பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 29, 2008

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 3

"வீரசேகரவிலாஸும், மாமாவும், சீட்டுகச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்"- பாகம் # 2 ஐ படித்துவிட்டு இந்த 3ம்பாகத்தை படிக்கவும்!

***********************************


மாமா சிதறு காய் விட்டுட்டு அந்த வீரசேகரவிலாஸ் கருங்கல் படி ஏறி மேல் படியில் நின்று கிழக்கே பார்த்து "காளியாயி"ன்னு கும்பிட்டு கிழக்கே பார்த்து கச்சேரி பிள்ளையாரை கும்பிட்டு உள்ளே போய் முதலில் இருக்கும் தொட்டி முற்றத்தில் இறங்கி தண்ணீர் குழாயில் காலை கழுவி கொண்டிருக்கும் போதே பெண்ணை அழைத்து கொண்டு எல்லோரும் உள்ளே போனார்கள். முதலில் அந்த திண்ணை வரை தானே சொல்லியிருந்தேன். இப்போது அந்த திண்ணையை தாண்டி அந்த மிக பெரிய படாக்கு மரத்தில் (ரோஸ் வுட்) செய்த வேலைப்பாடு அதிகம் கொண்ட நிலைப்படியை தாண்டி அத்தையின் தலைமையில் உள்ளே சென்றனர். நிலைப்படியை அடுத்து உள்ளே இருப்பது அந்த பெரிய சத்திரத்தின் ஹால். வலது திண்ணை இடது திண்ணை இரண்டின் நீளமும் சேர்த்த நீளம்தான். ஆனால் அகலம் திண்ணையின் அளவை விட கொஞ்சம் பெரியது. அதன் கிழக்கும் மேற்குமாக இரண்டு மர அலமாரிகள் சுவற்றில் புதைக்க பட்டிருக்கும். அலமாரியின் இரண்டு பக்கமும் தன் நீண்ட தோகையை கீழ் பக்கமாக தொங்கவிட்ட படியான, ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி சலவைக்கல்லால் செய்யப்பட்ட மயில் பதிக்கபட்டிருக்கும். அதை அந்த தோகையை தடவி பார்ப்பது என்னவோ எனக்கு அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும். எனக்கு மட்டும் இல்லை கொஞ்சம் பிராயமானவர்களும் கூட தடவி பார்த்து விட்டு "என்ன ஒரு வேலைப்பாடு" என சொல்லிக்கொள்வர்.


அந்த ஹாலின் நடுநாயகமாக ஒரு செட்டியார்வீட்டு ஆச்சி ஒரு அழகிய வேலைப்பாடு அமைந்த நாற்காலியில் அட்டானிகால் போட்டு அமர்ந்து இருக்க ஆச்சியின் பின்னால் அவங்க வீட்டு செட்டியார் நாற்காலியில் கைவைத்து நின்று கொண்டிருக்கும் அழகிய கருப்பு வெள்ளை படம் வரைந்து படாக்கு மர பிரேம் போட்டு பிரம்மாண்டமாய் மாட்டப்பட்டிருக்கும். ஆச்சியின் கழுத்தில் குறைந்தது ஒரு கிலோ நகை இருக்கும். ஆச்சி அத்தனை ஒரு அழகுன்னு சொல்ல முடியாது. நிறமும் கருப்புதான். ஆனால் முகத்திலே லெஷ்மி குத்தவச்சி தாயம் ஆடி கொண்டிருக்கும். அந்த ஆச்சியின் நகையை பார்த்து கண்வைக்காத எம்குல பெண்டிரே இல்லை. ஆச்சியின் போட்டொவை பார்க்கும் என் பெரியம்மா, அத்தை வகையறாக்கள் அவங்க அவங்க வீட்டுகாரரை பார்க்கும் தொணி இருக்கே "என்னங்க நாம இப்படி ஒரு போட்டோ எடுத்துக்க கூடாதா" என கேட்பது போலவும், அதற்கு அந்த கனவன்மார்கள் "ஆச்சிக்கு ஆயிரம் சவரனும், ஆயிரம் ஜன்னல் வச்ச வீடும், சிவகங்கை சீமையிலே ஆயிரம் ஏக்கரா மல்லிகை தோட்டமும் சீதனமா எழுதி வச்சாரு அவங்க அப்பாரு அனா ரூனா லேனா செட்டியாரு. எனக்கும் அப்படி எழுதி வச்சா நான் காலடியில இல்ல குந்தி இருப்பேன்" என பதில் சொல்வது போலவுமே எனக்கு தோன்றும்.

அதே ஹாலில் ஒரு மரத்தால் ஆன மாடிப்படி,கைப்பிடியோடு இருக்கும். அதன் மேலே ஏறினால் அந்த ஹாலின் மேலே சுற்றியும் இருக்கும் கலர் கண்ணாடி பதிக்கப்பட்ட பதினாறு ஜன்னல்கள் இருக்கும். அதன் வழியே பார்த்தால் அந்த ஹாலில் நடைபெறும் விஷேஷத்தை பார்க்கலாம். ஆனால் கல்யாணம் அங்கே நடத்துவதுஇல்லை. கல்யாணம் அந்த ஹாலின் அடுத்து உள்ளே நுழைந்தால் வருமே ஒரு முற்றம்,அங்கே தான் நடக்கும்.
ஹாலை கடந்து போனால் நேரிடையாக வடக்கு தாழ்வாரம். அடுத்து முற்றம். அதிலே தான் கல்யாணம் நடக்கும். அந்த முற்றத்தை சுற்றியும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு தாழ்வாரம். மேற்கு தாழ்வாரத்தை அடுத்து ஒரு கல்யாண கூடம் இருக்கும். மேற்கு கூடத்தின் ஒரு முனையில் மணமகன் அறை. அது கொஞ்சம் பெரியது. கிழக்கு தாழ்வாரத்தின் ஒரு முனையில் மணமகள் அறை. அது அதை விட கொஞ்சம் சிறியது. (இங்கயும் ஆணியம் பாருங்கள்)
இதோ மணி அண்ணன் விரித்து வைத்த ஜமுக்காளம் எல்லா இடத்தையும் நிரப்ப மணமகள் அதன் ரூமுக்கு வந்தாச்சு.


மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே ரொம்ப வித்யாசமானது. திருக்கடையூர் முரளி(அப்போது மாமாவின் சீட்டு கச்சேரியில் வயது குறைந்தவர்), திருநாகேஸ்வரம் சுப்புனி, கும்மோணம் பஞ்சாமய்யர் ரெண்டாவது பையன் மீசைகாரர் ஜெயராமன், பரசலூர் ஜக்கய்யர், திருபுங்கூர் ராமசுப்பு இவர்கள் நிரந்தர பக்க வாத்தியம். இடையிடையே சில ஊர் பெரிய மனுஷங்க, சமையல் மணிஅய்யர், நாதஸ்வரம் சிவபுரி பத்மநாபன், வாயில் எச்சில் ஒழுகும் சு(ரு)தி பெட்டி தெட்ஷா இவங்க எல்லாம் கௌரவ ஆர்டிஸ்ட் வகையறா. இதிலே டிரான்சிட் பிளேயர்ஸ்ம் உண்டு.


மாமாவின் சீட்டு கச்சேரி குரூப் இருக்கே அது சாதி, மதம் கடந்தது. ஆரிய திராவிடம் கடந்தது, ஏழை, பணக்காரன் கடந்தது, உயர்ந்த, தாழ்ந்த வித்யாசம் கடந்தது, உயர் பதவி, தாழ்ந்த பதவி கடந்தது. பெரிய வித்வானும், அவரின் வெற்றிலை எச்சில் படிகம் தூக்குபவனும் இங்கே சமம், பெரிய சமையல் காரரும், பந்தி பரிமாறும் அவரின் வேலைக்காரனும் சமம், ஊர் பெரிய மனுஷனும் அவர்களுக்கு சமம். உண்மையான சோஷலிஷத்தை அங்கே தான் காணலாம். இத்தனை மணிக்கு சீட்டு கச்சேரி ஆரம்பம், இத்தனை மணிக்கு பிரேக், இத்தனை மணிக்கு முடியும், அடுத்த கச்சேரி இந்த இடத்தில் என எந்த ஒரு அஜண்ட்டாவும் கிடையாது.புதிது புதிதாக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் எழுதி வைத்து பின்பற்றுவது கிடையாது. நோட்டு புத்தகத்தில் பாயிண்ட் குறித்து வைத்துகொள்வதோ எதுவும் கிடையாது. எல்லாம் ஒரு கார்ப்பரேட் கம்பனி நேர்த்தியுடன் தானாக நடக்கும்.
இதோ மாமா கிழக்கு பக்கமாக இருக்கும் திண்ணையை(ரவிசாஸ்திரி பிட்சை பார்ப்பது போல) ஒரு நோட்டம் விடுகிறார். அப்போதே திருக்கடையூர் முரளி, சுப்புனி இருவரும் ஆஜர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் வாங்க. எப்படி இருக்கீங்க என்பன போன்ற சம்பாஷனையில் தொடங்காமல் ஏதோ ஒரு மணி நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு விட்ட இடத்தில் தொடருவது போல பேச்சை தொடங்குவார்கள். ஆனால் அவர்கள் காரியம் சீட்டு கச்சேரியை தொடங்க ஆயத்தப்படுத்தும் மும்முரத்தில் இருக்கும்.
"தெட்ஷாவுக்கு அம்பாபாயிலே தானே இன்னிக்கு கச்சேரி, யாரு நாயனம் அவனுக்கு"
கவனிக்கவும் தெட்ஷா ஒரு சுருதிபெட்டி ஆள். எந்த நாயனத்துக்கு தெட்ஷா சுதிபெட்டின்னு கேக்கலை. தெட்ஷாவுக்கு யாரு நாயனம் என கேட்டால் என்ன அர்த்தம். மாமாவுக்கு அப்போது முக்கியம் தெட்ஷா தான்.
முரளி அதுக்கு "அதுவா மாமா, மாப்பிள்ளை அழைப்புக்கு மழை வரனும்னு வேண்டிப்பாரே ஆச்சாள்புரம் பெரியதம்பியண்ணே அவருதான். மழை வருதோ இல்லியோ தெட்ஷா பத்து மணிக்கு வந்துடுவாரு"


மாமாவுக்கு அந்த கீழாண்ட திண்ணையிலே கடைசி தூண் தான் சரி படும். காலை தொங்கவிட்டுக்கலாம். தூணில் சாஞ்சுக்கலாம். வெற்றிலையை குறி பார்த்து தொட்டி முற்றத்தில் துப்பலாம். எழுந்து ஒண்ணுக்கு போகனும்ன்னா மத்த பிளேயர்சை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். மேலும் மாமாவுக்கு உருவமும் கொஞ்சம் பெரிசு.


மாமா தன் இடத்துக்கு போய் உக்காந்த உடனே "டேய் பசங்களா புருஷோத்தம்மன் டைலர் கடைக்கு போயி திருவமழை மாமா வந்திருக்கேன்னு சொல்லுங்கடா" என்பார்.
நானோ யாரோ ஒரு பொடியனோ ஓடி போய் சொன்னவுடன் "திருவமழை தம்பி வந்தாச்சா, இந்தா இந்தா தலவாணி, ஆனா நீதான் நாளைக்கு ஞாபகமா திருப்பி தரனும்"ன்னு சொல்லி தன் அடியில் இருக்கும் தலையனையை எடுத்து தருவார்.


மாமா அதை அழகாக தூணில் சாய்த்து தான் அதன் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் போதே மணி அண்ணன் மாமாவிடம் வருவார்.
"வா மணியண்ணே! மணியய்யர் வந்துட்டாரா"
"இல்ல தம்பி இப்ப வந்துடுவாரு. அவரு அடிபொடி எல்லாம் அடுப்ப பத்தவச்சிட்டானுங்க. பாலு வந்துடுச்சு சொர்ர தெர்தா . டிக்காஷன் ரெடியாயிடுச்சு. வெத்தலைய போடாத தம்பி, இப்ப காபி அனுப்பறேன். மணியய்யர உச்சிகாலத்துக்கு வரசொன்னா சாயரட்ஷைக்கு தான வருவாரு, சொர்ர தெர்தா"
"நல்ல வேள சாயரஷைக்கு வர சொல்லாம இருந்தீங்களே, பின்ன அர்த்தசாமத்துக்கு தான வருவாரு சொர்ர தெர்தா...தோ வந்துட்டாரு, வாங்க அய்யரே"
"அட அட அட திருவமழ புள்ள வந்தா தான் கல்யாண களை கட்டுது, சித்த இருங்கோ, உளுத்த மாவு போண்டாவும், கெட்டி சட்னியும் அனுப்பறேன், ஆமா புள்ள கும்மோணம் யானையடியில..."


"சுப்புனி, ஆதிதாளம் இருக்கே அது தொடையில தட்டி போட சொகமா இருக்கும் சும்மா வாணிஸ்ரீ மாதிரி, ஆனா கண்டசாபு தாளம் இருக்கே டி.ஆர்.ராஜகுமாரி மாதிரி திமிர் புடிச்சது"மாமா சம்மந்தமே இல்லாமல் சுப்புனிகிட்டே பேசறார் பாருங்க.


"புரிஞ்சுடுத்தூ நேக்கு புரிஞ்சுடுத்தூ மணி போய் போண்டாவை பாரும்யான்னு சொல்ல வர்ரேள், இன்னிக்கு நேத்தா பழகிண்டு இருக்கேன்" மணி அய்யரும் தஞ்சை மாவட்டமாகியதால் சுலபமா புரிஞ்சுகிட்டார். ஆனா எனக்கு அந்த வயசிலே அதல்லாம் புரியலை. ஆனா அதற்குள்ளாக மாமா டிரையல் கேம் விளையாடி முடிச்சு இருந்தார்.


இப்போ மணி ஐந்து ஆகிவிட்டிருந்தது. காவிரிகரை சீனிவாசா சத்திரத்தில் இருந்து நேராக வந்துவிட்ட நாதஸ்வர கோஷ்டி சீனிவாசா சத்திர கல்யாண வீட்டிலும் வண்டி சத்தம் வாங்கிகிட்டு இதோ நம்ம செட்டியார் சத்திர வாசலில் இறங்கியும் வண்டி சத்தம் கேட்டு கொண்டிருக்கு. மணி அண்ணன் உக்கிரான அறை நோக்கி ஓடுறார். மணி அய்யர் குரூப் நெய், திராட்சை வகையறாக்களை அதிகம் பயன்படுத்திவிடாமல் எண்ணி எண்ணி கொடுக்க. அத்தை அதற்குள் சீர்வரிசை சாமான் எல்லாவற்றையும் பித்தளை தாம்பாளத்தில் எடுத்து வைத்து யார் யார் எந்த எந்த தட்டை எடுத்துப்பது என பிரித்து கொடுக்க, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என எல்லோரும் முதல் தொட்டி முற்ற திண்ணைக்கும், மாமா கச்சேரி நடத்தும் திண்ணைக்கும் நடுவே செருப்பை கழட்டி போட்டு விட்டு உள்ளே போகும் போது வழுவூர் சம்முகம் மாத்திரம் நியூ கொழும்பு மஞ்சள் பையில் போட்டு அதை சுருட்டி கக்கத்தில் வைத்து கொண்டு உள்ளே போக, வாசலில் ஒரு டேபிள் போட்டு அதன் மேல் ஒரு விரிப்பு விரித்து அதன் மேல் ஒரு தாம்பாளத்தில் ஜீனியும், ஒரு சந்தன பேழாவிலே பூக்கடையில் உருட்டி வைத்து அதன் மேலே கனேஷ்தர்பார் பத்தி கொளுத்தி வைத்திருப்பார்களே அந்த சந்தனத்தை கரைத்தும், பன்னீர் சொம்பிலே கொஞ்சம் தண்ணீர் ஊத்தியும் மணி அண்ணன் கொண்டு வந்து வைக்க பெண் வீட்டு மூணு பியூசி படிக்கும் பெண்கள், இரண்டு எட்டாம் கிளாஸ் பெண்கள் ,இரண்டு என் வயதை ஒத்த பொடிசுகள் தேமேன்னு வர்ரவங்க தலையிலே பன்னீர் சொம்பிலே இருந்து குழாய் தண்ணீரை தெளிக்க அதிலே ஒரு பி.யூ.சி மாத்திரம் கவரிங் செயின் கழுத்தை அரிக்காமல் இருக்க அதை தோளில் படாமல் லாவகமாக ஜாக்கெட் மேலேயே படர விட்டு கொண்டிருப்பதில் தம் முழுகவனத்தையும் செலுத்தியது.


மாமாவுக்கு தன்னை தாண்டி போகிறவர்கள் "என்ன புள்ள சவுக்கியமா" என்கிற கேள்வி தேவையே இல்லாததாக பட்டது. கேட்டவன் உள்ளே போவதுக்குள் மாமா ஏதோ சொல்ல ஜக்கய்யர் வெற்றிலை எச்சிலோடு பக்குன்னு சிரிக்க, ராமசுப்புவும், சுப்புனியும் "ஆமா மாமா ஆமா மாமா" என தாளம் போட அந்த இடம் தனி ராஜாங்கமாக தெரிந்தது.


கொஞ்சம்பொழுது சாய்ந்து கொண்டிருக்கும் போதே தூக்குதூக்கி பக்கிரிசாமி என்னும் எண்பது வயது கிழவர் தலைமையில் பத்துபேர் பத்து பெட்ரோமாஸ் விளக்குகளை அந்த தொட்டி முற்றத்தில் வைத்து காற்று அடித்து அதன் பித்தளை உடம்பை துடைத்தும், மேண்டிலை மாட்டி கொண்டும், மண்ணெண்னை ஊற்றி கொண்டும் இருந்தனர். இந்த மாப்பிள்ளை அழைப்பு பெட்ரோமாஸ் லைட் இருக்கே அது ஒரு வித்யாசமாய் இருக்கும். அதை ஒரு பெரிய பலகையில் அடித்து அதை தலையில் சும்மாடு வைத்து தூக்கி வைத்தால் அப்படியே நிற்கும் அந்த பக்கிரிசாமி அன் கோ வுக்கு. வந்த பத்து பேரில் ஆறு பேர் ஆண்கள், மூணு பேர் பெண்கள், தவிர ஒரு சின்ன பெண் ஆக பக்கிரிசாமி அன் கோ அப்பவே முப்பத்து மூணு சதவீதம் பெண்களுக்கு கொடுத்துவிட்டது. இந்த பக்கிரிசாமிக்கு என்பது வயசாச்சே தூக்குவாரா என நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு அன்றைக்கு ராத்திரி பத்துமணிக்கு தான் தெரிந்தது.


உள்ளே ஹாலில் வலப்பக்கமாக நாதஸ்வர கோஷ்டி கிழக்கு பார்த்து உட்காந்து ஆயத்தமானார்கள். திருக்கோடிகாவல் கோவிந்தராஜ பிள்ளை தன் காது கடுக்கனை கழட்டி தன் விபூதி டப்பாவில் போட்டு துடைத்து மாட்டி கொள்ள அவரின் ஜோடி நாயனம் சுப்ரமணிய பிள்ளை வினிபா பவுடரை ஒரு கோட் முடிந்து திருப்தி இல்லாமையால் அடுத்த கோட்டுக்கு தயாராக, தவில் சின்ராசுவோ மேக்கப் முடிந்து சின்ன சில்வர் டப்பாவில் இருந்து புனுகு எடுத்து கருப்பாக நெற்றியில் பூசிகொண்டு சின்ன பஞ்சில் அத்தர் நனைத்து காதின் மடலில் திணித்துவிட்டு மீதியை தன் உடம்பில் பூசிக்கொண்டார்.
.
இங்கே மாமாவின் சீட்டு கச்சேரியில் கும்பகோணத்தில் இருந்து வந்த பஞ்சாமய்யர் ஹோட்டல் மீசைக்காரர் ஜெயராமனும் கலந்து கொள்ள மாமா தன் பையை நிரப்பி கொண்டே இருந்தார். நட்ட நடுநாயகமாக இருந்த தாம்பாளத்தில் வெற்றிலை, சீவல், அசோகாபாக்கு, ஏஆர்ஆர் வாசனை சுண்ணாம்பு, மைதீன் புகையிலை, சிவபுரி ரெங்கவிலாஸ் புகையிலை (இப்போது போல் பிளாஸ்டிக் சாஷே டைப் கிடையாது எல்லாம் பொட்டலம் தான்) என இருக்க ரம்மி கிடைக்காதவர்கள் கவுத்தி போட்டு ஒரு தரத்துக்கு வெற்றிலை போட்டு கொண்டு, விளையாட்டை தொடரும் அடுத்த ஆள் சீட்டை பார்த்து ஆலோசனை சொல்ல மாமா மாத்திரம் ஒரு கண் இங்கேயும் அடுத்த கண் உள்ளே போகும் ஆட்கள், செருப்பு திருடும் ஆட்கள், பெர்டோமாஸ் கோஷ்டி, நாதஸ்வர பார்ட்டி, சண்டை போடவே வரும் வகையறா என நோட்டம் விட்டு கொண்டே கமெண்ட் அடிக்க மற்றவர்கள் வெற்றிலை எச்சில் சிதறாமல் சிரித்து கொண்டே கருமமே கண்ணாயிருந்தனர்.


மணி அய்யர் அதற்குள் டிபன் செய்து முடித்துவிட்டார். என்ன எப்போதும் போல ஒரு வாழை ஏட்டுக்கு 2 இட்லி, சாம்பார், உளுந்து போண்டா, (அந்த போண்டாவிலே மிளகு முழுதாகவும், தேங்காய் சில்லி சில்லாகவும் இருந்தன)அதற்கு தேங்காய் சட்னி, ஒரு கரண்டி கேசரி, ஈயம் பூசின பித்தளை டபரா செட்டிலே கழனி தண்ணி மாதிரி காபியை தயார் செய்துவிட்டு இரவு சாப்பாட்டுக்கு வெண்டைக்காய் நறுக்கியும், நூல் கோல் நறுக்கியும், ஒரு வயதான பாட்டி சர சரன்னு தேங்காய் துருவியும் "டேய் கிச்சா ஜாரணிய இந்த பக்கம் கொண்டா", "உப்பு போடாதடா கடன்காரா நான் வந்துட்டேன்" ,"இட்லி துணிய தண்ணில நனச்சு புழிஞ்சு ராமன்ட குடுடா" "பஜ்சிக்கு வாழைக்காய் சீவுடா" " பெல்லாரிய ரவுண்டா சீவுடா" "ஆத்துல மாமி வேற தேங்கா எண்ணெய் கேட்டாடா கணேசா, ஓர்மையில வச்சுக்கோ" இப்படியாக அந்த அடுக்களையே ரகளையாக இருந்தது.


கொஞ்ச நேரத்திலேயே டிபன் முடிந்தது. மாப்பிள்ளை வீடு, பெண்வீடு என தனி தனியாக அந்த கல்யாண முற்றம் தாண்டிய அடுத்த ஹால் உள்ளே நுழைய அது அப்படியே முதலில் பார்த்தோமே பெரிய ஹால் அதை போலவே இருக்கின்றது. அதிலே மணி அண்ணன் சுருட்டி இருந்த பந்தி பாயை ஒரு முனையில் இருந்து உருட்ட அது பந்தி ஹாலின் அடுத்த முனைக்கு உருண்டு ஓட எதிரும் புதிருமாக மணமகன், மணமகள் வீட்டார் உட்காந்து இருக்க அமைதியாக முடிந்தது டிபன்.


பெண் அழைப்புதான் இந்த கல்யாணத்திலே. பெண்ணை பண்டரிநாதன் வண்டியிலே ஏத்தி இந்த தடவை விளநகர் பெரியம்மா மின் ஜாக்கிரதை மினியம்மாவாக முதலில் காரில் ஏறி கொள்ள பெண் இப்போது பட்டமங்கல தெரு பெருமாள் கோவிலுக்கு போயாச்சு. (இந்த பெருமாள் கோவில் தாலுக்கா ஆபிஸ் பக்கத்தில் ரொம்ப உள்ளடக்கமாக இருக்கின்றது. ரொம்ப பேருக்கு தெரியாது. மேள காரர்களுக்கும் சந்தோஷம். "கிட்டக்க தான் சுப்புனி, இழுத்துகிட்டு வந்து சீக்கிரம் விட்டுட்டு ரெண்டு கீர்த்தனை,மாடுமேய்க்கும் கண்ணாவும், ராஜாஜி கீர்த்தனை குறையொன்றும் இல்லைன்னு சிம்பிளா முடிச்சுகிட்டு ரெண்டு சில்லறை வாசிச்சு முடிச்சுப்போம்" ன்னு கோவிந்தராஜ பிள்ளை முனுமுனுக்க சின்ராசு புன்முறுவல் பூக்க நாதஸ்வர கோஷ்டியும் பெருமாள் கோவில் புறப்பட்டது.


அதுவரை வீட்டிலிருந்து நைலக்ஸ் சேலையில் இருந்த பெரியம்மா, அத்தை, சித்தி கூட்டம் கையோடு கொண்டு வந்த பட்டுபுடவை எல்லாம் கட்டிகிட்டு ஆகா அதுக்குள்ள அந்த இடமே அல்லோகல பட்டு போச்சு. கொண்டை ஊசி எங்கே, அக்கா ஊக்கு இருக்கா, அய்யோ உள்பாவாடை உயரம் ஜாஸ்தியா இருக்கே புடவைக்கு கீழே வருமே, ஆகா மேட்சிங் பிளவுஸ் காணுமே நீ எடுத்து வச்சியா அம்மா, கொண்டை வலை யார் கிட்டயாவது எக்ஸ்ட்ரா இருக்கா, எதுக்கும் இருக்கட்டுமேன்னு இந்த சிதம்பரம் செயினை எடுத்து வந்தது நல்லதா போச்சு நீ போட்டுக்க இதை, அய்யோ என் திருகாணிய காணுமே, யாருது இந்த முத்து, எந்த கொலுசுல இருந்து விழுந்துச்சு, ஏண்டி திருகாணி காணுமா பவுனு என்ன விலை தெரியுமா ஒரு பவுன் 368 ரூபாயாயிடுச்சு, யேய் நீ ஏண்டி கிளம்பற, ரெண்டாம் நாள் தான இன்னிக்கு, நாங்க கோவிலுக்குள்ள போறோம், நீ இங்க இருந்து எல்லார் பேக்கையும் பார்த்துக்கோ, சரோஜா ராத்திரி ஆட்டத்துக்கு "ஊட்டிவரை உறவு" போவுமா?, நைசா அத்தைய விட்டு அத்தான் கிட்ட எனக்கும் கேக்க சொல்லு" "இன்னிக்கு நாயனகாரரை நலந்தானா சில்லரை வாசிக்க சொல்லனும்"
ஒரு வழியா எல்லோரும் கிளம்பி பெருமாள் கோவிலுக்கு போயாச்சு.

மீதி அடுத்த அடுத்த பாகத்தில்!
குறிப்பு: இந்த தடவையும் பதிவு பெருசா ஆகிடுச்சு! அடுத்த பாகம் இரவு நடக்கும் கூத்துகள், அதுக்கு அடுத்த பதிவு கல்யாணம்!



18 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்! எண்ட்ரீ போட்டுக்கிறேன் போயிட்டு படிச்சு ரசிச்சுட்டு வர்றேன் எங்க ஊரு மேட்டருல்ல!

    ReplyDelete
  2. :-)))...

    மூச்சு முட்டுது...

    ReplyDelete
  3. //உளுந்து போண்டா, (அந்த போண்டாவிலே மிளகு முழுதாகவும், தேங்காய் சில்லி சில்லாகவும் இருந்தன)//

    ஒ அப்பலேர்ந்தே இந்த மெனுதானா !

    வடை சாப்பிடும் போது எங்கோ போய் மாட்டிக்கொள்ளும் அந்த மிளகும் தட்டுப்படும் தேங்காய் பீஸ்களும் நீண்ட நேரம் மிளகு காரம் தங்கியிருக்க வைத்திருக்கிறது எனக்கு! :)))

    ReplyDelete
  4. //தெட்ஷாவுக்கு அம்பாபாயிலே தானே இன்னிக்கு கச்சேரி, யாரு நாயனம் அவனுக்கு"
    /

    கலக்கல்!

    எம்புட்டு பவர் புல்லா இருந்திருக்காரு பாருங்க தெட்ஷா!

    ReplyDelete
  5. எங்க ஊரு கல்யாணம்ன்னு ஒரு ஆர்கைவ் போட்டு அதுல கொண்டுப்போய் வைச்சுக்கிறேன் இந்த பதிவு மொத்ததையும் அம்புட்டு இன்போ

    :)))))

    ReplyDelete
  6. கல்யாணவீட்டுல இருக்கறாப்ப்லயெ இருக்கு.. :)
    ஒரு இணுக்கு பூ குடுங்கப்பா. .. பன்னீரில்லையா இது... ம்

    ReplyDelete
  7. திரைகதை போல ஒவ்வொரு காட்சியையும் விவரித்து இருக்குரிங்க!

    ReplyDelete
  8. நேத்திதான் சித்தப்பா கல்யாணத்துல அம்பாசிடர் (ஒயிட் கலர்) கார்ல எப்பிடி பதிமூணு பேரு 12 கி.மீ ரணகளப்பட்டு போணோமின்னு பிரண்ட்சுகிட்ட பேசிகிட்டு இருந்தேன். வந்தா இங்க இது.எல்லா பாகத்தையும் ஒரே மூச்சா இப்பதான் படிச்சேன்..

    ஒரு இருவதே இருவது வருசத்துல எவ்ளோ விசயம் காணாமலே போயிட்டுதுன்னு நெனச்சா ஏக்கமாவும் கஷ்டமாவும் இருக்கு. அதனால .. // குறிப்பு: இந்த தடவையும் பதிவு பெருசா ஆகிடுச்சு! அடுத்த பாகம் இரவு நடக்கும் கூத்துகள், அதுக்கு அடுத்த பதிவு கல்யாணம்! // ஒண்ணும் அவசரப்படாம, பதிவு கணக்கெல்லாம் வச்சிக்காம, கொஞ்சம் கூட போனாலும் பரவால்லலன்னு ஞாபகத்துக்கு வர்ரதயெல்லாம் விவரமா பதிச்சி வைங்க.. அடுத்த தலமுறைக்கு கதை சொல்லம்போது பிரயோசனமா இருக்கும்.

    ReplyDelete
  9. முக்கியமா அந்த பாஷை.. அதையும் மறக்காம பதிஞ்சி வைங்க, எம்பளது வயசானாலும் மூப்பே வராது...

    ReplyDelete
  10. நல்லா இருக்குண்ணே....நீங்க மட்டும் சினி பீல்டுக்கு போயிருந்தா பாக்கியராஜ்க்கு மேல சிறந்த திரைக்கதை ஆசிரியரா வந்து இருக்கலாம்....:)

    ReplyDelete
  11. //முகமூடி said...
    முக்கியமா அந்த பாஷை.. அதையும் மறக்காம பதிஞ்சி வைங்க, எம்பளது வயசானாலும் மூப்பே வராது...

    December 30, 2008 1:49 AM///


    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  12. வாப்பா ஆயில்யா! மிக்க நன்றி! நான் அனுபவிச்சதை எழுதிகிட்டு இருக்கேன்! நீயோ நான் எழுதியதை அனுபவிச்சு படிக்கிறேன்னு நினைக்கிறேன் சரியா? மிக்க நன்றிப்பா!

    ReplyDelete
  13. வாங்க விஜய் ஆனந்த்,

    ReplyDelete
  14. ஆயில்யா! இப்ப மட்டும் இல்லை ஒரு நடுத்தரவர்க்க கல்யாணம் எல்லாத்திலயும் இதான் மெனு!

    ReplyDelete
  15. நன்றி வால்ப்பையன்!

    ReplyDelete
  16. வாங்க முகமூடி அய்யா! முதல் தடவையா என் பதிவுக்கு வர்ரீங்க. நல் வரவு.

    நான் உண்மையிலேயே கொஞ்சம் அப்செட். நம்ம எழுத்து வசீகரிக்கலையோன்னு நெனச்சேன். ஆயில்யன், முத்துலெஷ்மி, சீமாச்சு அண்ணன், மற்றும் தஞ்சை மாவட்ட நண்பர்கள் மட்டுமே வராங்களே மற்ற யாரையும் காணுமேன்னு சுருக்கமா முடிச்சுடுவோமான்னு இருந்தேன்.

    உங்க பின்னூட்டம் ரொம்ப தெம்பை குடுத்துடுச்சு. மிக்க நன்றி. நான் சொல்ல நினைத்தது எல்லாம் சொல்லிடறேன். பதிவின் நீளமதிகமாவது பற்றி இனி கவலைப்படபோவதில்லை!

    தங்கள் வருகைக்கு நன்றி!!

    ReplyDelete
  17. \\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
    கல்யாணவீட்டுல இருக்கறாப்ப்லயெ இருக்கு.. :)
    ஒரு இணுக்கு பூ குடுங்கப்பா. .. பன்னீரில்லையா இது... ம்\\

    வாங்க முத்துக்கா! உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப ஊக்கமாக இருக்கு! (ரொம்ப தேங்ஸ் ஸ்பெல் திருத்தி கொடுத்தமைக்கு)

    ReplyDelete
  18. வாங்க நிஜமா நல்லவரே! ம்மிக்க நன்றிப்பா வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))