பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 18, 2010

புத்தக ஆசையும் புரட்டி எடுத்த சம்பவங்களும்!!!

எனக்கு புத்தகங்களோடு பரிட்சியம் என பார்த்தால் என் மூன்றாவதுவயதில் இருந்தே என சொல்லலாம். என் சின்ன அக்கா படிக்கும் ஒன்றாம் வகுப்பு புத்தகத்தை அவங்க படிக்க நான் கிழிக்க என தொடங்கியது புத்தகங்களோடு என் பழக்கம். ஐந்து வயதிலேயே பெரிய மகப்பேறு மருத்துவர் என்கிற நினைப்பு அக்காவுக்கு. புத்தகத்தை படிக்க பயன்படுத்துவதை விட மயிலிறகு டெலிவரிக்கான லேபர் ரூமாகத்தான் அந்த புத்தகத்தை பயன்படுத்துவாங்க. எனக்கு ஆயா வேலை கிடைத்தது அந்த (புத்தக)ஆஸ்பத்திரியில். அதாவது புதிதாய் பிறந்த மயிலிறகுக்கு அரிசி போடுவது, அதை கழுவி குளிப்பாட்டுவது இப்படியாக. ஆக என் முதல் வேலை ஆயா வேலை தான்:-))

பின்னே எனக்கும் டாக்டராக ஆசை வந்து அக்காவின் புத்தகத்தை பாகப்பிரிவினை செய்து இருந்த பதினைந்து மயிலிறகை ஏழரையாக பிரித்து தனி ஆஸ்பத்திரி தொடங்கியது தான் எனக்கு அன்றைக்கு ஏழரை ஆகியது. அக்காவின் புத்தகத்தை பாதியாக கிழித்த எனக்கு அப்பாவினால் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. அதாவது வீட்டில் இருக்கும் எல்லா கேமிராவும் என் பக்கம் திருப்பப்பட்டது. தப்பி தவறி எதுனா புத்தகத்தை தொட்டால் சின்ன அக்கா வீல் வீல்ன்னு அலாரம் அடிக்க அம்மா வந்து என்னை அடிக்க மேலும் மேலும் எனக்கு புத்தக ஆசை பீறிட்டு கிளம்பியது.

கிட்ட தட்ட எழுத்து கூட்டி படிக்கும் காலத்தில் தான் புத்தகம் படிப்பதற்கு என்பதும் அது ஒரு விளையாட்டு பொருள் இல்லைன்னும் தெரிஞ்சுது. அம்புலிமாமாவிலிருந்து மான்ரெக், லொதர்ன்னு காமிக்ஸ் என்னை முழுவதுமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. எதிரே இருந்த ரைஸ்மில்லில் தினதந்தி படிக்க ஆரம்பித்து ரோட்டில் போஸ்ட்டர், சினிமா பிட் நோட்டீஸ், கட்சி நோட்டீஸ் என எதையும் விட்டு வைக்காமல் படித்தேன். பின்னே மெல்ல மெல்ல பரண் மீதிருந்த பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தேவன், கல்கி, சாவி என மேய்ந்து கொண்டிருந்தேன். கிட்ட தட்ட படித்த புத்தகம் எல்லாத்தையும் சேர்த்து வைக்க ஆரம்பித்து வைக்கும் பழக்கமும் வந்து விட்டது. இது வரை எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.

ஒரு நாள் காலை ராதா வந்து திடீர்னு "உனக்கு இட்ச் காக் தெரியுமா?ன்னு கேட்க நான் அதுக்கு "எதுனா சைபால் மாதிரி கக்கூஸ்படை களிம்பாடான்னு தத்தக்கா பித்தக்கான்னு கேட்டு தொலைக்க வில்லன் வீரப்பா ரேஞ்சுல சிரிக்க ஆரம்பிச்சான். ராதா திடீர்ன்னு இப்படி பீட்டர் விட்டா பம்பாய்ல இருந்து அவன் சொந்த பந்தம் ரயிலை புடிச்சு என் வயித்தெரிச்சலை கொட்டிக்க வந்து இறங்கியிருக்குன்னு அர்த்தம். அதுக்கு பின்னே அவன் "டேய் பங்கஜம் மாமி வந்திருக்காடா ஜெய்பூரிலெ இருந்து. அவ பொண்ணு நம்ம செட்டு தான். ஆனா செம வளர்த்தி தெரியுமோ? நம்ம ஊர் மாதிரி இல்லை. பழைய சோத்துக்கு மாவடு காம்பினேஷன்ல தின்னுட்டு இல்லாம நல்ல கோதுமை சாப்பிட்டு அதே கலர்ல நல்ல குதிரை மாதிரி இருக்கா. அவ உத்தமன் படத்தில வர்ர மஞ்சுளா மாதிரி நைட் டிரஸ் போட்டுண்டு அந்த புத்தகத்தை படிச்சுண்டு இருந்தா. என்னையும் படிக்க சொன்னா. ரெண்டு பக்கம் தான் படிச்சேன். அத்தனை ஒரு இருட்டு அத்தனை ஒரு பயங்கரம்.வெதறி போயிட்டேன். உனக்கும் இது மாதிரி புத்தகம் பிடிக்குமான்னு கேட்டு ஸோ நைஸ் ஆஃப் யூன்னு என் நெஞ்சுல கை வச்சு சொன்னா.."

"ஏன் இருட்டுன்னா என்ன பயங்கரம். எங்க வீட்டு புழக்கடை எப்பவும் இருட்டு தான். எனக்கு பயமே இல்லியே"என பொறாமை பிடித்த அப்பாவியாய் கேட்க அவன் "அய்யோ உனக்கு இதல்லாம் புரியாது. அத்தனை ஒரு பயங்கரம் ஒன்லி டூ பேஜஸ் தான் ரீட் பண்ணினேன். ஸோ ஸ்வீட் ஸோ நைஸ்" என அவனுக்கு தெரிந்த அத்தனை ஆங்கில வார்த்தையையும் அந்த வாக்கியத்தில் நுழைத்தான்.

அவன் அதுக்கு மேல் விட்ட புரூடா எல்லாம் மனசில் ஏறலை. நான் அத்தனை ஆங்கில பயங்கரத்தையும் படிச்சுட்டு பங்கஜம் மாமியின் பொண்ணு கிட்டே பீட்டர் விடுவது போலவும் அவ என் ஆறு இன்ச் அகலமே இருந்த என் நெஞ்சாங்கூட்டில் கை வைத்து "ஸோ நைஸ் ஆஃப் யூ" என சொல்வது போலவும் ராதா காதில் புகை வருவது போலவும் மனதில் கற்பனை குதிரை தட்டிவிட்டு எழுந்து டவுசரை பின்பக்கம் தட்டி விட்டு போய் விட்டேன். கல்கி, தேவனை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏத்திவிட்டேன். ஒன்லி இங்கிலீஷ் புக் தான் என முடிவு செய்தேன். தமிழ் மனப்பாட செய்யுளை கூட "ulagam yaavaiyum thaamula vakkalum" என படித்தேன். துரத்தி துரத்தி ஆங்கில நாவல் வாங்கி அட்டையை தனியே ரசித்து கிழித்து போட்டு விட்டு (ச்சே என்ன எல்லா பொண்ணுமே ஒரே மாதிரி அவசர ஆடையோட நிக்குது அட்டையிலே) வீட்டில் அடுக்கி வைத்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு எழவும் புரியலை. ஆனாலும் நான் எல்லாத்தையும் படிச்சு முடிச்ச மாதிரி எதுனா ஒரு பக்கத்தை எடுத்து இரண்டு லைன் பென்சிலாம் அடிக்கோடிட்டு பக்கவாட்டில் சூப்பர் என என்னன்னவோ கமெண்ட் எழுதி வைத்தேன். அடுத்த லீவ்க்கு பங்கஜம் மாமி பொண்ணு வரும் போது என் அலமாரியில் 100 புத்தகமாவது இருக்க வேண்டும் என இலட்சியம் வைத்து கொண்டேன்.

எந்த புத்தகத்தை எடுத்தாலும் பென்சில் அடிக்கோடு இட்டு காக்கா கக்கா போன தலைவர் சிலை மாதிரி இருந்துச்சு. மாண்ரெக் காமிக்ஸ் இருக்கா என கேட்டு வந்த ராதாவிடம் "what???" என 220 வாட் கரண்ட் பாய கத்தினேன். ''I only english"ன்னு எல்லா புத்தகத்தையும் பாயில் பரப்பி அதன் மேல் படுத்து கொண்டு பந்தா காட்டினேன். சென்னை போகும் எல்லோரிடமும் எதாவது ஒரு ஆங்கில புத்தகம் பெயர் சொல்லி மூர் மார்கெட்ல வாங்கி வர சொன்னேன். "பம்பிலிக்கா, டும்பாடோலா" என வாய்க்கு வந்த பெயர் எல்லாம் சொல்லி இல்லாத புத்தகம் எல்லாம் வாங்கி வர சொல்லி சில பேக்குகள் அதையும் தேடி மூர் மார்கெட்ல அலைஞ்சு "அய்யோ அந்த புக் இப்ப தான் வித்துது சார். அதே ஆத்தர் எழுதியது தான் இந்த புக். அதை விட த்ரில்லா இருக்கும். கலைமாமணி அவார்டு எல்லாம் இந்த இங்கிலீஷ் புக் வாங்கியிருக்கு சார்" என மூர் மார்கெட் தலையில் கட்டிய புத்தகத்தோடு என் எதிரே நின்ற தூரத்து சொந்தகார மாமாவை வாஞ்சையுடன் பார்த்தேன்.என் தொல்லை தாங்காமல் மூர் மார்கேட்டே தனக்கு தானே கொள்ளி வைத்து கொண்டது. எரிந்து சாம்பலாகியது.

ஒரு நாள் மாட்டு பொங்கல் நேரத்தில் மாட்டுக்கு மாட்டியிருந்த நெட்டி மாலையை கையில் சுத்தி கிட்டு பெரிய கோவிலில் சுற்றி கொண்டிருந்த என்னிடம் ஒரு வெள்ளைகார தம்பதி அதை கேட்க பதிலுக்கு அவங்க கையிலே வச்சிருந்த புத்தகத்தை நான் கேட்க பண்ட மாற்றம் ஆகியது.மாடு மாதிரி அவங்க அதை கழுத்தில் மாட்டி கொண்டு போட்டோ எடுத்து கிட்டாங்க. அவசர அவசரமாக அந்த புத்தகத்தில் அடிக்கோடு எல்லாம் போட்டு அலமாரியில் அடுக்கினேன். அப்போது ராதா ஒரு நைனிட்டால் மாமா பையனோடு வீட்டுக்கு வந்தான். வரும் போதே அவனிடம் ராதா "டேய் ரகு நான் படிக்கும் இங்கிலீஷ் புக் எல்லாம் படிச்சுட்டு இவனண்ட தான் கொடுப்பேன்" என சொல்லி என் புத்தக அலமாரியை காட்டினான். கோபத்தை அடக்கி கொண்டேன். போனா போகுது ரகு ஆம்பளை பையன் தானே என்று.

"நீங்க லேட்டஸ்ட்டா என்ன புக் படிச்சேள்"ன்னு அவன் கேட்க நான் அந்த நெட்டிமாலை புக்கை எடுத்து கொடுத்தேன். படித்துவிட்டு தரேன்ன்னு சொல்லி வாங்கி போனான். ரெண்டு மணி நேரத்திலே ராதா அரக்க பரக்க வந்தான். "டேய் அந்த புக் பலான பிரஞ்ச் புத்தகமாம்டா. அவனுக்கு பிரஞ்ச் தெரியுமாம். அதிலும் நீ அடிக்கோடு போட்டு வச்சிருக்கும் வார்த்தை எல்லாம் ரொம்ப ரொம்ப மோசமான ...சொல்லவே நா கூசிடுச்சு அவனுக்கு" என்றான். "பின்ன என்ன ஆச்சு?"என நான் பதற்றமாக கேட்க ராதா "பின்ன என்ன அவனை பூம்புகார் கூட்டி போறேன்ன்னு தாஜா பண்ணி அதை எல்லாம் சப்ஜாடா தெரிஞ்சுகிட்டேன்"

அய்யோ அந்த வெள்ளைகாரன் கோவில்ல வச்சுதானே அந்த புக் கொடுத்தான். அதிலே எப்படி கெட்ட வார்த்தை வரும். ஓ அது தான் பிரஞ்ச்சா?எனக்கு பிரஞ்ச் தெரியாது என்பது விஷயமே இல்லை. அது பிரஞ்ச் என்பதே தெரியாது என்பது தான் சோகம். அதான் சில எழுத்துக்கு கொம்பு வச்சி சில எழுத்துக்கு பொட்டு வச்சு....அட தேவுடா ... சரி போகட்டும் பங்கஜம் மாமி பொண்ணுக்கு நாம பிரஞ்ச் படிப்பதும் தெரியட்டும்... ஸோ நைஸ் ஆஃப் யூ...என மனதை தேற்றி கொண்டேன். ஒரு வருஷம் அப்படியே போனது.

ஒரு நாள் ராதா வந்து "டேய் பங்கஜம் மாமி குடும்பத்தோட அடுத்த வாரம் வரா"ன்னு சொன்ன உடனே அந்த புத்தக அலமாரி எல்லாம் விஜயதசமி ரேஞ்ச்க்கு துடைச்சு வச்சு "அனுமதி பெற்று உள்ளே வரவும்" என சாக்பீசால் எழுதி வைத்து அனுமதி பெறாமல் வந்த சின்ன அக்காவிடம் கைகலப்பாகி அம்மா பஞ்சாயத்து நடத்தி இரண்டு பேரும் சேர்ந்து வீடு ஒட்டடை அடித்து வீடு கழுவி விட வேண்டும் என தீர்ப்பு சொல்லப்பட்டு(அம்மா பாரபட்சம் இல்லாம இப்படித்தான் சின்னதனமான கவுண்டராகிடுவாங்க) நான் விளக்குமாறும் கையுமா இருக்கும் போது ராதா அந்த அம்புஜாவோடு ஆஜர் ஆனான்.

என் புத்தகம் எல்லாம் பார்த்து விட்டு அம்புஜம் என்னை ஒரு புழு மாதிரி பார்த்து விட்டு 'ஹய்யோ நான் இதல்லாம் படிச்சுட்டேன். குப்பை. பொன்னியின் செல்வனில் இல்லாத த்ரில்லா? தேவன் கிட்ட இல்லாத சிரிப்பா? என சொல்ல கிட்ட தட்ட எனக்கு மயக்கமே வந்துடுச்சு. என் கிட்ட பிரன்ச் புக் எல்லாம் கூட இருக்குன்னு சொல்ல வந்ததை என் சோகத்தோட சேர்த்து முழுங்கினேன். அம்புஜா மேலும் "இப்போ நான் படிக்கிறது எல்லாம் சித்தர் புக்ஸ்தான். அதும் மெடிக்கல் சம்மந்தமா என்னமா எழுதியிருக்கா தெரியுமா?"ன்னு புதுசா கிளப்பி விட்டு ஜெய்ப்பூர் போய் விட நான் சித்தர் புத்தகம் தேடி அலைய தொடங்கினேன்.

இப்போது புத்தகங்களோடு கண்டங்கத்திரி, கடுக்காய் என அடிஷனலாவும் அலைந்தேன். நான் செய்த சூரணங்களை ராதாவின் பாட்டிக்கு முதலில் பரிசோதிக்க பின்னர் தான் தெரிந்தது, என்னால் வியாதியை ஒழிக்க முடியலை. ஜலதோஷத்துக்கு மருந்து கொடுக்க அது சரியாகிவிட்டது ஆனால் அதுக்கு பதிலா மலதோஷம் வந்துடுச்சு. பாட்டிக்கு பேதி நான் ஸ்டாப் கொண்டாட்டமாகிடுச்சு. ஆக ஒரு வியாதியின் ஸ்தலத்தை மாற்றும் சூட்சுமத்தை கத்துகிட்டேன். பின்னே ராதா வீட்டு தெருபக்கம் போனா கூட அந்த பாட்டி வடாம் காக்கை விரட்டும் குச்சியை வாசல் பக்கமா வச்சுகிட்டு என்னை எதிர் பார்த்து காத்து இருந்தது. விடுவனா நான். என் பாட்டிக்கு மருந்து கொடுக்க ஆரம்பித்தேன். நான் கொடுத்த லேகியம் அம்மா வைக்கும் கொத்தமல்லி துவையலை விட நல்லா இருப்பதாக சொல்லி இட்லிக்கு தொட்டுக்க ஆராம்பிச்சாங்க. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சாங்க பாட்டி. மருமகள் வைத்த துவையல் சரியில்லை என அம்மா ஒரு மாங்காய். என் வைத்திய லேகியம் இட்லிக்கு தொட்டுக்க தான் லாயக்கு என நான் ஒரு மாங்காய்.பாட்டி வைத்தியம் செய்யலாம்.பாட்டிக்கே வைத்தியம் பார்த்தா இப்படித்தான் ஆகும்.

இனி என் வைத்தியத்துக்கு நானே எலி என முடிவெடுத்தேன். துரதிஷ்டவசமாக எனக்கு எந்த வியாதியும் இல்லை. தம்பி தான் சொன்னான் "எதுக்கும் மூளை வளர்ச்சிக்கு எதுனா லேகியம் கிண்டி பாரேன்". வீணாக சண்டை போட்டு அம்மாவின் பஞ்சாயத்தால் ஒரு வருஷத்துக்கு ரேஷன் கடைக்கு போகும் தண்டனை கிடைத்து விடுமோன்னு சும்மா இருந்து விட்டேன்.

எனக்கு பொதுவாகவே நான் ஒல்லியாக இருப்பது பத்தி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. எல்லா சித்தரும் ஒன்னா உட்காந்து எழுதினது போல வேர்கடலை சாப்பிட்டால் உடனடி பலன் தரும் என இருந்ததால் அன்று முதல் வேர்கடலை சாப்பிட ஆரம்பித்தேன். அம்புஜாவுக்கு பிடிக்காத புத்தகம் எனக்கும் வேண்டாம் என்கிற ரீதியில் சின்னகடை தெரு கடலை கடையில் ஒரு புத்தகத்துக்கு ஒரு பொட்டலம் என புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு காலையும் மாலையும் சாப்பிட்டேன். நாற்பது கிலோ இருந்த நான் நூறு புத்தக முடிவில் நாற்பது கிலோவும் நாற்பது கிராமும் என எடை கூடினேன். எனக்கு கடலை வியாபாரம் ஆரம்பித்த பின்னே நோஞ்சானாக இருந்த கடைகாரர் கொஞ்சம் பூசினார் போல ஆகிவிட்டார். ஒரு கட்டத்தில் புத்தகம் எல்லாம் தீர்ந்து விட ராதாவின் ஐடியா படி பெந்தகொஸ்தே சபை, சைவசித்தாந்த மடங்கள், மாக்ஸ்முல்லர் பவன், இந்தி பிரசார சபா, பெரியார் கட்சி எல்லா இடத்துக்கும் பதினைந்து பைசா கார்டு போட்டோம். "ஐயா நான் உங்கள் மதத்தின்/இயக்கத்தின்/ மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். உடனடியாக உங்கள் பிரச்சார கொள்கை விளக்க புத்தகங்கள் அனுப்பி வைக்கவும் - குறிப்பு பெரிய மொத்த புத்தகமாக இருந்தால் உத்தமம்- இப்படிக்கு "உண்மையுள்ள" என கார்டு போட்டோம்.

மாக்ஸ்முல்லர் பவனில் இருந்து முதலில் ஐந்து மொத்த மொத்த புத்தகம் வந்தது. பத்து நாள் கடலைக்கு ஆனது. அது முடியும் தருவாயில் இந்தி பிரச்சார சபா, பெந்தகொஸ்தே புத்தகங்கள் வர வர ஒரு மாதம் கடலை போட்டாச்சு. பின்னே பெரியார் ட்ரஸ்டில் இருந்தும், தருமை ஆதீனத்தில் இருந்தும் கடிதம் வந்தது. என் (கடலை தின்னும்??) ஆர்வத்தை பாராட்டுவதாகவும் உடன் 100 ரூபாய் மணிஆர்டர் அனுப்பினால் புத்தகம் அனுப்பி வைக்க படும் எனவும் இருந்தது. பெரியார் ரொம்ப வெவரம் தான். ஒரு நாள் ராதா என்னிடம் வந்து "டேய் மதத்தை, மொழியை வித்து கடலை சாப்பிட்டா ரொம்ப தப்புடா. போப் ஆண்டவருக்கு இதல்லாம் தெரிய வந்தா அடியாள் வச்சு நம்மை அடிச்சா என்னடா பண்றது"ன்னு பெரிய குண்டை போட்டான். நான் குண்டாவதுக்காக இதல்லாம் தேவையா என திடீர்ன்னு நல்லவனாகி கடலை சாப்பிடுவதை விட்டேன்.நான் போப் ஆண்டவர் அளவு ஒர்த் இல்லை என்பது அப்போது தெரியலை.

இப்படியாக என் புத்தக ஆர்வம் பலராலும் தூண்டி விடப்பட்டும், அமுக்கி விடப்பட்டும் ஃஜிக் ஃசாக்காக போய் கொண்டிருக்கின்றது. உங்க கொள்கை விளக்க புத்தகம் இருந்தா என் பெயர் போட்டு c/o கடலை கடை, சின்ன கடை தெரு வுக்கு நேரிடையாக அனுப்பி வைக்கவும். திரும்பவும் கடலை ஆசை வந்தாலும் வரும்.

February 13, 2010

மயிலாடுதுறையும் சமீபத்திய நானும்!!!



எங்க ஊரின் சமீபத்திய ஃபீவர் ஷட்டில்கார்க் தான். பெரிய ராஜன் தோட்டத்தில் சுதந்திரமாக கிரிக்கெட் விளையாடிய அத்தனை பேருக்கும் கல்தாவை ஜிகினா பேப்பரில் சுத்தி மணிசங்கர் கொடுத்து விட்டு மாயமாகி விட்டார். ஊரின் ஒட்டு மொத்த தொழிலதிபர் கூட்டமும் ஷட்டில் கார்க் தான் கதியேன்னு கிடக்குது. பகல் பொழுதுகளில் இரண்டு லட்சம் மூணு லட்சம் பணத்தை தினதந்தி பேப்பரில் சுத்தி மயிலாடுதுறையின் ரங்கநாதன் தெரு என சொல்லப்படும் வண்டிகாரதெருவில் வர்த்தகம் செய்யும் அத்தனை பேரும் மாலை பொழுதுகளில்( மாலை என்பதே இரவு ஒன்பது மணிக்கு மேல் தான்) மற்றும் விடியல்காலை பொழுதுகளில் தவிர ஞாயிற்று கிழமைகளில் இனி ஒரு ஞாயிறு நமக்கு வரேவே வராது என்கிற மாதிரியான அவசரகதியில் விளையாடுகின்றனர்.

குறிப்பாக நகைகடை முதலாளிகளுக்கு கடைக்கு குடோன் இருப்பதை போல கட்டாயம் ஒரு ஷட்டில் கிரவுண்ட் இருந்தால் தான் நகைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் சேர்த்துப்பாங்க போலிருக்கு. மைதானம் எல்லாம் மிகத்தரமானதாக இருக்கின்றது. யூனியன் கிளப் மைதானம் வுட்டன் பேஸ் எல்லாம் போட்டு எபவ் எயிட்டி தாத்தாக்கள் கிரவுண்ட்க்கும் பந்துகும் நோகாமல் விளையாடுகின்றனர்.

விளையாடுவது என்னவோ அரை மணி நேரம் தான் எனினும் அதற்கான ஆயத்தங்கள் அதிக மணி நேரம் ஆகின்றது. அந்த பேட்டை வைத்து கொண்டு சல் சல்லென ஆளில்லாத விடிகாலையில் இரு சக்கர வாகனத்தில் பறந்து பறந்து பில்ட்டர் காபி குடிகின்றனர். சானியா மிர்சா அழகா சோனியா அகர்வால் அழகா என விவாதிக்கின்றனர்.(சானியா நிச்சயம் பணால் ஆனதுக்கு ஒருத்தர் 180 ml கண்ணீர் விட்டார்). ஆயிரத்தில் ஒருவனை கிழித்து மாலையா போட்டு கொள்கின்றனர். துபாயில் வெய்யில் ஜாஸ்த்தியாமே என கவலைப்படுகின்றனர். வாட்ச்மேன் தீர தீர பிளாஸ்கில் வைத்தா கடை டீ வாங்கி வருக்கிறார். இரண்டு மடக்கு டீயும் ஒரு கேம் விளையாட்டும் என்பது தான் மைதான விதியாக இருகின்றது. இதே விதி சனி இரவும், ஞாயிறும் மாறிவிடுகின்றது.

நகரின் அத்தனை பிரச்சனை பத்தியும் பேசி பேசி அலுக்காமல் திரும்பவும் பேசுகின்றனர். மயிலாடுதுறை - சென்னை ரயில் ஓடாதது பத்தி ரொம்ப கவலை படுகின்றனர். கவலை மட்டுமே படுகின்றனர். ஆனால் எல்லாருமே ECR சாலையில் மூன்று மணி நேரத்தில் ஸ்கார்பியோவில் சென்னைக்கு பறக்கும் பார்ட்டிகள். பின் ஏன் இத்தனை கவலை என கேட்டதுக்கு "எல்லாம் நம்ம மக்களுக்காகத்தான்" என சொல்லி எனக்கு டீ புறை ஏறியது தான் மிச்சம்.

தான் விளையாடும் மைதானத்திலிருந்து மற்ற மற்ற மைதானத்தில் யார் யார் இன்றைக்கு வரவில்லை என தெரிந்து கொள்ள மட்டுமே செல் போனை உபயோகப்படுத்துகின்றனர்.

மைதான உறுப்பினர்களுக்கு பிறந்த நாள், திருமண நாள் எல்லாமே மைதானத்தில் பார்ட்டி வைத்து பிறந்த நாள் வந்தவன் "நான் ஏன் பிறந்தேன்" என பாடி கொண்டே போகும் அளவு மஞ்சள் குளிக்கின்றனர்.

போஸ்ட்டர் ஃபீவர் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. புதிதாய் கிளினிக் திறக்கும் டாக்டருக்கு வாழ்த்து சொல்லும் பொருட்டு " வரும் நோயாளிகளை இன்முகத்துடன் வரவேற்கும்" என்பது போன்ற சூப்பர் காமடிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. எதிர் வரும் டிசம்பரில் பிறந்த நாள் காண இருக்கும் என போஸ்ட்டர் அடிக்கலாமா என பிப்ரவரியில் யோசிக்கும் தொலைநோக்கு சிந்தனைவாதிகள் இங்கே அதிகம்.

ஆனால் இது எதுக்குமே கவலைப்படாத மயிலாடுதுறை சிவாக்கள் "ராஜன் தோட்டம் மைதானம்" எங்களுக்கே சாஸ்வதம் என்பது மாதிரி அமரிக்காவில் இருந்து அவசரமாய் பத்து நாள் லீவ் எடுத்து வந்து walking ம், ரிட்டையர்டு புரபசர் தாத்தாக்கள் doging ம் போய் கொண்டு இருக்கின்றார்கள்.

February 4, 2010

ஒரு பக்கா கதை!!!

எங்க நகரிலே இருக்கும் அந்த பெண் தான் இப்ப டாக் ஆஃப் தி நகர். பெரிசா ஒரு தப்பும் செய்திடலை. படித்து முடித்து விட்டு ஏதோ ஒரு கடையில் வேலை செய்யுது. காலை ஒன்பது மணிக்கு போய் மாலை ஆறு மணிக்கு வந்துடும். அதல்லாம் விஷயமில்லை. காலை ஆறு மணிக்கு குளித்து முடித்து தலையில் ஒரு துண்டு, நைட்டி சகிதமாக என் வீட்டு எதிரே இருக்கும் கிரவுண்டில் ஆஜராகிவிடும். ஆறு மணின்னா ஷார்ப்பா ஆறு மணி. மிக சரியாக 8.30 மணி வரை இடைவிடாம பேசும். பின்னே ஓடி போய் கிளம்பி வேலைக்கு போயிடும். மாலை ஆறு மணிக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட். பின்னே ஏழு மணிக்கு நைட்டி, தோளில் துண்டு போட்டு கிட்டு செல் போன் சகிதம் வந்துடும். நகரில் யாரும் சமீபமாக விவித பாரதியை நாடுவதில்லை கடிகாரம் திருப்பி வைக்க. எல்லாம் அந்த பெண் உபயம்.

நகரின் அத்தனை குடும்பஇஸ்திரிகள் காதிலும் புகை. "இந்த அக்கிரமம் நடக்குமா?" "இது ஆண்டவனுக்கே அடுக்குமா?" "கலி முத்தி போச்சு" இப்படியாக அரத பழசான தமிழ் பட 'கும்பல்' வசனத்தையும் பேசி விட்டார்கள். அந்த பெண் 3 மணி நேரம் தான் பேசுது. ஆனா குடும்ப தலைவிகளும் இது பத்தி இருபத்தி நாளு மணி பத்தாம பேஜார் ஆகியிருக்காங்க. "என்னங்க இன்னிக்கு செகண்ட் ஷிப்ட்ல அது மூணு தடவை கண்ணை கசக்குச்சே...எதுனா பெரிய சண்டையா இருக்குமோ" என அசந்து படுத்திருக்கும் புருஷனை இரவு 3 மணிக்கு புரட்டி கேட்டார்கள்.

"நீங்க வேணா பாருங்க, இன்னிக்கு அந்த சிறுக்கி மஞ்சள் கலர் சுடிதார் தான் போட்டுட்டு போவா. பந்தயம் வச்சிப்போமா நீங்க தோத்துட்டா ஆயிரத்தில் ஒருவன் அழைச்சிட்டு போகனும் சரியா?" என ஆம்படயான்களுக்கு ஆப்பு வைத்தார்கள்.

கீரைக்காரம்மா வந்தா அதை நடுவே உட்காரவச்சு எல்லா வீட்டு அம்மனிகளும் "யக்கா அப்படி என்னதான் பேசிப்பாங்க இத்தனை நேரம். எனக்கும் தான் கல்யாணம் ஆச்சு. இந்த அநியாயம் நான் எங்கயும் பார்க்கலை. என் வலைகாப்பு அன்னிக்கு தான் என் மூஞ்சியையே அவரு முழுசா பார்த்தாரு" என சொல்ல அதுக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு நாலு பிள்ளை பெத்த கண்ணாம்பாக்கா டைப்ப முடியாத அடல்ஸ் ஒன்லி பேச்சு பேச எதேர்ச்சையா அங்க வந்த என்னை பார்த்து எல்லாரும் வாரி சுருட்டி எழுந்திருக்க அதிலே ஒரு வாயாடி அக்கா என்னை பார்த்து "தம்பி, இந்த அநியாயத்தை தெரு ஆம்பளை யாரும் என்னன்னு கேட்க கூடாதா, நீங்களும் துபாய் கிபாய்ன்னு போயிட்டு போயிட்டு தான் வரீங்க" என்று உசுப்பேத்திவிட " அக்கா சத்தமா பேசினா நான் மட்டுமில்ல தெருவே கேட்கலாம். அது குசுகுசுன்னு தானே பேசுது"ன்னு சொன்னேன்.

தெருவிலே வீரனா இருந்தாலே இப்படிப்பட்ட கஷ்டம் வரத்தான் செய்யும் போலிருக்கு. "சரி சரி எல்லாரும் போயிட்டு வாங்க. ரேஷன்ல ஃப்ரீயா வாஷிங் மெஷின் கொடுக்குறாங்க. அதை போய் என்னான்னு பாருங்க"ன்னு சொல்லிட்டு அந்த பெண்ணை கேட்டுடலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்.

பெண்ணை பார்த்தா பீட்டர்ஹெயினுக்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இருக்குது. எக்கு தப்பா எதும் கேட்டா நைட்டிய மடிச்சி கட்டி விசயகாந்து மாதிரி ரைட்டு காலை காத்திலே உந்திகிட்டு லெஃப்ட் காலால் என்... வேண்டாம். பயத்தை முகத்தில் காட்டிகிட்டா வீரனுக்கு அழகில்லை. ஒரு மூணு நாள் அந்த பொண்ணை வாட்ச் பண்ணிட்டு பின்ன கேட்போம்ன்னு வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்.

பாவம் அந்த புள்ள சண்டேன்னா மூணு ஷிப்ட்ன்னு ரொம்ப பிஸியா இருக்குது. ஆமாம் சண்டேயிலே மதியம் 2-3.30 எக்ஸ்ட்ரா.சர்வதேச விதி போலிருக்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை. மனசிலே தைரியத்தை வரவழைச்சுகிட்டு நறுக்குன்னு மூணு கேள்வி கேட்க முடிவெடுத்து திங்கள் காலை அது பேசி முடிச்ச பின்னே "இந்தாம்மா இங்க வா"ன்னு கூப்பிட்டேன். கிட்ட தட்ட எல்லார் வீட்டு ஜன்னலும் எங்களையே பார்த்தது. கேட்க முயன்றது.

1. உன் சிம்கார்டு எந்த கம்பனி கார்டு?

2.எந்த 'பிளான்'ல வாங்கியிருக்க?

3. செல் பேட்டரி ஒரிஜினல் ஃபின்லேண்டா?


நீதி: அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு.

அநீதி: 14 வருஷம் முன்ன செல் போனெல்லாம் இல்லாம போயிடுச்சே!