கீழை ராசா, ஆசீப்மீரான், தங்கமச்சான் ரியாஸ் மற்றும் பிளக்ஸ்போர்டு |
விடிகாலை கனவு பலிக்கும் என்பார்கள். அத்தனை ஒரு ருசியான பிரியாணியை விடிகாலை 5 மணிக்கே கனவில் சாப்பிட்டேன். அண்ணாச்சி என துபாய்வாசிகளால் அன்போடு அழைக்கப்பட்டு பின்னர் அது ஷார்ஜா, அபிதாபி, பக்ரின் என பரவலாக்கப்பட்டு இன்று இண்டர்நேஷனல் அண்ணாச்சியாகி இருக்கும் என் அன்பு தோழர் ஆசீப்மீரான் ஒரு வாரம் முன்பே தன் குத்தாலம் (மயிலாடுதுறையில் இருந்து எட்டு கிமீ) விஜயத்தை பற்றி என்னிடம் ரகசிய அறிக்கை அளித்திருந்தாலும் நேற்று காலை முதல் லைட்டா பரபரப்பு தொத்திகிச்சு.
நேற்று காலை ஒரு கடமையுள்ள கணவனாக கக்கூஸ் எல்லாம் கழுவ ஆரம்பித்தேன். "அபீ அபீ... ஏன் சேர்ல எல்லாம் புக்ஸ் போட்டு வச்சிருக்கே" என கத்த அவள் சர்வசாதாரணமாக "கிட்ட தட்ட எட்டு பரம்பரையா நாம அப்படித்தானேப்பா.. தவிர அதிலே கிடக்கும் புத்தகம் எல்லாம் உங்களோடது" என சொல்ல அமைதியாக எல்லாம் சுத்தம் செய்தேன்.
நெட் பக்கம் போய் பார்த்தா அண்ணாச்சி மதுரையில் இருந்து பஸ்ல் கிளம்பி சட்டை பட்டன் தெரிக்க தெரிக்க பிதுங்கி போய் பதிவா போட்டு கிட்டு இருக்காரு. அந்த பதிவை படிச்சதும் "ஆகா அவரு மாயவரம் வரதுக்கு எப்படியும் ரெட்டாம் ஆட்டம் சினிமா வுட்டுடுவான் போலிருக்கே" என நினைத்து கொண்டேன். நடுநடுவே என் மனைவி "என்ன மெனு செய்யட்டும்" என கேட்டு கேட்டு அலுத்துப்போய் தூங்கிப்போன பின்னே அண்ணாச்சியிடம் இருந்து போன். "நான் கும்பகோணம் வரை மெதுவா வந்துட்டேன். கைதாங்கலா என்னை காப்பாத்தி இறக்கிவிட குத்தாலத்தில் 11 பேர் கொண்ட குழு நிக்குது. அதனால நான் அங்கயே சிரமபரிகாரம் செஞ்சுகிட்டு காலை கல்யாணத்திலே கலந்துக்குறேன்" என அரசு பஸ் கொடுத்த அசதியில் பேச "அடடா அவசரப்பட்டுடியடா அபிஅப்பா, வீட்டை சுத்தம் செஞ்சிருக்க வேண்டாமோன்னு மனசில் நினைச்சுகிட்டு அதுக்கு மேல அவரை கஷ்டப்படுத்த மனமில்லாமல் "அப்ப சரி, நான் ஒரு பத்து மணிக்கு குத்தாலத்தில் பிரியாணியை சந்திக்க வரும் போது உங்களை பார்த்துக்குறேன்" என சொல்லி விட்டு அதே நியாபகமாய் தூங்கியதால் இன்று விடிகாலை அந்த பிரியாணி கனவு.
"என்னங்க, சீக்கிரம் எந்திரிங்க. இன்னிக்கு பிரதோஷம், ஞாயித்து கெழமையானாலும் கவுச்சி கெடயாது. சீக்கிரம் எந்திரிச்சு வீட்டை சுத்தம் செய்யுங்க" என சொன்னபோது... நான் "அந்த ரூல்ஸ் எல்லாம் என்னை கட்டுப்படுத்தாது. குத்தாலத்திலே பிரியாணி என்னை வா வான்னு கூப்பிடுது" என சொல்லிவிட்டு ஒருவழியாக நட்ராஜையும் கூட்டிகிட்டு குத்தாலம் சென்றேன்.
"கல்யாணம் செஞ்சுக்க போகும் மணமக்களேஏஏஏஏ"ன்னு உச்சஸ்தாயில் பாடியவரின் எதிரே ஒரு ப்ளக்ஸ் போர்டுக்கு கீழே அண்ணாச்சி, கீழை ராசா அவர்கள் மற்றும் பதிவர் குசும்பன் அவர்களின் தந்தையார், ரியாஸ்பாய் என்னும் தங்கமச்சான் (பதிவர் ஜஸீலாவின் தங்கமச்சான்) , ஜஸீலாவின் குட்டி பையன் எல்லோரும் இருக்க, குத்தாலம் அன்பு, குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஆகியோர் "இதோ மினிஸ்டர் கிளம்பியாச்சு வீட்டில் இருந்து...." என வரவேற்கும் முஸ்தீபுகளில் இருக்க நாங்கள் ஒரு நான்கு நாற்காலி போட்டு ரவுண்டு கட்டினோம். ரம்மி சீட்டு கட்டு இல்லாமை மட்டுமே ஒரு குறை. நடு நடுவே எனக்குள் தூங்கிகொண்டு இருந்த கவுண்டமணி "அண்ணே கடா எப்ப வெட்டுவாங்க" என கேட்டுக்கொண்டே இருந்தார். அடக்கினேன்.
எங்க மினிஸ்டரும் எம் எல் சியுமான கோசிமணி அண்ணன் கும்பகோணம் அன்பு அண்ணன் கூட வர குத்தாலம் அன்பு எங்களுக்கு முன்பாக நாற்காலி எடுத்து போட்டு அவரை அமர வைத்து பவ்யம் காட்டி பின்னால் நின்று கொண்டார். ஆசீப் அவரிடம் "உட்காருங்க நீங்களும்" என சொன்னதுக்கும் "அய்யய்யோ எங்க எம் எல் சி க்கு முன்னால உட்காரமாட்டேன்" என்பது போல தலையாட்டினார்.
பின்னர் ... வேற என்ன பிரியாணி தான். இது போன்ற விருந்துக்கு நட்ராஜை அழைத்து போவதில் ஒரு சௌகர்யம் என்னான்னா அவனுக்கு கிடைக்கும் பீஸ் எல்லாம் நமக்கு தான்:-) அருமையான மட்டன் பிரியாணி, கோழி வறுவல், தக்காளி இனிப்பு, பாயசம், வெங்காயம் தயிர் என அப்பட்டமான எங்கள் மாவட்ட பாய்மார் வீட்டு கல்யாண பிரியாணி. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை 1000 ரூபாய்க்கு பிரியாணி வாங்கி துன்னாலும் அந்த பாய்மார் வீட்டு கல்யாணத்திலே சாப்பிடும் அந்த டேஸ்ட் ஏன் மத்ததுக்கு எல்லாம் வரமேட்டேன்குதுனு தெரியலை.
வழக்கம் போல நட்ராஜ் பீஸ்ம் நானே போட்டு மொக்கினேன். குசும்பன் அப்பா "இன்னும் ஒரு பிஸ் வச்சுகுங்க தம்பி" என சொன்ன போது வயிற்றில் இடம் இல்லாமையால் "அய்யோ முடியலை"என கையெடுத்து கும்பிட்டேன். ஊஃப்ப்ப்ப்ப்... செம செம....
பின்னர் வெளியே வந்ததும் "சரி ஆசீப் கிளம்புங்க நம்ம வீட்டுக்கு" என சொன்னபோது "இல்லை... ஜஸீலா பேமிலி சென்னைக்கு கார்ல போறாங்க. நான் அவங்க கூட போனா ஈசியா இருக்கும். பஸ்ல போறது மாதிரி கஷ்டம் வேற எதும் இல்லை. அடுத்த தடவை ஒரு பெரிய டூரா போட்டு கிட்டு எல்லோரும் வருகிறோம்" என சொன்னார்.
பின்னர் வெளியே வந்ததும் ஜஸீலாவை சந்தித்தேன். ஜஸீலாவின் குட்டி பெண் இப்போது சுட்டி பெண்ணாக "அங்கிள் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா ஞாபகம் தான் சரியா வரலை" என சொன்னாள். எப்போது அந்த குட்டி பாப்பாவை கடைசியாக பார்த்தேன் என நியாபகப்படுத்தி பார்த்தேன். எஸ்... பண்புடன் குழுமம் ஆரம்பிக்கும் அன்று துபாய் கராமா சிவ்ஸ்டார் பவனில் பார்த்தது. ஆச்சு பல வருஷம். அதன் பின் இப்போது தான் பார்க்கிறேன். பாப்பா நட்ராஜுடன் நன்றான ஒட்டிக்கொண்டாள்.ஜஸீலா நட்ராஜிடம் "தம்பி உன் அப்பாவை எல்லாரும் அபிஅப்பான்னு சொல்றாங்க. இனிமே நட்ராஜ் அப்பான்னு சொல்லனும் சரியான்னு போட்டு கொடுக்க ஏற்கனவே அந்த விஷயத்தில் என் மேல ரொம்ப காண்டா இருந்த நட்ராஜ் இன்னும் சூடாகினான்.:-) பின்னர் சென்னை செல்ல பைபாஸ் சாலைகள் வழி எல்லாம் சொல்லிவிட்டு மாயவரம் வரும் வரை நான் என் வண்டியில் முன்னே செல்ல அவர்கள் கார் பின் தொடர்ந்தது.
இந்த பதிவு அடித்து முடிக்கும் போது அவர்கள் சிதம்பரம் தாண்டி விட்டதாக ஆசீப் கிட்டே இருந்து போன் வந்தது. அடடே என்ன ஒரு அழகான நட்புகள். எத்தனை மலரும் நினைவுகள். காலம் தான் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. நண்பர்களுடன் இதை இந்த பதிவின் மூலமாக பகிர்ந்து கொள்வதில் தான் எத்தனை ஒரு சந்தோஷம்!
கடைசி வரை ஆசீப் கிட்டே யாருக்கு கல்யாணம், மணமகன் பெயர் என்ன, மணமகள் பெயர் என்ன என்ற கேள்விகளை கேட்க மறந்தே போனேன். நான் நன்றி சொல்லாவிடினும் சாப்பிட்ட வயிறு அந்த மணமக்களுக்கு நன்றி சொல்ல ஆசைப்படுது. வாழ்க மணமக்கள்!