பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 24, 2013

இயக்குனர் மணிவண்ணன் நிஜமான போராளி என்றால்....


நல்ல இயக்குனர், நல்ல பெரியாரியவாதி, நல்ல தமிழ் உணர்வாளர்  திரு. மணிவண்ணன் இறந்து போனது வருத்தமே. அவர் இறந்த பின்னர் என் மனம் அமைதி இழந்தது, மனம் கனத்து போனது, இதயம் அழுதது எல்லாம் உண்மையே.


ஆனால் அதற்கு அடுத்து அடுத்து நடந்த சம்பவங்கள் தான் கொடுமையே! பாரதிராஜா என்னும் தன் குரு திட்டியதால் தன் மணிவண்ணன் மன உளைச்சல் காரணமாக இறந்தார் என நாம் தமிழர் என்னும் டம்ளர் பாய்ஸ் சொல்வது சிரிப்பை உண்டாக்குது.


ஒரு மன உளைச்சலால் சாகக்கூடிய பூஞ்சை மனசு மணிவண்ணனிடம் இருந்தால் பாரதிராஜா இவர் அவரிடம் மாணவராக இருக்கும் போது திட்டிய போதே (திட்டுவாராம்) செத்து போயிருக்கனும். சரி அப்போ அவர் மனதும் உடலும் திடம் என வைத்து கொண்டாலும் கூட உச்சகட்டமாக பிரபாகரனை தன் மானசீக மாவீரன் என மனதளவில் கொண்டாடிய மாவீரன் மரித்த போதே மன உளைச்சள் காரணமாக இறந்து போயிருக்க கூடும்.


அப்படி என்ன மணிவண்ணன் இலவம் பஞ்சின் மனது கொண்டவரா எனில் அதும் இல்லை. அவர் மேடைகளில் தன் எதிரிகளை வசை பாடியது இல்லியா? கழுவி கழுவி ஊத்தினது இல்லியா? அது என்ன வசைபாடும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு, மற்றவர்களுக்கு அது கிடையாது என்னும் மனோபாவம் அவருக்கு என நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. மணிவண்ணனுக்கு தெரியும். நாம் மேடையில் யாரையாவது வசைபாடினால் தனக்கும் அது போல திரும்பி வரும் என தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை அவர். அதை எல்லாம் தெரிந்து தான் மேடை ஏறியிருப்பார். அதனால் பாரதிராஜா இவரை  திட்டினார், அதனால் இவர் செத்தார் என டம்ளர் பாய்ஸ் கூறுவதை ஒரு சிரிப்புடன் தான் நாம் கடந்து போக வேண்டும்.

இதே பாரதிராஜா நெய்வேலி போராட்டத்தின் போது "ஊ ஆர் யூ" என கலைஞரை வினவியதையும் எல்லோரும் அறிவோம். அப்போது இதோ இன்று "அம்மா" புகழும் பாடிக்கொண்டு, சன் டிவியில் கூட தொடர்பில் இருக்கும் மிஸ்டர் ராதிகா சரத்குமார் எல்லாம் அப்போது இதே பாரதிராஜாவை என்ன என்ன பேசினாங்க என கூட எல்லருக்கும் தெரியும். அதே ராதிகா குரூப்  இப்போது கலைஞருக்கு எதிரிகள். ஆனால் பாரதிராஜா இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் இயக்குனர். இது தான் நிதர்சனம். உணர்சிவசப்படுதலால் நிரம்பி வழிவது தான் சினிமா உலகம். இந்த நாடியை கலைஞர் நன்கு உணர்ந்தவர். ஆனால் 400 படங்களில் நடித்தும், 50 படங்கள் இயக்கியும் இருந்த மணிவண்ணனுக்கு இதல்லாம் தெரியாது என நினைப்பது டம்ளர் பாய்ஸ்ன் முட்டாள்தனம்.

எம் ஜி ஆர் இறந்த அன்று கலையில் வந்த முரசொலியில் எம் ஜி ஆரை கிண்டலடித்து கார்டூன் வந்தது, செய்தி வந்தது என சொல்லும் முட்டாள்கள் இருக்கும் நாடு தான் இது. எம் ஜி ஆர் இறந்தது விடிகால 4 மணிக்கு. தினசரிகள் அச்சேறும் நேரம் இரவு 10 மணிக்கு. எம் ஜி ஆர் விடிகாலை இறந்து போவார் என அச்சேற்றும் கடைநிலை ஊழியருக்கு அங்கே தெரிந்தால் கூட அதை அச்சேற்ற மாட்டார்கள். அதே நிலை தான் இப்போதும். ஆனந்த விகடன் குழுமத்துக்கு மணிவண்ணன் இறந்து போவார் என தெரிந்து இருந்தால் பாரதிராஜாவின் பேட்டியை வெளியிட்டு இருப்பார்களா என சிந்தித்து பார்க்கும் அளவு புத்தியும் இல்லை, நேரமும் இல்லை போலிருக்கு.

பாரதிராஜா இப்படித்தான் பேசுவார் என நான் சப்பைக்கட்டு கட்டவில்லை. அவர் பேசிய பேச்சுகள் தவறாகவே இருக்கட்டும். அதனால் "கொலைப்பழி" அளவுக்கு எல்லாம் பாரதிராஜா ஒர்த் இல்லை. பின் ஏன் பாரதிராஜா அந்த சாவு வீட்டுக்கு வரவில்லை என கேட்கும் நபர்களே, எளிதில் உணர்சி வசப்படும் ஒரு கூட்டம் அங்கே புலிக்கொடி போர்த்த சொன்னால் கூட டம்ளர் கொடி போர்த்தி வைத்திருக்கும் ஒரு கூட்டத்தில் அங்கே பாரதிராஜா உள்ளே வருவது, கலைஞரை நடு இரவில் கைது செய்து கொடுமை செய்த கூட்டத்தினை சேர்ந்த  151 பேர் நடுவே சட்டமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் போவது எப்படி  "தற்கொலை"க்கு சமமோ அதைப்போல  தான் என்பதை உணருங்கள்.


சாகும் முன்னர்  சில நாட்கள் முன்பாக கூட கலைஞரை இதே மணிவண்ணன் எதேற்சையாக சந்தித்த போது ...

"என்ன மணி எப்படி இருக்கே?" - இது கலைஞர்!

"அண்ணே, முதுகு பிரச்சனை இருக்குண்ணே, ஆபரேஷன் நடந்து இருக்கு. நடக்க கூட முடியவில்லைண்ணே"

"ஆக நீயும் என்னைப்போலத்தான். எனக்கும் அந்த பிரச்சனை தானே"

"ஆமாம் அண்ணே, ஆனா ஒன்னு உங்க கிட்டே பேங் பேலன்ஸ் இருக்கு. என் கிட்டே அது இல்லை அண்ணே"

உடனே கலைஞர் சிரித்து கொண்டே... "இவரு நம்மாளுய்யா" என பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்கிறார்.


உடனே திமுகவின் நண்பர்கள் கோவித்து கொள்கின்றனர். யார் மீது? கலைஞர் மீது! "கலைஞர் இந்த சினிமாகாரனுக்கு ஏன் இத்தனை கரிசனம் காட்டுறார். இதே இந்தம்மா ஜெயா இப்படி செய்யுமா? கிட்டத்திலே நின்னு பேச அனுமதிக்குமா. கலைஞர் ஜெயா போல நடந்துக்கனும். கலைஞர் இன்னும் கத்துக்க வேண்டும்" என தனக்கு தெரிந்த "அறிவுரை"களை அள்ளி வீசுகின்றனர்.


அப்படி சொல்பவர்களை நான் பார்த்து ஒரே கேள்வி கேட்கிறேன். இதே ஜெயாவைப்பார்த்து "கலைஞர் மாதிரி நடந்து கொள்ளுங்கள்" என சொல்ல தைரியம் இருக்குதா உங்களிடம். ஏன்னா கலைஞர் என்றல் இலவசமா இழுத்து வைத்து இஸ்திரி போடலாம் என்னும் நினைப்பு தானே உங்களுக்கு? அந்த நினைப்பு திமுக உறுப்பினர்களுக்கே இருக்கும் போது எதிர் முகாமில் இருக்கும் மணிவண்ணனுக்கு இருக்காதா?



நான் இதை எதற்கு இங்கே சொல்கிறேன் எனில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவரிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்கிற சாதாரண அடிமட்ட அறிவு கூட இல்லாத மணிவண்ணன், இதே பாரதிராஜா இப்படி தன் சீடனை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் எனில் எந்த அளவு இந்த மறைந்த மணிவண்ணன் அவரை பேசியிருப்பார் என நினைத்துப்பாருங்கள் தோழர்களே!



ஒருவர் திட்டியதுக்கே செத்து போகிறார் ஒருவர் எனில் அவரை போராளி என்றோ அவருக்கு அஞ்சலி செலுத்த "வீர வணக்கம்" என வாசகங்கள் அச்சடிப்பதோ மகா அசிங்கம். மீண்டும் மீண்டும் பாரதிராஜா திட்டியதால் மணிவண்ணன் இறந்தார் என சொல்லி அந்த நிஜமான போராளியை அசிங்கம் செய்யப்போகின்றீர்களா டம்ளர் பாய்ஸ்???


மனதார சொல்கிறேன் ... மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்! அவரை "போராளி"யாகவே இருக்கவிடுங்கள் அட்லீஸ்ட் இறந்த  பின்னராவது! அவர் சாவில் அரசியல் செய்யாதீர்கள்!

June 20, 2013

புலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்!


புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் அறியாதவர்கள் அனேகமாக அமேரிக்காவில் +2 கோட்டடிச்சுட்டு அண்ணா யுனிவர்சிட்டில இருக்கும் முப்பாத்தம்மன் என்ஜினியரிங் காலேஜ்ல எதுனா என் ஆர் ஐ காசிலே சீட்டு கேட்டு வந்தவங்கலா இருக்கலாம். மத்தவங்களுக்கு அது அத்தனை ஒரு பிரபல்யம். அது சென்னை ஆபீஸ் என்றாலும் "மயில் மார்க் நிலையம் - மாயவரம்" என்றால் தான் அந்த "பாயும் புலி"க்கே ஒரு திருப்தி வரும். அத்தனை பேமஸ்.


"பிலாஸ்டிக் ஒழிக" என்னும் கோஷம் எல்லாம் அப்போது இல்லை. ஏனனில் பிலாஸ்டிக் அத்தனை இலகு இல்லை. எல்லாம் காகித பொட்டலம் தான். அதிலும் இந்த புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் இருக்குதே.. தன் பாக்கெட் அபாரம். கிட்ட தட்ட இப்போ இருக்கும் "
இன்லேண்ட்" கவரின் பார்முலா தான் அந்த பொட்டலம்.



அந்த கம்பனி மாயவரத்தின் அவுட்டர் அப்போது. இப்போது மயிலாடுதுறையின் மத்தியபிரதேசம் அது. ஆனால் அந்த கம்பனி தான் அங்கு இல்லை. அதை விடுங்க. மாயூரம் கலக்டர் வீடு இருக்கு தெரியுமா கலக்டர் வீடு! அதன் பக்கம் தான் இந்த மயில் மார்க் நிலையம். கலக்டர் தான் மாயூரத்துக்கு இல்லை எப்போதும் எனினும் கலக்டர் பங்களா உண்டு. ஒரு காலத்தில் "மயிலாடுதுறை முனுசிபாலிட்டி" அதாவது ஆங்கிலத்தில் சொல்லப்போனா "மாயவரம் நகராட்சி" என்பது இப்போது புதிது புதிதாக மாநகரட்சியா ஆக்கப்பட்டதே சிலதுகள்... அதை எல்லாம் விட பழமை வாய்ந்தது. எல்லாம் ஆங்கிலேயர் கட்டிடம். அதை நிர்வகிக்க அப்போ கலக்டர் தேவைப்பட்டது. அந்த கலக்டர் தங்க உங்க ஒரு இடம்.. அதுவே கலக்டர் பங்களா. கொத்த தெரு முடிவில் இருக்கும். அதிலே ஒரு கலக்டர் அப்போ அக்ரி படிச்சுட்டு அப்போ லண்டன்ல டி என் பி எஸ் சி பாஸ் பண்ணியிருப்பார் போலிருக்கு. வந்தாரு. ஒரு தென்னங்கன்னு வச்சாரு. அது அஞ்சு கிளை விட்டது. "தென்னை மரத்துக்கு கிளை இல்லை" என நாங்க ஒன்னாப்பு படிக்கும் போது மெதுவா டீச்சர் சொல்லுவாங்க "இதல்லாம் பாடத்துக்கு மட்டும் தான். நாம மாயவரம்... தென்னை மரத்துக்கு கூட கிளை உண்டு"ன்னு. பள்ளியில் டூர் கூட்டிட்டு போவது போல அழைத்து போய் அந்த மரத்தை காண்பிப்பாங்க.

அதல்லாம் இப்ப வேண்டாம். அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் இருக்கு நம்ம "மயில் மார்க் நிலையம்". அடர்ந்த தென்னை தோப்பு. அதனிடையில் ஒரு காட்டு பங்களா. சிகைக்காய் அரைக்கும் மிஷின் எல்லாம் அதில் உள்ளே இருக்குதாம்.பர்த்தது இல்லை. அத்தனை அடர்த்தி அந்த இடம்.  அரைச்சா வாசனை பிச்சிகிட்டு போகும் மெயின் ரோடு முழுக்க. அத்தனை ஒரு வாசம்.

அந்த அரைத்த மாவை அதாவது சீயக்காய் பவுடரை எதில் அடைக்கனும்? பொட்டலம் போடனும். அது தான் அந்த "இண்லேண்ட் லெட்டர் கவர் " மாதிரியான கவர். அதிலே பாயும் புலி படம் மற்றும் விலாசம் எல்லாம் அச்சடித்து இருக்கும். அது 2500 பேப்பர் ஒரு கட்டா இருக்கும். அதை அந்த சுத்து வட்டார மக்கள் எல்லாம் காலை ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்னு ஆளுக்கு ஒரு கட்டு வாங்கனும். கூடவே ஒரு கட்டுக்கான புளியங்கொட்டை பசை ஒரு தாளில் ஒரு கத்தியால் வழித்து தருவாங்க. பச்சை கலரில் இருக்கும். அந்த 2500 பீஸ் இருக்கும் கட்டை தூக்கி வந்து அவங்க சொல்லும் பாணியில் பசை தடவி வாயை மட்டும் விட்டு விட்டு ஒட்டி, உலர்த்தி அதை 50, 50 எண்ணிக்கையில் கட்டி அவங்க கிட்ட எடுத்து கிட்டு போனா கையில் ஒன்னேகால் ரூபாய் கொடுத்து விட்டு அடுத்த கட்டு கொடுப்பங்க.

அந்த ஒன்னேகால் ரூபாயில் அப்போது ஒரு படி அரிசி வாங்கிடலாம். நல்ல பொன்னி அரிசி. சில குடும்பங்கள் இரண்டு கட்டு வாங்கி போய் ஒட்டும். சில குடும்பங்கள் இதை நம்பியே பிழைப்பும் நடத்தும். அவங்க நாலு கட்டு வாங்கி போய் ஒட்டுவாங்க. குடும்பம் முழுக்க ஒட்டும். வீடு முழுக்க ஒட்டிய புலிமார்க் பாக்கெட் விரவி கிடக்கும்.

புதிதாய் யாராவது ஒட்ட ஆசைப்பட்டால் ஏற்கனவே ஒட்டின ஆள் " அய்யா சாமீ, இந்த குடும்பம் கஷ்டப்படுது. கொஞ்சம் உபகாரம் பண்ணுங்க. மொதோல்ல ஒரு கட்டு கொடுங்க. அதுக்கு நான் ஜவாப்தாரி"ன்னு சொல்லி ஈசியா சேர்த்து விடலாம். பின்ன அவங்க முதலில் ஒரு கட்டு கொடுப்பாங்க. சிலர் அதை ஒட்ட முடியாமல் சிபாரிசு செஞ்சவங்க கிட்டே அதை கொடுத்து ஜகா வாங்கிடுவாங்க. சிலர் அதை பிடிமானமா பிடிச்சுகிட்டு அடுத்த கட்டு அடுத்த கட்டுன்னு போய் தினத்துக்கு 5 கட்டு அளவு வளர்ந்திடுவாங்க.

இதானய்யா புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் மாயவரத்தில் வளர்ந்த கதையும், அதனால் பலர் மாயவரத்தில் வயித்தை கழுவின கதையும்.

இதோ இன்றைக்கு பிலாஸ்டிக்கும் ஷாம்புவும்  வந்த பின்னே... எல்லாம் போச்சுது. அந்த தென்னை மரமும் செத்து போச்சுது. அங்கே ஆர். பி. என்  நகர் என்னும் நகர் வந்தாச்சு. கலக்டர் பங்களாவும் "இந்த ஊரு மத்தில இவருக்கு ஒரு பங்களா ஒரு கேடு"ன்னு மக்கள் ஏசும் அளவு கிட்ட தட்ட மாயவரம் வளர்ந்து விட்டது.

ஆக ஒரு பழமையான தொழில் செத்து போச்சுதுன்னு கவலை இல்லை மாயவரம் மக்களுக்கு.

'எலேய், சுகந்தா, இப்பாலிக்கா வா, எம் எஸ் சி இண்டகிரேடட்  படிச்சுட்டு சொம்மா தான கெடக்கே, அந்த கொல்லுமாங்குடில ஒரு ஐ டி கம்பனி இருக்குதாம். ஒரு பைலு அடிச்சு கொடுத்தா சொளையா முன்னூறு ரூவா தராங்களாம். என்னாடி சொல்ற"

'அட போக்கா, முன்னூறு ஓவா, இங்கிட்டு கெழக்கால ஒரு கம்பேனி இருக்கு எடிட்டிங் சேத்து 700 தரேங்குறான். அனா என்னா ஒன்னு அது மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன், கொஞ்சம் கரடு மொரடு வேளை தான். இருந்தாங்காட்டியும் சொலவா 700 வரும்ல...."

"அட போடீ போக்கத்தவளே, இது நெகுரா இருக்குதாம். கைல காசு வாயில பரோட்டா, நான் இன்னிக்கு போறேன். போவ வர ஆறாம் நம்பருக்கு 14 ரூவா. அங்கிட்டே ஒக்காந்து அடிச்சா ஒருக்க அடிக்கலாம். ஆனா உம் போக்கத்த  மாமன் மொவன், எம்புருசன்  என்னை கட்டிகிட்ட மாபாவி 'எவன் கிட்டடீ  போயிட்டு வரே'ன்னு கூசாம கேப்பான். அவங்கிட்ட 'நா  ஐ ஐ டி  புரபசர் கிட்ட போயிட்டு வரேன்'னு பவுசாவா சொல்லமுடியும்...'

"அட அத வுடுக்கா, காயாம்பூ அத்தாச்சி ஒரு பைலு குடுத்துச்சு. இந்த இங்கிலீசுகாரன் பேசுறது சொலவா   பத்தாம்பு கேம்லின் ஜாமிட்ரி பாக்ஸ் தொறக்குற மாரி வெண்ணையாட்டம்  இருக்குது. ஆனா இந்த மலையாளிங்க செலபேரு இருக்கானுவ, twenty ன்னு சொல்ல சொன்னா dondy ன்னு சொல்றான். அத விட கொடும இந்த பிலிப்பைன் காரன் எல்லாம்.... அவனுக்கு வாய்ல வசம்ப தான் வச்சு தேக்கினும். F வரவே மாட்டேங்குது. பசங்கள fuck you ன்னு திட்டுடான்னு சொன்னா கூட pak you ன்னு சொல்றான் வீடியோல. பசங்க கெக்கேபிக்கேங்குது. ஒரு தபா இப்டி தான் காயாம்பூ அக்கா "i am going for fishing"ன்னு அவஞ்சொல்ல இது "i am going for pissing"ன்னு அடிக்க இந்த தருமகொளம் ஐடிகாரன் கடுப்பாயிட்டானாம். நீ ஒன்னுக்கு போ, ரெண்டுக்கு போ... அதுக்கு என் தாலிய ஏன் அறுக்குற"ன்னு வஞ்சிபுட்டானாம். அத்துல இருந்து அது பிலிப்பைன் காரன் பேசும் வீடியோ பைல் வந்துச்சுன்னா இது கல்விட்டு வந்து குந்திகிட்டு அடிக்குது:-))))"

"சரிடீ, ஊரா கத ஒனக்கேதுக்குது. நான்  உன் மாமென் பாட்டு கேக்க நோட்டு கேக்கன்னு ஒரு எட்டு ஜி பி பெண்டிரைவு வாங்கி வச்சிருக்கன். நான் வெரசா போயிட்டு அதுல ரெண்டு பைல் புடிச்சாரேன். நீ ஒன்னு அடி. நான் ஒன்னு அடிக்கிறேன். யாரு சுருக்குன்னு அடிக்கிறான்னு பாப்போம்"

"அட போவியா பி பி ஓவுக்கு வாக்கப்பட்டவளே, எனக்கு இன்னிக்கு  பெங்களூர்ல இருந்து ஐடி மாப்ள வராகன்னு அப்பத்தா மெயில் அனுப்பிருக்கு. நான் வாரேன்..."

:
:
:
:
"மாப்ள என்ன பண்றீங்க?"

"கெமோ கேர் சொல்யூஷன் - பேங்ளூர்"

"யப்பா, நேச்சர் ஆப் தி ஜாப் என்னான்னு கேளுங்கப்பா"  திரை மறைவில் இருந்து சுகந்தா...

"வெல்! ஹவ் ஐ ஹேவ் டு எக்ஸ்ப்ளைன்... ஒர்கிங் அஸ் ய ட்ரான்ஸ்கிரிப்டர் ன்னு தமிழ்ல சொல்லலாம்...."

;
;
;
"ஏஏஏஏ........ புனிதாக்காவ்வ்வ், வரும்போ எனக்கும் சேத்து ஒரு பைல் புடிச்சுகிட்டு வாக்கோவ்வ்வ்வ்வ்".  ஆறாம் நம்பரில் ஏறிக்கொண்டு இருந்த  புனிதா காதில் இது விழுந்தது.

பழையன கழிந்தால் என்ன புதியதுக்குள் புகுந்துப்போம்ல... மாயவரமா கொக்கா?

குறிப்பு: கதைகளில் வரும் சம்பவங்களும் பெயர்களும் ..............
;
;
;
;
;
உண்மையே. சத்தியமான உண்மையே... சந்தேகம் இருப்பின் கொல்லுமாங்குடி,பூம்புகார் தருமகுளம் ஐடி கம்பனிகள் அட்ரஸ் தரப்படும். பைல் அடிச்சு கொடுங்க. காசு பாருங்க!

June 4, 2013

என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர்!!!

இது முரசொலியில் வந்த என் எழுத்துகள்!



என் தலைவன் தமிழின தலைவர் கலைஞர் ஒரு நவரசத்தலைவர், ஆமாம் இது வார்த்தை ஜாலம் இல்லை. நவரசம் என்றால் காதல்,இன்பம்,துன்பம்,கோபம்,கருணை,அருவருப்பு,பயம்,வீரம்,ஆச்சர்யம் என சேர்ந்த ஒன்பது வகை .

காதல்: அவருக்கு தமிழ்மேல் காதல்,  அதனால் பிறந்தது பல கவிதைகள், பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல நாடகங்கள், அவருக்கு தன் மனைவியர் மீது காதல், அதனால் பிறந்தது ஆறு சொத்துக்கள், அவருக்கு தன் பிள்ளைகள் மீது காதல் அதனால் பிறந்தது தமிழக அரசியலில் அடுத்த 50 ஆண்டுகாலம் வழி நடத்த வலிமையுள்ள தளபதி மற்றும் அவர் உடன்பிறந்தோர். அவருக்கு அரசியல் மீது காதல், அதனால் விளைந்தது அவரது தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்க்கும் மேலாக திராவிட ஆட்சிகள், அவருக்கு போர்களத்தின் மீது காதல், அதனால் பிறந்தது இது வரை 12 முறை சட்ட மன்ற உறுப்பினர், ஐந்து முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர் என பல பதவிகள், அவருக்கு தமிழர்கள் மீது காதல் அதனால் பிறந்தது நல்ல பல திட்டங்கள், தமிழர்களுக்கான சுய மரியாதை இன்னும் பல,

இன்பம்: அவருக்கு எப்போதும் இன்பம் என்பது இருக்கின்றதோ இல்லியோ அவரை காணும் தமிழர்களுக்கு அவர் முகத்தை காணும் தமிழர்களுக்கு இன்பம். ஏழைகளுக்கு இவரைக்கண்டால் சிரிப்பு. ஏழைகள் இவரால் பயன் பெற்றார்கள், ஏழைகள் இவரால் படித்தார்கள், ஏழைகள் இவரால் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அண்ணா சொன்னது போல இவர் ஏழையின் சிரிப்பினிலே இறைவனை கண்டார். அதனால் ஏழைகளின் சந்தோஷம், மகிழ்ச்சி, இன்பம் அவர்களை காணும் போதெல்லாம் இவருக்கும் தொற்றிக்கொள்ளும். ஆகவே இன்பம் கொண்டார் எப்போதும் இவர்.

துன்பம்: யாரோ எப்போதோ எப்படியோ செய்து விட்ட சில பல தவறுகளால் ஒட்டு மொத்த தமிழினம் அழிக்கப்பட்ட போதும் கையறுநிலையிலே பக்கத்தில் இருக்கும் நாம் இருக்கும் நிலை போல சில பல சமயங்களில் வரும் போதேல்லாம் துன்பம் அவரை தீயாய் சுடும். அதே போல தமிழன் உலகினில் எங்கெல்லாம் அவமானப்படுகின்றானோ அப்போதெல்லாம்  என் தலைவன் அணலில் விழுந்த அன்னமாய் துடிப்பதை நாங்கள் பார்த்து கொண்டு தானிருக்கின்றோம். துன்பம் இல்லா உலகினில் ஒரு துளி இடம் இருந்தால் சொல்லுங்கள். எம் தலைவனை அங்கே அமரவைத்து அழகு பார்க்கின்றோம்.

கோபம்: நவரசத்திலும் தலைவருக்கு பங்குண்டு என்றாலும் அவரின் கோவம் என்னும் குணம் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக உணர்கின்றோம். யார் கண்டது தொண்டர்களிடம் அப்படி ஒரு தோற்றம் இருந்தாலும் ஒன்னரை கோடி உறுப்பினர் கொண்ட கட்சியின் தலைவனாக இருக்கும் போது, ஏழு கோடி தமிழர்களை ஆட்சி செய்த தலைமை பொறுப்பில் இருந்த போதும், குடும்பம், குழந்தை என தன் சொந்த விஷயங்களிலும் அவரது கோவம் எத்தனை வலியது என தொண்டர்கள் அறிய முடிவதில்லை. ஆனால் தொண்டர்களை, மக்களிடம் அவரது கோவம் என்பது யாரும் பார்த்தறியா குணம். "கலைஞர் கோபப்பட்டார்" என புனைவெழுதி புளகாங்கிதம் அடையும் புலன்விசாரணை பத்திரிக்கைகளை நாங்கள் சிரித்து விட்டு புறம்தள்ளி விடுவதே நடைமுறை!

கருணை: தன்னை வசைபாடுபவர்களை, ஊடகங்களை இவர் ஆட்சியில் இருந்த நேரத்திலும் இல்லாத நேரத்திலும் மன்னித்து அருள்வாரே அது தான் கருணை

அருவருப்பு: ஆம், நிறைய உண்டு. தலைவரிடம் அது நிறைய உண்டு. தன் பதினான்கு வயதில் தமிழ்க்கொடி ஏந்தி புறப்பட்ட அந்த புயல் சந்திக்காத இந்திய தலைவர்களே இல்லை என்னும் நிலையில் கால ஓட்டத்தில் நேருவோடு, லால்பகதூரோடு, இந்திரா, ஜெயப்ரகாஷ்நாராயணன், சஞ்சீவரெட்டி, வி வி கிரி, பஃக்ருதீன் அலிஅகமது, ஜெயில்சிங், நாராயணன், மொரார்ஜி, ஜகஜீவன்ராம், வாஜ்பாய், அத்வானி, பிஜுபட்நாயக் என அகில இந்திய அளவிலும் பின்னர் இங்கே ஜஸ்டிஸ்கட்சி, நீதிக்கட்சி தலைவர்கள் அதன் பரிணாமம் திராவிடர்கழக தலைவர்கள், பெரியார், அண்ணா, காமராசர், ராசாசி  என எல்லாம் அரசியல் செய்து அவர்களை ஆட்டிவித்து, அரவணைத்து, அழகுற பழகி அருமையான அரசியல் செய்த நம் தலைவர் இன்றோ கால ஓட்டத்தில் ஜெயா, விசயகாந்து , தா.பாண்டியன், சமீபத்தில் கூட யாரோ ஒரு வர்.. என்னவோ பெயர் ... சேகுவாரா பனியன் எல்லாம் போட்ட ஒருவர் சினிமா எல்லாம் கூட எடுப்பாரோ, நடிப்பாரோ தெரியலை அவர்கள் எல்லாம் "கருணாநிதியே உன்னை கேட்கிறேன்" என மேடையில் முயங்கும் போது (ஆமாம் எழுத்து பிழை இல்லை முயங்கும் தலைவர்கள் தான்) என் தலைவனுக்கு மட்டும் அல்ல தொண்டர்கள் எங்களுக்கும் அருவருப்பு தான் வருகின்றது. என்ன செய்யட்டும்? நவரசத்தில் இந்த ரசம் ஒரு துளி விஷம் தான்:-(

பயம்: பல சமயம் தலைவர் பயப்படுவது உண்டு. தமிழன் எப்போதும் மனசு இரக்கம் கொண்டவன். அதை பயன் படுத்தியே பெரியாரும், அண்ணாவும் ,அதன் பின்னே தலைவரும், ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களும் ஊட்டி வளர்த்த பகுத்தறிவு பாதை ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழன் மனதில் வந்து குடிபுகும் போதெல்லாம் கொஞ்சம் பயம் வரும் தலைவருக்கு. அதற்காக கலங்கியது இல்லை. உடனே களை எடுத்து விடும் பணியினை செய்து கொண்டே தான் இருப்பார்.

வீரம்: அன்னை அஞ்சுகம் தாய் பெற்றது ஒற்றை ஆண் மகவு அல்ல. அது ரெட்டை குழந்தை. ஒன்றின் பெயர் கருணாநிதி, மற்றும் ஒரு குழந்தைக்கு பெயர் வீரம். ஆமாம். கலைஞரின் கருவில் இருந்தே கூட வளரும் உடன்பிறப்பு தான் வீரம். தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கும் போதும், பாளையங்கோட்டையில் பாம்புகள், பல்லிகள் நடுவினில் தனிமை சிறையினில் கிடக்கும் போதும் அவருக்கு உற்ற தோழனாக, கூடப்பிறந்த பிறப்பாக உடன் இருப்பது இந்த வீரம் தான். இந்த என்பத்தி ஒன்பது வயது கிழ சிங்கம் சமீபத்தில் கர்ஜித்தது எப்போது தெரியுமா? "உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்".. வீரமான அந்த கர்ஜனை இன்று என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தி விட்டது தெரியுமா? தமிழக அரசியலை புரட்டி போட்டு விட்டது. அதன் தாக்கங்கள் சில. 1. 40 சதம் சீட் வேண்டும் என அஞ்சாமல் கேட்ட காங்கிரஸ் இன்று நிலைகுலைந்து போனது. அதன் முதல் நாள் வரை வாயை காதுவரை இழுத்து பேசிய இளங்கோவன்கள், யுவராசாக்கள் எங்கே போயினர் என தெரியவில்லை. இது வரை வேட்பாளர் யார் என தெரியவில்லை. சத்தியமூர்த்தி பவன் சண்டைமூர்த்தி பவன் ஆகியது.எல்லோரும் தனியாக தேர்தலை சந்திக்கும் போது அவர்கள் தனித்தனியாக சந்திக்கின்றனர். ஆமாம் எல்லா கோஷ்டியும் பிரிந்து போய் கிடக்கின்றன. ஆக இத்தனை நாள் அவர்கள் கட்சியின் ஒற்றுமை கூட என் தலைவனால் தான் சாத்தியம் என டெல்லிக்கு புரிந்து இருக்கும் இப்போது. 2. அதிமுக வலுவான கூட்டனியாக இருந்ததை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி பிரிக்கவோ, சேர்க்கவோ செய்ய முடியாத கூட்டணிகளை என் தலைவ்னின் ஒற்றை வார்த்தை கிழித்து போட்டு விட்டது. ஆமாம் அங்கே தேமுதிக தனியாக... எல்லாமே தனித்தனியாக ...புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மீது வந்து கட்டிக்கொள்ளுங்கள் என விசயகாந்து கூவியும் ராமகிருஷ்ணய்யர் மட்டுமே ஓடி வந்து ஒட்டி கொண்டார் அந்த நடிகர் மேல். நாம் தமிழர் எனும் லேபிள்காரர்கள் அதிமுகவின் "ரெண்டல்" கட்சியாகிப்போனது. தா.பாண்டியன் கட்சி "மெண்டல்" கட்சியாகிப்போனது. வைக்கோ கட்சி சைக்கோதனமாக புலம்பிக்கொண்டு இருக்கின்றது. மருத்துவர் அய்யாவோ வைத்தியம் தேவைப்படும் அளவு ஆகிவிட்டார்.
என் தலைவனின் வீரம் அந்த ஒற்றை அறிக்கை. அதிலே தமிழக அரசியலையே அசைக்க முடியும் என்கிற போது அந்த வீரத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளுங்கள்!

ஆச்சர்யம்: என் தலைவனுக்கு ஆச்சர்யமான சில விஷயங்கள் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். சமீபத்திய உதாரணம், நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள். ஏன் வெற்றிவாய்ப்பை இழந்தோம் என இன்னமும் காரணம் கண்டுபிடிக்க முடியா கேள்வி அவரிடம் ஒரு ஆச்சர்யம். அதை விடுங்கள். எங்களுக்கு அவர் மேல் ஒரு ஆச்சர்யம் உண்டு. அவருக்கு ஒரு குணம் உண்டு. அவர் இராமாயணகால வாலி போல. அவருக்கு எதிரே நின்று அவரை ஜெயிக்க முடியாது. எதிராளியின் பாதி பலம் இவருக்கு வந்துவிடும். இது எங்களுக்கு அவரைப்பற்றிய ஒரு ஆச்சர்யம். அதனால் தானோ என்னவோ ஆதிக்க சக்திகள் பலமுறை இவரை முதுகில் குத்தியே ஆரிய ராமன் போல வீழ்த்துகின்றன. ஆனாலும் இவர் ஒரு பீனிக்ஸ்போல. சாம்பலில் இருந்தும் வெளியே முழுமையாக வருவார். அதான் என் தலைவர்.இது மிகப்பெரிய ஆச்சர்யம் இவரைப்பற்றி!
இப்போது சொல்லுங்கள்! என் தலைவர் நவரசத்தலைவன் தானே?
அதே போல என் தலைவன் போல பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தலைவன் போல உலகத்தில் ஒரு தலைவனை காண இயலுமா?

ஒருவன் வாழ்வில் பெறவேண்டிய பதினாறு செல்வங்கள் எவையென்பதை,

// "துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே" //

என்ற காளமேகப்புலவரின் பாடல் நமக்குப் புலப்படுத்துகிறது.
அதாவது புகழ், கல்வி, வெற்றி, மக்கட்பேறு, துணிவு, செல்வம், மிகுந்த தானியம், சுகம், இன்பம், அறிவு, அழகு, புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய சிறப்புக்கள், அறவுணர்வுடைய குடிப்பிறப்பு, நோயற்ற வாழ்வு, நீண்ட வயது ஆகியவைகளே பதினாறு பேறுகள் ஆகும். இருந்தாலும் இவற்றினுள் சிறந்த பேறாகக் கருதப்படுவது மக்கட்பேறாகும்.

ஆமாம் என் தலைவன் எங்களுக்கு கொடுத்த பெரிய பாக்கியம் எங்கள் தளபதி. கருணாநிதி பெற்றெடுத்த "சுழல்நிதி" எங்கள் ஒய்வறியா சூரியன் எங்கள் தலைவர் தளபதி அவர்களை என் தலைவன் பெற்ற பதினாறு செல்வத்தில் பெரிய செல்வம் அல்லவா?

"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற" என வள்ளுவன் சொன்னதைப்போல என் தளபதியை எங்களுக்கு கொடுத்த தலைவா நீ வாழ்க வாழ்க!!!!!

என் தலைவன் சமீபத்திய சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்துக்காக மயிலாடுதுறை வழியாக திருவாரூர் சென்ற போது ஒரு சாதாரண தொண்டனின் பார்வையில்  அவரது வருகையை சிலாகித்து நான் என் வலைப்பூவில் எழுதியதன் கடைசி பாரா. இது.


\ //  மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உணர்ச்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உணர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!\\\\\\\\\\\\\\\

 இது தான் அந்த கடைசி பத்தி அந்த பதிவினில். அதன் லிங் இதோ இது தான் http://abiappa.blogspot.com/2011/03/blog-post_24.html
என் தலைவனைப்பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதுமா? இணையத்தின் ஒட்டு மொத்த இடமும் கொடுத்தாலும் எழுதித்தீர்க்க முடியுமா?

June 3, 2013

திருவாரூரில் இருந்து வந்த மஞ்சள் பை மகான் என்போரே...... மகா கோடீஸ்வரன் என்போரே......








இரு நாட்கள் முன்பாக என் முகநூலில் ஒரு கீழுள்ளது போல ஒரு நிலைத்தகவலிட்டிருந்தேன்.


\\ எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... சபாஷ்... எனக்கு ஜுன் 3 பதிவுக்கு தலைப்பு இல்லையே என கவலைப்பட்டேன். தலைப்பு கொடுத்த தோழருக்கு நன்றிகள். தலைப்பு... "மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?"... இது எப்டி இருக்கு????\\


இது போல ஒரு எதிர்மறை தலைப்பு வைக்க நினைத்த காரணம்.... கலைஞரை வசைபாடும் கூட்டமும் வந்து பார்க்கட்டுமே என்பது ஒரு பக்கம். அடுத்து கலைஞரை வசைபாடும் கூட்டம் எப்போதும் கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான். எதிர்மறை தலைப்பு வைத்தால் அந்த வசவாளர்கள் கூகிள் தேடுதளத்தில் தேடும் போது இந்த பதிவு சுலபமாய் கிடைக்கும் என்பதால் மட்டுமே. ஆனாலும் நாளை 90 ம் பிறந்த தினம் காண இருக்கும் தமிழின தலைவரை குறித்து எழுதும் போது எதிர்மறை தலைப்பு வேண்டாம் என் மனது சொன்னதால் மாற்றி விட்டேன்.


அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில்,ஆதாரம் என்ன  என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் வேண்டுவோர் உடனே குறிப்பிட வேண்டிய ஒரு புழு. மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர் என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.


அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?

அவர் அரசங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?


சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)


இவர் திரைத்துறையில் சம்பாதிக்க  பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. இதோ இன்று தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரன் ஆக மாட்டார்?


கலைஞர் திரைத்துறையில் பணியாற்றினார் பணியாற்றினார் என்று மட்டுமே தெரிந்த நமக்கு அவர் எத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளார் என்னும் விபரத்தை சௌம்யா தியேட்டர்ஸ் உரிமையாளரும், வசனகர்த்தா, பாடலாசிரியர், சினிமா தயாரிப்பாளர், நாடக நடிகர், பத்திரிக்கையாளர் என பன்முக கலைஞர் திரு. டி. வி. ராதாகிருஷ்ணன் ஒரு 8 பாகங்களாக தன் வலைப்பூவில் எழுதி பின்னர் "அகநாழிகை" பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டு கலைஞரின் 87ஆம் அகவையில் வெளியிடப்பட்டு செம்மொழி மாநாட்டில் அகநாழிகை பதிப்பகத்தாரால் பலருக்கு இலவசமாக (செம்மொழி மாநாட்டை முன்னிட்டு) வழங்கப்பட்டது. நூலின் விலை 20 ரூபாய் மட்டுமே. கிடைக்குமிடம் "அகநாழிகை பதிப்ப்கம்", 33, மண்டபம் தெரு, மதுராந்தகம், பின்: 603 306 , போன்: 999 4541010.  மிக்க நன்றி திரு. டி வி.இராதாகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும், அகநாழிகை பதிப்பக உரிமையாளர் திரு அகநழிகை வாசுதேவன் அவர்களுக்கும்!


இதோ அந்த நூலில் இருக்கும் கலைஞர் அவர்களின் திரையுலக பங்களிப்பை விரிவாக காணுங்கள்.

**********************************************************

கலைஞர் அவர்கள் கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.

ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.


1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி


1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

இப்படத்தில் வரும் ஒரு வசனம் "பெரியம்மா குத்துவிளக்கு , சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு" இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்.


1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.


1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.


'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'

அப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.
மாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.


52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'
என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி


53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட் 'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர். படம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.

பராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி. திரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்.


1953 ல் வந்த படம் 'நாம்'

ஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.

இப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.

1954ல் வந்த படங்கள்

மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.


அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் "மலைக்கள்ளன்".கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.


அடுத்து "அம்மையப்பன்.".எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்

1956ல் வந்த படங்கள்

"ராஜாராணி"..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.

"ரங்கோன் ராதா"...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகள்

\\ திண்ணை தூங்கி பண்டாரம்

திருவோடு ஏந்தும் பரதேசி

தெருவில உருளும்

திருப்பதி கோவிந்தா..கோவிந்தா

இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு

உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்

என்றும் எதிலும் பொதுநலம் \\



1957ல்

புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம் புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா


1960ல் வந்த படம் குறவஞ்சி..

இதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.

1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி


1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.


1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ்.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.

1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.

1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.

1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.

1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.

1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா? கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.


1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்

1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன்,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்


1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.


1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.

இந்த தொடர் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.


1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.

அப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.

ஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா? மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா? என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.


பின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் "பூக்காரி "வந்தது.

கலைஞர் கதை மட்டும் எழுத "அணையா விளக்கு" வந்தது

பிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.

1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.


1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு


1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்


1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்


1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.


1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை

1983ல் இது எங்க நாடு..படம் வெளியானது.ராம நாராயணன் இயக்கம் சுரேஷ்,சுலக்க்ஷனா நடிப்பு.


1984ல் திருட்டு ராஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு.ராமநாராயணன் இயக்கம்.


1984 காவல் கைதிகள் ..பூம்புகார் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு..ராம நாராயணன் இயக்கம்.

1985ல் குற்றவாளி என்ற படம் வந்தது.ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.ரவீந்தர்,விஜி நடிப்பு

1986ல் பூம்புகார் தயாரிப்பில் காகித ஓடம் வந்தது. ராம நாராயணன் இயக்கம்.பூம்புகார் தயாரிப்பு.


1986ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பாலைவன ரோஜாக்கள்..பூம்புகார் தயாரிப்பு..மணிவண்ணன் இயக்கம்.இளையராஜா இசை.பிரபு,நளினி நடித்தது.


1987ல் நீதிக்கு தண்டனை. கலைஞர் திரைக்கதை வசனத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சங்கர்-கணேஷ் இசையில் நிழல்கள் ரவி,ராதிகா நடித்தது.


1987ல் வந்த மற்றொரு படம் ஒரே ரத்தம்.கார்த்திக்,ராதா நடிக்க கே,சொர்ணம் இயக்கம்


1987ல் வந்த படம் வீரன் வேலுத்தம்பி.கலைஞர் திரைக்கதை வசனம் ராம நாராயணன் இயக்கம்.ராதரவி நடிப்பு. இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.


1987ல் வந்த படம் சட்டம் ஒரு விளையாட்டு.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம்.விஜய்காந்த் நடிக்க திரைக்கதை வசனம் கலைஞர்


1987ல் புயல் பாடும் பாட்டு.பூம்புகார் தயாரிப்பு.மணிவண்ணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசனம் இளைய ராஜா இயக்கம்.



1987ல் நான்கு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கலைஞர்,இது ஒரு சாதனை.



1988 மக்கள் ஆணையிட்டால் ராம நாராயணன் இயக்கம்.கலைஞர் திரைக்கதை வசம்.விஜய்காந்த் நடித்தது.இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.



1988 பாசப்பறவைகள் வி.எம்.சி.ஹனிஃபா இயக்கம்.இளையராஜா இசை.திரைக்கதை வசனம் கலைஞர்.சிவகுமார்,லட்சுமி,ராதிகா நடித்தது.



1988ல் வந்த மற்றொரு படம் இது எங்கள் நீதி.கலைஞர் திரைக்கதை,வசனம்.எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கம் இளையராஜா இசை.

1988ல் வந்த படம் பாடாத தேனீக்கள்.பூம்புகார் தயாரிப்பு.இளையராஜா இசை,சிவகுமார்,அம்பிகா நடித்திருந்தனர்.



1989ல் வந்த படம் தென்றல் சுடும்..ராதிகா,நிழல்கள் ரவி நடிக்க மனோபாலா இயக்கம்



1989ல் வந்த மற்றொரு படம் பொறுத்தது போதும்..பி.கலைமணி இயக்கம்.விஜய்காந்த் நடித்தது..இளையராஜா இசை



1989ல் வந்த படம் நியாயத் தராசு.கே.ராஜேஷ்வர் இயக்கம்.மேனகா பிக்சர்ஸ் தயாரிப்பு.நிழல்கள் ரவி,ராதா நடிக்க சங்கர்-கணேஷ் இசை



1989ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் ஹனீஃபா இயக்கத்தில் சிவகுமார்,ராதிகா நடிக்க இளைய ராஜா இசையில் பூம்புகார் தயாரிப்பு பாச மழை



1990ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் பிரபு,நிரோஷா நடிக்க இளையராஜா இசையில் சந்தான பாரதி இயக்கத்தில் வந்த படம் காவலுக்கு கெட்டிக்காரன்



1993ல் வந்த படம் மதுரை மீனாட்சி.கலைஞர் திரைக்கதை, வசனம்



1996ல் கலைஞர் திரைக்கதை வசனத்தில் செல்வா,சுகன்யா நடிக்க வந்த படம் புதிய பராசக்தி



பின் 9 ஆண்டுகள் கழித்து 2005ல் வந்த படம்..கண்ணம்மா..கலைஞர் கதை வசனத்தில் பிரேம் குமார்,மீனா நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாபா இயக்கத்தில் வந்த படம்



2008ல் வினீத்,கீர்த்தி சாவ்லா நடிக்க கலைஞர் திரைக்கதை,வசனத்தில் இளையராஜா இசையில் இளவேனில் இயக்கத்தில் வந்த படம் உளியின் ஓசை



அதன் பின்னர் மீரா ஜஸ்மின் நடித்த  பெண் சிங்கம்,பின்னர் பிரசாந்த் நடிக்க பொன்னர் சங்கர் வந்தது.



தவிர மனோகரா(1954) தெலுங்கு,ஹிந்தி திரைக்கதை கலைஞருடையது.பராசக்தி(1957) தெலுங்கு திரைக்கதை கலைஞருடையது



1951ல் ஆடா ஜென்மா,தெலுங்கு(தேவகி)1957ல் வீர கங்கனம் தெலுங்கு (மந்திரிகுமாரி)1967ல் ஸ்திரீ ஜன்மா தெலுங்கு (பூமாலை) ஆகிய படங்களுக்கு கதை,திரைக்கதை கலைஞருடையது.



இடைவிடாமல் 90 வயது இளைய கலைஞர் இன்னமும் கலைத்துறைக்கு ஆற்றிவரும் தொண்டு பாராட்டுக்குரியது.



இதே கலைஞர் அவர்கள் திரைத்துறையில் மட்டுமா ஜொலித்தார்.



நெஞ்சுக்கு நீதி 5ம் பாகம் வெளியீடு  ஜூன் 2, 2013

ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், வெள்ளிக்கிழமை, நெஞ்சுக்கு நீதி (5 பாகம்) இனியவை இருபது, சங்கத்தமிழ், குறளோவியம், பொன்னர் -சங்கர், தொல்காப்பியப்பூங்கா போன்ற பொக்கிஷங்களை கொடுத்துள்ளார். இதை தவிர ஏராளமான சிறுகதைகள், எண்ணிலடங்கா கவிதைகள், மற்றும் நாடகங்களான மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், உதயசூரியன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, சிலப்பதிகாரம் ஆகியவை முக்கியமானதாகும். தூக்கு மேடை, காகிதப்பூ இவற்றில் அவரே நடித்துள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை கார்க்கி எழுதிய "தாய்" நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதியுள்ளார். அது தான் பின்னர் கவிஞர் பா.விஜய் நடிக்க "இளைஞன்" என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.



*********************************



ஆக தமிழக சினிமா தன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் எல்லீஸ் ஆர் டங்கன் . டி ஆர். சுந்தரம் என்னும் ஜாம்பவான்களுடன் திரைத்துறையில் பணியாற்றிய கலைஞர் அவர்கள் தமிழக திரைப்பட வரலாற்று நூற்றாண்டின் இறுதியில் இப்போது ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமான் போன்றவர்களுடன் கூட வேலை செய்து செம்மொழி நூற்றாண்டு பாடலை கூட எழுதி வரும் கலைஞர் மஞ்சள் பை நிறைய பணம் எடுத்து வந்து தான் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்னும் நிலையில் இல்லை. ஒரே ஒரு பேனாவும் அவரது மூளையும் மூலதனமாக போதும்.


இனியாவது கலைஞரை மஞ்சள் பையுடன் வந்தார் இன்று கோடீஸ்வரன் ஆகிவிட்டார் என புலம்பும் பொறாமை கொண்டவர்களிடம் இதை நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்லலாம். ஊரான் சொத்துகளை எல்லாம் கலைஞரின் சொத்து என பொய்ப்பிரச்சாரம் செய்யும் புண்ணியாத்மாக்களிடம் புரியும் படி இதை நாம் சொல்லலாம்.


இன்று 90ம் ஆண்டு பிறந்த நாள் காணும் அழகு தமிழ் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் தன் வாழ்நாளிலேயே தன் நூற்றாண்டு விழாவினை காண வேண்டும். நாம் இன்று கொண்டாடுவதை விட இன்னும் மிகச்சிறப்பாக அதை கொண்டாட வேண்டும் என வாழ்த்துவோம்!



வாழ்க கலைஞர்! வாழ்க தளபதி!!வெல்க திமுக!!!