January 1, 2013
"ஸ்ரீ சக்ரபுரி" - நூல் விமர்சனம்!!!
இரு நாட்கள் முன்பாக அகநாழிகை பதிப்பகம் திரு. பொன். வாசுதேவன் அவர்கள் வழியாக இந்த நூல் கிடைக்கப்பெற்றேன். அப்போதே அதன் முதல் அத்தியாயம் படித்து விட்டு கூகிள் பிளஸ் வழியே ஒரு சின்ன முன்னோட்ட விமர்சனம் செய்திருந்தேன். அதன் பின்னர் அந்த நூல் என் பார்வையில் இருந்து தப்பி விட்டது. 2013 ஆரம்பமான அந்த நேரத்தில் இணையத்திலும் எதும் அத்தனை சுவரஸ்யமாக இல்லாமையாலும் தொலைக்காட்சிகளில் கூட 2012 ம் வருடத்தை விரட்டி அடிக்கும் நோக்கில் வெறித்தனமாக ஆடிக்கொண்டு இருந்தனர். இதே கூட்டம் இதே அடுத்த வருடம் இதே நாளில் 2013க்கும் இப்படி செய்யும் என நினைத்துக்கொண்டேன். அயற்சியை போக்கும் விதத்தில் புத்தகங்கள் எதாவது இருக்கின்றதா என பார்க்கும் போது மீண்டும் ஸ்ரீ சக்ரபுரி என் பார்வைக்கு பட்டது. நான் எழுதிய விமர்சன முன்னோட்டத்தில் இருந்தே மீண்டும் ஆர்ம்பிக்கிறேன்.
மேரு ரகசியம்! இரு வருடம் முன்னே நான் ஒரு நண்பருடன் குடந்தை சென்றேன். குடந்தையில் ராமசாமி கோவில் அருகே சிற்ப கலைஞர்கள் சிற்பம் செய்யும் இடம். அங்கே ஒரு சிலை வங்கி அமரிக்கா எடுத்து செல்லும் விஷயமாக! அதற்கு ஏகப்பட்ட ஃபார்மாலிட்டிஸ் இருக்கும் என தெரிந்தும் சென்றோம். அப்போது அங்கே ஒரு வட்ட வடிவ அதாவது ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவுள்ள சதுரம், அதிலே தாமரைப்பூ போல எதுவோ.... கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து கூர்ப்பாக ... முப்பரிமானமாக கொஞ்சம் மண்ணில் புதைந்து, கொஞ்சம் மேலெழும்பி... "இது என்னது?" என கேட்டோம். அதற்கு அவர் "இது தான் மேரு" .
எங்களுக்கு புரியவில்லை எனினும் "இதை ஏன் இப்படி கீழே போட்டு வச்சிருக்கீங்க. இது என்னவோ பெரிய விஷயம் போலிருக்கே?" என கேட்ட போது அந்த ஆசாரியார் " இல்லீங்க, இது இங்க கீழே கிடக்கலை. அதன் இடம் இப்போதைக்கு இது தான். அது கும்பாபிஷேகம் ஆனதும் அதன் பவர் வேற, இதை ஆர்டர் செஞ்சவரு பெரிய மகான்" என சொல்லி அதன் கதையை விளக்கினார்.
எங்களுக்கு புரியவில்லை எனினும் புரிந்தது போல நடித்தோம். அல்லது லைட்டா புரிஞ்சுதுன்னு வச்சுகோங்களேன்.அது அந்த மேரு கதை அத்தோடு முடிஞ்சுது. ஆனா இன்னிக்கு ஸ்வாமி ஓம்கார் அவர்கள் சக்கரங்கள், தாமரைகள், பின்னர் திருவண்ணாமலை மேலே இருந்து பார்கும் கழுகு பார்வை (கூகிள் படம்) இவை எல்லாம் முதல் அத்தியாயத்தில் சொல்லும் போது அடடே என இருந்தது! படிக்க ரொம்ப ஆர்வம் தலைதூக்குது!
சிலருக்கு நான் மேலே சொன்ன விஷயங்கள் படித்து "அல்லு"விட்டிருக்கும். என்னடா இது விஷ்ணுபுரம் எஃபக்டிலே என்னவோ ஸ்ரீ சக்ரம் என்றெல்லாம் போகின்றதே என அயற்சி வந்தால் உடனடியாக அடுத்த அத்தியாயத்துக்கு வந்து விடுவது உத்தமம். அந்த இரண்டாவது அத்தியாயத்தில் கூட நாடிகள், சுவாசப்பயிற்சி, சூரிய கலை, சந்திர கலை அதன் வட மொழி பெயர்களான ஈடா நாடி, பிங்கள நாடி பின்னர் இரு நாடியும் சேர்ந்த ஸூக்ஷமணா நாடி இவை எல்லாம் விட்டு விடுங்கள். பின்னர் அந்த நாடி ஆசை உங்களை நாடி வரும் போது நீங்களே அதை நாடிச்சென்று படிப்பீர்கள். அனேகமாக இப்புத்தகத்தை படித்து முடித்த பின்னர் மீண்டும் அந்த நாடி விஷய கணக்குகளுக்காக படிப்பீர்கள்.
அவையெல்லாம் சொல்லித்தர இல்லை இந்த புத்தகம். ஒரு ஒரு வழிகாட்டி. திருவண்ணாமலைக்கு போக, அங்கே போன பின்னே எதை எதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை விட எப்படி அனுபவித்து பார்க்க வேண்டும் என சொல்லும் ஒரு கைடு. அத்தனையே. எத்தனையோ முறை தஞ்சை பெரிய கோவிலுக்கு போய் வந்தவராக இருப்பினும் பொன்னியின் செல்வன் மற்றும் உடையார் படித்த பின்னர் மீண்டும் அதை பார்க்க வேண்டும் என வருமே ஒரு உந்துதல் அது போல எத்தனை முறை திருவண்ணாமலை போய் வந்தவராயினும் மீண்டும் உங்களை திருவண்ணாமலைக்கு கொண்டு போய் சேர்க்கும் இந்த நூல்.
திருவண்ணாமலை பேருந்து நிலையம், பின்னர் ரமணா, விசிறி சாமியார் பெயர்கள் தாங்கிய ஓட்டல்களில் இட்லி, பூரி, பொங்கல் என ஒரு கட்டு, பின்ன "ஏம்ப்பா ஆட்டோ கிரிவலம் வர எத்தனை ஆகும்? 20 நிமிஷத்திலே வந்துட முடியுமா? கோவில் எத்தனை மணிக்கு நடை சாத்துவாங்க? ரமண ஆஸ்ரமம் வாசல்ல பாசி மணி கடை எல்லாம் இருக்குமா? என் பொண்ணு வரும் போது ஹேர் கிளிப் வாங்கியார சொன்னா, இங்க எந்த ஓட்டல்ல நல்ல மீல்ஸ் சீப்பான விலையிலே கிடைக்கும்? சாயந்திரம் ரயிலை பிடிக்கனும்னா இங்க இருந்து ஆட்டோல போலாமா? நடக்கும் தூரமா? எனக்கு ராத்திரி எந்த நேரமா இருந்தாலும் என் வீட்டிலே போய் கட்டையை சாய்ச்சா தான் நிம்மதி என இருப்போர்கள் திருவண்ணாமலை போய் வந்த இரண்டு நாளில் " பச் என்ன சார் திருவண்ணாமலை. ரசம்னு ஒன்னு ஊத்துறான் பாருங்க ஒரு பாடாவதி ஓட்டல், அதுக்கு அவன் விசம்னு பேர் வச்சி தொலைஞ்சிருக்கலாம், ஆனா ஒன்னு சார் திருவண்ணாமலை போனா நல்ல வைப்ரேஷன் இருக்கும்னு சொன்னாங்க. எல்லாம் சுத்த ஹம்பக் சார். நானும் தான் போய் வந்தேன். மன சஞ்சலம் எதும் குறைஞ்சபாடில்லை என்பவர்கள் எல்லாம் "பக்தி வியாபாரிகள்". அவர்களுக்கான புத்தகம் இது இல்லை.
ருசியான சாப்பாட்டை கூட அரக்க பரக்க விண்டு வாயில் போட்டு வயிற்றை அடைக்கும் கடமை வீரர்கள் பின்னர் அஜீரண மாத்திரையையும் 'எதற்கும் இருக்கட்டும்' என வாயில் போட்டு குதப்புபவர்களை விட கிடைத்தது பழைய சோறு என்றாலும் அதை ஒரு லாவகமாக அதன் வாசனையை நுகர்ந்து அனுபவித்து, கவளம் கவளமாக அமைதியாக சாப்பிட்டு இடையிடையில் நீராகாரத்தை குடித்து கடைசி பருக்கை வரை ருசிச்சு சாப்பிட்டு ஏப்பம் விடும்( ஏப்பமே ஜீரண உத்தரவாதம், ஜெலுசில் தேவையில்லை) ஏழைகள் தான் உசத்தி என்னைப்பொறுத்தவரை.
நூலாசிரியர் ஸ்வாமி ஓம்கார் அப்படி அந்த பசித்த ஏழையைப்போல அருணாச்சலம் என்னும் (பழைய)அமுதை நிதானமாக அள்ளி விழுங்குவது, விழுங்குவதை நமக்கு இந்த புத்தகத்தில் சொல்லி நம்மை திருவண்ணாமலைக்கு ஆற்றுப்படுத்துவது தான் இப்புத்தகம்.
தான் 9 வயது சிறுவனாக இருக்கும் போது யாரோ ஒரு யோகியால் கற்பனா உலகின் மூலமாகவோ அல்லது அவரது ஆன்மா மட்டுமே போனதோ தெரியவில்லை ... போகின்றார் திருவண்ணாமலைக்கு. அதன் பின்னர் நிஜமாகவே போகும் போது தான் ஒன்பது வயதில் பார்த்த அதே இடம்... அன்றிலிருந்து அடிக்கடி போய் வருவதை சொல்கின்றார்.
பரமஹம்ச யோகானந்தர் பற்றி இவரது ஆன்மீக நண்பர்களிடம் பேசும் போது பேச்சில் நண்பர்களுக்கிடையே ஒரு பந்தயம். பணமில்லாவிடினும் கூட மனமிருந்தால் திருவண்ணாமலை போகலாம் என இவர் சொல்ல நமக்கு திருநாளைப்போவர் - சிதம்பரம் எல்லாம் ஞாபகம் வருகின்றது. அப்படி ஒரு பரதேச பயணம் மேற்கொள்கின்றார். அவர் போய் வரும் அந்த பணமில்லா பயணத்தில் கோவை பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை போய் நம்மையும் சுற்றிக்காட்டி அந்த பேரானந்தத்தை அனுபவிக்க விட்டு, ஒரு வெள்ளைக்கார பிலிப் காரில் கொண்டு வந்து கோவையில் விட்டு விடுகின்றார். இது தான் புத்தகம்.
நடு நடுவே அயற்சியை கொடுக்காமல் ரமண ஆஸ்ரமம், விசிறி சாமியார், சாக்கு சாமியார், மிலிட்டரி சாமியார், வெள்ளை சாமியார் என நமக்கு காட்டிக்கொண்டே வருகின்றார். சாக்கு சாமியார் இவரது சைக்கிளில் உட்காந்து கொண்டு கிரிவலம் லௌகீகவாதிகளுக்கு வலப்புரம் ஆரம்பித்து பம்பரத்தில் சாட்டையை சுற்றுவது போலவும், ஆடி அடங்கிய ஆன்மீகவாதிகளுக்கு அந்த பம்பரத்துக்கு எதுக்கு வலப்புரம்... இடப்புரம் சுத்தினா கூட ஓக்கே தான் என போதிப்பது எல்லாம் சொல்கின்றார். கோவில் பற்றி சொல்லும் போது பாதாள லிங்க இடம், அங்கே ரமணர் 16 வயதில் தவம் இருந்தது ( தவம் வேறு, தியானம் வேறு என்பதை 'வா தம்பி 100 மீட்டர் மாரத்தான் ஓட்டம் போகலாம் என்ற உதாரணம் அருமை), சேஷாத்ரி சாமிகள், சிரிடி சாய்பாபா, குகை நமச்சிவயம், அவரது சீடர் குரு நமச்சிவாயம் என எல்லோரையும் நமக்கு அறிமுகம் செய்துவிடுகின்றார் நூலாசிரியர் ஸ்வாமி ஓம்கார் அவர்கள்.
பவள குகையின் மீது பாறை மீது வளர்பிறை ஏகாதேசி இரவில் துணி மூட்டையை தலையில் வைத்து படுத்து பேரானந்தம் அடைவது, பின்னர் சூரிய உதய நேரத்தில் ஐந்து நிர்வாண சாமியார்கள் இவரின் உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு சிரம் தாழ்த்தி செல்வது என சொல்லிக்கொண்டே வரும் போது நாம் சக்கரபுரியை அனுபவிக்கிறோம்!
அங்கே இருக்கும் போலி ஞானிகள், சின்ன சின்ன சித்து விளையாட்டு தெரிந்து வைத்து கொண்டு குண்டலினியை தட்டி விடுகிறேன் என மின்சார உணர்வு கொடுக்கும் ஏமாற்று வித்தைகாரர்கள், இவர் தன் வெளிநாட்டு மாணவியுடன் மலை உச்சிக்கு போன சம்பவம் பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தத்தில் கிரிவலம் வரும் போது இவரது பெயரை சொல்லி அழைத்து ஒரு சாமியார் சொல்லும் போது அந்த மாயைக்கு சிறிதும் மயங்காத தன்மை...டாலர் நோட்டுகள் ஆகம விதிகளை வாயடைக்க வைப்பது, இந்துக்கள் மட்டுமே வரலாம் என சொல்லும் போர்டுகளை வெறுப்பது என இந்த நூலாசிரியர் சகட்டு மேனிக்கு அடித்து ஆடுகின்றார்.
குகைநமச்சிவாயம் தன் சீடர் குருநமச்சிவாயத்திடம் அவரை சோதிக்க வேண்டி வாந்தி எடுத்து அதை யார் காலிலும் படாத இடத்தில் போடு என சொன்னதற்கு அவரது சீடர் குருநமச்சிவயம் செய்யும் விஷயம் எல்லாம் எத்தனையோ முறை திருவண்ணாமலைக்கு போய் வந்திருந்தாலும் தெரியாத விஷயம் எனக்கு . (அடடே குகைநமச்சிவாயம் வாந்தி எடுத்தா வாந்திதான் வருது. லிங்கம் எல்லாம் வரலை.. ஒரிஜினல் சாமியார் போலிருக்கு )
ஸ்ரீ மேருவே இந்த மலை, ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாணம் இது தான் என வெள்ளைக்கார பிலிப் அவர்களுக்கு ஸ்வாமி ஓம்கார் உணர்த்திக்கொண்டே திருவண்ணாமலையில் இருந்து காரில் கோவை வருவதுடன் முடிகின்றது. ஸ்வாமியின் சொல்படி சொன்னால் "முடியவில்லை, ஆரம்பம் ஆகின்றது".
ஆக மொத்தம் இப்புத்தகம் வாங்க (எனக்கு சும்மா கிடைச்சுது) ஆகும் "செலவு" என பார்த்தால் 100 ரூபாய். "வரவு" என பார்த்தால் "பரம சுகம்"!
ஓம் ஆனந்த நடராஜ மூர்த்தி! ஓம் நமோ பகவதே அருணாச்சலா!!
100 ரூபாய் கொடுத்து பரம சுகம் வாங்க வேண்டுமா?
புத்தகத்தின் பெயர் : ஸ்ரீ சக்ரபுரி
ஆசிரியர்: ஸ்வாமி ஓம்கார்
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
விலாசம்: 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின் கோடு# 603 306
விலை : 100 ரூ
Labels:
அகநாழிகை,
அருணாச்சலம்,
நூல்விமர்சனம்,
ஸ்ரீ சக்ரபுரி,
ஸ்வாமி ஓம்கார்
Subscribe to:
Posts (Atom)