இந்த பதிவு அடிக்க என்னவோ பத்து நிமிஷம் தான் ஆச்சு. ஆனால் தலைப்பு வைக்க தான் நீண்ட நேரம் ஆனது. "நானும் பேயும்" என முதலில் தலைப்பு வைத்தேன். அப்படி வைத்தால் "இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்" என பின்னூட்டம் போடுவாங்க. சரின்னு "நான் பேயை பார்த்தேன்" என தலைப்பு வைக்கலாம் என நினைத்தேன். "பெல்ஜியம் மிரர் வாங்கினதுக்கு எல்லாம் பதிவா?" என பின்னூட்டம் வரும். எது வந்தாலும் சரின்னு தான் என் அமானுஷ்ய அனுபவத்தை பதிவிட்டு உங்களை பயம் காட்டலாம் என முடிவுக்கே வந்துவிட்டேன்.
மாயவரத்தில் இருந்து கிழக்கே பூம்புகார் போவதற்கு இரு வழிகள் உண்டு, பூம்புகார் சாலை, அடுத்து செம்பனார்கோவில் சாலை. இரண்டுமே ஒரே முக்கூட்டில் சந்தித்து பின்னர் திருவெண்காடு அருகே சந்தித்து ஒரே சாலையாக ஆகும் பூம்புகார் செல்ல.அந்த இரு சாலைகளுக்கும் நடுவே தான் காவிரி ஓடும். அதன் இரு கரைகளும் பச்சை பசேல் என இருக்கும். கரையோர கிராமங்களின் எல்லையில் காவிரிகரையில் இடுகாடுகள் இருக்கும். இரு பக்க கிராமங்களை இணைக்கும் வகையில் சின்ன சின்ன ஒரு மீட்டர் அகலத்தில் மூங்கில் பாலங்களோ கான்கிரீட் பாலங்களோ இருக்கும்.
நான் அப்போது படித்து முடித்து விட்டு தற்காலிகமாக வி கே ஆர் பப்ளிகேஷன் என்னும் கம்பனியில் விற்பனை வேலை. உயிரியல் பாடத்துக்கு செய்முறை புத்தகங்களை இரு கட்டை பையில் எடுத்து கொண்டு திருவெண்காடு சீனிவாசா பள்ளிக்கு சென்றிருந்தேன். மதியம் 12 மணிக்கு எல்லாம் வேலை முடிந்தது. திரும்ப மாயவரம் வரும் போது கொஞ்ச தூரத்திலேயே பஸ் டயர் வெடித்து நின்று விட்டது. பேருந்தில் வந்தவர்கள் வேறு வேறு பேருந்தில் ஏறிவிட நான் மட்டும் கொஞ்சம் நடந்து காவிரிக்கரையை அடைந்து அக்கரையில் இருக்கும் திருச்சம்பள்ளி என்னும் கிராமம் வழியே செம்பனார்கோவில் போகலாம் என நினைத்து புத்தக பைகளை (இரு கையிலும் இரு பைகள், ஒவ்வொன்றும் இருபது கிலோ எடை இருக்கும்) எடுத்து கொண்டு நடக்க தொடங்கினேன். காரணம் என் நண்பன் அப்சராகார்த்தி அப்போது திருச்சம்பள்ளியில் இருக்கும் இந்திய உணவு கழகத்தின் (FCI) நெல் அரைவை நிலையமும் அதன் இணைப்பாக தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலையும் இருந்தது ..அதிலே தற்காலிகமாக "கெமிஸ்ட்" வேலை செய்து கொண்டிருந்தான். அவனையும் பார்த்து விட்டு செம்பனார்கோவில் "சம்மந்தம் மேல் நிலைபள்ளி"க்கு போகலாம் என நினைத்து நடக்க தொடங்கினேன்.
கிட்ட தட்ட காவிரி கரையை அடையும் போதே அந்த கிராமத்தின் இடுகாட்டில் இரு பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தது. அதே போல பாலத்துக்கு அந்த பக்கம் ஒரு பிணம் எரிந்து கொண்டு இருந்தது. அப்போது மதியம் ஒரு மணி ஆகியது. பொதுவாக சின்ன வயதில் விடுமுறை நாட்களில் அது போல மதியம் விளையாட கிளம்பினால் பாட்டி "டேய் இது உருமநேரம் பேய் நடமாடும் நேரம். போகாதீங்க" என மிரட்டுவது ஏனோ ஞாபகம் வந்து தொலைந்தது. ஆனாலும் தைரியம் வரவழைத்து கொண்டு நடக்க தொடங்கினேன். வெள்ளை உடையில் யாராவது கண்ணில் தென்படுகின்றனரா என பார்த்தால் அங்கே பிணங்களை தவிர யாரும் இல்லை. அது கொஞ்சம் பயமாக இருந்தாலும், யாருமே இல்லை என்கிற போது பேயும் இல்லைதானே என ஆசுவாசப்படுத்தி கொண்டு நடந்தேன்.
கொஞ்ச தூரம் நடந்ததும் ஒரு வயதான ஒருவர் , காஸ்ட்யூம்னு பார்த்தா ஒரு கோவணம். கோவணம் மட்டுமே தான். ஆனால் அந்த கோவணத்தை விட பெரியதாக ஒரு வேட்டியை தலையில் முண்டாசாக கட்டியிருந்தார். காதில் ஒரு பீடி. பற்கள் வெற்றிலை காவி. "எழவு அந்த தலையில் கட்டியிருப்பதை எடுத்து இடுப்பில் கட்டிகிட்டா என்ன?" என கேட்க நினைத்து கேட்கவில்லை. ஏனனில் கிராமத்து குசும்பு எதுனா எடக்கு மடக்கா பதில் வரும். அவர் நேரே என்னை நோக்கி தான் வந்தார். கொஞ்சம் பயம் அதிகமாகியது. மிக அருகே வந்து "தம்பி பீடிக்கு நெருப்பு இருக்குமா?" என கேட்டார்.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனனில் இதே போல சமிஞ்கைகள் தான் எல்லா சினிமாவிலும் அமானுஷ்ய சீன்களில் வரும். "அது என்ன, யாராவாது செத்துட்டா டாக்டர் கண்ணாடி கழட்டிட்டு 'சாரி'ன்னு சுரத்தே இல்லாமல் சொல்லுவாரு, போலீஸ் அசூசையாக தொப்பியை கழட்டுவார், அதே போல சுடுகாடு காமிச்சா பீடிக்கு நெருப்பு கேட்டு ஒருவர் வருவாரு. பின்னே பார்த்தா அவருக்கு வேட்டிக்கு கீழே காலே இருக்காது. "நான் செத்து ரெண்டு வருஷம் ஆச்சேன்னு கத்திகிட்டே மறைந்து விடுவார். ச்சே இந்த தமிழ்படங்களே இப்படித்தான். இனி நான் ஈரான் படம் மட்டுமே பார்க்க போறேன்" என நெஞ்சு நிமிர்த்தி வசனம் பேசிக்கொண்டு திரிந்த காலம் அது. என்கிட்டயே சுடுகாட்டில் இப்படி ஒரு பேய் நெருப்பு கேட்கும் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை.
மெதுவா வேட்டிக்கு கீழே கால் இருக்கான்னு பார்த்தேன். அவரு மூஞ்சி தான் இருந்தது. ஏன்னா அவரு தான் வேட்டிய தலையிலே கட்டியிருந்தாரே! கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இறக்கி கீழே பார்த்தேன். கால் இருந்தது. கொஞ்சம் நிம்மதி ஆகியது. கோவமும் வந்தது. என்னை பார்த்து பீடிக்கு நெருப்பு கேட்டாரேன்னு. நானே அப்போது பீடி மாதிரி தான் இருப்பேன். தவிர அப்போதெல்லாம் எனக்கு லாகிரிவஸ்துக்கள் அத்தனை ஒரு பரிட்சயம் ஆகாத நேரம். அதிகபட்சமாக புளிப்பு மிட்டாய் வாங்கி வாயில் போட்டுப்பேன். (ஆமாம் புளிப்பு மிட்டாயே லாகிரிவஸ்துவாக நான் நினைத்து கொண்டிருந்த காலம். எத்தனை ஒரு நல்ல பையன் நான் என்பதை வாசகர்களின் யூகத்துகே விடுகின்றேன்)
அவரிடம் "இல்லை" என சொன்னபோது அவரும் "சரி தம்பி பார்த்து போங்க" என சொல்லிவிட்டு கடந்து போனார். அவர் சும்மா போயிருக்கலாம். பார்த்து போங்க என சொன்னது தான் பயமாக இருந்தது. "அப்படின்னா இங்க பேய்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகம் தான் போலிருக்கு" என நினைத்து கொண்டேன். எரியும் சிதையை பார்த்தேன். பிணம் எரியும் போது எழுந்து டான்ஸ் ஆடும் என சின்ன வயசில் பெருஞ்சேரி நடராசன் கதை விடுவான். அப்போது வெட்டியான் அதை அடிப்பான் எனவும் சொல்லியிருக்கான். ஆமாவா என நினைத்து சிதையை பார்த்தேன். மூன்று பிணங்களும் சமர்தாக எரிந்து கொண்டிருந்தது. 'அடக்கமான' பெண்கள் போலிருக்கு என நினைத்து கொண்டேன். எங்கேயோ ஒரு பறவை கத்தி பீதியை கிளப்பியது. ஆந்தை போலிருக்கு. ஆந்தை இரவில் தானே வரும். ஓவர்டைம் பார்க்குது போலிருக்கு. பொன்னியின் செல்வன் கோடியக்கரை காடு, கொள்ளிவாய் பிசாசு எல்லாம் ஞாபகம் வந்தது. பூங்குழலி ரொம்ப அழகு தான் என மனசில் ஓடியது. ச்சே அவளுக்கு இருக்கும் வீரம் எனக்கு இல்லையே. மெதுவாக பாலத்தின் அருகே வந்தேன். இந்த பயத்தின் காரணமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றியது. முட்டிக்கொண்டு வந்தது. சரி பாலத்தை கடந்து அந்த பக்கம் போய் அங்கே எரியும் அந்த பிணத்தையும் தாண்டி விட்டு திருச்சம்பள்ளி ஒத்தை அடி பாதையில் சுத்தமான இடம் பார்த்து அசுத்தம் செய்யலாம் என நடக்க தொடங்கினேன்.
கை இரண்டும் குடைந்தது. பாலத்தின் மீது அதை வைத்து விட்டு சிம்ரன் போல சோம்பல் முறித்தேன். பின்னர் திரும்பி பார்த்தேன். என்னை கடந்து போன தாத்தா தூரத்தில் போவது தெரிந்தது. கால் இருந்தது. நிச்சயமாய் அவர் பேய் இல்லை என நிம்மதியாக இருந்தது. பின்னர் பையை தூக்கிக்கொண்டு பாலத்தில் ஒரு பாதி தூரம் வந்து விட்டேன். இன்னும் பாதி பாலம் தான் பாக்கி இருக்கு. ஒரு வழியாக இரு பிணங்களின் கிட்டே இருந்தும் தப்பித்து விட்டேன். மீதி பாதி பாலம் கடந்தால் அந்த மீதி ஒரு பிணத்தையும் தாண்டி விடலாம். பின்னர் ஒத்தையடி பாதையில் ஒரே ஓட்டம் ஓடிடலாம். எங்கே இருந்து ஓடுவது.நானே நாற்பது கிலோ இருப்பேன். தனியா ஓடினா ஓடிடலாம். கையில் வேறு 40 கிலோ இருக்கு. ஓடல்லாம் முடியாது. காக்க காக்க கனகவேல் காக்கன்னு ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே நடக்க வேண்டியது தான்.
அப்போது தான் நான் பேயை பார்த்தேன். இந்த பதிவின் கதாநாயகியாகிய பேயை பார்த்தேன். (மனம் இளகியவர்களும், கர்ப்பினி பெண்களும், என் பழைய பதிவுகளை எல்லாம் ஏற்கனவே படித்து தைரியமானவர்களும் மேலே தைரியமா படிங்க.. ஒன்னும் ஆகாது. ஏதாவது ஆனா எனக்கு மெயில் செய்யவும். நானும் தெரிஞ்சுக்கறேன்).
பேய்னா அப்படி ஒரு பேய். அது ஒரு பெண் பேய். (பெண்ணை பேய் என சொல்கிறேன் என சமூகநீதிகாத்த சங்கிலிக்கருப்பன்கள் கோவப்படவேண்டாம்) நெசமாகவே அது ஒரு பெண். வெறும் எலும்பு மட்டுமே. எலும்புக்கூடு மட்டுமே. தலை முடி எல்லாம் எரிந்து போய் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தது. உடலில் ஒட்டு துணி இல்லை. தொடைப்பகுதிகளில் கொஞ்சம் சதைகள் கூழாக இருந்தது. பற்கள் இருந்தது. எனக்கு உதறல் அதிகம் ஆகிவிட்டது. திரும்பவும் ஓடிவிடலாமா என நினைத்த போது வந்த பக்கம் இரண்டு பிணங்களும் ஆக்ரோஷமாக எரிந்து கொண்டு இருக்கின்றது. தவிர நான் முக்கால்வாசி இந்த பாலத்தில் வந்துவிட்டேன். திரும்பவும் தைரியம் கூட்டிக்கொண்டு அதை பார்த்தேன். சிரித்தது. இரு கையையும் நீட்டி என்னை அழைத்தது. எனக்கு முதுகுதண்டு ஜில்லிட்டது.
வாய்விட்டு கத்தி யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என நினைத்த போது யாருமே இல்லை அந்த பகுதிகளில். என்னை கடந்து போன அந்த தாத்தாவும் மறைந்து விட்டார். அனிச்சையாக நான் ரம் குடித்த குதிரை போல முன்னால் போகின்றேன். கிட்ட தட்ட அதன் அருகே வந்து விட்டேன். அந்த ஒரு மீட்டர் அகல பாலத்தின் ஒரு முனையில் அந்த கைப்பிடியில் உட்காந்து இருந்த அது கீழே குதித்தது. நான் இரு கையிலும் பை வைத்து கொண்டு அதை கடந்து அந்த பக்கம் போவது என்பது அதை உரசாமல் இயலாது. கந்தசஷ்டியும் ஞாபகம் வரலை எந்த ஷஷ்டியும் உதவவில்லை. சரி என் வாழ்க்கை அவ்வளவு தான். அது என்னை அடித்து விடும். நானும் மரித்துப்போய் பேயாக ஆகிவிடுவேன். அப்படியே ஆனாலும் நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு போய்டனும். இங்க எல்லா பேயும் புதுசு. பழக நாளெடுக்கும். அங்கன்னா நமக்கு தெரிந்த பேயா இருக்கும். பின்னே வரக்கூடிய பேய்களும் நமக்கு தெரிஞ்ச பேயாகத்தான் இருக்கும். மியூச்சுவல் ட்ரான்ஸ்பர் எதுனா நம்ம ஏரியா சுடுகாட்டுக்கு கிடைச்சா நல்லா இருக்கும். இந்த சுடுகாட்டிலே நமக்கு தெரிஞ்ச பேய் யாராவது இருக்காங்களா என நினைத்த போது தான் திமுக எக்ஸ் எம் எல் ஏ விளநகர் கனேசன் அந்த ஏரியா என்பது நியாபகம் வந்தது.ஒரு வருஷம் முன்ன தான் அவர் இறந்து போயிருந்தார். நம்ம கட்சிகாரர், எப்படியும் ட்ரான்ஸ்பர் வாங்கி அனுப்பிடுவார். அய்யோ உறுப்பினர் கார்டு நம்பர் கூட மறந்து போச்சே.. எனக்கு தலையே சுற்றியது.
எப்படி அதை கடந்து இந்த பக்கம் வந்தேன் என எனக்கு இப்போதும் ஞாபகம் வரவில்லை. ஆனால் அந்த ஒத்தையடி பாதைக்கு வந்துவிட்டேன். அது என்னை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தது. நான் சுத்தமான இடம் பார்த்து உச்சா போகவேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்ததெல்லாம் வேஸ்ட். என் பேண்ட் தான் அதை விட சுத்தமான இடம் என அதுவே தீர்மானித்து விட்டது. எல்லாம் தானாக நடந்து விட்டது. என் இஷ்டத்துக்கா எல்லாம் நடக்குது. அந்த ஒத்தையடி பாதையை தாண்டி அந்த இந்திய உணவு கழகம் வந்து சேர்ந்து கார்தியிடம் விஷயம் எதும் சொல்லும் முன்னே "என்னடா பேயடிச்ச மாதிரி இருக்கே" என கேட்டான். அவன் சுத்த நாத்திகம். (இப்பவும் தான்) விஷயம் சொன்னேன். சிரித்தான். அப்பவும் அவன் நம்பவில்லை. என் பைகளை அவன் லேப்ல வச்சுட்டு என்னை ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பாலம் நோக்கி மிதித்தான்.
அவன் இருக்கும் தைரியம் எனக்கு. இருந்தாலும் பயம் இன்னும் போகலை. அங்கே போனால் அந்து பாலத்தின் மீது உட்காந்து இருந்தது. "ஒ இதுவா, நமக்கு தெரிஞ்சது தான். இரு நான் போய் பேசிட்டு வர்ரேன்" என சொன்ன போது எனக்கு அழுகையும் பெருமையும் ஒரு சேர வந்தது. ஒரு சாதாரன மாயவரம் டவுன்ல நம்ம கூட ஒன்னடி மன்னடியா பழகிய கார்த்தி இன்னிக்கு ஒரு பெரிய குக்கிராமத்துல ஒரு மாபெரும் சுடுகாட்டிலே பேய்கிட்டே எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தும் அளவு பெரியாளா ஆகிட்டானே என்கிற பெருமையும் கூடவே அதுகிட்டே இவனுக்கு என்ன பேச்சு வேண்டிகிடக்கு என்று அழுகையும் வந்தது.
அது கிட்டே பேசினான். திரும்ப வந்தான். "டேய் பாவம்டா அது பேர் சுந்தரி. இந்த கிராமத்து பொண்ணு தான். கட்டி கொடுத்து புருசன் சரியில்லைன்னு முதல் நாளே மண்ணெண்ணய் ஊத்தி கொளுத்திகிச்சு. அத்தோட மனநிலையும் சரியில்லாம போச்சு. ஆஸ்பத்திரிலயும் வச்சுக்கலை. ஓடி வந்துடுச்து. அத்தோட இங்க சுடுகாட்டுக்கு பக்கத்திலே வந்து உட்காந்துக்குது.பாவம் டா.. " என சொன்ன போது எனக்கு அதன் மீது பயம் போய் இரக்கம் வந்தது. அத்தோடு கூடவே ஜுரமும் வந்தது. பின்னர் ஒருவாரம் எனக்கு செம ஜுரம்.
இதாங்க என் பேய்கதை. அதன் பிறகும் கொஞ்ச காலம் எனக்கு பேய் பற்றிய பயம் இருந்துச்சு. பின்னே கடந்த பதினாறு வருஷமா பயம் விட்டுப்போச்சு:-)) இப்பல்லாம் நான் பயப்படுவது இல்லை:-))