பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 5, 2013

என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்!!!


நேற்று மாலை கடைத்தெருவுக்கு போய்விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது எங்கள் தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளி வாசலில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கே.ராஜேந்திரன் சாரும், கூடவே குலசேகரன் சாரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் நானும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவர்களோடு பேச்சில் நுழைந்து கொண்டேன். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுமார் 65 வயதுடைய  அம்மையார் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் பள்ளி அருகே வரும் போது தன் செருப்பை கழட்டி விட்டு பள்ளியை நோக்கி ஆத்மார்த்தமாக கும்பிட நான் "சார் அங்க பாருங்க. நம்ம ஸ்கூலை கும்பிட்டு கிட்டு இருக்காங்க. அவங்களை பார்த்தா நம்ம ஸ்கூல் கஸ்தூரி டீச்சருக்கு வயசான மாதிரியே இருக்குல்ல சார்" என்றேன். அதைப்பார்த்த கே ஆர் சார் "அடப்பாவி, அவங்க நம்ம கஸ்தூரி டீச்சரே தான், கூப்பிடு கூப்பிடு அவங்கலை" என சொன்னதும் நான் ஓடிப்போய் கூப்பிட்டேன்.

என்னைப்பொருத்த வரை கஸ்தூரி டீச்சர் என்பவர் முகத்தில் மனோரமா மாதிரி ஒரு கருப்பு பருவுடன், கையில் பிரம்புடன், கருத்த தலை முடியுடன், கண்டிப்பான முகத்துடன் இருக்கும் பி.ஈ.டி டீச்சர். மாணவிகளுக்கான ரிங் பால், கோகோ எல்லாம் சொல்லிகொடுக்கும் டீச்சர். என் மனதில் அது மட்டுமே பதிந்து இருந்தது. இப்போது இத்தனை வயதானவங்கலா அவங்களை நினைத்து பார்க்க கூட இல்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுது!

நான் அழைத்ததும் கிட்டே வந்தாங்க. அங்கே கே ஆர் சாரையும் பார்த்ததில் அவங்களுக்கு இன்னும் மகிழ்வு. சென்னையில் பொண்ணு வீட்டில் செட்டில் ஆகிட்டாங்க. அவங்க கணவர் (அவரும் ஆசிரியர் தான் ..ஆனால் முனிசிபல் பள்ளியில்) 3 வருடங்கள் முன்பாக இறந்து விட்டார்கள் என்பதால் சென்னையில் தன் மகளுடன் போய் தங்கிவிட்டாங்க கஸ்தூரி டீச்சர்.
கே ஆர் சாரும் நானும் அவங்க கிட்ட ஷேமலாபங்கள் எல்லாம் விசாரித்து பின்னர் "எங்க டீச்சர் நடந்து போறீங்க" என கேட்க "வடக்கு மடவிளாகத்திலே ராமூர்த்தி சார் வீட்டுக்கு போறேன். வருஷம் ஒரு தபா ட்ரஷரிக்கு வந்து எங்கள் 'இருப்பை' உறுதி செஞ்சா தானே பென்ஷன் வரும். அதனால வந்தேன். ஆனந்த வல்லி டீச்சரும் இன்னிக்கு வந்திருக்காங்க. அவங்களும் நானும் இன்னிக்கு ராமூர்த்தி சார் வீட்டிலே தங்கிட்டு நாளை ட்ரஷரி போய்விட்டு சென்னைக்கு போகனும்" என்றார்கள். தனக்கு அரை மணி முன்பாக ஆனந்த வல்லி டீச்சர் மாயவரம் வந்து விட்டதாகவும், அனேகமா ராமூர்த்தி சார் வீட்டுக்கு நடந்து போய் கொண்டு இருக்கலாம் எனவும் சொன்னாங்க.

இங்கே ஆனந்த வல்லி டீச்சர் பத்தி சொல்லனும். அந்த காலத்து "அன்பேவா" சரோஜாதேவி மாதிரி இருப்பாங்க. சின்னதா கோஸ் மூக்குத்தி, பன் கொண்டை, பட்டுப்புடவை நீண்ட கை வைத்த புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட், அதே சரோஜாதேவி பாணியிலே "ஷெர்ஷா ஆப்கானிஸ்தால ஆரம்பிச்சு ஆண்டிப்பட்டி வரை ரோடு போட்டான் தெரியுமோ" என சொல்லி அந்த கதையை சொல்லும் போது நமக்கே காலில் தார் ஒட்டின மாதிரி ஒரு ஃபீலிங் வரும். வரலாற்று பாடத்தின் உள்ளே அழைத்து போய்விடுவார்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டும் பள்ளி வாசலுக்கே  வந்து, பின்னர் நான் கஸ்தூரி டீச்சரிடம் "வாங்க டீச்சர் என் வண்டில போகலாம், நானும் சார் வீட்டு வழியாத்தான் போறேன்" என சொல்லி டீச்சரை அழைத்து கொண்டு கே ஆர் சாரிடம் விடைபெற்று வந்தோம்.

வண்டியில் வரும் போது "கொழந்தே எப்படி இருக்காய்?" என் கேட்டாங்க மீண்டும். ஒரு 45 வயசு தடிமாட்டை கொழந்தே என கூப்பிடும் நபர்கள் அம்மா அப்பா வாக இருக்கலாம். அல்லது ஆசிரியர்கள் மட்டுமே. என்ன ஒரு கொடுப்பினை! "சார் தவறின பின்னே நேக்கு மாயவரம் அத்தனை பிடித்தமா இல்லை. அதான் பொண்ணு ஆத்துல போய் ஐக்கியமாகிட்டேன். அங்க போனா மாயவரம் ரங்கநாதரும், அவயாம்பாவும் 'இங்க வா இங்க வா"ன்னு கூப்பிடுற மாரியே இருக்கு. என்னால சதர்ன் ரயில்வேகாரன் தான் செழிக்கறான்" என பேசிக்கொண்டே வந்தார்கள்.

ராமூர்த்தி சார் வீட்டுக்கு சற்று முன்னரே ஆனந்தவல்லி டீச்சர் நடந்து போய்க்கொண்டு இருந்ததை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினேன். நான் அவங்களை பார்த்து எத்தனை வருடம் இருக்கும் என கணக்கு மனதில் ஓடியது. என் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு வரலாறு புவியியல் தேர்வு எழுதிவிட்டு வெளியே முதல் ஆளாக வந்த என்னை ஓடிவந்து "கொஸ்டின் பேப்பரை கொடுடா, ஏன் முன்னக்கவே வந்துட்ட, ரொம்ப கஷ்டமோ, நல்லா எழுதினாயோ, எத்தினி வரும், பாலிடெக்னிக் கிடைச்சுடுமோ" என ஏகப்பட்ட கேள்விகளோடு பார்த்தது தான் கடைசியாக அவர்களை பார்த்தது. அந்த சம்பவம் நடந்தது 1980. அதவது 33 வருடம் முன்பாக!

டீச்சர் இப்போதும் அதே மாதிரி ஆனாக்க  வயசானவங்கலா இருந்தாங்க. என்னை பார்த்ததும் "அடடே கஸ்தூரி... படீர்ன்னு நான் தொல்காப்பியனின் அப்பா தான் உன்னை அழைச்சிண்டு வராரோன்னு நினைச்சுட்டேன். நான் பார்த்த இக்கினூண்டு வாண்டு  இப்ப இத்தன வளர்த்தி. என்னடா கொழந்த காதோரம் எல்லாம் நரை விழுந்துடுச்சு. ஆகா என்னா குறும்பு அப்போ. இப்போவும் அப்படித்தானா? ஆம்படையாள் உன் குறும்பை எல்லாம் சகிச்சுக்கறாளா? ஆமா கல்யாணம் ஆகிடுத்தோல்யோ? குழந்தைகள் எத்தனை? என்ன பண்றா அவா? ....ஆனந்த வல்லி டீச்சரின் குணமே அதான். அவங்க தான் தொடர்ந்து கேள்வி கேட்பாங்க.. நம்ம பதிலை எப்போதும் எதிர்பார்ப்பதே இல்லை. "நேரு மாமா ஒரு அஞ்சு கொள்கை கொண்டு வந்தாரே அது பேர் என்னான்னு சொல்லுங்கோ... தொல்காப்பியா நீ சொல்லு...(நான் எழுந்திருக்கும் போதே ..பதில் சொல்ல அல்ல...தெரியாதுன்னு சொல்ல) அதாவது அதுக்கு பஞ்சசீல கொள்கைன்னு பேர். இத நீங்க எப்படி ஈசியா மனசிலே வச்சுப்பேள்??? நம்ம க்ளஸ் பதஞ்சலி தியாகராஜன் இருக்கானோனோ அவன் பேரை ஓர்ம வச்சுண்டா போறும்... பஞ்சசீலக்கொள்கை மனசிலே வந்துடும். இது முக்கிய கொஸ்டின், எழுதி வச்சுகோங்கோ வர்லைன்னா "ஏண்டி ஆனந்த வல்லி வர்லைன்னு முச்சந்தில வச்சு கேளுங்கோ என்னை, ஒக்காருடா கொழந்தே... அடுத்த கேள்வி ஆஸ்ட்ரியா நாடு இருக்கோல்யோ அது செர்பியா மேல போர் தொடுத்தா...தொடுக்கலை அதுக்கும் முன்ன போர்பிரகடனம் செஞ்சா, அது எந்த வருஷம் நடந்துச்சு, அதுக்கு பதில் நீ சொல்லுடா கொழந்தே என ராதாவை எழுப்பி நிக்க வச்சுட்டு டீச்சரே "அது ஜுன் 28  ம் தேதி 1914ம் ஆண்டு நடந்துச்சு. இதை எப்படி ஞாபகம் வச்சுப்பேள்??? அதாவது நம்ம க்ளஸ்ல எல்லாரும் என்ன டேட் ஆஃப் பர்த்... ஜூன் 27 தானே. அதுக்கும் அடுத்த நாள் தான் இது நடந்துச்சு. ராமன் எத்தனை வருஷம் காட்டுக்கு போனான் 14 வருஷம்... அதையும் இதையும் முடிச்சு போட்டுகோங்கோ, உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க கொழந்தேல்லாம் பப்ளிக் எழுதும் காலம் வரைக்கும் மறக்காது கேட்டேளா" . இதான் ஆனந்தவல்லி டீச்சர். அவங்க மட்டுமே கேள்வி கேட்பாங்க. பதிலும் அவங்களே சொல்லிடுவாங்க.

நான் டீச்சரிடம் "ஆமா டீச்சர், வயசாயிடுச்சுல்ல... நான் கடைசியா உங்களை என் வரலாறு புவியியல் பப்ளிக் எக்சாம் அன்னிக்கு பார்த்தது தான். இப்போ என் பொண்ணுக்கு அதே பப்ளிக் எக்சாம் நடக்குது. ஆனந்தவல்லி டீச்சர்  உடனே  "ஓ மை காட்! ஒன் பொண்ணு டென்த்தா? இங்லீஷ் மீடியம் தானே. அப்படின்னா ஒரு கேள்வி... ரொம்ப முக்கியம். வர்லைன்னா ஏண்டி வர்லை ஆனந்தவல்லின்னு என்னை முச்சந்தில வச்சு கேளு" என சொன்னாங்க.  டீச்சர் கொஞ்சம்  மாறலை. இந்த கேள்வி வந்துச்சா வரலையான்னு என் பொண்ணை முதலில் கேட்கவே பயமாய் இருக்கும் எனக்கு. ஒரு வேளை அது வரலைன்னா நான் ஆனந்த வல்லி டீச்சரை எங்க தேடிகிட்டு போய் பின்ன முச்சந்தி தேடி அழைச்சுட்டு வந்து நிக்க வச்சு கேட்கனும்.. இதல்லாம் நடக்கும் காரியமா?
அடுத்து டீச்சர் "during the great revolt of 1857 the governor general of india was ... " என கேட்டுவிட்டு என்னைப்பார்த்து "who??? சொல்லு நீனு " என சொல்ல நான் "டீச்சர் இது ஹிஸ்ட்ரியா, ஜியாகரபியா?" என்றேன்....அதுக்கு டீச்சர் "ஓ மை மாயூரநாதா, ஒனக்கு பேசிக்ல இருந்து ஆரம்பிக்கனும் போலிருக்கே... ஓக்கே நான் ஒன் பொண்ணு கிட்டே இந்த கேள்வியை சொன்னேன், முக்கிய கொஸ்டின்னு சொன்னேன்னு சொல்லு என சொல்ல நான் அதற்கு "டீச்சர், அப்படியே அந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிடுங்க டீச்சர்" என்றேன். உடனே டீச்சர் " lord canning" ன்னு சொன்னாங்க. நான் உடனே "அதில்லை டீச்சர். வரலாறு புவியியல் எல்லாம் பெயர் மாறி சோசியல் சயின்ஸ்னு ஆகிப்போச்சு... அதான் எனக்கு டக்குன்னு பதில் தெரியலை.எல்லாம் மாறிப்போச்சுல்ல " என வழிந்தேன் வழக்கம் போல!

உடனே டீச்சர் "ஆ மா எல்லாம் மாறிப்போச்சுது. எல்லாருக்கும் வயசாகிப்போச்சுது. இராமபத்ரன் சாரை அரங்கன் கூட்டிண்டான், எம் கே சார் போயாச்சு, இத்தோ ஒரு வாரம் முன்ன எல் கே கணேசன் சார் போயாச்சு, ஒரே குடும்பமா ஒரே பள்ளிக்கூடத்திலே எத்தினி வருஷம் எத்தினி வருஷம் இருந்தோம்... அந்த காலம் வருமா? எங்க கிட்டே படிச்ச குழந்தைகளை எப்பவாவது நல்ல நிலையிலே பார்க்கும் போது ... வாங்கின காசுக்கு நல்லா வளர்த்தோமடா மயூரநாதான்னு கன்னத்திலே போட்டுக்க தோணும். நல்லா இருக்கனும் கொழந்தேகளா நீங்கல்லாம்" என சொல்லி தன் முந்தானையால் கண்ணை துடைக்க நான் நிலமையின் இறுக்கம் தவிர்க்க "டீச்சர் நான் முன்ன சொல்லுவனே உங்களை சரோஜாதேவி மாதிரின்னு இப்பவும் நீங்க சரோஜாதேவி மாதிரி தான் இருக்கீங்க. ஆனா என்னா ஒன்னு ஆதவன் படத்திலே வரும் சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க" என சொல்ல அந்த இடமே நடுரோடு என்று கூட பார்க்காம சிரித்தோம் மூவரும்.

அடடே! இந்த சிரிப்பு, ஆனந்தம் என் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

24 comments:

  1. செம‌ ரைட்‍ அப்... அருமையா எழுதியிருக்கீங்க‌ அபி அப்பா..

    ReplyDelete
  2. எல்லாம் கொடுப்பினை! யாருக்குக் கிடைக்கும் நம் ஆசிரியர்களை மீண்டும் பார்க்க, இவ்வளவு கால இடைவெளியில்? சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், ஆதவன் சரோஜாதேவி வரை.

    ReplyDelete
    Replies
    1. டீச்சர்களை மறப்பது அத்தனை சுலபமில்லை கேட்டோ:-))))

      ஓர்மை இருந்தாச் சரி!

      Delete
  3. "டீச்சர் நான் முன்ன சொல்லுவனே உங்களை சரோஜாதேவி மாதிரின்னு இப்பவும் நீங்க சரோஜாதேவி மாதிரி தான் இருக்கீங்க. ஆனா என்னா ஒன்னு ஆதவன் படத்திலே வரும் சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க" என சொல்ல அந்த இடமே நடுரோடு என்று கூட பார்க்காம சிரித்தோம் மூவரும்.

    அடடே! இந்த சிரிப்பு, ஆனந்தம் என் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்தேன்.


    அற்புதம் தொல்காப்பியம் அண்ணா,
    அந்த நகைச்சுவை நேரத்தை நானும்
    உள்ளப்பூர்வமாய் ரசித்து சிரித்தேன்.

    உங்களின் மனதை இதன் வழியே காண்கிறேன்.

    நல்லா இருங்க

    அன்புடன்.
    அ.மு.அன்வர் சதாத்

    ReplyDelete
  4. கட்சியை கட்டிண்டு மாரடிக்கவில்லை என்றால் நீர் பெரிய எழுத்தாளன் ஆகி இருப்பீர்.

    கலக்கல்.

    எ.அ.
    கோவி

    ReplyDelete
  5. மனதை நெகிழ வைக்கும் சந்திப்பு. இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.

    அவர்களைச் சிரிக்க வைத்த உங்கள் வாழ்வும் செழிக்கட்டும் அபி அப்பா.

    ReplyDelete
  6. வழக்கம் போல் அபிஅப்பா ராக்ஸ். வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  7. இரண்டு வலைப்பூ வைத்துக் கொள்ளுங்கள். என்னைப் போன்ற உங்க ரசிகர்களுக்காக அபிஅப்பா ப்ளாக்கில் நகைச்சுவை, அனுபவ கட்டுரைகளை எழுதுங்கள், திமுகவுக்காக தனியாக தொல்காப்பியன் என்ற வலைப்பூவை தொடங்கி பயன்படுத்துங்கள். இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக முடிவதனால் தான் பிரச்சனையே. நான் இன்னும் எதிர்பார்க்கிறேன் அண்ணே.

    ReplyDelete
  8. அருமையான பதிவு , படித்து அசை போட ( போட்ட ) ஒரு நல்ல பதிவு ..என்ன கண்ணீருடன் அசை போட்டேன் .!!!!

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவுக்கு வந்திருந்து கருத்துகளிட்ட வெண்பூ, ராஜ சுந்த்ர்ராஜன் சார், துளசி டீச்சர்,அன்வர்சதாத், கோவி.கண்ணன், வல்லிம்மா, ஆரூர் மூனா செந்தில், அதுஒரு கனாக்காலம், ரத்னவேல் நடராஜன் சார் ஆகியோருக்கு என் நன்றிகள்.
      @ கோவியார் நீண்ட நாளுக்கு பின்னர் என் இந்த பதிவுக்கு வந்திருப்பது மிக்க மகிழ்வு. எனக்கும் கோவியாருக்கும் கட்சி, கொள்கை ரீதியிலான சிற்சில பிரச்சனைகள் உண்டெனினும் தனிப்பட்ட மனமாச்சரியங்கள் ஏதும் இல்லை என இந்த பதிவுக்கு மனப்புர்வமாக வந்ததன் மூலம் கோவியாரும் உறுதி செய்துள்ளார். அதை வரவேற்று சிலாகிப்பதால் நானும் அதை உறுதி செய்கின்றேன் என்பதை இடையே குளிர்காய்பவர்கள் உணரட்டும். மிக்க நன்றி கோவியாரே!

      @ ஆரூர் மூனா செந்தில், விரைவில் உங்கள் யோசனையை செயல்படுத்த முனைகிறேன்!

      Delete
  10. ஜாலிக்கு ஒன்னு ஜோலிக்கு ஒன்னா...? சரி சரி நடத்துங்க அண்ணே.

    ReplyDelete
  11. தொல்ஸ் பேசாமெ இனி இது போலவே எழுதி வாரும் அய்யா. அரசியலுக்கு தனியா ஒன்று வைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  12. ஒற்றை அம்பை தொட்டுப்பார்க்க கூட தகுதி இல்லாமல் தூரத்தில் நின்று பீஷ்மரை வேடிக்கை பார்க்கும் வக்கற்ற சிப்பாயாக நான்....

    க்ரேட் ரைட்டிங் சாரே. 1,000 Flying Kisses!!

    ReplyDelete
  13. பிரமாதம்ண்ணே...

    நீங்க எழுதும் அரசியல் பதிவுகளையும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ரசித்துப்படிப்பவன் நான். எனவே எப்போதும் போலவே ஒரு ரசிகனாய் பாராட்டுக்கள் அண்ணே...

    ReplyDelete
  14. செம ரைட்டப் அண்ணே.. அருமையான எழுத்து.

    ReplyDelete
  15. கண்களை கலங்க வச்சிடீங்க.. ஒரு ஆசிரியரா நான் பெருமைபடறேன்..

    ReplyDelete
  16. அருமை... ரசித்தேன்...

    சிவா அவர்களுக்கு நன்றி... (http://www.madrasbhavan.com/2013/04/9413.html)

    ReplyDelete
  17. அருமை..
    அன்பரசு செல்வராஜ்

    ReplyDelete
  18. Good post! We will be linking to this great content on our
    website. Keep up the good writing.

    Check out my web page; panic attack symptoms (en.wikipedia.org)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))