பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 24, 2012

கலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்!


(முதல் வரிசையில் இடமிருந்து வலமாக ஐந்தாவதாக திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள்)


ஒரு விஷயத்தில் ஒருவர் பெரிய அப்பாடக்கராக இருப்பது ஒரு தனி திறமை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அந்த விஷயத்தின் வீரியத்தை அதன் நுனுக்கத்தை அணு அணுவாக ரசிப்பது, ரசிக மணியாக இருப்பது என்னைப்பொறுத்த வரை ரொம்ப பெரிய விஷயம். ரசிக்கும் போது அந்த விஷயத்தில் இருக்கும் நிறை மட்டும் சிலரது கண்ணுக்கு தெரியும். சிலருக்கு "சுப்புடு"த்தனம் இருக்கும். அதல்லாம் விஷயமில்லை. ஆனால் ரசிக்கும் மனோபாவம் இருக்கின்றதே... அதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். இது சம்மந்தமாக ஒரு கதை கூட உண்டு. அனேகமாக இது மகாபாரதத்தில் வரும் ஒரு குட்டிக்கதை என நினைக்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம் என்று பொத்தாம் பொதுவாக ஆரம்பிப்பதை விட விஜயபுரி என்னும் தேசத்தை விஜயன் என்னும் மகாராஜா ஆண்டு வந்தான் என ஆரம்பிப்பது உங்களை இன்னும் கொஞ்சம் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று குதூகலிக்க வைக்கும் என்பதால் அப்படியே ஆரம்பிப்போம்.

அந்த மன்னன் விஜயனுக்கு  பிறந்த நாள் வந்தது. வழக்கமாக அவன் பிறந்த நாளுக்கு பள்ளி பாடசாலைகளுக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களின் தனித்திறமைக்கு போட்டி வைத்து பரிசுகள் வழங்குவது வழக்கம். அந்த வருடமும் அது போல போட்டிக்கு மந்திரி ஏற்பாடு செய்து இருந்தார். மன்னன் விஜயன் மந்திரியை பரிசுக்கு தேர்ந்தெடுக்கும் குழுவுக்கு தலைவராக நியமனம் செய்தான். போட்டிகள் ஆரம்பம் ஆனது. ஒரு சின்ன பெண் குழந்தை அந்தரத்தில் ஒரு கயிற்றின் மீது நடந்து வந்தது. ஒரு பையன் தீ வளையத்தில் புகுந்து வந்தான். ஒரு பையன் சிறிய ஊசியை தரையில் இருந்து கண்களால் எடுத்து காட்டி அசத்தினான்.  எல்லா குழந்தைகளும் தங்கள் திறமையை காட்டி அசத்தினர்.

மந்திரியும் எல்லோருக்கும் மதிப்பெண் கொடுத்து கொண்டே வந்தார். கடைசியாக ஒரு சின்ன பையன் களத்தில் குதித்தான். அவனோ கால் கொஞ்சம் ஊனமுற்ற மாற்று திறனாளி. அவன் களத்தில் குதித்ததும் எல்லோரும் சிரித்தனர். ஆனால் அவன் பொருட்படுத்தவில்லை. தான் எல்லோராலும் கேலி செய்யப்படுவதைப்பற்றி கவலைப்படவில்லை.

உடனே மன்னர் அந்த பையனைப்பார்த்து "தம்பி உனக்கே கால் முடியாது. இங்கே பார்த்தாயா, எத்தனை பேர் என்ன என்ன விதமான பிரம்மிக்க தக்க வகையில் தங்கள் திறமையை காட்டினர். உன்னால் அது போல முடியுமா? அதனால் நீ போட்டியில் இருந்து விலகிவிடு" என்றார். அதற்கு அந்த மாணவன் "இல்லை மன்னரே, எனக்கு தெரிந்த வித்தையை நான் செய்ய அனுமதி கொடுங்கள்" என்றான். மன்னரும் அவனிடம் " சரி நீ என்ன செய்ய போகின்றாய்" என கேட்டார். அதற்கு அவன் "மன்னா நான் பசுவின் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி குதிக்கும் வித்தையை செய்ய போகிறேன்" என்றான். உடனே இதை கேட்ட மன்னர் முதலான எல்லோரும் சிரித்தனர். கன்றுகுட்டி போல துள்ளி குதிப்பது எல்லாம் ஒரு வித்தையா, இதை தான் எல்லாரும் சுலபமாக செய்யலாமே என எள்ளி நகையாடினர். ஆனால் மந்திரி மட்டும் சிரிக்காமல் அதில் ஏதோ விஷயம் கண்டிப்பாய் இருக்கும் என நம்பி அமைதியாக இருந்தார். மன்னரும் அந்த மாணவன் மனம் நோகாமல் இருக்க வேண்டி வித்தை காட்ட அனுமதி கொடுத்தார்.

அந்த மாணவனும் அந்த விளையாட்டுக்களத்தில் கன்றுக்குட்டி போல துள்ளி துள்ளி வந்தான். எல்லோரும் மீண்டும் சிரித்தனர். கூர்ந்து கவனித்த மந்திரி மட்டும் களத்தின் உள்ளே குதித்து அந்த கன்றுக்குட்டியாய் துள்ளிக்கொண்டு இருந்த மாணவன் அருகே சென்றார். பின்னர் அந்த பையன் முதுகில் தன் விரலால் தொட்டார். மீண்டும் வந்து தன் இருக்கையில் மன்னரின் அருகே அமர்ந்து கொண்டார்.

எல்லோரும் தங்கள் திறமையை காட்டி முடிந்த பின்னர் மந்திரி அவரவர்களுக்கான மதிப்பெண் இட்டு வரிசைப்படுத்தி முதல் பரிசை அறிவிக்க எழுந்தார். மன்னன் விஜயனும் முடிவை ஆர்வமாக பார்க்க வேண்டி எழுந்து நின்றான். தீயில் புகுந்து வந்த மாணவனும், அந்தரத்தில் கயிற்றில் நடந்து வந்த மாணவியும் மிகுந்த ஆர்வத்துடன் தாங்கள் தான் முதல் பரிசு பெறுவோம் என்ற நம்பிக்கையில் எழுந்து நின்றனர்.

மந்திரி முதல் பரிசை அறிவித்தார். 5....4.... 3..... 2......1 .... அந்த கன்றுக்குட்டி போல் துள்ளிக்குதித்த மாற்றுத்திறனாளிக்கு முதல் பரிசு என அறிவித்தார். மன்னன் விஜயன் மற்றும் அந்த கூட்டமே அதிர்ச்சியானது. மன்னன் விஜயன் மந்திரியை பார்த்து "மந்திரியாரே, இந்த பையனை விட மற்றவர்களின் திறமை அசாத்தியமாக இருக்க நீர் ஏன் இந்த மாணவனை பரிசுக்கு தேர்ந்தெடுத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" என கோபமாக கேட்டான்.

அதற்கு மந்திரி "மன்னா, கயிற்றில் நடப்பதும், தீயில் புகுந்து வருவதும் ஓரளவு பயிற்சியால் வந்து விடக்கூடிய திறமை தான். ஆனால் இந்த மாணவன் கன்றுக்குட்டியாகவே மாறினான். அதற்கு அசாத்திய யோக பயிற்சி வேண்டும். உலகத்தில் எந்த மனிதருக்கும் இல்லாத ஒரு குணம்  மாடுகளுக்கு உண்டு. நம்மை ஒருவர் தொட்டால் நம் உடம்பே சிலிர்க்கும். ஆனால் மாடுகளை நாம் ஒரு இடத்தில் தொட்டால் அந்த இடம் மட்டுமே சிலிர்க்கும். அந்த மாணவன் கன்றுக்குட்டி போல துள்ளும் போது நான் போய் அவனை முதுகில் விரலால் தொட்டேன். உடனே அவன் அந்த தொட்ட இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டினான். அவன் அந்த கன்றுக்குட்டி வித்தை காட்டும் போது கன்றுக்குட்டியாகவே மாறிவிட்டான். அதிலே மனம், மூளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்றிவிட்டான். இதற்கு தான் மற்ற வித்தைகளை விட அசாத்திய பயிற்சி வேண்டும்" என சொன்னார்.

உடனே மன்னர் அந்த மாணவனுக்கு பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல் மந்திரியின் அபரிமிதமான ரசிப்பு தன்மைக்கும் பரிசு கொடுத்தார்.

கதை முடிந்தது. இதை ஏன் இங்கே சொல்கிறேன் எனில் இந்த பதிவின் முதல் பாராவுக்கு மீண்டும் செல்லுங்கள். ......... இப்போது மீண்டும் இங்கே வாருங்கள். சில வருடங்கள் முன்பாக "கன்னத்தில் முத்தமிட்டால்" என்னும் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை பதிவர் தோழி ஜெஸீலா ஒரு விமர்சனம் செய்து பதிவிட்டு இருந்தார்கள். நான் பல இடங்களில் அந்த பதிவை சிலாகித்து எழுதி இருக்கின்றேன். அந்த தாக்கத்துக்கு பின்னர் இப்போது ஒரு பதிவு படித்தேன்.

ஒரு சட்ட மன்ற உறுப்பினர், ஒரு மிகப்பிரபல கட்சியின் மாவட்ட செயலர்.... காலை கண் விழித்தவுடனேயே தொகுதி பிரச்சனை, மாவட்ட பிரச்சனை, அரசியல் பிரச்சனைகள், சண்டைகள், சமாதானங்கள்... இரவு தூங்கும் வரை பிரச்சனகள் என முழு நேரமும் போராட்ட வாழ்க்கையின் ஊடே அவரது காரில் மேட்டுப்பாளையம் நோக்கி போகும் போது தான் கேட்கும் ஒரு பாடலை சிறியதாக மிக சிறியதாக ஆனால் வீரியமாக ஒரு விமர்சனம் எழுதுகின்றார். அவரது முகநூல் மற்றும் சமீபத்தில் ஆரம்பித்து இருக்கும் தன் வலைப்பூவில் அதை பதிகின்றார்.

 பொதுவாக எனக்கு கங்கை அமரன் மீது பெரிய அபிப்ராயம் என்பது இருந்தது இல்லை. இளையராஜா குரல் பிடிக்கும், ஜானகி குரல் பிடிக்கும், இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் தான். ஆனால் இந்த விமர்சனத்துக்கு பின்னர் கங்கை அமரன் மீது "அடடே இவர் ஒரு நல்ல கவிஞர்" என்னும் அபிப்ராயமும் இளையராஜா மற்றும் ஜானகி அவர்கள் குரல் மீது காதலும் இளையராஜாவின் இசை என்பது ஒரு "பிரவாக நதி" என்னும் எண்ணமும் என் மனதில் வந்து சிம்மாசனம் போட்டு அமந்து விட்டது . அவரது விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும் http://ss-sivasankar.blogspot.in/2012/10/blog-post_21.html . முகநூலுக்கு அவர் பழையவர்  என்பினும்  இப்போது புதிதாக வலைப்பூ பக்கம் வந்துள்ள குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர்அவர்கள்,  சட்டமன்ற நிகழ்வுகள், தான் பார்த்தது, கேட்டது, ரசித்தது ஆகியவற்றை  தன் வலைப்பூ பக்கங்களில் எழுத இருப்பதாக கூறியுள்ளார். தான் முகநூலில் எழுதிய சில பதிவுகளை தன் புதிய வலைப்பூவில் இதுவரை சுமார் 45 பதிவுகள் பதிந்துள்ளார். இன்னமும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைக்கவில்லை. விரைவில் இணைப்பார். அவரை பதிவர்கள் சார்பாக வரவேற்போம்.

October 13, 2012

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி!


என் செல்போன் இப்போது என்னிடம் இல்லை :

அது ஒரு பெரிய சுவாரஸ்யாமான கதை. நேற்று நான் சென்னையில் இருந்து மயிலாடுதுறை வர வேண்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தேன். அடுத்த ரயில் மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் என சொன்னதால் எனக்கு பேருந்து பயணம் ஒத்து வராமையால் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விட்டேன். அப்போது நண்பர்கள் போனில் பேசிக்கொண்டு இருந்தமையால் போனில் பேட்டரி தீர்ந்து விட்டது. உடனே அங்கே இருந்த  பாயிண்டில் ஏற்கனவே மூன்று போன்கள் இருந்தன. அதிலே ஒன்றில் மாட்டி விட்டு பக்கத்தில் அமர்ந்து பேப்பர் படிக்க தெடங்கினேன்.

ஒரு இரண்டு நிமிடம் தான் அதிகபட்சமாக ஆகியிருக்கும். என் செல்போனை காணவில்லை. சார்ஜரும் இல்லை. அங்கே சார்ஜ் போட்டுக்கொண்டு இருந்த இரு கல்லூரி பெண்களிடம் "அய்யோ என் செல்போனை காணவில்லை. யாராவது எடுத்து போனதை பார்த்தீர்களா, கொஞ்சம் உங்க போனில் இருந்து என் போனுக்கு போன் செய்யுங்க" என சொன்னதுக்கு அவங்க பயந்து கொண்டு மாட்டேன் என சொல்ல நான் ஓடிப்போய் ரயில்வே பாதுகாப்பு ஸ்டேஷனுக்கு விஷயத்தை சொன்னேன்.

அந்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் பீதியை கிளப்பியது. ஒருவனை ஜட்டியோடு கைவிலங்கு இட்டு அதை ஒரு நாற்காலியில் பினைத்து இருந்தனர். எல்லாருமே ஒரு வித பரபரபுடன் வேலை செய்து கொண்டு இருக்க என்னை ஒரு இன்ஸ்பெக்டர் விசாரித்து விட்டு "ஆமா காலைல இருந்து பத்து பேர் வந்து புகார் சொல்லிட்டாங்க, ஆனா புகார் எழுதி கொடுங்கன்னு சொன்னா யாரும் முன்வரவில்லை" என சொல்ல அதற்கு நான் "சார் நான் புகார் எழுதி தர்ரேன் சார்" என சொன்னேன். அவர் ரைட்டரை நோக்கி கைகாண்பிக்க அவர்களே பேப்பர் பேனா எல்லாம் கொடுக்க நான் விளக்கமாக புகார் எழுதி கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் அவரது போனில் இருந்து என் நம்பருக்கு அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

புகாரை பதிவு செய்யலாமா என அவர் மீண்டும் கேட்க நான் "தாராளமா செய்யுங்க சார்" என சொன்னேன். அப்போது மதியம் 2.30 ஆகி இருந்தது. நான்கு மணிக்கு கிளம்ப வேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க நான் போய் ஏறிவிட்டேன்.மனசே சரியில்லாமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் செல்போன் வாங்கி என் நம்பருக்கு போன் செய்ய அதிஷ்டவசமாய் ரிங் போனது. யாரோ எடுத்தாங்க. உடனே நான் "சார் அது என் செல்போன் தான். நான் எக்மோர்ல இருக்கேன். அதை கொடுத்தா நான் அதிலே இருக்கும் நம்பர் எல்லாம் எடுத்து கிட்டு போனையும் உங்க கிட்டே தர்ரேன்" என சொல்லி கொண்டே இருக்கும் போது அவன் போனை கட் பண்ணிட்டான்.

நான் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் ஓடிவந்து "சாமி" என்கிற வேறு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் என்னை "பதட்டப்படாதீங்க. உங்க நம்பரை சொல்லுங்க" என சொல்லி விட்டு என் நம்பருக்கு போன் செய்தார். ரிங் போனது. அவன் எடுத்தார். உடனே அந்த கிரைம் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் ஒரு பிஸ்கட் கம்பனில கூலி வேலை பார்க்குறனுங்க. நான் சென்னைக்கு வந்தேனுங்க. நான் சென்னைக்கு போக வேண்டிய ஆள் நம்பர் அதுல இருக்குதுங்க. கொஞ்சம் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொன்னா நான் வந்து நம்பர் வாங்கிப்பேனுங்க. என் கைல முன்னூத்து சொச்சம் பணம் இருக்குதுங்க. அதையும் தர்ரேங்க. அந்த போனும் நீங்களே வச்சுகுங்கய்யா. புண்ணியமா போவுமுங்க" என சொல்ல அந்த மனமிளகிய திருடன் "அய்யய்யோ நான் பாண்டிபசார்ல பக்கத்துல சத்யா பசார்ல இருக்கேனே. சரி காசோட வாங்க"ன்னு சொல்ல அதற்கு அந்த இன்ஸ்பெக்டர் "அடடே பாண்டிபசாருங்களா, அங்க என் நண்பர் இருக்காருங்கய்யா, கொஞ்சம் இருங்க அவரு நம்பரை கான்பரன்ஸ்ல போடுறேன். அவரு ஒரு குடை யாவாரிங்க, அவரு கிட்ட கொடுத்துங்கய்யா" என சொல்ல அந்த திருடனும் சரி என்றான்.

உடனே நம்ம இன்ஸ்பெக்டர் கொஞ்சம் இருங்கன்னு சொல்லி அவனை ஹோல்டுல போட்டுட்டு வேற நம்பருக்கு போன் செஞ்சாரு " பாண்டிபஜார் கிரைம் இன்ஸ்பெக்டர் அய்யாங்குளா. நான் எக்மோர் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டர் சாமி பேசுறேங்க.வணக்கமுங்க அய்யா. இப்ப லைன்ல ஒரு அக்யூஸ்டு ஹோல்டுல இருக்கான். இப்ப உங்க பேரு தொரைசாமிங்கய்யா, குடையாவாரி. அவன் அங்க பக்கத்திலே சத்யா பசார்ல இருக்கான், செல்போன் தீஃப்ய்யா அவன். அனேகமா ஒரு பத்து செல்போன் அவன் கைல இருக்கும். இருங்க அவனை கான்பரன்ஸ்ல போடுறேன். அவன் அடையாளம் கேட்டுட்டு போய் அள்ளுங்கய்யா, நானும் அங்க வர்ரேன்" என சொல்லிவிட்டு அவருடன் லைன் கொடுத்தார்.

பின்னர் அந்த பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் " அய்யா வணக்கமுங்க. நான் தொரசாமிங்கய்யா. கொடை யாவாரிங்க. அய்யா அடையாளம் சொன்னா வந்து வாங்கிபனுங்கய்யா" என சொல்ல அவன் அடையாளம் சொல்ல .... பின்னர் அந்த இன்ஸ்பெக்டரிடம் இருந்து நம்ம இன்ஸ்பெக்டர் கிட்டே போன் வந்துச்சு. இவர் எல்லாத்துக்கும் "உம் உம் சரிங்கய்யா சரிங்கய்யா" என சொல்லி விட்டு என்னிடம் ஒரு பேப்பரில் ஒரு அட்ரஸ் எழுதி கொடுத்து விட்டு இங்க இருக்கும் உங்க போன் அங்க போய் வாங்கிகுங்க" என சொன்னார். அப்போது மணி மாலை 3 மணி. ஒரு மணி நேரத்தில் நான் அங்கே போய் இடம் தேடி வாங்கிட்டு ரயிலை பிடிக்க முடியாது என்பதால் ரயில் ஏறிவிட்டேன். மயிலாடுதுறை போனதும் சென்னையில் இருக்கும் யாரிடமாவது பேசி வாங்கலாம் என அரை மனதுடன் ஏறிவிட்டேன்.

இதிலே என்ன ஒரு கூத்துன்னா பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் ஜீப்ல அங்க ரெண்டே நிமிஷத்திலே போயிட்டாரு. இவன் சொன்ன அடையாளத்திலே அவனை நோக்கி போகும் போதே செல்போன்கள் இருந்த பையை விற்க வந்த கடையிலேயே போட்டு விட்டு ஓடிட்டான். அவனை பிடிக்க வந்த இஸ்மாயில் என்னும் கடைக்காரரை கீழே தள்ளிவிட்டு ஓடிட்டான். கிட்ட தட்ட இருபது செல்போன்கள்.

அந்த இஸ்மாயில் கிட்டே பாண்டிபசார் இன்ஸ்பெக்டர் கிடைத்த எல்லா செல்போன்கள் மாடல் மற்றும் பெயர்கள் எல்லாம் எழுதி வாங்கிட்டு எல்லா போனுக்கும் அதிலே இருக்கும் எதுனா நம்பருக்கு போன் செஞ்சு செல்போன் ஓனர் யார்ன்னு கேட்டு ஒப்படைத்து அவங்க கிட்டே கையெழுத்து வாங்கிட்டு அதை என் கிட்டே கொண்டு வந்து கொடுக்கனும் என சொல்லிட்டு போயிட்டார்.

அந்த இஸ்மாயில் என் போன்ல இருந்த முதல் நம்பராக இருந்த "அப்துல்லா" நம்பருக்கு போன் செய்ய அது ஸ்விட் ஆஃப் ஆகி இருந்தைமையால் அவர் வேறு நம்பரை தேட அதிலே நம் நண்பர் பதிவர் காரைக்கால் இஸ்மாயில் பெயரை வைத்து இருக்க "அடடே நம்ம பெயரா இருக்குதே" என நினைத்த இஸ்மாயில் அந்த பதிவர் இஸ்மாயில்க்கு போனை போட்டு "இது யார் போனுங்க" என கேட்க இது "அபிஅப்பா" போன் என சொல்ல அதற்கு அந்த இஸ்மாயில் "அப்படியாங்க. இது திருட்டு போய் கிடைச்சுது. அவரு கிட்ட சொல்லி என் கிட்ட வந்து வாங்கிக்க சொல்லுங்க" என சொன்னதும் நம்ம பதிவர் இஸ்மாயில் என் நண்பர் என்பதால் என் மனைவி நம்பருக்கு மயிலாடுதுறைக்கு போன் செய்து "அண்ணி, அபிஅப்பா செல்போன் ரயில்வே ஸ்டேஷனில் திருட்டு போச்சுது. அது பாண்டி பசார்ல இன்ன அட்ரஸ்ல இருக்குது. போய் வாங்கிக்க சொல்லுங்க" என சொல்ல உடனே என் மனைவி  சென்னையில் இருக்கும் என் அண்ணன் சம்மந்தம் என்பவருக்கு போன் செய்து விஷயம் சொல்ல நான் இரவு பத்து மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும் முன்ன என் போன் கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. இன்னும் இரண்டு நாளில் நான் மீண்டும் சென்னைக்கு போனதும் தான் என் கைக்கு வரும்.

நான் சாமி என்னும் ஆர் பி எஃப் கிரைம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து நன்றி சொன்னேன். அதற்கு அவரு "சார், காலை முதல் செல்போனை குறிவச்சு ஒருத்தன் அடிச்சிருக்கான். ஆனா வந்து யாரும் தைரியமா ஒரு புகார் எழுதி தரலை. ஏன்னா பயம். கோர்ட் கேஸ்ன்னு ஆகுமேன்னு பயம். பின்ன எப்படி நாங்க எங்க போய் தேடுவது. பாருங்க இப்ப பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் புகார் கொடுத்தா நாங்க இன்னிக்கு பிடிச்ச 20 செல்போனையும் அந்த புகார் செஞ்சவங்களுக்கு திருப்பி கொடுத்திருக்கலாம். போலீசார் உங்கள் நண்பன்னு ஏன் இன்னனும் நினைக்காம இருக்காங்க மக்கள்? நன்றில்லாம் வேண்டாம். இனிமே இது போல அலட்சியமா இருக்காதீங்க." என சொன்னார்.

நிஜமாகவே போலீசார் மக்களின் நண்பர்கள் தான்! வாழ்க காவல்துறை! மிக்க நன்றி! மிக்க நன்றி!

October 9, 2012

"பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!




அக்டோபர் முதல் தேதி 2012 அன்று  அதிமுக "மெஜாரிட்டி" அரசின் அடக்குமுறைகளை , அரசின் மக்கள் நலம் கவனிக்கப்படாத நிலைகள்... இவைகள் எல்லாம் குறித்து விவாதிக்க  திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞரால் கூட்டப்பட்டது. கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்திக்கின்றார் கலைஞர். அதிமுக அரசின் செயல்பாடுகளை மற்றும் செயல்படாத ....அதனால் மக்கள் படும் பாடுகளை எல்லாம் கண்டித்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் கருப்பு உடை அணிந்து மனித சங்கிலி போராட்டம் நடைபெறும், சென்னையில்  ஆட்சியர் அலுவலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை தன் தலைமையிலேயே மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் "அய்யா நீங்கள்  சென்னையில்  மனித சங்கிலி நடத்த இருக்கும் சாலையில் உங்கள் பெயர் தாங்கிய கல்வெட்டை அகற்றி விட்டு அங்கே ஜெயாவின் பெயர் தாங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே? அதனால் அந்த சாலையில் நீங்கள் மனித சங்கிலி நடத்தினால் உங்கள் தொண்டர்கள் அதை பார்த்து உணர்சி வசப்பட்டு அதனால் அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து போலீசார் அனுமதி தருவார்களா? என கேட்கின்றார். மைக் பிரச்சனையால் அவர் என்ன கேட்கின்றார் என தலைவருக்கு சரியாக காதில் விழாமல் மீண்டும் கேட்கிறார். பத்திரிக்கையாளர் மீண்டும் இதை சொல்ல கலைஞர் அதற்கு "இதல்லாம் ஒரு பிரச்சனை இல்லை" என ஒற்றை வரியில் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு போகின்றார்.

நன்றாக கவனித்து பாருங்கள். இந்த பேட்டி ஒரு நேரலை நிகழ்சி. இதிலே ஒரு முறைக்கு இரு முறை அந்த பத்திரிக்கையாளர் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றார். அவர் கேள்வியில் திமுக தொண்டர்களை இந்த சாதா கல்வெட்டு பிரச்சனையால் அசம்பாவிதம் நடக்க வேண்டும் என தொண்டர்களை "தூண்டி" விடுகின்றாரா? அல்லது காவல் துறைக்கும் அரசுக்கும் மனித சங்கிலி நடைபெறாமல் தடுக்க வேண்டி காரணம் சொல்லி கொடுக்கின்றாரா என புரியவில்லை. இது தான் இப்போதைய "நான்காவது தூணின்" நிலைமை தமிழகத்தில். உணருங்கள் தோழர்களே!

எது எப்படியோ அந்த பத்திரிக்கையாளரின் ஆசை நிறைவேறுகின்றது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் மனித சங்கிலி நடத்தக்கூடாது என காவல்துறை அனுமதி மறுக்கின்றது. தமிழகத்தில் ஜெயா ஆட்சி அமைந்த மே 13 - 2011 முதல் திமுகவும் சளைக்காமல் நீதிமன்றம் செல்வதும் பின்னர் நீதிமன்றங்கள் அரசின் தலையில் சுத்தியால் அடிப்பதும் வழக்கம் தான் எனினும் இந்த முறை தலைவர் கலைஞர் எடுத்த முடிவு அசாதாரமான ராஜதந்திர முடிவு. மூன்றாம் தேதி இரவு வரை காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை.

நான்காம் தேதி காலை கலைஞர் பத்து மணிக்கு அறிவாலயம் வரும் போது அரசின் தலையில் இப்படி ஒரு இடி இறங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வரும் போதே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சீருடை பளபளக்க வருகின்றார். கருப்பு சட்டை, அதன் மேல் தன்மான வெள்ளை துண்டு அணிந்து வருகின்றார். பார்ப்பவர்கள் பதைபதைத்து போகின்றனர். "என்ன இது கோலம் அய்யா?" என அழவில்லை. "ஆகாஇதுதானய்யா நாங்கள் எதிர்பார்த்த  உங்கள் உருவம்" என ஆனந்த கூத்தாடுகின்றனர். அறிவாலயத்தில் கலைஞரை வரவேற்ற தளபதி மற்றும் தளபதியின் தளபதிகள் மேயர் மா.சு, தோழர் ஜின்னா, மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் அண்ணன் ஆகியோர் அரக்க பரக்க ஓடுகின்றனர். எங்கிருந்தோ கிடைத்த கடையில் இருந்து எத்தனை கருப்பு சட்டைகள் கிடைக்கின்றனதோ அத்தனையும் வாங்கி வந்து நான் முந்தி நீ முந்தி என உடுத்துகின்றனர்.

தமிழகம் முழுக்க தகவல் சொல்கின்றனர். எஸ். எம் எஸ் பறக்கின்றது. ஆண்களும் பெண்களும் கருப்பு உடை நோக்கி விரைகின்றனர். அறிவாலயம் முழுக்க கூட்டம் வழிந்து நிரம்புகின்றது. அறிவாலய மாடியில் இயங்கும் "கலைஞர் தொலைக்காட்சி" நிலைய செய்திப்பிரிவினர் ஓடிவருகின்றனர். பி டி ஐ, யு என் ஐ செய்தி நிறுவனத்தினருக்கு செய்தி போகின்றது. அத்தனை இந்திய தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் அலுவலகங்களின் பேக்ஸ் மற்றும் தொலை பேசிகள் இந்த செய்தியை அலறுகின்றன. அனைத்து ஊடகங்களும் அறிவாலயத்தில் முற்றுகை இட தொடங்கின. அவசர கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகின்றது. நாளை மனித சங்கிலியை அனுமதி கொடுக்காவிடினும் நடத்தி சிறை செல்லலாமா என தலைமைக்கு கேட்டுக்கொண்டு இருந்த அரியலூர் மாவட்டம், புதுகை மாவட்டம், காஞ்சி மாவட்ட செயலர்கள் தலைமையை தொடர்பு கொண்டு "இன்றே நாங்களும்கருப்பு உடை அணிந்து விட்டோம், அடுத்து என்ன?" என கேள்வியால் துளைக்க தலைமை நிலைய செயலர் சதாசிவம் அவர்கள் "இருங்க மாவட்டம்...தலைவர் இதோ ப்ரஸ் மீட்க்கு ஏற்பாடு செய்ய சொல்லிட்டார்... எங்களுக்கும் எதும் புரியலை" என சொல்லிக்கொண்டே இருந்தார்.

ப்ரஸ்மீட் ஆரம்பம் ஆனது. "மனித சங்கிலி நாளை நடக்காது. ஆனால் அதற்கு பதிலாக திமுகவினர் கருப்பு உடை அணிந்து அதிமுக அரசின் அராஜக போக்கினை துண்டு பிரசுரம் மூலமாக மாவட்டத்துக்கு மாவட்டம், நகரத்துக்கு நகரம், ஒன்றியத்துக்கு ஒன்றியம், பேரூருக்கு பேரூர், வார்டுக்கு வார்டு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு கொண்டு சேர்ப்பர்" என சொல்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் கேட்கின்றார்... "அய்யா இதற்கு முன்னர் கருப்பு சட்டை போட்ட நிகழ்வு தமிழகத்தில் எப்போது என நியாபகம் உள்ளதா?" ... அதாவது ஒரு கட்டத்தில் எம் ஜி ஆர் அவர்கள் தன் மந்திரிசகாக்களுடன் கருப்பு சட்டை சிலநாட்கள் அணிந்தார். அதைத்தான் அந்த பத்திரிக்கையாலர் கேட்கின்றார். அதற்கு தலைவர் அவர்கள் " தமிழகத்தில் நீங்கள் நினைக்கும் அந்த நிகழ்வுக்கு முன்பே கருப்பு சட்டை போட்டவன் இந்த கருணாநிதி" என்கிறார். கேட்டவர் வாயடைத்து போனார். அவரிடமேவா? கருப்பு சட்டை பகுத்தறிவு பல்கலைகழக முதல் பேட்ஜ் மற்றும் முதல் மாணவரிடமேவாஅந்த கேள்வி?

கருப்பு உடையில் தலைவர் கலைஞர் அய்யா பெரியார் போல இருக்கிறார், கருப்பு உடையில் தலைவர் ஆசிரியருக்கு ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல இருக்கிறார் என்றெல்லாம் அறிவாலய கூட்டம் சிலாகிக்கின்றது.

பெரியார் திடல் தோழர்கள் ஆனந்த கூத்தாடுகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் அமிழ்கிறார் ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள். சுபவீ அய்யா கருப்பு உடை அணிந்து அறிவாலயம் வருகின்றார். எங்கு திரும்பினும் கருப்பு உடைகள். நான் மயிலாடுதுறை திரும்ப வேண்டி பேருந்தில் வரும் சமயம் ஏகப்பட்ட எஸ். எம். எஸ்கள் என என் இன்பாக்ஸ் நிரம்பி வழிகின்றது.தலைவர் கலைஞரின் பேஸ்புக்ல் பார்த்தேன். "நான் இன்றைக்கே கருப்பு உடை அணிந்து விட்டேனே" என சொல்லி சிரிக்கின்றார். கடலூர்  வந்த போது எடுத்து பார்த்தேன். அதன் பின்னர் என் வெள்ளை சட்டை எனக்கு உறுத்தியது. ஓடிப்போய் ஒரு கடையில் கருப்பு சட்டை கேட்டேன். "இல்லீங்க போங்க" என கோவப்பட்ட கடைக்காரரிடம் ஏனய்யா கோவம் என கேட்டமைக்கு " பல வருஷமா விற்காம இருந்த கருப்பு சட்டை எல்லாம் இன்றைக்கு  காலை முதல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து விட்டேன். கருப்பு துணி கூட ஒரு பண்டல் இல்லாம விற்பனை ஆகிப்போச்சு. இப்ப வந்து கேக்குறீக்களே" என அங்கலாய்த்தார்.

மயிலாடுதுறை வரும் முன்னர் என் அக்கா பையன் போன் செய்தான். "மாமா நான் மகாபலிபுரம் வந்தேன். இங்க ஒரே கருப்பு சட்டையா இருக்கு. என்ன எதுனா பிரச்சனையா?" என கேட்டான். "ஆமாம் தமிழகம் முழுக்க பிரச்சனை தான். மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை... அதனால் தமிழகம் முழுக்க இனி இருண்ட காலம் என்பதை காட்டத்தான் இந்த கருப்பு சட்டை" என்றேன். சிறிது நேரம் கழித்து அவனே போன் செய்தான். "மாமா இங்க ஏன் இத்தனை கருப்பு சட்டை என கேட்ட ஒரு ஆங்கிலேயரிடம் ஒரு கருப்பு சட்டைக்காரர் 'ஹியர் இன் தமிழ்நாடு.. நோ எலக்ட்ரிசிட்டி, நோ வாட்டர், நோ அக்ரிகல்சர், நோ லா அண்டு ஆர்டர், ஃபுல் ஆஃப் தெஃப்ட் அண்டு ராபரி பட் ஒன்லி ,அரஸ்ட் ஆஃப் ஆப்போசிட் பார்டீஸ்.. ஸோ ஒன்லி ப்ளாக் ட்ரஸ்" என சொன்னாரு. அவங்களும் அதை கேட்டு கிட்டு அதையே போன்ல யார் கிட்டயோ சொன்னாங்க" என சொன்னான்.

மயிலாடுதுறைக்கு வந்தேன். கடைகளில் "இங்கே கருப்பு சட்டை மற்றும் கருப்பு துணி இருப்பு இல்லை" என்னும் அறிவிப்பு பலகைகள் துணிக்கடைகள் வாசல் தோரும் தொங்கக்கண்டேன்.

ஆக ஒரு நாள் கூத்தாக முடிந்து இருக்க வேண்டிய மனிதசங்கிலியை இப்படியாக உலகம் முழுக்க தெரியவைத்தது ஜெயாவின் ஆலோசகர்கள் என்னும் கும்பல்கள் தான். மூளைக்காரர்களாம் இவர்கள்:-))

இந்த மூளைக்காரர்கள்  செய்த லீலைகளின் பயன்கள்,

 1. மஞ்சள் துண்டு மகான் என  இனி  கலைஞரை கேலியும் கிண்டலும் செய்ய இயலாவண்ணம் பகுத்தறிவு சீருடைக்கு கொண்டு வந்து ஒரு இனத்தையே தட்டி எழுப்பியது.

2. திமுகவினர் அனைவரும் கருப்பு உடை அணிவதால் ஒரு ரயில் பெட்டியிலோ, ஒரு பேருந்திலோ அனைவரும் இவன் நம்ம இனத்தான் என எளிதில் அடையாளம் காண்பது.அதன் காரணமாய் ஒற்றுமை ஓங்குவது .


3.சுனக்கமாய் போனதாய் சொன்ன பெரியாரியல் கொள்கைகள் ஒரே நாளில் வீறு கொண்டு எழுந்தது.

 4. ஒரே நாளில் முடியக்கூடிய மனித சங்கிலி போராட்டத்தை விட பல மடங்கு பெரிதாக்கி சாதாரண நடுநிலையாளர்களும் ஏன் இத்தனை மக்கள் கருப்பு சட்டை போடுகின்றனர் என கேள்வி கேட்டு அதற்கு கருப்பு சட்டைகாரர்கள் பதிலுக்கு துண்டு பிரசுரம் செய்வதால் கடைக்கோடி வாக்காளனுக்கும் அரசின் அவலட்சனம் தெரிவது.

பொதுவாக "பிள்ளையார் பிடிக்க குரங்கானது" என சொல்வார்கள். ஆனால் அந்த மூளைக்காரர்கள் (???) "பிள்ளையார் "பிடிக்க அது "பெரியார்" ஆனது!சூரியனே கருப்பு சட்டை போட்டபின் சுட்டெரிக்கும் நெருப்பென்ன, சுழண்டு அடிக்கும் காற்றென்ன... கருப்பு சட்டை அணிந்திடுவோம். இனமானம் காத்திடுவோம்!