பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 25, 2008

வீரசேகரவிலாஸும், மாமாவும்,சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 2

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்" என்கிற இந்த பதிவின் முதல் பாகத்தை முதலில் படித்து விடவும். ஏனனில் அதை எழுதி இரண்டு மாதங்கள் ஆயாச்சு. எல்லோரும் மறந்து போயிருப்பீங்க. அதன் பிறகு இந்த இரண்டாம் பாகம் படிக்கலாம்.

************************************

அத்தைக்கு அத்தனை வித்தையும் தெரியும். அத்தை வீட்டை விட்டு நேராக எங்கள் தெருவுக்கு கிளம்பியாச்சு. கல்யாண சத்திரத்துகும் எங்கள் தெருவுக்கும் ஹெலிகாப்டரில் போனால் அரை மணி நேரம் ஆகும். நடந்து போனால் 5 நிமிடம் ஆகும். ஆனால் அத்தை "பண்டரிநாதன்" டாக்சியில் பொண்ணை அழைச்சுகிட்டு போனாத்தான் மதிப்புன்னு நினைச்சுகிட்டு இருக்காங்க.என்ன காரணமோ!

இதோ அத்தை வந்தாச்சு! அத்தை கேட்கும் கேள்விகளுக்கு அதன் அதன் பதிலுக்கு சொந்தமானவர்கள் பதில் சொல்ல போகிறார்கள்.

"தம்பிகளா! இங்க வாங்க"

"அத்தே நாங்க இங்க தான இருக்கோம்" இது அப்பா!

"சரி சிங்காரம் வந்துட்டானா! வண்டிய கட்டிகிட்டு திருவமழைலயிலருந்து, பெரிய தம்பி கிட்ட இருந்து சொன்னனே?"

"ஆமா அத்தே அவன் வந்துட்டான். நீ சொன்னாதான் வடக்கு மாடவிளாகம் வழியா விறகு கொண்டு போவானாம்"

அது சரி! ஏன் தம்பி விறகா மொதல்ல எடுத்துட்டு போவாங்க! அவனுக்கு தெரிஞ்சு இருக்கு, ஆண்டவா அண்ணன் புள்ளயபெல்லாம் காப்பாத்து! அடியே மீனாச்சி, ஒரு படியிலே உப்பு, ஒரு மொரத்துல கொஞ்சம் மஞ்சள் பொடி ஆங் அதை அப்புடியே புள்ளையாரா புடிச்சுடு, கொஞ்சம் சூடம், ஒரு தேங்கா எடுத்து வைய்யி, ஆரத்தி கரைக்க போறவ முதல்ல நடந்து போவுட்டும் சத்தரத்துக்கு"

"வச்சுட்டேன் அத்தே"

"சரி மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பெட்ரோமாஸ் லைட் சொல்லியாச்சா"

"வெத்தல பாக்கு மணி அண்ணன் ஒரு வரிசைக்கு அஞ்சுன்னு மொத்தம் பத்து சொல்லிட்டாரு, அதிலே ஒரு லைட்டு மாத்திரம் முழு ராத்திரிக்கும்"

"பாலய்யருக்கு சொல்லியாச்சா, அவரு லிஸ்ட் படி வாங்குங்கப்பா, போன தடவை மாதிரி புழுங்க அரிசி வாங்கிடாதீங்க, எந்த அய்யரு வூட்டுல புழுங்க அரிசி சமப்பாங்க, சரி சமையல் மணிஅய்யரு இட்லிக்கும் வடைக்கு ஊற வைக்க சொன்ன அரிசி, உளுந்து எல்லாம் யாருடீ ஊற வச்சது"

"நாந்தான் அத்தே! அவரு குருப்பு தவசுபுள்ள வந்து எடுத்துகிட்டும் போயாச்சு"

"தம்பி, வண்டிபேட்டை ரத்தினத்தை நாளு வாடகைக்கு சத்தரத்து வாசல்ல நிப்பாட்டிடு, மோள செட்டு கூப்பிட போறதில இருந்து சப்ஜாடா தேவப்படும்"

"சரி அத்தே"

"கல்யாண முத்தத்துக்கு(முற்றத்துக்கு) ஒதியங் கெள வெட்டிகிட்டு வந்தாச்சா, அதுல கட்ட சேப்பு ஜாக்கெட் பிட்டு எடுத்து வச்சாச்சா"

"அய்யய்யோ அத்தே அத மறந்தாச்சு, இரு அத்தே சிங்காரம் வரட்டும் சொல்லிடலாம்"

"தம்பி! வெத்தல பாக்கு மணி வந்துட்டானா?"- இது அத்தை!

நான் இந்த இடத்திலே வெத்தலை பாக்கு மணி அண்ணனை பத்தி சொல்லியே தீரனும். மாயூரநாதர் கோவில் ஈசானிமூலை சியாமளா தேவி கோவில் மூணு கடையிலே அவரும் ஒரு கடை. கடையில் சரக்குன்னு பார்த்தா 12 சோடா அடுக்கும் ட்ரேயில் மூனு சோடா இருக்கும். 2 கவுலி வெத்தலை, 100 கிராம் பாக்கு, அடுத்து ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவிலே கொழும்பு வர்த்தக நிலைய பாட்டு இத்தனையே அந்த கடையின் சரக்குகள்.

வெத்தலைபாக்கு மணி அண்ணன் ஊருக்கே அண்ணன் தான். வயசு அப்பவே 50 இருக்கும். ஆனால் அவருக்கு அப்போது 10 வயது உடம்புக்கு சரியில்லாத கடைகுட்டி பையன் இருந்தான் என்பதும், மீதி எல்லாம் பெண் குழந்தைகள் என்பதும் பதிவுக்கு சம்பந்தம் இல்லா விஷயம். யாரை பற்றியும் கவலைப்படாமல் ...தன்னன்ன தரதன்னாஆஆஆஆஆஆஆஆஅ...ன்னு ஏதோ ராகத்தை முயன்று கொண்டே போவார் ரோட்டிலும், அவ்வளவு ஏன் ராஜன் தோட்டத்தில் காலை கடன் கழிக்கும் போது கூட. விக்கிரமாதித்தன் மாதிரி இப்பவும் அந்த ராகத்தை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்.

அவருடைய காஸ்ட்டியூம் காந்தி காஸ்ட்டியூம். ஆனா காந்தி துவைத்து கட்டியிருப்பார். இவர் கட்டியதை துவைத்தாலும் கூட மத்தவன் கட்ட முடியாது. அவருக்கு கெட்ட பழக்கம் என பார்த்தால் பொடி போடுவார். அதுவும் TAS ரத்தினம் பட்டினம் பொடி மட்டும் தான் போடுவார். அதற்காகவே மணிகூண்டுக்கு போவார். 10 பைசா பொடியை சின்ன எவர்சில்வர் தராசில் நிறுத்து அதை வாழைமட்டையில் கட்டி வாங்க மாட்டார். அவரின் பொடி டப்பாவை தராசுக்குள் தலி கீழாய் அவரே கவிழ்த்து அனு அளவு கூட தராசில் ஒட்டாமல் அவர் அதை டப்பியில் நிறப்பும் அழகு ரசிக்க வைக்கும். ஒரு தரத்துக்கு கொசுறு பொடி ஒரு சிட்டிகை வாங்கி கண் இமைக்கும் நேரத்தில் மூக்கில் நுழைத்து கண்கள் சிவக்கும் முன்னமே தன் காசி துண்டால் முகம் துடைத்து துண்டின் உள்ளேயே எச்சிலோடு ஒரு தும்மல் போடுவார்.

அவர் வரும் முன்னமே அவரின் பொடிவாசம்ன் அந்த இடத்துக்கு வந்துவிடும் . இரண்டு நிமிடம் தொடர்ந்து பேசினால் "சொற்த்தெர்தா" என்பார். அதற்கு என்ன அர்த்தம் என நான் ரொம்ப நாள் யோசித்து கண்டு பிடிக்க முடியாமல் என் சித்தப்பாவிடம் கேட்டபோது தான் தெரிந்தது "நான் சொல்வது என்னான்னு தெரியுதா" என்பதன் சுருக்கம் அந்த வார்த்தை.

சொந்த பந்தம் யார்வீட்டில் கல்யாணம் என்றாலும், சாவு என்றாலும், காரியம் என்றாலும் முதலில் மணி அண்ணனுக்கு தான் செய்தி போகும். இது போன்ற காரியங்களை தனி ஆளாக நின்று கையமத்திவிடுவார்.

இதோ அத்தை தேடும் மணி அண்ணன் இப்போது நிற்பது கச்சேரி ரோட்டில் உள்ள "மாயூரம் பைனான்சியல் கார்ப்பரேஷன் - ஸ்தாபிதம் 1947" என்னும் எனாமல் கரும் நீல கலர் சைன் போர்டை கொண்ட கட்டிடத்தின் கீழே.

மாமா உள்ளே போனதும் அங்கே வேலை பார்க்கும் 68 வயது ரிட்டையர்டு தாசில்தார் சண்முக சுந்தரம் (அது என்ன எங்க ஊர் தாசில்தார் எல்லோர் பெயருமே சண்முக சுந்தரமாகவோ, சுப்ரமணியனாகவோ தான் இருக்கின்றது!) "வாங்க மணி புள்ள, எத்தனை ஜமுக்காளம், பந்திப்பாய் வேணும்" என்கிறார்.

என்னடா இது பைனாஸ் கம்பனிக்கும் பந்திப்பாய்கும் என்ன சம்மந்தம் என கேட்பவர்களுக்காக இந்த பத்தி. 1947ல் ஆரம்பித்து இன்று வரை நாணயத்தோடு செயல் படும் அகில இந்திய அளவில் இந்திய ரிசர்வ் வங்கியால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிற அந்த "மாயூரம் பைனான்ஸ் கம்பனி" தன் ஊழியர்களாக ஓய்வு பெற்ற தாசில்தார்களையும், வங்கி மேளாளர்களையும் மட்டுமே நியமிக்கின்றது. (அது போல இன்னும் ஒரு இடம் தருமபுரம் மடம் என்பது உபரி செய்தி) ஆனால் தன் ஊர் மக்கள் நன்மைக்காக பெரிய பெரிய ஜமுக்காளங்கள், பந்தி பாய்கள் ஆகியவற்றை இலவசமாக ஒரு சேவையாக தருகின்றது. எனவே தான் மணி அண்ணன் அங்கே போய் நிற்கிறார் இந்த மதிய 3.30க்கு.

"ஆமா தாசில்தாரய்யா, ரெண்டு திண்ணைக்கும் ரெண்டு ஜமுக்காளம், ஹாலுக்கு நாலு, கல்யாண கூட நாலு தாவாரத்துக்கும் நாலு, கூடத்துக்கு ஒன்னு, பின்ன பந்திபாய் பெருசு நாலு குடுங்க". இப்போது தெரியுதா மணி அண்ணனுக்கு அந்த வீரசேகர விலாஸ் எப்படி அத்துப்படின்னு. இதே "அம்பாபாய்" கல்யாண மண்டபம்னா அதுக்கு தகுந்த மாதிரி கேட்டிருப்பார்.

இதோ மணிஅண்ணன் கொண்டு வந்திருந்த சின்னகடை தெரு வண்டிப்பேட்டை ரத்தினத்தின் ஒத்தைமாட்டு வண்டியிலே அத்தனை சமாச்சாரங்களையும் ஏத்திவிட்டு பின்னாலேயே நடந்து கிளம்ப வண்டிகார ரத்தினம் " என்னா அண்ணே வண்டியிலே குந்திகிட்டா என்னா" என்பதை காதிலேயே போட்டுக்க மாட்டார். அவர் மெதுவா சத்திரம் வந்து சேரட்டும், நம்ம அத்தை என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்.

பண்டரிநாதன் பிளஷர் கார் வந்து நின்னதுமே பந்தல் வாழைமரத்தில் ஏறும் முயற்ச்சியில் இருந்த நானும், மாக்கோலத்தை டவுசரில் அப்பி கொண்டிருந்த என் பங்காளிகளும்,கழட்டிய டவுசரை முன்பக்கமாக மறைத்து கொண்டு பாதி மதிய கடன்(!) பொருப்பில் இருந்து தனக்கும் காரில் இடம் கிடைக்குமா என ஓடி வந்த மாமா பையன் சோனி என்கிற விவேகானந்தனும் இதையெல்லாம் பார்த்து பயந்து போன பண்டரிநாதனும் "அய்யோ அத்தே பண்டரி அண்ணன் வந்தாச்சு" என் கூவிய சித்தியும் அந்த இடத்தை கொஞ்சம் பரபரப்பாக்கினார்கள்.

ஏதோ ஒரு பெரியம்மா மாத்திரம் "என்ன அத்தே எப்பவும் பண்டரிநாதன் காரு தானா, அவரே பாதி இடத்தை அடைச்சுப்பாரு" என சொல்ல அத்தை "அட போடி அவரு கிட்ட மட்டும் தான் வெள்ளை பிளசரு காரு இருக்கு. மத்தவன் கிட்ட இல்லாம் கருப்பும், மஞ்சளும் கலந்து அடிச்ச கலருதான். ஒரு நல்ல காரியத்துக்கு கருப்பு தேவையா"ன்னு அடக்கி விட்டு "சரி சரி பொண்ணு வீட்டிலே இருந்து நான் பொண்ணை அழைச்சுகிட்டு வாரேன், அடியே பெரிய மீனாட்சி,சின்ன மீனாச்சி, காத்தியாயினி, மூணு பேருமா எதிர்க்க வாங்க... நான் பொண்ணு கூட காருல ஏறின பின்ன தான் மத்தவங்க ஏறனும் தெரியுதா" என சர சரன்னு தன் வெற்றிலை பெட்டியை எடுத்து கொண்டு நாலு வீடு தள்ளி இருக்கும் பொண்ணு வீட்டுக்கு போக காரை சுற்றி வியூகம் அமைத்த நாங்களும் "ஓஓஓஓஓ"ன்னு சத்தம் போட்டு கொண்டே பின்னால் துரத்த ஒரு வழியா அத்தையும் பொண்ணும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள பின்பு அத்தையின் பர்மிஷன் இல்லாமலே கிடைத்த கேப்பில் நாங்கள் காரை கைப்பற்ற நான் மட்டும் பண்டரிநாதன் பக்கத்தில் சேஃபாக உட்காந்து கொண்டேன். அதிலே ஒரு சூட்சுமம் இருக்கு. எப்படியும் ஆண்கள் உட்கார போவதில்லை. பண்டரி நாதன் பக்கத்திலே நெருக்கியடிச்சு எந்த லேடீசும் உட்கார போவதுஇல்லை. அதனால் எப்போதும் ஒரு சின்ன பயலை தான் டிரைவருக்கும் எதுனா ஒரு பெரியம்மாவுக்கும் நடுவே உட்கார வைக்க போகிறார்கள் அது நானாக இருக்கட்டுமே என்கிற ஒரு நப்பாசை.

இந்த கூத்திலே டவுசரை முன் பக்கமாக மறைத்து கொண்டிருந்த சோனியை பார்த்து அத்தை "டேய் போடா போய் அம்மாவை தண்னி ஊத்த சொல்லி கழுவிகிட்டு வாடா" என சொல்ல அதற்கு அவன் "இல்ல அத்தே இன்னும் வரவேயில்லை, அதுக்குள்ள கார் வந்துடுச்சு"ன்னு சொல்ல காரில் இருந்த நாங்கள் உட்பட அத்தையும் சிரித்தார்கள். அதற்குள் கிட்ட தட்ட இருபத்திமூனரை சித்தி, அத்தை, பெரியம்மாக்களும் காரை சூழ்ந்து கொள்ள (ஒரு பெரியம்மா காளியாகுடி காபி பில்ட்டராக்கும்!) ஒவ்வொரு சின்ன பயலும் இழுத்து கீழே போடப்பட கிட்ட தட்ட இருபத்தி நாலுபேரும் பின் சீட்டிலும் முன் சீட்டிலும் அடைந்துவிட கடைசியாய் எனக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அத்தையின் சின்ன பொண்ணு வர நானும் கீழே தள்ளப்பட்டேன்.

சரி விடுடா விடுடா சைக்கிள் டயர் ஓட்டிகிட்டே காருக்கு முன்னால நாம போயிடலாம்ன்னு நான் மனசை தேற்றி கொள்ள அந்த டவுசர் பார்ட்டி மாத்திரம் ஆத்திரம் அடங்காமல் ரோட்டில் புரண்டு அழ அவன் அம்மா அவன் அழுகையை கொஞ்சம் கூட கண்டுக்காம "அத்தே வண்டிய விட சொல்லுங்க, அவன் அவனோட அப்பனை கொண்டிருக்கான், நமக்கு முன்னால வந்து நிப்பான் பாருங்க" என சொல்ல வண்டி கிளம்பியது. அப்போது அவசர அவசரமாக விளநகர் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடி வந்த ஒரு பெரியம்மா கைகாட்டி நிறுத்த புளி மூட்டைக்குள் இருந்த ஒரு சித்தி "வண்டிய விடுங்கப்பா மூச்சு முட்டுது"ன்னு சொல்ல அத்தை "ஆமாம்டி நீ நடந்து பசங்களை அழைச்சுகிட்டு வந்துடு, இங்க இடமே இல்லை"ன்னு சொல்ல அந்த பெரியம்மா முகம் சிவந்தது.

நீங்க வேணா குறிச்சு வச்சுகோங்க அந்த பெரியம்மா அடுத்த கல்யாணத்துக்கு வர மாட்டாங்க.(ஆனா அதுக்கு அடுத்த கல்யாணத்துக்கு காலையிலேயே வந்துடுவாங்க காரில் இடம் பிடிக்க)

அம்மாவுக்கு இப்படி காரில் பிதுங்கி போய் வந்து இறங்குவது பிடிக்காது என்பதும், கூப்பிடு தூரத்தில் இருக்கும் இடத்துக்கு ஹாயாக வருவதும், தவிர ஆரத்தி எடுக்கும் ஜெண்டில்வுமன் வேலையே உத்தமம் என நினைப்பதாலும் அம்மா முன்கூட்டியே ஒரு தாம்பாளம், சுண்னாம்பு, மஞ்சள், சின்ன வெற்றிலை, சூடம், சிதறு தேங்காய் என போய் விட்டிருந்தார்கள்.

கார் ஊர்ந்து போய் சேர்வதற்க்கு முன்னமே நாங்கள் டயர் வண்டி ஓட்டு கொண்டு போயாச்சு. அதற்குள் சிங்காரம் வண்டி வடக்கு மடவிளாகம் பின் வாசல் வழியே விறகு கொட்டி விட்டு நிற்க நாங்க எல்லோரும் எங்கள் சைக்கிள்டயர் வண்டியை அதிலே போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு அம்மா ஆரத்தி எடுக்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். கார் வந்து நின்னதும் முதலில் இறங்கியது பண்டரிநாதன் தான். ஏனனில் அவர் இறங்கினாலே முன் சீட்டில் உள்ள மற்றவர்கள் சுலபமாக இறங்க முடியும். அப்பாடா ஒருவழியாக எல்லோரும் இறங்கி முடித்தவுடன், பார்த்தா பொண்ணு என்னவோ சினிமாவிலே வில்லனால் துரத்தப்பட்டதை போல இன்னும் சொல்ல போனால் சந்திரமுகி மாதிரி சீவிய தலை முடி எல்லாம் கொத்து கொத்தாய் முன் பக்கம் விழுந்து பொண்ணு கசங்கின பன்னு மாதிரி ஆகிடுச்சு. அம்மாவுக்கு மட்டும் ஒரு நமட்டு சிரிப்பு.


சரி இதையே சொல்லி கொண்டு இருந்தா எப்படி? திருவீழிமிழலை மாமா என்ன ஆனார்ன்னு சொல்லனுமே இப்போது. மாமா கன்னார தெருவிலேயே பஸ்ஸில் இருந்து இறங்கினா 5 நிமிடத்திலே மண்டபம் வந்துவிடும். ஆனா அவர் எப்போதுமே பஸ்டாண்டிலே இறங்கி அப்படியே மணிகூண்டை தாண்டி காளியாகுடி வந்து ஒரு பில்டர் காபி சாப்பிட்டுவிட்டு அம்பி அய்யர் கூட கொஞ்சம் பேசிட்டு, எதிரே ராமூர்த்தி டாக்டரிடம் நலம் (!) விசாரித்துவிட்டு ஆடி அசைந்து முனுசிபாலிட்டி கிட்ட இதோ வந்து கொண்டிருக்கார் பாருங்க.

ஆரத்தி எல்லாம் முடியும் போது மாமா வந்து சேரவும் அம்மா "ஆகா அண்ணன் சரியான நேரத்திலே வந்தாச்சு. வாங்க இந்த செதறு காயவுடுங்க"ன்னு சொல்ல கக்கத்தில் பையை இடுக்கி கொண்டு மாமா சிதறு காய் விட அந்த நிமிடமே கல்யாண வைபோகம் ஆரம்பிச்சாச்சு!

குறிப்பு:

ரொம்ப பெருசா போயிடுச்சு இந்த பதிவு. அதனால ஜமுக்காளம் கொண்டு வந்து போட்டுவிட்டு மணிஅண்ணன் எங்கே போனார், நாதஸ்வரம் யார், கல்யாணம் செய்து வைக்கும் பாலய்யர் வந்துட்டாரா, மாப்பிள்ளை ஊர்வலம் எங்கிருந்து, மாலை டிபன் என்ன, இரவு சாப்பாடு என்ன, மணிஅய்யர் சரியான சமையத்தில் சமையலுக்கு வந்தாரா,இல்லாவிடில் எப்போதும் போல அப்ரசண்டிகளை அனுப்பிவிட்டாரா, இரவு சினிமா போன கோஷ்டிகள் எவை, மாமா எப்போ சீட்டு கச்சேரி ஆரம்பித்தார், அவர் இரவு 11 மனிக்கு சீட்டு கச்செரிக்கு எப்படி பிரேக் விட்டார், இரவு தலையணை பற்றாகுறை சண்டை எல்லாம் அடுத்த பாகத்தில் போடுகிறேன். அதன் பின் அடுத்த நாள் கல்யாண வைபோகம் பார்க்கலாம் மூன்றாம் பாகத்தில்!

11 comments:

  1. //வெத்தலை பாக்கு மணி அண்ணனை பத்தி சொல்லியே தீரனும். மாயூரநாதர் கோவில் ஈசானிமூலை சியாமளா தேவி கோவில் மூணு கடையிலே அவரும் ஒரு கடை. கடையில் சரக்குன்னு பார்த்தா 12 சோடா அடுக்கும் ட்ரேயில் மூனு சோடா இருக்கும். 2 கவுலி வெத்தலை, 100 கிராம் பாக்கு, அடுத்து ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோவிலே கொழும்பு வர்த்தக நிலைய பாட்டு இத்தனையே அந்த கடையின் சரக்குகள்.
    ///


    கிட்டத்தட்ட எனக்கு நினைவு தெரிஞ்சு சியாமளா தேவி கோவில்ல கிராஸ் பண்ணும்போதெல்லாம் பார்த்த இந்த கடையும் (சோடா பாட்டில்கள் ஸ்பென்சர்ன்னு நினைக்கிறேன்!) மத்த கடைகள் ஒப்பீட்டு பார்க்கையில் இவுரு எதோ ஒரு லட்சியத்தோடத்தான் இருக்காருன்னு நினைக்கவைச்சிது!

    ReplyDelete
  2. அண்ணே....சூப்பருண்ணே..:)

    ReplyDelete
  3. //பண்டரிநாதன் பிளஷர் கார் வந்து நின்னதுமே பந்தல் வாழைமரத்தில் ஏறும் முயற்ச்சியில் இருந்த நானும், மாக்கோலத்தை டவுசரில் அப்பி கொண்டிருந்த என் பங்காளிகளும்,கழட்டிய டவுசரை முன்பக்கமாக மறைத்து கொண்டு பாதி மதிய கடன்(!) பொருப்பில் இருந்து தனக்கும் காரில் இடம் கிடைக்குமா என ஓடி வந்த மாமா பையன் சோனி///


    :)))))))))))))))))))

    ReplyDelete
  4. அதிலும் அந்த பொடி மேட்டர்....கலக்கிட்டீங்க(நீங்களும் பொடி போடுவீங்களோ)

    ReplyDelete
  5. அடுத்த பதிவுக்கு ரொம்ப கேப் விடாதீங்க....சீக்கிரமே போடுங்க..:)

    ReplyDelete
  6. //ஏதோ ஒரு பெரியம்மா மாத்திரம் "என்ன அத்தே எப்பவும் பண்டரிநாதன் காரு தானா, அவரே பாதி இடத்தை அடைச்சுப்பாரு" என சொல்ல//


    ஒரு கையை ஸ்டைலா விண்டோவுல வைச்சுக்கிட்டு ஒருகையால கார் ஸ்டீயரிங்க் பிடிச்சுக்கிட்டு வேஷ்டி சட்டை பக்திமயமா இருக்கறவர்தானே பண்டரி நாதன் அப்படின்னு ஒரு கிராஸ் செக் பண்ணிக்கிறேன் அண்ணே :)))

    ReplyDelete
  7. / ஆயில்யன் said...

    //ஏதோ ஒரு பெரியம்மா மாத்திரம் "என்ன அத்தே எப்பவும் பண்டரிநாதன் காரு தானா, அவரே பாதி இடத்தை அடைச்சுப்பாரு" என சொல்ல//


    ஒரு கையை ஸ்டைலா விண்டோவுல வைச்சுக்கிட்டு ஒருகையால கார் ஸ்டீயரிங்க் பிடிச்சுக்கிட்டு வேஷ்டி சட்டை பக்திமயமா இருக்கறவர்தானே பண்டரி நாதன் அப்படின்னு ஒரு கிராஸ் செக் பண்ணிக்கிறேன் அண்ணே :)))/


    பயபுள்ளை ஒரே ஊரு...அதான் கிராஸ் செக் பண்ணுது.....நாங்க எல்லாம் நேரா போய் தான் செக் பண்ணனும்...:)

    ReplyDelete
  8. /மத்த கடைகள் ஒப்பீட்டு பார்க்கையில் இவுரு எதோ ஒரு லட்சியத்தோடத்தான் இருக்காருன்னு நினைக்கவைச்சிது!/

    ஆயில் அண்ணே...உங்க ஊருல எல்லோருமே ஒரு லட்சியத்தோட தான் இருக்காங்க போல..:)

    ReplyDelete
  9. ஹய்ய்ய்ய் அபி அப்பா எனக்கு செம ஜாலியா இருக்கு திரும்ப திரும்ப படிக்கிறேன்!

    ஏன்ன்னு கேளுங்க...?

    ஏன்ன்னா எல்லா கேரக்டரும் புரிபடுது :))))))

    ReplyDelete
  10. ஓ அற்புதம் ...நான் ஆயில்யனைப்போல அந்த கேரக்டரை எல்லாம் பார்த்தது இல்லைன்னாலும் கற்பனை செய்ய நல்லா முடியுது..
    சுவாரசியமா இருந்தது ரொம்பவும்..சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க லேட் செய்யாதீங்க.. சொற்த்தெர்தா... :)

    ReplyDelete
  11. இது என்ன உண்மை சம்பவமா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))