பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 29, 2014

மெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்!!!



இந்த டெலிமார்கெடிங் ஆசாமிகளுக்கு எப்படித்தான் டேட்டாஸ் கிடைக்கிறதோ தெரியவில்லை. சமீபமாக ஒரு கம்பனியில் இருந்து போன்.


"சார் நீங்க தான் அபிராமி அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க பொண்ணை மெடிகல் சேர்கனுமா?"

"ஆமாங்க ஆமாம்"

"ரொம்ப சிம்பிள். அப்ராட்ல படிக்க வையுங்க. ஜஸ்ட் 25 லட்சம் தான். பிலிப்பைன்ஸ்ல... போக்குவரத்து செலவு, கட்டுசோறு செலவு உட்பட மெடிகல் முடிஞ்சு அதிலே பி ஜியும் முடிச்சு அதன் பின்னே இங்க இந்தியாவிலே ஒரு டெஸ்ட் இருக்கு, அதையும் பாஸ் பண்ண வச்சு உங்க கிட்ட டாக்டரா ஒப்படைக்கும் வரை  ஜஸ்ட் 25 லட்சம் தான்"

"ஜஸ்ட்(!?) 25 லட்சம் தானா, இருக்கட்டும்க, அவ மார்க் என்னான்னு பார்த்துகிட்டு பின்ன பேசுவோம்"

"சார் இப்ப அட்மிஷன் நடக்குது வெறும் ஒன்னரை லட்சம் கட்டி சீட் வாங்கிடுங்க. மத்ததை பின்ன பார்த்துப்போம். பாஸ்போர்ட் கூட நாங்க அப்ளை பண்ணி வாங்கி, விசா ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சிடுவோம்"

"பிசாத்து காசு ஒன்னரை லட்சம் தானே. குடுத்தா போச்சு. (அவ்வ்வ்வ்) பின்ன பேசிப்போம்"

ஒரு வழியா போனை கட் பண்ணும் வரை போதும் போதும் என்றாகிவிடும். பேசுவது ஆண்களா இருந்தா கூட கொஞ்சம் கடுமையா சொல்லி வைக்கலாம். எல்லாம் பொம்பள பசங்க. கடுமையா பேசி நோகடிக்க மனசும் வரலை. பாவம் அவங்க பொழப்பு அது.

இப்படியாக நாலொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன் கூட அல்லாடிக்கொண்டு இருந்தேன்.

இப்படித்தான் இரண்டு நாள் முன்பாக இரவு வெகுநேரம் கழித்து வந்தேன் வெளியூரில் இருந்து. காலையில் அசந்து தூங்கி கொண்டு இருந்த போது போன் வந்தது. எடுக்கலாம் என நினைக்கும் போது அசதியில் முடியவில்லை.  என் மகன் நட்ராஜ் தான் எடுத்தான். தூக்க கலக்கத்தில் அந்த சம்பாஷனைகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"ஹலோ சார், எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன்" - நட்ராஜ்

(நட்ராஜ்க்கு எப்போதும் போனை ஸ்பீக்கர்ல போட்டு பேசுவது தான் வழக்கம். காது வலிக்கும் என டேபிள் மேலே வச்சுட்டு நடந்து நடந்து எல்லாம் பேசுவான்)

"யாரு தம்பி இது. வீட்டிலே அப்பா இல்லியா? அப்பா கிட்டே கொடுங்க நல்ல பிள்ளை தானே நீங்க?"

"நான் நல்ல பிள்ளை தான். அப்பா தூங்குறாங்க. எழுப்பினா கத்துவாங்க"

"சரி அம்மா கிட்ட கொடுங்க"

"அம்மா கோவிலுக்கு போயாச்சு. அக்கா ட்யூஷனுக்கு போயாச்சு. இன்னிக்கு ஃபுல் டெஸ்ட் இருக்கு பிசிக்ஸ்ல"

"சரி வீட்டிலே பெரியவங்க இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். என் பிரண்ட் கோகுலோட தம்பி நகுல் எல் கே ஜி தான் படிக்கிறான். அவனே என்னை "அண்ணா"ன்னு தான் சொல்லுவான். அதனால நானே பெரியவங்க தான். அதனால என் கிட்ட சொல்லுங்க"

"அது வந்துப்பா... அபிராமிக்கு மெடிகல் சீட் பிலிப்பைன்ஸ்ல படிக்கிறது விஷயமா பேசனும்"

"பிலிப்பைன்ஸ் எங்க இருக்கு?"

"தூரமா இருக்கு. அப்பாவை எழுப்புங்க"

"மேக்னா  மெட்ரிகுலேஷன் ஸ்கூலை விட தூரமா?"

"என்னது? ...இது ரொம்ப தூரம், பிளைட்ல போகனும், அப்பாவை எழுப்புங்க"

"ஆட்டோவுல தான் நான் போவேன். அதுக்கு மாசம் 600 ரூப்பீஸ். பிளைட்ல தினம் போகனும்னா எவ்ளோவ் பீஸ்"

"தம்பி நல்ல பிள்ளை தானே நீங்க. அப்பாவை எழுப்புங்க"

"நான் பிலிப்பைன்ஸ்ல படிக்க எவ்ளோவ் ஆகும்"

கொஞ்சம் சலிப்புடன் "25 லட்சம் ஆகும்"

"நான் ஃபோர்த் ஸ்டேண்டர்ட் போனதும் நானும் பிலிப்பைன்ஸ்ல வந்து படிக்கட்டா"

"தம்பி வீட்டிலே பெரியவங்க வேற யாரும் இருந்தா கொடுங்க"

"நானே பெரியவங்க தான். வேணுமின்னா நகுல் கிட்டே கேளுங்க. அவன் அம்மா நம்பர் தரவா"

"தம்பி நீங்க +2 முடிச்சதும் இங்க வந்து படிக்கலாம். இப்ப அப்பாவை எழுப்புங்க"

"அதான் சொன்னனே அப்பாவை எழுப்பினா கத்துவாங்க. 25 லட்சம்னா ட்வண்டி ஃபைவ் போட்டு எத்தினி சைபர்"

அவங்க மனசுகுள்ள கணக்கு போட்டு பார்த்திருப்பாங்க போலிருக்கு..... கொஞ்சம் இடைவெளி விட்டு "அது நிறைய சைபர் இருக்கு"

"அய்யோ, மேக்னா ஸ்கூல்ல 14 போட்டு மூணு சைபர் தான். அம்மா அதுக்கே கத்துறாங்க. நெறய சைபர்க்கு  நெறய கத்துவாங்க"

"அது வேற ...இது வேறப்பா. அப்பாவை எழுப்பு"

"ப்ளைட் பெருசா இருக்குமா? கோகுல், வித்யா எல்லாம் என் ஆட்டோவிலே வருவாங்க, அவங்களும் அங்க சேர்ந்தா எல்லாரும் பிளைட்ல போலாம்ல"

"ஆமாம், அம்மா வந்தாச்சா கோவில்ல இருந்து"

"இன்னும் வரலை. வந்தாலும் தரமாட்டேன். எனக்கு சொல்லுங்க பிளைட் பெரிசா இருக்குமா?"

"ம் இருக்கும்" ரொம்ப டயர்டா ஆகிட்டாங்க போலிருக்கு.

"நீங்களும் பிலிப்பைன்ஸ்ல தான் படிச்சீங்கலா"

"இல்ல. அங்க படிச்சா நான் ஏன் டெலிமார்கெடிங்ல இருக்கேன்"

"டெலிமார்கெடிங்னா என்னா?"

போன் டக்கென வைக்கப்பட்டது.

சரியான "மூடர் கூடத்தில்" வந்து மாட்டிகிட்டோம்னு நினைச்சிருப்பாங்க அந்த பெண்.

அதன் பின்னர் இதுவரை அவங்க கிட்ட இருந்து போன் வரலை. அவங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தானே தெரியும்!

December 27, 2014

"பாரத்ரத்னா கலைஞர் மு.கருணாநிதி"


"பாரத்ரத்னா" - இந்தியாவின் மாபெரும் உயரிய சிவிலியன் விருது. அந்த விருதுக்கு இந்த வருடம் இந்து மாகான சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது. அது பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை...


இந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் "பாரத்ரத்னா" வழங்க வேண்டும் என்ற குரல் கலைஞரிடம் இருந்து ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சில தோழர்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தை அமைப்பு தோழர்கள் சிலரிடம் இருந்தே கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார் என்று இணையத்தில் எழுதி வருகின்றனர்.


நான் கேட்கின்றேன். கலைஞருக்கு "பாரத் ரத்னா" கொடுக்க வேண்டும் என கேட்டால் என்ன தவறு? கலைஞருக்கு ஏன் பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என பட்டியலிட்டால் அந்த கட்டுரைகள் பல பாகங்கள் வரும்.  இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கு பாரத்ரத்னா ஏன் இன்னும் கொடுக்கவில்லை என அதிகாரமாக ஆக்ரோஷமாக கேட்க வேண்டும் தமிழனாக பிறந்த எவனும். திராவிடனாய் பிறந்த எவனும். நிலமை அப்படி இருக்க "கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார்" என எழுதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதுவே கலைஞர் அவர்கள் உயர்சாதி வகுப்பில் பிறந்து இருந்தால் அகில இந்தியாவுமே கொண்டாடி இருக்கும். மாற்றாக அவர் மிகவும் பிற்ப்பட்ட சமூகத்தில் வந்து பிறந்து விட்ட பாவத்தால் தான் இப்படி நம்மை சார்ந்த தோழர்களே ஏளனம் செய்யும் நிலையில் இருக்கின்றார்.


பொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) "பாரத்ரத்னா" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல "பாரத்ரத்னா" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான "பிரதமர்" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் "வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் " என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை "திரும்பிப்பார்" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து  சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே!


\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.


ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.




மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.


பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!


அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.


ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.


ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?


அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.


ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\

இது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.
சமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்


அரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.
அரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967
பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969
தமிழக முதலமைச்சர் 1969 – 1971
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976
தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986
மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991
நான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001
ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011
அதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.


தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......


குளித்தலை 1957-62
தஞ்சாவூர் 1962-67
சைதாப்பேட்டை 1967-71
அண்ணாநகர் 1977-76
அண்ணாநகர் 1977-80
அண்ணாநகர் 1980-83
சட்ட மேலவை உறுப்பினர் 1984-1986
துறைமுகம் 1989-91
துறைமுகம் 1991
சேப்பாக்கம் 1996-2001
சேப்பாக்கம் 2001-2006
சேப்பாக்கம் 2006 லிருந்து
திருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.


இதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.

தலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது  அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என "பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன்! இது சவால்! எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.


கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்

ஒரே கலைஞர்  ... இவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது? இதோ "ராஜபக்ஷெ"வுக்கு  "பாரத் ரத்னா"கொடுக்க வேண்டும்  என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.

தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.


கலைஞருக்கு "பாரத்ரத்னா" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒன்றுக்காகவே அவருக்கு "பாரத்ரத்னா" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... "இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. "விலையில்லா அரிசி "என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த "விலையில்லா அரிசி" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு "பாரத்ரத்னா" விருது கொடுக்க!




கலைஞருக்கு "பாரத்ரத்னா" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு "பாரத்ரத்னா" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த "அறிஞர் அண்ணா" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் "தந்தை பெரியார்", "அறிஞர் அண்ணா" , "கலைஞர்" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே "பாரத்ரத்னா" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்!







மீண்டும் சொல்கிறேன்... இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல்.....
எதிர்கால தமிழகத்துடன் தலைவர் கலைஞர்

December 21, 2014

திருமதி.மனோரஞ்சிதம் டர்பிடோ அவர்களுக்கு வீரவணக்கம்



எங்கள் மயிலாடுதுறையில் திமுகவை வளர்த்தவர்கள் என சொன்னால் அதில் முக்கிய பங்கு M.B.ராதாகிருஷ்ணன் என்னும் ராதாமாமாவுக்கு உண்டு. இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அவர் ஒரு தொழுநோயாளி. இருப்பினும் காலை 5.30க்கு தன் வீட்டில் இருந்து திமுக கொடி கட்டிய சைக்கிளில் தன் கட்சிப்பணியை தொடங்கினால் இரவு தூங்கும் வரை கட்சிப்பணி தான். அவர் என்னை " டர்பிடோ"ன்னு கூப்பிடுவார். எனக்கு அந்த பட்ட பெயரில் உடன்பாடு இருக்காது எனினும் அவரை ஒன்னும் சொல்லவும் முடியாது. ஒரு நாள் கேட்டேன் அவரிடம். "மாமா டர்பிடோன்னா என்னா? அதுக்கு அவரு சொன்னாரு. "எலேய் தம்பி, இந்த ஆசாரி எல்லாம் வச்சிருப்பாங்களே தொரப்பனம், மரத்தை ஓட்டை போட ... {இந்த இடத்தில் நான் தொரப்பனம் பத்தி சொல்லிடுறேன். ரொம்ப சிம்பிள்... இப்போ நாம் பார்க்கிறோமே Drill Machine அதான் தொரப்பனம். அது அப்போ மேன்லியா இருந்த போது மிஷின் இல்லாத போது அந்த ட்ரில் பிட்டை  அந்த கருவியின் முனையில் வச்சி  அந்த கருவியின் நடுவே கயிறு சுத்தி இரண்டு பக்கமும் இரண்டு பேர் முன்னும் பின்னும் இழுத்தால் அந்த ட்ரில் பிட் சுத்தி சுத்தி ஓட்டை விழும். அது தான் இப்போ அழிந்து போய் ட்ரில் மிஷின் முனையில் ட்ரில் பிட் வச்சு புழக்கத்தில் இருக்கு.. இப்போ ராதாமாமா சொல்வதை கேட்போம்} அந்த தொரப்பனம் மாதிரியே இங்கிலீஸ்காரன் மிலிட்டரில ஒரு மிசினு இருக்கும். அதுக்கு மொனையிலே ஓட்டை போட அந்த இரும்பிலே செஞ்ச குண்டு இருக்கும்(drill bit). இந்த போர்க்கப்பல் வருதுல்ல அதுக்கு பக்க வாட்டிலே போய் இந்த மிசின வச்சி இங்கிலீஸ்காரன் சுட்டா சும்மா சாட்டைல இருந்து பம்பரம் போவுமே அப்புடி அந்த குண்டு பாய்ஞ்சு போய் கப்பல் வவுத்துல குத்தும். குத்திட்டி நிக்காது. சுத்தும். அப்புடி சுத்தும் போது அது மரம் தானே... அதுல ஓட்டை வுழுந்துடும். அது வழியே தண்ணி பூந்து கப்பல் கவுந்துடும். அந்த துப்பாக்கிக்கு பேர் தான் டர்பிடோ. அந்த மாதிரி ஒருத்தர் நம்ம கட்சில இருக்காரு. அவரு பேரு ஏ.பி.ஜனார்தன நாயுடு. இந்த ஆளு பேசினா மேடையிலே பேசினா அந்த வார்த்தை எதிரியை துளைத்து அவன் இதயத்தை ஓட்டை போட்டு ஆளை அடிச்சிடும். அத்தனை கூர்மையாக சுத்தும் வார்த்தைகள் அது. இதுகாண்டியே அவரை எல்லாரும் டர்பிடோன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அவரு பெரியாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. அண்ணாவுக்கு பிரண்டு. பூர்வீகம் தெலுங்கு. அப்போ சென்னை ராஜதானியா இருந்தப்ப திராவிட நாடு எல்லாம் சேர்ந்து தான் சென்னை மாகாணம். பின்ன இவரு வேலூருக்கு வந்து படிச்சாரு. பின்ன சென்னைல படிச்சாரு. தெலுங்குல மேடைல பேசுவாரு. இங்கிலீசுல பேசுவாரு. பின்னால கலைஞர் விடுதலைல ஈரோட்டிலே வேலை செஞ்சப்ப ஈரோட்டிலே இவரு ஆங்கில பத்திரிக்கை ஜஸ்டிசைட்ல வேலை செஞ்சாரு.

அந்த ஆளு மாரியே நீ படார் படார்ன்னு பேசிடுற ... கேக்குறவன் நெஞ்சை துளைக்கிற மாரி ஆகுது. அதனாலத்தான் ஒன்ன டர்பிடோன்னு சொல்றேன்"ன்னு பெரிய விளக்கம் கொடுத்தார். அது முதல் எனக்கு டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மீது ஒரு ஈடுபாடே வந்து விட்டது. உடனே நான் என்னை டர்பிடோ அளவுக்கு என்னை உயர்த்திகிறேன் என இதை படிப்பவர்கள் என்னைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது. இது ராதா மாமாவின் பழக்கம். ஒவ்வொறுவரையும் அவர் இப்படி நீதிக்கட்சி தலைவர்கள் பெயரால் அழைப்பது வழக்கம். {எப்படியெல்லாம் கட்சியை வளர்த்து இருக்காங்க பாருங்க} ஒருத்தனை பார்த்து "வாய்யா ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்"ன்னு அழைப்பார். ஒருத்தனை பார்த்து "யோவ் டி.எம்.நாயரே"ன்னு கூப்பிடுவார். இந்த "ரவு ஸ்வெடசல்லபதி ராமகிருஷ்ண ரங்காராவ்" பெயர் மாத்திரம் எங்களுக்கு மனப்பாடம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கும். அதை பார்த்து ராதாமாமா "பசங்கலா வாயில வரலைன்னா பொப்பிலி அரசர்"ன்னு சொல்லிடுங்க என்பார். அதான் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான  பொப்பிலி அரசரின் உண்மையான பெயர்  என்பதே எங்களுக்கு அப்போது தான் தெரியும். (அப்போது எங்கள் வயது 12 முதல் 15 வரை தான் இருந்த கால கட்டம்) சரி...கம் டு தி பாயிண்ட்...

இப்படியாக அடியேனுக்கு டர்பிடோ மீது இனம் புரியாத காதல் வந்ததது. நான் 1983 முதல் 1986 வரை டிகிரி முடித்த பின்னர் சென்னைக்கு வேலைக்கு சென்ற போது 1987ல் ஒரு நாள் பேப்பரில் டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் மறைவு என முரசொலியில் தலைவர் கலைஞர், பேராசிரியர் எல்லாம் இரங்கல் தெரிவிச்சு இருந்தாங்க. அதே போல நாவலர் நெடுஞ்செழியன் அப்போது நிதிஅமைச்சர் ஆக இருந்தார். எம் ஜி ஆர் ஆட்சி காலம். அவரும் மக்கள் குரல் பத்திரிக்கைல பெரிசா இரங்கல் செய்தி கொடுத்தார். 13 வயதில் ராதா மாமா ஊட்டிய அந்த டர்பிடோ காதல் மீண்டும் துளிர்க்க அவர் இறந்தமைக்கு போக வேண்டும் என நினைத்தேன். அப்போது போக முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் சில நாள் கழித்து நானும் ஜானப்பா என்ற (இப்போது துபாயில் இருக்கிறார்) என் முதலாளி மகனும் ஒரு சில்வர் பிளஸ் வண்டி எடுத்து கிட்டு அவங்க வீட்டை கண்டு பிடிச்சு போனோம்.

அங்கே அவர் மனைவி மனோரஞ்சிதம் இருந்தாங்க. அவங்களுக்கு ஒரு மகள். டாக்டர்ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ வயசு 21 இருக்கும். அவங்க சின்ன பசங்க ஆர்வமா வந்திருக்காங்கனு உட்கார வச்சி பேசினாங்க. டர்பிடோ பத்தி நிறைய பேசினாங்க. என் பெயர் கேட்டாங்க. தொல்காப்பியன் என சொன்னேன். சுத்தமான தமிழ் பெயர்ன்னு பாராட்டினாங்க.
"தம்பி என் பெயர் என்ன தெரியுமா? மனோரஞ்சிதம்"ன்னு சொன்னாங்க. நான் தெரியும் என சொன்னேன். உடனே " என் வீட்டு பெயர் எல்லாம் தெரியுமா? என் தங்கைகள் பெயர் சிலப்பதிகாரம், மணிமேகலை. அது போல என் தம்பிகள் பெயர் சாந்தகுணாளன், தசகிரீவன். இந்த சாந்தகுணாளன் யார் தெரியுமா? அதாவது அந்த புராண காலத்திலேயே "கடவுள் இல்லை"ன்னு சொன்ன கேரக்டர். எங்களுக்கு எல்லாம் முன்னோடி. இரணியன் தான் சாந்த குணாளன். அது மாதிரி இந்த தசக்கிரீவன் யார் தெரியுமா? இராவணன் - திராவிடன்"ன்னு சொன்ன போது ஆச்சர்யமாக இருந்தது. மேலும் சொன்னாங்க....
"நாங்க பேரி செட்டியார்ன்னு சாதியாம். அதனால அந்த காலத்திலே பேரிசெட்டியார் சமூகத்திலே நீதிபதியா இருந்த எஸ்.ஏ.அய்யாசாமி செட்டியாரின் பையனுக்கு என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. ஆனா எங்கப்பா கேளம்பாக்கம் பொன்னுசாமி ஒரு பெரியார் தொண்டராச்சா. அதல்லாம் முடியாது. காசு பணம் எனக்கு முக்கியம் இல்லை. சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டேன். அய்யா பெரியார் எந்த பையனை சொல்றாரோ அவருக்கு தான் திருமணம் செஞ்சு வைப்பேன்னு சொல்லிட்டாக. பின்ன அய்யா தான் இந்த டர்பிடோவுக்கு கடுதாசி போட்டு வரவழைச்சு திருச்சில பெரியார் மாளிகைல அம்பதாறுல திருமணம் ஆச்சுது. பெரியாரே செலவு செஞ்சு சுயமரியாதை திருமணம் செஞ்சு வச்சாரு. அப்போ எனக்கு 20 வயசு. டர்பிடோவுக்கு 38 வயசு. டர்பிடோ தெலுங்கர். நாயுடு சாதி. நானோ செட்டியார் சாதி. எங்க ஒரே பொண்ணு டாக்டர் வெண்ணிலா திராவிட சாதி"ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க.

மேலும் நிறைய விஷயங்கள் டர்பிடோ அவர்களை பத்தி பேசினாங்க. அவரின் ஆங்கில புலமை, கலைஞரின் "கிழவன் கனவு" என்னும் புத்தகத்துக்கு டர்பிடோ எழுதின முன்னுரை, அண்ணா பத்தி டர்பிடோ எழுதிய புத்தகம், பெரியார் பத்தி எழுதிய புத்தகம் எல்லாம் சொன்னாங்க. மேலும் "தம்பி, ஒரு திருமணத்துக்கு போவதுக்கு தானே புருஷன் பொண்டாட்டி எல்லாம் ஜோடியா போவாங்க. ஆனா நாங்க ஜெயிலுக்கே ஜோடியாத்தான் போவோம்"ன்னு சொன்னாங்க. இவங்க திராவிட போராட்டங்கள் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களுக்கு சிறை சென்றவங்க. பின்னர் என்ன சாப்பிடுறீங்கன்னு கேட்ட போது ஒன்றும் வேண்டாம் என்றோம். ஆனால் மோர் குடுத்தாங்க. (இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் எனில் மோர் குடித்ததை பதிவு செய்தால் கிச்சன்ல மோர் குடிச்சுட்டு பழத்தை வாங்கிக்கொள்ளும் புள்ளையார்ன்ன்னு நாலு பேர் புகைச்சலாக எழுதட்டுமே என்று தான். அதை படிக்கும் நாலு பேர் சிரித்து சந்தோஷமாக இருந்தா சரி தான்)

ஆக இப்படிப்பட்ட மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் நேற்று நம்மை விட்டு பிரிந்து இயற்கை எய்தினார்கள். மரணத்தை மிக சந்தோஷமாக எதிர்கொண்டு பாரதியை போல "காலா என் அருகில் வாடா உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்" என்கிற வகையில் சந்தோஷமாக எதிர்கொண்டு மறைந்தார்கள். இறந்த பின்னர் தன் உடலை மருத்துவ படிப்புக்கு பயன்படும் வகையில் "உடல் தானம்" செய்ய வேண்டும் என சாசனம் எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார் அம்மையார். இதோ எங்கள் முகநூல் தோழர் திரு. அருள்பிரகாசம் சார் (காஞ்சிபுரம்) அவர்களின் தந்தையாரும் தாயாரும் உடல் தானத்துக்கு சாசனம் எழுதி வைத்தது போல, எங்கள் எதிர்கால தமிழகம் தளபதியும்,  அண்ணியாரும் தங்கள் மறைவுக்கு பின்னர் உடல்தானம் எழுதி வைத்துள்ளது போல, சாலை இளந்திரையன் தம்பதிகள் எழுதி வைத்தது போல நம் மனோரஞ்சிதம் அம்மையாரும் உடல்தானம் செய்துள்ளார்கள்.

இன்று பொதுமக்கள் பார்வைக்காக சென்னை பெரியார் திடலில் அம்மையார் உடல் பகலில் வைக்கப்பட்டு இருக்கும், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு அளிக்கப்படும்  என ஆசிரியர் தனது இரங்கல் செய்தியில் சொல்லி இருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்களும் தனது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். அம்மையாரைப் பற்றியும் மறைந்த திரு.டர்பிடோ ஏ.பி.ஜனார்தனம் அவர்களை பற்றியும் நிறைய எழுதலாம். அத்தனை விஷயங்கள் உள்ளன.

அம்மையார் திருமதி.மனோரஞ்சிதம்  புகழ் ஓங்குக! எங்கள் வீரவணக்கங்கள் உரித்தாகுக!