பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 15, 2013

ஈழப் போராட்டம் - "லயோலா மாணவர்கள்" முதல் "திமுக மாணவரணி" வரை !!!

லயோலா கல்லூரி - சென்னை

"லயோலா கல்லூரி" - தமிழகத்தில் லயோலா கல்லூரியை அறிந்திராதவர்கள் அனேகமாக  படிப்பு வாசனை கிஞ்சித்தும் இல்லாதவர்கள் எனலாம். "அண்ணாமலை பல்கலை கழகம்" எப்படி மாணவர்களை அங்கிருந்து வெளியே வரும் போது உலகத்தில் எந்த நிலையிலும் "சர்வைவ்" செய்யவும், தன்னை அந்தந்த  சூழலுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவும் பாடம் கற்றுக்கொடுக்கின்றதோ அதே போல லயோலாவும் தன் மாணவர்களை பாடத்தை மட்டும் படித்து விட்டு தேர்வில் விடைத்தாளில் பேனா வழியே வாந்தி எடுக்க வைக்கும் வேலையை செய்வதில்லை. மாணவர்களை உலகத்தை பார்க்க விடும் பேராசிரியர்கள் அங்கே உண்டு. சமூகத்தின் மீதான அக்கரை செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி அங்கே உண்டு. தன்னை ஆளும் அரசை, அந்த அரசை நடத்தும் அரசியல்வாதிகளை, அந்த அரசியலை இவர்கள் சில நடுநிலை நாயகங்கள் போல "சாக்கடை" என சொல்வதில்லை. அசுத்தமாக இருப்பின் இறங்கி சுத்தம் செய்யவும் தவறுவதில்லை. தேர்தல் நேரத்தில் லயோலா கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து மாதிரி வாக்கெடுப்பு நடத்தி களம் காணும் காளையர்கள் இவர்கள். தூர நின்று அரசியலை பார்த்து "ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்" என போவதில்லை இவர்கள்.கிட்டே வந்து பழத்தை பறித்து பார்த்து மக்களிடம் இது நல்ல பழம், இது சொத்தை பழம் என தரம் பிரித்து காட்டும் வல்லமை கொண்டவர்கள். இப்படித்தான் அங்கே பாடம் சொல்லி கொடுக்கப்படுகின்றது.  அதனால் தான் லயோலா பிரசவித்த மாணவர்கள் இன்று உலகில் பல துறைகளில் புடம் போட்ட தங்கமாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த லயோலா கல்லூரி அப்படியே இருக்கட்டும். நாம் இப்போது வேறு இடத்துக்கு போகலாம். .......

சென்ற வருடம் இதே தினம் கலைஞர் மீண்டும் டெஸோ இயக்கம் உயிரூட்டப்படும் என அறிவித்தார். அதற்கு முன்பாக ஆரம்பித்த டெஸோ இயக்கம் என்ன ஆனது? என கேலி பேசினர். உண்மை தான். இன்றைக்கு கேலி பேசுபவர்கள் பலர் அப்போது பிறந்து இருக்கவில்லை. ஆமாம்.. அது தான் உண்மை. இலங்கையில்  ஈழப்போரட்டம் உச்சநிலையில் இருந்த போது போராட்ட குழுக்கள் இரு பிரிவாக அதாவது அகிம்சை முறை மற்றும் ஆயுத போராட்ட முறை என இரு பிரிவுகளாகவும் அதிலும் ஆயுத பிரிவில் பல குழுக்களாகவும் இப்படியாக ...ஆனால் எல்லோருக்குமே தனி தமிழ் ஈழம் என்னும் ஒரே இலக்கு மட்டும் இருந்தது. அது போலவே இங்கே தாய் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்குமே "தனித்தமிழ் ஈழம்" என்பதில் மாற்று கருத்து இல்லை. அனால் அரசியல் ரீதியாக இங்கு செயல்பட்ட கட்சிகள் ஓவ்வொன்றின் பாலும் ஒவ்வொறு குழுக்களும் தங்களை கட்டிப்போட்டுக்கொண்டு இருந்தன. குறிப்பாக எல் டி டி ஏ அமைப்பினர் எம் ஜி அரின் அதிமுகவுடன் ஒரு பினைப்பை கொண்டு இருந்தனர். அது போல டெலோ அமைப்பின் சீறி சபாரத்தினம் கலைஞர் மீதும் திமுக மீதும் ஒரு இனைப்பை கொண்டு செயல்பட்டு கொண்டு இருந்தனர். அனால் எல்லா குழுக்களுமே மத்தியில் ஆட்சி செய்த இந்திராவின் தலைமை மீது நம்பிக்கை கொண்டும், இந்திய ராணுவம் மூலம் பயிற்சியும் கூட பெற்று வந்த நிலையில் தான்  1985ம் ஆண்டு டெஸோ அமைப்பு அதாவது Tamil Elam Suppoorters Organization என்னும் அமைப்பினை கலைஞர் அவர்கள் தொடங்கினார். அது சாதித்தவை அதிகம். அது பற்றி இப்போது இங்கே வேண்டாம்.

அனால் ஒரு கட்டத்தில் ஆயுத போரட்ட குழுக்கள் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலே டெலோ அமைப்பின் சீறிசபா ரத்தினம் கொல்லப்பட்டார். அதன் பின்னர் இங்கு தமிழகத்தில் இருந்து செயல்பட்ட டெஸோ அமைப்பு கலைக்கப்பட்டது. இது தான் வரலாறு!

ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் எஞ்சி இருந்த விடுதலை போராட்ட குழுவான விடுதலைப்புலிகள் தலைமையும் இல்லை என ஆன பின்னர் தமிழீழத்தில்அடுத்த நிலை என்ன  என்ற கேள்வி எழுத்த போது அதாவது தமிழீழமா? அல்லது எஞ்சி இருக்கும் தமிழர்கள் நலவாழ்வா? தமிழீழம் எனில் அதை அடையும் வழி மீண்டும் ஆயுத போராட்டமா? அதற்கான சாத்தியம் உண்டா இப்போதைக்கு? இல்லை...அகிம்சா வழியா? அப்படி எனில் எப்படி போராடலாம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்த்து தான் மீண்டும் டெஸோ அமைப்பு சென்ற வருடம் ஏப்ரல் மாதம் (2012) மீண்டும் உயிரூட்டப்பட்டது.

அந்த டெஸோ அமைப்பு ஏற்படும் முன்னரே 2009க்கு பின்னர் தமிழகத்தில் சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றோர் சிறு சிறு குழுக்களை வைத்து கொண்டு ஈழம் பற்றி மட்டும் பேசிக்கொண்டு ....கவனிக்க பேசிக்கொண்டு மட்டும் இருந்தனரே தவிர்த்து அவர்கள் ஈழத்தை ஒரு போர்வையாக மட்டுமே  பயன்படுத்திக்கொண்டு தீவிர கலைஞர் எதிர்ப்பு வேலையை மட்டும் செய்து வந்தனர் என்பதே உண்மை. அவர்களால் இலங்கை  அரசுக்கோ அல்லது ராஜபக்ஷேவுக்கோ எவ்வித சின்ன சிராய்ப்பும் இல்லை என்பதால் ராஜபக்ஷே கும்பல்கள் இவர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. இவர்களும் அது பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் அரசியலை இங்கு செய்து வந்தனர். இந்த நிலையில் தான் திமுகவின் தலைவர் கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் மீண்டும் டெஸோ வை உயிரூட்டினார். உடனே கோத்தபய போன்றவர்கள் துள்ளி குதித்தனர் எனில் இலங்கையின் நாசகார கும்பல், சீமான், நெடுமாறன், வைக்கோ போன்ற பபூன்கள் பற்றி கவலைப்பாடாதவர்கள் கருணநிதி அவர்களின் தலைமையில் உண்டான டெஸோ அமைப்பு பற்றி கவலைப்பட்டனர் என்பின் அதில் இருக்கும் உட்பொருளை நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

டெஸோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதத்திலேயே 12, ஆகஸ்ட் 2012 அன்று அதன் முதல் மாநாட்டை கூட்டி உலக தலைவர்களை அழைத்து வந்து ஈழப்பிரச்சனையை தீவிரமாக்கியது. அடுத்தடுத்து டெஸோ வின் செயல்பாடுகள் தொடர்ந்தன. டெஸோ மாநாட்டு தீர்மானங்கள் திமுகவின் பொருளாளர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களால் ஐநா சபைக்கு  கொண்டு சேர்ப்பிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மூன்று பேராக தனித்தனி குழுக்களாக அமைத்துக்கொண்டு மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் ஜெனீவாவில் கொண்டு வரப்படும் அமரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு கோருதல் என அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் நேரிடையாக சந்தித்து செயல்பட்டனர் டெஸோ சார்பாக.

இங்கே ஒரு விஷயம் நன்கு கவனிக்க வேண்டும். டெஸோ என்பது திமுகவின் இயக்கம் இல்லை. டெஸோவில் திமுகவும் உண்டு அத்தனையே. தனிப்பட்ட திமுகவுக்கு போராட பல விஷயங்கள் இங்கே உண்டு தமிழகத்தில். முக்கியமாக தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனை காவிரி நீர் பிரச்சனை... குறுவை சுத்தமாய் அத்து போய் விட்டது. சம்பாவும் அப்படியே நாசமாய் போய்விட்டது. விவசாய கூலித்தொழிலாளிகள் பட்டினி சாவின் விளிம்பில் இருக்கின்றனர். விவசாயிகள் தற்கொலை தொடர்கின்றது. பால் கட்டணம், பஸ் கட்டணம், மின்சார கட்டணம் , மக்களின் வழ்வாதார பிரச்சனையான மின்சாரம் 18 மணி நேரம் இல்லை. இட ஒதுக்கீடு மறைமுகமாக அழிக்கப்பட்டு வருகின்றது. சட்டம் ஒழுங்கு சுத்தமாய்  பாதாளம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கின்றது... இதற்காக போராடவே திமுகவுக்கு முழுநேரம் போதவில்லை. இதனிடையே ஈழப்பிரச்சனைக்கு போராட திமுக தன் கட்சியை மட்டுமே என இல்லாமல் வேறு கட்சிகளையும் சேர்த்து தான் டெஸோ அமைப்பினை உண்டாக்கி போராடி வருகின்றது. ஆனால் உள்நாட்டு பிரச்சனை எதிலும் கண்டு கொள்ளாத சீமான், நெடுமாறன் போன்ற சிறிய குழுக்கள் தங்கள் செய்யும் பிழைப்புவாத அரசியலான ஈழம் என்னும் போராட்டத்தில் பங்கு போட திமுகவும் வந்து விட்டதாக நினைத்து கருணநிதி மேல் பாய்ந்து பிராண்ட ஆரம்பித்தனர். ஈழ பிரச்சனையை அவர்கள் அரசியலாக பிழைப்பு நடத்துவதே அவர்களின் பாய்ச்சலுக்கு காரணம். டெஸோ வுக்கு அது பிழைப்பு இல்லை. அவர்களுக்கு வருவது போல டெசோ அமைப்புக்கு வெளிநாட்டு பணம் வருவதில்லை. இவர்கள் கைக்காசு போட்டு தான் போராட வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபாகரனின் மகன் 12 வயது பாலகன் பாலசந்திரன் மரணித்த புகைப்படம் வெளியானது. காண்போர் நெஞ்சை கலங்க வைக்கும் அந்த புகைப்படம் பிரபாகாரன் செய்த புரட்சியை விட அதிகப்படியன புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணியது. என்ன இருந்தாலும் புலி பெற்ற புலிக்குட்டி அல்லவா அது! அதனால் தான் மரணித்த பின்னும் அந்த பிஞ்சு புரட்சி வெடிக்க வைத்தது எனலாம்!

தமிழகமே கொந்தளித்தது. நடுநிலைவாதிகள், மாணவர்கள், பெண்கள் என எல்லா பிரிவினர்களும் பாலசந்திரன் புகைப்படம் பார்த்து கொதித்தனர்.மார்ச் 5ம் தேதி 2013ல்  டெசோ இயக்கம் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு 12000 பேர் கைதாகினர். நாகை, ரமேஸ்வரம் என டெஸோ அமைப்பு போராட்டங்களை நடத்திக்கொண்டே வந்தது. பாராளுமன்றத்தில் பாலசந்திரன்  மரணத்தை திமுக எம் பி திருச்சி சிவா அவர்கள் "எங்கள் உணர்வை கொட்ட விடுங்கள். அடக்கி வைத்தால் வெடித்து விடும் அபாயமும் விபரீதம் உள்ளது. எனவே இந்த உணர்வை இந்த நாடாளுமன்றத்தில் பதியுங்கள். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழை அல்ல வீரத் தமிழன். பாலச் சந்திரனை துளைத்த குண்டுகள் அவன் முதுகில் பாயவில்லை. மாறாக விழுப்புண்களை, வீரத் தழும்புகளை, துப்பாக்கி ரவைகளை நெஞ்சில் சுமந்தான் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன். இது தமிழர்களுக்கே பெருமை . புறநானூறு கூறும் வீரானாகவே சிறுவன் மடிந்தான். பாலச்சந்திரன் வீரத் தமிழர்களின் அடையாளம் " என முழங்கினார். டெல்லியில் ஒரு கருத்தரங்கம் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதன் பின்னர் டெஸோ சார்பாக தமிழகம் முழுமைக்கும் போராட்டம் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 54000 பேர் சிறை சென்றனர். ஒரே நாளில் 54,000 பேர் சிறை சென்றமை குறித்து இந்தியாவின் பார்வை டெஸோ மீதும் ஈழம் மீதும் படிந்தன. பின்னர் திமுக தன் மத்திய அமைச்சர் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கி கொண்டு வெளியே வந்து விட்டது.

இப்போது இக்கட்டுரையின் முதல் பத்தியை படித்து விட்டு மீண்டும் இங்கே வாருங்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மார்ச் 8ம் தேதி உண்ணவிரத போராட்டம்  தொடங்கினர். சீமான், நெடுமாறன் கும்பல்கள் முதலில் அவர்களை சீண்டவில்லை. பொதுவாக சீமான், நெடுமாறன், வைக்கோ போன்றவர்களின் கும்பல்கள் தங்கள் மட்டுமே ஈழ போராட்ட காப்புரிமை பெற்றவார்களாக கருதிக்கொண்டு டெஸோ போன்ற அமைப்புகள் ஈழத்துக்காக ஏதாவாது  போராட்டம் நடத்தினால் தங்கள் வியாபாரத்தில், அடிமடியில் கைவைத்தது போல அலறித்துடிப்பர். ஆனால் லயோலா கல்லூரி மாணவர்கள்  சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்து பந்தலில் அமர்ந்த போது அவர்களை எதிர்க்க முடியாமல் தவித்து போயினர்.  சரி இவர்கள் ஒரு நாள், இரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டு போய்விடுவர் தங்கள் ஈழ வியாபாரத்துக்கு பின்னடைவு வராது என நினைத்தவர்களுக்கு பேரதிர்வாக லயோலா மாணவர்கள் பற்ற வைத்த போரட்ட தீ தமிழகம் முழுமைக்கும் பரவ தொடங்கியது.

அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாணவர்களை சென்று சந்தித்து வாழ்த்தி விட்டு வந்தனர். இதிலே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு அவர்கள் சென்று சந்தித்து வந்தது தான் நகைச்சுவை நிகழ்ச்சி. மற்றபடி அந்த தங்கபாலு சந்திப்பை தவிர்த்து பார்ப்பின் மற்ற எல்லா விஷயமும் ஒரு சீராக போய்க்கொண்டு இருந்தது.ஒட்டு மொத்த தமிழக மாணவர்களும் உண்ணாவிரதம் மேற்கொள்ள "மாணவர் போராட்டம்" என்னும் கப்பல் ஒரு தெளிவான திசை நோக்கி நன்றாக பயணிக்க தொடங்கியது எனலாம்.

அப்படி சீராக போன பயணத்தில் தடை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 11ம் தேதி நள்ளிரவில் தமிழக அரசின் காவல்துறை புகுந்து மாணவர்களை கைது செய்தும் உண்ணாவிரத பந்தலை மூடி பூட்டு போட்டும் கலைத்தது. முத்துக்குமார் தீக்குளித்து இறந்த போது சவ ஊர்வலம் எடுத்து போகவும் அப்படி ஊர்வலம் போகும் பாதை நெடுக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை இதே சீமான், வைக்கோ, நெடுமாறன் வாகையறாக்கள் கொச்சையாக வசை பாடிக்கொண்டே சென்றதையும் கூட பொருட்படுத்தாமல் பின்னர் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததை வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து கருணாநிதி போரட்டத்தை நசுக்கி விட்டார். விடுமுறை விட்டால் மாணவர்கள் சினிமாவுக்கு போய்விடுவர், தங்கள் வீட்டுக்குள் முடங்கி விடுவர். அதனால் ஈழமே கிடைக்காமல் போய்விடும், அதற்கு காரணம் கருணாநிதி தான் என்றனர். ஆனால் இரவோடு இரவாக மாணவர்களை கைது செய்து பந்தலை பூட்டி விட்ட ஜெயலலிதாவை இந்த வாய்ச்சொல் வீரர்கள் ஒரு குண்டுமணி அளவுக்கேனும் கூட கண்டிக்கவில்லை. மாறாக "காவல்துறை"யை கண்டித்து வைக்கோ தன் வீரத்தை காட்டி விட்டு அமைதியடைந்தார்.

உடனே தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் வெடித்தது. தங்கள் அரசியல் வியாபரம் படுத்து விடும் அபாயத்தை உணர்ந்த சீமான், நெடுமாறன், வைக்கோ வகையறாக்கள் அந்த மாணவர்களிடம் சென்று புகைப்படம் எடுத்து சுவரொட்டி அடித்து தங்கள் வழிகாட்டுதல் பேரில் மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டு இருப்பதாக காட்டிக்கொண்டனர். மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் போது அது பெரும் வரவேற்பை பெற்ற போது அதன் பயன் தங்கள் "அம்மா"வுக்கும் கிடைக்கட்டுமே என்கிற இன உணர்வோடு ஜூனியர் விகடன் அம்மையாரிடம்  ஆலோசிக்காமலேயே "மாணவர் போராட்டமே அம்மையார் ஆசியோடு தான் நடக்கின்றது" என பொய் மூட்டையை அவிழ்த்து விட ஜெயலலிதாவோ கொதித்து போனார். ஜெயா அம்மையாரிடம் இருக்கும் ஒரு குணம் வித்யாசமானது. தான் எதிரி என நினைத்து விட்டால் அந்த எதிரியை சாகும் வரை அடித்து துவைக்கும் ஆங்கார குணம். ஜெயாவுக்கோ புலிகள், ஈழம் என்பது எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. அப்படி பிடிக்காத அந்த ஈழத்துக்காக போராடும் மாணவார்களையே காவல்துறையை வைத்து அடித்து கைது செய்து கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் போராட்டமே தான் சொல்லித்தான் நடப்பதாக அப்படி சொன்னால் அதனால் ஓட்டு விழும் என நினைத்து தன் இன ப்பாசம் காண்பித்த ஜூவி மீதே அவதூறு வழக்கை தொடர்ந்து தன் ஈழ எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்த நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி அவார்கள் "மாணவர் போராட்டம் என்னும் கப்பல் அழகாக இலக்கை நோக்கி பயணம் செய்கின்றது. கப்பலை இலக்கை நோக்கி செலுத்தும் சுக்கான் "கண்டவர்கள் கையில்" போகமல் இருப்பின் வெற்றி நிச்சயம்" என அறிவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மாணவர்களில் சிலர் தங்களுக்கு ஆலோசகர் என்னும் பெயரில் நெடுமாறனை அழைத்து  சுக்கானை நெடுமாறன் கைக்கு கொண்டு சேர்த்தனர். 

அதன் பின்னர் நடந்தது எல்லாமே தவறுகள் தான். என்ன இலக்கு என மாணவர்கள் குழம்பி போயினர். சிலர் தனி ஈழம் என்றனர். சிலர் ராஜபக்ஷேவை தூக்கிலிட வேண்டும் என்றனர், சிலர் சம உரிமை என்றனர். சிலர் மீதி இருக்கும் தமிழர்கள் மறுவாழ்வு தான் இப்போதைக்கு முக்கியம் என்றனர். இப்படியாக  மாணவர் போரட்ட சக்தி விழலுக்கு இறைத்த நீராக வீணாக போனது.

தவிர அதுவரை தங்களை வருத்தி கொண்டு உண்ணவிரதம் இருந்த மாணவர்கள் திருச்சியில் காங்கிரசார் நடத்திய உள்ளரங்கு கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களை அடித்தும் உடைத்தும் என அராஜகம் செய்து பொது மக்களிடம் அசிங்கப்பட்டனர். மாணவர்களை அந்த ரவுடியிசத்துக்கு கொண்டு தள்ளிய ஆலோசகர் யார்???? இப்போது புரிகின்றதா? நெடுமாறன் கும்பல்கள் ஒரு சில மாணவர்களை வைத்துக்கொண்டு அவர்களின் உண்மையான போரட்டத்தை திசை திருப்பி தங்கள் அரசியல் வாழ்வுக்கும், வெளிநாட்டு பணத்துக்கும் ஆசைப்பட்டு மாணவர்கள் அது வரை  போராடி கொண்டு வந்த வெற்றியை சிதைத்தனர். இதன் நடுவே கல்லூரிகளுக்கும் கால வரையறை இல்லா விடுமுறையும் அளிக்கப்பட்டது அதிமுகவின் மெஜாரிட்டி அரசால். மாணவர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தேர்வு நடக்குமா, தேர்வுக்கு முன்னர் பாடம் பாழாய் போனதே என்றெல்லாம் நினைத்து போராட்டத்துக்கு எதிராக திரும்பினர்.

போராட்டம் பிசிபிசுத்தது. தன் இலக்கில் வெற்றியை காணாமலே நெடுமாறன் கும்பல் செய்த சுயநல அரசியலால் ஒரு முடிவுக்கே வந்து விட்டது. அதற்கு கூட "கருணாநிதி தான் காரணம்" என வரதராசனின் குமுதம் ரிப்போர்டர் கூவி தீர்த்தது. போராட்டம் சிதந்தமைக்கு கருணாநிதிக்கு கொண்டாட்டம் என தலைப்பிட்டு தன் நடுநிலை காத்தது.

இந்த மாதிரி சிலரை சில சமயம் ஏமாற்றலாம் ரிப்போர்டர் வகையறாக்கள். அனால் எல்லா நிகழ்வுகளையும் பார்த்து கொண்டும் படித்து கொண்டும் இருக்கும் மாணவர்களை இந்த "பொய் மூட்டை" கும்பல்கள் எதும் செய்ய முடியவில்லை என்பதே உண்மையாகிப்போனது.

இந்த மாணவர்கள் போராட்டத்தின் "விதை" எந்த லயோலா கல்லூரியில் விதைக்கப்பட்டதோ அதே கல்லூரி மாணவர்கள் சிந்திக்க தொடங்கினர். தங்கள் போராட்டம் திசை திருப்பி ரவுடித்தனமாக மாறியதை அவர்கள் ரசிக்கவில்லை. அதிமுகவின் மெஜாரிட்டி அரசு செய்த துரோகத்தையும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டனர். உண்மையாக ஈழத்தமிழர் விஷயத்தில் போராட இருக்கும் ஒரே அமைப்பு இப்போதைக்கு "டெஸோ" என்பதை உணர்ந்தனர். அதன் காரணமாகவே கடந்த 11.4.2013 அன்று அதே லயோலா கல்லூரியை சேர்ந்த 250 மாணவர்களும் விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்களும் திமுக மாணவர் அணி செயலாளர் திரு. கடலூர் புகழேந்தி அவர்களை சந்தித்து  மாணவர் திமுக அணியில் தங்களை இணைத்துக்கொண்டு ஈழப்போராட்டாத்தை மீண்டும் தொடங்குவதாக கூறினர். அதிஷ்டவசமாக அன்று சென்னையில் திரு கடலூர் புகழேந்தி அவ்ர்கள் இருந்தமையால் உடனே அறிவாலயத்தில் இருந்த திமுக பொருளாளர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு செய்தியை சொல்ல அவரும் "உடனே அறிவாலயத்துக்கு அழைத்து வாருங்கள்" என சொல்ல மாணவர்கள் அறிவாலயம் வந்தனர்.

முதலில் கலைஞர் அரங்கத்தில்....


கூட்டம் அதிகமாக இருக்கின்றதே என ஆலோசனை மாநில செயலரும் - துணை செயலரும்


வந்த கூட்டம் அதிகமாக இருந்ததை கண்ட அறிவாலய ஊழியர்கள் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சொல்ல அவரோ "அப்படியெனில் மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்லுங்கள். நான் வந்து விடுகிறேன்" என திரு.புகழேந்தி அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க திரு. புகழேந்தி அவர்கள் மாநில மாணவர் அணி துணை செயலர் திரு பூவை ஜெரால்டு அவர்களை அழைத்து கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை கொடுக்க திரு பூவை ஜெரால்டு அந்த மாணவர்களை கலைஞர் திருமண மண்டபத்துக்கு அழைத்து செல்ல.... மேலும் மேலும் மாணவர்கள் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் வர தொடங்க  விஷயத்தை திரு.பூவை ஜெரல்டு அவர்கள் மற்றும் தென்சென்னை திமுக மாணவர் அணி அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் மற்றும் சைதை பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் ஆகியோர் கூட்டம் அதிகமாக இருப்பதால்  என்ன செய்வது என மாநில அமைப்பாளர் திரு.புகழேந்தி அவர்களிடம் கேட்க அவர் மீண்டும் கழக பொருளாளரிடம் சென்று விஷயத்தை சொல்லி "அன்பகத்தில் அண்ணா மன்றத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அதிலே நீங்கள் உரையாற்றி அவர்கள் இணைந்தால் சரியென என் மனதிற்கு படுகின்றது" என சொன்னார்.

அறிவாலயம் - கலைஞர் திருமண மண்டபத்தில் இருந்து அன்பகம் நோக்கி ...


திமுக பொருளாளர் தான் கட்சியின் கடைக்கோடி தொண்டனின் உணர்வுக்கு கூட மதிப்பளித்து செயல்படுபவர் ஆயிற்றே. ஒரு மாநில மாணவர் அணி  செயலர் பேச்சுக்கு மறுதளிக்கவா போகின்றார். அவர் உடனே சம்மதம் தெரிவிக்க அந்த அத்தனை மாணவர்களும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அறிவாலயத்துக்கு எதிர்பக்கம் சிறிது தூரத்தில் இருக்கும் திமுக இளைஞர் அணி அமைப்பின் சொந்த கட்டிடமான "அன்பகம்" நோக்கி கடலூர் இள.புகழேந்தி அவர்கள் தலைமையில் , துணை செயலர் திரு.பூவை ஜெரால்டு மற்றும் தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு.சீனிவாசன் ஆகியோர் மற்றும் லயோலா மாணவர் திரு.லெஷ்மணன் ஆகியோர் முன்னிலையில் பேரணியாக புறப்பட்டு அண்ணா சாலையில் அறிவிக்கப்படாத பேரணியாக புறப்பட்டனர்.
அண்ணா சாலையில் அறிவிக்கப்படாத பேரணியாக மாணவர் அணி செயலர் தலைமையில்


அண்ணா சாலை நடுவே பேரணியாக மாணவர் அணியினர்...


அன்பகம் கண்ணகி சிலை தாண்டி உள்ளே வருகை!

கடும் வெய்யிலில் பேரணி முடிவில் அன்பகம் வந்தடையும் மாணவரணி


அன்பகத்தில் அவ்ர்கள் சென்று சேர்ந்த பின்னர் அங்கே திமுகவின் பொருளாளர் மற்றும் திமுக இளைஞர் அணி அமைப்பாளருமகிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர், முன்னாள் மேயர் திரு. மா. சுப்ரமணியன் ஆகியோர்  திமுக மாணவர் அணியின் சீருடையான வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் சகிதம் வந்தனர்.

மாநில மாணவர் அணி செயலரின் முழக்கம்


திமுகவில் இளைஞர் அணியும் மாணவர் அணியும் ஒன்றே தான் , வேறு வேறு அல்ல என சொல்லாமல் சொல்வது போல இருந்தது அந்த காட்சி. அதன் பின்னர் திரு.இள. புகழேந்தி மற்றும் திரு. முக.ஸ்டலின் ஆகியோர் சிறப்புரை வழங்க பின்னர் லயோலா மாணவர்கள் சார்பாக திரு லெஷ்மணன் அவர்கள் பேசினார்கள்.
மாணவர்களிடம் எழுச்சி பேருரையாற்றும் தளபதி அவர்கள்


திமுக பொருளாளர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 28 நிமிடம் பேசினார்கள். அவர்கள் பேச்சில் மாணவர்கள் போராட்டம் அந்த காலத்தில் இந்தி திணிப்பின் போது எப்படி செயல்பட்டது, அதை ஒருங்கினைத்த திமுக தலைவ்ர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் வெளியே இருந்த மாணவர்கள் எப்படி போரட்டத்தை "உள்ளே" இருந்தவர்கள் வழிகாட்டுதலில் நகர்த்தி கொண்டு சென்றனர். எப்படி வெற்றி பெற்றனர் என்பதை எல்லாம் சொல்லி இப்போது எப்படி செயல்பட வேண்டும் என அழகாய் சொல்லி முடித்தார். அதைப்போல மாணவர் திமுகவின் செயலர் அவர்களும் போரட்ட வியூகங்கள் எப்படி அமைய வேண்டும் என பாடம் எடுத்தார். மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதி. தங்கள் போராட்ட சக்தி இது வரை வீணாக விழலுக்கு செலுத்திய நீராக போனது பற்றி கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தாலும் இனி தங்கள் சக்தி முழுவதும் இலக்கை நோக்கி போகும் என்ற பெருமை அவர்கள் முகத்தில் தெரிந்தது.

போராட்ட வியூகம் கற்றுத்தரும் மாணவர் அணி செயலர் திரு. இள.புகழேந்தி


லயோலா கல்லூரி வரலாற்றில் இதுவரை நடந்த மாணவர் பேரவை தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற பேரவை செயலர், துணை செயலர் ஆகியோரும் வந்திருந்து "மாணவர் திமுக" வில் தங்களை இணைத்துக்கொண்டமை மிகச்சிறப்பான ஒரு தொடக்கம். மாணவர் திரு. லெஷ்மண் பேசி முடித்த பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் நிதி வசூலித்து உடனடியாக ரூபாய் 25,000 நிதியை திமுக பொருளாளர் வசம் தங்கள் கல்லூரி மாணவர்கள் சார்பாக குறிப்பாக "லயோலா கல்லூரி மாணவர் திமுக" சார்பாக வழங்கினார்.
தேர்தல் நிதி வழங்கும் லயோலா மாணவர் லெஷ்மணன் - தளபதி மற்றும் இள.புகழேந்தி அவர்களுடன்...


இந்த நிகழ்வானது திமுகவின் வரலாற்றில் குறிப்பாக சார்பு அணி "மாணவர் திமுக" வுக்கும் அதன் துடிப்பு மிக்க மாநில செயலர்  இன உணர்வாளர் திரு.கடலூர் இள. புகழேந்தி அவர்களின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்றால் மிகையில்லை. அவர் மனதை அறிந்து அதை செயல்படுத்தும் மாணவர் திமுகவின் மாநில துணைசெயலர் திரு.பூவை ஜெரால்டு அவர்கள் மற்றும் அன்று அந்த நிகழ்சி செவ்வனே நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு.மு. சீனிவாசன் மற்றும் சைதை துணை அமைப்பாளர் திரு.கு.கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவரும் திமுக பொருளாளரால் பாராட்டப்பட்டனர்.
மாணவர்களோடு மாணவர்களாக சீருடையில் தளபதியும் மாநில மாணவர் அணி செயலரும்


இந்த நிகழ்சியின் வெற்றி என்பது அன்று எவருக்கும்தெரியவில்லை. அதற்கு அடுத்த நாள் எந்த ஒரு அச்சு ஊடகத்திலும், தொலைக்காட்சி ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை என்கிற போது தான் இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி என்பது நடுநிலையாளர்களுக்கு புரிந்தது. ஏனனில் இப்போது ஊடகங்கள் தான் அதிமுக மெஜாரிட்டி அரசின் "விளம்பரங்களுக்கு" மயங்கி கிடக்கும் நிலையில் தன்னிலை மறந்து கிடக்கின்றதே:-( இல்லாவிடில் குண்டர்கள் தாக்குவர், அதுவும் இல்லாவிடில் பல ஊடகங்கள் அதிமுக மெஜாரிட்டி அரசின் மீதான இனப்பாசம் கொண்டவை. ஆகவே திமுக சம்மந்தமாக எவ்வித நல்ல செய்திகளும் வெளிவராமல் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர்.எனவே இச்செய்தி வெளிவரவில்லை என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

ஆனால் "தட்ஸ் தமிழ்" என்னும் இணைய ஊடகம் மட்டும் ஜான் பிரிட்டோ என்னும் லயோலா மாணவரை பேட்டி கண்டு தன் "நடுநிலை"யை நிலைநாட்டிக்கொண்டது. அதாவது 7000 பேர் படிக்கும் லயோலவில் 300 பேர் டெசோ வை ஆதரித்து மாணவர் திமுகவில் சேர்ந்தமை ஒரு பெரிய விஷயம் இல்லியாம். அவர்கள் இருக்கும் பத்து பேர் கொண்ட கும்பலே பெரியதாம். அதை படித்தவர்கள் சிரித்தனர். ஒரு நகைச்சுவை காட்சியில் செந்திலும்,கவுண்டமணியும் பேசும் வசனம் போல "அண்ணே நான் எட்டாவது பாஸ் அண்ணே, நீங்க பத்தாவது பெயிலு அண்ணே, பாஸ் பெரிசா , பெயிலு பெரிசா" என கேட்ப்து போல இருக்கின்றது.

மாநில மாணவர் அணி  துணை செயலர் திரு. பூவை ஜெரால்டு அவர்களிடம் இது பற்றி கேட்ட போது "போகட்டும் அவர்கள் உணர்வையும் மதிக்கிறோம். நாங்கள் எங்கள் வழியில் டெஸோ அமைப்பு மற்றும் தலைவர் கலைஞர்  காட்டும் வழிகாட்டுதலில், தளபதி அவர்கள் உத்தரவுப்படி,கடலூர் திரு.புகழேந்தி அண்ணன் அவர்கள் தலைமையில் ஒரு சரியான இலக்கை நோக்கி போராடுவோம். இன்று 300 பேர் அந்த கல்லூரியில் இருந்து. நாளை 3000 பேராகும். தமிழகம் முழுமைக்கும் மாணவர் திமுக இது போல ஒருங்கிணைப்பு பணியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மாணவர்களின் படிப்புக்கும் பங்கம் வராமல், பொதுமக்களுக்கும் தொல்லை வராமல், பெற்றோர்களுக்கும் கோபம் வராமல் ஆனால் அதே நேரம் மாணவர்கள் சக்தியை ஒரே நேர்கோட்டில் சிந்தாமல் சிதறாமல் செலுத்தி போராட்டத்தில் வெற்றி அடைவோம். 7000 பேர் படிக்கும் கல்லூரியில் 300 பேர் சேர்ந்தனர் என்பது எத்தனை சதவீத கணக்கு என்றும் அதே 7000 பேரில் பத்து மாணவர்கள் என்பது எத்தனை சதம் என்பதும் படித்தவர்களுக்கு புரியும். எங்கள் இலக்கு அதை எல்லாம் விளக்கி கொண்டு இருப்பது இல்லை. எங்கள் இலக்கு ஈழ போரட்ட்த்தில் வெற்றி என்பதே. டெசோ வின் போராட்டங்களில் இனி மாணவர் திமுகவின் பங்கு மிக முக்கியமாக இருக்கும் வரும் காலகட்டங்களில். தவிர லயோலாவில் 7000 பேர் என்பதே கூட தவரான கருத்தென நினைக்கிறேன். அதிக பட்சம் அங்கே 2500 மாணவர்கள் என்றே நினைக்கிறேன். நல்ல வேளை, 250 பேர் லயோலாவில் இருந்தும் மற்றும் விவேகனந்தா கல்லூரியில் இருந்து 50 பேர் என ஒத்துக்கொண்டமைக்கு ஜன்பிரிட்டோவுக்கு நன்றி.. மாணவர் திமுக சேர்க்கை விதிப்படி அன்று அவர்களிடம் வாங்கிய கல்லூரி அட்டை என்னிடம் உள்ளது. வேண்டுமாயின் அந்த புகைப்படம் அனுப்புகிறேன்" என்று முடித்துக்கொண்டார்.
300 மாணவர்களில் 10 பேரில் கல்லூரி அடையாள அட்டை புகைப்படம்


வெல்க மாணவர் திமுக போராட்டம்!

புகைப்படங்கள் தந்து உதவிய , திமுக நிகழ்ச்சிகளை இணையவழியே இது வரை 50000 புகைப்படங்கள் பகிர்ந்த சாதனையாளர் திரு. ஜெயின்கூபீ அவர்களுக்கு நன்றிகள்!

April 5, 2013

என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்!!!


நேற்று மாலை கடைத்தெருவுக்கு போய்விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது எங்கள் தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளி வாசலில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கே.ராஜேந்திரன் சாரும், கூடவே குலசேகரன் சாரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் நானும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவர்களோடு பேச்சில் நுழைந்து கொண்டேன். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுமார் 65 வயதுடைய  அம்மையார் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் பள்ளி அருகே வரும் போது தன் செருப்பை கழட்டி விட்டு பள்ளியை நோக்கி ஆத்மார்த்தமாக கும்பிட நான் "சார் அங்க பாருங்க. நம்ம ஸ்கூலை கும்பிட்டு கிட்டு இருக்காங்க. அவங்களை பார்த்தா நம்ம ஸ்கூல் கஸ்தூரி டீச்சருக்கு வயசான மாதிரியே இருக்குல்ல சார்" என்றேன். அதைப்பார்த்த கே ஆர் சார் "அடப்பாவி, அவங்க நம்ம கஸ்தூரி டீச்சரே தான், கூப்பிடு கூப்பிடு அவங்கலை" என சொன்னதும் நான் ஓடிப்போய் கூப்பிட்டேன்.

என்னைப்பொருத்த வரை கஸ்தூரி டீச்சர் என்பவர் முகத்தில் மனோரமா மாதிரி ஒரு கருப்பு பருவுடன், கையில் பிரம்புடன், கருத்த தலை முடியுடன், கண்டிப்பான முகத்துடன் இருக்கும் பி.ஈ.டி டீச்சர். மாணவிகளுக்கான ரிங் பால், கோகோ எல்லாம் சொல்லிகொடுக்கும் டீச்சர். என் மனதில் அது மட்டுமே பதிந்து இருந்தது. இப்போது இத்தனை வயதானவங்கலா அவங்களை நினைத்து பார்க்க கூட இல்லை. காலம் எத்தனை வேகமாக ஓடுது!

நான் அழைத்ததும் கிட்டே வந்தாங்க. அங்கே கே ஆர் சாரையும் பார்த்ததில் அவங்களுக்கு இன்னும் மகிழ்வு. சென்னையில் பொண்ணு வீட்டில் செட்டில் ஆகிட்டாங்க. அவங்க கணவர் (அவரும் ஆசிரியர் தான் ..ஆனால் முனிசிபல் பள்ளியில்) 3 வருடங்கள் முன்பாக இறந்து விட்டார்கள் என்பதால் சென்னையில் தன் மகளுடன் போய் தங்கிவிட்டாங்க கஸ்தூரி டீச்சர்.
கே ஆர் சாரும் நானும் அவங்க கிட்ட ஷேமலாபங்கள் எல்லாம் விசாரித்து பின்னர் "எங்க டீச்சர் நடந்து போறீங்க" என கேட்க "வடக்கு மடவிளாகத்திலே ராமூர்த்தி சார் வீட்டுக்கு போறேன். வருஷம் ஒரு தபா ட்ரஷரிக்கு வந்து எங்கள் 'இருப்பை' உறுதி செஞ்சா தானே பென்ஷன் வரும். அதனால வந்தேன். ஆனந்த வல்லி டீச்சரும் இன்னிக்கு வந்திருக்காங்க. அவங்களும் நானும் இன்னிக்கு ராமூர்த்தி சார் வீட்டிலே தங்கிட்டு நாளை ட்ரஷரி போய்விட்டு சென்னைக்கு போகனும்" என்றார்கள். தனக்கு அரை மணி முன்பாக ஆனந்த வல்லி டீச்சர் மாயவரம் வந்து விட்டதாகவும், அனேகமா ராமூர்த்தி சார் வீட்டுக்கு நடந்து போய் கொண்டு இருக்கலாம் எனவும் சொன்னாங்க.

இங்கே ஆனந்த வல்லி டீச்சர் பத்தி சொல்லனும். அந்த காலத்து "அன்பேவா" சரோஜாதேவி மாதிரி இருப்பாங்க. சின்னதா கோஸ் மூக்குத்தி, பன் கொண்டை, பட்டுப்புடவை நீண்ட கை வைத்த புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட், அதே சரோஜாதேவி பாணியிலே "ஷெர்ஷா ஆப்கானிஸ்தால ஆரம்பிச்சு ஆண்டிப்பட்டி வரை ரோடு போட்டான் தெரியுமோ" என சொல்லி அந்த கதையை சொல்லும் போது நமக்கே காலில் தார் ஒட்டின மாதிரி ஒரு ஃபீலிங் வரும். வரலாற்று பாடத்தின் உள்ளே அழைத்து போய்விடுவார்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டும் பள்ளி வாசலுக்கே  வந்து, பின்னர் நான் கஸ்தூரி டீச்சரிடம் "வாங்க டீச்சர் என் வண்டில போகலாம், நானும் சார் வீட்டு வழியாத்தான் போறேன்" என சொல்லி டீச்சரை அழைத்து கொண்டு கே ஆர் சாரிடம் விடைபெற்று வந்தோம்.

வண்டியில் வரும் போது "கொழந்தே எப்படி இருக்காய்?" என் கேட்டாங்க மீண்டும். ஒரு 45 வயசு தடிமாட்டை கொழந்தே என கூப்பிடும் நபர்கள் அம்மா அப்பா வாக இருக்கலாம். அல்லது ஆசிரியர்கள் மட்டுமே. என்ன ஒரு கொடுப்பினை! "சார் தவறின பின்னே நேக்கு மாயவரம் அத்தனை பிடித்தமா இல்லை. அதான் பொண்ணு ஆத்துல போய் ஐக்கியமாகிட்டேன். அங்க போனா மாயவரம் ரங்கநாதரும், அவயாம்பாவும் 'இங்க வா இங்க வா"ன்னு கூப்பிடுற மாரியே இருக்கு. என்னால சதர்ன் ரயில்வேகாரன் தான் செழிக்கறான்" என பேசிக்கொண்டே வந்தார்கள்.

ராமூர்த்தி சார் வீட்டுக்கு சற்று முன்னரே ஆனந்தவல்லி டீச்சர் நடந்து போய்க்கொண்டு இருந்ததை பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினேன். நான் அவங்களை பார்த்து எத்தனை வருடம் இருக்கும் என கணக்கு மனதில் ஓடியது. என் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு வரலாறு புவியியல் தேர்வு எழுதிவிட்டு வெளியே முதல் ஆளாக வந்த என்னை ஓடிவந்து "கொஸ்டின் பேப்பரை கொடுடா, ஏன் முன்னக்கவே வந்துட்ட, ரொம்ப கஷ்டமோ, நல்லா எழுதினாயோ, எத்தினி வரும், பாலிடெக்னிக் கிடைச்சுடுமோ" என ஏகப்பட்ட கேள்விகளோடு பார்த்தது தான் கடைசியாக அவர்களை பார்த்தது. அந்த சம்பவம் நடந்தது 1980. அதவது 33 வருடம் முன்பாக!

டீச்சர் இப்போதும் அதே மாதிரி ஆனாக்க  வயசானவங்கலா இருந்தாங்க. என்னை பார்த்ததும் "அடடே கஸ்தூரி... படீர்ன்னு நான் தொல்காப்பியனின் அப்பா தான் உன்னை அழைச்சிண்டு வராரோன்னு நினைச்சுட்டேன். நான் பார்த்த இக்கினூண்டு வாண்டு  இப்ப இத்தன வளர்த்தி. என்னடா கொழந்த காதோரம் எல்லாம் நரை விழுந்துடுச்சு. ஆகா என்னா குறும்பு அப்போ. இப்போவும் அப்படித்தானா? ஆம்படையாள் உன் குறும்பை எல்லாம் சகிச்சுக்கறாளா? ஆமா கல்யாணம் ஆகிடுத்தோல்யோ? குழந்தைகள் எத்தனை? என்ன பண்றா அவா? ....ஆனந்த வல்லி டீச்சரின் குணமே அதான். அவங்க தான் தொடர்ந்து கேள்வி கேட்பாங்க.. நம்ம பதிலை எப்போதும் எதிர்பார்ப்பதே இல்லை. "நேரு மாமா ஒரு அஞ்சு கொள்கை கொண்டு வந்தாரே அது பேர் என்னான்னு சொல்லுங்கோ... தொல்காப்பியா நீ சொல்லு...(நான் எழுந்திருக்கும் போதே ..பதில் சொல்ல அல்ல...தெரியாதுன்னு சொல்ல) அதாவது அதுக்கு பஞ்சசீல கொள்கைன்னு பேர். இத நீங்க எப்படி ஈசியா மனசிலே வச்சுப்பேள்??? நம்ம க்ளஸ் பதஞ்சலி தியாகராஜன் இருக்கானோனோ அவன் பேரை ஓர்ம வச்சுண்டா போறும்... பஞ்சசீலக்கொள்கை மனசிலே வந்துடும். இது முக்கிய கொஸ்டின், எழுதி வச்சுகோங்கோ வர்லைன்னா "ஏண்டி ஆனந்த வல்லி வர்லைன்னு முச்சந்தில வச்சு கேளுங்கோ என்னை, ஒக்காருடா கொழந்தே... அடுத்த கேள்வி ஆஸ்ட்ரியா நாடு இருக்கோல்யோ அது செர்பியா மேல போர் தொடுத்தா...தொடுக்கலை அதுக்கும் முன்ன போர்பிரகடனம் செஞ்சா, அது எந்த வருஷம் நடந்துச்சு, அதுக்கு பதில் நீ சொல்லுடா கொழந்தே என ராதாவை எழுப்பி நிக்க வச்சுட்டு டீச்சரே "அது ஜுன் 28  ம் தேதி 1914ம் ஆண்டு நடந்துச்சு. இதை எப்படி ஞாபகம் வச்சுப்பேள்??? அதாவது நம்ம க்ளஸ்ல எல்லாரும் என்ன டேட் ஆஃப் பர்த்... ஜூன் 27 தானே. அதுக்கும் அடுத்த நாள் தான் இது நடந்துச்சு. ராமன் எத்தனை வருஷம் காட்டுக்கு போனான் 14 வருஷம்... அதையும் இதையும் முடிச்சு போட்டுகோங்கோ, உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க கொழந்தேல்லாம் பப்ளிக் எழுதும் காலம் வரைக்கும் மறக்காது கேட்டேளா" . இதான் ஆனந்தவல்லி டீச்சர். அவங்க மட்டுமே கேள்வி கேட்பாங்க. பதிலும் அவங்களே சொல்லிடுவாங்க.

நான் டீச்சரிடம் "ஆமா டீச்சர், வயசாயிடுச்சுல்ல... நான் கடைசியா உங்களை என் வரலாறு புவியியல் பப்ளிக் எக்சாம் அன்னிக்கு பார்த்தது தான். இப்போ என் பொண்ணுக்கு அதே பப்ளிக் எக்சாம் நடக்குது. ஆனந்தவல்லி டீச்சர்  உடனே  "ஓ மை காட்! ஒன் பொண்ணு டென்த்தா? இங்லீஷ் மீடியம் தானே. அப்படின்னா ஒரு கேள்வி... ரொம்ப முக்கியம். வர்லைன்னா ஏண்டி வர்லை ஆனந்தவல்லின்னு என்னை முச்சந்தில வச்சு கேளு" என சொன்னாங்க.  டீச்சர் கொஞ்சம்  மாறலை. இந்த கேள்வி வந்துச்சா வரலையான்னு என் பொண்ணை முதலில் கேட்கவே பயமாய் இருக்கும் எனக்கு. ஒரு வேளை அது வரலைன்னா நான் ஆனந்த வல்லி டீச்சரை எங்க தேடிகிட்டு போய் பின்ன முச்சந்தி தேடி அழைச்சுட்டு வந்து நிக்க வச்சு கேட்கனும்.. இதல்லாம் நடக்கும் காரியமா?
அடுத்து டீச்சர் "during the great revolt of 1857 the governor general of india was ... " என கேட்டுவிட்டு என்னைப்பார்த்து "who??? சொல்லு நீனு " என சொல்ல நான் "டீச்சர் இது ஹிஸ்ட்ரியா, ஜியாகரபியா?" என்றேன்....அதுக்கு டீச்சர் "ஓ மை மாயூரநாதா, ஒனக்கு பேசிக்ல இருந்து ஆரம்பிக்கனும் போலிருக்கே... ஓக்கே நான் ஒன் பொண்ணு கிட்டே இந்த கேள்வியை சொன்னேன், முக்கிய கொஸ்டின்னு சொன்னேன்னு சொல்லு என சொல்ல நான் அதற்கு "டீச்சர், அப்படியே அந்த கேள்விக்கான பதிலையும் சொல்லிடுங்க டீச்சர்" என்றேன். உடனே டீச்சர் " lord canning" ன்னு சொன்னாங்க. நான் உடனே "அதில்லை டீச்சர். வரலாறு புவியியல் எல்லாம் பெயர் மாறி சோசியல் சயின்ஸ்னு ஆகிப்போச்சு... அதான் எனக்கு டக்குன்னு பதில் தெரியலை.எல்லாம் மாறிப்போச்சுல்ல " என வழிந்தேன் வழக்கம் போல!

உடனே டீச்சர் "ஆ மா எல்லாம் மாறிப்போச்சுது. எல்லாருக்கும் வயசாகிப்போச்சுது. இராமபத்ரன் சாரை அரங்கன் கூட்டிண்டான், எம் கே சார் போயாச்சு, இத்தோ ஒரு வாரம் முன்ன எல் கே கணேசன் சார் போயாச்சு, ஒரே குடும்பமா ஒரே பள்ளிக்கூடத்திலே எத்தினி வருஷம் எத்தினி வருஷம் இருந்தோம்... அந்த காலம் வருமா? எங்க கிட்டே படிச்ச குழந்தைகளை எப்பவாவது நல்ல நிலையிலே பார்க்கும் போது ... வாங்கின காசுக்கு நல்லா வளர்த்தோமடா மயூரநாதான்னு கன்னத்திலே போட்டுக்க தோணும். நல்லா இருக்கனும் கொழந்தேகளா நீங்கல்லாம்" என சொல்லி தன் முந்தானையால் கண்ணை துடைக்க நான் நிலமையின் இறுக்கம் தவிர்க்க "டீச்சர் நான் முன்ன சொல்லுவனே உங்களை சரோஜாதேவி மாதிரின்னு இப்பவும் நீங்க சரோஜாதேவி மாதிரி தான் இருக்கீங்க. ஆனா என்னா ஒன்னு ஆதவன் படத்திலே வரும் சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க" என சொல்ல அந்த இடமே நடுரோடு என்று கூட பார்க்காம சிரித்தோம் மூவரும்.

அடடே! இந்த சிரிப்பு, ஆனந்தம் என் ஆசிரியர்களுக்கு என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்கு வந்தேன்.