பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 4, 2013

காலச்சக்கரம் - ஷேவிங் ஆசை!



சின்ன வயதில் எப்போது பார்பர் ஷாப் போனாலும் யாராவது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஷேவ் செய்து கொள்ளும் போது அந்த பார்பர் "ரவுண்ட் ஷேவிங் சோப்"ல்லில் ஷேவிங் பிரஷை தண்ணீரில் நனைத்து விட்டு இரு விரல்களால் அழுத்தி தண்ணீர் அதிகம் இல்லாமல் அந்த ஷேவிங் ரவுண்ட் சோப்பில் ஒரு சுழட்டு சுழட்டி விட்டு சாய்ந்து கிடப்பவன் கன்னத்தில் விளையாடும் அந்த அழகை ரசிப்பேன். நொடியில் அவன் முகம் முழுக்க நுரை மூடும். பின்னர் அதை கத்தியால் லாவகமாக வழித்து எழுத்து தன் புறங்கையில் அதை தடவி சேகரித்து ஓரளவுக்கு மேல் ஆனதும் அதை ஒரு சிந்து பாத் அல்லது ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் பிட்டு பேப்பரில் வழித்து அதை மடக்கி குப்பையில் போடுவதை பார்த்து கொண்டு இருப்பேன். அந்த ஷேவிங் ரவுண்ட் பார்த்தால் ஏதோ தேங்காய் மூடியில் தாய்மார்கள் பாதி திருகிவிட்டு மீதி வச்சமாதிரி இருக்கும்.

வீட்டில் அப்பா செல்ஃப் ஷேவிங் செய்துக்கும் போது இந்த வித சடங்குகள் எதும் இல்லாமல் "டேய் ஓடிப்போய் ஒரு 'அஷோக்' பிளேடு வாங்கியா" என நாலணா நீட்டும் போது அடுத்த கேள்வி "அது இல்லைன்னா?" என்பேன் .... அதுக்கு அப்பா "எடுத்ததும் ஏன் நெகடிவா பேசுற? இல்லைன்னா 'பனாமா' வாங்கிட்டு வா" என அனுப்புவாங்க. வாங்கி வந்ததும் அதை பிரித்து ஒரு ரேசரில் போட்டு தண்ணி தொட்டு அவாசரமாய் இரு கன்னத்திலும் தடவி விட்டு  ஏதோ குளிக்கும் சோப் கொஞ்சம் கையில் பிடித்து தாவங்கட்டையில் சர சரவென கடமைக்கு தடவிகிட்டு... அது நுரையே வராது... இருப்பினும் ரேசரை எடுத்து வரட்டு வரட்டுன்னு இழுக்க ஆரம்பிச்சு மீசை கிட்டே மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அதும் கூட ஒரு நிமிஷத்தில் முடிஞ்சிடும்...  முடிக்கும் முன்பே "வென்னீர் ரெடியா?"ன்னு  குரல் கொடுத்து கொண்டே குளிக்க போய்விடுவாங்க. ஷேவ் செய்த தடயங்கள் எதும் இருக்காது அந்த இடத்தில்.

ச்சே... என்ன அப்பா இப்படி இருக்காங்க... நானென்லம் பெரியவனாகி மூஞ்சி முழுக்க தாடி இருக்கும் போது ஒரு நல்ல "ஷேவிங் ரவுண்ட் சோப்" வாங்கி, பிரஷ் எல்லாம் வாங்கி சூப்பரா செஞ்சுக்கனும் என நினைத்துக்கொள்வேன். பின்னர் பதின்ம வயதுகளில் அரும்பு மீசை எட்டி பார்த்த காலத்தில் தாவாங்கட்டையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாலு முடி நீட்டி நிற்கும் போதே மெனக்கெட்டு சைக்கிள் எடுத்து கிட்டு நண்பன் வீட்டில் சென்று "இன்னிக்கு எனக்கு ஷேவிங் செஞ்சுக்கனும். நான் கடைத்தெருவுக்கு வர மாட்டேன். என்னை வந்து டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு பந்தால்லாம் விட்டு விட்டு வருவேன். அன்று எந்த வேலை வீட்டில் சொன்னாலும் ... "நோ நோ... நான் ஷேவிங் செஞ்சுக்கனும்... ச்சேச்சே இந்த மீசை, தாடி வேற வளர்ந்து தொங்குது... ஆம்பிளையா பொறந்தாலே எத்தனை தொல்லை, எத்தனை தொல்லை..." என போலியாக அலுத்துக்கொள்வேன். தவிர இன்னும் ஒரு பயம்... இன்றைக்கு ஷேவ் செய்து கொண்டால் அந்த நாலு முடி மீண்டும் எட்டிப்பார்க்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ??? மீண்டும் இந்த பந்தா காட்ட ஊஃப்ப்ப்...

வீட்டு முற்றத்தில் வாகாய் மனைக்கட்டை எடுத்து எனக்கு ஆசனமாய் போட்டுக்கொண்டு முற்றத்தின் மேல் தாழ்வாரத்தில் இருக்கும் தூணில் பெரிய கண்ணடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சின்ன கிண்ணத்தில் உப்பு போட்ட வென்னீர் ( காயம் பட்டால் செப்டிக் ஆகக்கூடாதாம்... கல்கண்டில் படித்த டிப்ஸ்), ஷேவிங் ரவுண்டு சோப், படிகாரக்கல், டெட்டால், ஷேவிங் ப்ரஷ், ரேஸர், வில்கின்ஸ் ப்ளேடு (அது தான் அப்போதிக்கு ஒஸ்தி) எல்லாம் ஒரு அட்டகாசமான செட்டப்பில் வைத்து கொண்டு சோப்பில் சுழட்டிய பிரஷ் எடுத்து நெற்றி, கண் தவிர்த்து எல்லா இடத்திலும் அப்பிக்கொண்டு (ஹூம் அந்த நீட்டிக்கொண்டு இருக்கும் நாலு முடியை கண்ணை மூடிக்கொண்டு கையால் பிடிங்கினால் கூட மொத்தமே 8 வினாடி போதுமானது) வீட்டு கதவை யாரும் தட்டாத போதே "யாரது வீட்டு கதவை திட்டுவதுப்பா இந்த நேரத்திலே... நிம்மதியா ஷேவ் பண்ணிக்க கூட முடியல..." என அலுத்துக்கொண்டே துண்டை பெரிய மனுஷனாட்டம் போர்த்தி கொண்டு வாசலில் நுரை முகத்துடன் வந்து சாலையை பார்த்து "யாருப்பா கதவை தட்டுனது..."ன்னு ....ஆகா என்ன ஒரு அமர்களம்....

அப்பன்னு சாலையில் போகும் யாராவது தெரிஞ்சவங்க "என்னப்பா என்ன பார்க்கிறே"ன்னு கேட்டுட்டா போதும்... சொர்கமே அது தான்... "அடடே நாகராஜ் அண்ணனா... ஒண்ணும் இல்லைன்னே... ஷேவ் பண்ணிக்க உட்காந்தேன். யாரோ வந்து கதவை தட்டினாங்க. அதான் யாருன்னு  பார்க்க வந்தேன்" என சொல்லிட்டு வருவேன். மெதுவாக வழித்து எடுத்து எடுத்து பார்ப்பின் அந்த சோப் நுரைக்குள் அந்த நாலு முடி மாட்டாமல் நுரை எல்லாம் வந்த பின்னும் நட்டுகிட்டு நிக்கும்... பின்னே சுத்தி சுத்தி பார்த்து விட்டு கையால் அதை பிடுங்கி எரிந்து விட்டு காயம்படாத கன்னத்தில் படிகாரம் போட்டு எரிச்சல் ஆகிக்கிட்டு "அய்யோ... எரியுதே"ன்னு புலம்பிகிட்டு பின்னே அதுக்கு மேலே டெட்டால் வேறு போட்டுப்பேன்.

இப்படியாக பதின்ம வயது எல்லாம் முடிந்து, பின்னே படிப்பு எல்லாம் முடிந்து வேலைக்கு போகும் காலத்தில் தினமும் ஆபீஸ்க்கு ஷேவிங் செஞ்சு கிட்டு தான் போக வேண்டும் என்ற நிலையில் நிஜமாகவே ஷேவ் செஞ்சுக்க அலுப்பாய் தெரிந்தது. எதற்காக ஆசைப்பட்டனோ அது மிக மிக ஒரு எரிச்சலான விஷயமாக மாறிப்போனது எனக்கு.
இரண்டு நாள்  ஷேவ் செய்யாமல் விட்டால் "என்னாச்சி உடம்புக்கு? ஜுரமா?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆக இந்த பாழாய்ப்போன சமூகத்துக்காகவே ஷேவ் செய்து தொலைக்க வேண்டியதாய் போனது.

எப்போது எனக்கு ஷேவிங் என்பது எரிச்சலான சமாச்சாரமாக ஆனதோ அப்போதிலிருந்தே இந்த ஷேவிங் சோப்... ஆஃப்டர் ஷேவிங் லோஷன் இதல்லாம் தூக்கி கடாசிட்டேன். இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்னேனே என் அப்பா ஷேவிங் செய்து கொள்ளும் லட்சனம்... அது போலத்தான் இப்போதெல்லாம் வரட்டு வரட்டுன்னு இழுத்து விட்டு  ஐந்து நிமிடத்தில் குளிக்க போய்விடுகிறேன்.

இரு நாட்கள் முன்பாக என் மகனை அழைத்து கொண்டு தீபாவளிக்காக கடைத்தெரு சுற்றிக்காட்ட போன போது மணிக்கூண்டு அருகே ஒரு சின்ன பாட்டிலில் ஏதோ சோப் நுரை வைத்து கொண்டு அதில் ஒரு சின்ன வளையம் முக்கி எடுத்து பப்பிள்ள் விட்டு கொண்டு இருந்தான் ஒரு ஆசாமி. ரோட்டோர வியாபாரி. அது வேண்டும் என என் மகன் கேட்க வாங்கி கொடுத்தேன். "இந்தநுரை தீர்த்து பேச்சுதுன்னா இவன் அழுவானேப்பா, இந்த நுரை எது வச்சிப்பா செய்வே?" என நான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக கேட்க அந்த வியாபாரி "அது ஷேவிங் கிரீம் இருக்குல்ல சார், அதை கொஞ்சம் தண்ணில கரைச்சு இந்த பாட்டில்ல ஊத்திகுங்க. சோப்பை விட அதிலே நிறைய பப்பிள்ஸ் வரும்" என சொன்னான்.

மீண்டும் நடந்து வரும் போது என் மகன் என்னிடம் கேட்டான் "அப்பா, நீ மட்டும் ஏன்ப்பா மூஞ்சில நிறைய நுரை வச்சிகிட்டு ஷேவ் பண்ணிக்க மாட்டேங்குற. அந்த க்ரீம் வாங்கிட்டு போவுமா? நம்ம வீட்டிலே தான் அது இல்லியே. நீ சோப்பு தானே போட்டு ஷேவ் பண்ணிக்கிற. நான் ஹேர் கட் பன்ணிக்க போகும் போது அந்த கடைல பார்ப்பேன்.. எவ்ளோவ் நுரை தெரியுமா அவரு வரவழைப்பாரு... நான் பெரியவனா ஆனதும் நிறைய நுரை எல்லாம் போட்டு பெரிய மீசைல்லாம் வச்சு ஷேவ் பண்ணிக்குவேன்"


காலச்சக்கரம் என்ன வேகமாய் சுழலுகின்றது!