பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 20, 2013

புலிமார்க் வாசனை சீயக்காய் தூளும், ஐடி கம்பனியும்!


புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் அறியாதவர்கள் அனேகமாக அமேரிக்காவில் +2 கோட்டடிச்சுட்டு அண்ணா யுனிவர்சிட்டில இருக்கும் முப்பாத்தம்மன் என்ஜினியரிங் காலேஜ்ல எதுனா என் ஆர் ஐ காசிலே சீட்டு கேட்டு வந்தவங்கலா இருக்கலாம். மத்தவங்களுக்கு அது அத்தனை ஒரு பிரபல்யம். அது சென்னை ஆபீஸ் என்றாலும் "மயில் மார்க் நிலையம் - மாயவரம்" என்றால் தான் அந்த "பாயும் புலி"க்கே ஒரு திருப்தி வரும். அத்தனை பேமஸ்.


"பிலாஸ்டிக் ஒழிக" என்னும் கோஷம் எல்லாம் அப்போது இல்லை. ஏனனில் பிலாஸ்டிக் அத்தனை இலகு இல்லை. எல்லாம் காகித பொட்டலம் தான். அதிலும் இந்த புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் இருக்குதே.. தன் பாக்கெட் அபாரம். கிட்ட தட்ட இப்போ இருக்கும் "
இன்லேண்ட்" கவரின் பார்முலா தான் அந்த பொட்டலம்.



அந்த கம்பனி மாயவரத்தின் அவுட்டர் அப்போது. இப்போது மயிலாடுதுறையின் மத்தியபிரதேசம் அது. ஆனால் அந்த கம்பனி தான் அங்கு இல்லை. அதை விடுங்க. மாயூரம் கலக்டர் வீடு இருக்கு தெரியுமா கலக்டர் வீடு! அதன் பக்கம் தான் இந்த மயில் மார்க் நிலையம். கலக்டர் தான் மாயூரத்துக்கு இல்லை எப்போதும் எனினும் கலக்டர் பங்களா உண்டு. ஒரு காலத்தில் "மயிலாடுதுறை முனுசிபாலிட்டி" அதாவது ஆங்கிலத்தில் சொல்லப்போனா "மாயவரம் நகராட்சி" என்பது இப்போது புதிது புதிதாக மாநகரட்சியா ஆக்கப்பட்டதே சிலதுகள்... அதை எல்லாம் விட பழமை வாய்ந்தது. எல்லாம் ஆங்கிலேயர் கட்டிடம். அதை நிர்வகிக்க அப்போ கலக்டர் தேவைப்பட்டது. அந்த கலக்டர் தங்க உங்க ஒரு இடம்.. அதுவே கலக்டர் பங்களா. கொத்த தெரு முடிவில் இருக்கும். அதிலே ஒரு கலக்டர் அப்போ அக்ரி படிச்சுட்டு அப்போ லண்டன்ல டி என் பி எஸ் சி பாஸ் பண்ணியிருப்பார் போலிருக்கு. வந்தாரு. ஒரு தென்னங்கன்னு வச்சாரு. அது அஞ்சு கிளை விட்டது. "தென்னை மரத்துக்கு கிளை இல்லை" என நாங்க ஒன்னாப்பு படிக்கும் போது மெதுவா டீச்சர் சொல்லுவாங்க "இதல்லாம் பாடத்துக்கு மட்டும் தான். நாம மாயவரம்... தென்னை மரத்துக்கு கூட கிளை உண்டு"ன்னு. பள்ளியில் டூர் கூட்டிட்டு போவது போல அழைத்து போய் அந்த மரத்தை காண்பிப்பாங்க.

அதல்லாம் இப்ப வேண்டாம். அந்த மரத்துக்கு பக்கத்தில் தான் இருக்கு நம்ம "மயில் மார்க் நிலையம்". அடர்ந்த தென்னை தோப்பு. அதனிடையில் ஒரு காட்டு பங்களா. சிகைக்காய் அரைக்கும் மிஷின் எல்லாம் அதில் உள்ளே இருக்குதாம்.பர்த்தது இல்லை. அத்தனை அடர்த்தி அந்த இடம்.  அரைச்சா வாசனை பிச்சிகிட்டு போகும் மெயின் ரோடு முழுக்க. அத்தனை ஒரு வாசம்.

அந்த அரைத்த மாவை அதாவது சீயக்காய் பவுடரை எதில் அடைக்கனும்? பொட்டலம் போடனும். அது தான் அந்த "இண்லேண்ட் லெட்டர் கவர் " மாதிரியான கவர். அதிலே பாயும் புலி படம் மற்றும் விலாசம் எல்லாம் அச்சடித்து இருக்கும். அது 2500 பேப்பர் ஒரு கட்டா இருக்கும். அதை அந்த சுத்து வட்டார மக்கள் எல்லாம் காலை ஆறு மணிக்கு போய் வரிசையில் நின்னு ஆளுக்கு ஒரு கட்டு வாங்கனும். கூடவே ஒரு கட்டுக்கான புளியங்கொட்டை பசை ஒரு தாளில் ஒரு கத்தியால் வழித்து தருவாங்க. பச்சை கலரில் இருக்கும். அந்த 2500 பீஸ் இருக்கும் கட்டை தூக்கி வந்து அவங்க சொல்லும் பாணியில் பசை தடவி வாயை மட்டும் விட்டு விட்டு ஒட்டி, உலர்த்தி அதை 50, 50 எண்ணிக்கையில் கட்டி அவங்க கிட்ட எடுத்து கிட்டு போனா கையில் ஒன்னேகால் ரூபாய் கொடுத்து விட்டு அடுத்த கட்டு கொடுப்பங்க.

அந்த ஒன்னேகால் ரூபாயில் அப்போது ஒரு படி அரிசி வாங்கிடலாம். நல்ல பொன்னி அரிசி. சில குடும்பங்கள் இரண்டு கட்டு வாங்கி போய் ஒட்டும். சில குடும்பங்கள் இதை நம்பியே பிழைப்பும் நடத்தும். அவங்க நாலு கட்டு வாங்கி போய் ஒட்டுவாங்க. குடும்பம் முழுக்க ஒட்டும். வீடு முழுக்க ஒட்டிய புலிமார்க் பாக்கெட் விரவி கிடக்கும்.

புதிதாய் யாராவது ஒட்ட ஆசைப்பட்டால் ஏற்கனவே ஒட்டின ஆள் " அய்யா சாமீ, இந்த குடும்பம் கஷ்டப்படுது. கொஞ்சம் உபகாரம் பண்ணுங்க. மொதோல்ல ஒரு கட்டு கொடுங்க. அதுக்கு நான் ஜவாப்தாரி"ன்னு சொல்லி ஈசியா சேர்த்து விடலாம். பின்ன அவங்க முதலில் ஒரு கட்டு கொடுப்பாங்க. சிலர் அதை ஒட்ட முடியாமல் சிபாரிசு செஞ்சவங்க கிட்டே அதை கொடுத்து ஜகா வாங்கிடுவாங்க. சிலர் அதை பிடிமானமா பிடிச்சுகிட்டு அடுத்த கட்டு அடுத்த கட்டுன்னு போய் தினத்துக்கு 5 கட்டு அளவு வளர்ந்திடுவாங்க.

இதானய்யா புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் மாயவரத்தில் வளர்ந்த கதையும், அதனால் பலர் மாயவரத்தில் வயித்தை கழுவின கதையும்.

இதோ இன்றைக்கு பிலாஸ்டிக்கும் ஷாம்புவும்  வந்த பின்னே... எல்லாம் போச்சுது. அந்த தென்னை மரமும் செத்து போச்சுது. அங்கே ஆர். பி. என்  நகர் என்னும் நகர் வந்தாச்சு. கலக்டர் பங்களாவும் "இந்த ஊரு மத்தில இவருக்கு ஒரு பங்களா ஒரு கேடு"ன்னு மக்கள் ஏசும் அளவு கிட்ட தட்ட மாயவரம் வளர்ந்து விட்டது.

ஆக ஒரு பழமையான தொழில் செத்து போச்சுதுன்னு கவலை இல்லை மாயவரம் மக்களுக்கு.

'எலேய், சுகந்தா, இப்பாலிக்கா வா, எம் எஸ் சி இண்டகிரேடட்  படிச்சுட்டு சொம்மா தான கெடக்கே, அந்த கொல்லுமாங்குடில ஒரு ஐ டி கம்பனி இருக்குதாம். ஒரு பைலு அடிச்சு கொடுத்தா சொளையா முன்னூறு ரூவா தராங்களாம். என்னாடி சொல்ற"

'அட போக்கா, முன்னூறு ஓவா, இங்கிட்டு கெழக்கால ஒரு கம்பேனி இருக்கு எடிட்டிங் சேத்து 700 தரேங்குறான். அனா என்னா ஒன்னு அது மெடிகல் ட்ரான்ஸ்கிரிப்ஷன், கொஞ்சம் கரடு மொரடு வேளை தான். இருந்தாங்காட்டியும் சொலவா 700 வரும்ல...."

"அட போடீ போக்கத்தவளே, இது நெகுரா இருக்குதாம். கைல காசு வாயில பரோட்டா, நான் இன்னிக்கு போறேன். போவ வர ஆறாம் நம்பருக்கு 14 ரூவா. அங்கிட்டே ஒக்காந்து அடிச்சா ஒருக்க அடிக்கலாம். ஆனா உம் போக்கத்த  மாமன் மொவன், எம்புருசன்  என்னை கட்டிகிட்ட மாபாவி 'எவன் கிட்டடீ  போயிட்டு வரே'ன்னு கூசாம கேப்பான். அவங்கிட்ட 'நா  ஐ ஐ டி  புரபசர் கிட்ட போயிட்டு வரேன்'னு பவுசாவா சொல்லமுடியும்...'

"அட அத வுடுக்கா, காயாம்பூ அத்தாச்சி ஒரு பைலு குடுத்துச்சு. இந்த இங்கிலீசுகாரன் பேசுறது சொலவா   பத்தாம்பு கேம்லின் ஜாமிட்ரி பாக்ஸ் தொறக்குற மாரி வெண்ணையாட்டம்  இருக்குது. ஆனா இந்த மலையாளிங்க செலபேரு இருக்கானுவ, twenty ன்னு சொல்ல சொன்னா dondy ன்னு சொல்றான். அத விட கொடும இந்த பிலிப்பைன் காரன் எல்லாம்.... அவனுக்கு வாய்ல வசம்ப தான் வச்சு தேக்கினும். F வரவே மாட்டேங்குது. பசங்கள fuck you ன்னு திட்டுடான்னு சொன்னா கூட pak you ன்னு சொல்றான் வீடியோல. பசங்க கெக்கேபிக்கேங்குது. ஒரு தபா இப்டி தான் காயாம்பூ அக்கா "i am going for fishing"ன்னு அவஞ்சொல்ல இது "i am going for pissing"ன்னு அடிக்க இந்த தருமகொளம் ஐடிகாரன் கடுப்பாயிட்டானாம். நீ ஒன்னுக்கு போ, ரெண்டுக்கு போ... அதுக்கு என் தாலிய ஏன் அறுக்குற"ன்னு வஞ்சிபுட்டானாம். அத்துல இருந்து அது பிலிப்பைன் காரன் பேசும் வீடியோ பைல் வந்துச்சுன்னா இது கல்விட்டு வந்து குந்திகிட்டு அடிக்குது:-))))"

"சரிடீ, ஊரா கத ஒனக்கேதுக்குது. நான்  உன் மாமென் பாட்டு கேக்க நோட்டு கேக்கன்னு ஒரு எட்டு ஜி பி பெண்டிரைவு வாங்கி வச்சிருக்கன். நான் வெரசா போயிட்டு அதுல ரெண்டு பைல் புடிச்சாரேன். நீ ஒன்னு அடி. நான் ஒன்னு அடிக்கிறேன். யாரு சுருக்குன்னு அடிக்கிறான்னு பாப்போம்"

"அட போவியா பி பி ஓவுக்கு வாக்கப்பட்டவளே, எனக்கு இன்னிக்கு  பெங்களூர்ல இருந்து ஐடி மாப்ள வராகன்னு அப்பத்தா மெயில் அனுப்பிருக்கு. நான் வாரேன்..."

:
:
:
:
"மாப்ள என்ன பண்றீங்க?"

"கெமோ கேர் சொல்யூஷன் - பேங்ளூர்"

"யப்பா, நேச்சர் ஆப் தி ஜாப் என்னான்னு கேளுங்கப்பா"  திரை மறைவில் இருந்து சுகந்தா...

"வெல்! ஹவ் ஐ ஹேவ் டு எக்ஸ்ப்ளைன்... ஒர்கிங் அஸ் ய ட்ரான்ஸ்கிரிப்டர் ன்னு தமிழ்ல சொல்லலாம்...."

;
;
;
"ஏஏஏஏ........ புனிதாக்காவ்வ்வ், வரும்போ எனக்கும் சேத்து ஒரு பைல் புடிச்சுகிட்டு வாக்கோவ்வ்வ்வ்வ்".  ஆறாம் நம்பரில் ஏறிக்கொண்டு இருந்த  புனிதா காதில் இது விழுந்தது.

பழையன கழிந்தால் என்ன புதியதுக்குள் புகுந்துப்போம்ல... மாயவரமா கொக்கா?

குறிப்பு: கதைகளில் வரும் சம்பவங்களும் பெயர்களும் ..............
;
;
;
;
;
உண்மையே. சத்தியமான உண்மையே... சந்தேகம் இருப்பின் கொல்லுமாங்குடி,பூம்புகார் தருமகுளம் ஐடி கம்பனிகள் அட்ரஸ் தரப்படும். பைல் அடிச்சு கொடுங்க. காசு பாருங்க!

2 comments:

  1. அண்ணே, பூம்புகார் - தருமகுளம் எல்லாம் சொன்னீங்க, அப்படியே மாயூரம் - நாஞ்சில்நாடு-ன்னு சொல்லலாம்ல?

    ReplyDelete
  2. ஏனுங்க!! அருமையான விசயமா இருக்குங்கோ!! நம்ம மொடக்குறிச்சி சந்தையில் வாராவாரம் கூவி கூவி!! விக்கிறானுங்கோ!!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))