பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 24, 2010

ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்!!!!

நேற்றைய ஜுரம் கொஞ்சம் குறைந்து இரவு தூக்கமும் இல்லாமல் காலை ஆறு மணிக்கு எழுந்து வீட்டின் வாசல் மதில் சுவற்றில் கைவைத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கும் போது எதிர் வீட்டு ராமனாதன் ஹிண்டு பேப்பரை வச்சுகிட்டு அவர் வீட்டு வாசல்ல இருந்து "என்ன ஓய் உம்ம கட்சி மாநாடு பிரமாதம் போலிருக்கே, இன்னும் போகலையா?"ன்னு கேட்ட போது செம எரிச்சலா வந்துச்சு.

இது என்ன கட்சி மாநாடான்னு கோவம் கூட வந்தது. அந்த கோவம் போகும் முன்னமே அடுத்து ஒரு மெசேஜ். திறந்து பார்த்தவுடன் "ஜூன் 23 முதல் கேவையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. இந்த செய்தியை 15 பேருக்கு, என்னையும் உட்பட அனுப்பினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் உங்க கிரடிட்டில் 99 ரூபாய் ஏறிவிடும்". வாய்யா ராமனாதா உமக்காகத்தான் எந்த புண்ணியவானோ இதை எனக்கு அனுப்பியிருக்கான் என நினைத்து கொண்டே "ராமனாதா சேதி தெரியுமா, இங்க வாய்யா. இந்த சேதிய பாரு. எனக்கு ராத்திரி வந்துச்சு இந்த மெசேஜ். பதினைஞ்சு பேருக்கு அனுப்பினேன். பின்ன மறந்தே போயிட்டேன். இப்ப பார்த்தா 99 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு"ன்னு சொன்னதை ராமனாதன் கொஞ்சமும் நம்பாம "எங்க உன் பேலன்ஸ் காமி"ன்னு சொன்ன போது அதில் சரியா 111 ரூபாய் இருந்துச்சு. அப்பவே சிம்பாலிக்கா ராமனாதன் புரிஞ்சு கிட்டு என் கூட விளையாடாம இருந்திருக்கனும். ஏன்னா நான் ராத்திரி தான் 100 ரூபாய் போட்டு இருந்தேன். ஃபுல் டாக் டைம் ஆஃப்பர்ல.

அப்பவும் ராமனாதனுக்கு சந்தேகம். "சரிய்யா நீ எனக்கு அதை அனுப்பு. நான் பதினைச்சு பேருக்கு அனுப்பறேன். ஆனா எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகலைன்னா நீ தான் எனக்கு 99 ரூபாய் தரனும் சரியா?ன்னு கேட்க நான் கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்னே சுதாரிச்சுகிட்டு ஓக்கே சொல்லிட்டேன். பின்னே அதை அனுப்பி விட்டேன்.

பின்னே தெரு முனை கடைக்கு பேப்பர் வாங்க போன போது எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது ராமனாதனுக்கு நான் அனுப்பிய அதே மெசேஜ். அதாவது விளையாட்டு விதிப்படி மெசேஜ் அனுப்பினவங்களுக்கும் அனுப்பிட்டாராமாம்.

கொஞ்ச நேரம் யோசிச்சு பார்த்தேன். ராமனாதன் இப்படி திடீர்ன்னு ஏமாறும் பேர்வழி இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நிச்சயமா அது எவனோ செய்யும் விளையாட்டுன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும். அவரா இப்படி பதினைஞ்சு பேருக்கு மெசேஜ் அனுப்புவாரு? எங்கயோ இடிக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது தான் அவர் என் கிட்ட போட்ட டீல் நியாபகம் வந்துச்சு. அதாவது நான் இப்ப போகும் போது "யோவ் நீ சொன்ன மாதிரி அனுப்பிட்டேன். இது வரை 99 ரூபாய் கிரடிட் ஆகலை அதனால நீ கொடு"ன்னு கேட்க போகின்றார் என்பது நிச்சயமாக தெரிந்தது. அதாவது எனக்கு மட்டும் அனுப்பிட்டு இந்த தில்லாலங்கடி செய்ய போகிறார்.

உடனே நான் அதே கடையில் ராமனாதன் நம்பரை சொல்லி ஒரு பத்து ரூபாய்க்கு ஈ.சி பண்ணி விட சொன்னேன் ராமனாதனின் கடை அக்கவுண்டில் இருந்து.ராமனாதன் என் கிட்ட போன் கார்டு வாங்க மாட்டாரேன்னு கடைகாரரும் அனுப்பினார். அது ஆறு ரூபாய் அவர் போனில் கிரடிட் ஏறிடுச்சு. பின்னே அதே பெட்டிகடைகாரர் நம்பர் வாங்கி "அய்யா நீங்க பதினைந்து பேருக்கு முழுமையாக அனுப்பாமல் சிலருக்கு மாத்திரமே இந்த அரைமணி நேரத்தில் அனுப்பியுள்ளதாக எங்கள் கணினி தெரிவிப்பதால் ஆறுதல் பணமாக பத்து ரூபாய்க்கான டாக் டைம்க்கு மட்டும் கிரடிட் செய்துள்ளோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி"ன்னு ஒரெ மெசேஜும் தட்டி விட்டுட்டு வந்துட்டேன்.

நான் வீடு வரும் போது ராமனாதன் " ஓய் சேதி தெரியுமா? நீர் சொன்னது உண்மை தான் போலருக்கு. எனக்கு 99 ரூபாய் வந்துடுச்சு. நான் கூட உனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேனே. அதன் அஞ்சு நிமிஷத்துல எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகிடுச்சு"ன்னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரெ நேரத்திலே வந்தாலும் கொஞ்சமும் என் முகத்திலே காமிச்சுக்கலை. நான் அனுப்பினதோ பத்து ரூபாய். இவர் சொல்வதோ 99 ரூபாய். சரி இவரும் விளையாட ஆரம்பிச்சுட்டார். சரி இன்னிக்கு பொழுது நமக்கு ராமனாதன் கூடத்தான் என நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்த போது அவர் அவருடைய வீட்டின் மாடியிலே இருந்து இரண்டு கட்டை விரலாலும் சர சரன்னு மெசேஜ் அனுப்புவது தெரிந்தது.

பின்னே காலை டிபன் முடிக்கும் போது ராதா வந்தான். விஷயத்தை சொன்னேன். ராதாவுக்கோ ராமனாதனை பார்த்தாலே காரணம் இல்லாம பத்திக்கும். இதை வேற சொல்லிட்டனா? விடுவானா அவன். "டேய் மாப்ள வாடா அந்த பெட்டிகடைக்கு"ன்னு கூட்டிகிட்டு போனான்.

"டேய் அவரு உன்னை போட்டு வாங்குறார். நிச்சயமா மீதி 14 பேருக்கு அனுப்பியிருப்பார். ஆனா உனக்கு அனுப்பியிருக்க மாட்டார். அதனால இன்னும் ஒரு பத்து ரூபாய் ஈ.சி பண்ணுவோம்டா. அதன் பின்னே நான் கடைகாரர் போன்ல இருந்து மெசேஜ் பண்றேன்"ன்னு சொன்னான்.

அந்த பத்து ரூபாயை ராமனாதனுக்கு ஏத்தி விட்டுட்டு "அய்யா, எங்கள் கணினி பதிவின் படி உங்களுக்கு மெசேஜ் அனுப்பின நபருக்கு நீங்கள் அனுப்பவில்லை என தெரிகின்றது. அதனால் 99 ரூபாய் அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். ஆனால் ஆறுதலாக பத்து ரூபாய் அனுப்பியுள்ளோம்" என மெசேஜ் அனுப்பினான்.

திரும்பவும் எனக்கு ராமனாதனிடம் இருந்து எனக்கு அதே மெசேஜ் வந்தது. எத்தனை பேருக்கு அனுப்பினார்ன்னு தெரியலை. திரும்ப வீட்டுக்கு வரும் போதும் அவர் மொட்டை மாடியிலே நின்னு கட்டைவிரல் தேய தேய அனுப்பிகிட்டு இருந்தார்.

மாலை என்னை பார்க்கும் போது கோவமா முகத்தை திருப்பிகிட்டு போனார்.ஏன்னு தெரியலை.வாழ்க செம்மொழி மாநாடு!

June 20, 2010

எம் மொழி எம் மொழி செம்மொழியே!!!!




நான் அபி எழுதுகிறேன். என் அப்பா ஒரு மொழியையே கொலை செய்தார். (ஆமாம் தமிழை தானே செய்தார், அத்தனை எழுத்து பிழை என கீதா பாட்டி வந்தால் மன்னிக்கவும் இது வேற விஷயம் கீதா பாட்டி வேற கொலை)

என் தம்பி ஆறு மாதம் முன்பு வரை ஒரு அழகான மொழி பேசினான். அதை இந்த ஆறு மாதத்தில் என் அப்பா கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ததை தான் நான் இங்கே சொல்கிறேன்.

நம் தமிழ் மொழிக்கு ஆதியும் இல்லை அந்தமும் இனி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம் தமிழ் மொழியில் இருந்து பிரிந்து வந்த கிளை மொழிகள் எத்தனை எத்தனை. ஆனால் இப்போது நடக்கும் அந்த செம்மொழி மாநாட்டில் பாதுகாக்கின்றோமா என நினைத்து பார்த்தால் என்னை கேட்டா இல்லை என்றே சொல்வேன்.

ஒரு மொழி உருவாவது எத்தனை சிரமம். அதை உருவாகியவனே அந்த மொழியை விட்டு வேற்று மொழியை பேசுவது எத்தனை சிரமம்.

என் தம்பியின் மொழியில் இலக்கணம் உண்டு, இலக்கியம் உண்டு, கவர்சியும் உண்டு, இத்தனை ஏன் கடமை , கண்ணியம், கட்டுப்பாடு போன்ற இன்ன பிற கந்தாயங்களும் கூட உண்டு.

என் அப்பா இங்கு வரும் போது அவன் பேச்சை மொழிமாற்றம் செய்யும் "துபாஷ்" நான் மட்டுமே. இன்னும் சொல்ல போனால் எனக்கு தான் செம்மொழி மாநாட்டில் விருது கொடுக்க வேண்டும். ஏனனில் முதல் முறையாக அந்த மொழியை தமிழாக்கம் செய்தது நான் மட்டுமே. அதற்காகவேணும் எனக்கு ஒரு "கம்பவுண்டரேட்" விருதாவது கொடுத்தல் தமிழுக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம். "காரியம்" என்றால் அந்த "காரியம்" இல்லை.

உதாரணமாக "அம்மா எனக்கு குளிப்பாட்டி விட்டு டிரஸ் போட்டு ஷாப்பிங் அழைத்து போ" என்கிற சிரமமான ஒன்பது வார்த்தைகளை "இங்கிலிபிடியா நானே பிட்கு" என அழகாக மூன்று வார்த்தைகளில் சொல்லும் அழகு தமிழுக்கு இருக்கின்றதா?

"அக்கா என்னை அடிக்கிறா" என்பதை "பீலிட்டிடான்னுவாடா" என ஒரே வார்த்தையில் சொல்ல தமிழில் வார்த்தை உண்டா?

"வாடில்லாபிஸ்கி"ன்னு சிரிச்சா "அக்கா முகத்தை வச்சு என் உள்ளங்காலில் இடிச்சுட்டா"ன்னு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு.

இதில் எங்கே இலக்கணம் வந்ததுன்னு நீங்க கேட்பது தெரிகின்றது. 'வாடில்லா புஸ்கோ" என கூறினால் "அக்கா முகம் என் காலில் இடிக்க போகின்றது" என அர்த்தம். அதாவது எதிர்காலம்.

"ச்சூமுச்சுரா சந்து போத்ரா" என்றால் "அக்கா நல்லபடியா ஸ்கூல் போய் படி"ன்னு அர்த்தம். அதாவது கடமை.

"டீசுவானா பல்லிமா" என்றால் " வீட்டுக்கு வரும் எலக்ட்ரிகல் மீட்டர் ரீடிங் குறிக்க வருபவர் வரை உள்ளே வந்து உட்கார சொல்லும் பண்பு என்னும் கண்ணியம்.

"வருசாலாமென்னுடா" என்றால் "நீ வரும் வரை நான் சமத்தா இருப்பேன்" என்று பொருள். அதாவது கட்டுப்பாடு.

ஒரு மொழி என்று எடுத்து கொண்டால் சில குறைகளும் இருக்கும். ஆம் "N" என்கிற ஆங்கில எழுத்துக்கு "கட்டாங்கால்" என சொல்லப்படும். இது கொஞ்சம் அதிகம் தான். அது போல சில எழுத்துகள் ஒரு பத்தி எழுதும் அளவுக்கு பெரிதாய்கூட இருக்கும். இதல்லாம் பெரியவர் நன்னன் போன்றவர்களை வைத்து புட்டி பார்த்து டிங்கரிங் போன்ற சீர்திருத்தம் செய்து கொள்ளப்படக்கூடிய விஷயங்கள் தான்.

ஒரு முறை அப்பாவுக்கும் என் தம்பிக்கும் நடந்த சில வேண்டத்தகாத வன்முறை சம்பவத்தில் அவன் அப்பாவை பார்த்து "லே மடிசண்டா சூமாண்ட்டா" என சொல்லிய போது என் அப்பா என்னிடம் அவன் "என்ன சொல்கிறான்?" என கேட்ட போது நான் குடும்பத்தில் குழப்பம் வருமே என சொல்லாமல் விட்டு விட்டேன். பாவம் அவங்க கிட்ட 'உங்க அம்மாவை திட்டுகிறான்" என சொன்னால் அவங்களுக்கு கோவம் வரத்தானே செய்யும்.

சில சமயம் அப்பா கேட்கும் பழைய பாடல்கள் கூட ரீமிக்ஸ் செய்யப்படும். " வானென்னகோவோ யாசெமரோ" என்பது தில்லானா மோகனாம்பாள் படத்தின் "நலந்தானா" பாட்டு. இப்படியாக சங்க இலக்கியம் முதல் சகல இலக்கியங்களும் இந்த மொழியில் உண்டு.

ஆனால் அப்பா இந்த மொழியை அழிக்க இந்த கிளை மொழியை கொலை செய்ய பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.போகாத ஊர் இல்லை. ஏறாத கோவில் இல்லை. எந்த கோவில்ல தீமிதி நடந்தாலும் அங்க போய் "மாரியாத்தா இப்ப தீ மிதிக்கும் 96 பேரும் என் மகன் தமிழ் பேசனும்ன்னு நினைச்சு வேண்டிகிட்டு தீ மிதிப்பதா நினைச்சுக்கோ"ன்னு வேண்டிப்பதும், "பழனி முருகா வரும் தை பூசத்தில் உனக்கு நடக்கும் அபிஷேகம் எல்லாம் நானே என் மகன் தமிழ் பேசுவதற்காக செய்யும் அபிஷேகமா நினைச்சுக்கோ" என உருகி உருகி வேண்டிப்பதும், சிதம்பரத்தில் போய் 'நடராஜா வருஷத்துக்கு இரண்டு முறை மார்கழி மாதமும், ஆனி மாதமும் உனக்கு குளிர குளிர அபிஷேகம் செய்ய சொல்றேன்" என வேண்டிப்பதும்....எல்லா கடவுளும் மீட்டிங் போட்டு "இவன் நினைச்சுக்கோ, வச்சுக்கோ, செய்ய சொல்றேன் என ரொம்ப ரப்சர் பண்ணிட்டு இருக்கான். அப்பா முருகா அவன் கேட்ட தமிழை அவன் மகனுக்கு அருள் பாலிச்சுடு" என முடிவெடுத்து அருள் பாலிக்கப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் காலை எழுந்த என் தம்பி "அம்மா, அப்பா, முருக்கு, சீடை, எலந்த அடை, பீசா, பர்கர், கோலிசோடா, கில்லி, சுறா,நஷ்டம், பத்துகோடி, சங்கம்,கேபிள், பையா, தமண்ணா, பள்ளிகூடம், பைக், தமிழ் தமிழ்...."ன்னு கத்தி கொண்டே சரஸ்வதி சபதம் பாட்டுக்கு பதிலாக ஒசானா ஒசானா பாட்டெல்லாம் பாட ஆரம்பிச்சுட்டான்.

இப்படியாக ஒருவழியாக அந்த நட்ராஜ் மொழி போய் இப்போ தமிழ் வந்துவிட்டது. ஒரு மொழிக்கொலை செய்த மந்தகாசத்தில் அப்பா. ஹூம்.. இந்த கிளை மொழியை பரப்பி அதை செம்மொழியாக்கி, A.R. ரஹ்மானை விட்டு டியூன் போட சொல்லி எதாவது லூசுதேவ்மேனனை விட்டு இயக்கி (ஆனா ஸ்ருதி கமல் பாடுவது காதிலேயே கேட்கலை இன்னும் கொஞ்சம் சத்தமா பாட சொல்லனும்) கோவையிலே இடம் கிடைக்காட்டியும் பரவாயில்லை அட்லீஸ்ட் திருப்பூர்லயாவது ஒரு மாநாடு நடத்திடலாம்ன்னு நினைச்ச என் கனவிலே மண்.

இப்ப நான் மட்டும் தனியே பாடிகிட்டு இருக்கேன்.... "லாலம்மா லேடுப்பா லே லேம்மா லேம்மா லேம்மா".... கிட்ட வந்து தம்பி சொல்றான் "அய்யோ அக்கா அது 'நம்மொழி நம்மொழி செம்மொழியேயேயேயேயே".....போடாங்..............

June 13, 2010

ஒரு வழியா நட்ராஜ் ஸ்கூல் போயாச்சு!!!

நட்ராஜ் ஸ்கூல் சேர்த்துட்டு வந்த போதே ஜூன் பத்தாம் தேதி திறப்புன்னு தெரியும். அன்னிக்கு முதலே பத்தாம் தேதி பள்ளி கூடம் போகனும் போகனும்ன்னு சொல்லி சொல்லி வந்தாலும் ஒன்பதாம் தேதி நாளை முதல் பள்ளி கூடம் போகனும்னு சொன்ன போது "அப்பா ஒன்பதுக்கு பின்னே பதினொன்னு தானே"ன்னு அப்பாவியாக இல்லை விஷயாளியாக கேட்க எனக்கே கொஞ்சம் பாவமாக தான் இருந்தது. அதற்கு முதல் நாள் வரை யூனிபாஃர்ம், ஷூ, ஸ்கூல் பேக் எல்லாம் வீட்டுக்கு வர வர அவன் "இவனுங்க நம்மை விட மாட்டானுங்க" என தெரிஞ்சுகிட்டான்.

ஒன்பதாம் தேதி இரவு தூங்கின பின்னே இரவு ஒரு மணிக்கு எழுப்பினான்.

"என்னடா தம்பி? உச்சா வருதா?"

"அப்பா நீ தம்பியா இருக்கும் போது (அதாவது நான் அவனை மாதிரி இருக்கும் போது) ஸ்கூல் போக அழுவியா?

இவனை சைக்கலாஜிகலா மாத்திடுறேன் பேர்வழின்னு "ஹய்யோ இல்லவே இல்லை. நான் காலை எழுந்து நானே குளிச்சுட்டு உன் பாட்டிகிட்ட போய் ஸ்கூல் பேக் எல்லாம் வாங்கிகிட்டு, ஸ்நாக்ஸ் பாக்ஸ் எல்லாம் அதிலே வச்சுகிட்டு டாட்டா சொல்லிட்டு நானே சமத்தா ஸ்கூல் சிரிச்சு கிட்டே போவேன்" என சொன்னேன். நான் ஸ்கூல் போன கதை எல்லாம் தான் ஏற்கனவே தெரியுமே உங்களுக்கு நான் எத்தனை சமத்துன்னு. சொல்லிட்டு நினைத்து பார்த்தேன். நியூ கொழும்பு ஸ்டோர்ஸ்ன் மஞ்ச பை தான் ஸ்கூல் பேக்,வார் வச்சு தைத்த டவுசரில் சுட்ட புளியங்கொட்டையோ அல்லது நார்த்தங்காய் ஊறுகாயோ தான் ஸ்நாக்ஸ்.

விலாவாரியா நான் சமத்தா ஸ்கூல் போனதை சொல்லிட்டு கேட்டேன். "இப்ப சொல்லு நீ சமத்தா போவியா ஸ்கூலுக்கு?"ன்னு கேட்க "இல்ல நான் அழுவேன்"ன்னு சொல்லி திரும்பி படுத்து தூங்கிட்டான். என் சைக்காலஜிகல் ட்ரீட்மெண்ட்ல தீய வைக்க. எனக்கு தான் தூக்கம் போச்சு. அவனை எப்படிடா ஸ்கூல் அழைச்சு போவதுன்னு.

காலை ஆறு மணி முதல் கிளம்ப ஆரம்பிச்சு...ஆரம்பிச்சு ..ஆரம்பிச்சு இதோ கிளப்பியாச்சு! சாமி எல்லாம் கும்பிட்டு வாசலில் உட்கார வச்சுட்டு வண்டிய எடுத்து வெளியே வைக்கும் வரை அழுகை தான் படியிலே உட்காந்துகிட்டு.




"சரி ஸ்கூல் போக வேண்டாம்.சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்"ன்னு சொல்லி வண்டியிலே உட்கார வச்சு அவன் தப்பிக்காம இருக்க பின் பக்கம் அவன் அம்மாவும் உட்காந்து வேற வேற வழியா பள்ளி கூடத்துக்கு போயாச்சு. வல்லளார் கோவில் கிட்டயே வண்டிய நிப்பாட்டி தூக்கியாச்சு அவனை. பள்ளி சேர்க்கும் போது செஞ்ச ரகளை நியாபகம் இருந்ததால் அத்தனை முன்னேற்பாடு.



எனக்கே கொஞ்சம் பாவமா இருந்துச்சு. அங்க பயங்கர ரகளைக்கு பின்னே தூக்கி போனா எல்லா குழந்தையும் இவனை மிஞ்சிடும் போல அத்தன அழுகை. கொடுமை என்னான்னா ஒரு அம்மாவும் அழுதுச்சு. பிள்ளையை அழுகிறானேன்னு. அதை விட கொடுமை அந்த வகுப்புகள் எல்லாம் ஜெயில் மாதிரி குழந்தை பேரை கேட்டுட்டு உள்ளே விட்டு சாத்திகிறாங்க அந்த அந்த வகுப்பு டீச்சர்.

அது வரை அழுதவன் ஸ்விட்ச் போட்ட மாதிரி டக்குன்னு நிப்பாட்டினான். நிப்பாட்டிட்டு சொன்னான் "நான் அழுகலை. அதனால என்னை அந்த பசங்க கூட போடாதீங்க, நான் அபி கிட்ட உட்காந்துகறேன்". நானும் வெட்கமே இல்லாம அதையும் கேட்டு பார்த்தேன். அவங்க ஒத்துக்கலை.



அன்று காலை 10.30க்கு அழைச்சு போயிடலாம்னு சொன்னாங்க. அது வரை கோவில்ல உட்காந்து இருந்துட்டு அழைக்க போனோம். சும்மா ஜாலியா முதல் பென்ச்ல "வர்ரான் வர்ரான் வேட்டைகாரன்"ன்னு பாடிகிட்டு இருந்தான் கூட இரண்டு புது நண்பர்களோட.

ஒரு வழியா நிம்மதியா ஆச்சு. அடுத்த நாள் வேற கலர் யூனிபாஃர்ம். அன்றும் அழகா போனான். பின்னே இரண்டு நாள் லீவ். நாளை போக இன்னிக்கே ரெடியாகிட்டான். இப்ப கூட முதுகிலே பேக் மாட்டிகிட்டு தான் தூங்குகிறான். பார்ப்போம். நாளை என்ன செய்கிறான்னு.