“தெற்கிலிருந்து ஒரு சூரியன்” - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம் என்னும் நூல் குறித்த எனது பார்வை தான் இந்த கட்டுரை! “தி இந்து - தமிழ் நாளிதழ் வழங்கும் “தமிழ் திசை” பதிப்பகம் வழங்கும் இந்த நூல் பற்றிய என் பார்வைக்கு முன்னர் அதன் முன்னூட்டமாக நான் நாகு சம்பவங்கள் பற்றி சொல்லி பிள்ளையார் சுழி போட்டு விட்டுதான் போக நினைக்கின்றேன்!
சம்பவம் 1 : கடந்த பிப்ரவரி மாதம் 2012ம் வருடம் முதல் வாரத்தின் போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “வணக்கம்! அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் தானே இது” என்றது. நான் “ஆமாம் சார், நீங்க?” என்றேன்! அதற்கு “சார்! என் பெயர் சமஸ். விகடன் குழுமத்திலே இருந்து பேசுறேன். உங்க வலைப்பூ எல்லாம் படிச்சு இருக்கேன். வலைப்பதிவாளர்கள் பத்தி எங்கள் விகடனில் எழுத இருக்கோம். முதல் வாரத்தில் உங்களை முடிவு செஞ்சிருக்கோம். உங்க குடும்ப புகைப்படம் மற்றும் உங்க விபரம் எல்லாம் எனக்கு மெயில் பண்ண முடியுமா? உங்க வலைப்பூ பதிவில் இருந்து நல்ல பதிவா நாங்களே எடுத்து போட்டுக்குறோம்” என்றார். எனக்கு சந்தோஷம் ஒரு பக்கம் காற்றில் மிதப்பது போல... அதே நேரம் அவன் சொன்ன பெயர் எனக்கு மனதில் பதியவில்லை. இரண்டு மூன்று முறை கேட்டும் அது மனதில் வந்து குந்தவில்லை. “சார், கொஞ்சம் ஸ்பெல்லிங்கோட சொல்றீங்களா?” என்றேன். அதற்கு அவர் “சார், சமஸ்கிருதம் தெரியுமில்லையா... அதில் வரும் முதல் மூன்று எழுத்துகள் தான் என் பெயர்” என்றார். ஓ....இப்படி ஒரு பெயரா என கொஞ்சம் வியந்து கொண்டேன். பின்னர் அடுத்த வாரம் அதாவது 15.02.2012 ஆனந்த விகடன் இதழின் இணைப்பாக “என் விகடன்” இதழில் அட்டைப்படத்தில் என் வண்ண புகைப்படம், மற்றும் நடுப்பக்கத்தில் என் பற்றிய குறிப்புகள், நான் என் மகள், மகன் சகிதம் இருக்கும் புகைப்படம், என் பதிவுகளில் சில முக்கிய பதிவுகள் என வெளிவந்தது. அந்த இதழ் வெளிவந்த அன்று எங்கள் வலைப்பூ சகோதரி டாக்டர் ரோகினியின் திருமணம் திருக்கடையூரில் நடந்தது. அதன் பொருட்டு அத்தனை பிரபல வலைப்பதிவர்களும் மயிலாடுதுறைக்கு வருகை தந்திருந்தனர். எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்வு! ஒரே கொண்டாட்டம்! என் வலைப்பூவுக்கு உலகலாவிய அங்கீகாரம் கிடைத்தது போல பேரானந்தம். மேலும் திரு. சமஸ் அவர்கள் மீது எல்லைகடந்த அன்பு. அவரை ஒரு முறை நேரில் பார்த்து நன்றி தெரிவித்துக்கொள்ள ஆசைப்பட்டேன்.
சம்பவம் 2: செப்டம்பர் மாதம், 2013ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பிரலமான “The Hindu" நாளிதழ் தன் தமிழ்ப்பதிப்பை ஆரம்பித்தது. இந்தியா முழுமைக்கும் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என விளம்பரம் ஆஹா ஓஹோ என கொடிகட்டி பறந்தது. நிச்சயம் அது ஒரு தரமான பத்திரிக்கையாக இருக்கும் என எல்லோருமே நம்பினார்கள். காரணம் “சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்” என்னும் பொதுபுத்தி தான் :-) 19.09.2013 என நினைக்கின்றேன்.. முதல் இதழ் வெளி வந்தது. 16 பக்கங்கள் மெயின் பேப்பர், அடுத்து மேலும் 16 பக்கங்களுக்கு இன்னுமொறு மெயின் பேப்பர், தவிர திருச்சி பதிப்புக்காக எட்டு பக்கம் என ஆக மொத்தம் 40 பக்கங்கள் வெளியான அந்த முதல் இதழில் “கருணாநிதி” என்னும் பெயர் என்பது கிடையாது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் அரசியலில் உச்சகட்டமாக அடுத்து வர இருக்கு நாடாளுமன்ற தேர்தல் முனைப்பிலும் தவிர பத்தாவது மாநில மாநாடு நடத்தி விடலாம் என்னும் சிந்தனையிலும் இந்திய அரசியலில் தவிர்க்க இயலாத மாபெரும் சக்தியாக, இருந்த நேரம். ஆனால் அன்று வெளியான “தி இந்து தமிழ் நாளிதழில்” மருந்துக்கு கூட கருணாநிதி என்னும் பெயர் இடம்பெறவில்லை. நான் ஆர்வமுடன் முதல் இதழை வாங்கி அரக்க பரக்க “கருணாநிதி” என்னும் பெயரை தேடித்தேடி அலுத்து விட்டேன். மிகுந்த கோவத்தில் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என்னும் கட்டுரையை எழுதி முடித்து விட்டேன். அத்தனை கோவம் எனக்கு! ஒரு நூற்றாண்டு கண்ட பத்திரிக்கையின் தமிழ் பதிப்பில் வாழும் தமிழாக இருக்கும் கலைஞர் பற்றி வசைபாடியாவது ஒரு வார்த்தை எழுதாமல் அவரை புறக்கணித்த செயல் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் மனம் போன போக்கில் எழுதி குவித்து விட்டேன்.
சம்பவம் 3: திருச்சியில் திமுகவின் பத்தாவது மாநில மாநாடு பிப்ரவரி 15,16 தேதிகளில் 2014ம் ஆண்டு நடக்க தேதி குறித்து விழா ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தன. எல்லா பத்திருக்கைகளும் அதே செய்தியை தான் வெளியிட்டன. எங்கும் பரபரப்பு. யார் பேசினாலும் திருச்சி திமுக பத்தாவது மாநில மாநாடு பற்றிய பேச்சுகள் தான். இந்த நிலையில் அதாவது மாநாடு நடக்க இருந்த பதினைந்து நாட்கள் முன்பாக ஜனவரி 31ம் தேதி, 2014ல் இதே “தி இந்து தமிழ் நாளிதழ்” ஒரு அரைப்பக்க கட்டுரை வெளியிடுகின்றது. தலைப்பு என்ன தெரியுமா? ”ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்” . இது தான் அந்த தலைப்பு. முழுக்க முழுக்க தலைவர் கலைஞர் தலைமையிலான இந்த திமுக அஸ்தமனம் ஆகிக்கொண்டிருப்பதாக கட்டுரை சொன்னது. படிக்க படிக்க கோவம், கண்ணீர் என எனக்கு தாங்க முடியவில்லை. கட்டுரையின் முடிவில் எழுதியது யார் என போட்டிருந்தார்கள். எழுதியவர் “சமஸ்” அவர்கள். நண்பர் சமஸ் அவர்கள் அப்போது விகடன் குழுமத்திலிருந்து தி இந்து தமிழ் நாளிதழுக்கு சென்று விட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒரு நண்பர் இப்படி ஒரு கட்டுரை எழுதினால் என்னவென்று சொல்வது? அதுவும் தன் முதல் இதழில் தலைவர் கலைஞர் அவர்களை புறக்கணிப்பு செய்த பத்திரிக்கையில் இன்னும் 15 நாளில் 25 லட்சம் திமுக தொண்டர்கள் கூட இருந்த நிலையில் இப்படி ஒரு கட்டுரை அரைப்பக்கம் வருகின்றது எனில் என்ன காரணமாக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகின்றேன்.
சம்பவம் 4: பிப்ரவரி 15,16, 2014 திமுக பத்தாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகின்றது. இரண்டாம் நாள் அதாவது 16.2.2014 அன்று திமுகவின் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேசுகின்றார்... அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன ஏது என்றெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. 15 நாட்கள் முன்பாக தி இந்துவில் வந்த அந்த “பேரியக்கத்தின் அஸ்தமனம்” கட்டுரையை எடுத்து பிரித்து மேய்கின்றார். கட்டுரையாளர் சமஸ் அவர்களை தூக்கி போட்டு பந்தாடுகின்றார். மேடையில் தலைவர் கலைஞர், பேராசிரியர், நம் செயல்தலைவர், தோழமை கட்சி, கூட்டணி கட்சி தோழர்கள் என எல்லோரும் இருக்கின்றனர். கூட்டத்தில் நம் இணைய தோழர்கள் தினகரன் அரசு உள்ளிட்ட நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். மேடையின் இடது பக்கத்தில் அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மேடையில் தாவி ஏற வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இருக்கும் போது அண்ணன் துரை முருகன் அவர்கள் பேச்சுக்கு இங்கே விசில் பறக்கின்றது. எழுந்து நின்று கை தட்டுகின்றோம். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலையை விட்டு விட்டு மேடையிலிருந்த திரு. எஸ்.எஸ் சிவசங்கர் சார் அவர்கள் துரைமுருகன் அண்ணன் அவர்கள் பேச்சை அருகில் நின்று கேட்டு மெய்மறந்து நிற்கின்றார். ஆக கடந்த 15 நாட்களாக “பேரியக்கத்தின் அஸ்தமனம்” என்னும் நெஞ்சில் பாய்ந்த முள்ளை எடுத்து வீசிவிட்டு அந்த காயத்தில் களிம்பு தடவும் அண்ணன் துரைமுருகன் அவர்கள் பேச்சு அன்றைக்கு அப்படி ஒரு பேச்சு!
***************
ஆக மேற்கண்ட இந்த நான்கு சம்பவங்களும் இப்போது நான் படித்து முடித்த “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தை படித்து முடித்த போது நெஞ்சில் நிழலாடுவதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால் முதலில் அதை பகிர்ந்து கொண்டு பின்னர் அந்த புத்தகத்துக்கு வருகின்றேன். மேலே சொன்ன சம்பவங்களில் சம்பவம் 2ல் நான் என் வலைப்பூவில் “"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!” என எழுதினேன் என்று சொன்னேன் அல்லவா... அதில் முத்தாய்ப்பாக ஒரு வரி எழுதி இருந்தேன்... //40 பக்கம் நான்கு ரூபாய். அதாவது பக்கத்துக்கு பத்து பைசா விலை! இதன் "தரமும்" பத்து பைசா மதிப்பிலானது மட்டுமே! இந்த பத்து பைசா என்னும் தரத்தை “தி இந்து தமிழ் நாளிதழ்” உயர்த்திக்கொள்ள வேண்டும் எனில் இதே புறக்கணிக்கப்பட்ட அந்த மாபெரும் பத்திரிக்கையாளர் - அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்ட தலைவர் கலைஞரை பற்றி “உண்மை” களை எழுதி பிராயச்சித்தம் தேடிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை! // இது தான் அந்த முத்தாய்ப்பு வரிகள்! ( அந்த வலைப்பூவின் சுட்டி இதோ http://abiappa.blogspot.com/2013/09/blog-post_16.html ) ஆக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தி இந்து தமிழ்நாளிதழ் மற்றும் “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” புத்தகத்தின் நூல் பொறுப்பாசிரியருமான திரு சமஸ் அவர்களும் ஒரு அருமையான பிராயச்சித்தம் தேடிக்கொண்டனர்.
தலைவர் கலைஞர் அவர்களை தன் முதல் இதழில் புறக்கணித்தமைக்காகவும், பேரியக்கத்தின் அஸ்தமனம் என எழுதியமைக்காக திரு. சமஸ் அவர்களையும் நான் நிந்தித்தேன். அதற்காக இந்த நூலை படித்த பின்னர் இப்போது வருத்தமும் தெரிவித்து பகிரங்க மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றேன். ஏனனில் புத்தகம் அல்ல அது. சுமார் நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்று! திமுகவினர் வீட்டில் வைத்து பாதுகாக்க வேண்டிய ‘பத்திரம்’ அது! கலைஞர் என்றாலே எட்டிக்காயாக மனதில் பதியம் போட்டு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது!
மொத்தம் 210 பக்கங்கள்! அத்தனையும் முத்துக்கள். அட்டையையும் விட்டு வைக்கவில்லை. “தமிழ்வெல்லும்” என தலைவர் கலைஞரின் கையெழுத்தால் ஆரம்பிக்கப்பட்ட புத்தகத்தின் கடைசி பி அட்டையில் நம் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதையும், அதற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன என விளக்கம் கொடுத்தமையுடன் முடிகின்றது அந்த புத்தகம்!
அந்த புத்தகம் தனி ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அதை ஒரு தொகுப்பு. தலைவர் கலைஞர் அவர்களை பற்றி மேல்நாட்டு அறிஞர் டேவிட்ஷூல்மன் (சங்க இலக்கியத்தை ஹீப்ரூ மொழியில் மெழிபெயர்த்தவர்) முதல் கலைஞரின் உதவியாளர்கள் திரு.நித்யா, சமையல் பணியாளர் திரு முத்து செல்வம் பிரகாஷ் வரை இந்த புத்தகத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞரையும், திராவிடத்தையும் வாழ்த்தியிருக்கின்றார்கள்.
இந்தியாவின் சிறந்த அரசியல்வாதிகள், தோழமை கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், முன்னாள் பிரதமர், நீதியரசர்கள், காவல்துறை உயரதிகாரிகள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவல்பணி அதிகாரிகள், பிரபல பத்திரிக்கையாளர்கள், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்கள், தலைவர் கலைஞரின் வாரிசுகள், உறவினர்கள் அத்தனை ஏன்.... சாமானியர்கள் கூட கலைஞரை பற்றி தங்கள் எண்ணங்களை ஆசையுடன் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட எல்லா பிரிவினரும் தங்கள் சார்ந்த துறையில் கலைஞரின் செயல்பாடுகள் என்ன என்பதை சொல்லும் போது பிரம்மிப்பு தான் மேலிடுகின்றது!
அதில் சில பொருளாதார கட்டுரைகள் .... எனக்கு எப்போதுமே... எனக்கு மட்டுமல்ல நான் பொதுவாக சொல்கிறேன்... பொருளாதார கட்டுரைகள் படிக்கும் போதே பாதியில் நல்ல தூக்கம் வரும். நான் கூட நினைப்பதுண்டு... இவர்கள் தங்கள் பேனா மையில் நைட்ரோவிட் கலந்து எழுதுகின்றார்களா என்று. ஆனால் இந்த புத்தகத்தில் அப்படி இல்லை. கொஞ்சம் கலோக்கியல் மாத்திரையும் கலந்து கொடுத்திருப்பது தான் சிறப்பு! அதற்கு பின்னர் வருகின்றேன்!
முதலில் நான் சிலாகித்த கட்டுரை என்பது எழுத்தாளர் ஒருவர் எழுதியது. ஒரு வேளை... ஒரு வேளை என்னை எழுதியிருக்க சொல்லியிருந்தால் அந்த மூன்று பக்கங்கள் எழுத்தாளர் இமயம் என்னும் பெயருக்கு பதில் “சாமானியன் அபிஅப்பா” என வந்திருக்க கூடும். அதை எழுதியது ஒரு சாதாரணன். திட்டக்குடி ஆள். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்ப்பினர் என்பதை அவரது வாக்கியங்கள் மூலம் உணர்கின்றேன். அவர் எழுத்து என்பது தான் அபாரம். அந்த சிறுவன் கட்சியில் எப்படி சேர்ந்தான்.. அதற்கு அவன் வாடகை சைக்கிள் எடுத்து போன விஷயம்.. அங்கே டீக்கடை வைத்திருக்கும் ஒன்றிய செயலர் தனக்கும் டேபிள் மீது இலை போட்டு இட்லி வைத்து உபசரித்து, கட்சியில் சேர படிவம் கொடுத்து.... அடடே.. அடடே.. அந்த சின்ன பையன் சின்ன வயதில் “நம்மையும் மதித்து டேபிள், சேர், வாழை இலை.. அதில் இட்லி, பின்னர் தோளில் கை போட்டு உறுப்பினர் படிவம்... இதை படிக்கும் போது சிலிர்க்காமல் இருந்தால் அது அனேகமாக “அந்த 74 நாட்கள்” புகழ் ஜெயாவாக மட்டுமே இருக்க முடியும்! அந்த பையன் கட்டுரையை முடிக்கின்றார்.... (கவனியுங்கள்... பையன் சின்னவனா இருந்த போது ந் விகுதி... இப்போது இர் விகுதிக்கு நான் வந்து விட்டேன். // அவனுடைய வாழ்க்கையில் கலைஞருக்கு யாரெல்லாம் எதிரிகளோ அவர்கள் எதிரிகள். கலைஞருக்கு பிடித்தமானவர்கள் அவனுக்கும் பிடித்தமானவர்கள். எம்.ஜி.ஆருக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் கலைஞரை காட்டிலும் 100 மடங்கு பகை அவனுக்கு இருந்தது. அவர் நடித்த சினிமாக்கள் கூட பார்க்க மாட்டான். அப்படித்தான் ஜெயா மீதும், வைக்கோ மீதும், பயணங்கள் போது கலைஞரை பற்றி யாராவது குறை சொன்னால் பாய்ந்து விடுவான். தன் அப்பா, அம்மாவை திட்டினால் கூட அமைதி காப்பான். கலைஞரை திட்டி விட்டால் அவ்வளவு தான்/// இது தான் அந்த வைர வரிகள். அதில் முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள்.....
// “இன்று அவன் பெயர் இமையம். எழுத்தாளர். யோசித்துப்பார்க்கின்றார். கட்சி அவருக்கு கொடுத்தது என்ன? நேரிடையாக அவருக்கு அது அள்ளிக்கொடுத்து விடவில்லைதான்! ஆனால் ‘கட்சி கூட்டத்துக்கு வா! கட்சிக்காரன் திருமணத்துக்கு வா! கட்சிக்காரன் செத்து விட்டான் வா!// என அவனை சாதி பாராமல் அழைக்கும் தகுதியை அந்த உறுப்பினர் கார்டு அவருக்கு கொடுத்ததை சொல்கின்றார் அந்த எழுத்தாளர் இமையம்!
கட்சியில் அவருக்கு பொறுப்பு கிடையாதாம். அவரே சொல்கின்றார். ஆனால் பெரிய பதவி ஒன்று உண்டாம். ஆனால் தலைவர் கலைஞர் ஊருக்கு வந்து விட்டால் உச்சஸ்தாயில் “டாக்டர் கலைஞர் வாழ்க” என்னும் அந்த பொறுப்பை மட்டும் அவரிடமே வைத்துள்ளாராம்... இதில் போட்டி போட எந்த சாதி வேண்டுமாகின் வந்து பார்க்கட்டும் என மல்லுகட்டும் உயர்தர திமுககாரர் கட்டுரை அது! இந்த நேரத்தில் நான் என் வலைப்பூ பதிவான '’கலைஞரின் சொத்து மதிப்பு எத்தனை கோடி?' ( http://abiappa.blogspot.com/2012/01/blog-post_05.html ) என்னும் பதிவை நினைத்துப்பார்க்கின்றேன். எழுத்தாளர் இமையம் என்பர் இருக்கும் இடம் நோக்கி கரம் குவிக்கின்றேன்!
ஒரு கட்டுரை ... நான் ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களின் நேர்முக அரசு உதவியாளர் திரு சண்முகநாதன் அவர்கள் பதிவை முழுவதும் பதிந்து விட்டேன். அது பற்றி பின்னர் பேசுகின்றேன். அடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதும், இப்போது ஓய்வுபெற்ற போதும் (நான் நேர்முக உதவியாளர் பற்றி சொன்னேன்... தலைவருக்கு ஓய்வு ஏது?) இப்போதும் உடனிருக்கும் திரு. இராஜமாணிக்கம் அவர்கள்! மிக மிக மிக அருமையான கட்டுரை அது! அடிப்படையில் திரு இராஜமாணிக்கம் அவர்கள் ஒரு மொழிப்போர் தியாகி. திரு. எம். நடராசன் அவர்கள் போன்ற மொழிப்போர் தியாகி! எம். நடராசன் என்பவர் சமீபம் 30 ஆண்டுகளாக மட்டுமே சசிகலா நடராசன் என நம்மாள் அறியப்பட்டார் என்பது தான் காலக்கொடுமை. திரு. எம் நடராசன் அவர்களோடு மொழிப்போர் தியாகிகள் தான் திரு. இராசமாணிக்கம் அவர்கள். திரு இராசமாணிக்கம் அவர்கள் ஒரு படிப்பறிவு இல்லாத கிராமத்தில் பிறந்த சாதாரண ஆள். அதிலே படித்து இன்றைக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆகி ஓய்வு பெற்று இப்போதும் தலைவர் கலைஞர் கூட இருப்பவர். (இவரைப்பற்றி கூட என் வலைப்பூவில் நான் எழுதியதை பார்க்க வேண்டுமா ... இங்கே பாருங்கள் http://abiappa.blogspot.com/2012/06/blog-post_12.html ) இவரது அந்த கட்டுரை அல்லது நேர்காணல் என எதுவேண்டுமாகின் வைத்துக்கொள்ளுங்கள்...
அதில் ஒரு கேள்வி... “தலைவர் கலைஞர் எதற்கெல்லாம் கோபப்படுவார்?” ... இவர் பதிலை பாருங்கள்.... பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விஷயம் வரும் போது அதில் வார்த்தை தவறி யாராவது பிற்ப்பட்டோர் என சொல்லி விட்டால் கோபப்படுவார்.
ஆக நான் மேலே சொன்ன ஒரு வரி என்பது ஒரு பி ஹெச் டிக்கான ஆய்வு கட்டுரைக்கான தலைப்பு! ஒரு முனைவர் பட்டத்துக்கான தலைப்பு என் தலைவரின் சாதாரண ஒரு சொல் வாக்கியம் என்பதை உணர்க! இதில் ஒரு சமூக கருத்தும், தமிழ் விளையாட்டும் இருக்கின்றது. பிற்படுத்தப்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் பிற்பட்டோர் என்னும் சொல்லாடலுக்கும் இருக்கும் வித்யாசத்தை எவன் ஒருவன் உணர்கின்றானோ அது தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்யாசம்! தட்ஸ் ஆல்!
பிற்ப்பட்டோர் என சொன்னால் அவன் நிஜமாகவே பிற்ப்பட்டவன்... ஆனால் பிற்படுத்தப்பட்டவன் என சொன்னால் அவனுக்கு மேலே ஒரு ஆதிக்க சாதி இருந்து செயல்பட்டது என்பது பொருள். அவனை பிற் படுத்தினார்கள் யாரோ என்னும் பொருள் இருக்குதா இல்லியா? திரு. இராஜமாணிக்கம் என்னும் அவரது ஐ ஏ எஸ் படித்த உதவியாளர் அந்த பேட்டியில் ஜஸ்ட் லைக் தட் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளில் தலைவர் கலைஞர் விளையாடியதை காண்பீர் மக்களே! காண்பீர்!
நம் செயல்தலைவர் அவர்களிடம் ஒரு பேட்டி... அடடா அருமை...
அப்பா உங்களை அடித்தாரா போன்ற சில்லி கேள்விகள்.. அதை விடுங்கள்.. ஆனால் அவரது பதில்கள் தான் அற்புதம்... செயல்தலைவரின் பதில்களில் இருந்து ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ள இயலும்.... இதை எத்தனை பேர் உணர்ந்தார்கள் என புரியவில்லை. எம் தலைவர் செயல்தலைவர் அவர்கள் என்பது ஒரு சுயம்பு... யாரும் கைதூக்கி வளராது தானாக வளர்ந்த சுயம்பு என்பது புரிய வரும்! சொல்கிறேன் கேளுங்கள்...
பொதுவாக நம் பிள்ளைகள் விஷமம் செய்தால் என்ன செய்வோம். அதிக பட்சம் பக்கத்து வீட்டு ராமநாதன் கிட்டே சொல்வோம்... “சார் அவன் சைக்கிள்ல ரொம்ப வேகமா போறான். நான் சொன்னா கேட்க மாட்டான். நீங்களாவது கொஞ்சம் அதட்டி சொல்லுங்க சார்” ... இதானே நடக்கும்.. ஆமாம் அதான் நடந்தது. செயல்தலைவர் விஷயத்திலும் அதான் நடந்தது.என்ன ஒன்று... நம் லெவலுக்கு பக்கத்து வீட்டு ராமநாதன். தலைவர் கலைஞர் லெவலுக்கு எம்.ஜி. ஆர். அது தான் நடந்தது. “இனி நீ திமுக கூட்டம் எல்லாம் போடக்கூடாது. இது தான் உன் அப்பா விருப்பம்” என எம் ஜி ஆரால் அன்பாக கண்டிக்கப்பட்டவர் தான் நம் செயல்தலைவர்! எம் ஜி ஆரால் கண்டிக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதில் சிலர் இப்போது சுண்டு விரல் மற்றும் ஆட்காட்டி விரல் மட்டும் நீட்டி மற்ற விரல் மடக்கி காண்பிக்கின்றனர். ஆனால் அந்த 16 வது வயதில் தன் நடுவிரலை மட்டும் நீட்டி காண்பித்தவர் தான் நம் செயல்தலைவர் அவர்கள்!
எம். ஜி .ஆர் அவர்களை அழைத்து வந்து கோபாலபுரம் வாசலில் போட்ட அண்ணா பிறந்தநாள் கூட்டம் போட்டவர் அவர்! முரசே முழங்கு என்னும் நாடகத்தை தமிழகம் முழுமையும் 40 இடங்களில் நடத்தி விட்டு வந்து 1971ல் திமுக வெற்றி பெற்றதும் வெற்றிக்கூட்டம் நடத்தியவர் தான் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ஆக நம் செயல் தலைவரின் முதல் பிரச்சார வெற்றி என்னும் அந்த 185/234 என்பதை இன்னும் திமுகவே எட்டவில்லை. அப்போது அந்த “முரசே முழங்கு”் நாடகத்தி வெற்றி விழா எம். ஜி ஆர் தலைமையில் நடந்த போது தலைவர் கலைஞர் சொன்னார்... “இது நிறைவு விழா” என்று. ஆனால் நம் செயல்தலைவரோ “இது முடிவல்ல... ஆரம்பம்” என்றார் அப்போதே... ஆக நம் தலைவர் என்னும் சூராவளியால் தடுக்க இயலா சுயம்பு தலைவர் தான் எம் சுனாமி செயல்தலைவர் அவர்கள்!
அடுத்து தலைவரின் தவப்புதல்வி திருமதி கனிமொழி அவர்களின் பேட்டி!
அந்த கட்டுரையில்.... மாடியில் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து விட்டு திரு முரசொலி மாறன் அவர்கள் வேகமாக மாடிப்படி இறங்கி வருகின்றார்கள். கீழே சிறுமியாக நம் இப்போதைய திமுக பாராளுமன்றக்குழு தலைவர் திருமதி கனிமொழி அவர்கள்! அந்த சிறுமியை பார்த்து நின்று அய்யா முரசொலி மாறன் சொல்கின்றார் “உன் அப்பாவை எல்லா நேரத்திலும் அரசியல்வாதியாக இருக்க சொல்லாதே” என! பின் கார் கிளம்பி செல்கின்றது. சிறுமி கனிமொழி மேலே செல்கின்றாள்... அப்பாவை பார்க்கின்றாள்... “என்னம்மா உன் பெரிய அத்தான் என்ன சொல்லிட்டு போறான்?” என்கிறார் தலைவர்!
அந்த சிறுமிக்கு அந்த நேரத்தில் தன் தந்தையின் வாசகங்கள் மனதில் படியவில்லை. தன் பெரிய அத்தான் திரு.முரசொலி மாறன் சொன்ன வார்த்தைகள் தான் மனதில் பதிகின்றன! நான் நினைத்துப்பார்க்கின்றேன். பல சமயம் சில விவாதங்களில் “அபிஅப்பா நீங்க அவர் இடத்தில் இருந்து பாருங்க” என்னும் சொல் திருமதி கனிமொழி அவர்களிடத்தில் இருந்து வரும்! நான் அமைதியாகிவிடுவேன். இந்த இடத்தில் நான் நினைத்துப்பார்ப்பது ஒரு விஷயம் .... நம் செயல்தலைவர் “அவரை நான் மட்டுமல்ல, என் தங்கை கனிமொழி மட்டுமல்ல எல்லோருமே தலைவர் என்று தான் அழைப்போம்” என்னும் வாக்கியம் பாருங்கள். அதுவும் உண்மை தான். நானே பலமுறை திருமதி கனிமொழி அவர்களிடம் கேட்டுள்ளேன். தலைவரை எப்படி அழைப்பீர்கள் என்று!
அதற்கு அவர்கள் ஒரு முறை “தி ரோஸ் ஈஸ் தி ரோஸ் ஈஸ் தி ரோஸ்.... என சொல்லி சிரித்தபடியே... “நான் மட்டுமல்ல, அண்ணன் கூட ... அண்ணன் மட்டுமல்ல என் அம்மா கூட, பெரியம்மா கூட தலைவர்ன்னு தான் சொல்லுவோம்... மிக சில சமயம் நான் அப்பா என்பேன்....” என்றார். இந்த இடத்தில் நான் அய்யா முரசொலி மாறன் அவர்கள் ஒரு சண்டை போட்டுக்கொண்டே கீழே வந்து திருமதி கனிமொழி அவர்களிடம் (அப்போது சிறுமி என வைத்துக்கொள்ளுங்கள்) சொன்னது “எப்போதுமே அரசியல்வாதி என இருக்க சொல்லாதே”...
மனசாட்சியாக இருந்தாலும் கட்சி என வந்து விட்டால் குடும்பம் கூட கட்சி தான் எனத்தான் பார்த்துள்ளார் தலைவர் கலைஞர்!ஆனால் எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை. அப்படியாகின் “இதோ கீழே இறங்கி போகும் முரசொலி ஆசிரியர் என்ன சொன்னார் என்றோ அல்லது நம் கட்சி எம்.பி என்ன சொன்னார் என்றோ கேட்டிருக்க வேண்டும்! ஆனால் “உன் பெரியத்தான் என்ன சொன்னார்?” என கேட்கும் தொணி என்ன? ஒரு வேளை மனிரத்னம் படம் போல அஷோக்கை கவுதம் என்றோ , கவுதமை அஷோக் என்றோ வேண்டுமென்றே அழைக்கும் விஜயகுமாரின் உத்தியா? யாமறியேன் பராபரமே!
இதையெல்லாம் விடுங்கள்! இன்னும் ஒரு கட்டுரை இருக்கு.... விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் கட்டுரை தான் அது! அதன் கடைசி வரிகள்! நான் பார்த்தவரை இந்த பேட்டியாளர்கள், கட்டுரையாளர்கள் எல்லோருமே கடைசி பாராவில் கலங்க வைத்து விட்டனர். ரவிக்குமார் கட்டுரை போலவே தான் திரு சண்முகநாதன் கட்டுரையும்! “அய்யா, நான் 11 மணி வரை இங்க தான் இருக்கேன். என்னை திட்டுவீங்களே! அதற்காகவாவது கூப்பிடுங்கள்” என கதறிய போது கலங்காத நெஞ்சம் உண்டா? அது போலவே ரவிக்குமார் கட்டுரையும் முடிகின்றது..
// விட்ட இடத்தில் இருந்து தான் பேசுவார் அவர். அதாவது மனசில் நம்மோடு பேசிக்கொண்டு இருக்கின்றார். இப்போது அப்படியே தான்... அதாவது என்னோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றார். அது எனக்கு கேட்கின்றது// இந்த விரிகள் படிக்கும் போது தான் நான் அழுதேன்... ஆமாம் நானும் அதை உணர்ந்தேன்... விட்ட இடத்தில் இருந்து தான் அவர் கண்கள் பேசியது. நானும் அதை தொடர்ந்தேன். மௌனம் என்பது அழகிய மொழி என்பது எனக்கும் அப்போது தான் புரிந்தது. ரவிக்குமார் ... நீங்கள் நல்ல எழுத்தாளர் என்பதில் எனக்கு சந்தேகமில்லை!
பேராசிரியர் கட்டுரை... அடடா அருமை! தன் ஊர் அதாவது எங்கள் ஊர் மயிலாடுதுறை பற்றி பேசுகின்றார். அதில் மகாதானத்தெரு, பட்டமங்கலத்தெரு பற்றி பேசுகின்றார்.. அடடா... இந்த புத்தகத்தில் இரண்டு இடத்தில் மயிலாடுதுறை வருகின்றது. 1930களில் மயிலாடுதுறை, மாயூரநாதர் கோவில் பிரவேசம் பற்றிய ஒரு இடத்தில் மற்றும் பேராசிரியர் கட்டுரையில் வருகின்றது. அதில் மகாதானத்தெருவை மகாதேவத்தெரு என எழுத்துப்பிழையா அது அல்லது சொற்ப்பிழையா என தெரியவில்லை. எனக்கு பேராசிரியர் ஞாபக சக்தியில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. இதை அடுத்த பதிப்பில் திருத்துவார்கள் என நம்புகிறேன். அது போல “ர்” விட்டுப்போன ஒரு இடம் இருக்கு! அது எல்லாம் பெரிய குறை இல்லை இத்தனை பெரிய பொக்கிஷத்தில்!
அண்ணன் துரைமுருகன் கட்டுரை.... ஒரு சமயம் கடையநல்லூரில் இருந்து ராஜாமணி என்கிற தொண்டர் வந்தார். வந்ததும் தன் மாவட்ட உள்ளூர் கோஷ்டி சண்டையை நீளமாக விவரித்தார். கலைஞருக்கு கோபம் வந்தது. “என்னய்யா நான் உசிரை கொடுத்து கட்சியை காப்பாத்திகிட்டு இருக்கேன். நீங்க சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க”ன்னு செல கோவமா திட்டிட்டார். வந்தவர் போய்விட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ தலைவர். உடனே எங்களை கூப்பிட்டு அவரை அழைத்து வர சொன்னார். அந்த தொண்டர் பஸ்ஸ்டாண்டு போய்விட்டார். நாங்கள் அவரை பிடித்து அழைத்து வந்தோம். உடனே தலைவர் “யோவ்... நான் என்னவோ கோவத்தில் இருந்தேன். நீ உன் குறையை சொல்ல வந்திருக்க ... இத்தனை தூரம் பயணம் செஞ்சு! நான் பாட்டுக்கு என் கோவத்தை கொட்டிட்டேன். என்னை மன்னிச்சுடுய்யா” என்றார். அந்த பெரியவர் அழுதுவிட்டார். இது தான் கலைஞர் என்று தன் கட்டுரையில் சொல்லி இருக்கின்றார். அண்ணன் துரைமுருகன் போன்றவர்கள் பல நூல்கள் எழுதலாம். அத்தனை கருக்கள் இருக்கின்றன அவர்களிடம்!
இதே போல ஒரு முறை தங்கம் தென்னரசு சார் ஒரு விஷயம் சொன்னார்... “ஒரு முறை ஒரு முக்கியஸ்தர் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வந்தவுடன் தலைவர் “ஏன்யா லேட்டு?” என்றார். அதற்கு அவர் “மவுண்ட் ரோட்டுல ரொம்ப ட்ராபிக் ஆகிடுச்சு தலைவரே”ன்னு சொன்னது தான் தாமதம். தலைவர் ரொம்ப கோபமாகிட்டார். “அடடே! அந்த மவுண்ட் ரோடு என்பது அண்ணாசாலை என கெசட்ல மாறிடுச்சுய்யா. இது கூட தெரியாம எப்படி?”ன்னு கேட்டார்” என சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் “இதுக்கெல்லாமா கோவப்படுவாங்க” என்பது போல நான் தங்கம் சாரை பார்த்தேன். “ஐஞ்சு பைச திருடினா தப்பா?” என அன்னியன் கேட்கும் டயலாக் தான் எனக்கு அவர் முகத்தில் தெரிந்தது. அப்போது காரை ஓட்டியது மதன்குமார். காரில் இருந்தது நான், சதக், அறந்தை ராஜுமுருகன், சூரியன் சக்தி, ஆரூர் பாலா... இது நடந்தது இந்த புத்தகம் வெளிவந்த மூன்று ஆண்டுகள் முன்பாக கத்தாரில். ஆனால் இப்போது வெளியான இந்த புத்தகத்தில் தலைவர் கலைஞரின் நேர்முக உதவியாளர் திரு. ராஜமாணிக்கம் அவர்கள் பேட்டியில் இதே விஷயம் இருக்கின்றது. ஆக தலைவர் கலைஞர் அவர்களின் பர்ஃபெக்ஷன் என்பது எல்லா விஷயத்திலும் தெரிகின்றதா?
நான் சொல்ல வந்த விஷயத்தில் கொஞ்சம் கூட சொல்லி முடிக்கவில்லை... நிறைய இருக்கின்றது அந்த புத்தகம் பற்றி!
எனக்கு இந்த புத்தகம் பரிசளித்த என் அன்பு அண்ணன் திரு. கு.மா.பா. இளங்கோவன் அவர்களுக்கு நன்றிகள்!
பின்னர் மீண்டும் தொடர்கின்றேன்....