பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 7, 2012

அய்யா ஒரு பீஃப் பிரியாணி ப்ளீஸ்....

"அய்யா ஒரு முரசொலி கொடுங்க" என ஆரம்பித்தது என் இன்றைய பொழுது!
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் வரை வாக்கிங் போய் திரும்பி
வந்தால் அந்த கடை திறந்து இருக்கும். ஒரு கிழவன் , கிழவி... கடையின் மீது
"எம் ஜி ஆர் அவர்கள் கொடுத்த நன்கொடை இந்த கடை" என போட்டிருக்கும்.
முரசொலியை வாங்கி முதுகில் பனியனுக்குள் வைத்து கொண்டேன். (கிட்ட தட்ட
எங்க ஊர்ல அரிவாள் ஸ்டாண்ட் போல)

என்னவோ நியாபகம் வர "அய்யா ஒரு 'அவள் விகடன்' கொடுங்க என கேட்க அதே
நேரத்தில் ஒருவர் அதே போல கேட்க ... கடைக்கார அய்யா குழம்பி விட்டார்.
"இங்க ஒரு அவள் விகடன் ஒன்னு தான் சார் இருக்கு" என சொல்ல நான் "அவர்
கிட்டயே கொடுங்க" என விலகினேன்.

"மருந்தீஸ்வரர் கோவில் கிட்டே கூப்பிடு தூரம் சார், அருமையான பிளாட்
சார்.. பக்கத்தில் டி பி ஆஸ்பத்திரி இருக்கு சார் ( அட பாவமே என்னய
பார்த்து ஏண்டா இது போல சொல்ற) வெயில்னா அங்க இருப்பவங்க "இன்னா"ன்னு
கேட்பாங்க சார், சும்மா பதினேழு லட்சம் தான்  சார்) . அந்த மருந்தீஸ்வரரை
பார்த்திடலாம் இன்னிக்கு என நினைத்துக்கொண்டேன்.

எல்லா நியாபகங்களும் வர நடந்தேன். சரி இரண்டு நாளா இருமல் அதிகமா இருக்கே
என கோவில் பக்கம் போக நினைத்த போது அந்த "அவள் விகடன்" தோளை தொட்டார்.

"சார் ரொம்ப தேங்ஸ். என் ஆத்துக்காரி அவள் விகடன் இல்லைன்னா செத்துடுவா.
காப்பாத்திட்டிங்க"

"எங்க சார், கோவிலுக்கா? நானும் அங்க தான் இருங்க செருப்பு போட்டுட்டு வர்ரேன்"

"சார் இதான் வன்னி மரம். என் பொண்ணுக்கு கடி ஜோக் போட்டி வச்சா சங்கரா
ஸ்கூல்ல . அவ தான் பஷ்ட். என்னா கடின்னா "ராமதாஸ்க்கு பிடிச்ச மரம் எது?
ஹி ஹி ஹி அதான் வன்னி மரம்"ன்னு சொன்னேன். அவ தான் சார் பஷ்ட் வந்தா கடி
ஜோக்ல. அப்படின்னா இந்த கோவில் என்ன ஒரு கிரியேட்டிவிட்டி கொடுக்கும்
கோவில்னு பார்த்துகுங்க"

"சார் , இங்க கோவில்ல ரொம்ப அநியாயம் சார். தக்கினூண்டு புளியோதரை 5
ரூவா. கொஞ்சம் வெயிட் பண்ணினா அவாளே கோவில்ல கொடுப்பா. ரொம்ப பிராமாதமா
இருக்கும்"

"சார், முதல்ல கணபதி கிட்டே வேண்டிகுங்க. இந்த கணபதி கடன் தீர்க்கும்
கணபதி. நான் பிளாட் வாங்கின போது லோன் கிடைக்கனும்னு இந்த கணபதிட்ட
வேண்டிகிட்டே இருந்தப்ப எல் ஐ சில இருந்து போன். லோன் சாங்கஷன்"

"சார் இந்த திரிபுரசுந்தரி இருக்காளே, பவர் புல்... இவ கிட்ட
வேண்டிகிட்டா நடக்காததும் நடக்கும்" அப்போது ஒரு மாற்று திறனாளி தவழ்ந்து
வந்து வேண்டிகிட்டாரு. அவருக்கு வழி விட்டோம்.

பின்ன மருந்தீஸ்வரர் சன்னதிக்கு வந்த போது அவர் 'சார் இவர் சுயம்பு. இவர்
கிட்டே வேண்டிகிட்டவன் எவனும் கெட்டு போனதா சரித்திரம் இல்லை.." என
சொல்லி கிட்டே அய்யருக்கு ஒரு இருபது ரூபாய் போட்டார். அவரும் இவருக்கு
சின்ன பூ மாலை போட்டு பதில் மரியாதை செய்தார். என் கிட்டே சில்லரை இல்லை
இரு 100 ரூபாய் நோட்டும் இரண்டு ரூபாய் காசும், ஒரு ரூபாய் காசும்
இருந்துச்சு. அனேகமாக செருப்பு கடைக்கு சில்லரை காசு தேவைப்படும். பாவம்
அவங்க கிட்டே 100 ரூபாய் நோட்டுக்கு மீதி இருக்காது என நினைத்தேன்.
ஆனாலும் சில்லரை காசு எடுத்து போடும் போது அவர் தடுத்தார். "சார் மானம்
போகுது. நோட்டா இருந்தா  தட்சனை கொடுக்கலாம். சில்லரை எல்லாம் தப்பு
சார். அவர் என்னமா மந்தரம் சொல்றார். அவருக்கு தட்சனை கொடுக்காட்டி கூட
பரவாயில்லை. ஆனா அவமானப்படுத்தக்கூடாது சார்.இவருக்கு கொடுத்தா டைரக்டா
ஈஸ்வரனுக்கு கொடுத்தது போல. ஈஸ்வரனுக்கு கொடுத்தா அவர் மக்களுக்கு
திருப்பி கொடுப்பார்" என்றார். எனக்கு மனதில் வேற கணக்கு ஓடியது. அவர்
சொல்வது சரிதான். இருக்கும் 100 ரூபாயை டாஸ்மாக் என்னும் குருக்கள்
கிட்டே கொடுத்தா அது அரசாங்கம் என்னும் ஈஸ்வரன் கிட்டே போகும். அதை வச்சு
அரசாங்கம் மக்களுக்கு நன்மை செய்யும். அடடே... ஆரம்ப காலம் முதலே
இருக்கும் கணக்கு தானா இது நினைத்து டாஸ்மாக் குருக்கள் கிட்டே சாயரட்சை
பூசைல கொடுக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.

பின்னர் அப்படியே வெளியே வரும் போது பசு மாட்டு தொழுவம் இருந்தது. இவர்
போய் கும்பிட்டார். கும்பிட்டார். கும்பிட்டு கிட்டே இருந்தார். ஓடி
என்னிடம் வந்து "சார் பசுவுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தா நாம இது வரை
செஞ்ச பாவம் எல்லாம் போய்டும் சார். கொஞ்சம் இருங்க, நான் போய்  வெளியே
புல் விற்கும், வாங்கிட்டு வர்ரேன், உங்களுக்காகவும் ஒரு கட்டு வாங்கி
வர்றேன். காசெல்லாம் கொடுக்க வேண்டாம்" என சொன்ன போது நான் "இல்லீங்க..
எனக்கு வேண்டாம். நான் இதுவரை பாவம் எதும் செய்யலிங்க" என சொன்ன போது...
"சார் செம காமடியா பேசுறீங்க கொஞ்சம் இருங்க" என சொல்லி விட்டு வெளியே
போய் பின்னர் வந்தார்.

ஜெயிலில் இருந்த பசுக்களுக்கு புல் கொடுத்தார். வெளியே வந்தோம். நான்
போய் செருப்பு கடை காண்டிராக்ட் எடுத்த கடையில் மூச்சு வாங்கி
கொண்டிருந்த ஒரு பெண் கிட்டே மூன்று ரூபாய் கொடுத்தேன். "அண்ணே, ரெண்டு
ரூவா தான் அண்ணே" என சொன்னது. அது கர்பஸ்த்ரீ. "என்னிக்கும்மா டெலிவரி
டேட் சொல்லியிருக்காங்க"ன்னு கேட்டேன். "இன்னும் ரெண்டு நாள்
இருக்குண்ணே" என சொன்னது.

அதற்குள் என் நண்பர் கோபுரத்தின் இரண்டு பக்கமும் ஓடி ஓடி ரன் எடுப்பது
போல தன் செருப்புகளை "கலெக்ட்" செஞ்சுட்டு வந்தார். என்னிடம் சொன்னார் "
சார்... ஊதாரித்தனமா செலவு செஞ்சா எனக்கு பிடிக்காது சார். ஜோடியா போட்டா
தான செருப்பை திருடுவானுங்க. ஜோடிய பிரிச்சு போட்டு ஏமாத்தனும் சார்.
இந்த செருப்பு திருட்டு எப்ப தான் ஒழியுமோ இந்த நாட்டுல அப்ப தான் சார்
நம்ம நாட்டிலே ஒரிஜினலா சுதந்திரம் கிடைச்ச மாதிரி. சரி சார் அப்ப நான்
விடை பெறுகிறேன் நமஸ்காரம்"

எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. பக்கத்தில் தான் வீடு. ஆனாலும் ஹோட்டல்
பிரியாணி மீது ஒரு ஆவல் வந்தது. ஒரு 15 நாட்கள் முன்னதாக சென்னை சி ஐ டி
நகரில் ஒரு ஹோட்டலில் என் நண்பர்களுடன் சாப்பிட போன போது "தோழர் பீஃப்
சாப்பிடுங்க, என சொன்னார் ஒரு தோழர். எனக்கு  பீஃப் சாப்பிட்டு பழக்கம்
இல்லை. இருந்தாலும் அவர் மனம் கோணக்கூடாதே என சகித்து கொண்டு
சாப்பிட்டேன்.அதை நோக்கி என் மனம் சென்றது. ஹோட்டலில் அமர்ந்த பின்
சர்வரிடம் "ஒரு பிரியாணி கொடுப்பா. பீஃப் பிரியானியா இருந்தா உத்தமம்" என
சொன்னேன்!

4 comments:

  1. Best! என்ன எழுத்து நடை!
    ஆ.வீ., அ.வி., கல்கி., அ. சுரபி., க. மகள் - அனுப்புங்க!

    ReplyDelete
  2. சிறுகதை, நிகழ்வுக்கு அருகே (ரொம்ப practical) இருந்தது..

    ***

    மருந்தீஷ்வரர் கோயில் நானும் சென்றிருக்கிறேன், வன்னி மரம், பிரகாரம், பசு மடம் என பழைய நினைவலைகளை கிளறி விட்டீர்கள்!

    ReplyDelete
  3. அண்ணே, பிரமாதம்ணே. மருந்தீஸ்வரர் கோயில் போயிட்டு, ஃபீப் பிரியாணி. அதுதாண்ணே நல்ல மருந்து. எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  4. அண்ணே, பிரம்மாதம்ணே. மருந்தீஸ்வரர் கோவில் போயிட்டு, ஃபீப் பிரியாணி. அதுதாண்ணே சூப்பர் மருந்து, எனக்கும் பிடித்தது.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))