பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 4, 2012

பேராசிரியர் க. அன்பழகனார் - ஒரு வியத்தகு அரசியல் பழம்!


அது 1957, நம் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 8 ஆண்டுகள் ஆன நிலை. தேர்தலில் நாம் முதன் முதலாக போட்டியிடுகின்றோம். மொத்தம் உள்ள சட்ட மன்ற இடங்களில் நம் கட்சி போட்டியிட்டது 124, அது போல பாராளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்ட இடங்கள் 11. நமக்கு முதன் முதலாக கிடைத்த வெற்றிகள் என்பது சட்டமன்றத்தில் 15 இடங்கள். பாராளுமன்றத்தில் இரண்டு இடங்கள். சட்ட மன்றத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் அண்ணா, கலைஞர், பேராசிரியர், ப.உ  ச, ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, களம்பூரார்(அண்ணாமலை), சந்தானம், நடராசன், இருசப்பன், ஆனந்தன், கோவிந்தசாமி, சாரதி, சுப்ரமணியம், செல்வராஜ் ஆகியோர். அது போல பாராளுமன்றத்துக்கு ஈ வி கே சம்பத், தருமலிங்கம் ஆகிய இருவர். செமத்தையான வெற்றி தான்! ஏனனில் அப்போது மக்கள் மத்தியில் காங்கிரஸ் மட்டுமே கட்சியாக இருந்து தொலைத்தது. ஆக நாம் காங்கிரஸ் என்னும் மரத்தின் வேருக்கு ஊற்றிய முதல் ஆசிட் பாட்டிள்கள் அந்த 15 சட்டமன்ற உறுப்பினர்களும். போகட்டும்..... இதல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை. நேற்று என் வாழ்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்தது.

நான் நேற்று ( 03.09.2012) இரவு சென்னை வர வேண்டி இரவு 11.30க்கு மயிலாடுதுறை வரும் கம்பன் விரைவு ரயில் வண்டிக்காக கொஞ்சம் மு கூட்டியே இரவு பத்து மணிக்கு இரயில்வே நிலையம் போனேன். போகும் போது வழக்கம் போல நக்கீரன், ஜூவி, (ரிப்போர்டர் வாங்குவதில்லை) ஆகியன வாங்கி போனேன். முதல் பிளாட்பாரம்ல  புகைவண்டி வரும் என்பதால் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் போது என் முதுகின் பின்னால் யாரோ "டொக். டொக்" என நடந்து போவது உணந்தேன். யாராக இருக்கும் என திரும்பி பார்க்கும் போது தான் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் செயலற்றவனாக ஆகிப்போனேன்.

ஆமாம்! வந்தது அந்த தள்ளாத வயதில் "ஓய்வறை" நோக்கி செல்லும் அந்த மா மனிதன் நம் கழக பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் தான். எனக்கு முதலில் என்ன செய்வது என தெரியவில்லை. இந்த விஷயம் கலைஞர் காதுக்கு போனால் தளபதி கதி என்ன? தளபதி காதுக்கு போனால் மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள் அதாவது நகரம், ஒன்றியம், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி என எல்லார் நிலையும் என்ன? சும்மா விடுவாரா தளபதி? ஒரு பழுத்த திராவிட கிழவன் தடியூன்றி தானாக நடந்து வருவதை பார்த்தால் மயிலாடுதுறை திமுகவினர் கண்ணீர் விட்டே செத்துப்போவர்:-(

நான் ஓடிப்போய் அதை ஒரு புகைப்படமாக எடுப்போம் என நினைத்தது என் மகா முட்டாள் தனம். கற்பழிக்கப்படும் பெண்ணை  காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த கயவர்கள் போல் ஆவேன் நான். எனினும் அதை செய்தேன். பின் பக்கம் பார்த்தேன். அண்ணன் குத்தாலம் கல்யாணம் அண்ணன் ஓடி வந்து கொண்டு இருந்தார். நான் போய் பேராசிரியரிடம் "அய்யா... கட்சியின் ப்ரோட்டோகால் சொல்லி கொடுக்கும் நீங்களே இப்படி எங்க மாவட்டம் ஏ  கே எஸ் அண்ணன் அனுமதி இல்லாமலோ அல்லது எங்கள் நகரம் குண்டாமணி அண்ணன் இல்லாமலோ தனியாக வரலாமா?" என நேரிடையாக கேட்டேன்.

அதற்கு அவர் "இல்லையப்பா, நான் சொந்த காரணமாக வந்தேன். இது கட்சி விசயம் இல்லை. ஆனா கோவக்கார தம்பி குத்தாலம் கல்யாணத்துக்கு நாளை பின்ன அவருக்கு சேதி தெரிஞ்சா கோவிப்பாரேன்னு அவரு கிட்ட மட்டும் சொன்னேன். தப்பா நினைக்காதீங்க" என சொன்ன போது எனக்கு  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

அய்யாவை  முதல் வகுப்பு இடத்தில் அமர வைத்து விட்ட நேரத்தில் குத்தாலம் அண்ணன் மனைவியார் அவர்கள் அய்யாவுக்கு இரவு சப்பாடை கொண்டு வர நான் அதற்குள் "அய்யா, வீட்டு இட்லியும் பூண்டு மிளகாய் பொடியும், வத்த குழம்பும் இருக்கு" என சொல்ல குத்தாலம் அண்ணன் "இல்லடா தம்பி இதை எல்லாம் அய்யா நல்லா சாப்பிட்டாலே போதும்" என சொல்லி தடுத்தார். பின்னர் அய்யா பேராசிரியரும், குத்தாலம் அன்பழகன் அண்ணனும் சாப்பிட அந்த சோபாவில் அமர, நானும் அண்ணியாரும் வைக்க அய்யா சாப்பிட ஆரம்பித்தார். நான் பின்னர் வெளியே வந்து எங்கள் நகரம் குண்டாமணி அண்ணனுக்கு போன் செய்தேன். கவனிக்க.. அப்போது மணி 10.50.

அதற்குள் அய்யா மூத்த வக்கீல் முருகு. மாணிக்கம் அவர்களும், பின்னர் எங்கள் மயிலாடுதுறை ஒன்றிய செயலர் அண்ணன் மூவலூர் மூர்த்தி அண்ணனும் வந்தனர். நான் மூர்த்தி அண்ணன் கிட்டே "சீக்கிரம் உள்ள போங்க அண்ணே, பேராசிரியர் தனியா உட்காந்து இருக்கார்" என சொன்னேன். அவர் அரக்க பரக்க ஓட அடுத்த நிமிடம் எங்கள் நகரம் குண்டாமணி அவர்கள் ஒரு சுமாராக 50 நகர பொறுப்பில் இருப்பவர்கள் புடை சூழ ஓடி வர எங்கிருந்தோ தொண்டர்கள் ஓடி வந்து "தலைவர் கலைஞர் வாழ்க! அய்யா பேராசிரியர் வாழ்க! அண்ணன் தளபதி வாழ்க! " என வாழ்த்து முழக்கமிட நாங்கள் அய்யாவின் ஓய்வறைக்கு போன போது அய்யா பேராசிரியர் "இல்லைப்பா, இது என் அஃபீசியல் விசிட் அல்ல. நான் திருவாரூர் வந்த வரை மட்டுமே அஃபீசியல். இது என் சொந்த விஷயமாக நான் படித்த பள்ளி, நான் பிறந்த இடம் பார்க்க வந்த சொந்த விஷயமப்பா, இதை பெரிசு பண்ணாதீங்க, எல்லாரும் எங்க பிள்ளைங்க தானே, நான் சொன்னா கேட்பீங்க தானே, அமைதியா இருங்க. இப்போ மணி இரவு 11 ஆச்சுது. நாம மத்த பயணிகளுக்கு தொல்லை கொடுக்கலாமா?"ன்னு கேட்க எங்கள் நகர செயலர், ஒன்றிய செயலர் எல்லாம் அழுதே விட்டனர்.

இவர்கள் எல்லாம் வரும் முன்னர் "தம்பி எனக்கு கால் மரத்து போகுது, நான் கொஞ்சம் இந்த டீப்பாயில் காலை எடுத்து வச்சுக்கவா" என நான் மட்டுமே இருக்கும் போது எனக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலை. " அய்யா, நானே எடுத்து காலை வச்சிவிடும் பாக்கியம் எனக்கு கிடைக்கட்டுமே" என்றேன்.

ஆனால் எல்லா கட்சி நிர்வாகிகளும் வந்து விட்ட நிலையில் அய்யா அவர்கள் தன் காலை இறக்கி கீழே வைக்க எங்கள் நகர செயலர் குண்டாமணி அவர்கள் "அய்யா மன்னிக்கனும்" என சொல்லி விட்டு மீண்டும் காலை எடுத்து டீப்பாயில் வைத்தார். ஒரே அமைதி அந்த இடத்தில். பேராசிரியரின் பக்கத்தில் எங்க எம் எல் சி  சோழமண்டல தளபதி கோ சி மணி அய்யாவின் பால்ய நண்பர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் திரு முருகு. மாணிக்கம் அவர்கள் அமர்ந்திருக்க அந்த இடம் ஒரு திராவிட மூத்த பழுத்த கிழ சிங்கம் முன்னாள் நிற்கும் சிங்க குட்டிகளாய் அமைதி காத்தது.

அய்யாவே அமைதி கலைத்தார். " ம் ... சொல்லுங்க யார் யார் என்ன பண்றீங்க? உங்க கூட நன் புகைப்படம் எடுத்துப்பேன். (வார்த்தையை கவனிக்கவும்... என் கூட நீங்க புகைப்படம் எடுத்துக்கலாம் என சொல்லாமல்... வந்திருக்கும் எல்லார் செல் போனிலும் தயாராக இருக்கும் கேமிராவை பார்த்து எப்படி சொல்கிறார் பாருங்கள்) வாங்க எல்லாரும் வாங்க"

"அய்யா நான் சீர்காழி, தென்பாதி முத்துராக்க மாரப்பன் பேரன் அய்யா"

"ஒ அப்படியா, அவரு இருக்காரா" என கேட்டுவிட்டு டக் என சுதாரித்து கொண்டு "நல்லா இருக்காரான்னு கேட்டேன்ப்பா" என சொன்னார். இதில் விஷயம் என்னவெனில் அந்த மேற்படி முத்துராக்க மாரப்பன் அவர்கள் இன்று உயிரோடு இருந்தா கிட்ட தட்ட 112 வயது ஆகியிருக்குமாம். அதை "கணக்கு" செய்து தான் பேராசிரியர் அப்படி கேட்டார் போல முதலில். ஆனாலும் ஒரு கண்ணியம் குறைவான வார்த்தை தன் வாயில் இருந்து வெளிப்பட்டு விட்டதோ என அஞ்சியே அதாவது தன் மனதுக்கு அஞ்சியே அவர் தன்னை திருத்திக்கொண்டார். பின்னர் அந்த நபர் "இல்லீங்கய்யா அவர் இறந்து ரொம்ப வருஷம் ஆச்சுய்யா" என சொல்ல பேராசிரியர் அவரை பற்றி சில வார்த்தைகள் பெருமையாக அவாரின் வாரிசுகிட்டே சொல்லிட்டு "ஒரு தபா தன் பேரனுக்கு ஒரு ஸ்டுடியோ வச்சு தரனும்"ன்னு சொன்னாருப்பா அவரு"ன்னு சொல்ல வந்தவர் அழுதே விட்டார். ஏனனில் அந்த ஸ்டுடியோ பேரன் அவர் தான் போல.

அடுத்து ஒருவரிடம் "தம்பி நீங்க என்ன தொழில் பண்றீங்க?"ன்னு கேட்க அதற்கு அவர் "அய்யா எனக்கு முழு நேர தொழில் அரசியல் தான் அய்யா"ன்னு சொல்ல அதற்கு பேராசிரியர் " நோ நோ தி எக்ஸ்ட்ரா டெசிமல் ஆக்டிவிட்டீஸ் ஷுட் பீ எக்ஸ்ட்ரா டெசிமல். பட் தெ ப்ரொப்பஷனல் ஷுட் பீ அனதர்" என சொல்ல நாங்க எல்லாரும் கை தட்டினோம். "மன்னன்" படத்தில் ரஜினி ஆங்கிலம் பேசிய அந்த இரண்டு நிமிடத்துக்காக இரு நூறு தடவை படம் பார்த்தவங்களாசே நாங்க:-))

மீண்டும் பேரசிரியர் "இல்லைப்பா தொழில்னா நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகள் உன்னுடைய எந்த வருமானத்தில் சாப்பிடுறாங்க"ன்னு அர்த்தம். அரசியல் என்பது நம் ஆர்வம். சமூக ஆர்வம். சமூக ஆர்வம் மட்டும் இருக்கு எனக்கு. ஆனா பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடுக்கு கஷ்டப்படுத்துவேன் என்றோ அல்லது சமூக ஆர்வத்தினால் "கிடைக்கும்" வருவாய் கொண்டு பொண்டாட்டி பிள்ளையை சாப்பாடு கொடுப்பதோ தப்பு.இன்னும் புரியும் படி சொல்லவா? எனக்கு ஒரு திராட்சை தோட்டம் இருக்கு. நான் ஒரு விவசாயி'ன்னு சொல்லும் இந்த உலகில் நான் சைக்கிள் பஞ்சர் ஒட்டி தொழில் நடத்துறேன்"ன்னு சொல்லு. அது தான் திமிர். அந்த திமிர் தான் வேணும். எனக்கு எம் எல் ஏ பென்ஷன் வருதுப்பா... ஹா ஹா ஹா" என சிரிக்க அங்க இருந்த எல்லாரும் அமைதியை கிழித்து விட்டு சிரித்தோம்.

உடனே ஒருவர் "அய்யா நீங்க எங்க தெய்வம் அய்யா"ன்னு உணர்சி மேலிட கூட அவரை கிட்டே அழைத்து " ஊகூம்... எனக்கு மனிதனாக இருக்கவே ஆசை. சரி உனக்கு நான் தெய்வமாகவே இருந்தா கூட உன் மணிகட்டில் இத்தனை கயிறு கட்டிக்க சொல்ல மாட்டேன். உன்னையே நம்பு. உன் மூளையை நம்புன்னு தான் சொல்லியிருப்பேன். அது என்ன கயிறு? ஆங் "முடி கயிறு" தானே. ஆத்திகன் அதை முடி கயிறுன்னு சொல்றான். அதையே தான் பகுத்தறிவாளனும் சொல்றான்.. பாமரனுக்கும் புரியும் மொழியில் சொல்றான், ஆனா பகுத்தறிவாளன் சொல்லும் போது கோவம் வருது எல்லாருக்கும்"( may be மயிறு கயிறு???? :-)) ) என சொன்ன போது  பத்து வருடம் முன்னமேயே ஆயிரம் பிறை கண்டு முடித்த இவர்,  இன்றும் பெரியார் கருத்துகளை போதிக்கும் ஒரு பெரியார் சீடனாக அய்யா பேராசிரியரை கண்ட போது உடம்பு சிலிர்த்து அடங்கியது!

எங்கள் ஒன்றியம் மூவலூர் மூர்த்தி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போது அவரின் தந்தையார் பற்றி சிலாகித்து பேசினார். எங்கள் நகரம்  திரு. குண்டாமணி அவர்கள் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும், எங்கள் நகராட்சி தலைவர் அவர்களின் கணவர் வக்கீல் சீனிவாசன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட போதும் "இது நம்ம ஊர் கோட்டைப்பா. தக்க வச்சுகுங்க" என சொன்னார்.

என்னை "கிட்ட வாங்க அபிஅப்பா, நீங்க மட்டும் ஏன் போட்டோவுக்கு வரலை" என சொன்ன போது... "இல்லீங்க அய்யா... எங்க நகரம், ஒன்றியம் போட்டோ எடுத்து காலைல நெட்ல போடனும் என்பதை தவிர எனக்குன்னு தனிப்பட்ட ஆர்வம் எதும் இல்லீங்கய்யா" என சொன்னேன். "பரவாயில்லை வாங்க தோழரே" என சொன்ன போது அந்த மனிதன் கிட்டே இருக்கும் கம்யூனிச பாசம் (அடிக்கடி கலைஞர் சொல்லுவாரே தான் ஒரு கன்யூனிஸ்ட் என்று அது போல) தெரிந்தது. ஓடிப்போய் அவர் சோபாவின் பக்கத்தில் ஒரு குழந்தையாய் அமர்ந்து கொண்டேன்.

புகைவண்டி வந்தது. எல்லோரும் நடந்து போனோம் பேராசிரியரை பின் பற்றி. அவரின் உதவியாளர்கள் இருவர் அவரின் படுக்கை, மற்றும் ஒரு பெட்டி எடுத்து வந்தனர். குத்தாலம் கல்யாணம் அண்ணன் "அண்ணே உங்களை தனியா அனுப்ப மனசு இல்லை அண்ணே" என கண் கலங்கினார். திடீரென ஒரு மாற்றுக்கட்சி முக்கிய புள்ளி ஒருவர் அந்த கூப்பேயில் இருந்து வெளிப்பட்டு பேராசிரியரை பார்த்து திடுக்கிட்டு அவர் பாதம் தொட்டு வணங்கி "அய்யா நான் இருக்கேன் இந்த பெட்டியில். நான் உங்களை சென்னையில் இறக்கி விடும் வரை தூங்க மாட்டேன் அய்யா" என சொல்லி விட்டு  பிளாட்பாரத்தில் நின்ற எங்களை பார்த்து "கவலை வேண்டாம். அவர் எல்லாருக்கும் பேராசிரியர் தான். நான் பார்த்துக்குறேன். காலை அவரை அழைக்க வருபவர்கள் கிட்டே ஒப்படைச்சுட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்" என குத்தாலம் அண்ணனிடம் சொன்னார்.

நான் பேராசிரியரிடம் சொன்னேன். "அய்யா நான் நான்கு பெட்டி தள்ளி தான் இருக்கேன். நான் வேண்டுமானா எல்லா ஸ்டேஷனிலும் வந்து பார்த்துக்குறேன்" அதற்கு அவர் " நான் என்ன பெரியாரா? இங்க படுத்தா சென்னைல தான் எழுந்திருப்பேன்" என சொல்ல அங்கே வந்திருந்த பெரியாரிஸ்ட் தோழர்கள் வாய் விட்டு சிரித்தனர். அதே நேரம் மனம் குளிர அழுதனர். "இவர் ஒரு வாழும் பெரியார்" என சொல்லி!!!!


குறிப்பு: நான் பார்த்ததை கேட்டதை எப்போதும் போல எழுதிய பின்னர் தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு அனுப்பி அவர் சில விஷயங்கள் "எடிட்" செய்து அனுப்பிய பின் இட்ட பதிவு இது! நன்றி தோழர் திராவிடப்புரட்சி அவர்களுக்கு!

திராவிட சிங்கத்தின் பக்கத்தில் நான் - மிக பெருமையாக!
அண்ணன் மூவலூர் மூர்த்தி அவர்கள் பேராசிரியருடன்...
தனியே நடந்து வரும் திராவிட சிங்கம் பேராசிரியர் அவர்கள்



என் கேமிரா வழி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே இவைகள். இன்னும் எங்கள் நகரம் திரு.குண்டாமணி அண்ணன் எல்லாம் இருக்கும் புகைப்படங்கள் பின்னர் அப்டேட் செய்யப்படும்!

16 comments:

  1. ராதாகிருஷ்ணன் மகாலிங்கம்September 4, 2012 at 7:34 PM

    கொடுத்து வச்ச ஆளுங்க சார் நீங்கள் அனைவரும்.....

    ReplyDelete
  2. அது... அதுதான் பேராசிரியர்! Golden Momentஐ பதிவெடுத்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
    அப்புறம்... ரிப்போர்ட்டர் அ.தி.மு.க.வின் கட்சிப் பத்திரிக்கை. அதன் போஸ்டரைக் கூட நாம் திரும்பிப் பார்க்காமல் இருப்பது நம் மனதிற்கு நல்லது.

    ReplyDelete
  3. நல்ல பதிவு அபி அப்பா. பேராசிரியர் நீடூழி வாழ்க!

    ReplyDelete
  4. அருமையான பதிவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. //மீண்டும் பேரசிரியர் "இல்லைப்பா தொழில்னா நீயும் உன் மனைவி மற்றும் குழந்தைகள் உன்னுடைய எந்த வருமானத்தில் சாப்பிடுறாங்க"ன்னு அர்த்தம். //

    நல்ல தலைவர்

    ஆங்கிலத்தில் what do you do for a living என்று கேட்பார்கள். அதுதான் தொழில் மற்றவை எல்லாம் அடுத்தகட்டம்.

    திராவிட கழகத்தில் இவர் ஒரு பொக்கிசம்.

    கட்சிப்பணிகள் தாண்டி (கட்சி தாண்டி) இளைய சமுதாயத்தினருக்கு கடத்தப்பட வேண்டிய சிந்தனைகள் இன்னும் இருக்கிறது. கலைஞர் மற்றும் பேராசிரியர் போன்ற பெரிய‌வர்களை இந்த தமிழகம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பது மக்கள் கையில். இவர்கள் கட்சி தாண்டி மாதம் ஒரு கல்லூரி என்று உரையாற்றி இன்றைய சமுதாய நிலைகளில் இவர்களின் கருத்தைப் பதியச் செய்ய வேண்டும். இல்லை என்றால், சரியானவர்களிடம் வழி கேட்க மறந்தவர்களாகி விடுவோம்.

    நன்றி அபி அப்பா!

    ReplyDelete
  6. மனம் நெகிழ, எழுதியிருந்தீர்கள்.

    ReplyDelete
  7. இனமான பேராசிரியர்ன்னு சும்மாவா சொல்லுறாங்க :)

    ReplyDelete
  8. தாம்பரம் தேர்தல் கூட்டமொன்றில் பேராசிரியர் பேசுகிறார்.வேட்பாளர் ராஜா கைகூப்பி சிலைபோல் நிற்பதைப்பார்த்த பேராசிரியர் மிகுந்த சங்கடமுற்று பேச்சே வரல.. உட்காருய்யா..என்று ராஜவை அமரச்செய்த பிறகே சரளமாக பேசுகிறார்.-.அந்த கண்ணியவான் இன்று இதுகளையெல்லாம் எதிர்தது அரசியல் செய்ய வேண்டிய நிலை.அதன் பலன் இன்று பலதிசைகளிலும் அனுபவிக்கிறோம் என்பதுதான் உண்மை.
    வில்லவன் கோதை

    ReplyDelete
  9. அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் அபி அப்பா

    ReplyDelete
  10. உண்மையிலேயே பேராசிரியர் அனைவராலும் மதிக்கப்பட கூடியவர் .மதிக்கப்பட வேண்டியவர்.போற்றத்தக்க பதிவு வாழ்த்துக்கள் அபி அப்பா

    ReplyDelete
  11. உயர்ந்த இடத்தில இருந்து பல பதவிகளை வகித்தாலும் பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதிக்காத ஒரு நல்ல மனிதரை பற்றிய நெகிழ்ச்சியான பதிவு

    ReplyDelete
  12. பேராசிரியரின் எழுத்துகளை படித்தால் பார்பன புரட்டுகள் தெளிவாக தெரியும்.
    அழித்து எழுதியே தமிழன் தலைவிதியை மாற்றி விட்டனர் என்று கூறுவார்.
    ஆர்ப்பாட்டம் இல்லாமல், அறிவின் தெளிவோடு , பகுத்தறிவின் உச்சமாக உள்ளார் பேராசிரியர்.
    திரு.வீ .க முதல் பற்பல தமிழ் அறிஞர்களோடு வாழ்ந்து பழகி பதறாமல் கருத்துகளை உள்ள தெளிவோடு கூறுபவர்.
    அநாகரீகமாக பேச தெரியாத அறிஞர். கண்ணியமான பேச்சு மட்டுமே.
    ஆனால் ஆதாரபூர்வமான கருத்துகளில் கனல் தெறிக்கும். இன மான பேராசிரியர் என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமானவர்.
    (சிலரின் பெயருக்கு முன்னால் உள்ள அடைமொழிகளை நினைத்து கொள்ளுங்கள். சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது)

    ReplyDelete
  13. இனமான தலைவர் பேராசிரியரை பற்றி இன்னும் அதிகமாக அறிய வேண்டும் என்ற உள்ள ஆவலை வெகுவாக தூண்டி விட்ட அபி அப்பாவுக்கு நன்றி!
    நெகிழத்தக்க வகையில் மன உணர்வை தூண்டும் வகையில் தங்களின் பதிப்பு மிகச்சிறந்த ஒன்று.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))