பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

July 9, 2016

மீண்டும் நான் அபிஅப்பா இங்கே!

அப்போதெல்லாம் பள்ளிக்கு சேர்க்கும் போது அந்த குழந்தைக்கு 2 ரூபாய்க்கு ஒரு மாலை எல்லாம் வாங்கி போட்டு கன்னத்தில் சந்தனம் எல்லாம் தடவி கையிலே ஒத்த பைசா சாக்லெட் கொடுத்து அந்த சாக்லெட் வாயில் பாதியும் கையில் மீதியுமாக வாயில் எச்சில் ஒழுகவும், கண்ணில் கண்ணீர் ஒழுகவும் வந்து தான் காதை சுத்தி மூக்கை தொட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் நான் என் ஒன்றாம் வகுப்பு லெஷ்மி டீச்சர் வகுப்பில் அழுது கொண்டே அமரும் போது பக்கத்தில் இருந்தவன் பெயர் பாலாஜி. அவன் அப்பா பெயர் செல்வராஜ் பி.ஏ.பி.எல். பள்ளிக்கு எதிர்வீட்டுக்கு 8 வீடு தள்ளி தான் அவன் வீடு. ஆச்சுதா... எனக்கு என் வலது பக்கத்தில் அமர்ந்து இருந்த ராதாவை பிடித்த அளவுக்கு பாலாஜியை பிடிக்கவில்லை. அவன் ஒரு உம்மணாம் மூஞ்சியாக இருந்தான்.

ஏனனில் ராதா என்னுடன் இந்த தேசிய ஆரம்பப்பள்ளி வரும் முன்னரே ஆரியபாலா, அவ்வையார் ஸ்கூல், புதுத்தெரு என பல பள்ளிகளில் பள்ளி தோழனாக (4ம் வயதில் நான்கு பள்ளிகள் நாங்கள் கொட்டம் அடித்து விரட்டப்பட்டும், தானாக வெளியேறியதும் முன்பே எழுதி இருக்கின்றேன்) இருந்தமையால் ராதாவிடமான என் நட்பு பிடித்து இருந்தது. ஆனால் பாலாஜியை என்னால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால் என் துரதிஷ்டம் என் அடுத்த அடுத்த வகுப்பிலும் இதே பாலாஜி தான் என் வகுப்பு தோழன். தோழன் என சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. வகுப்பு எதிரி. எதிரி என்றால் நாங்கள் அடித்து கொள்வோம் என்றெல்லாம் இல்லை. பேசிக்கவே மாட்டோம். ஆனால் செட்டித்தெரு சிவசங்கரன் மாத்திரம் இவனிடம் பேசுவான். (அவன் இப்போது மகாதானத்தெரு அம்பாபாய் திருமண மண்டபம் பக்கத்தில் கடை வைத்து இருக்கான்)

அவனை நான் முறைப்பதும் அவன் என்னை முறைப்பதுமாக பல ஆண்டுகள் ஓடின. அந்த பள்ளியில் இருந்து அடுத்த பள்ளியான உயர்நிலை பள்ளிக்கு வந்த பின்னரும் கூட எங்கள் இருவருக்கும் ஒரே வகுப்பு தான் அமைந்தது. அப்பவும் பேசுவது இல்லை. ஒரு சில நாட்கள் “வீட்டு பாட நோட்டு வேண்டும்” என ஒரு துண்டு சீட்டில் எழுதி அவன் எனக்கு தள்ளி விடுவதும் பதிலுக்கு நான் “தரேன்.. ஆனா மரியாதையா அதிலே நடுப்பக்கம் பேப்பர் கிழிக்காமல் தரவும்” என ‘நோட்’ எழுதி அதை தள்ளி விடுவதும் தான் தொடர்ந்ததே தவிர வாய் வார்த்தைகள் எதும் இல்லை.

சரின்னு அப்படியே வாழ்க்கை போனது.. ஆனால் வகுப்பு பிரிக்கும் போது கூட எங்கள் இருவருக்கும் மட்டும் மாறாது... ஒரு கட்டத்தில் 9ம் வகுப்பு முதள் நாள் நான் வந்து அந்த “எதிரி”க்கு சீட் போட்டு விட்டு காத்திருந்தேன். லேட்டாக வந்த அவன் ஓடி வந்து என்பக்கத்தில் அமர்ந்ததும், அது போல பத்தாம் வகுப்பில் என்.வி சார் வகுப்பில் அவன் எனக்கு இடம் போட்டு வைத்ததும் கூட நடந்தது... பத்தாம் வகுப்பு முடிந்தது.... சரி இனி சனி விட்டது... நான் பாலிடெக்னிக் போய்விடுவேன் என நினைத்து இருந்த போது தான் அந்த விபத்து நடந்தது.... ஆமாம் இருவருக்கும் பாலிடெக்னிக் கிடைக்கவில்லை....
மீண்டும் 11 வது ஏ பிரிவில் இருவருக்கும் அடுத்த அடுத்த இடம். அது எங்கள் பள்ளியில் 3ம் நம்பர் வகுப்பு. அதே போல அதற்கு மேலாக இருப்பது 12 வது ஏ. ஆக அந்த இரண்டு வருடம் கூட அப்படித்தான் கழிந்தது. அப்போதும் பேசிக்கொள்வது கிடையாது. ஒரு வழியாக 12ம் வகுப்பு முடிந்தது....

அடுத்து காலேஜ் சேர வேண்டும்....

முதல் நாள் அட்மிஷன்... நல்ல மார்க் வாங்கினவனுக்கு எல்லாம் இன்னும் லிஸ்ட் வராத நிலையில் எனக்கு வந்து விட்டது. ஈ.எஸ்.கணபதி பிள்ளை அவர்கள் சிபாரிசால் எனக்கு முதல் லிஸ்ட் பெயர். அதை போய் கல்லூரியில் பார்க்கும் போது அட ராமா... அவன் பெயர் எனக்கு முன்னாடி நிக்குது. அவன் ராதாபிள்ளை சிபாரிசால் உள்ளே வந்து விட்டான். சரின்னு காலேஜ் அட்மிஷன் போகும் போது என் அப்பா என்னை அழைத்து போக, அவன் அவன் அப்பாவுடன் அதாவது செல்வராஜ் அப்பாவுடன் வந்தான். நால்வரும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டோம்.

அப்பா தன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் அப்பாவும் முகத்தை திருப்பிக் கொண்டார். அட்மிஷன் முடிந்து வெளியே வந்தோம்...

என் அப்பா என்னிடம் “டேய் அந்த செல்வராஜ் ரொம்ப திமிர் காரண்டா... ஒன்னாவது முதல் சிஸ்த்பாரம் வரை ஒன்னாதான் படிச்சோம். என் பக்கத்தில் தான் அவன் சீட்டு. பி ஆர் தான் வாத்தியார். நாங்க பேசிக்கிட்டதே இல்லை. ரொம்ப திமிர்காரன்” என சொன்னாங்க....

அந்த மூன்று வருடங்களும் நாங்க பக்கத்து பக்கத்துல தான். ஆனாலும் பேச்சு வார்த்தை கிடையாது.

அப்பாடான்னு பி எஸ் சி முடிந்த பின்னர் கூட நாங்கள் கடைத்தெரு, பள்ளி என எங்கு பார்ப்பினும் பேசுவது கிடையாது... ஒழிஞ்சாண்டா என நினைத்துக் கொள்வேன்...

பின்னர் 1992ல் நான் முதன் முதலாம அபுதாபி போன போது சிரியன் ஏர்வேஸ்ல மும்பையில் (அப்போ பம்பாய்) இருந்து போகும் போது கூட பக்கத்து சீட்டில் இவன் வந்துடுவானோ என நினைத்து பயந்தேன்... நல்ல வேளை ... இல்லை...

பின்னர் 1994ல் தான் அவனை பார்த்தேன்... என் வீடு அப்போது மாயூரநாதர் வடக்கு வீதி. அவன் வீடு மகாதானத்தெரு... கூப்பிடு தூரம்...
வீட்டுக்கு வந்தான். நான் அப்போது லீவில் வந்திருந்தேன்... வாசலில் நின்று ஹார்ன் அடித்தான். மனசு திக் திக் என ஆனது. பேசிடுவானோ என பயந்தேன்... பேசவில்லை... ஒரு பத்திரிக்கை கொடுத்தான். விர்ரென போயிட்டான்...

அவனுக்கு கல்யாணமாம்.... எனக்கு அப்போது தான் பெண் பார்க்கும் படலம்....
நானும் கல்யாணத்துக்கு போனேன்... அமைதியாக போய் மேடையில் நின்ற அவன் முகம் கூட பார்க்காமல் அன்பளிப்பை அவன் மனைவி கையில் கொடுத்தேன். வந்து விட்டேன். சாப்பிடவில்லை...

அதன் பின்னர் நான் அந்த ஒரு மாத லீவில் ஒரு நாள் அவன் வீட்டு வாசலில் என் வண்டியில் (அப்பாவின் கைனடிக் ஹோண்டா) ஒரு ஆடு குறுக்கே வந்ததால் சறுக்கி விழுந்தேன். எழுந்தேன்... வாசலில் இருந்தவன் வந்தான். பின்னர் உள்ளே போய் விட்டான். அவன் வீட்டு வாசலில் அமர்ந்தேன். டங் என ஒரு லோட்டா தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். ஒரு காசித் துண்டை எடுத்து என் மீது போட்டான். காயத்தை துடைத்துக் கொள்ள வேண்டுமாமாம். உள்ளே போய் விட்டான்.

நானும் மீண்டும் 1995ல் வந்தேன். என் திருமணம்... அவனுக்கு சென்று பத்திரிக்கை கொடுக்க போனேன். அவன் இல்லை. கதவிடுக்கில் அழைப்பிதழை தள்ளி விட்டு வந்து விட்டேன். அவனுக்கு நண்பனாக இருக்கும் சிவசங்கரை கேட்டேன்... “டேய் அவனுக்கு பேச்சு வருமா? வராதா?” என்றேன்.... சிவசங்கர் சொன்னார் “இதையேத்தான் அவனும் கேட்டான்” ...

என் திருமணத்துக்கு வந்தான். மேடையில் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி அன்பளிப்பை என் மனைவி கையில் கொடுத்தான் போய்விட்டான்....

அடுத்து சில நாட்களில் ஒரு பேய் மழை... எங்கோ போய் விட்டு வண்டியில் வந்து கொண்டு இருந்தான். என் வீடு வந்ததும் நிப்பாட்டினான்... நான் கேட்டை திறந்து விட்டேன். கொட்டும் மழையில்நனைந்து இருந்தான். நான் உள்ளே போய் ஒரு துண்டை எடுத்து வந்து அவன் மீது போட்டேன். பின்னர் உள்ளே போய்விட்டேன்.

இதல்லாம் 1995.....

இன்று 09.07.2016... மாலை நான் வண்டியில் வந்து கொண்டு இருந்தேன்.... அவனும் நானும் அதே எங்கள் பள்ளிக்கு எதிரே சந்தித்துக்கொண்டோம்....
நான் வண்டியை நிப்பாட்டி விட்டேன். அவனும் எதிர்புரம் வண்டியை நிறுத்தி விட்டான்.
சற்று நேரம் இருவரும் பார்த்துக் கொண்டோம்... பின்னர் அவன் போய்விட்டான். நானும் வந்து விட்டேன். வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் எல்லாம் சொன்னேன்.
“அடடே பாலாஜி பொண்ணு கூட நம்ம அபி கூடத்தான் படிக்கிறா... சேர்க்கும் போது அவரும் அவர் மனைவியும் தான் வந்தாங்க. ஆனா பேசலை நாங்க. பின்ன மயிலாடுதுறை என்றதும் தான் அவங்க மனைவி பேசினாங்க. அனேகமாக அபி க்ளாஸ் தான் இருக்கனும். ஆனா தெரியலை” என சொன்னாங்க....
ஆக மூன்றாம் தலைமுறையாக அந்த நடக்காத சண்டை நடந்து கொண்டு இருக்க வேண்டும்....
..............

நிற்க.... ஒரு வேளை பாலாஜியும் இது போல முகநூல் பதிவுகள் எழுதுபவனாக இருந்தால் இதே பதிவை எழுதி இருக்கலாம். யார் கண்டது? ஆகவே பாலாஜி என தேடிப்பார்த்து உங்கள் நேரத்தை செலவடிப்பதை விட இதே பதிவில் என் பெயர் வரும் இடத்தில் அவன் பெயரையும் அவன் பெயர் இடத்தில் என் பெயரையும் போட்டு படித்து பார்த்து புலகாங்கிதம் அடையும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்!

3 comments:

  1. தொடரும் கதை...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் மீள் வருகை. வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. Welcome boss

    Cheers
    Christo

    ReplyDelete
  3. பழைய பன்னீர்செல்வமா வந்த அபி அப்பா, எப்படி இருக்கீங்க? :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))