பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 1, 2014

அரை மணி நேரத்தில் "உலக கோப்பை கால்பந்து வெறியன்" ஆவது எப்படி?தேர்தலும் முடிந்து விட்டது. ஐ பி  எல் இன்றோடு முடிந்து விட்டது. இனி இணையத்தில் மொக்கை போடுவோர் சங்கம் என்ன ஆவது? அய்யகோ.. அப்படி ஒரு நிலையினை எப்படி இணையம் எதிர்கொள்ள போகின்றது என்ற மாபெரும் கவலையில் கன்னத்தில் கை வைத்து உட்காந்து இருக்கும் இணைய பொங்கல் வைப்போர்களுக்கான பிரத்யேகமான பயிற்சி வகுப்பு இது. இதோ இன்னும் பத்து நாளில் உலக கால்பந்து போட்டி  நடக்க இருக்கின்றது. வாருங்கள்.. அங்கே போவோம். என்னது கால்பந்து பத்தி எதுவும் தெரியாதா?? அப்படியானால் உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் கிளாஸ்.  கிரிக்கெட் தெரிந்த அளவு நமக்கு கால்பந்து தெரியாவிட்டாலும் நாமும் ஜோதியில் ஐக்கியம் ஆக வேண்டாமா? வாங்க வகுப்புக்கு போவோம்!


முதலில் உங்களுக்கு என்று ஒரு கால்பந்து கடவுளை தெர்ந்தெடுத்துக்கொள்ள வெண்டும். கிரிக்கெட் எனில் "சச்சின்" கடவுள் என்பது போல கால்பந்துக்கு "பீலே" தான் கடவுள் என பலரும் கொண்டாடி வருகின்றனர். உடனே நீங்களும் "பீலெ" வை கொண்டாடிவிடாதீர்கள். பின்னர்  நீங்கள் பத்தோடு பதினொன்று ஆகிவிடும் அபாயம் உள்ளது. பீலே விளையாடிய காலத்தில் விளையாடிய வேறு ஏதாவது பெயர் தெரிவு செய்து கொள்ளவும். உடனெ கார்த்திகை நிலவன், சரவண குமார் போன்ற பெயர்கள் வேண்டாம். ஃபாரின் பெயராய் இருப்பது உத்தமம். உதாரணத்துக்கு "புரூனோ மார்க்கஸிண்டஸ்"... இது எப்படி அக்மார்க் ஃபாரின் பெயராய் இருக்குதா... ஓக்கே.... அதுக்காக ராயபுரம் பீட்டர் வேண்டாம். பின்னே கோர்டுக்கு எல்லாம் அலைய வேண்டி இருக்கும். சரி.... புரூனோ மார்க்கஸிண்டஸ் அடிச்ச கோல் சுமார் 400 என பீலா விடுங்கள். அதுவும் ஒரே கேம்ல அடிச்சார்ன்னு சொல்லுங்க.கிரிக்கெட்  லாரா ரசிகர்கள் கூட வாயடைச்சு போவான்... முதல் அடியே மரண அடியாக இருக்க வேண்டும்.


அடுத்து ஒரு முக்கியமான "தியரம்" இருக்கு. அந்த தியரத்துக்கு என்ன பெயர் என பின்னர் சொல்கிறென். முதலில் தியரம் என்னவென்று பார்போம். இப்போ உலக கோப்பை கால்பந்துன்னு எடுத்து கிட்டா உடனெ அர்ஜண்டைனா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரேசில்,இத்தாலி  இவைகள் தான் ஜெயிச்சுகிட்டு வருது.... இந்த முறையும் அவைகளே ஜெயிக்கும் என பல பேர் இணையத்தில் எழுதுவாங்க. நீங்க அங்க தான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு நாட்டை சொல்லி அது தான் ஜெயிக்கும்ன்னு ஒரே பிடிவாதமாக விவாதம் செய்யவும். உடனே இந்தியா, இலங்கை, பங்களாதேன், நேப்பால்ன்னு உளற கூடாது. இன்னும் எட்டி ...இன்னும் எட்டி ....தூரதேசமா உங்க சிந்தனை போகனும். நம்ம ஊர்ல ஓட்டை போட்டா மெக்சிகோவுக்கு போகுமே அத்ததண்டி தூரமா மெக்ஸிகோ, உருகுவேன்னு எதுனா ஒரு நாட்டை எடுத்துக்கனும். உருகுவே தான் ஜெயிக்கும் என பந்தயம் கட்டுங்க. பந்தயப்பணம் கூட இந்திய ரூபாயில் கட்ட கூடாது. படீர்ன்னு 1000 இத்தாலியன் லிராஸ்ன்னு கட்டுங்க. எதிராளி பேதியாகிடுவான். (நீங்க பேதி ஆகிடாதீங்க. 1000 இத்தாலிய லிராஸ் என்பது இந்திய ரூபாய்க்கு சுமார் 200 , 300 ரூபாய் தான் ஆகும்... இல்லாட்டி ஈரான் கரன்சில கட்டுங்க, அது இன்னும் நல்லது - பாக்கெட்டுக்கு)உடனே நீங்கள் கேட்கலாம். அது ஏன் உருகுவேயை தேர்ந்தெடுத்தீங்கன்னு. காரணம் இருக்கு. இந்த தியரம் பேரே "தமிழருவி மணியன் தியரம்" தான். வெளங்காத எதுனா கட்சியை எல்லாம் கூட்டணி சேர்த்து இதான் ஆச்சியை பிடிக்கும், அத்தாச்சியை பிடிக்கும்னு சொன்னா நானூறு பேர் கழுவி ஊத்தினாலும்  நாலு பேரு டிவி விவாதத்துக்கு கூப்பிடுவான்.  எக்குதப்பா ஜெய்ச்சுதுன்னா "நேக்கு கவர்னர் போஸ்ட்ன்னா ரொம்ப அலர்ஜியாக்கும்"ன்னு பேட்டி குடுக்கலாம். எனவே தான் இந்த தியரத்துக்கு பெயர் "தமிழருவி மணியன் தியரம்". இப்ப புரியுதா? சரி உருகுவே தான் ஜெயிக்கும் என முடிவு செஞ்ச பின்னே அந்த நாட்டிலே விளையாடும் எதுனா ஒரு ப்ளேயரை தேர்ந்தெடுத்துக்கனும். சரி இருங்க தேடி எடுப்போம்......எடுத்தாச்சு. பயபுள்ள பேரு லூயி சுவாரேஸ். ரொம்ப தேடவில்லை நான். கேப்டனையே எடுத்துகிட்டேன். கேப்டனாக இருப்பவன் எப்படியும் நல்லா ஆடித்தான் தொலைப்பான். முதல் வேலையா ஜூன் 12ம் தேதி முதல் நடக்க இருக்கும் போட்டிகளுக்கான டைம் டேபிள் பேப்பர் கட்டிங் எடுத்து அதை A3 சைஸ்ஸ்ல போட்டோ காப்பி எடுத்து உங்க ரூம்ல ஒட்டு வையுங்க. அதிலெ உருகுவே விளையாடும் போட்டி மெலெ எல்லோ ஹைலைட்டர் வச்சு பளிச் பண்ணுங்க. அது எந்த இந்திய நேரத்தில் வருதுன்னு சைடுல குறிச்சு வச்சுகுங்க. அதே போல லூயிசுவாரேன் படம் எதுனா கிடைச்சுதுன்னா பாருங்க. அந்த ப்ளோ-அப் பெருசா ரூம்ல, கதவிலே எல்லாம் ஒட்டுங்க.  அதன் பக்கத்திலே நின்னு ஒரு போட்டோ எடுத்த் வாட்ஸ் அப்ல ஒரு 50 பேருக்கு தட்டி விடுங்க.அதிலே மிக முக்கியம் என்னான்னா "நான் கோவிலுக்கு போனேன், கக்கூஸ்க்கு போனேன்"ன்னு உயரிய பதிவுகள் போடும் அன்பர்களுக்கா பார்த்து அனுப்புங்க. மேட்டர் இல்லாம தவிக்கும் அவங்க உடனே நீங்க லூயி சுவாரேஸ் ப்ளோ-அப் பக்கத்தில் இருக்கும் போட்டோவை ஃபேஸ்புக்ல போடுவானுங்க. இது போதும்... பத்திக்கும். அப்படியும் பத்திக்கலையா உடனெ உங்க டைம்லைன்ல " சிரிச்சா கோணவாயாய்மாதிரி  இருக்கும் ஒரு நண்பர் நான் என் ஆதர்சன கால்பந்து தெய்வம் லூயி சுவாரேஸ் கூட இருக்கும் புகைப்படத்தை தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். பதிவிடும் முன்னர் என்னிடம் பர்மிஷன் வாங்கனும் என்னும் அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை"ன்னு ஜாடையிலே போட்டு கிழிங்க. மறக்காம அந்த பதிவின் லிங் கொடுங்க. அப்புறம் என்ன சரவெடிதான்.... பை தி பை எப்போதும் உங்கள் லூயி சுவாரெஸை முழுப்பெயர் சொல்லி எழுதாதீங்க. செல்லமா லூ என்றோ லூயி என்றோ அல்லது சுவாரெஸ் என்றோ எழுதுங்க. நிச்சயம் அவரு பெயரில் எதுனா ஃபேஸ்புக், ட்விட்டர் பேஜ் இருக்கும். அதிலே அவரோட படம் இருக்கும். அதை காபி பேஸ்ட் அடிங்க. உங்க ப்ரொஃபைல் படமா அதை தினம் தினம் டிசைன் டிசைனா மாத்திகுங்க. "இதுவரை வெளிவராத லூயியின் படம்" என சொல்லி எதுனா படத்தை போடுங்க. அவ்ளோவ் தான்அடுத்த போட்டோ வெறும் ரெண்டு கால்கள் பந்தை உதைக்கும் மாதிரி கட் பண்ணி எடுத்துகுங்க ... பெரிசா லைவ் சைஸ்ல ... அந்த பந்து இருக்கும் இடத்தில் உங்க தலையை  (அதே பந்து சைஸ்ல வெட்டி எடுத்துகுங்க. (உங்க போட்டோ தலை..நிஜ தலை இல்லை) அதை பந்துக்கு பதிலா ஒட்டி கீழே தத்து பித்துன்னு ஒரு கவிதை எழுதுங்க.


"லூயி சுவாரேஸ்! என் மூச்சே நீதான்

அடுத்த ஜென்மம் உன் கால் படும் பந்தாய் என் தலை ஆகட்டும்

ராமர் பாதம் பட்ட அகலிகைக்கும் 

சரித்திரத்தில் இடம் உண்டு தானே"

 - இப்படிக்கு உன் வெறியன் என போட்டு உங்க பெயரை போடுங்க. அதை எடுத்து இணையத்தில் போட்டு லைக் அள்ளுங்க.இப்ப இந்த சிலபஸ் கொஞ்சம் கஷ்டம். ஆனா இதையும் படிச்சுட்டா நீங்க தான் இந்த உலக கோப்பை முடியும் வரை இணையத்தில் ஹிரோ.
அதாவது சுமார் ஒரு ஏழு அல்லது எட்டு நாடு... எது எதெல்லாம் கிட்ட தட்ட உலக கோப்பை வெல்லும்னு பேப்பர் எல்லாம் எழுதுதோ அந்த நாடுகளை எடுத்து அழகிய தமிழில் எழுதி வச்சுகிட்டு, அந்தந்த நாட்டில் எவன் நல்லா விளையாடுறானோ அவன் பெயர்களையும் எழுதி வச்சுகிட்டு மனப்பாடம் பண்ணிகுங்க.


போர்சுகல் - கிருஸ்டியானோ ரொனால்டோ


அர்ஜண்டைனா - லியோனஸ் மெஸ்ஸி


இங்கிலாந்து - வெயின் ரூனி


பெல்ஜியம் - ஈடன் ஹசார்ட்


ஸ்பெயின் - ஆண்ட்ரே இனியஸ்டா


இத்தாலி - மரியோ பலோடோலி


பிரேசில் - நெய்மார்


ஆச்சுதா... மேலே இருப்பதை மனப்பாடம் செய்வது மட்டுமே இந்த கோர்ஸ்ல கொஞ்சம் கஷ்டமான பாடம். இதை மட்டும் தயவு செஞ்சு படிச்சுடுங்க. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சுரை தும்பியை விட இது சுலபம் தான். சும்மா வருவாளா சுந்தரி!


தட்ஸ் ஆல்...சிலபஸ் இத்தனையே. நீங்க பாஸ் செஞ்சாச்சு கால்பந்து வெறியன் கோர்ஸ்ல். இனி சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் நீங்க  அதிலே டிஸ்டிங்ஷன் வாங்குவதற்கான டிப்ஸ் தான்.


போர்ச்சுகல் கிருஸ்டியானோ ரொனால்டோவுக்கு வயசு ஆகிடுச்சு. போன தயாவே கிழவன். முக்கி முக்கி தான் கோல் அடிச்சான். இவனை செலக்ட் செஞ்ச கேப்மாரி கைல கிடைச்சா கைமா போட்டுடுவேன்னு ஒரு நாள் ஒரு ஸ்டேடஸ்போடுங்க.


ஒரு நாள் பெல்ஜியம் நாட்டு ஈடன் ஹசார்ட் கொடும்பாவியை கொளுத்துவேன்னு பயம் காட்டி ஒரு ஸ்டேடஸ் அடிச்சு விடுங்க.


மரியா பலோடோலிக்கும் இங்கிலாந்து கவர்ச்சி நடிகைக்கும் கெட்ட சகவாசம்னு கிழிச்சு போடுங்க.


உருகுவே மேட்ச் நடக்கும் அன்று அந்த நேரத்தை குறிப்பிட்டு  உங்க ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலயும் "நண்பர்கள் தயவு செய்து இன்று நள்ளிரவு 1.45 முதல் 2.45 வரை தொலைபேசி மற்றும் ச்சேட்டிங்ல வர வேண்டாம்"ன்னு பதிவு போடுங்க. (ஊக்கூம் பகல்லயே கூப்பிட ஆள் இல்லை... இந்த லெட்சனத்துல இரவு ஒன்னே முக்காலுக்கு எவன் கூப்பிடப் போறான்). உணர்ச்சி வசப்பட்டு அந்த நேரத்தில் எவனுக்காவது போன் செஞ்சு "நான் பிசியா இருக்கேன்"ன்னு சொல்லி போனை வச்சிடாதீங்க. செம கடுப்பாகிவானுங்க.


இங்கிலாந்தின் வெயின் ரூனிக்கு துபாய் நாட்டிலே பால்ம் ஐலேண்ட்ல 200 கோடி ரூவாய்க்கு வில்லா இருக்கு, இது எவன் அப்பன் வீட்டு சொத்து? அது சம்பாதிச்சு வாங்கினதா அல்லது சேம் சைடு கோல் அடிக்க வாங்கிய கையூட்டான்னு ஒரு நாள் விடிகாலையிலேயே பரபரப்பா ஒரு பதிவு போட்டு கலக்குங்க. படிக்கிறவன் பைத்தியமா அலையனும்!


பிரேசிலின் நெய்மாரே முடிஞ்சா என் தலைவன்  லூயி சுவாரேஸ்க்கு எதிரா ஒரு கோல் போடுடா. நான் மவுண்ட் ரோட்டிலே முண்டமா ஓடுறேன்னு சவால் விடுங்க. (அந்த கொடுமைக்கு பயந்தே கூட நெய்மார் உங்க ஆளுக்கு எதிரா கோல் என்ன உச்சா கூட அடிக்க மாட்டான்)


ஆச்சுது... ஒரு மாசம் இப்படியாக உலககோப்பை கால்பந்து முடிஞ்சதும் ஒரு வேளை உருகுவே ஜெயிச்சுதுன்னா "நான் அப்பவே சொன்னேன். நான் சொன்னப்ப ஒரு பயலும் ஒத்துக்கலை. மழை பெய்யுது மழை பெய்யுதுன்னு சொன்னா சொன்னவனை பைத்தியக்காரன்னு சொன்னீங்க. இப்ப என்னாச்சு? விளையாட்டை ரசிக்கனும்... அதிலே என் தலைவன் கால் அசைவு ஒவ்வொன்னுத்தையும் அனு அனுவா பார்க்கனும். அப்ப தெரியும் அதன் லாவகம். சும்மாங்காட்டியும் பேப்பர்காரன் எழுதினதை வச்சுகிட்டு பெனாத்த கூடாதுக்கு.இந்த வெற்றியை என் ஃபுட்பால் கடவுள்  புரூனோ மார்கண்டீஸ் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்" என்கிற ரீதியில் பதிவு போடனும்.


ஒரு வேளை உருகுவே தோத்து போச்சுதுன்னா  உங்க கிட்டே எவனும் கேட்க மாட்டான். அப்படியே "உருகுவே ஏன் தோத்துச்சு"ன்னு கேட்டா தலைவர் கலைஞர் பாணியில் "கோல் அடிக்கலை. அதனால் வெற்றி வாய்பை இழந்தது" ன்னு சிம்பிளா சொல்லிகிட்டு போய்கிட்டே இருங்க. இல்லாட்டி கிரவுண்ட் சப்போர்ட் எங்களுக்கு இல்லை. கிரவுண்டில் இருந்த எல்லாருக்கும் தலா 200 டாலர் கொடுத்து கத்த சொல்லி ஜெர்மனி ஆரியர்கள் ஜெயிச்சாங்கன்னு ஒரு பிட்டை போட்டு எஸ்கேப் ஆகிடலாம். அதுவும் இல்லாட்டி போட்டி நடத்தின நடுவர்கள் அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்க. நாங்க கிரவுண்டுக்கு வரும் போது ரோட்டிலே சிக்னல் போட்டு நிப்பாட்டி வச்சாங்க. அவங்க போகும் போது மஞ்சள் லைட் போட்டு அவங்களுக்கு ஆதரவா இருந்தாங்கன்னு சொல்லுங்க.


ஆனால் இணைய உலக வரலாற்றில்  நீங்கள் ஒரு "தீவிர கால்பந்து வெறியன்" என்பது மட்டும் நிலைத்து இருக்கும்! இதானே நமக்கு வேண்டும்!
உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!16 comments:

 1. கலக்கலான யோசனைகள்! ஹாஹாஹா!

  ReplyDelete
 2. Itha itha ithathaan ethirpaarthen😈
  -Bala

  ReplyDelete
 3. நீங்க ஏன் சார் இது போலவே எழுத மாட்டங்குறிங்க? அரசியல் வேணாம் சார், பழையபடி அபிஅப்பாவா எழுதுங்க. படிச்சு சிரிச்சுகிட்டே இருக்கேன்.

  ReplyDelete
 4. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டத். அருமையான யோசனைகள்.

  ReplyDelete
 5. ஜெர்மனியின் Miroslav Klose யை குறிப்பிடாத இப்பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 6. "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சுரை தும்பியை விட இது சுலபம் தான். சும்மா வருவாளா சுந்தரி!"
  Hilarious. Keep up the scoring.

  ReplyDelete
 7. ha ha :)) அட்டகாசமான பதிவு :)))

  ReplyDelete
 8. அருமை அருமை அருமை!!!

  ReplyDelete
 9. கலக்கல் அபி அப்பா.....

  ரசித்தேன்.

  ReplyDelete
 10. விஜயகாந்தை திமுகா ஆக்டோபஸிடமிருந்து தமிழருவி மணியன் லவட்டிக்கொண்டு போனதிலிருந்து அவர்மேல் ரொம்பக் காட்டம் போலிருக்கு. உங்க கம்பெனியே 'ஈயம் பித்தாளைக்குப் பேரீட்சம்பழம்' ஆனதுதான் த.ம தியரம் எழுதத் தூண்டியுள்ளது.

  கட்டுரை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 11. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))