதானால பேசுவோம்.
முதல்ல சமச்சீர் கல்வின்னா என்னான்னு பார்க்கனும். ஒரு நாலு வருஷம் கல்வியாளர்கள் வச்சுகிட்டு இப்ப நம்ம ஸ்டேட் போர்டு பசங்க படிக்கும் படிப்பும், மெட்ரிக் பசங்க படிக்கும் படிப்பும் ஒன்னா இருக்குதா? அது போல சி பி எஸ் சி படிப்பு எப்படி இருக்கு? சரி சி பி எஸ் சி படிப்பு நமக்கு இப்போ கணக்கிலே எடுத்துக்க வேண்டாம். ஏன்னா ஏற்கனவே நாம நவோதயா பள்ளி எல்லாம் உள்ளே விடலை . அதை இப்போ விட்டுடுவோம்.அந்த கச்சேரி தனியா வச்சுப்போம். தனியார் மெட்ரிக் பள்ளியிலே படிக்கும் மாணவனும் நம்ம ஸ்டேட் போர்டு மாணவனும் ஒரே படிப்பை படிச்சுட்டு பொது தேர்வு +2 எழுதுறாங்களா? இதிலே கிராமத்தில் இருந்து படிச்சுட்டு வரும் நம்ம மாணவன் பின் தங்கி போறானா? என்பதை எல்லாம் விடு மாப்ள! ஆனா படிப்பின் தரம் என்ன என்பது தான் இந்த சமச்சீர் கல்வியிலே முதல் ஆய்வா எடுத்துகிட்டாங்கன்னு சொல்றாங்க. எல் கே ஜியிலேயே பத்து புத்தகம் 6 வது படிக்கும் மெட்ரிக் மாணவனுக்கு ஸ்டேட் போர்டிலே படிக்கும் 11 வது படிக்கும் மாணவனுக்கு இருக்கும் பாடம் எல்லாம் வருது என்பது முதல்ல பசங்களுக்கு படிப்பின் மீது ஒரு வித அயற்சியை தான் கொடுக்குதுன்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. அதனால அவனுக்கு குறைச்சிடு. இவனுக்கு கொஞ்சம் தூக்கிடு. எல்லாம் ஒரே பாடம் படிக்கட்டும். அப்போ நீ படிக்கும் போது 3வது படிக்கும் போது தான் ஏ, பி, சி, டி படிச்சே. இப்போ எல் கே ஜி யிலே படிக்க சொல்றாங்க. ஏன் அப்போ படிச்சவனுக்கு அறிவில்லாம போச்சா? இல்லை. நாங்க தமிழின் 247 எழுத்தும் எழுதுவோம். படிப்போம். ற, ர உச்சரிப்பு பயிற்சி பெற்றோம். முதல்ல நம்ம மொழி படிச்சோம். ஒரு குழந்தை தன் தாய்மொழியிலே 247 எழுத்தும் படிச்சு முடிக்கும் போது அதன் மூளை மடிப்பு ஆழம் அதிகமாச்சு. பின்னே நாங்க ஆங்கில எழுத்து 26 படிக்கும் போது அது சுலபமா இருந்துச்சு.
பாடத்திட்டம் அதிகப்படுத்துவதால மட்டும் மூளையின் மடிப்பு ஆழத்தை அதிகப்படுத்தி விட முடியாது. முடியவே முடியாது. மூளையின் மடிப்பின் ஆழம் அதிகமாக்க அதிக சுமை கொடுத்து அவனை அயற்சியாக்குவதை விட அவன் அந்த குழந்தையின் மூளை எத்தனை சக்தி தாங்கும் என அறிந்து அதை "விளையாட்டாக" சொல்லி கொடுக்கனும். தனியார் பள்ளியும் அரசாங்க பள்ளியும் ஒரே பாடமா படிக்கனும். அதே நேரம் கல்வியின் தரம் முன்பை விட அதிகமா இருக்கனும். இதல்லாம் கணக்கில் வச்சு தான் அந்த பாடத்திட்டம் தயாராச்சு. அதுக்கு மசோதா,சட்டம் போன்ற சடங்கு சம்பிரதாயம் எல்லாம் செஞ்சு பின்னே உயர்நீதி மன்றம் போய் பின்னே அது சரி என அவங்களும் சொல்லி எல்லாம் முடிஞ்சு 200 கோடிக்கு புத்தகமும் அடிச்சாச்சு.
இப்போ இந்த அரசாங்கம் வந்து எல்லாம் சரியில்லைன்னு ஒரு 24 மணி நேரத்தில் முடிவெடுத்து இப்போ உச்சநீதிமன்றம் போய் அவங்க தமிழக அரசை "ஒரு குழு அமைச்சு அந்த பாடதிட்டம் எல்லாம் சரியான்னு ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க.அதும் ரெண்டு வாரத்திலே. அதாவது நாலு வருஷம் செஞ்ச ஆராய்சியை 2 வாரத்தில்... பின்னே ஒரு வாரம் தினமும் இதை விசாரிச்சு 22 வது நாள் தீர்ப்பு சொல்லனும். அதும் இங்க வரக்கூடாது. எங்க இதன் ஆரம்ப சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நடந்துச்சோ அங்க தான் வச்சுக்கனும் கச்சேரியைன்னு சொல்லியிருக்கு. சரி ஒத்துக்கறோம்.
உடனே என்ன செஞ்சு இருக்கனும் தமிழக அரசு. கல்வியாளர் குழு அமைச்சுது. யாரை? திருமதி ஒய்.ஜி பி அம்மையாரையும் இன்னும் ஒரு தனியார் பள்ளி ஓனரையும். இவங்க கல்வியாளர் குழுவா? அவங்க பள்ளியில் படிச்சவங்க வேண்டுமானா கல்வியாளராக இருக்கலாம். அவங்க கல்வியாளரா? வாதி, பிரதிவாதி என இருவர் இருக்கும் போது பஞ்சாயத்துக்கு வாதி தரப்பை நியமிச்சது எப்படி ஒத்துப்பது? சரிய்யா... பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகி அவங்க. அவங்க பள்ளியிலே இத்தனை வருஷம் தனியாக ஒரு பாடத்திட்டம் வச்சு அதன் படி பசங்க படிச்சு பெரிய படிப்பு எல்லாம் படிச்சாங்களா? இல்லியே... அவங்களும் மத்த மெட்ரிக் ஸ்கூல் படிக்கும் புத்தகம் தானே அவங்க பள்ளியிலே வச்சிருந்தாங்க. சரி மீதி நான்குபேரும் ஐ ஏ எஸ் அதிகாரிங்க. அவங்க கள்வியாளர்களா என்று நான் கேட்க முடியாது. அது கூடவும் கூடாது. ஏன்னா இங்க கல்வியாளர் என்றால் அளவு கோலே அவங்க பல பட்டம் வாங்கினவங்களா என்பதில் தான் இருக்கு. இது தப்பு என்பது தான் என் கருத்து. இன்னும் சொல்ல போனா ஆரம்ப பள்ளி பாடங்களுக்கு குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா வே என்னை பொருத்தவரை கல்வியாளர். ஏன்னா அவருக்கு குழந்தை மொழி தெரியுது. நல்லா புரியுது. அவரை கூப்பிட்டு அந்த வயசு குழந்தைகளுக்கு எப்படி பாடம் அமைக்கலாம் என கூட கேட்டிருக்கலாம். இல்லாட்டி இது போன்ற குழுவில் இடம் கொடுத்து இருக்கலாம். அது போல சில ஐ ஏ எஸ் ஆபீசர்ஸ் இருக்காங்க. நம்ம தாய்மொழியிலே ஆர்வமும் அக்கரையும் கொண்டவங்க. உதாரணத்துக்கு இறையன்பு இருக்காரு. ஏன்? உமாசங்கர் காத்திருப்புல இருக்காரு. அவங்களை கூட நியமிச்சு இருக்கலாம். மாட்டாங்க, ஏன்னா அரசாங்கம் முன்முடிவோட இருக்கு. இந்த திட்டம் செயல்படுத்த கூடாதுன்னு. உமாசங்கர் ஏற்கனவே ஒரு ஜூவி பேட்டியிலே "திமுக அரசின் சாதனை சமச்சீர் கல்வி தான் என பேட்டி குடுத்துட்டாருல்ல.
அந்தம்மா அறிக்கையிலே பாடத்திட்டம் சிலபஸ் ரொம்ப கம்மியா இருக்கு. இது உலக அளவில் நம்ம கல்வித்தரத்தை கம்பேர் செய்யும் போது ரொம்ப கம்மின்னு சொல்லுது. சரி இதே இஞ்சினியரிங் படிக்கும் ஒரு பையனின் முதல் வருடம் பாடத்தை எடுத்து ஆறாம் வகுப்பு பையன் கிட்டே இன்னிக்கு முதல் இதாண்டா உன் பாடம்னு சொல்லிட்டு உலக லெவல்ல கொண்டு போய் காமிச்சா "ஆகா இந்தியாவிலே ஆறாம்பு படிக்கும் பையன் பாடம் இஞினியரிங் சிலபஸ்ப்பா. சூப்பர்"ன்னு சொல்லிட்டு போவான். ஆனா பையன் இங்க படிக்க முடியாம செத்துடுவான். இல்லாட்டி கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போவான். அவன் மூளை அளவு என்னவோ அதான் தரனும். சும்மா ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு சித்திரை வெய்யில்ல வெஸ்டர்ன் கல்ச்சர்ன்னு சொல்லிகிட்டு கேட்டு சூட்டு போட்டுப்பதுக்கும், பெண்கள் ஒரு முழ வெள்ளி ஜரிகை வச்ச பட்டுப்புடவை கட்டிக்கிட்டு போவதுக்கும் இதுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.
சரி பள்ளிக்கூடம் வச்சு நடத்தும் ஆட்கள் தான் கல்வியாளர் என நீங்க அளவுகோல் வச்சா சொன்னா சிரிக்க கூடாது... ஜேப்பியாரும் உங்க அளவுகோலின் படி கல்வியாளர் தானே. அவரை நியமிச்சா எப்படியோ அதே போலத்தான் திருமதி ஒய் ஜி பி அம்மையாரும். இதான் என் கருத்து...
அபிஅப்பா: அய்யோ மாமா.. அதை எல்லாம் விடுங்க.. கேஸ் என்ன ஆகும்? சமச்சீர் கல்வி புத்தகத்தில் திமுக பத்தி அதிகம் இருக்குதாம். கலைஞர் எழுதிய கவிதை இருக்குதாமே?
ரங்கன்: அதாவது மாப்ள! ஒரு கரும்பலகை இருக்கு. அதிலே ஒரு ஆப்பிள் படம் இருக்கு. அதுக்கு ஒரு பையனை கூப்பிட்டு கலர் அடிக்க சொல்றே. அவன் சிவப்பு கலர் அடிக்கிறான். பார்க்க அது திக கொடி மாதிரி இருக்குதாம். அதான் ஒரு புத்தகத்தில் ஒரு கருப்பு போர்டு அதிலே ஆப்பில் படம் அவுட்லைன் இருக்கு. அதிலே கலர் அடிக்க சொல்லி இருக்கு. அந்த பக்கம் இப்போ கிழிச்சு கிட்டு இருக்காங்க. தாடி வச்சவன் எல்லாம் பெரியார்ன்னு பயந்த காலம் ரிப்பீட்டு ஆகுது மாப்ளே ரிப்பீட்டு ஆகுது வேற ஒன்னும் இல்ல.
அபிஅப்பா: சரி மாமா! கலைஞர் கவிதை இருக்காமே? கனிமொழியின் சங்கமம் பத்தி இருக்காமே?
ரங்கன்: கலைஞர் கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைகழகம், தமிழ் பல்கலைகழகம் போன்ற தமிழ் பிரிவுகளிலேயே எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பாடத்திட்டமாக இருக்குதே. அவர் கவிதை இப்போ சமச்சீர் கல்வி பாடட்ட்இல்லை. செம்மொழி மாநாட்டு பாடல் கலைஞரின் கவிதைன்னு கூட சொல்ல முடியாது. அது பழந் தமிழின் உயரிய வரிகளின் தொகுப்பு என்றே கொள்ள வேண்டும். அதில் செம்மொழி மாநாட்டு இலட்சினை வருது. அதிலே கலைஞரின் எழுத்தினால் ஆன பழந்தமிழ் வரி இரண்டு வார்த்தை இருக்கு. அது தவறு என்றால்... எடுக்கட்டும் என கலைஞரே சொல்லியாகிவிட்டது. அது போல கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம் பற்றி வருவதை எடுக்கட்டும்.
அபிஅப்பா: கனிமொழி இப்போ திகார்ல இருக்காங்க. ஒரு ஊழல் குற்றச்சாட்டிலே.. அப்படி இருக்க எப்படி மாமா இதை ஏத்துக்க முடியும்?
ரங்கன்: மாப்ள! அப்படிப்பார்த்தா காந்தி மேலயே குற்றம் இருப்பதாக ஆர் எஸ் எஸ் காரங்க சொன்னாங்க. சொல்றாங்க. அவர் படம் ரூபாய் நோட்டில் இருக்கு. பாடத்திட்டத்தில் இருக்கு. ஏன் இந்திரா, ராஜீவ் இவங்க மேலயும் தான் ஊழல் குற்றச்சாட்டு இருக்கு. அத்தனை ஏன்? இதோ நம்மை ஆளும் ஜெயலலிதா ஒரு அக்யூஸ்ட் என கன்விக்ட் ஆகி இருக்கு. நல்லா புரிஞ்சுக்கனும். கன்விக்ட் ஆகியது டான்சி வழக்கில். தண்டனை மட்டுமே இல்லை. நல்லா புரிஞ்சுக்கனும். நீதிபதி "அரசாங்க சொத்து வாங்கியது தவறு" என சொன்னார். 'அப்படின்னா திருப்பி தர்ரோம்"ன்னு கொடுத்தாங்க. அதான் நடந்துச்சு. தவிர அப்போ நீதிபதி "தான் போட்ட கையெழுத்து தன்னுடையது அல்ல என சொன்னது தவறு"ன்னும் சுட்டி காட்டினாங்க. ஆனால் தண்டனை இல்லை. மன்னிப்பு கொடுக்கப்பட்டதே தவிர கன்விக்ட் தான் ஜெயலலிதா அம்மையார். அவங்க இதோ 27ம் தேதி ஆயிரம் கோடி அளவு சொத்து சேர்த்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும். அவங்க நம்மை ஆள நம்ம சட்டமும், மக்களின் பெருந்தன்மையும் அனுமதி அளிக்கும் போது கனிமொழி இன்னும் முழுமையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்கின் காரணமாக சிறையில் இருப்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் இல்லை.
அபிஅப்பா: மாமா! என்ன அளந்துகிட்டே போறீங்க? அது 66 கோடி ரூபாய் வழக்கு. போபார்சை விட ஜஸ்ட் ஆறு கோடி மட்டுமே அதிகம்.
ரங்கன்: மாப்ள! அது 15 வருஷம் முன்னே 66 கோடி ரூபாய். வச்ச இடத்திலே அப்படியே இருக்க அது என்ன பத்மனாபன் கோவில் பாதாள அறையா?அதன் பின்னே சம்பள கமிஷனே ரெண்டு தபா சம்பளம் ஏத்தியாச்சு. ரியல் எஸ்டேட் பலமடங்கு கூடிப்போச்சு. தங்கம் அப்போ பவுன் 2000 ரூபா. இப்போ 17000 ரூபாய். கூட்டி கழிச்சு பாரு மாப்ள எல்லாம் சரியா வரும்!
அபிஅப்பா: மாமா சமச்சீர் கல்வி பத்தி ஆரம்பிச்சி எங்கயோ போகுது பேச்சு. சரி திமுக பொதுக்குழு கூடுது கோவையிலே... அது பத்தி அதுல மாவட்ட செயலர்க்கு பவர் பிடுங்கும் பேச்சு பத்தி என்ன நினைக்குறீங்க?
ரங்கன்: மாப்ள என்னால இன்னிக்கு இவ்ளோவ் தான் முடியும். நான் துக்ளக் படிக்கனும் ஆளை விடு!