பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 25, 2009

காபி & பேஸ்ட்ன்னா இதுதானா??? தலைப்புக்கு நன்றி துளசி டீச்சருக்கு!!!!


அப்பாடா! இந்தியா வந்து நல்லா ரெஸ்ட் எடுத்து குறைந்தபட்சமாக கூட தமிழ்மணம் பக்கம் வராமல் ரொம்ப சமர்த்தாக நடந்து கொண்டேன். ஒரு முக்கிய கல்யாணத்துக்காக கோவை குடும்ப சகிதம் போய் வந்தேன். அருமையான சந்திப்புகள். பல பதிவர்களை என் குடும்ப சகிதமாக சந்தித்தேன். அதை எல்லாம் விரிவாக யாராவது எழுதுங்கப்பா. (முல்லை இன்னுமா எழுதலை? அப்படி எழுதியிருந்தா லிங் கொடுங்கப்பா..)
அந்த சந்திப்பை பத்தி பயண கட்டுரை எழுதலாம். அப்படி எழுதி முடிச்சு பார்த்தா நட்டுதான் பதிவை டாமினேட் பண்ணிட்டு காமடி பண்ணிட்டு இருக்கான் மூனு பக்கத்திலும். சரின்னு அதை அப்படியே விட்டுட்டேன்.
இந்த பதிவு ஏன்னு கேட்டால்.... நத்திங் பெசல்... ஒரு வழியா வீட்டில் டாட்டா இண்டிகாம்க்கு டாட்டா காமிச்சிட்டு ஆ.ராசா இணைப்பு வாங்கிட்டேன். அதுக்கு தான் இந்த பதிவு. தவிர மேலே உள்ள போட்டோவை பார்த்துவிட்டு துளசி டீச்சர் அடிச்ச டைமிங் கமெண்ட் "இது தான் காபி&பேஸ்ட் என்பதா" .(நல்ல வேளை கட் & பேஸ்ட் ஆகும் முன்ன இந்தியா வந்து 100 சதம் நன்றாக ஆகிவிட்டேன்)
அதுதான் அந்த போட்டோ போட்டு அதையே தலைப்பா வச்சாச்சு. இந்த பதிவு ச்சும்மா சோம்பல் முறிச்சுக்கத்தான். இனி அடுத்தடுத்து நல்ல பதிவா போட முயற்சிக்கிறேன். நம்ம கையில என்ன இருக்கு. எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துப்பான்.

October 10, 2009

"உடையார்” - பாலகுமாரன் காவியத்தின் விமர்சனம் பாகம் # 1

பொன்னியின் செல்வன் நான் பல முறை படித்து படித்து திகட்டாமல் திரும்பவும் படித்து கொண்டிருக்கும் ஒரு சரித்திர நாவல். அதன் தொடர்ச்சி தான் இந்த உடையார் என்கிற நாவல், எழுதியது எழுத்து சித்தர் பாலகுமாரன் என்று எனக்கு சொல்லப்பட்ட போது அய்யோ சரித்திர நாவலா என அலுத்து கொண்டேன். பிறகு எதிர்பாராத விதமாக எனக்கு உடையாரின் 6 பாகங்களும் கிடைத்த போது அதன் புது வாசனை மட்டுமே பிடித்து இருந்தது. பின்பு வாழ்க்கையே ஒரு மாதிரி தொய்வு ஏற்பட்ட போது ஏன் இதை படித்து தொலைத்தால் தான் என்ன என்கிற எண்ணம் வந்தது. முதலில் அதன் முன்னுரைகள் படித்தேன். எல்லோருமே ஆஹா ஓஹோ என புகழ்ந்து இருந்தது கண்டு கொஞ்சம் எரிச்சல் வந்தது. இப்போது புரிகின்றது அவர்கள் மிகவும் குறைவாகத்தான் புகழ்ந்திருக்கின்றனர் என்று

.

முதல் பாகத்தில் கிருஷ்ணன் தேவன் பிரம்மராயர் என்கிற மந்திரி(பொன்னியின் செல்வனில் தலைமை அமைச்சர் - இதிலே சேனாதிபதி, போருக்கு எல்லாம் போகின்றார். அவரை வைத்து தான் கதை தொடங்குகின்றது. அதன் பிறகு அந்த முதல் பாகத்தை மின்னல் வேகத்தில் செலுத்துவது ராஜராஜி என்கிற ஒரு தேவரடியார் பெண். இந்த உடையார் நாவல் முழுமையுமே நன்றாக உற்று நோக்கினால் மூன்று தேவரடியார் பெண்கள் தான் பிரதான கதை சொல்லிகள். முதல் பெண்- இராஜராஜர் உடையாரின் நான்காம் மனைவி பஞ்சமான் தேவி! இவர் ஒரு தேவரடியார் வகுப்பை சேர்ந்தவர். பொன்னியின் செலவன் கடைசி பாகத்தில் உத்தமசோழருக்கு முடிசூட்டி விட்ட இராஜராஜர் ஒரு பதினேழு வருடங்கள் எந்த ஒரு இராஜ்ஜிய மதிப்பும் அற்று சோழதேசம் முழுமையும் சுற்றி வருகின்றார். மக்கள் மதிப்பை கூட்டி கொள்கின்றார். அந்த கால கட்டத்தில் சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் திருஞானசம்மந்தரின் பதிகம் படிய பெண் பஞ்மான் தேவியை பார்த்து அந்த பதிகத்தில், தேவியின் குரலில், அவள் புத்திசாலித்தனத்தில் ஆசைப்பட்டு (மயங்கி என சொல்ல முடியாது) அவளை தன்னுடனேயே தஞ்சை அழைத்து சென்று சென்ற பின் ஆட்சியை பிடித்து சக்கரவர்த்தியாக்கி இவளை நான்காம் மனைவியாக ஆக்கி கொள்கின்றார். இவரை இந்த பஞ்சமான் தேவியை சுற்றித்தான் கதை சொல்லப்படுகின்றது.


அடுத்து முதல் பாகம் முழுக்க கோலேச்சுவது இராஜராஜி என்னும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தேவரடியார் தலைக்கோலி பெண். தலைக்கோலி பட்டம் என்றால் பரதம் சொல்லி கொடுக்கவும் தகுதி படைத்தவள் என அர்த்தம் ( B.Ed.,????)


அடுத்து திருவாரூர் தியாகராஜருக்கு பொட்டு கட்டி தன்னை அர்பணித்து கொண்ட தேவரடியார் 16 வயதினெலேயே தலைக்கோலி பட்டம் வாங்கியவள். இவள் அந்த சிற்பங்களுக்கு மாதிரியாக இருப்பவள்.


காஞ்சியில் இருந்து இராஜராஜரால் கட்ட பட இருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் வரை படங்கள் வண்டி கட்டி கொண்டு எடுத்து வருகின்றாள்.வண்டி ஆற்றோடு காவிரி வெள்ளத்தோடு போகின்றது. அப்போது பிரம்மராயர் தன் சீடன் மற்றும் அந்த கிராம மக்கள் உதவியோடு காப்பாற்றப்படுகின்றாள். அந்த இடத்துக்கு இராஜராஜரும் வந்து சேர கதை சூடு பிடித்தாலும் நாமும் அந்த வெள்ளத்தில் சிக்கி சுழன்று உயிருக்கு அல்லாடியது போல ஒரு சோர்வு. சரித்திர நாவல்களில் இது தவிர்க்க முடியாத ஒரு சோகம். நாம் ஒன்றி போவதும் அதறுகு ஒரு காரணம்.


அந்த நேரத்தில் எதேற்சையாக சீமாச்சு அண்ணா தொலை பேசினார். நான் சொன்னேன். உடையார் படிக்க ஆரம்பித்து இருக்கின்றேன் என்று. அப்போது அவர் " முழுவதும் படி. ஒரு M.B.A கோர்ஸ் படித்து முடித்ததுக்கு சமம். னேஜ்மெண்ட் விஷயங்கள் அதில் இருக்கும். இதை நீ படித்து முடித்த பின் உன் பார்வையில் விமர்சனம் எழுது" என்றார். எனக்கு அப்போது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. என்னா இது பாலகுமாரன் தேவரடியார், பால்கிண்னம், வாசனை தைலம் என்று தானே இது வரை போய் கொண்டிருக்கிறார் என்கிற எண்ணமே மேலோக்கி இருந்தது. பின்னே படிக்க படிக்க கதை வெறி பிடித்த ஆண் குதிரை மாதிரி பறக்க ஆரம்பித்தது. பின்பு என்ன நான் போகும் இடமெல்லாம் நீயும் வருவாய் என உடையார் புத்தகம் என் கூடவே ஒட்டி கொண்டது. என்ன ஒரு வருத்தம் என் ஆதர்ஷன புருஷர்கள் எல்லோருக்கும் வயதாகி விட்டது. ஐம்பது பிளஸ் ஆகிவிட்டனர். பொன்னியின் செல்வன் நான் 6 வகுப்பு படிக்கும் போது முதன் முறையாக படித்தேன். புரிந்தது. ஆனால் இதே உடையார் அதே கால கட்டத்தில் வந்திருந்தால் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் புரிந்திருக்கும். சுற்றுளி என்றால் கருங்கல் கோவில் என தாமதமாகத்தான் புரிகின்றது. ஆனால் சிற்றன்னை என்பதற்கு பதில் சித்தி என சொல்கின்றார் ஆசிரியர்.


விடுங்க அதை எல்லாம் ஒரு பெரிய குறையாக பார்க்க முடியாது. கதை என்ன? இராஜராஜர் தஞ்சையிலே ஒரு மிக பிரம்மாண்டமான கோவில் கட்டுகின்றார். பல்வேறு தடங்கள், மனஸ்தாபங்கள் இடையே அவர் அந்த கோவில் கட்ட காரணம் அத்தனை தெளிவாக சொல்லப்படவில்லை. இராஜராஜர் குழம்பிய மனநிலையில் இருந்தாரா அல்லது ஆசிரியர் அப்படி இருந்தாரா என தெரியவில்லை. காந்தளூர் கடிகை போரில் அந்தணர்களை கொன்ற பாவம் கழுவ என ஒரு இடத்தில் சொல்கின்றார். ஆனால் வேறு ஒரு இடத்தில் "நான் உத்தமசோழர் ஆட்சிகாலத்தில் 17 வருடங்கள் எந்த விதமான ராஜ்ஜிய உரிமையும் இல்லாமல் வெறும் இளவரசு பட்டம் மாத்திரம் சூட்டி கொண்டு சோழ தேசத்தை சுற்றி வந்த போது உத்தம சோழர் என்னை அழைத்து 'இராஜராஜா நான் ஒரு பிரம்மாண்டமான கோய்வில் எழுப்பி இருக்கின்றேன். அது தான் மகாலிங்கம். அதை விட பெரிய லிங்கம் என்பது தென்னாட்டில் இல்லை வந்து பார்' என சொல்ல இவர் திருவிடைமருதூர் சென்று பார்த்து 'ஹே இதுவா மகாலிங்கம் நான் கட்டுகிறேன் பார் இதை விட மகாலிங்கமாக பெரிய விமானமாக' என மனதில் நினைத்து கொள்கின்றார். அந்த ஈகோ தான் அந்த கோவில் எழும்ப காரணமா? எது எப்படியா இருந்தால் என்ன நம் தமிழர்களின் கட்டட கலைக்கு ஒரு மாபெரும் மதிப்பு அந்த கோவிலால் என்பதால் மனம் மகிழ்கின்றது.


வருகின்ற பத்தி நிறைய ஆங்கில வார்த்தைகள் இருக்கும் மன்னிக்கவும்.


என் அனுபவத்தில் ஒரு என்பது அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவது என்றால் யார் முடிவு செய்வார்கள். காசு உள்ளவன், அப்படி ஒரு கட்டிடம் கட்ட மனதில் வெறியுடன் கூடிய ஆசை உடையவன். அவன் தான் client. அவ் அவனுக்கு ஆசையும் பணமும் மட்டுமே இருக்கின்றது. ஆனால் அதை இருந்து கட்ட நேரம் இல்லை அல்லது அதற்கான அடிப்படை அறிவு இல்லை என வைத்துக்குக்கொண்டால் அந்த கிளையண்ட் அந்த பொறுப்பை வேறு ஒரு நிறுவனத்துக்கு கொடுத்து விடும். அவங்க consultant. அதாவது மேஸ்த்திரி மாதிரி. ஆனால் கையில் சாட்டை வைத்து கொண்டிருக்கும் பெரிய அளவினால மேஸ்த்திரி. அவன் வைப்பது தான் சட்டம். பின்பு இருவரும் சேர்ந்து யார் கட்ட போகின்றார்கள் என்பதை டெண்டர் விட்டு முடிவு செய்வார்கள். ஒரே கம்பெனிக்கும் கொடுக்கலாம் அல்லது இரண்டு மூன்று கம்பனிக்கு சேர்த்தும் கொடுக்கலாம். அடுத்து Drawing அதாவது வரைபடம். அதற்கு ஒரு செக்ஷன் அது Document control secton அது அந்த வரை படத்தை கிளையண்ட் கிட்டே காட்டி சம்மதம் வாங்குவது முதல் அரசாங்க சம்மதம் வாங்குவது முதல் கன்சல்டண்ட் சம்மதம் வரை பின்பு அதை பாதுகாப்பது பிரதி எடுத்து பொறியாளர்களுக்கு, பிராஜக்ட் மேனேஜர், கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜர் என கேட்ட போது எந்த பகுதி எப்போ வேண்டுமோ அப்போ தருவது அப்படியாக . இந்த நாவலில் அது யார்?


அடுத்து soil test மண் பரிசோதனை. பாறை எத்தனை அடியில் வரும். எத்தனை அடிக்கு அஸ்த்திவாரம் போடனும், நடுவே வரும் தன்ணீர் ஊற்று எப்படி சமாளிப்பது. அதற்கு dewatering section அது தனி பிரிவு. அடுத்து survey. இப்போது auto level machine, lazer point machine எல்லாம் வந்தாச்சு ஆனால் அப்போது தூக்கு குண்டு தான். அந்த சர்வே டிபார்ட்மெண்ட் தனி பிரிவு. அடுத்து man power. பாடாவதி வேலை. HR department தலையை பிச்சுப்பாங்க. இன்றைக்கு 10000 பேர் வேண்டும் என்றால் வேண்டும். தரவில்லை என்றால் HR மேனேஜரின் டவுசர் உருவப்படும். கம்பனியிலோ அத்தனை ஆட்கள் இருக்காது. என்ன செய்வது Man power Supply companyயில் இருந்து தருவிக்க வேண்டும். அது இந்த நாவலில் யார் வேலை???


வந்தாச்சு ஆட்கள். அவர்களுக்கு திங்க, தூங்க வசதிகள் யார் செய்வார்கள்? அது Administration Department. அது இந்த கதையில் யார்??? அடுத்து தொழிலாளர் பாதுகாப்பு அதாவது safety department. அது இந்த நாவலில் யார்? அடுத்து procurement அதாவது மூல பொருட்கள் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதிலே Local purchase இருக்கு abrod purchase இருக்கு. அது யார் இங்கே இந்த நாவலில். அடுத்து Storekeeper, Accountant அடேங்கப்பா இந்த நாவலில் முக்கிய பிரச்சனையே இது தான். இந்த இரண்டு வேலைக்கும் தஞ்சை அந்தனர்களை கூப்பிட போய் அவர்கள் மறுத்துவிட பின்பு தொண்டை மண்டலத்தில் இருந்து 500 அந்தனர்களை கொண்டு வந்து இறக்கி பெரிய பிரச்சனையாகி அடேங்கப்பா. பிரம்மிக்க வைக்கின்றது.


அடுத்து planing depart ment. அடுத்து என்ன வேலை செய்வது எப்படி செய்வது எத்தனை ஆட்கள் அதற்கு தேவை என திட்டம் வகுக்கும் துறை. அதை யார் செய்வது. அடுத்து logistic department. மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பது. அதற்கான சாலை வழிகள், வாகன வசதிகள் அது ஒரு பாடாவதி துறை. அதை இங்கே யார் செய்வது???


நடுவே நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற சண்டை வரும். சர்வேகாரன் "நான் பாயிண்ட் கொடுக்காவிட்டால் நீ எப்படி வேலை செய்வாய்?" என கேட்டு விட்டு போய் விடுவான். இங்கே அடித்து கொள்வார்கள். வேலை நின்று போய் விடும். அதை சமாளிக்கனும். மழை பெய்து தோண்டிய பள்ளத்தில் குளம் மாதிரி நீர் சேர்ந்து விடும். 10 நாட்கள் வேலை நிற்க்கும். அதை எப்படி சரி கட்டுவது? அதை இந்த நாவலில் செய்பவர் யார்?


அடுத்து Plant Division தேவையான உபகரணம் வாங்கி கொடுப்பது முதல் ரிப்பேர் வரை அனைத்தும். இந்த நாவலில் கருமார்கள் என்கிற பிரிவினர் அந்த plant division. அவர்களுக்கு என்ன பிரச்சனை. அதை எப்படி இராஜராஜர் சமாளிப்பார்.


அடுத்து ஒற்றர் படை. கிட்ட தட்ட Time Office இந்த வேலை தான் செய்யும். அதாவது போட்டு கொடுக்கும் வேலை. எவன் யாருக்கு கையாள் என்பதே தெரியாது. அடுத்து Entertainment section. பார்ட்டி பார்ட்டி பார்ட்டி தான். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மானாட மயிலாட தான் மதுவுடன். அது இந்த நாவலில் உண்டா என்றால் ஆம் அதுவே பிரதானமாக இருக்கின்றது.


மிக மிக முக்கியமாக Scaffolding Division தான் அதாவது சாரம் போடுவது. இப்போது Steel tubes, props எல்லாம் வந்து விட்டது. Full Safety Harness போட்டு கொண்டு அருமையாக போடலாம். 400 டன் எடையுள்ள cooling chiller 500 டன் கெப்பாசிட்டி கிரேன் வைத்து அரை நாளில் 80 வது மாடிக்கு ஏற்றலாம். ஆனால் அப்போது எப்படி அது சாத்தியமாகிற்று. அதுவும் 2400 டன் எடையுள்ள ஒற்றை கல் மேலே ஆசிரியர் மொழியில் சொல்ல வேண்டுமானால் 7 பனை உயரம் ஏற்ற வேண்டும். அதற்கு சாரம் போடுவது எப்படி? ஒரு சிறிய கல் அத்தனை உயரத்தில் இருந்து விழுந்தால் கீழே நிற்கும் யானை இறந்து விடும். அப்படி இருக்கையில் 2400 டன் எடையுள்ள கல் மேலே போக வேண்டும். யார் அதற்கு பொறியாளர். யார் டெக்னிக்கல் மேனேஜர்? யார் commissioning department?


படிக்க படிக்க பிரம்மிப்பு தான் எஞ்சுகின்றது. ஒரு பிரச்சனை வந்தால் எப்படி சமாளிப்பது? பிரச்சனை வராமல் முன்னேற்பாடாக இருப்பது எப்படி? திட்டமிடுதல் எப்படி? அதை செயல்படுத்துதல் எப்படி? பலி விழும். விழுந்தால் மற்றவர்களை எப்படி தேற்றுவது. பலி எண்ணிக்கையை குறைக்க என்ன வழி? ஒரு பிராஜட் என்றால் 3 கல்யாணம், 8 காதல் அதிலே 2 ஓக்கே 6 முறிவு, கள்ள காதல், நல்ல காதல், காமக்காதல், எல்லாம் சர்வ நிச்சயம். இந்த நாவலில் அது உண்டா? ஆம் பிராஜக்ட் மேனேஜர் பெண்ணே ஓடி போகின்றது. அப்போது அவர் மனநிலையை எப்படி ஒரு கிளையண்ட் வந்து சரி செய்ய வேண்டும்? அடேயப்பா. ஆசிரியர் ஒரு விஷயத்தையும் தொடாமல் விடவில்லை. தற்போதைய முதல்வர், துனைமுதல்வர் பிரச்சனை வரை அவர் தொடாமல் விடவில்லை.


நாவலை படித்து முடித்த பின் நிச்சயம் தஞ்சை போக ஆசை வருவது இயல்பு. இது வரை பிரகதீஸ்வரரை தரிசித்ததற்கும் இனி இந்த நாவலுக்கு பிறகு தரிசிப்பதற்கும் ஆயிரம் வேறுபாடுகள் நிச்சயம்.


இனி அடுத்த பாகத்தில் இருந்து இன்னும் விரிவான விமர்சனம் செய்கின்றேன். இதை முன்னோட்டமாக வைத்து கொள்ளுங்கள். என் வழக்கமான பதிவுகள் மாதிரி உடையார் விமர்சனம் இருக்க மாட்டாது. அதனால் பின்னூட்டம் வராது என்பதும் தெரியும். குறைந்த பட்சம் வடுவூர் குமார் அண்ணா ரசிக்க 25 சத வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.


சோழம்! சோழம்!! சோழம்!!!\