November 7, 2014
கமல் - அற்புதமான அறுபது! வாழ்க பல்லாண்டு!!
கமல் அவர்களை எனக்கு எப்போது இருந்து பிடிக்கும்??? யோசித்து பார்க்கின்றேன். திடீரென அவர் கதாநாயகனாக ஆனதில் இருந்து..... அல்லது திடீரென ஒரு நாள் குணா படம் பார்த்தேன், நடிப்பு பிடிச்சுது அதிலிருந்து பிடித்தது ... புன்னகை மன்னன் படத்திலே அருவில குதிக்கும் அந்த ஷணம் எனக்கு கமலை பிடித்து போனது... அன்பே சிவம் படத்தில் நொண்டி நொண்டி வரும் அழகை பார்த்து பிடித்தது... 16 வயதினிலே படத்தில் ஆத்தா ஆடு வளர்த்த நொடியில் இருந்து பிடித்தது... சிப்பிக்குள் முத்து வில் அப்புராணியா நடிச்சது முதல்... அப்புவாக அரை மனிதனாக ஆக்ட் குடுத்தது முதல்... அவ்வை சண்முகியில் கனல் கண்ணன் கையை முறுக்கும் போதிலிருந்து.... தசாவதாரத்தில் கொக்கியில் தொங்கிகிட்டே உச்சஸ்தாயில் ஓம் நமோ நாராயணாய.... மும்பை எக்ஸ்பிரசில் டவர் கிரேனில் தொங்கும் போது.... மூன்றாம் பிறையில் கடைசி காட்சியில் ஆடுடா ராமா ஆடுடா ராமா.... விஸ்வரூபத்தில் பத்து நொடியில் எதிரிகளை துவம்சம் செய்யும் போது.... இல்லை ... இதல்லாம் இல்லவே இல்லை...
குறத்தி மகன் என்ற ஒரு படம். நான் ரொம்ப சின்ன பையன் அப்போது. மயிலாடுதுறை சுந்தரம் தியேட்டர்... ஐந்து பெரிய வேப்பமரங்கள் இருக்கும் லேடீஸ் கவுண்டர் முன்பாக.. அந்த நிழலில் கார்த்தியாயினி பெரியம்மா இடுப்பில் (டிக்கெட் வாங்காமல் ... இது குழந்தைங்க.. பாருங்க இடுப்பிலே வச்சிருக்கேன்) அமர முடியாமல் அமர்ந்து (உள்ளே போனதும் இறங்கிடலாம்) படம் பார்த்த அன்றே எனக்கு கமல் அவர்களை பிடித்து போனது. கத்தி மாதிரி தைத்த டைட் பேண்ட் போட்ட ஒரு சிறு வேடம் அதில் அவருக்கு. இன்னும் சொல்ல போனால் மாஸ்டர் சேகரோ யாரோ தான் குறத்தியின் ( கே ஆர் விஜயா) மகன். மெயின் ரோல். இவருக்கு வி எஸ் ராகவன் பையன் ரோல் தான். சின்ன ரோல். நடிக்க சந்தர்ப்பமே இல்லாத ஒரு கேரக்டர். ஆனால் அதில் கூட அழகாய் தன் "கடமை"யை செய்திருப்பார். ஏனோ அந்த கண்கள் பிடித்து போனது. நியாயமாக இடுப்பில் அமர்ந்து டிக்கெட் கவுண்டரில் போய் படம் பார்க்கும் சிறுவனுக்கு அந்த குறத்தியின் மகனை தான் பிடித்து இருக்க வேண்டும். ஆனாலும் தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என தெரிந்தும் அதை செவ்வனே செய்யும் அந்த "தொழில் பக்தி" "தொழில் நேசிப்பு" தான் எனக்கு கமலிடம் பிடித்த விஷயம். ஒரு முறை பாரத்ரத்னா சச்சின் கிட்டே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட வராவிட்டால் என்ன செஞ்சு இருப்பீங்க? என்கிற அதிமுக்கிய டீஃபால்ட் கேள்வி கேட்கப்பட்ட போது அவர் "டாக்டராகி இருப்பேன்" என்றெல்லாம் கதை விட வில்லை. அவர் சொன்ன பதில் "பந்து பொறுக்கி போடும் பையனாக இருந்திருப்பேன். ஆனாலும் அந்த வேலையில் கூட "மிகச்சிறந்த பந்து பொறுக்கி போடும் பையனாகவே இருந்திருப்பேன்".... இது தான் அவரை "பாரத்ரத்னா" வரை கொண்டு வந்து விட்டது. அதே போல கமல் அவர்களிடம் ஒரு முறை இதே கேள்வி வேறு விதத்தில் கேட்கப்பட்ட போது அதாவது "நடிக்க வராட்டி என்ன செஞ்சு கிட்டு இருந்திருப்பீங்க?" என்றதற்கு கமல் "நடிக்க முயன்று கொண்டு இருந்திருப்பேன்" ஒற்றை வரி பதில்.
ஆக தங்கள் துறையில் வெற்றிக்கொடி நாட்டிய இவர்கள் இருவருமே தங்கள் இலக்கு என்ன என்பதை தீர்மானித்து விட்டார்கள். அதை அடைய தீவிர உழைப்பில் இருந்திருக்கின்றனர். அதே போல தங்களுக்கு கிடைத்த இடத்தில் தன் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் திடமாக இருந்துள்ளனர். அதுவே இவர்களை வெற்றியின் உச்சம் பார்க்க வைத்தது. இதுவே கமலை எனக்கு பிடிக்க காரணமாகியது.
அதே போல கமல் அவர்கள் மூளை எதையோ அல்லது எதையாவது எப்போதுமே தேடிக்கொண்டே இருந்து கொண்டிருந்தது..கொண்டிருக்கின்றது... திடீரென கவிதை எழுதுவதும், பாடல் பாடுவதும், இலக்கியம் பேசுவதும், கம்யூனிசம், நாத்திகம், பார்ப்பனீயம், தீவிரவாதம், சமூகம் என்பன போன்ற கடினமான விஷயங்களில் தன் வெளிப்பாடுகளை குழப்பமில்லாமல் ஆனால் புரிந்து கொள்ள தெளிவற்றதாக சொல்லி வருவதும் பிடிக்கும். "கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்" போன்ற வசனங்கள் ஒரு ஆராய்ச்சிக்குண்டான அளவிலான குழப்பமான தெளிவு. (அய்யோ ...கமல் மாதிரியே வந்துடுச்சே இந்த பத்தி)
அதே போல மூன்றாம் பிறை என்னும் படத்துக்கு கமல் அவர்களுக்கு தேசிய விருது தரப்பட்ட போது ... ஸ்ரீதேவி படம் முழுக்க பின்னி பெடல் எடுத்து நடித்தும் ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுக்காமல் கடைசி காட்சியில் கமல் நடித்த ஒரு காட்சிக்காக கமலுக்கு தேசிய விருது கொடுத்து விட்டார்கள் என அங்கலாய்த்த பத்திரிக்கைகள் இந்த ஆதங்கத்தை கமல் அவர்களிடமே நேரிடையாக கேட்க மிகவும் இயல்பான ஒரு உண்மையை அவர் சொன்னார் " முடியாது... ஸ்ரீதேவிக்கு இந்த விருதை தந்திருந்தால் அவரே இதை ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனனில் இந்த விருது "சிறந்த நடிகருக்கான" ஆண்பால் விருது. இந்த விருது எனக்கும் ஸ்ரீதேவிக்குமான போட்டி அல்ல. இப்போது சிறந்த நடிகை விருது வாங்கியவருக்கும் ஸ்ரீதேவிக்குமிடையேயான போட்டி. எனவே எனக்கு கொடுத்த விருதை ஸ்ரீதேவிக்கு கொடுத்திருக்கலாம் என சொல்வது ஸ்ரீதேவியின் பெண்மை தன்மையை பரிகசிக்கும் விஷயமாகும்" என சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். இந்த பதிலில் இருக்கும் புத்திசாலித்தனமான உண்மையை பாருங்கள். இதை விட சிறந்த காரணம் எனக்கு ஏதும் இருக்க முடியுமா கமலை பிடித்துப்போவதற்கு?
ஒருகாலகட்டம் வரை தன் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் வேண்டும் என்கிற தீவிர வெறியில் இருந்த கமல் பின்னர் ஸோலோ பர்மார்மன்ஸ் என்பதை "டீம் ஒர்க்" ஆக ஆக்கிக்கொண்டார். ஏனனில் மக்கள் இவரை சிறந்த நடிகர் என ஒத்து கொண்டு விட்டதை பல விருதுகள் இவருக்கு தெரிவித்து விட்டன. எனவே "டீம் ஒர்க்" என்பதற்கு தயார் ஆனார்.
நன்றாக நடிக்க வந்தவர்களை இனம் கண்டு கொண்டார். சோபிக்காத பலரை இவர் சோபிக்க வைத்தார். அது போல மிகப்பழைய நடிகர்கள் "நடிக்க" தெரிந்த நடிக நடிகையர்களை, பாடகர்களை இவர் தன் டீமுக்கு உள்ளிழுத்து வந்தார்
.
எஸ். வரலெஷ்மி ..... மிகப்பெரிய பாடகியும் நடிகையும்... இவர் குரலில் அடிக்கும் பிருகாக்கள் கிட்ட தட்ட அந்த கால டி ஆர் மகாலிங்கம் அவர்களை போட்டி போட அழைக்கும். அவரை தன் குணா படத்தில் தாசியாக நடிக்க வைத்து "உன்னை நானறிந்தால்" என்னும் பாடலில் ஒரு பல்லவி பாட வைத்து இருப்பார். அந்த பல்லவி முடிவில் ஒரு பிருகா அடிப்பார் அந்த பாட்டி பாருக்கள்... யப்பா... பிரம்மாண்டம்... அதே படத்தில் அந்த காலத்தில் மனோகரா படத்தில் நடித்த காகா ராதாகிருஷ்ணன் என்னும் தாத்தாவை அழைத்து வந்து டாக்டராக நடிக்க வைத்து இருப்பார். அடடே அடடே.... கமல் மட்டுமே இதை செய்ய இயலும்....
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... ஒரு பிரபல நடிகையை ஒரு நகைச்சுவை நடிகர் தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க அழைத்த போது அந்த நடிகை "நோ" சொல்லி விட்டாராம். அதாவது அந்த நடிகைக்கு தன் நடிப்பின் மீதும் அந்த கதையின் மீதும் நம்பிக்கை இல்லை. தன் சதையின் மீது இருக்கும் நம்பிக்கை அந்த கதையின் மீது இல்லா சினிமா உலகத்தில் இவர் ஒரு கதைக்கு கோவை தமிழ் பேச வேண்டும் என்பதற்காக நகைச்சுவை நடிகை கோவை சரளாவை தனக்கு கதாநாயகியாக ஆக்கி கொண்டு ஒரு டூயட் பாடல் கூட பாடி நடித்து அந்த நடிகைக்கும் மிகப்பெரிய கௌரவத்தை கொடுத்தார்... அப்படி கூட சொல்லக்கூடாது... நடிப்பு என்னும் அந்த கலைக்கு மரியாதை கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அது போல நாசர், வடிவேலு, வையாபுரி, பசுபதி, டெல்லி கணேஷ், மணி வண்ணன், ஜெமினிகணேசன், சந்தானபாரதி, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், பசி சத்யா, சண்முகசுந்தரத்தம்மாள், எஸ்.என்.பார்வதி பாட்டி, யூகிசேது , ஊர்வசி, ரேவதி, கள்ளபார்ட் நடராசன், ரோகினி அத்தனை ஏன் பேராசிரியர் ஞானசம்பந்தம் வரை திறமை இருக்கும் யாரையுமே இவர் விட்டு வைத்தது இல்லை. அதே போல கமலின் சிங்காரவேலன் படத்தில் வடிவேலு இசைக்கருவிகளை துடைக்கும் மைக்கேல் ஜாக்சன் தங்கை என்னும் கதாபாத்திரத்தில் வருவார். (அதில் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை இப்போது பாருங்கள் .... கிட்ட தட்ட குறத்திமகன் படத்தில் கமல் நடித்தது போல தன் வேலையை அழகாய் செய்தமை புரியும்)அவர்கள் கூட நடிக்கும் போது இவர் அடக்கி வாசித்து அவர்கள் நடிக்க வழி விடும் அழகிய "டீம் ஒர்க்" வேலையினை கச்சிதமாக செய்வார்.
இப்போ பாருங்க ஒரு உதாரணத்துக்கு ஒரு நாதஸ்வர கச்சேரி இருக்குதுன்னா அதிலே நாதஸ்வரம், தவில், தாளம், சுருதி எல்லாம் இருக்கும். எல்லாம் அதது அததன் வேலையை ஒழுங்கா செஞ்சா மட்டுமே கச்சேரி முழுமை அடையும். கேட்கவும் நன்றாக இருக்கும். தவில் என்பது யம பேரிகை என சொல்வார்கள். சத்தம் பெரிதாக இருக்கும். இதே வளையப்பட்டி அவர்கள் அந்த தவில் இசையில் தனித்துவமான ஆள் என்பதால் ஒரு கச்சேரியில் அவர் தன் திறமை மட்டும் காண்பித்து தடால் மொடால் என வாசித்து கொண்டிருந்தால் அது சுமமான கச்சேரியாக இருக்காது. அடக்கி வாசிக்க வேண்டிய நேரத்தில் அடக்கி வாசித்து தனி ஆவர்த்தனத்தில் பிளந்து கட்ட வேண்டும். அதைத்தான் கமல் செய்து கொண்டு இருக்கின்றார்.
அவ்வை சண்முகி படத்தில் ஒரு காட்சி. நாசர், டெல்லி கணேஷ், ஜெமினிகணேசன், இவர்களுடன் கமல் அவ்வை சண்முகியாக நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி. அதிலே நாசர் ஒரு பாய். அவர் அய்யர் வேஷமிட்டு அந்த வீட்டில் சமைக்க வந்திருப்பார்.அதுவும் ஊமையாக. டெல்லி கணேஷ், ஜெமினி ஆகியோர் அய்யர் கதாபாத்திரம். இதிலே டெல்லி கணேஷ் அவர்கள் ஜெமினி எது சொன்னாலும் ஆமாம் ஆமாம் என சொல்லும் ஜால்ரா வேடம். இந்த ஊமை அய்யர் நாசரை "மந்திரம் தெரியுமா உனக்கு? எங்கே காயத்ரி மந்திரம் சொல்லு" என சொல்ல பாய் ஆன நாசரோ ஊமை பாஷையில் பள்ளிவாசலில் ஓதும் பாங்கு சொல்ல ஆரம்பிக்க ஜெமினி, டெல்லிகணேஷை இடைமரித்து "இவன் சமைக்க தானே வந்திருக்கான். புரோகிதமா பண்ண வந்திருக்கான். அதல்லாம் வேண்டாம்" என சொல்ல டெல்லி கணேஷ் தன் முதலாளிக்கு ஜால்ரா போடும் விதமாக அதாவது நாசரை வேலைக்கு சேர்த்து கொள்ளும் விதமாக அந்த ஊமை பாஷை பாங்கு சொல்வதையே "ஆகா அண்ணா என்னா பிரமாதமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... அப்படித்தான் ஓம் பூர் புவஸ்ஸூவ ஹூம் சொல்லு சொல்லு தத் சவிதுர்வரேண்யம் ம்.. அப்படித்தான் பர்கோ தேவஸ்ய தீமஹி சபாஷ் ..சொல்லு தியோ யோ ந: ப்ரசோதயாத்... அண்ணா என்னா ஸ்பஷ்டமா காயத்ரி மந்த்ரம் சொல்றான் பாருங்கோ... போதும் டா போதும்... இன்னிக்கு என்ன ஆவணி அவிட்டமா சொல்லிண்டே இருக்காய்.. போதும்டா" .... இந்த காட்சியில் நடிப்பு என்பது டெல்லிகணேஷ், நாசர், ஜெமினி ஆகியோர் மட்டுமே. அவ்வை சண்முகியாகிய கமல் அமைதியாக தவித்து கொண்டு நிற்க மட்டும் தான் வேண்டும். தவிக்கிறேன் பேர்வழின்னு கொடுத்த காசுக்கு மேலே கூவி அதிகமா தவிச்சா எல்லார் பார்வையும் கமல் மேல் தான் இருந்திருக்குமே தவிர்த்து அந்த நகைச்சுவை எடுபட்டிருக்காது. இது தான் கமல் அவர்களின் "டீம் ஒர்க்" .மற்றவர்களை நடிக்க வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பது. ஒட்டு மொத்த சினிமாவையும் "நல்லா இருக்கு" என பார்வையாளரை சொல்ல வைப்பது.
அதே போல அதே படத்தில் ஒரு காட்சி. உச்சபட்சமாக ஜெமினி மீது பார்வையாளர்களுக்கு கோவம் வர வேண்டும். ஜெமினியில் சாதித்திமிர் தெரிய வேண்டும் என ஒரு காட்சி. ஒரு கண்ணாடி அறைக்குள் ஜெமினியிடம் கமல் பெண் கேட்க வேண்டும். பெண் மீனா கண்ணாடி அறையின் வெளியே நின்று அதை கவனிக்க வேண்டும். ஜெமினி பேசும் வசனம். "தோ பாருங்கோ... (மேலே மூன்று படங்கள் மாட்டி இருக்கும்) முதல் படத்தில் இருப்பது ராமச்சந்திரய்யர் என் தோப்பனாரின் தோப்பனாரின் தோப்பனார். அடுத்து வெங்கட்ராமய்யர் என் தோப்பனாரின் தோப்பனார், அடுத்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் என் தோப்பனார்... இந்த வரிசையில் பாண்டி ... நன்னாவா இருக்கும்... சிரிச்சுண்டே பாருங்கோ ..வெளில என் பொண்ணு நம்மை கவனிச்சுண்டே இருக்கா" - இங்கே கமல் அந்த பழம்பெரும் நடிகர் ஜெமினிக்கு நடிக்க வாய்ப்பை விட்டு கொடுப்பது அழகியலின் உச்சம். அஃப்கோர்ஸ் இதல்லாம் கமல் செய்யவில்லை டைரக்டர் தான் செய்தார் என்பன போன்ற வாதங்கள் எல்லாம் கமல் விஷயத்தில் எடுபடாது. கமல் தான் அடக்கி வாசிச்சார் என்பதே உண்மை.
இப்படியாக கமல் பற்றி சொல்லிக்கொண்டெ போகலாம். இவர் இந்த 50 வருட திரையுலக அவரது காலத்தில் அவர் அடைந்த உச்சமும் இல்லை. அதே போல அவர் அடைந்த அவமானங்களும் இல்லை. "சினிமா 100" என்னும் விழாவில் சில சில்லுண்டிகள் அமர்ந்திருக்க கமல், ரஜினி, இளையராஜா போன்ற தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் அவர்கள் பின்னால் தங்கள் சப்தநாடிகளும் அடங்கிப்போய் அவமானத்தால் கூசிக்குறுகி நின்றதும், அதே போல விஸ்வரூபம் பட பிரச்சனையில் தன் சொத்துகள் எல்லாம் கைவிட்டு போகும் நிலைக்கு ஆனதும், இந்த நாட்டை விட்டே போகிறேன் என மனம் வெதுப்பும் அளவுக்கு போனதும் கூட நடந்தது. அதையும் தாண்டி கமல் நிற்கின்றார். அவரை சினிமா 100 விழாவில் அவமானம் செய்த அம்மையார் அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகி பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த போது அவருக்கு பூமாரி பொழிந்து வரவேற்பு கொடுக்கப்பட்டதை கமல் அவர்களும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பார். அவருக்கு அவர் நடித்த மகாநதி திரைப்படத்தில் அவர் பேசிய ஒரு வசனம் நியாபகம் வந்திருக்கும். "ஒரு நல்லவனுக்கு கிடைக்கும் அத்தனை மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே"... அவருக்கு மட்டுமா நியாபகம் வந்திருக்கும் ... நமக்கும் தான். ....
இன்றைக்கு கமல் அவர்களுக்கு 60 ஆண்டு மணிவிழா பிறந்தநாள். இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துகின்றேன். இன்னும் அவர் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். செய்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
kamal vazha!
ReplyDelete