பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 26, 2012

கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!!



ராஜீவ் விடுதலைப்புலிகளால் மரணிக்கப்பட்டதற்கு பின்னர் இந்தியாவில் அதிக பலன் அடைந்த கட்சி என சொன்னால் அது "காங்கிரஸ்". மிகப்பெரிய வெற்றியை அந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ல் பெற்றது. அந்த கட்சிக்கு இணையாக அதிக லாபம் அடைந்தது யார் எனில் நிச்சயமாக அதிமுக தான். அதிமுக என்று சொல்வதை விட குறிப்பாக ஜெயலலிதா என்றே சொல்லலாம். அந்த ராஜீவ் மரணத்தால் தான் ஜெயா முதல்வராக முடிந்தது. இல்லாவிடில் நிச்சயம் அதிமுக என்னும் கட்சி இன்று பூண்டற்று போயிருக்கும்.


அதே போல ராஜீவ் மரணத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எனில் கட்சி என பார்த்தால் திராவிட முன்னேற்ற கழகம். திமுக 1989ல் ஆட்சியை இழந்தது அதே விடுதலைப்புலிகள் பிரச்சனையால் தான். அதே போல விடுதலைப்புலிகள் செய்த இமாலயத்தவறு ராஜீவை தமிழக மண்ணில் மரணிக்க வைத்த சம்பவம். அதனால் திமுகவின் வெற்றி பறிபோனது 1991ல். அப்போது திமுகவினர் சொத்துகள் சூறையாடப்பட்டன. திமுகவினர் அடித்து நொறுக்கப்பட்டனர், திமுகவினர் மீது எல்லா வித வழக்குகளும் பாய்ந்தன. திமுக கட்சியை தடை செய்யலாமா என மத்திய அரசு சோழி உருட்டி பிரசன்னம் பார்க்க ஆரம்பித்தது. அப்போதைய நரசிம்மராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் மத்திய அரசுக்கு மிகுந்த ஆதரவாக எப்படியாவது திமுகவை அழிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்ட ஜெயா அரசு இங்கே மாநிலத்தில் திமுக மீது சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கியது.


 திமுகவை சேர்ந்த பெண் உறுப்பினர், அமைச்சராக பதவி வகித்தவர், சகோதரி திருமதி. சுப்புலெஷ்மி ஜகதீசன் முதலானோர் ஒரு வருட சிறை தண்டனை எல்லாம் பெற்றனர் பொய்வழக்குகளில். அதன் பின்னர் திமுக மெல்ல மெல்ல விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையில் இருந்து விலகி வந்தது. அதற்கு முன்னர் கூட விடுதலைப்புலிகளை திமுக அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும்... இலங்கையில் வசித்த தமிழர்களுக்காக அவர்கள் நலனுக்காக தமிழீழம் அமைய குரல் கொடுக்க ஜனநாயக பாதையில் சமர் செய்த ஈழத்தந்தை செல்வா அவர்கள் மறைவினாலோ , அமிர்ந்தலிங்கம் போன்றவர்கள் அப்போது செயலற்று போனதாலோ(விடுதலைப்புலிகளால்), திமுக நேரிடையாக ஆதரவு தெரிவித்த சீறி சபாரத்தினம் (TELO) போன்ற குழுக்கள் விடுதலைப்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டதலோ திமுக விடுதலைப்புலிகள் இயக்கத்தை அத்தனை ஒரு வாஞ்சையாக ஆதரிக்கவில்லை எனினும் தனித்தமிழீழம் கிடைக்க அந்த விடுதலைப்புலிகள் என்னும் ஒரே இயக்கம் மட்டுமே இருந்த காரணத்தால் ஒத்துக்கொள்ள நேர்ந்தது எனினும், அந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆலோசனை சொன்ன உத்தமர்கள் இங்கே தமிழகத்தில் தங்கள் அரசியலை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டி செய்த துர்போதனைகளால் அவர்களுக்கும் அதாவது விடுதலைப்புலிகளுக்கும் திமுக மீது அத்தனை ஈர்ப்பு இல்லாமலே போனது.


 ஆனாலும் ராஜீவ் மரணத்தின் பின்னர் திமுக பட்ட சிரமங்கள், திமுக தொண்டர்கள் சந்தித்த துயரங்கள் எல்லாம் சீர்தூக்கி திமுக சற்றே ஒதுங்கி இருந்தது. அந்த இடைவெளியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தமிழக துர்போதனை கும்பல்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆலோசனை என்கிற பெயரில் மேலும் மேலும் விஷத்தை மட்டுமே ஊட்டினர்.

எந்த அளவுக்கு விஷம் ஊட்டினர் என்றால் 2009 மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது கூட தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை தொடர்பு கொண்டால் ஏதேனும் வழிபிறக்கும் எனக்கூட தெரியாமல் விடுதலைப்புலிகளின் "போலீஸ் நடேசன்" அவர்கள் எதற்கும் உதவாத நெடுமாறன், வைக்கோ ஆகியோரை தான் தொடர்பு கொண்டு காப்பாற்ற கோரினர் என்னும் அளவு தான் விடுதலைப்புலிகளின் அரசியல் ஞானம் இருந்தது, அல்லது அந்த அளவு இந்த துர்போதனை கும்பல்கள் "தாங்கள் தான் தமிழகத்தின் தலைசிறந்த அரசியல் வித்தகர்கள், ஆபத்பாந்தவர்கள்" என சொல்லி வைத்ததை நம்பியது விடுதலைப்புலிகள் இயக்கம். : : :நெடுமாறனோ, வைக்கோவோ, மற்றும் சின்ன சின்ன சீமான்களோ விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக குரல் கொடுத்தால் அவர்களை "காமடிபீஸ்" ஆக மட்டுமே இலங்கையும் ஒதுக்கி தள்ளியது. இலங்கையின் அந்த அரசியல் அறிவு உண்மை தான் என மே 17, 2009 நிகழ்வு நடத்தி காண்பித்தது. இலங்கை எப்போதுமே நெடுமாறன், வைக்கோ வகையறாக்களை கணக்கில் எடுத்து கொண்டு பதில் கூட கூறவில்லை.


ஆனால் தற்போது கலைஞர் "ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு" என முழங்கியதும் இலங்கையின் கோத்தபய ராஜபக்ஷே கள் குடித்த குரங்குகிற்கு உச்சந்தலையில் தேள் கொட்டியது போல அலறும் நிலை ஏன் என்பதை உலகலாவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத்தமிழர்களே, கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர். ராஜீவ் மரணத்தின் பின்னர் அவர்கள் பட்ட அடி எல்லாம் மறந்துவிட்டு களம் இறங்குவர். நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நெருங்கும் சமயம் இது. திமுக ஆதரவு என்பது மத்தியில் ஆள இருக்கும் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்த நேரத்தில் கலைஞர் எடுக்கும் நிலைப்பாடுகள் உலகலாவிய ஈழத்தமிழர்களே, உங்களுக்கு மிகவும் முக்கியம்.... .


கலைஞர் எடுத்த நிலைப்பாட்டினால் அலறியது கோத்தபய ராஜபக்ஷே மட்டுமல்ல, இலங்கை அரசு மட்டுமல்ல. ஈழத்தமிழர்களே, நீங்கள் இத்தனை நாள் யாரை ஆபத்பாந்தவனாக நினைத்தீர்களோ, அந்த வைக்கோ, சீமான், நெடுமாறன் ஆகியோர் அலறிக்கொண்டு இருக்கின்றார்கள். "கலைஞரே நீங்கள் தயவு செய்து ஈழம் என பேசாதீர்கள்" என "சிரித்து" கொண்டே சொல்கின்றனர். என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்? உண்மையிலேயே ஈழம் வேண்டும் என நினைப்பவர்களாக இருப்பின் என்ன செய்திருக்க வேண்டும்? "அப்பாடா! இப்போதாவது கலைஞர் இப்படி சொன்னாரே, இனி நாமும் அவர் கூட கரம் கோர்ப்போம்" என குதூகலம் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிடில் அப்படி செய்தால் தங்கள் அரசியல் பிழைப்பு இனி வீணாகுமே என நினைத்தால் இத்தனை நாள் ஈழமக்கள் பெயரை சொல்லி பிழைப்பு ஓட்டியமைக்கான நன்றியாக வாயை மூடிக்கொண்டு "ஈழம் கிடைக்க கலைஞர் அவர் வழியில் போராடட்டும், நாங்கள் தனி வழியே போராடுவோம் " என வாயை மூடிக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால் சீமான் போன்ற சின்னதுகள் எல்லாம் "கலைஞரை போராடாதே, வாயை மூடு "என சொன்னால் என்ன அர்த்தம்? சரி! போகட்டும், சீமான் அப்படி சொல்லலாம். எப்போது தெரியுமா? சீமான், வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் எல்லாம் போராடி கிட்டத்தட்ட தனி ஈழம் கிடைக்க இலங்கை அரசு ஒத்து கொண்ட நிலையில் அதற்கான வரைமுறைகள் தயாராகும் நிலையில் இருக்கும் போது அப்போது கலைஞர் வந்து இப்படி சொன்னால் சீமான் "கலைஞரே வாயை மூடும். வெண்ணை திரண்டு வரும் போது பங்கு போடுகிறேன் என சொல்லி தாழியை உடைக்காதீர்" என சொல்லலாம். ஆனால் நடப்பது என்ன? இவர்களை எல்லாம் மாபெரும் அரசியல் சக்தியாக நம்பி கெட்ட ஈழமக்கள் இன்று அந்த மண்ணில் போராட கூட நாதியில்லாமல் முள்வேலியில் இருக்கும் போது கலைஞர் "டெஸோ" அமைப்பை மீண்டும் துவங்கி ஒரு ஈழப்போராட்டம் ஆரம்பிக்கும் நிலையில் அவரை "வாயை மூடு" என சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை. இந்திரா அம்மையார் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை பிடித்து இருந்தது. பின்னர் அமைதிப்படை அனுப்பிய காலத்தில் இருந்து இந்தியாவை பிடிக்கவில்லை. உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தேவையான காரணம் இருந்தது. இப்போது நெடுமாறன், வைக்கோ,குஞ்சு குளுவான் சீமான் போன்றவர்களால் உங்களுக்கு தமிழ்நாட்டில் பாதி பேருக்கு மேல் ஆதரவு இல்லாமல் போனது, அதனால் மே 17 நிகழ்வெல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அவர்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை உங்களுக்கு என இப்போதாவது புரிந்து இருக்கும். மேலும் அவர்கள் உங்கள் வேதனையை இங்கே தங்கள் அரசியல் லாபத்துக்கான மூலதனமாக பயன்படுத்துவதும் தெரிந்திருக்கும். தேவையில்லாமல் உங்கள் தோள் மீது ஏறிக்கிடக்கும் குப்பையை தட்டிவிட்டு அடுத்த நல்ல நிலைப்பாட்டை நீங்கள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது. மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது. அதல்லாம் இல்லை, துர்போதனைக்காரர்கள் பிடியில் தான் இருப்போம் என இப்போதும் சொல்வீர்களானால் உங்களுக்கு தமிழீழம் கிடைக்க வந்த கடைசி நல்ல வாய்ப்பும் பறி போகும் என்பதை உணருங்கள். தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என சொன்ன கலைஞர், இலங்கைஅரசால் "பயங்கரவாதி கருணாநிதி" என பாராட்டப்பட்ட கலைஞர் நேற்று "டெசோ" அமைப்பு (Tamil Elam Supporters Organization) மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என சொல்லி தமிழீழத்துக்கான அடுத்த விடுதலைப்போரை ஆரம்பித்து வைத்துள்ளார். கலைஞர் என்னும் இந்த புளியங்கொம்பை பற்றிக்கொள்வதும் தட்டிவிடுவதும் உங்கள் கையில் தான் உள்ளது!

April 16, 2012

2 ஜி அலைக்கற்றை வழக்கும், மாத்தூர் அடித்த அந்தர் பல்டியும் வழக்கம்போல் ஊடகங்களின் மௌனவிரதமும்!




பக்கத்து வீட்டுக்காரன் நம் மீது பொறாமைப்பட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை. இந்திய திருநாட்டின் மதிப்பு மிக்க காபினட் அமைச்சராக பல வருடம் வாஜ்பாய் தலைமையிலான அரசு முதலே பதவி வகித்து வரும் ஆ.ராசா அவர்களுக்கு பொருளாதார வளம் கொழிக்கும் தொலைத்தொடர்புதுறை 2009ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் முறையாக வழங்கப்பட்டதில் இருந்து பற்றி எரியாத வயிறுகளே இல்லை என்னும் அளவு இருந்தது என்னவோ உண்மை. இந்த கட்டுரையில் நான் திரு. ஆ.ராசா அவர்களுக்காக வக்காலத்து வாங்கப்போவதில்லை. அது என்னுடைய வேலையும் இல்லை. ஆனால் நடக்கும் விஷயங்கள் எல்லாம் ஆ.ராசா அவர்கள் விஷயத்தில் ஆரம்பம் முதல் இந்த அலைக்கற்றை விவகாரத்தில் அவர் தரப்பு மட்டும் ஏன் இப்படி ஒட்டு மொத்தமாக "கார்னர்" செய்யப்படுகின்றார் என்பதில் இருந்து என்னவோ நடக்கின்றது ஆனால் நடக்கும் விஷயங்கள் அத்தனை ஒரு நல்ல விஷயமாகப்படவில்லை என்றே மனதிற்கு படுகின்றது.

கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் எல்லாமே அலைக்கற்றை விஷயம் ஒட்டு மொத்த டெல்லி வட்டாரங்களையும் சூடாக்கி வரத்தொடங்கியது. எந்த வட இந்திய தொலைக்காட்சிகளை திறப்பினும் கோட், சூட் மாட்டிய எதேனும் ஒரு பொம்மைகள் ஒட்டு மொத்த இந்தியாவையே ஆ.ராசா அவர்கள் கொள்ளையடித்து பெரம்பலூருக்கு கண்டெய்னரில் ஏற்றிக்கொண்டு வந்தது போன்ற ஒரு பிரம்மை உண்டாக்கப்பட்டத. யாருக்கும் எதும் புரியவில்லை."ஸ்பெக்ட்ரம்" என்று ஆங்கிலத்தில் இருக்கும் வக்கபல்லரி புதிதாய் பலர் வாயில் புகுந்து புறப்பட்டது. அதற்கான தமிழ் வார்த்தை என்ன என்று அகராதி புரட்டிப்பார்க்கப்பட்டு "அலைக்கற்றை" என நாமகரணம் சூட்டப்பட்டது. அது முதல் தமிழக பத்திரிக்கைகள் தீனி போடப்பட்ட "மத" யானைகளாக பிளிறத்தொடங்கின.

யார் யாருக்கு எல்லாம் குறைந்த செலவில் செல்போன் சர்வீஸ் வழங்க ஆ.ராசா வழிவகை செய்தாரோ அந்த ரிக்ஷா தொழிலாளி முதல் அடித்தட்டு மக்கள் கூட "ஸ்பெக்ட்ரம்" பற்றி புதுப்புது கதைகளாக செல்பேசினர். ஆ.ராசாவின் கவனம் இதிலெல்லாம் சிதறியதாக தெரியவில்லை.2010 ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி ஐந்து நாள் பயணமாக ரஷ்யா சென்றார். அங்கே இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வது குறித்து ரஷிய தொலை தொடர்பு துறை அமைச்சர் இகோர் செகோலேவுடன் அமைச்சர் ஆ.இராசா பேச்சு நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.இதனைத் தொடர்ந்து, ரஷிய நாட்டின் தகவல் தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் பார்வையிடும் ஆ.ராசா 16-ந்தேதி டெல்லி திரும்புகிறார். ஆக மடியில் கனமில்லை என்கிற மனோபாவம் மட்டும் ஆ.ராசா அவர்களின் செயல்பாடுகளில் நன்கு தெரிகின்றது. ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கின விஷயங்கள் பற்றி ஆ.ராசா அவர்கள் "பாவம் எதும் தெரியாதவர்கள். இல்லாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்கினால் அது நீதிமன்றம் சென்றால் கூட வழக்கு நிற்காது" என நினைத்து விட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் அப்படி ஊதிப்பெருக்கியவர்களில் சிலருக்கு கூட "இது ஒன்றும் இல்லாத விஷயம் தான், ஆனால் ஊதிப்பார்ப்போம். அந்த புயலில் ராசா அடித்து செல்லப்பட்டால் லாபம். அசையாமல் நின்றால் நமக்கு நட்டமேதுமில்லை" என்று தான் ஆரம்பித்தனர். ஆனால் ஒட்டு மொத்த இந்திய ஆதிக்க ஊடகங்களும் அந்த விஷயத்தை இப்படி ஊதிப்பெரிதாக்கும் என ஆ.ராசா அவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகமோ சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றே இப்போது நினைக்க தோன்றுகின்றது.

ஆ.ராசா அவர்கள் ரஷ்ய பயணம் முடித்து விட்டு தாயகம் திரும்பும் முன் அந்த ஐந்து நாட்களில் இவர் மீது வழக்கு தொடுக்க தேவையான முகாந்திரம் இருப்பதாக சில ஆவணங்களை சி பி ஐ தயாரித்து விட்டது என்றே நினைக்கும் அளவுக்கு அப்போது தான் சுடச்சுட பதவி ஓய்வு பெற்ற அகில இந்திய டெலிகாம் செக்ரட்ரி பதவியில் இருந்த ஐ ஏ எஸ் அதிகாரி டி.எஸ்.மாத்தூர் என்பவரை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது சி பி ஐ. அந்த மாத்தூர் என்னும் உத்தமபுத்திரன் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்தார் என்ற அரசல் புரசல் செய்திகள் உலா வந்த நேரத்தில் அதுவே சி பி ஐக்கு வசதியாகப்போனது. அதை சொல்லி மிரட்டியே கூட இவரை பிடித்து எதாவது அவசர வாக்குமூலம் வாங்கினால் அதை உச்ச நீதிமன்றத்தில் காட்டியே ஆ.ராசா மீது வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் சென்று அவரது அனுமதியோடு வழக்கு தொடுத்து விடலாம் என நினைத்தது சி பி ஐ.

சி பி ஐ நினைத்தது போலவே மாத்தூர் என்னும் மாடு அவர்கள் தாளத்துக்கு வசதியாக தலையாட்டியது. ‘2 ஜி’ அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு பற்றி நான் சொன்ன ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டார் அமைச்சர் ராசா. - ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியது தொடர்பான கோப்புகளில் நான் கையெழுத்திட வில்லை. மேலும் எனது ஒப்புதலையும் ராசா பெறவில்லை. ஏலம் விடுவதன்மூலம் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற எனது கருத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை" என சி பி ஐ வசம் டி எஸ் மாத்தூர் வாக்குமூலம் அளிக்க கிட்டத்தட்ட அதன் காரணமாகவே ஆ.ராசா அவர்கள் மீது வழக்கு சோடிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கு ராசாமீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனுமதி கேட்கப்பட்டது. அப்படி அனுமதி கேட்கப்பட்ட அனைத்து அரசு நடைமுறை கடிதங்கள் எல்லாமே டி எஸ் மாத்தூரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டது.




( இக்கட்டுரையில் சாராம்சம் என்பது ராசா நிரபராதி என்று வாதிடுவதோ அல்லது அதற்கு சமமான விஷயங்களோ அல்ல. ஆனால் வழக்கின் போக்கு இப்போது எப்படி ஒருதலைப்பட்சமாக போய் கொண்டு இருக்கின்றது என்கிற ஆதங்கத்தினை பதிவு செய்யும் ஒரு முயற்சியேயாகும். )

இதற்கிடையே உச்சநீதிமன்ற கருத்து, பின்னர் ராசா அவர்கள் திமுக தலைமை கேட்டுக்கொண்டதுக்கு இணங்க அந்த வருட நேரு பிறந்த நாளில் பதவி விலகினார். பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது எல்லாம் கிடக்கட்டும். நாம் இங்கே குறிப்பிடப்படும் விஷயமே இத்தனைக்கு காரணமாக இருந்த டி எஸ் மாத்தூர் என்னும் உத்தம புத்திர யோக்கிய சிகாமணியின் வாக்குமூலம் தானே? அதாவது அவர் ஏலமுறை பின்பற்றலாம் என சொன்னதை ராசா கேட்காமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என செய்து நாட்டுக்கு ஒன்னேமுக்கால்லட்சம் கோடி நட்டம் ஆகிவிட்டது என்றெல்லாம் அண்டப்புளுகு ஆகாச புளுகு புளுகினாரோ ,அதன் பின்னர் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டது. என்ன தெரியுமா? "இல்லை, டி எஸ் மாத்தூர் சொல்வது யாவும் புனைவு மட்டுமே. அது சம்மந்தமாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்திலும் மாத்தூர் கலந்து கொண்டார். அத்தோடு மட்டுமல்லாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் பழைய நிலையே தொடர வேண்டும் என பரிந்துரை செய்தும் அவர் கைப்பட எழுதி பரிந்துரை செய்தும் கையெழுத்து போட்டுள்ளார். அவரது பரிந்துரையின் பேரிலேயே அமைச்சராக இருந்த ஆ.ராசா அவர்கள் அதை அமைச்சரவை ஒப்புதலுடன் கையெழுத்து இட்டுள்ளார்" என கூறியதோடு மட்டுமல்லாமல் அது அந்த மாத்தூர் கையெழுத்து இட்ட ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட்டது. (படத்தில் காணவும்)











ஆனால் அதற்குள் மாத்தூர் அவர்கள் காலை ஒரு தொலைக்காட்சியில் மதியம் ஒரு தொலைக்காட்சியில், இரவினில் ஒரு தொலைக்காட்சி என தன்னிடம் இருந்த அத்தனை விதமான கோட்டு, சூட்டுகள் பளபளக்க பேட்டி கொடுத்து கொண்டே இருக்க அந்த நேரம் ட்ராய் வெளியிட்ட மாத்தூரின் அண்ட புளுகு ஆதாரங்களை வெளிக்காட்ட எந்த ஒரு வட இந்திய சேனல்களும் முன்வரவில்லை, அச்சு ஊடகங்கள் அதற்கு மேல் வரிந்து கட்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தன. அது போதாது என்று தமிழக ஜெயா டிவியில் ரவிபெர்னார்ட் என்பவர் தன் லூயிபிலிப் சட்டை அழுக்காகாமல், ஷூ பாலீஷ் மின்னலடிக்க இதே மாத்தூரின் கருத்தை பல வித முகபாவங்களுடன் ஒரு விலைமகளுக்கே உரித்தான ஏற்ற இறக்கமுடன் பேட்டி எடுத்து கோயபல்ஸ் ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தார். இதே ரவிபெர்னாட் பற்றி ஊடக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு வித எள்ளல் உண்டு. இவர் ஜெயா தொலைக்காட்சியில் சட்டசபை தேர்தலில் முடிவு அறிவிக்கவும் அது பற்றி விவாதிக்கவும் ஒரு முறை நியமிக்கப்பட்ட நேரத்தில் அதிமுக தோல்வியடைந்து திமுக வெற்றி வாகை சூடி பின்னர் கலைஞர் பதவிப்பிரமாணம் செய்து முடித்தும் விட்ட நிலையில் கூட நேரலை நிகழ்வில் "அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைக்க இருக்கின்றது" என்று சொல்லிகொண்டே இருக்க ஜெயா தொலைக்காட்சி ஊழியர்கள் சிலர் இந்த ரவிபெர்னார்டை "கொடுத்த காசுக்கு மேலே கூவிவிட்டாய் .போதும் போ " என சொல்லி குண்டுக்கட்டாய் தூக்கிப்போனதாக ஊடகவியலர் மத்தியில் கேலிப்பேச்சுகள் புழக்கத்தில் இப்போதும் உண்டு. (கேலி பேசியவர்கள் அதே வறுமை நிலையில் இருக்க ரவிபெர்னார்டோ இப்போது மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆகி பணம் பகட்டோடு இருக்கின்றார் என்பது உபரி செய்தி - நீதி: பணம் பத்தும் செய்யும், பொய் பதினொன்றும் செய்யும்)

ஆக எல்லாம் ஆனது. ராசா அவர்கள நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்பதாக ச்சொல்லி இதுவரை பிணை கூட கேட்காமல் நாள் தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விபரங்களை தானே ஒரு வழக்கறிஞராகவும் இருப்பதால் தானே வாதாடியும் தன் வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு குறிப்புகள் கொடுப்பதும் (அவரது வழக்கறிஞரே அதை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் ஒரு முறை குறிப்பிட்டார்) ஆக வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

நாம் இங்கே குறிப்பிடுவது வழக்கு நடைபெறும் முறை குறித்தே. அது பற்றி மட்டுமே! வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்கள் வழக்கு நடைபெறும் எல்லா நாட்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பது சட்ட விதிமுறையா என்பது குறித்து எமக்கு தெரியாது. ஆனால் பரப்பன அக்கிரகாரத்தில் நடைபெறும் ஜெயா மீதான வழக்கில் அப்படித்தான் ஜெயா ஆஜராகிக்கொண்டு இருக்கின்றாரா என்பது எம் கேள்வி! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நேரிடை கேள்வி கேட்கும் வழக்கின் கடைசி கட்ட நடைமுறையின் போது கூட ஜெயாவும் அவரது தோழியாக இருந்து சமீபத்தில் தங்கையாகிப்போன சசிகலாவும் நீதிமன்றம் செல்ல முடியாது என அலைக்கழிக்கும் போது தினம் தினம் வழக்கில் ஆஜராகும் ஆ.ராசா அவர்கள் கடைசி வரிசையில் அமர்ந்தால் கூட பள்ளி மாணவரை ஆசிரியர் மிரட்டும் பாணியில் நீதிபதியால் அவமானப்படுத்தப்படுவதும் "முன் வரிசையில் வந்து பேசாமல் உட்கார்ந்து வழக்கை கவனிக்கவும்" என நீதிபதி சொல்வதும் அங்கே சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றதே, அப்போது நீதி என்பது இந்தியாவில் எல்லோருக்கும் சமம் என்பது பொய்யோ என்ற எண்ணம் நமக்கு வலுக்கின்றது.

சரி போகட்டும்! நாம் மேலே குறிப்பிட்ட டி எஸ் மாத்தூர் ஒரு நான்கு நாட்கள் முன்னதாக குறுக்கு விசாரணைக்கு ஆட்படும் போது அவர் ஏலமுறை வேண்டாம், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என பரிந்துரை செய்த ஆவணங்களை க்காட்டி ஆ.ராசாவின் வழக்கறிஞர் கேள்வி கேட்ட போது அதற்கு மாத்தூர் மழுப்பல் பதிலாக "ஆம் நான் இதில் கையெழுத்து போட்டது உண்மை தான், ஆனால் வாழ்மொழியாக அதல்லாம் வேண்டாம் ஏலத்தில் விடலாம் என சொன்னேன்" என மீண்டும் அண்டபுளுகு சொன்ன போது (கவனிக்க இவர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி. இந்த ஒரு பதிலுக்காகவே ஐ ஏ எஸ் அதிகாரிகள் இவர் மீது ஐ ஏ எஸ் சங்க நடவடிக்கை எடுக்கலாம்) ராசாவின் வழக்கறிஞர் குரலை உயர்த்தி சில கேள்விகளை கேட்க நீதிபதியோ "நீங்கள் குரலை உயர்த்தி பேசினால் நானும் குரலை உயர்த்தி பேச வேண்டி இருக்கும்" என சொல்ல வழக்கம் போல ஊடகங்கள் வடையை தின்பதை விட்டுவிட்டு ஓட்டையை எண்ண ஆரம்பித்து விட்டன. வடையின் ருசி யாருக்கும் தெரியாமல் போனது. நீதிமன்றங்களில் சில சூழல்களில் குரல் உயர்த்தி பேசுவது என்பது எல்லாம் தவிர்க்க இயலாத விஷயம் தான் என சில வழக்கறிஞர்கள் கூட ஒத்துக்கொள்கின்றனர்.

எல்லா தொலைக்காட்சியிலும் மாய்ந்து மாய்ந்து மாத்தூர் சொன்ன பொய்யை காட்டிய அந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போது எங்கே போயின? அழுக்கு படாத சட்டை போட்டு விலைமகள் நடிப்பை நடித்த ரவிபெர்னார்ட் எங்கே? 18 மாதங்கள் முன்னதாக பரப்பிய பொய்யை இப்போது உண்மை வெளிவரும் போதாவது காட்டி தங்கள் பாவத்தை கழுவ முன்வந்தனரா? இல்லை! ஏன் இப்படி ஒரு ஆதிக்க வெறி அந்த ஊடகங்களுக்கு!

ஒரு தெருவில் பத்து பெண்களின் தாலியை அறுத்து கொண்டு போன திருடன் ஒரு நாள் கையும் களவுமாக பிடிபட தாலி பறிகொடுத்த பெண்கள் அவனை கட்டிப்போட்டு விட்டு காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துவிட்டு ஆத்திரத்தில் நான்கு அடி அடித்தும் விடுகின்றனர். பின்னர் வந்த காவல்துறையினர் திருடியவனை பரிவோடு நடத்திவிட்டு தாலிபறிகொடுத்த பெண்களை "அடித்துவிட்டதாக" வழக்கு போட்டு உள்ளே தள்ளுகின்றனர். இது போன்ற செய்திகள் அடிக்கடி தினத்தந்தியில் வரும். இதற்கும் நாம் மேலே கூறிய பாட்டியாலா நிகழ்வுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபிடியுங்கள் பார்ப்போம். கண்டுபிடிக்க இயலாது!

இதை தமிழ் அச்சு ஊடகங்கள் கூட "ராசாவிடம் நீதிபதி கண்டிப்பு" என்கிற தலைப்பிட்டே வெளியிடுகின்றன! ஆனால் உலகமகா உத்தமன் யோக்கிய சிகாமணி மாத்தூர் பற்றியோ அவர் அப்போது எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் பரப்பிய பொய்யுரை பற்றியோ இப்போது நீதிமன்றத்தில் அடித்த அந்தர் பல்டி பற்றியோ ஏன் நம் ஊடகங்கள் வாய் திறக்கவில்லை? உங்களை கட்டிப்போட்ட மந்திர நூல் எது? எப்போது உண்மை பேசுவீர்கள்? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பீர்கள்?

காட்சிகள் மாறும்! காலம் மாறும்! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்னும் நிலை வரும்!

April 9, 2012

"சோளகர் தொட்டி" - நூல் விமர்சனம்!



"சோளகர் தொட்டி" - இந்த நூலை வாங்கியதும் அத்தனை ஒரு ஈர்ப்பு இல்லை அதன் மேல். அதன் அட்டைப்படத்தில் இருக்கும் ஒரு அழுக்கு கிழவன், கையிலே ஒரு கொம்பு, காதிலே ஒரு வளையம், மழிக்கப்படாத வெள்ளை முள் தாடி, என எல்லாமே உவ்வே ரகம். பெயரும் என்னை அத்தனை கவரவில்லை. அது என்ன சோளகர் தொட்டி, சோலைக்கொல்லை பொம்மை என வாங்கியதை தூக்கி தூர வைத்து விட்டு எப்போதும் போல எதிரே வந்த லாரி டமார், மோட்டாரில் சென்றவன் படார் என்னும் வக்கிர எழுத்துகளை மேயும் போது வந்த எரிச்சலில் தூக்கிப்போட்ட "சோளகர் தொட்டி"யை எடுத்து மேலோட்டமாக மேய்ந்தேன். அதுவும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போகவே அதை படித்த ஒரு நண்பனிடம் கருத்து கேட்க "அதுவா இந்த வீரப்பன் வேட்டைல பாதிக்கப்பட்டாங்கல்ல மலைஜாதி மக்கள், அதை பத்தி இருக்குதுன்னு சொன்னாங்க, நான் படிக்கலை" என சொல்ல மீண்டும் அதை தூக்கி தூர வைத்து விட்டேன்.

ஒரு வாரம் பின்னர் படிக்க எதுவுமில்லாமல், மின்சாரம் இல்லா தூக்கம் தொலைத்த இரவினில் கைவிளக்கு உதவியில் எப்படியும் இரண்டு பக்கம் படித்துத்தான் தொலைப்போமே என வாசிக்க ஆரம்பித்த போது இரவு மணி ஒன்று இருக்கும். அந்த புத்தகத்தை நான் கீழே வைத்த போது அடுத்த நாள் பகல் ஒன்று ஆனது. நடுவே சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, எதுவும் இல்லை. படிக்க எடுத்து கொண்ட நேரம் என்னவோ பன்னிரண்டு மணி நேரம் மட்டுமே. அதன் தாக்கம் எனக்கு குறைய கிட்ட தட்ட பன்னிரண்டு நாட்கள் ஆனது.

"ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான் அவன் செத்துப்போனான்" என்றோ "ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை கொன்னுட்டாங்க" என கேள்விப்படும் போதோ "அய்யோ பாவம்" என்கிறதோடு அது முடிந்து விடும். ஆனால் அதே கதை சொல்லி " ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தான், அவனை கொன்னுட்டாங்க, அவனை இப்படி இப்படில்லாம் சித்ரவதை செஞ்சு கொன்னாங்க, அவன் ரொம்ப நல்லவனா இருந்தான். அவன் அந்த ஊருக்கு ராஜா, நல்லது எல்லாம் செஞ்சான் அவன், அவன் குலம் இது, கோத்திரம் இது, அவன் செத்ததால இன்ன இன்ன கஷ்டம், முக்கியமா அவன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்ந்தான்" என அதைப்பற்றி விலாவாரியாக சொல்லும் போது செத்தவன் மேலே முதலில் ஒற்றை வரியில் வந்த அனுதாபம் வந்தது போல இல்லாமல் அவன் மேல் ஒரு பாசம், பரிவு, அவனை கொன்றவர்கள் மீதான வெறுப்பு என படிப்படியாக நம் மனோநிலை மாறி மாறி செத்தவன் மீது ஒரு மதிப்பு வருமே அதான் கதை சொல்லியின் வெற்றி. அந்த வெற்றியை நூலாசிரியர் ச.பாலமுருகன் பெற்றிருக்கிறார் இந்த நூலில்.

கொஞ்சமும் ஒரு புத்தகத்தை படிக்காமல் ""அதுவா இந்த வீரப்பன் வேட்டைல பாதிக்கப்பட்டாங்கல்ல மலைஜாதி மக்கள், அதை பத்தி இருக்குதுன்னு சொன்னாங்க, நான் படிக்கலை" என்ற விமர்சனம் ஏனனில் அவன் கதை கேட்ட விதம் அப்படி. ஆனால் இதை எழுதிய பாலமுருகன் எடுத்துக்கொண்ட விஷயம் வீரப்பன் வேட்டையில் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்கள் பற்றியது.அதை மட்டும் அவர் சொல்லியிருந்தால் நாமும் இதை இப்படித்தான் எடுத்துக்கொண்டு இருப்போம். ஆனால் இரண்டு பாகமாக எழுதிய ஒரு நூலில் முதல் பாகம் முழுமையும் அவர் அழைத்து கொண்டு போனது ஒரு மலைக்கு. மலை என்றால் அப்படி ஒரு மலை. பசுமையும், இயற்கை வளமும், காட்டு விலங்குகளும் மலை மீதான அடர்ந்த காட்டுக்கு முன்னம் இருக்கும் ஒரு சிறிய பகுதி சமவெளி பகுதிக்கும், அதில் வாழும் ஒரு சுமார் நாற்பது மலைவாழ் குடிசைகள் இருக்கும் பகுதிக்கும், அந்த மக்களின் பழக்க வழக்கம், உணவு, உடை, வாழ்வாதாரம் என எல்லா இடத்துக்கும் கை பிடித்து அழைத்துப்போய் அறிமுகம் செய்து வைக்கிறார். இன்னும் சொல்லப்போனால் முதல் பாகம் முழுமையும் அது மட்டுமே. நாம் அந்த மலைக்கிராமத்தில் அவர்களோடு அவர்களாக ஓரத்தில் ஒரு குடிசை போட்டு மனதளவில் குடிவந்த பின்னர் இந்த பாழாய் போன நாகரீக உலகான மலைக்கு கீழே இனிமேல் போகவே வேண்டாம் என முடிவெடுத்த பின்னர் மெதுவாக இரண்டாம் பாகத்தில் இருந்து வில்லன்கள் மலைகிராமத்தில் நுழையும் போது நாமும் மிரண்டு போகிறோம். அய்யோ இந்த மக்களுக்கு ஏன் இந்த நிலை என அழுகின்றோம்.

அதுவரை நாம் அந்த மலைவாழ் கிராமத்தில் ஒருவனாக ஆகும் போது ஒற்றை கொம்பன் யானை வந்து சேர்த்து வைத்த ராகியை துவம்சம் செய்ய வரும் போது வெடி கொளுத்தி போடுகிறோம், தூக்கம் கலைந்தால் பீனாச்சி என்னும் சின்ன அளவிலான நாதஸ்வரம் போன்ற கருவி கொண்டு வாசிக்கிறோம், தப்பு எடுத்து முழங்குகிறோம், குளிரில் நடு குடிசையில் பள்ளம் தோண்டி நெருப்பு கங்கு உண்டாக்கி ஒற்றை கோவணம் உடுத்தி படுக்கிறோம், தேன் எடுக்க மலை உச்சிக்கு போகிறோம், பங்கி ஜம்ப் போல தலைகீழாக தொங்கி உயிரை பனயம் வைத்து முகத்தை மூடி, தீப்பந்தம் காட்டி தேன் எடுக்கிறோம், எடுத்த தேனை இரண்டு சொட்டு மலை மாதாவுக்கு தரையில் தெளிக்கிறோம், சுரை குடுகையில் அருவி தண்ணீர் எடுக்கும் போது சல சல சப்தத்தை ரசிக்கிறோம், ராகி களி உருண்டையும் தொட்டுக்கொள்ள அவரை போட்டு அவித்து அதன் தலையில் மிளகாய் கிள்ளி போட்டு சாப்பிடுகிறோம், நான்கு மான்கள் கிடைத்தாலும் ஒரு மானை மட்டும் வேட்டைக்காக அடிக்கிறோம், ஊருக்கே பங்கு வைக்கிறோம், மலையில் பறித்த கஞ்சாவை பக்குவம் செய்து பீடி சுற்றி புகைக்கிறோம், சிவோகம் சொல்கிறோம், அந்த சமவெளியில் இருக்கும் காட்டில் ராகி விதைக்கிறோம், கைகொத்தால் கொத்தி களை எடுக்கிறோம், குலதெய்வம் கோவிலுக்கு போகிறோம், படையல் வைக்கிறோம், குறி கேட்கிறோம், கரடி விரட்டுகிறோம், யானை செத்து போனதுக்கு 'சத்திய வாக்கு செத்து போச்சு'ன்னு வருந்துகிறோம், அங்கே நம்மை விட கொஞ்சம் உசந்த ஜாதியான நெஞ்சில் லிங்கம் கட்டிய லிங்காயத்துகள் என்னும் சைவ உணவு உண்ணும் ஆட்களை பழங்கதை பேசி நமக்கு அவங்க பங்காளிகள் என்று பெருமைப்படுகிறோம், குழந்தை பிறப்பதை வாழைப்பழம் தோல் பிதுக்குவது போல சுலபமாக எடுத்துக்கொள்கிறோம், மருத்துவச்சி பிரசவம் பார்க்கும் போது ஆண்களோடு ஆண்களாக வெளியே உட்காந்து 'சிவோகம்' சொல்கிறோம், யாராவது செத்தால் அழுகிறோம், ஒரு வருஷம் பின்னர் குலதெய்வம் கோவிலில் படையல் போட்டு புதைத்த எலும்பு எடுத்து வேறு குழியில் போட்டு சாம்பிரானி போட்டு பூசாரியிடம் குறி கேட்கிறோம், செத்தாலும் பீனாச்சியுடன் தப்பு வாசிப்பு, பிறந்தாலும் பீனாச்சி, தப்பு வாசிப்பு என சங்கீதம் செய்கிறோம், "பல்லவில ஸ்ருதி கொஞ்சம் பிசகுது, ச்சரணத்தில் வார்த்தைக்கு பதில் காத்து தான் வருது' என்ற விமர்சனங்கள் இல்லாமல் "உணர்வை" வாசிக்கிறோம், மானாட மயிலாட எல்லாம் நிச மான்களும் மயிலும் ஆட, ஆனால் அது போன்ற ஆட்டத்தை இந்த கிராம பெண்கள் கையை நீச்சல் அடிப்பது போல பாவித்தும், புட்டத்தை , மார்பை முன்பின் ஆட்டி நிசமான உணர்வுகளையும் சந்தோசத்தையும் காட்டி ஆடுவதை பார்த்து ரசிக்கிறோம், ஊர் பெண்கள் மழை வேண்டி குலதெய்வம் கோவிலுக்கு போய் ஆடை அவிழ்த்து நடனம் ஆடுவதையும் கூட ஊருக்குள் சிலாகித்து பேசி பேசியே மழையை வரவழைத்து விடுகிறோம், தானியங்கள் சேமிக்க தரையில் குழி தோண்டி பக்குவம் செய்து அதை நகரத்து தானிய களஞ்சியங்களைவிட மேம்பட்டதாக ஆக்கி விடுகிறோம், பக்கத்து பக்கத்து மலைகிராமங்களுக்கோ, மலை கோவில்களுக்கோ போக "கால்களை" மட்டுமே நம்புகிறோம், நடக்கும் போது மூலிகை சுவாசம் அனுபவிக்கிறோம்..... இப்படியாக இப்படியாக நாமே அங்கே ஒரு பாகம் முழுக்க ஒரு மலைவாசியாகிவிட்ட பின்னர் தான் இதை எழுதிய பாலமுருகன் கதைக்குள் வருகின்றார். எனவே நானும் இனிமேல் தான் கதைக்குள் வரப்போகிறேன்.. கதையை இரண்டு பாகம் எழுதிய எழுத்தாளரே முதல் பாகம் முழுக்க நம்மை கதைக்குள் ஐக்கியப்படுத்தும் நிலைப்பாட்டையே கொண்டிருந்த போது நான் என்ன சாதாரன விமர்சகன் தானே... தயை கூர்ந்து தொடர்ந்து படியுங்கள்.

முதலில் நாம் கதைக்களத்தை பார்த்து விட வேண்டும். பின்னர் அதில் வரும் கதாபாத்திரங்கள்.. பின்னர் கதைக்கு உள்ளே போகலாம். கதை என்றால் நீங்கள் மிகப்பெரியதாக நினைத்துக்கொண்டு வந்தால் ஏமாந்து போவீர்கள். இது ஒரு வாழ்வியல் பற்றிய குறிப்புகள். ஆனால் சொல்லியவிதம் உங்களை அதனுள் கட்டிப்போடும் அளவு அமைந்து விட்டது. முதலில் கதையின் களம். இது ஒரு மேற்கு தொடர்சி மலையின் மேலே இருக்கும் ஒரு கிராமம். ஒரு சுமாராக நாற்பது குடும்பங்கள் இருக்கும் அதாவது குடிசை கட்டி வாழும் குடும்பங்கள். மலையின் மீது அமைந்த கொஞ்சம் சமவெளியான இடம் அது. அதன் பக்கத்தில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் "சீர்காடு" என்னும் ராகி விளையும் ஒரு வயல்வெளி. இந்த கிராமத்து மக்கள் "சோளகர்" என்னும் பெயருடைய மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த இடத்தை அவர்கள் "சோளகர் தொட்டி" என அழைக்கின்றனர். அந்த சமவெளிக்கும் சீர்காட்டுக்கும் கொஞ்சம் தொலைவிலேயே அடர் காடு ஆரம்பித்து விடும். வெகு அரிதாக காட்டு யானைகள் தண்ணீர் குடிக்கவோ அல்லது எப்படியோ இந்த இடத்துக்கு வந்து ராகி காட்டை அழிக்கவோ அல்லது இந்த குடிசைகளின் வாசலில் இருக்கும் குதிர்களில் இருக்கும் தானியங்களை சாப்பிடவோ வந்து விடும். அதை வெடி வெடித்தும், தகரங்களை ஒரு விதமான பொறியியல் தன்மையோடு உட்காந்த இடத்தில் இருந்தே ஒலி எழுப்ப செய்து விரட்டவும் தொட்டி மக்கள் இரவு பகல் எந்த நேரமாயினும் ஒற்றுமையாக கூடிவிடுவர். பெண்கள் காட்டுக்குள் விறகு சுள்ளி பொருக்கி வரும் வேலை முதல் மரவல்லிகிழங்கு சேகரிக்கவும் சர்வ சாதாரணமாக சென்று வருவர். ஆண்கள் உணவுக்காக சின்ன சின்ன வேட்டை செய்தல், ராகி , அவரை, மஞ்சள் எல்லாம் பயிரிட்டும் வயிறு வளர்கிறார்கள். எவனோ "நகரத்தான்கள்" அதாவது "கீழ் நாட்டு காரங்க" சந்தன மரம் வெட்டிப்போனாலும் அதிலிருந்து வரும் செதில்களை இழைத்துக்கூட பொட்டு வைத்துக்கொள்ளவோ அல்லது ஒரு குண்டுமணி தங்கம் பூட்டிக்கொள்ளவோ ஆசைப்படாதவர்கள். இவர்களுக்கு நகரத்தில் ராமன் ஆண்டாலும் கவலை இல்லை, ராவணன் ஆண்டாலும் கவலை கிஞ்சித்தும் இல்லை. இவர்கள் நகரத்தார்களை சார்ந்து இருப்பதில்லை.

அந்த காலத்தில் வெள்ளைக்கார துரைகள் வேட்டைக்கு காட்டுக்கு வரும் போது இவர்கள் துணையுடன் தான் காட்டுக்குள் போவார்கள் என்னும் பெருமை இவர்களுக்கு இப்போதும் இருக்கின்றது. பெருநரி என்றால் புலி, சத்தியவாக்கு என்றால் யானை, விதைக்கு ராகி வேண்டும் என ஒரு வீடு ஏறி வந்து கேட்டால் 'நான் உன் வீட்டில் பெண் கேட்டு வந்திருக்கேன்' , சிவபானம் என்றால் கஞ்சா என்பன போன்ற "கோட்"வேர்ட் உபயோகம் செய்கிறார்கள். பெண்கள் குழந்தை பெற்றால் அல்லது வயதுக்கு வந்தால் தீட்டு கழித்து ஐந்து நாட்கள் கழித்து தலைக்கு ஊற்றி குடிசைக்குள் அழைக்கிறார்கள். கழுத்தளவு செய்யப்பட்ட மணிராசன் என்னும் குலதெய்வ கோவில் குடியிருப்புகளுக்கு சற்று தள்ளி காட்டில் இருக்கின்றது. கிராமத்தோடு சென்று வழிபடுகின்றார்கள். இதான் கதைக்களம். ஓரளவு நீங்களும் கதைக்குள் நுழைந்து விட்டீங்கள். இனி கதாபாத்திரங்கள் கூட பழகி விட்டால் போதுமானது.

கதாபாத்திரங்களின் பெயர்கள் நமக்கு பழக்கம் இல்லாத பெயர்கள் தான். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் நாம் நூலாசிரியரை இதில் எதும் சொல்ல இயலாது. வெங்கட்டாமன் என்னும் நாட்டாமை இருந்தாரு, அங்கே சிவலிங்கம் என்னும் பூசாரி இருந்தாருன்னு சொன்னா அந்த கதை அனேகமா மலைகளே இல்லாத தஞ்சை மாவட்ட கதையாகி போகும்:-) அதனால் சிரமம் பார்க்காமல் அந்த பெயர்களை பழகுவோம். முதலில் ஊர் பெரியவர் கொத்தல்லி. கொத்தல்லி என்பது பெயர் இல்லை. அவரது பதவியின் பெயர், அதாவது அந்த கிராமத்து நாட்டாமைன்னு வச்சுப்போம். வச்சுப்போம் இல்லை நாட்டாமை தான். அந்த கொத்தல்லி கிழவன் ஒரு தனிமரம். அவனது மனைவி வேறு ஒரு தொட்டியை சேர்ந்தவள், மிக அழகி. இவரு இங்க வாலிபமா இருந்த போது இவரோட அப்பாரு கொத்தல்லியா இருந்த போது இவர் வேட்டையிலே பெரிய அப்பாடக்கர். அதிலே தான் அந்த அழகி மயங்குச்சு. உடனே இவரு அதை காட்டுக்குள் தள்ளிகிட்டு போய் ஐந்து நாட்கள் குடும்பம் நடத்திடுராரு. பின்ன அந்த தொட்டிக்காரங்க எல்லாம் தேடிகிட்டு வந்து பின்ன பஞ்சாயத்து ஆகி பின்ன அது கண்ணாலத்துல முடிஞ்சது எல்லாம் பழம்கதை. அந்தம்மா வரிசையா பிள்ளை பெத்து போட்டுகிட்டே இருக்கு. இதிலே ஒரு கூத்து என்னான்னா ஒரு தபா காட்டுக்குள்ள வெறகு எடுக்க போகும் போது நிறைமாச கர்பினியா போனது வரும் போது புள்ளய்க்கி பால் குடுத்துகிட்டே வருது. அப்படி ஒரு சுலபம் குழந்தை பெத்துப்பது. ஒரு தடவை பிரசவத்திலே செத்தும் போகுது. அத்தனை ஒரு கஷ்டம் பிரசவம். என்னடா இவன் பிரசவம் சுலபம்னு சொன்ன அடுத்த வரியிலேயே பிரசவம் கஷ்டம்னு சொல்ரானேன்னு பார்க்கும் உங்களுக்கு நான் சொல்வது இதான். அவர்களுக்கு சுலபமும் சிரமமும் எல்லாம் ஒன்னு போலத்தான். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்து பெரிய ஆளாகி வேட்டையில் செத்து போவதும், பெண் குழந்தைகள் வேறு தொட்டிக்கு போய்விடுவதும் ... ஆக மொத்தம் கொத்தல்லி இப்போ தனிமரம். ஊர் நாட்டாமை.

அடுத்து .. நாட்டாமைன்னு ஒரு ஊர்ல இருந்தா பூசாரி இருந்தாகனுமே.. அதான் கோள்காரன். கோள்காரன் என்றால் பூசாரி. அவர் கையிலே அவங்க மூதாதையர் வைத்து குறி சொன்ன கோள் இருக்கும் மணிராசன் என்னும் குலதெய்வ கோவில் பூசையின் போது. இவர்கள் பீனாச்சி, தப்பு சத்தத்தின் உச்சத்தில் குறி சொல்வார்கள். இறந்து போனவர்களின் ஆவி இவங்க ரூபத்திலே வந்து அந்தந்த குடும்பத்து ஆட்களுக்கு குறி சொல்வது நடக்கும் ஊர் திருவிழாவிலே. இந்த கதையின் கோள்காரன் பெயர் சென்நெஞ்சா, சென்நெஞ்சாவுக்கு இரண்டு பையன், முதல் பையன் பெயர் சிக்குமாதா அவன் மனைவி பெயர் கெம்பம்மா, அவர்களுக்கு ஒரு பையன் தம்மையா. இந்த சிக்குமாதாவும் அவன் மனைவி கெம்பம்ம்மாவும் தங்கள் மகனுடன் தனிக்குடிசை.. தனிக்குடித்தனம். அடுத்த கோல்காரனாகும் தகுதியும் உரிமையும் சிக்குமாதாவுக்கு உரியது.

கோள்காரன் சென்நெஞ்சாவுக்கு இன்னும் ஒரு மகன். அவன் பெயர் கரியன். அதாவது சிக்குமாதாவுக்கு தம்பி. ரொம்ப சின்னவன், இன்னும் சொல்லப்போனால் சிக்குமாதாவின் மனைவி கெம்பம்மாவை விட ஒன்பது வயது சிறியவன். அவன் தன் தந்தையுடன் ஒரு குடிசையில் இருக்கிறான். இது தான் கோள்காரன் குடும்பம்.

அடுத்து பேதன் குடும்பம். பேதன் அந்த சீர்காடு என்று முன்னமே சொன்னோமே அந்த சீர்காட்டுக்கு சொந்தக்காரன். வேட்டையை விட விவசாயத்தில் நாட்டம் கொண்டவன். அவனது அந்த சீர்காட்டுக்கு பக்கத்திலேயே கோள்காரன் சென்நேஞ்சாவுக்கு கொஞ்சமாக சீர்காடு இருக்கின்றது. இந்த பேதனுன் மனைவி பெயர் ஜோகம்மாள். இரண்டு மகன்கள். பெயர் சிவண்ணா, அடுத்தவன் பெயர் ஜடையன், இதில் சிவண்ணாவுக்கு கல்யாணமாகி ஒரு ரேசன் என்ற பையன், சிவண்ணாவின் மனைவி பெயர் சின்னத்தாயி. இவர்கள் மூவரும் தனி குடிசை தனிக்குடித்தனம். பேகன், ஜோகம்மாள், அவர்களின் சின்ன மகன் ஜடையன், மகள் ரதி ஆகியோர் தனி குடிசை. இது ஒரு குடும்பம்.

அடுத்து மணியக்காரன் மாதப்பன். இவன் கீழ்நாட்டை சேர்ந்தவன். இவன் "நகரத்தான்". கிட்டத்தட்ட வில்லன் என வைத்து கொள்வோம். மேலே காட்டில் இருக்கும் நிலம் எல்லாம் பட்டா போட வேண்டும் என்றால் அல்லது வனத்துறை அதிகாரிகள் காட்டுக்கு போக வர தவிர போலீஸ் பழக்கம் எல்லாம் இவனுக்கு உண்டு. அவனுக்கு ஒரு அல்லக்கை. பெயர் துரையன். இந்த துரையன் "மனைவியை" மணியக்காரனுக்கு பட்டா எழுதி கொடுத்துவிட்டு தனக்கு சாதகமாக எல்லா இரண்டாம் நம்பர் வேலையும் செய்து பணம் சம்பாதித்து வருபவன்.இந்த துரையனுக்கு மேல்காட்டில் இருக்கும் இந்த சோளகர் தொட்டியின் சீர்காட்டின் மீது ஒரு கண். இவனும் நகரத்தான் தான்.

பக்கத்தில் பாலப்படுகை என்னும் தொட்டி சில மைல்கள் அப்பால் இருக்கின்றது.அங்கே புட்டன் என்பவன் இங்கே இருக்கும் பேதனின் மகன் சிவண்ணாவுக்கு நண்பன் தவிர இந்த சோளகர் தொட்டியில் இருக்கும் ஒரு பெண்ணை தான் அவன் திருமணம் செய்து இருக்கிறான். அதனால் அடிக்கடி வந்து போவான் இந்த சோளகர் தொட்டிக்கு.

இதிலே பேதன் - ஜோகம்மாள் தம்பதியினரின் கடைக்குட்டி மகள் ரதி ஒரு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கிறாள் மலை கிராமத்தில். அங்கே அவளுக்கு மல்லிகா என்னும் பெண் நண்பி. அந்த மல்லிகா ஒரு லிங்காயத்து பெண். அதாவ்து சைவம் சாப்பிடும் ஆனால் இவர்கள் தெய்வங்களில் ஒன்றான மாதேஸ்வரன் சாமியை கும்பிடும் ஆட்கள். அவர்கள் கொஞ்சம் உயர்ந்த சாதி என்றாலும் இவர்களை போல வயல்வேலை, காட்டு வேலை செய்பவர்கள் தான்.

இவர்கள் தான் கதாபாத்திரங்கள். மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தாலே எளிதில் புரிந்து கொள்ளலாம். இவர்கள் வாழ்க்கை நான் மேலே சொன்னது போல எல்லாம் சுகமாகவும் அமைதியாகவும் போய் கொண்டு இருக்கும் போது தன் கதை தொடங்குகின்றது.

இப்படியாக இவர்கள் வாழ்ந்து வரும் போது ஒரு நாள் கோள்காரன் சென்நெஞ்சாவின் மூத்த மகன் சிக்குமாதா காட்டில் வேட்டைக்கு போகும் போது எதிர்பாராத விதமாக ஒரு கரடியால் தாக்கப்பட இருக்கும் போது அதை தடுக்க வேண்டி அதை கொல்ல நேரிட அந்த கரடியை தூக்கி வந்து தொட்டியில் கூறு போட்டு எப்போதும் போல தொட்டி வழக்கப்படி தொட்டியின் முதல் பங்கை தொட்டியின் மூத்த விதவைக்கும், பின்னர் கொத்தல்லிக்கும் என எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்து விட்டு சமைத்து உண்ண அடுத்த இரண்டு நாட்களில் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் போய் அவர்கள் வந்து கோள்காரன் சென்நெஞ்சா மற்றும் சிக்குமாதாவை கீழ்நாட்டில் கொண்டு போய் நிர்வாணமாக லாக்கப் கொடுமை செய்ய பதறிப்போன தொட்டியினர் அவரகளுக்கு தெரிந்த பெரிய மனிதனான மணியக்காரன் மாதப்பாவை சந்தித்து முறையிட அவன் தன் அல்லக்கை துரையனை போலீசிடம் அனுப்பி பேச வைக்க அங்கே துரையன் போலீசார் ஆயிரம் ரூபாய் பணம் கேட்பதாக சொல்ல மொத்த தொட்டியும் அதிர்கின்றது. அவர்கள் அத்தனை பணத்தை பார்தவர்கள் இல்லை. உடனே துரையன் தானே அந்த பணத்தை தருகிறேன், பின்னர் ராகி விளைச்சலில் இருந்து தர வேண்டும் என சொல்லி மீட்டு வந்து பின்னர் தொட்டியினர் குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியாமல் போக துரையன் மணியக்காரன் உதவியுடன் அந்த சீர்காட்டில் இருக்கும் கோள்காரன் சென்நெஞ்சாவின் நிலத்தை கையகப்படுத்த சிக்குமாதா தன்னால் தான் இப்படி ஆகிப்போனதே என பித்து பிடித்தது போல ஆகி பின்னர் துரையனுடன் சேர்ந்து இரண்டாம் நம்பர் தொழிலில் இறங்கிவிடுகிறான். பின்னர் மீதி இருக்கும் பேதனின் நிலம் அதாவது சிவண்ணா, அவன் தம்பி ஜடையன் ஆகியோருக்கும் சொந்தமான நிலத்தையும் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு துரையன் அபகரித்து அந்த மேல்காட்டு சீர்காட்டில் கான்கிரீட் வீடு, மின்சார போர்செட், மின் வேலி என போட்டு அங்கே காட்டையே அதன் பாரம்பரிய குணத்தில் இருந்து மாற்றி வருகிறான். இடையிடையே சந்தன மர துண்டுகளும் கடத்துகிறான். அவனது பிடியில் இருந்த சிக்குமாதாவும் ஒரு வேட்டையின் போது மரித்து போக சிக்குமாதாவின் மனைவி கெம்பம்மா தன் மகனுடன் தனிமரம் ஆகின்றாள்.

ஆக அமைதியாக போய் கொண்டிருந்த தொட்டியினர் வாழ்க்கை சீர்காடு இல்லாமல் சாப்பிட எதும் இல்லாமல் மரவல்லி கிழங்குகள் சாப்பிடும் அளவுக்கு ஆகி தடம் புரண்டு போக ஆரம்பித்து விடுகின்றது. கோள்காரனின் மூத்த மகன் சிக்குமாதா மறைவுக்கு பின்னர் கெம்பம்மா அவளை விட ஒன்பது வயது குறைந்த தன் கொழுந்தனை கல்யாணம் செய்து கொள்கின்றாள்.

அதன் பின்னர் பேதனின் மகன் சிவண்னாவுக்கு வனத்துறையால் "தீ கங்காணி" வேலை கிடைக்கிறது. பின்னர் அவன் தனக்கு காட்டை கண்காணிக்கும் வேலை கிடைத்த பெருமையில் பக்கத்து பக்கத்து தொட்டிகள் இருக்கும் இடத்துக்கு எல்லாம் சர்வ சாதாரணமாக "அரசாங்க ஆள்" என்னும் பெருமையுடன் போய் வர அது போலவே தன் நண்பனும் சோளகர் தொட்டியில் பெண் எடுத்தவனுமாகிய புட்டன் இருக்கும் பாலப்படுகைக்கும் போய் வருகிறான். புட்டன் குடிசைக்கு நான்கு குடிசை தள்ளி தன் தாய் வழி உறவு பெண் மாதி இருப்பதை பார்க்கிறான். மாதிக்கு வயதுக்கு வரும் நிலையில் ஒரு பெண். அவள் கணவன் சதா நேரமும் கஞ்சா புகைத்து விட்டு அங்கிருக்கும் மரத்தடியில் கிடக்கும் ஆசாமி. இப்படி இருக்கையில் மாதிக்கும் சிவண்ணாவுக்கும் காதல் ஆக, பின்னர் மாதி தன் கணவனை அங்கிருக்கும் தொட்டியில் விவாகரத்து செய்துவிட்டு தன் மகளுடன் சிவண்ணா கைய பிடித்து கொண்டு சோளகர் தொட்டிக்கு வந்து விடுகின்றாள்.

இது அறிந்து சிவண்ணாவின் மனைவி சின்னத்தாயி தன் மகன் ரேசணை அழைத்து கொண்டு தன் தாய் வீடு இருக்கும் அவளது வேறு தொட்டிக்கு போய்விட, இங்கு மாதியுடன் மற்றும் மாதிக்கு அவள் முதல் கணவனுக்கும் பிறந்த பெண் குழந்தையுடன் சிவண்ணா வாழ்க்கை நடத்துகிறான். அதன் பின்னர் கூட அவன் தாய் ஜோகம்மாள் அவனையும் அவன் புது மனைவி மாதியையும் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்க மணிராசன் கோவில் நிகழ்வில் கூட தன் மகனை கூப்பிடாமல் ஜோகம்மாள் போக பின்னர் எப்படியோ குடும்பம் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதற்கிடையில் மாதியின் பெண்ணும் வயதுக்கு வந்து விடுகிறாள். இவளுக்கு முதலில் கல்யாணம் செய்து வைத்து வடுவதா அல்லது கணவனின் தங்கை ரதிக்கு கல்யாணம் செய்து வைப்பதா என்னும் குழப்பம் குடும்பத்தில் நிகழும் போதே ரதி துரையனின் சீர்காட்டுக்கு டிராக்டர் ஓட்ட வரும் ஒருவனுடன் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவன் ஒரு நகரத்தான். மலைவாழ் ஆள் இல்லை. இதனிடையில் மாதி தன் அண்ணன் ஒருவன் இருக்கும் தொட்டிக்கு சென்று அவன் பையனுக்கு தன் பெண்ணை பேசி முடிக்கிறாள்.

அப்போது ஒரு நாள் தீக்கங்காணியாக இருக்கும் சிவண்னா உதவியுடன் காட்டுக்குள் போகும் வனத்துறையினர் சிலர் தூரத்தில் சந்தன மரம் வெட்டுவதை பார்த்து அது வீரப்பன் ஆட்கள் என உறுதி செய்கின்றனர். பின்னர் சிவண்ணாவின் தற்காலிக தீக்கங்காணி வேலையும் போய்விடுகின்றது. கிட்ட தட்ட சோளகர் தொட்டி ஆட்கள் காட்டில் வெளி ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை ஒரு வித பயத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதனிடையே சிவண்ணாவின் நண்பன் பாலப்படுகை தொட்டியின் புட்டன் கையில் காசு அதிகம் புழங்குவதை சிவண்ணா கண்டிக்க அவனும் தான் சந்தன மரம் வெட்டுவதில்லை எனவும் வெட்டிப்போட்ட மரத்தினை பத்து மைல் தூரம் தூக்கி சுமந்து போய் கொடுப்பதாகவும் அதில் பணம் வருவ்தாகவும் இனி திருந்தி விடுவதாகவும் தெரிவித்து செல்கிறான்.

அப்போது அந்த காலகட்டத்தில் வீரப்பன் வேட்டை என்னும் பெயரில் கர்நாடகா மற்றும் தமிழக போலீசார் அதிக அளவில் ஈடு பட்டுக்கொண்டு இருக்க, ஒஸியூரப்பா என்னும் கர்நாகட போலீஸ் இண்ஸ்பெக்டர் இந்த சோளகர் தொட்டி அருகில் ஒரு கேம்ப் அமைத்து கொண்டு சோளகர்களை காட்டுக்குள் போக தடை விதிக்கிறான். சோளகர் ஆண்களி அனைவரையும் இரவினில் தன் முகாமை சுற்றி சுற்றி வந்து தங்கள் கைத்தடியால் தரையில் தட்டி கொண்டே வர வேண்டும் என உத்தரவிட கோள்காரன் சென்நேஞ்சாவுக்கு பின்னர் கோள்காரனாகிய கரியன் முதல் நாள் அப்படி சுற்றி வந்து பின்னர் அடுத்த நாள் உடல் நிலை சரியில்லாமல் போகவே ஒஸியூரப்பாவால் இழுத்து வரப்பட்டு வயிற்றில் உதைபட்டு மரண படுக்கையில் விழுகிறான். அவனுக்கு அவன் அண்ணனுக்கும் தன் மணைவி கெம்பம்மாவுக்கும் பிறந்த மகன் தம்மையா மூலிகை தேடி அலைந்து சிகிச்சை செய்து வருகிறான்.

அதன் பின்னர் தமிழக் போலீசாரின் கொடுமை தொடங்குகின்றது. அங்கே பன்னாரி அம்மன் கோவில் அருகே இருக்கும் ஒர்க் ஷாப் என்னும் சித்ரவதை கூடத்துக்கு சோளகர் தொட்டி ஆண்கள் அனைவரும் அழைக்கப்பட்டு அரிசி சோறும் ஆட்டுக்கறி விருந்தும் கொடுக்கப்பட அங்கே சித்ரவதை கூடத்தில் விசாரணையில் புட்டன் இருப்பதை சிவண்ணா பார்க்கிறான். ஆனால் புட்டன் இவனை தெரியாது என சொல்லிவிட ஆனால் சிவண்ணா மனம் நொந்து போகிறான். பின்னர் புட்டன் போலீசாரால் கொல்லப்படுகிறான். பின்னர் சிவண்ணா கைது செய்யப்படுகிறான், அது போல கரியனின் மகன் தம்மையா என்னும் சிறுவனும் மூலிகை பறிக்க போன போது கைது செய்யப்பட்டு சித்ரவைதை செய்யப்பட ஒரே தொட்டியை சேர்ந்த இருவரும் ஒரு நாள் தப்பிக்க வாகாக இருந்த நேரத்தில் தப்பி காட்டுக்கு ஓடிவிட அவர்கள் கண்டிப்பாக வீரப்பன் ஆட்கள் தான் என போலீஸ் நினைத்து சோளகர் தொட்டிக்கு போய் சிவண்ணா மனைவி மாதியையும் அவள் மகள் (அவள் பெயர் சித்தி) சித்தியையும் பிடிக்க போகின்றது. ஆனால் காட்டுக்குள் ஓடிய சிவண்ணாவும், தம்மையாவும் எதிர்பாராத விதமாக வீரப்பன் ஆட்களையும் வீரப்பனையும் சந்திக்க நேரிட வேறு வழி இல்லாமல் அவர்கள் வீரப்பன் கூட இணைந்து விடுகின்றனர்.

இதனிடையே சிவண்ணாவின் தங்கை ரதி ஒரு உண்டு உறைவிட பள்ளியில் படித்த போது லிங்காயத்து ஜாதி (சில மைல்களுக்கு அப்பால் இருக்கும் மலைகிராமத்து மக்கள்) மல்லிகா என்னும் பெண் நண்பி என மேலே சொல்லியிருந்தோமே அந்த மல்லிகா வுக்கும் அதே ஜாதியை சேர்ந்த மாதேஸ்வரன் கோவில் பூசை செய்யும் ஒரு பையனுக்கும் திருமணம் முடிந்து நல்ல படியாக வாழ்க்கை ஆரம்பிக்க இருக்கும் நேரம். அந்த லிங்காயத்துகாரன் முன்னர் ஒரு கல்குவாரியில் வேலை செய்தவர் என்பதால் வீரப்பன் கும்பலுக்கு வெடிமருந்து சப்ளை செய்திருப்பாரோ என எண்ணி அந்த லிங்காயத்து காரரை தேடி போலீஸ் போன போது அவர் அங்கே இல்லாமையால் புதுமணம் முடித்த அவரது மகளையும் மருமகனையும் போலீஸ் பிடித்து வேனில் கொண்டு போகின்றது. போகும் வழியில் ஒரு காட்டில் வைத்து அவள் போலீசாரால் கற்பழிக்கப்படும் அவலமும் அதை தொடர்ந்து அந்த புது மாப்பிள்ளை போலீஸ் வேனுக்குள் இருக்கும் போதே ஒதுக்க நினைக்கும் கொடுமையும் நடக்கிறது. அந்த மல்லிகாவை சித்ரவதை முகாமில் கொண்டு அடைத்த இடத்தில் சில ஆண்களும் நிர்வாணமாக ஆனால் நிறைமாத கர்ப்பினியாக ஒரு பெண்ணும் இருக்கின்றனர். நமக்கு ரத்தம் உறையும் பகுதிகள் அவைகள். அந்த பெண்ணுக்கு இரவில் பிரசவ வேதனை. இந்த மல்லிகாவே உதிரும் உதிரம் துடைப்பது முதல் நஞ்சுக்கொடி அறுப்பது வரை செய்ய , இதல்லாம் கொடுமை இல்லை, இத்தனைக்கும் அந்த பெண்ணுக்கு தூமை துடைக்க கூட துணி கொடுக்காத போலீசார், ஒரு புது மனைவி பிரசவம் பார்ப்பது, கூட இருப்பது சில வேற்று ஆண்கள். அவர்களும் சித்ரவதைக்கு வந்தவர்கள் என்பதால் முகம் திருப்பி கண்ணியமாக நடந்து கொள்கின்றனர். அடுத்த நாள் காலையே அந்த பிரசவித்த பெண்ணின் கணவன் கொல்லப்படுகிறான். இதை அவளிடம் தெரிவிக்கின்றனர் போலீசார். நம்புங்கள் மக்களே நான் தமிழீழ கதை சொல்லவில்லை. இந்தியாவின் வேறு மாநில கொடுமை கதை சொல்லவில்லை. தமிழக கதை தான். ஆனால் இது கதை அல்ல நிஜம்:-(

இதிலிருந்து தான் போலீஸ் சித்ரவதைகள் தொடர்கின்றன இக்கதையில். அங்கே சோளகர் தொட்டிக்கு சிவண்ணாவை தேடிப்போன போலீஸ் அங்கே மாதியையும் அவள் மகள் சித்தியையும் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து இதே ஒர்க் ஷாப்ல்லில் அடைத்து வைக்க வரும் வழியிலேயே மகள் சித்தியை வன்புணர ஆரம்பிக்க மாதி "என்னை எது வேண்டுமானாலும் செய்து கொண்டு என் மகளை விட்டுடுங்க" என கெஞ்சிய பாவத்துக்காக மாதியையும் வன்புணர பின்னர் தாயின் முன்னிலையில் மகளும், மகளின் முன்னிலையில் தாயும் அந்த சித்ரவதை கூடத்தில் பல போலீசாரால் புணரப்பட இத்தனைக்கும் தொட்டிகளை சேர்ந்த ஆண்கள் முன்னிலையில் தான் இத்தனை கொடுமைகளும் நடக்க... மாதவிடாய் ஆன பெண்கள் சுத்தம் செய்து கொள்ள துணிகள் கூட கொடுக்காமல், ஒரு கட்டத்தில் ஆண்கள் பெண்கள் எல்லோரும் மார்பு காம்புகள், பெண்குறிகள் என எல்லா இடத்திலும் கிளிப் மாட்டப்பட்டு மின்சாரம் பாய்ச்சப்பட்டு, ஆண்கள் தலைகீழாக தொங்க விடப்பட்டு.... என்னால் இதற்கு மேல் விவரிக்க இயலவில்லை நண்பர்களே! எப்படிப்பட்ட அழகிய மலை கிராமம் அது. பெண்களுக்கு அங்கே எத்தனை மரியாதை கொடுத்தார்கள் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்! அங்கே வேட்டையாடப்படும் உணவுகள் முதல் பங்கு விதவைகளுக்கு, ஒரு பெண்ணை திருமணம் முடிக்க ஆண்கள் வரதட்சினை கொடுத்து பெண் எடுக்க வேண்டும். என்ன அதிகபட்சமாக அரைப்படி ராகியும் பன்னிரண்டு ரூபாய் பணம் தான் என்றாலும் ஆண்கள் தான் வரதட்சினை கொடுக்க வேண்டும், அது போல பெண்ணுக்கு பிடிக்கவில்லை எனில் அவளுக்கு கொத்தல்லி முன்னிலையில் விவாகரத்து மிக சுலபம். அதே போல மறுமணம் மிகவும் எளிது. இப்படி இருந்தவர்கள். நகர நாகரீக மனிதர்கள் போல பெண் கொடுமை இல்லை. இவர்களுக்கா நாகரீகம் தெரியாது? இவர்கள் நாகரீகத்தின் பரிணாமம் என சொல்லப்படும் எதையும் பயன் படுத்துவது இல்லை, அதிக பட்சமாக துப்பாக்கி வெடி கந்தகம் மற்றும் யானை விரட்ட வெடிகள்... இவர்கள் அதிக பட்சமாக பயன் படுத்தும் நாகரீக பொருட்கள் மற்றும் இரசாயண பொருட்கள் இத்தனையே, ஒரு பீடி பற்ற வைக்க வேண்டும் என்றால் கூட ஞெழிக்கற்கள் போட்டு கடைந்து நெருப்பு வரும் போது பஞ்சுகள் காட்டி நெருப்பு எடுத்து தீக்கங்குகள் எடுக்கும் மக்கள். ஆனால் பெண்களை கொடுமை செய்யும் நாகரீக வித்தை எதும் தெரியாத உத்தமர்களுக்கு இங்கே மின்சார அதிர்வு கொடுக்கும் உச்சபட்ச கொடுமையை எங்கே சொல்லி அழ? இன்னும் ஒரு கொடுமை பேன் கொடுமை. புணர்வது பத்து நிமிட தண்டனை, மின்சாரம் பத்து நிமிட தண்டனை. ஆனால் பல நாட்களாக குளிக்காமல் தலைக்கு எண்ணை எதும் இல்லாமல் பேன் வழியும் பெண்கள் அங்கிருக்கும் போலீசாரிடம் "என்னை வேண்டுமானால் புணர்ந்து கொள். ஒரு ஐந்து நிமிடம் பேன் சீப்பு கொடு" என கேட்கும் கொடுமை. வழித்து எடுத்த சீப்பினில் வரும் பேன்களை விரல் நகத்தால் குத்தாமல் கல் கொண்டு நசுக்கும் அளவுக்கு பேன்கள். இது போல பல மகா கொடுமைகள்!

இத்தனை சித்ரவதைகளுக்கு மத்தியில் அந்த விசாரணை கைதிகளுக்கு தீபாவளி பொங்கல் போல புது சட்டை அளவு எடுக்க ஒரு டைலர் வருகின்றார். அவர் வரும் போதெல்லாம் ஆண்கள் வெளிறிப்போகின்றனர். ஏன்? அந்த டைலர் எடுக்கும் அளவுகள் அந்த ஆட்களுக்கன "வீரப்பன் கும்பல் சீருடை"க்கான அளவு. அளவு எடுத்து தைத்த ஆட்கள் அடுத்த நாள் "வீரப்பன் ஆட்கள் காட்டில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர்" என அடுத்த நாள் பேப்பரில் வரும்! இதற்கு மேல் என்ன விவரிக்க முடியும் சொல்லுங்கள்?

இப்படியாக மாதியும் அவள் பெண்ணும் பலமுறை புணரப்பட்ட பின்னர் ஒரு கட்டத்தில் சாகும் நிலையில் மாதியின் வீட்டில் கொண்டு வந்து விடப்படுகின்றனர். மாதியின் அண்ணன் மகன் பரவாயில்லை என சித்தி என்னும் மாதியின் பெண்ணை கட்டிக்கொள்கிறான். மாதி தன் மாமியார் ஜோகம்மாள் இருக்கும் சோளகர் தொட்டிக்கு வருகின்றாள். இருக்கும் நிலத்தில் பயிர்செய்கின்றாள். சிவண்ணா நீதிமன்றத்தில் சரண் அடைகின்றான். என்பது போல கொஞ்சம் வெளிச்சம் காட்டி கதை முடிகின்றது.

ஆனால் வீரப்பன் பிடிபட்டானா? அவனால் பாதிக்கப்பட்ட இந்த மலைகிராம மக்கள் வாழ்வு என்ன ஆனது? எதாவது நிவாரணம் கிடைத்ததா? சதாசிவம் கமிஷன் என்ன ஆனது? செயல்பாட்டுக்கு வந்ததா? இன்னும் எத்தனை மலைகிராம மக்கள் கர்நாடக சிறையில் மற்றும் தமிழக சிறையில் இருக்கின்றனர்? எதுவும் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அந்த மலைவாழ் மக்களால் வனவிலங்குகளுக்கோ அங்கிருக்கும் மரங்களுக்கோ எப்போதும் தீங்கு வராது. ஏனனில் அவர்கள் காட்டை காடாக பார்ப்பதில்லை. கடவுளாக பார்க்கும் மனிதர்கள். ஒரு புலி மானை வேட்டை ஆடினால் புலியை பிடித்து சிறையில் போடுவது எப்படி அபத்தமோ அதே போலத்தான் மலைவாழ் மக்களும் . அவர்கள் பொழுது போக்குக்காக வேட்டை ஆடுவதில்லை. தங்கள் உணவுக்காக, அதுவும் தேவைக்கு அதிகமாக எப்போதும் சேமித்தும் வைப்பதும் இல்லை. இவர்கள் வனதேவதையின் மைந்தர்கள். அவர்களை விட்டுவிடுங்கள் அரசாங்கமே! உங்கள் அதிகாரிகளை விட அவர்கள் ஆபத்தானவர்கள் இல்லை. இப்புத்தகத்தை பரவலாக்குங்கள் நண்பர்களே! நூற்றுக்கணக்கான போலீசார் வீட்டு மனை பரிசாக பெற்றார்களே, அவர்களிடம் இப்புத்தகத்தை பரிசாக கொடுத்து படிக்க சொல்லுங்கள். அதில் யாராவாது ஒரு போலீஸ் மனம் திருந்தி அந்த வீட்டு மனையை விற்று அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுத்தால் அது காட்டை காப்பதற்கு சமானம். இந்த விமர்சனத்தின் முதல் பாராவை படியுங்கள். அந்த கிழவன் அழுக்கா? இந்த கொடுமை எல்லாம் நம் நாட்டில் நடக்க விட்ட நாம் எல்லாம் அழுக்கா? என்னும் கேள்வியோடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்:-(

நூலின் பெயர் : சோளகர் தொட்டி

நூலாசிரியர் : ச. பாலமுருகன் (இவர் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். மனித உரிமைச் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். வழக்கறிஞரான இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பழங்குடி இன மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாட்டு இயக்கத்தில் இருப்பவர்)

வெளியீடு : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. பின்: 642 002
தொலைபேசி: 04259 - 226012, செல்: 9865005084
மின்னஞ்சல் : ethirveliyedu@gmail.com , www.ethirveliyedu.com

நன்றி! வணக்கம்!




குறிப்பு: நண்பர் செ.சரவணகுமார் அவர்கள் எழுதிய விமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும். நான் புத்தகம் படித்து முடித்த பின்னர் இந்த நூலை சிலாகித்து நண்பர் மணிஜி அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்த போது சரவணக்குமார் எழுதிய விமர்சனம் பற்றி கூறினார். பின்னர் அதையும் படித்தேன். நல்ல விமர்சனம் அது!புகைப்படம் அந்த விமர்சனத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நன்றி சரவணகுமார்!