பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 30, 2017

நெல்லை ஆரோக்ய எட்வின் அவர்களின் “நீட் தேர்வு” பற்றிய ஒரு பார்வை!

இது எங்கள் நண்பர் திரு. நெல்லை நாங்குநேரி தொகுதி திமுகவின் ஆரோக்ய எட்வின் அவர்கள் “நீட் தேர்வு”பற்றிய ஒரு மினி ஆய்வுக்கட்டுரை. கட்டுரையின் அனைத்து அம்சங்களும் அருமை. இதற்காக அவர் சேர்த்து தொகுத்து எழுதியிருக்கும் பல விஷயங்கள் புதியவைகள். கட்டுரை சம்பந்தமாக அவர் தயாரித்த கிராஃப் படங்கள் புரியும் படியான புதுமைகள். அந்த கட்டுரை அவரது முகநூல் பக்கத்தில் வந்துள்ளது. ஆனால் கருப்பு வெள்ளை எழுத்துகளில் படிப்பதைக்காட்டிலும் சில முக்கிய குறிப்புகளை அடிக்கோடிட்டு காட்டி, வேறு வேறு வண்ணத்தில் தீட்டி, தேவையான இடத்தில் தேவையான புகைப்படங்களை இட்டு அழகாய் காட்டும் பொருட்டு நான் இதை என் வலைத்தளத்தில் பதிகின்றேன். ஒரு வேளை எட்வின் அவர்களுக்கு இந்த கட்டுரையின் வடிவம் பிடித்து இருப்பின் அவரே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க இந்த முயற்சி ஒரு உந்து சக்தியாக விளங்கும் என நினைக்கின்றேன்.  இனி கட்டுரையை வாசியுங்கள்!

***********************************
தமிழக மருத்துவக்கல்லூரி இடஒதுக்கீடு, பயனடையும் தாழ்த்தப்பட்டவர்கள்! மங்காத மருத்துவ தரம்!

ஆய்வு: நெல்லை எட்வின்

நீட் தேர்வு அநீதி குறித்து தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் “நீட்” தேர்வை ஆதரிப்போர், மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு குறித்தும் குறிப்பிடுவதோடு, இந்த இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைவதாகவும் (!) குறைபட்டுக்கொள்கிறார்கள்.


நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தா? இடஒதுக்கீட்டால் மருத்துவத்துறையின் தரம் குறைந்ததா ? மருத்துவர்களின் தரம் குறைந்ததா ? நமது மாநிலத்தின் மருத்துவத்துறை எவ்வாறு உள்ளது என்று கடந்த பல நாட்களாக, பல்வேறு தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தேன்.


அதன் சாராம்சம்தான் இந்த சிறு ஆய்வுக்கட்டுரை . இந்த கட்டுரையில் கடந்த ஐந்தாண்டு நடைபெற்ற மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை டேட்டா சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது. அதன் தாக்கத்தை உண்மை நிலையை வெளிகொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
உண்மையிலேயே இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் இந்த துறையில் முன்னேறியிருக்கிறார்களா என்பதும் ஆராயப்பட்டுள்ளது.


இந்த டேட்டா அனைத்தும் அரசால் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட பல வெப்சைட்களில் தேடி எடுக்கப்பட்டவை. ஒருசில டேட்டாவை நான் இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்று கூர்நோக்கி (projection) பார்த்துள்ளேன்.
இந்த எதிர்கால ப்ரோஜெக்ஷன் என்னுடைய தனிப்பட்ட மற்றும் பல வெப்சைட்களில் நான் படித்ததினால் வந்தது.


மாணவர் சேர்க்கையும் இட ஒதுக்கீடும்:-

தமிழக மாணவர் சேர்க்கையானது நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு (69%) அடிப்படையில்தான்.

அதாவது
Other category (Open Competition) – 31 %, BC – 30 %, MBC – 20 %, SC – 18 % , ST – 1 %
இதற்குள் அருந்ததியருக்கு மற்றும் இஸ்லாமியருக்கு உள் ஒதுக்கீடும் உண்டு ஆனால் இதுதான் பிரதான ஒதுக்கீடு.

இந்த ஆய்வில் நான் தெரிந்துகொண்டது இந்த மருத்துவத்துறையை டாமினேட் செய்வது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே (நீங்கள் நினைப்பதுபோல் உயர் சாதியினர் அல்ல).

இடஒதுக்கீடு மட்டுமல்லாமல் ஓபன் காம்பெடிஷன் (Other Category) சீட்டுகளையும் அதிகம் பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்களே.
அதாவது இந்த துறையில், எம்பிபிஎஸ் படிப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏதெனும் ஒருவகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களே!

அதாவது, 100இல் 95 சீட் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே.
ஒட்டுமொத்தமாக 95% இருக்கும் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 95%தான் கிடைக்கிறது. மீதி 5% இருக்கும் உயர்சாதினர்களில் , 3% சீட்களை பிராமணர்களே பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள் . இது அவர்களோடு உயர்சாதிப்பிரிவில் போட்டியிடும் சைவ பிள்ளைமார் , கார்காத்தார் பிள்ளைமார் போன்ற வகுப்பினருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது..

உயர்சாதியினர் போட்டியிடும் ஓபன் காம்பெடிஷனிலும் அவர்களுடன் போட்டியிட்டு அதிக சீட்களை வெல்பவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களே (BC, MBC etc) கடந்த பத்து வருடங்களாக (இந்த வருடம் நீங்கலாக ..ஏனென்றால் இந்த வருடம் ரேங்க் இல்லை) டாப் 20 ரேங்க் பட்டியலில் 16ல் இலிருந்து 18 இடங்களை பிடிப்பது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான்.

மேலே சொன்ன அனைத்தும் நான் மிக துல்லியமாக (ஒரு சில குறைகள் இருந்தாலும்) ஆராய்ந்து அழகான கம்ப்யூட்டர் சார்ட்டில் (computer based charts) செய்துள்ளேன்.. கீழே இருக்கும் படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.




இந்த படம் கடந்த 5 ஆண்டுகளில் எந்த சாதியினர் எத்தனை சீட் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த படம் ஒன்றே போதும் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று மருத்துவ துறையில் கொடிகட்டி பறக்கிறார்கள் என்று சொல்வதற்கு.

அடுத்து


மேலே இருக்கும் படத்தில் ஓப்பன் கோட்டா (open category where anyone can compete for the seats) என்ற பிரிவில் அதாவது உயர் சாதியினருடன் போட்டியிட்டு தேர்வில் வெற்றிபெற்று அங்கேயும் அதிக இடத்தை பிடிக்கிறது பிற்படுத்தப்பட்டமக்கள்தான் (BC,MBC,SC etc)


ஏன் நீட் தேர்வை நமது கட்சியும், தளபதி அவர்களும் இவ்வளவு எதிர்க்கிறார்கள் என்பதற்கு அடுத்து வரும் புள்ளிவிவரங்கள்தான் காரணம்.
கடந்த 10 வருடங்களாக, உயர்சாதியினர் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே சேர்கிறார்கள் (இந்த வருடம் நீட் தேர்வினால் இது 8% ஆகியிருக்கிறது)
இங்குதான் பிரச்சினை.

வெறும் 48ஆக இருந்த அவர்கள் எண்ணிக்கை இன்று திடீரென 211ஆக உயர்கிறது.

இப்படி வருடா வருடம் சென்றால் கூடிய விரைவில் உயர்சாதியினரின் எண்ணிக்கை பலமடங்கு கூடி மறுபடியும் பிற்படுத்தப்பட்டவர்கள்பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படலாம். நாளை இதையே காரணம் காட்டி, இடஒதுக்கீடையும் ஏதாவது செய்தால் பிற்படுத்தப்பட்ட்பிள்ளைகளின் கனவு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக நீதியே சமாதியாகிவிடும்.

அடுத்து



மேலே உள்ள இந்த படமானது கடந்த 5 வருடங்களில் இட ஒதுக்கீடு இருந்தால் எவ்வளவு பேர்இல்லையென்றால் எவ்வளவு பேர் ஒவ்வொரு சாதிபிரிவிலும்  மருத்துவர்களாகியிருப்பார்கள் என்பது விளக்கப்படுகிறது.

அதாவது இடஒதுக்கீடு அடிப்படியில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் , பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் உயர்சாதி (FC) மாணவர்கள் 350இலுருந்து 400 சீட்கள் அதிகம் வாங்குவார்கள் . தலித் (SC) மற்றும் மிகவும் பின்படுத்தப்பட்ட (MBC) மாணவர்கள் கணிசமாக இழப்பார்கள்.

அடுத்து



இந்த படமானது நீட் தேர்வின் அடிப்படியில் நடந்தால் வெறும் 48 சீட்டிலிருந்து உயர்சாதியினர் 2020இல் 400 சீட்கள் பெறுவார்கள்.
அதாவது இதுவரை 2% பெற்றவர்கள் இதனால் 20%இருக்கும் மேலே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட் நானூறுபேர் மருத்துவராக முடியாது. பிற்படுத்தப்பட்ட (MBC,BC,SC etc) சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு காத்திருக்கிறது.

அடுத்ததாக


இப்போது இருக்கும் 5 ஆண்டு டேட்டாவை வைத்து (2017ஐ அடித்தளமாக வைத்துகொன்டு/Base year) எதிர்காலத்தை கணித்தால் அதாவது இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தால் அல்லது இப்போது ரத்து ஆனால் உயர்சாதியினர் பாதிக்குமேல் அதாவது 5% உள்ள அவர்கள் 50% சீட்களை வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் . 

அதாவது இட ஒதுக்கீடு இல்லையென்றால் இந்தத்துறையும் உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
இடஒதுக்கீட்டால் நமது மருத்துவத்துறை பாதிப்படைந்ததா?
இல்லை, கடந்த பல வருடங்களாக நமது மாநிலத்தில் இடஒதுக்கீடு மூலம்தான் இந்த துறையில் மாணவ சேர்க்கை நடக்கிறது.
ஆனாலும் இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவத்துக்கு நமது மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே மெடிக்கல் டூரிசம் என்று சொல்லப்படும் மருத்துவத்திற்காக வெளிநாட்டிலும் மற்ற மாநிலத்திலும் அதிகம் விரும்பும் நகராக நமது சென்னை விளங்குகிறது.
நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவ காலோரிகள் இங்குதான் உள்ளது . தலைசிறந்த மருத்துவர்கள் இங்குதான் உள்ளார்கள்.
எந்த ஒரு நோயை எடுத்துக்கொண்டாலும் அதற்கு மூன்று அடுக்கு வைத்தியம் அல்லது கவனிப்பு தேவை (three levels of “care”)


1. முதல் அடுக்கு -Primary Care – to Prevent the Disease – நோய் வராமல் தடுக்க. அல்லது ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்க்க


2. இரண்டாவது அடுக்கு -Secondary Care – To Treat Disease – வைத்தியம் பார்க்க


3. மூன்றாவது அடுக்கு -Tertiary Care – To Treat Complications – நோயினால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க


இதில் முதல் அடுக்கு கவனிப்பை ஆரம்ப சுகாதார நிலையங்களும் (அந்த இயக்குனரகத்தில் பெயரில் ஆரம்ப சுகாதாரம் , தடுப்பு மருத்துவம் இருப்பதை கவனியுங்கள்) இரண்டாம் அடுக்கு கவனிப்பை அரசு மருத்துவமனைகளும், மூன்றாம் அடுக்கு கவனிப்பை மருத்துவக்கல்லூரிகளும் அளித்து வருகின்றன
.
உதாரணமாக

• சுகப்பிரசவம் என்றால் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பார்க்கலாம்

• அறுவை சிகிச்சை என்றால் அரசு மருத்துவமனைகளில் பார்ப்பார்கள்

• சிறிது சிக்கல் (உயர் இரத்த அழுத்தம், வெட்டு, மஞ்சள்காமாலை, இரட்டை குழந்தைகள், இரத்த போக்கு) என்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் பார்க்கலாம்.

இந்த மூன்றடுக்குமே அரசாங்கத்தால் மிக சிறப்பாக பல வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருவதும் நம் மாநிலத்திலேதான்.

வட மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் எவ்வளவு மேம்பட்டு இருக்கிறோம் என்பது கீழ்வரும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. .


மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) தமிழ் நாடு - 149 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87 ; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான் - 48 ; சத்தீஸ்கர் - 23 ; இந்திய சராசரி : 36


Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :- 
தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி : 40


Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285 ; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167


தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :- தமிழ் நாடு - 86.7% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2% ; மபி - 48.9% ; உபி - 29.9% ; ராஜஸ்தான் - 31.9% ; சத்தீஸ்கர் - 54% ; இந்திய சராசரி : 51.2%


கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :- தமிழ் நாடு - 80.33% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79% ; மபி - 70% ; உபி - 69% ; ராஜஸ்தான் - 67% ; சத்தீஸ்கர் - 71% ; இந்திய சராசரி : 74%


ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):- ----------------------------------------------------------- தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919


மனித வள குறியீடு (Human Development Index)
தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ;ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087


ஏழ்மை சதவீதம் (Poverty % of people below poverty line) தமிழ் நாடு - 11.28% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63% ; மபி - 31.65% ; உபி - 29.43% ; ராஜஸ்தான் - 14.71% ; சத்தீஸ்கர் - 39.93% ; இந்திய சராசரி : 21.92%


ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition) தமிழ் நாடு - 18% ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5% ; மபி - 40% ; உபி - 45% ; ராஜஸ்தான் - 32% ; சத்தீஸ்கர் - 35% ; இந்திய சராசரி : 28%


நண்பர்களே… இட ஒதுக்கீட்டால் மருத்துவத்துறையில் பாதிப்பு ஏற்படுகிறதா? இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர் எவர்? நீட் தேர்வால் பாதிக்கப்பு யாருக்கு என்ற கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

நீட் தேர்வை நாம் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வு தெளிவாக்கியிருக்கும் என்றும் நம்புகிறேன்.
இதில் ஏதேனும் சந்தேகம் தங்களுக்கு இருந்தால் கேட்கலாம்.

******************************

கட்டுரையாளர்: நெல்லை நாங்குநேரி ஆரோக்ய எட்வின்


திரு. எட்வின் அவர்களின் இந்தப்பதிவின் முகநூல் சுட்டி

 https://www.facebook.com/permalink.php?story_fbid=750200835152798&id=747725028733712