பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 17, 2014

அம்மா - தீபாவளி ரிலீஸ்!


இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அளித்தது சட்டப்படியாகன்னு  ஒரேயடியாகன்னு சொல்ல முடியாவிட்டாலும் சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் கூடிய ஒரு விவேகமான தீர்ப்பு. இதில் அதிமுகவினர் கொண்டாட எதுவுமில்லை. இன்று நீதியரசர் தத்து அவர்கள் அங்கே கேட்ட கேள்விகள் அதிமுகவினர் நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவுக்கானது.



இன்னும் சொல்லப்போனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாருமே வாதிடவில்லை. ஒப்புக்கு சப்பானியாக ரெட்டை நாக்கு பவானிசிங் கூட கலந்து கொள்ளவில்லை. சட்டப்படி தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் தண்டனை எனில் உச்சநீதிமன்றத்திலும் அரசு தரப்பு வக்கீல் தேவை. அரசு தரப்பு வழக்கறிஞர் தான் சொல்ல வேண்டியதை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் உண்டு/ இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கும் அவசியம் ஏன் வந்தது என ஒரு கேள்வி எழலாம்.



ரொம்ப சிம்பிள்... நான் இதற்கு முன்பு எழுதிய பதிவில் சொன்னது போல விசாரணை குற்றவாளிக்கு தான் ஜாமீன் கொடுக்க முடியும். இவரோ குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என முழுமை பெற்ற குற்றவாளி. ஆக குற்றவாளிக்கு பரோல் தான் கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் அப்பீல் செய்து விட்டிருந்தால் அதாவது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் அதன் பின்னர் ஜாமீன் கேட்டிருந்தால் ஜாமீன் கொடுக்கலாம். ஆனால் மேல் முறையீடு செய்வோம் என ஃபாலி நாரிமன் உறுதிமொழி அளித்ததால் "தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து" கவனிக்கவும் ரத்து செய்து அல்ல... நிறுத்தி வைத்து "ஜாமீன்" வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் தீர்ப்பில் கை வைக்கவில்லை. அதாவது "ஜெயலலிதா குற்றவாளி" என்கிற தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைவைக்கவில்லை. இதுவே அதிமுகவுக்கும் ஜெயாவுக்கும் மிகப்பெரிய அடி.



வாதிட ஆரம்பிக்கும் முன்பே ஃபாலிநாரிமன் அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திரு.ராம்ஜெத்மலானி போல நீதிபதி குன்ஹா தீர்ப்பை விமர்சிக்கவில்லை. முன்னுதாரணங்களை அடுக்கவில்லை. தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டார். அதற்கான காரணம் சொன்னார். அதாவது..."நான் நீதியில் குறுக்கிடவில்லை. அதை எல்லாம் மேல் முறையீட்டில் வாதமாக வைத்து கொள்வோம். ஆனால் 17 விதமான நோய்கள் என் கட்சிகாரருக்கு இருக்கின்றது. உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. உயர்சிகிச்சை அவசரமாக தேவைப்படுகின்றது..." என்றே ஆரம்பித்து வாதத்தை வைத்தார். ஒரு கட்டத்தில் "லட்சக்கணக்கான தொண்டர்கள்..." என சொல்ல ஆரம்பிக்கும் போது நீதிபதிகள் "எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. அதல்லாம் இங்கே தேவையும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வாதத்தை வைக்கவும்" என நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டனர். அதே போல திரு.ஃபாலி நாரிமென் அவர்களும் அதன் பின்னர் அது பற்றி வாயை திறக்கவில்லை.



ஒரு கட்டத்தில் நீதிபதிகள் "நாங்கள் ஜாமீன் கொடுத்தால் நீங்கள் வழக்கை தாமதம் செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் அப்படி செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் இப்படி செய்வீர்கள்" என வரிசைக்கிரமமாக ஜெயா முந்தைய காலகட்டங்களில் செய்த மாய்மாலங்களை அடுக்கி கொண்டே வர வர திரு.ஃபாலிநாரிமென் அவர்கள் அந்த ஒவ்வொறு மாய்மாலங்களுக்கும் "இந்த முறை அப்படி செய்ய மாட்டோம் , இந்த முறை அப்படி நடக்காது" என்று வாய் மொழி உறுதி கொடுத்து கொண்டே வந்தார். இறுதியாக "நான் இதற்கான உத்தரவாதத்தினை எழுத்து பூர்வமாக வேண்டுமாகின் தருகின்றேன்" என சொல்ல நீதிபதிகள் "வேண்டாம். நீங்கள் ஒரு சீனியர் வக்கீல்.. வாய்மொழி உத்தரவாதமே போதுமானது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நேரிடையாகவே வாய்மொழி உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள். போதுமானது" என சொல்லி "கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அத்தனை ஆவணங்களையும் ... அது எத்தனை பக்கம் வரும்... " என கேட்க அதற்கு ஃபாலி நாரிமன் அவர்கள் "அது  சுமார் 35,000 பக்கங்கள் வரும் கனம் கோர்ட்டார் அவர்களே" என சொல்லிவிட்டு "எனக்கு 3 வாரம் அவகாசம் தாருங்கள் அதற்குள் அந்த 35,000 பக்க ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து மேல்முறையீடு செய்து விடுகின்றேன். அதே போல மேல் முறையீடு செய்த பின்னரும் கூட இத்தனை மாதத்தில் முடிக்க வேண்டும் என நீங்கள் உத்தரவிட்டாலும் அதையும் ஏற்கிறேன். ஆனால் இன்றைக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்குங்கள்" என கேட்க அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ல் விசாரணைக்கு இங்கே வரும் போது அந்த தகவலை உறுதி செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்த பின்னர் அன்றிலிருந்து மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இதற்கு ஒத்து கொண்டால் இடைக்கால ஜாமீன் வழங்குகின்றோம். டிசம்பர் 18,2014 குள்  மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 18,2014 அன்று தானாகவே ரத்து ஆகி விடும். (மீண்டும் விசாரித்து ரத்து என்பது இல்லை. இன்றைய தீர்ப்பின் படியே ரத்து ஆகும்) அதே போல மேல் முறையீடு செய்தது முதல் 3 மாதத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நேரிடையாக மேல் முறையீட்டை முன்வந்து விசாரிக்கும்" என தீர்ப்பு கொடுத்து விட்டனர்.



 இன்னும் ஒரு படி மேலே போய் ஃபாலி நாரிமன் அவர்களிடம் இந்த தீர்ப்புக்கு பின்னர் நீதிபதிகளை வசைபாடுவது அல்லது பாராட்டுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. குன்ஹா, சந்திரசேகரா ஆகியோர் கன்னடியன் என சொல்லி வசைபாடுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. நானும் கூட கன்னடியன் தான். இப்போது ஜாமீன் கொடுக்கின்றேன். நானும் கூட கன்னடியன் தான். அதே போல சுப்ரமணியசாமி போன்றவர்களை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே நீதிபதிகளை அவமதித்ததுக்காக இந்த உச்சநீதிமன்றம் கடுமையாக வருத்தம் தெரிவித்தது என நீங்கள் நேரிடையாக ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.



இதிலே இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில் 100 கோடி ரூபாய் அபராதம் என்பதாலும், நான்கு வருடம் சிறை என்பதாலும் ஷ்யூரிட்டி எல்லாம் என்ன என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இரு நபர் சால்வன்சி டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு வட்டாட்சியர் அளவிலான அதிகாரி கொடுத்த சால்வன்சி டாக்குமெண்ட் வேண்டும்... சொத்து ஜாமீன்) ... இதல்லாம் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்ய போகின்றதா அல்லது அது மீண்டும் திரு.  குன்ஹா அவர்களை கைகாட்டி விடப்போகின்றதா என இனிமேல் தான் தெரியும்.  இன்னும் என்ன என்ன கண்டிஷன்கள் என இன்னும் படித்து முடிக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தற்போதைய முதல்வர் போய் தினமும் ஆலோசனை செய்யலாமா என்றெல்லாம் கண்டிஷன்களை இனி படித்தால் மட்டுமே புரியும். கிட்ட தட்ட வீட்டுச்சிறை என்பது போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக கொடநாடு பங்களாவுக்கோ, வழக்கில் இருக்கும் பையனூர், சிறுதாவூருக்கோ போக முடியாது. ரேஷன் கார்டு இருக்கும் வேதா நிலையம் தான் கதி என்றும் நினைக்கிறேன். இனிமேல் முழுவதும் படித்தால் தான் தெரியவரும். ஆனால் நாளை சனிக்கிழமையும் பரப்பன அக்கிரஹார நீதிமன்றம் உண்டு என நினைக்கிறேன். என்ன நடக்க போகின்றது என பார்ப்போம்.



மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜெயா போல காழ்ப்புணர்வு என்பதெல்லாம் எப்போதும் கிடையாது. நள்ளிரவில் கைது செய்வது, ஒரு கட்சி தலைவரை கைது செய்து வெயில் வாட்டி எடுக்கும் திருச்சி சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வரும் போது மீண்டும் கைது செய்வது, நீதிமன்றம் நீதிமன்றமாக போலீஸ் கூண்டு வண்டியில் வைத்து அலைக்கழிப்பது என எதுவும் காழ்ப்புணர்வு என்பது எப்போதும் கிடையாது. மேலும் முக்கியமான பண்டிகை காலத்தில் ஜெயேந்திரர் என்னும் ஒரு மதத்தலைவரை சிறையில் வைத்து பழி வாங்கியது போல இப்போதும் தங்களை மூச்சுக்கு மூச்சு தீயசக்தி மண்ணாங்கட்டி தெருப்புழுதி என தூற்றும் அவர்களை சிறையில் வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் வக்கிர புத்தி திமுகவுக்கு கிஞ்சித்தும் இல்லை. சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது. அவ்வளவே. தீர்ப்பு வந்த போது அதை கொண்டாடவும் இல்லை. நமட்டு சிரிப்பு சிரிக்கவும் இல்லை. அதே போல தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகள் பவானிசிங் வேண்டாம், ஜாமீன் கொடுக்காதே என்றெல்லாம் ஆர்ப்பரித்த போது கூட அமைதிகாத்தது. சொல்லுவாங்களே ஒரு பழமொழி... "புள்ளய பெத்தவ பொத்திகிட்டு படுத்து கிடக்கா, பார்க்க வந்த பங்காளி செறுக்கி பொங்க வச்சுகிட்டு இருக்கா" என்பது போலத்தான் திமுக அமைதியாக இருந்தது. பாமக, தேமுதிக ஆகியவை பொங்கி தீர்த்தன.



இனி அதன் ஜனநாயக கடமையை மேல் முறையீட்டில் சட்டப்படி, ஜனநாயகக்கடமையை செய்யும். அது வரை மக்கள் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகைகளை நிம்மதியாக கொண்டாட வேண்டி இந்த தீர்ப்பையும் அமைதியான முறையில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்! ஒரு காலத்தில் ஜெயலலிதா நடித்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் ஏங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவார்களா என தொண்டர்கள் ஏங்கும் நிலை  என்பது ஒரு அபரிமிதமான பரிணாம வளர்ச்சி. வாழ்க தமிழ்நாடு! மார்ச் 18,2015க்குள் நீதி கண்டிப்பாக நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.

October 16, 2014

முகநூல் என்பது மு.க நூலாகவும், மு.க.ஸ்டாலின் நூலாகவும் ஆனது!

தளபதியின் தமிழ் முகநூல் பக்கம்


அது மார்ச் மாதம் 31ம் தேதி, 2011ம் தேதி... தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்திருந்த நேரம். தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராகவும், நம் பாசமிகு தளபதி அவர்கள் துணை முதல்வராகவும் கொலுவீற்றிருந்து நல்லாட்சி நல்கிய காலம் அது. அன்று தான் நம் துணை முதல்வர் அண்ணன் தளபதி அவர்கள் இணையத்தில் முகநூல் பக்கம் முதன் முதலாக நுழைகின்றார். அதற்கு முன்பே டாட்.காம் வழியே இணையத்தில் அவர் கோலேச்சிக்கொண்டிருந்தாலும் Facebook என்னும் சமூகவலைதளமான "முகநூலில்" அப்போது தான் நுழைகின்றார். அதன் பின்னர் ஏப்ரல் 3ம் தேதி 2011 அன்று ஒரு சோதனை பதிவிடுகின்றார். என்னவென்று தெரியுமா?


"ஆதரிப்பீர் உதயசூரியன்"


. இது தான் அந்த ஒற்றை வரி. தன் நாடி நரம்புகளில் திமுக மீதும், அதன் இரு வண்ண கொடி மீதும், அதன் உதயசூரியன் சின்னத்தின் மீதும், அதன் கொள்கைகள் மீதும் அதி தீவிர வெறி கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியம். ஆத்திகர்கள்  புதிதாய் ஒரு பேனா வாங்கினால் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பர். சுயநலமிகள் தன் பெயரை எழுதிப்பார்ப்பர். ஆனால் தளபதி அவர்கள் விழிப்பிலும், உறக்கத்திலும் உதயசூரியனை மனதில் சுமப்பவர் என்பதால் முதல் பதிவே "ஆதரிப்பீர் உதயசூரியன்".



இன்னும் சொல்லப்போனால் அப்போது முகநூல் வழி பிரச்சாரம்  செய்தது என்பது தளபதி அவர்களை தவிர்த்து விரல் விட்டு எண்ணும் அளவுக்கே திமுகவின் சார்பாய் இருந்தனர். இன்னும் மிகக்குறிப்பாக சொல்லப்போனால் 2011ல் மே மாதம்  சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்த பின்னர் தான் "இணையதள திமுக" என்னும் முகநூல் குழுவை மெல்வின் பாக்கியநாதன், டான் அசோக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ஆரம்பித்தனர். இன்று பலநூறு திமுக முகநூல் குழுக்கள் இருப்பதற்கு முன்னோடியான முதல் குழு "இணையதள திமுக" ஆகும். ஆனால் அதற்கும் முன்பாகவே திமுக சார்பாக முழு நேர முகநூல் பிரச்சார பீரங்கியாக இருந்தது தளபதி அவர்களின் முகநூல் பக்கமே ஆகும். போர் என்றால் முன் வரிசையில் வழிநடத்தி போகும் வீரனே "தளபதி". திமுகவின் பிரச்சார போரில் கூட நவீன அறிவியல் பிரச்சாரத்தை திமுகவில் முதன் முதலில் முன்னின்று வழிகாட்டியது  கழக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலின்  என்பதால் தான் "தளபதி" என அன்பாக திமுகவினர்  அவரை அழைக்கின்றனர் என்பதை இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.



அந்த காலகட்டத்தில் சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பல லட்ச "விருப்ப"ங்களோடு முகநூலில் உலாவந்த காலகட்டம் அது. அப்போதெல்லம் சுப்ரமணியசுவாமி போன்றவர்கள் முகநூல் கணக்கு துவங்கி பல வருடங்கள் ஓடிவிட்ட நிலை. அதே போல கிரிக்கெட் உலகின் கடவுள் எனப்படும் சச்சின் போன்றவர்களும் அதே நிலையில் இருந்தனர். ஆனால் ஒரு பிராந்திய கட்சியின் தலைவர்களில் ஒருவரான துணை முதல்வர் முகநூல் பக்கம் வந்தது அப்போது தான். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் தன் முகநூல் பக்கத்தை துவங்கினார். எத்தனை பேர் தன் முகநூல் பக்கத்தில் விருப்ப சொடுக்கிட்டு வருகின்றனர் என்பது பற்றியெல்லாம் அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதே போல விருப்ப சொடுக்கு வாங்க வேண்டும் என்பதற்காக சுப்ரமணிய சுவாமி போல ஹேஷ்யங்கள் எழுதுவதும், அவதூறுகள் எழுதுவதும், மற்றவர்களை அவதூறு பேசுவதுமெல்லாம் இல்லை.


தன் கருத்துகள், திமுகவின் கொள்கைகள், திமுகவின் வளர்ச்சிகள், திமுக சந்திக்க வேண்டிய சவால்கள், திமுக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், திமுக தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள், தன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டிய வழிகள், தன் சுற்றுப்பயணங்கள் இப்படியாக தினம் தினம் தன் இயக்கத்துக்கான போர்வாளாக தன் "முகநூல்"பக்கத்தை நாள் தோறும் மிளிர வைத்தார்.


கடமையை செய் - பலனை எதிர்பாராதே என இவர் தன் பிரச்சாரத்துக்காக மட்டுமே முகநூலை பயன்படுத்தி வருவதால் இன்று முகநூலின் அதிகாரபூர்வ அங்கீகாரமான வெரிபைடு அந்தஸ்தையும் பெற்று விட்டது. ஆமாம் தமிழகத்தின் மட்டுமல்ல இந்திய அரசியல் தலைவர்களில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது தமிழ் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் (இன்றைய தேதி 16.10.2014 ) 2,90,475 விருப்பங்களுடன் முன்னிலையில் உள்ளது. (இரண்டு லட்சத்தி 90 ஆயிரத்து நானூற்று எழுபத்தி ஐந்து) இந்த கட்டுரை உங்கள் கண்ணில் படும் நேரத்தில் அனேகமாக அது 3 லட்சத்தை தாண்டி போகக்கூடும். அதே போல தளபதி அவர்களின் ஆங்கில முகநூல் பக்கம் 1,15,919 (ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 919) விருப்பங்களுடன் உள்ளது.  அதில் குறிப்பாக 18 முதல் 25 வயது கொண்டவர்களே அதிகமானோர் என்பது இன்னும் ஒரு வியப்பான செய்தியாகும்.
தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம்



இதற்கடுத்தபடியாக நம் தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் இன்றைய நிலையில் 2,69,481 (இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 481) விருப்பங்களுடன் அடுத்த நிலையில் உள்ளது. இத்தனைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் கணக்கை தொடங்கிய தேதி 13.08.2012 அன்று தான். அதாவது கிட்ட தட்ட தளபதி அவர்கள் ஆரம்பித்த பின்னர்  17 மாதங்களுக்கு பின்னரே துவங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் கலைஞர் அவர்களது இந்த சாதனையை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழ் கூட நான்கு நாட்கள் முன்பாக தலைவர் கலைஞர் அவர்கள் முகநூல் விருப்ப கணக்கில் முதலிடம் வகிப்பதை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது. அப்போதே தளபதி அவர்கள் முகநூல் விருப்ப கணக்கு அதை விட தாண்டி இருந்தது என்றாலும் திமுக தொண்டர்கள் எவருமே இதை ஒரு போட்டியாக கருத வில்லை என்பதால் "தி இந்து" நாளிதழின் செய்தியை குறை கூறாமல், தவறை சுட்டிக்காட்டாமல்  கொண்டாடியே மகிழ்ந்தனர். வேருக்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தவர்கள் திமுக தொண்டர்கள் என்பதுக்கு இதுவே ஒரு சாட்சியாகும். இதைத்தான் தளபதி அவர்களும் விரும்புவார்கள்.
தலைவரின் முகநூல் பக்கம்




விரைவில் தலைவர் அவர்களும், தளபதி அவர்களும் இந்திய அரசியல்வாதிகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி என சொல்லப்படும் இணைய வழி பிரச்சாரங்களில் வேறு எந்த அரசியல்வாதிகளும் தொட முடியாத தூரத்தில் இருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். (இப்போதே அப்படித்தால் உள்ளது நிலமை)எதிர்கால இளைஞர் கூட்டத்தை  இணைய வழி பிரச்சாரம் மட்டுமே ஈர்க்கும் என்பதை உணர்ந்த அரசியல் இளைஞர்கள் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும்  என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.  அந்த இரு கண்களுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வாழ்த்துக்கள்!
தலைவர் கலைஞர் முகநூல் வெற்றியை பற்றி "தி இந்து" நாளிதழ்



தலைவர் கலைஞர் அவர்களின் முகநூல் பக்கம் https://www.facebook.com/Kalaignar89


தளபதியின் தமிழ் முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin


தளபதியின் ஆங்கில முகநூல் பக்கம் https://www.facebook.com/MKStalin.Official.English?fref=ts


தளபதியின் ட்வீட்டர் பக்கம் https://twitter.com/mkstalin


தளபதியின் இணைய பக்கம் http://mkstalin.in/