October 17, 2014
அம்மா - தீபாவளி ரிலீஸ்!
இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அளித்தது சட்டப்படியாகன்னு ஒரேயடியாகன்னு சொல்ல முடியாவிட்டாலும் சட்டத்துக்கு உட்பட்டு மனிதாபிமானத்துடன் கூடிய ஒரு விவேகமான தீர்ப்பு. இதில் அதிமுகவினர் கொண்டாட எதுவுமில்லை. இன்று நீதியரசர் தத்து அவர்கள் அங்கே கேட்ட கேள்விகள் அதிமுகவினர் நாக்கை பிடிங்கி கொள்ளும் அளவுக்கானது.
இன்னும் சொல்லப்போனால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாருமே வாதிடவில்லை. ஒப்புக்கு சப்பானியாக ரெட்டை நாக்கு பவானிசிங் கூட கலந்து கொள்ளவில்லை. சட்டப்படி தேவையும் இல்லை என்றே நினைக்கிறேன். 10 வருடத்துக்கு மேல் தண்டனை எனில் உச்சநீதிமன்றத்திலும் அரசு தரப்பு வக்கீல் தேவை. அரசு தரப்பு வழக்கறிஞர் தான் சொல்ல வேண்டியதை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டாரே! தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு விட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் உண்டு/ இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் தண்டனை நிறுத்தி வைக்கும் அவசியம் ஏன் வந்தது என ஒரு கேள்வி எழலாம்.
ரொம்ப சிம்பிள்... நான் இதற்கு முன்பு எழுதிய பதிவில் சொன்னது போல விசாரணை குற்றவாளிக்கு தான் ஜாமீன் கொடுக்க முடியும். இவரோ குற்றவாளி என தீர்ப்பு சொல்லப்பட்டு நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி அபராதம் என முழுமை பெற்ற குற்றவாளி. ஆக குற்றவாளிக்கு பரோல் தான் கொடுக்க முடியும். ஆனால் இவர்கள் அப்பீல் செய்து விட்டிருந்தால் அதாவது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தால் அதன் பின்னர் ஜாமீன் கேட்டிருந்தால் ஜாமீன் கொடுக்கலாம். ஆனால் மேல் முறையீடு செய்வோம் என ஃபாலி நாரிமன் உறுதிமொழி அளித்ததால் "தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து" கவனிக்கவும் ரத்து செய்து அல்ல... நிறுத்தி வைத்து "ஜாமீன்" வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். ஆனால் தீர்ப்பில் கை வைக்கவில்லை. அதாவது "ஜெயலலிதா குற்றவாளி" என்கிற தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைவைக்கவில்லை. இதுவே அதிமுகவுக்கும் ஜெயாவுக்கும் மிகப்பெரிய அடி.
வாதிட ஆரம்பிக்கும் முன்பே ஃபாலிநாரிமன் அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் திரு.ராம்ஜெத்மலானி போல நீதிபதி குன்ஹா தீர்ப்பை விமர்சிக்கவில்லை. முன்னுதாரணங்களை அடுக்கவில்லை. தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டார். அதற்கான காரணம் சொன்னார். அதாவது..."நான் நீதியில் குறுக்கிடவில்லை. அதை எல்லாம் மேல் முறையீட்டில் வாதமாக வைத்து கொள்வோம். ஆனால் 17 விதமான நோய்கள் என் கட்சிகாரருக்கு இருக்கின்றது. உடல் எடை 4 கிலோ குறைந்து விட்டது. உயர்சிகிச்சை அவசரமாக தேவைப்படுகின்றது..." என்றே ஆரம்பித்து வாதத்தை வைத்தார். ஒரு கட்டத்தில் "லட்சக்கணக்கான தொண்டர்கள்..." என சொல்ல ஆரம்பிக்கும் போது நீதிபதிகள் "எங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் பற்றி கவலை இல்லை. அதல்லாம் இங்கே தேவையும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு உங்கள் வாதத்தை வைக்கவும்" என நெற்றிப்பொட்டில் அடித்தால் போல சொல்லிவிட்டனர். அதே போல திரு.ஃபாலி நாரிமென் அவர்களும் அதன் பின்னர் அது பற்றி வாயை திறக்கவில்லை.
ஒரு கட்டத்தில் நீதிபதிகள் "நாங்கள் ஜாமீன் கொடுத்தால் நீங்கள் வழக்கை தாமதம் செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் அப்படி செய்வீர்கள், நாங்கள் ஜாமீன் கொடுத்தால் இப்படி செய்வீர்கள்" என வரிசைக்கிரமமாக ஜெயா முந்தைய காலகட்டங்களில் செய்த மாய்மாலங்களை அடுக்கி கொண்டே வர வர திரு.ஃபாலிநாரிமென் அவர்கள் அந்த ஒவ்வொறு மாய்மாலங்களுக்கும் "இந்த முறை அப்படி செய்ய மாட்டோம் , இந்த முறை அப்படி நடக்காது" என்று வாய் மொழி உறுதி கொடுத்து கொண்டே வந்தார். இறுதியாக "நான் இதற்கான உத்தரவாதத்தினை எழுத்து பூர்வமாக வேண்டுமாகின் தருகின்றேன்" என சொல்ல நீதிபதிகள் "வேண்டாம். நீங்கள் ஒரு சீனியர் வக்கீல்.. வாய்மொழி உத்தரவாதமே போதுமானது. அதுவும் உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நேரிடையாகவே வாய்மொழி உத்தரவாதம் கொடுத்துள்ளீர்கள். போதுமானது" என சொல்லி "கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அத்தனை ஆவணங்களையும் ... அது எத்தனை பக்கம் வரும்... " என கேட்க அதற்கு ஃபாலி நாரிமன் அவர்கள் "அது சுமார் 35,000 பக்கங்கள் வரும் கனம் கோர்ட்டார் அவர்களே" என சொல்லிவிட்டு "எனக்கு 3 வாரம் அவகாசம் தாருங்கள் அதற்குள் அந்த 35,000 பக்க ஆவணங்களை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து மேல்முறையீடு செய்து விடுகின்றேன். அதே போல மேல் முறையீடு செய்த பின்னரும் கூட இத்தனை மாதத்தில் முடிக்க வேண்டும் என நீங்கள் உத்தரவிட்டாலும் அதையும் ஏற்கிறேன். ஆனால் இன்றைக்கு இடைக்கால ஜாமீனாவது வழங்குங்கள்" என கேட்க அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ல் விசாரணைக்கு இங்கே வரும் போது அந்த தகவலை உறுதி செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்த பின்னர் அன்றிலிருந்து மூன்று மாதங்களில் வழக்கை முடிக்க தேவையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். இதற்கு ஒத்து கொண்டால் இடைக்கால ஜாமீன் வழங்குகின்றோம். டிசம்பர் 18,2014 குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் இந்த இடைக்கால ஜாமீன் டிசம்பர் 18,2014 அன்று தானாகவே ரத்து ஆகி விடும். (மீண்டும் விசாரித்து ரத்து என்பது இல்லை. இன்றைய தீர்ப்பின் படியே ரத்து ஆகும்) அதே போல மேல் முறையீடு செய்தது முதல் 3 மாதத்தில் வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் உச்சநீதிமன்றமே நேரிடையாக மேல் முறையீட்டை முன்வந்து விசாரிக்கும்" என தீர்ப்பு கொடுத்து விட்டனர்.
இன்னும் ஒரு படி மேலே போய் ஃபாலி நாரிமன் அவர்களிடம் இந்த தீர்ப்புக்கு பின்னர் நீதிபதிகளை வசைபாடுவது அல்லது பாராட்டுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. குன்ஹா, சந்திரசேகரா ஆகியோர் கன்னடியன் என சொல்லி வசைபாடுவது எல்லாம் கண்டிப்பாக கூடாது. நானும் கூட கன்னடியன் தான். இப்போது ஜாமீன் கொடுக்கின்றேன். நானும் கூட கன்னடியன் தான். அதே போல சுப்ரமணியசாமி போன்றவர்களை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே நீதிபதிகளை அவமதித்ததுக்காக இந்த உச்சநீதிமன்றம் கடுமையாக வருத்தம் தெரிவித்தது என நீங்கள் நேரிடையாக ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தனர்.
இதிலே இன்னும் ஒரு விசேஷம் என்னவெனில் 100 கோடி ரூபாய் அபராதம் என்பதாலும், நான்கு வருடம் சிறை என்பதாலும் ஷ்யூரிட்டி எல்லாம் என்ன என்பதை கர்நாடக உயர்நீதிமன்றம் தான் இரு நபர் சால்வன்சி டாக்குமெண்ட் எல்லாம் கொடுத்து குறைந்த பட்சம் ஒரு வட்டாட்சியர் அளவிலான அதிகாரி கொடுத்த சால்வன்சி டாக்குமெண்ட் வேண்டும்... சொத்து ஜாமீன்) ... இதல்லாம் கர்நாடக உயர்நீதிமன்றம் செய்ய போகின்றதா அல்லது அது மீண்டும் திரு. குன்ஹா அவர்களை கைகாட்டி விடப்போகின்றதா என இனிமேல் தான் தெரியும். இன்னும் என்ன என்ன கண்டிஷன்கள் என இன்னும் படித்து முடிக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் தற்போதைய முதல்வர் போய் தினமும் ஆலோசனை செய்யலாமா என்றெல்லாம் கண்டிஷன்களை இனி படித்தால் மட்டுமே புரியும். கிட்ட தட்ட வீட்டுச்சிறை என்பது போலத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக கொடநாடு பங்களாவுக்கோ, வழக்கில் இருக்கும் பையனூர், சிறுதாவூருக்கோ போக முடியாது. ரேஷன் கார்டு இருக்கும் வேதா நிலையம் தான் கதி என்றும் நினைக்கிறேன். இனிமேல் முழுவதும் படித்தால் தான் தெரியவரும். ஆனால் நாளை சனிக்கிழமையும் பரப்பன அக்கிரஹார நீதிமன்றம் உண்டு என நினைக்கிறேன். என்ன நடக்க போகின்றது என பார்ப்போம்.
மீண்டும் சொல்கிறேன். திமுகவுக்கு ஜெயா போல காழ்ப்புணர்வு என்பதெல்லாம் எப்போதும் கிடையாது. நள்ளிரவில் கைது செய்வது, ஒரு கட்சி தலைவரை கைது செய்து வெயில் வாட்டி எடுக்கும் திருச்சி சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியே வரும் போது மீண்டும் கைது செய்வது, நீதிமன்றம் நீதிமன்றமாக போலீஸ் கூண்டு வண்டியில் வைத்து அலைக்கழிப்பது என எதுவும் காழ்ப்புணர்வு என்பது எப்போதும் கிடையாது. மேலும் முக்கியமான பண்டிகை காலத்தில் ஜெயேந்திரர் என்னும் ஒரு மதத்தலைவரை சிறையில் வைத்து பழி வாங்கியது போல இப்போதும் தங்களை மூச்சுக்கு மூச்சு தீயசக்தி மண்ணாங்கட்டி தெருப்புழுதி என தூற்றும் அவர்களை சிறையில் வைத்து பார்க்க வேண்டும் என நினைக்கும் வக்கிர புத்தி திமுகவுக்கு கிஞ்சித்தும் இல்லை. சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது. அவ்வளவே. தீர்ப்பு வந்த போது அதை கொண்டாடவும் இல்லை. நமட்டு சிரிப்பு சிரிக்கவும் இல்லை. அதே போல தீர்ப்பு வந்த பின்னர் மற்ற கட்சிகள் பவானிசிங் வேண்டாம், ஜாமீன் கொடுக்காதே என்றெல்லாம் ஆர்ப்பரித்த போது கூட அமைதிகாத்தது. சொல்லுவாங்களே ஒரு பழமொழி... "புள்ளய பெத்தவ பொத்திகிட்டு படுத்து கிடக்கா, பார்க்க வந்த பங்காளி செறுக்கி பொங்க வச்சுகிட்டு இருக்கா" என்பது போலத்தான் திமுக அமைதியாக இருந்தது. பாமக, தேமுதிக ஆகியவை பொங்கி தீர்த்தன.
இனி அதன் ஜனநாயக கடமையை மேல் முறையீட்டில் சட்டப்படி, ஜனநாயகக்கடமையை செய்யும். அது வரை மக்கள் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகைகளை நிம்மதியாக கொண்டாட வேண்டி இந்த தீர்ப்பையும் அமைதியான முறையில் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் என்றே நினைக்கிறேன்! ஒரு காலத்தில் ஜெயலலிதா நடித்த படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் ஏங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவார்களா என தொண்டர்கள் ஏங்கும் நிலை என்பது ஒரு அபரிமிதமான பரிணாம வளர்ச்சி. வாழ்க தமிழ்நாடு! மார்ச் 18,2015க்குள் நீதி கண்டிப்பாக நிலைநாட்டப்படும் என நம்புகின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
A very "logical" analysis from a D.M.K. supporter. What more can one say?
ReplyDeletesuper anna
ReplyDeleteஒரு திமுக உடன்பிறப்பின் அலசல் நன்றாகவே இருக்கிறது. ஆயினும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் இதே போல எழுதினீர்கள் என்றால்தான், உங்களின் நடுநிலைமையின் சிறப்பு வெளிப்படும்.
ReplyDeleteசில திருத்தங்கள் :
ReplyDelete1. // சட்டத்தை ஏமாற்றி சொத்து குவித்த ஜெயா மீது வழக்கு தொடரவும் அந்த வழக்கு நியாயமாக நடக்கவும் திமுக தன் ஜனநாயக கடமையை செய்தது.//
வழக்கு தொடுத்தது சுப்பிரமனியன் சுவாமி - அவர் திமுக இல்லை
2. //அதற்கு நீதிபதிகள் "முன்று வாரம் என்ன மூன்று வாரம் நாங்கள் நான்கு வாரம் தருகின்றோம். டிசம்பர் 18, 2014க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அந்த 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை புத்தகமாக ஸ்பைரல் பெண்டிங் போட்டு சமர்பித்து மேல்முறையீடு செய்ய வேண்டும்.//
17/10/2014 க்கும் 18/12/2014 க்கும் இடையில் 3 வாரங்கள் இல்லை இரண்டு மாதங்கள் உள்ளன