August 21, 2008
குடி குடியை கெடுக்கும்!!! (பாகம் # 2)
எல்லோரும் ரவுண்டு கட்டி உக்காந்து கிட்டை பிரித்து பாட்டிலை எடுத்தா அவனவன் "டேய் இங்க குடுடா இங்க குடுடா"ன்னு போட்டி போட்டுகிட்டு என்னவோ பிறந்த குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சி முத்தம் எல்லாம் குடுத்துகிட்டு இருந்தானுங்க. அப்ப ராதா "டேய் இன்னும் 10 நிமிஷத்திலே புது வருஷம் பிறக்க போவுது அப்போ ச்சியர்ஸ் சொல்லனும் வருஷம் புதன் கிழமையிலே வேற பிறக்குது. பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுடா பாட்டிலை இங்க குடு நான் பல்லாலயே திறந்துடுவேன்"ன்னு சொல்லி வாங்கிகிட்டான். அவனவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த டம்ளரை ரெடியா வச்சுக்க தூக்கு சட்டி தண்ணீரும் ரெடியா இருக்க ராதா 20 சதவீத உதடு சேதாரத்தோட திறக்க சைக்கிளில் சில்க் சுமிதா மாதிரி வந்த காரணத்தாலும், பசங்க தூக்கி போட்டு விளையாடியதாலும் புஸ்ன்னு பொங்கி பாதி பீர் போச்சு. ராதா வாயெல்லம் நுரை. அவன் அத நக்கிகிட்டு அவன் முகம் போன போக்கு இருக்கே மீன் கழுவின தண்ணியை குடிச்ச பூனை மாதிரி..ஆனா அவன் சொல்றான் "பேஷ் பேஷ் தேவாமிர்தமா இருக்கு". "டேய் என்னடா பொங்குது"ன்னு கேட்டப்போ ராதா "டேய் நான் தான் சொன்னல்ல மஞ்சு ஒயின்ஸ்ல சரக்கு ஒருஜினலா இருக்கும்ன்னு, இப்பதான் காய்ச்சி இருப்பாங்க அதான் பொங்குது"ன்னு வியாக்யானம் குடுக்குறான். பாதி பீர் கீழே போனது எல்லாருக்குமே கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஏன்னா பயம். நாங்களோ பிகினர்ஸ் இதிலே போய் ஃபுல் அடுக்க முடியுமான்னு பயம்.
முதல்ல ராதா எனக்கு ஊத்த அது கால் டம்ளர் ஊத்தின பின்னே இன்னும் பொங்கி புல் டம்ளரா ஆச்சு. பின்னே எல்லாரும் நுரை அடங்கின பின்னே தூக்கு சட்டியிலே இருந்து அந்த கால் டம்ளர் பீரில் தண்ணிய ஊத்தி முழு டம்ளரா ஆக்கி புது வருஷத்தை எதிர்பார்த்து உக்காந்து இருந்தோம். எல்லார் மூச்சியும் பேஸ்த்தடிச்ச மாதிரி இருக்கு. ஆச்சு 12 மணி எல்லாரும் ச்சியர்ஸ் சொல்லி எடுத்து எல்லா துவாரத்தியும் அடச்சிகிட்டு ஒரே மொடக்கு. ராதா அந்த டம்ளரை கீழே வச்ச ஸ்டைல் பார்க்கனுமே. ஆஹா அப்படி ஒரு ஜிவாஜி ஸ்டைல். கீழே வச்ச உடனே அடுத்த வார்த்தை "டேய் எனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா போயிடுச்சு டோஸ்". கொஞ்ச நேரம் ஆச்சு. எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லை. எனக்கு பயம் வந்துடுச்சு. என் உடம்பிலே என்னவோ பிரச்சனை போல இருக்கு அதான் போதை ஏறலைன்னு. மத்தவனுகெல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. சரி போதை ஏறலைன்னு சொன்னா இத்தன கஷ்டப்பட்டு காசு செலவழிச்சு குடிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமேன்னு கவலை வேற. சரி போதை வந்த மாதிரி நடிச்சிட வேண்டியது தான்ன்னு மெதுவா அந்த பிட்டை போட்டேன். "டேய் நான் ஜிவ்வுன்னு பறக்கிறேன். எனக்கு முன்னாடி இந்திராகாந்தியும் அவங்க கைய பிடிச்சுகிட்டு சஞ்சய்காந்தியும் பறக்கிறாங்கடா"
உடனே சங்கர் கேட்டான்"டேய் அவங்க தான் செத்து போயிட்டாங்களே" நான் சொன்னேன் அதுக்கு "டேய் நான் இப்போ சொர்கத்திலே இருக்கேந்தா". சங்கர் சுதாரிச்சுகிட்டான். உடனே அவன் "டேய் எனக்கு இப்பவே நம்ம மிலிட்டரியிலே சேர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கனும் போல இருக்குடா. இப்ப விட்டா எல்லா வெள்ளைகாரனையும் பிச்சுபுடுவேன் பிச்சு"ன்னு சொல்ல அவனவன் தனக்கும் கிக் ஏறி போனது மாதிரி டயலாக் விட ஆரம்பிச்சுட்டான். எனக்கு தான் பயம். அவனுங்க எல்லாம் நெசமான போதை போல இருக்கு. நம்ம நாளைக்கே நம்ம ராமூர்த்தி டாக்டர்கிட்டே போகனும்ன்னு.சரி இப்ப ராதா பேச்சை வச்சு இதல்லாம் உண்மையான போதையா இல்லியான்னு கண்டுபிடிக்கனும்ன்னு அவன் என்ன பேசுகிறான்ன்னு கவனிச்சேன். அவன் கூலா "சரிடா இப்போ இந்த பாட்டிலை தூக்கி போடனும்டா எங்க போடுறது?"ன்னு தெளிவா கேட்டான். எனக்கு பயம் அதிகமா போச்சு. ஏன்னா ராதா எப்பவும் உளருவான். இப்ப அடுத்தகட்ட நடவடிக்கை பத்தி தெளிவா பேசறானே. அப்ப அவனுக்கும் போதை ஏறிடுச்சு. எனக்கு மட்டும் என்ன ஆச்சு ஏறவே இல்லியே.உடனே கந்தசாமி "ஆமாடா ராதா பாட்டிலை காவிரியிலே கொண்டு போய் போட்டுடுவோம். இல்லாட்டி 1 தென்னைமர அளவு ஆழமா தோண்டி புதைச்சிடுவோம். காலையிலே வந்து இந்த இடத்திலே மிளகாய் பொடி போட்டிடுவோம். அப்பதான் மோப்ப நாய் பிடிக்காது"ன்னு சொன்னான். நான் அதுக்கு "நாம என்ன கொலையா செஞ்சோம்"ன்னு கேட்டதுக்கு அவன் "இப்ப கொலை தான் செய்ய போறேன். இத்தன போதை ஏற வச்ச ராதாவை போட்டு தள்ள போறேன்"ன்னு சொன்னான். அதுக்கு ராதா "வேண்டாம்டா அப்படி எதுனா நீ என்னை கொலை செஞ்சிட்டா தினதந்தியிலே போதையில் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்ன்னு வரும் அதை படிச்சுட்டு அப்பா படவா ஏண்டா குடிச்சன்னு திட்டுவார். சொல்ல முடியாது அடிச்சாலும் அடிப்பார்"ன்னு சொன்னான். எனக்கு அப்பதான் ப்யம் தெளிஞ்சுது. ராதா எப்போதும் போல உளற ஆரம்பிச்சுட்டான். ஆக அவனுக்கு சத்தியமா போதை இல்லை. செத்து போன ராதாவை அவன் அப்பா அடிப்பாரம். ராதா செல்லம்னா செல்லம் தான்.
இதிலே நடிக்க தெரியாத 4 பேர்"டேய் எங்களுக்கு கிர்ருன்னு வருது மட்டையாக போறோம்"ன்னு சொல்லி அழகா படுத்துட்டானுங்க. அவனுங்களை எழுப்பி வாங்கடா சைக்கிள்ல கடைதெருவை ஒரு ரவுண்ட் அடிப்போம்ன்னு கூப்பிட்டா எழுந்து ஒருத்தன் "சொல்லுங்க யாரை போட்டு தள்ளனும் கொஞ்சம் இழுங்கடா"ன்னு சொல்றான். சரின்னு அவன் கைய புடிச்சு இழுத்தா "டேய் ஏண்டா இழுக்குறீங்க நான் கொஞ்சம் இருங்கடான்னு சொல்றதை தான் நாக்கு குழறி கொஞ்சம் இழுங்கடான்னு சொன்னேன் அப்படீன்னு சொன்னான். எனக்கு மைல்டா ஒரு டவுட் இப்ப மட்டும் இருங்கடான்னு தெளிவா சொல்றானேன்னு.
ஓக்கே குடிச்சு முடிச்சாச்சு. இப்ப கடைதெருவுக்கு போய் லந்து பண்ண வேண்டியது தான்னு வெளியே வந்தா வுமன்ஸ் காலேஜ் ஹாஸ்டல் வாசல்ல வாட்ச்மேன் ஓமகுச்சி நரசிம்மனுக்கு சிக்கன்குனியா வந்த மாதிரி உக்காந்து இருக்கார். சங்கர் உடனே எங்க கிட்ட "நா வேண்ணா இவரை போட்டு தள்ளிடவா"ன்னு கேக்க மத்தவன்க "வாடா கொலை எல்லாம் செய்ய கூடாது உன்க்கு அப்படி ரொம்ப ஆசையா இருந்தா ஒரு கைய வேண்ணா வெட்டிடு"ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர்கிட்ட போய் கொஞ்சம் கைய குடுங்கன்னு கேட்டா அவரே கிள்ளி குடுத்துடுவார். அவரை போய் எதுக்கு வெட்டனும். சரி போதையிலே இதல்லாம் ஜகஜமப்பான்னு நெனச்சுகிட்டேன். எல்லாரும் தண்ணி வீரத்தை காமிச்சுகிட்டே காய்கறி மார்கெட் வழியா போயிகிட்டு இருந்தோம். நான் ரொம்ப கவலையா போதை ஏறலையே நாம யாரை வெட்டுறது?? சரி பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான், நாம பன்னாவது திம்போமேன்னு மெதுவா சைக்கிளை மிதித்தேன். அப்போ மார்கெட் எதிரே ஒரு பன்னி கூட்டம் குடும்ப சகிதமா ஃப்ரஷ்ஷா பியர்லெஸ் தியேட்டர் அருகே இருந்த பழங்காவிரியிலே குளிச்சு முடிஞ்சு விடிகாலை நாஷ்டா துன்ன மார்கெட் எதிரே இருந்த சாக்கடையில் புரண்டு கிட்டு இருந்தன. விடிகாலை 2 மணி வாக்கிலே முட்டை கோஸ் மேல் தோலும், அழுகிய தக்காளியும் அந்த குடும்பத்துக்கு தான்.
நானே எனக்கு மட்டும் போதை ஏறாத கடுப்பிலே வந்துகிட்டு இருக்கேன். அவனுங்க எல்லாம் போதையிலே மனுஷனை வெட்ட ரெடியா இருக்கானுங்க சரி நாம இந்த பன்னி கூட்டத்தை ஒரு கை பார்த்துடுவோம்ன்னு சைக்கிளை விட்டு இறங்கி ரோட்டிலே ரோடு போட கொட்டி கிடந்த கல்லை எடுத்து சரமாரியா அர்ஜுனன் அம்பு விட்ட மாதிரி விட்டேன். அந்த கூட்டம் சர புரன்னு சாக்கடையிலே இருந்து வெளியே வந்து நாலா பக்கமும் ஓட ஆரம்பிச்சுது. நான் விடுவேனா. நானும் நாலா பக்கமும் விட்டேன் கல்லை. ஆண்டவன் ஒரு கதவை மூடினா ஒரு கதவை திறப்பான்ன்னு சொல்லுவாங்க, பன்னி கூட்டத்துக்கு இருந்த ஒரே வழி மார்கெட் தான். எங்க ஊர்காரங்களுக்கு நல்லா தெரியும் அந்த பெரிய மார்கெட் எப்படின்னு. அதுக்குள்ளே பன்னிகுடும்ப தலைவர் ஓட பின்னாலயே மொத்த குடும்பமும் ஓட (எப்பவும் அந்த நேரம் கூட்டம் இருக்கும் மார்கெட்ல, சில்லரை வியாபாரிகள் வாங்கிகிட்டு இருப்பாங்க) மார்கெட் 3 அடி சந்து சந்தா இருக்கும்....எலேய் எவண்டா பன்னிய இங்க விரட்டுனதுன்னு மார்கெட்காரங்க வெளியே வர என்னை பார்த்துட்டாங்க கையிலே கல்லோடு. பின்னே என்ன எங்க பசங்க நேரா முன்னாடி போயிட்டாங்க கடைதெருவுக்கு. நான் அப்படியே சைக்கிளை திருப்பி செட்டி தெருவுக்கு உள்ளே புகுந்து அப்படி ஒரு மிதி சைக்கிளை. நேரா அம்பாபாய் கல்யாண மண்டபத்து பின் பக்கம் வந்து பரப்பிகிட்டு விழுந்தேன். அடி உடம்பெங்கும். அப்ப யாரும் துரத்தலை. சரின்னு மெதுவா எங்க ஸ்பாட் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்தா பசங்க அங்க நின்னுகிட்டு இருந்தாங்க.என்னை பார்த்து "என்னடா எங்க பின்னாடி தானே வந்த மார்கெட் வரைக்கும் அப்புறம் காணும். இப்ப என்னடான்னா இந்த செட்டி தெரு வழியா வர்ரியே உடம்பெல்லாம் காயமா இருக்கு"ன்னு கேட்டானுங்க.
விடுங்கடா நான் சொல்றதை கேட்டு சண்டைக்கு போக மாட்டேன்ன்னு சத்தியம் பண்ணுங்கடா. அப்பதான் சொல்லுவேன். நீங்க வேற போதையிலே இருக்கீங்க. எனக்கோ சரியான போதையா. ஏற்கனவே மார்கெட் குரூப்புக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை. நான் இன்னிக்கு இருந்த நெலமை தான் தெரியுமே. அதான் எதிர்க்க ஒருத்தன் வந்தான். அவன் ஒதுங்கி தான் போனான். இந்த பாழா போன கிராதகன் ராதா பண்ணின வேலை புதுவருஷம் தண்ணி அடிப்போம்ன்னு சொல்லி நாமளும் அடிச்சு... நானும் கண்ணு மண்ணு தெரியாம சாத்திட்டேன். நல்ல வேளை பொருள் ஏதும் என் கையிலே இல்லை.....நான் பேச பேச பசங்க "அய்யய்யோ இவன் பொருள் கிருள்ன்னு எல்லாம் பேசறானே"ன்னு பயந்துட்டாங்க.
சரிடா நாம காலையிலே எப்போதும் போல பார்ப்போம்ன்னு எல்லாரும் பிரிஞ்சு அவனவன் வீட்டுக்கு போயாச்சு. காலையிலே 10 மணிக்கு ராதா வந்தான். "என்னடா போதை எப்படி இருக்கு"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் கொஞ்சம் கூட கூசாம "போடா இன்னும் இறங்கவே இல்லைடா இப்ப கூட பாரு நம்ம பெரிய கோவில் யானை வந்துச்சு. தம்மு தம்முன்னு வேகமா வேற நடந்து வந்தாக. எனக்கு கோவம் பின்னால வாலை பிடிச்சு திருகினேன். அப்படியே பின் பக்கத்தை ஜங்கு ஜங்குன்னு ஆட்டிகிட்டே ஓடிடுச்சு" டேய் ராதா இதல்லாம் அடுக்குமாடா? நானும் என் பங்குக்கு "நான் கூட ஒரு புலி வாலை...."என்னால அதுக்கு மேல முடியல. மெதுவா ராதாகிட்டே போனேன். "டேய் நாம கலைஞரும் எம்ஜியாரும் போல எத்தன வருஷம் பழகியிருக்கோம், சத்தியமா சொல்லு உனக்கு போதை இருந்துச்சா? என் தலையிலே அடிச்சு சொல்லு"ன்னு சொன்னேன். ஒத்துகிட்டான். "இல்லடா. அப்ப உனக்கும் ஏறலையா, அந்த மஞ்சு ஒயின்சே இப்படித்தாண்டா ஒரே டுபூப்ளிகேட் சரக்கா விப்பான்"ன்னு பல்டி அடிச்சான்.
சரின்னு காலேஜ் போன பின்னே தங்கதுரைன்னு நல்லா தண்ணி அடிக்கும் ஒருத்தனை பிடிச்சு கேட்டோம். அவன் இந்த விஷயத்திலே கில்லாடி. எல்லாம் ஒன்னுவிடாம சொன்னோம். அதன் பிறகு அவன் 4 மணி நேரம் 27 நிமிஷம் 11 செகண்டு சிரிச்சுட்டு "பீர்ல தண்ணி கலந்து குடிச்சது நீங்க தாண்டா இந்த உலகத்திலே. பீர் கம்பனிகாரனுக்கு இது தெரிஞ்சுது அவனை நீங்க அவமானபடுத்தியதா மான நஷ்ட கேஸ் போடுவான். அதுவும் அரை பீரிலே எட்டு பேர்...ஹய்யோ ஹய்யோ... நானெல்லாம் 4 பீரை முழுசா முழுங்கிட்டு பத்தலைன்னு கத்துவேன் தெரியுமா? போங்கடா போய் லாலிபாப் வாங்கி சப்புங்கடா"ன்னு சொன்னான். உடனே ராதா "சரிடா தங்கதுரை விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்"ன்னு சொல்லிட்டு வந்தான். அடுத்த நாள் காலேஜ் சைக்கிள் ஸ்டாண்டில் "அரை பீரில் 8 பேர் தண்ணி கலந்து குடித்த வீரர்கள்" என எழுதி எங்க 8 பேர் பெயரும் எழுதியிருந்துச்சு. கீழே எங்க பிரின்சி கையெழுத்தை வேறு போட்டிருந்தானுங்க. (எங்க காலேஜ் சேர்ந்த உடனே பசங்க முதல்ல கத்துக்கும் விஷயம் அவரின் கையெழுத்து போட கத்துப்பது தான். அத்தனை ஈசியா கூட்டெழுத்தில் போட்டிருப்பார்)
அப்ப தான் ராதா சொன்னான் "குடி குடியை கெடுக்கும்"ன்னு. நான் சொன்னேன்"ஏண்டா நாதாறி இப்பதான் புத்தி வந்துச்சா" அதுக்கு அவன் சொன்னான்"இல்லடா தண்ணி ஒரு குடிபானம். அது போல பீர் ஒரு குடிபானம். பீரிலே தண்ணிய நாம ஊத்தினதால தண்ணி பீரை கெடுத்து போதை வராம செஞ்சுடுத்தா அதனாலத்தான் சொன்னேன் "குடி குடியை கெடுக்கும்"
ஜெய் ஜெய் ஜெயந்தி!!! பாகம் # 2 (ஒரு மீள் பதிவு)
அதுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இன்று இம்சை அரசி என்கிற ஜெயந்தி என் உடன் பிறவா தங்கச்சியாகி இனி அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நாங்கள் இது போலவே அண்ணன் தங்கையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டும் அளவு பாசமாகியாச்சு!
இன்று அவளுக்கு என் தங்கைக்கு பிறந்த நாள்! அவள் நீடூடி வாழ எல்லா வளமும் பெற்று வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்! நல்லா இருடா செல்லம்!!
குறிப்பு: ஒரு சின்ன பெருமிதம்! என்னால் வாழ்த்தப்பட்ட எல்லோருமே நல்லா இருப்பாங்க என்பதுக்கு ஜெயந்தி ஒரு உதாரணம்! போன பிற்ந்த நாளுக்கு என் தங்கச்சியா இருந்த ஜெயந்தி இப்போ ஜெயந்திமோஹன்பிரபு! அடுத்த வருடம் என் குட்டிமருமகனுக்கோ மருமகளுக்கோ அம்மா!!!
குறிப்பு 2: ஆசீர்வாதமோ, வாழ்த்தோ பெற விழைபவர்கள் அனுகவேண்டிய முகவரி www.abiappa.blogspot.com பணத்தை கிரடிட் கார்டு மூலமாக கிழிக்கவும்! ரசீது தபால் மூலமாக அனுப்பப்படும்!!!
குறிப்பு: முதலில் வந்து ஆசீர்வாதம் வாங்கி போனவர் என் அடுத்த தங்கச்சி கவிதாயினி காயத்ரி! டிசம்பரில் கல்யாணமாக கடவது என ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறேன்!!! ஜல்தி ஜல்தி, ஓடியாங்கப்பா!!!
August 20, 2008
குடி குடியை கெடுக்கும்!!!!! பாகம் # 1
நாங்க நண்பர்கள் எட்டு பேருமே கிட்டதட்ட போக்கிரி டாக்டர் விஜய் மாதிரி தான். ஒரு முடிவு எடுத்துட்டா பின்ன எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். 1985 டிசம்பர் 31 இரவு அப்படித்தான் அந்த முடிவை எடுத்தோம். காலேஜ் எல்லாம் வந்தாச்சு, இன்னும் குடிக்க கத்துகலைன்னா நாளைய சமுதாயம் நம்மை பார்த்து சிரிக்குமேன்னு தான் நாங்க அந்த முடிவை எடுத்தோம். வருஷம் பிறக்கும் போது சரியா ச்சீயர்ஸ்ன்னு சொல்லி ஆரம்பிக்கனும்ன்னு முடிவெடுத்தாச்சு. சரி எங்கே வாங்கலாம், என்ன வாங்கலாம் என்பன பற்றி மிகுந்த குழப்பம் ஆகிடுச்சு. ஏன்னா அதன் பெயர் எல்லாம் தெரியாது. ஒருத்தன் பீர்ன்னு சொல்றான், ஒருத்தன் விஸ்கி, ஒருத்தன் பிராந்தி என எல்லாம் சொல்ல நான் மட்டும் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என ஷாம்பெய்ன் என சொன்னேன். அப்ப தான் ராதா "வேண்டாம்டா நாம முதன் முதலா அடிக்க போறோம். ரொம்ப கேரி ஆகிடுச்சுன்னா வம்பு. நீங்க சொன்னதிலே பீர்க்கு மட்டும் தான் இரண்டு எழுத்து இருக்கு மத்ததுக்கு எல்லாம் எழுத்து அதிகமா இருக்கு அதனால இதுக்கு தான் போதை கம்மியா இருக்கும் போல இருக்கு அதனால பீரே வாங்கிடலாம்டா"ன்னு சொன்னான். அவனுக்கு தான் இது போலெல்லாம் சிந்திக்க வரும்.
சரி அடுத்து யார் யார் போய் வாங்குவதுன்னு சாட் பூட் த்ரீன்னு போட்டு பார்த்தா கடைசியா மிஞ்சினது நானும் ராதாவும் தான். (பின்னே என்னங்க ஜெலீனியா மாதிரி ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பார்ட்டியெல்லாம் குடிக்க முடிவெடுத்தா இப்படித்தான் சாட் பூட் த்ரீ எல்லாம் போட்டு முடிவெடுக்கும்). எங்கே போய் வாங்குவது என்பதை நானும் அவனும் முடிவெடுத்துக்கலாம்ன்னு சொல்லிட்டானுங்க. அடுத்து கிளாஸ் யார் கொண்டு வருவது என பல வகையிலும் சிந்திச்சு பார்த்தா ஒன்னும் வெளங்க மாட்டங்குது. இப்பமாதிரி அப்ப எல்லாம் யூஸ் அண்ட் த்ரோ விஷயம் டம்ளர்ருக்கெல்லாம் கிடையாது ஒரு விஷயத்தை தவிர. சரி அவங்க அவங்க டம்ளரை அவனவன் வீட்டிலிருந்து தள்ளிகிட்டு வரனும்ன்னு முடிவாகிடுச்சு. அடுத்து இடம்.ராதா உடனே "டேய் நம்ம பெரிய கோவில் தேர்முட்டி மேல போயிடுவோம்டா"ன்னு சொல்ல எல்லோரும் கோரசாக நிராகரித்தோம். எதுக்கு ஊரே பார்க்க நம்ம மானம் போகனுமா என்ன? பின்னே ஒருமனதாக ராஜந்தோட்ட கிரவுண்டின் நடுப்பகுதி தான் சரியான இடம். ராத்திரி 12 மணிக்கு பேயை தவிர யாரும் இருக்க மாட்டாங்க நம்ம கிட்டதான் இரும்பு சைக்கிள் இருக்குதே பேய் பங்குக்கு வராதுன்னு முடிவு செஞ்சுட்டோம். அதிலே கலக்க தண்ணி யாரு கொண்டு வருவதுன்னு அடுத்த குழப்பம். அப்பதான் சங்கர் சொன்னான், "விடுங்கடா நான் சர்ச்ல ராத்திரி கஞ்சி காச்சி ஊத்துறாங்க புது வருஷத்துக்குனு சொல்லி நான் பெரிய தூக்கு சட்டி எடுத்துட்டு வர்ரேன்"ன்னு சொன்னான். விட்டா மாரியாத்தாவுக்கு கேக் வெட்டுவான் போலருக்கு.
நானும் ராதாவும் எங்கே வாங்குவது அதை எப்படி எடுத்துகிட்டு வருவது என்பது சம்மந்தமா மண்டைய குழப்பிகிட்டு கடைசியா முடிவு பண்ணிட்டோம். கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப்ஸ் வைக்கும் கிட்டை தூக்கிகிட்டு கிளம்பிட்டோம் என்னவோ டே அண்ட் நைட் மேட்ச் ஆட போவது போல! வாங்கும் இடம் நியூ போட்டோ ஸ்டுடியோ மாடியிலே மஞ்சு ஒயின்ஸ். ஏன்னா அந்த கடையில தான் நல்லா இருக்கும்ன்னு ராதா சொன்னான். அதுக்கு அவன் சொன்ன காரணம் அலாதியானது. அது எதுக்கு இப்ப. அந்த ரோட்டிலே ஜே ஜேன்னு கூட்டம் அந்த ராத்திரி பத்து மணிக்கும். ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மங்கிகுல்லா மாட்டிகிட்டு அதேகண்கள் கொலைகாரன் மாதிரி கிரிக்கெட் கிட்டையும் தூக்கிகிட்டு மேலே போனோம். கடைகாரன் கிட்டே போகும் போதே எனக்கு தொடை எல்லாம் நடுங்குது. ராதா பயமே இல்லாத மாதிரி நடிக்கிறான். அவன் கைய ஆதரவா பிடிச்சா அது டைப்பிகிட்டு இருக்கு."இன்னிக்கு ரொம்ம குளிருதுல்லடான்னு சம்மந்தமே இல்லாம உளர்ரான் தண்ணி போடும் முன்னமே. கடை காரர் கேட்டார் என்ன வேண்டும்ன்னு. நான் அதுக்கு "ஒரு எட்டு பேர் சாப்பிடுற மாதிரி குடுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவர் "எலேய் இது என்ன அரிசி கடையா எட்டு பேர் பத்துபேர்ன்னுகிட்டு, வாங்கிட்டு போய் எட்டு பேருத்தான் குடிங்க ஒருத்தனே முழுங்குங்க எனக்கு என்ன? இப்ப என்ன சரக்கு வேணும்ன்னு சொல்லுங்க"ன்னு சொன்னார்.
ராதா என்னை பார்த்து சும்மா இருடான்னு சொல்லிட்டு "பீர் ஒரு குவாட்டர் குடுங்க"ன்னு கேட்டான். பீரை குவாட்டரை கேட்டதுமே கடைக்காரன் "எலேய் மூஞ்சிய காட்டுங்கடா, எந்த ஸ்கூல் நீங்க எந்த தெருவு குல்லாவை கழட்டு'ன்னு கொஞ்சம் அதிகாரமா சொன்னதும் எனக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சுடுச்சு. பிரசவ வைராக்கியம் மாதிரி அப்பவும் நினைச்சுகிட்டேன்"இனி இந்த ராதா நாதாறி சகவாசமே வச்சுக்க கூடாது"ன்னு. வாங்க வந்த ஒரு நல்ல(?) கஷ்ட்டமர் "தம்பிங்களா பீரு ஃபுல் பாட்டில் தான் குடுப்பாங்க"ன்னு சொன்னாரு. என்ன பீர் வேணும்ன்னு சொல்லுங்கன்னு கேட்ட போது அதான் பீர்ன்னு சொன்னோமேன்னு சொன்னோம். நாங்க பீர் என்பது தான் பிராண்ட்ன்னு நெனச்சுகிட்டு இருந்தோம். பின்ன தான் தெரிஞ்சுது பீர் என்பது ஒரு வகை. அதிலே பல பிராண்டு இப்பது. அதிலே கல்யாணி என்கிற பெயர் ராதாவுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஏன்னு கேட்டா அதுக்கு வித்யாசமா ஒரு கதை விடுவான், அதனால நான் கேட்கலை. 21 ரூபாய்க்கு 25 ரூபாயா குடுத்துட்டு மீதி கூட வாங்காம கிட் உள்ளே போட்டுகிட்டு கீழே தாவி இறங்கி சைக்கிளை எடுக்கும் போது தெரிஞ்ச ஒருத்தர் "தம்பி என்ன இங்க நிக்கிறீங்க"ன்னு கேட்டதுக்கு ராதா அவசரமாக "போட்டோ எடுக்க வந்தோம்"ன்னு பூட்டியிருந்த போட்டோ கடையை பார்த்து சொன்னான்.
அடுத்த 5 வது நிமிஷம் பெரிய கிரவுண்டு நடுவே எங்க மீதி 6 பேரோடு ஐக்கியமாகிட்டோம். அதுக்குள்ள மீதி ஆறு பேரும் நாங்க சொதப்புவோமா மாட்டோமான்னு பந்தயம் எல்லாம் கட்டிகிட்டு இருந்திருக்கானுங்க. சினிமா பொட்டி வர்ர மாதிரி ரொம்ப எதிர்பார்ப்போட இருந்திருக்காங்க. நாங்க போன உடனே என்னவோ அபினவ்பிந்ரா ரேஞ்சுக்கு வரவேற்ப்பு. "டேய் பீர் வந்துடுச்சுடா கூடவே அவனுங்களும் வர்ராங்கடா"ன்னு ஒரே சத்தம்.
திஸ்கி: பதிவு ரொம்ப நீளமா ஆகிட்டா என்னை உண்மை தமிழன்னு சொல்லிடுவீங்க தானே அதேன் இப்படி!!!!
August 17, 2008
சின்ன திரை நட்சத்திரங்களுடன் நான்!!!
ஆகஸ்ட் 13-17 வரை துபாய் விவேகானந்தர் தெருவில் கடைசி முட்டு சந்தில் குனியமுத்தூர் கைவினை பொருட்கள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்களின் கண்காட்சி நடைபெறுகிறது. நானும் சென்று வந்தேன். அவ்வளவு கூட்டமில்லை. மீன், கருவாடு வாங்க வந்த கைலி கட்டிய கொஞ்சம் தமிழர்களை தவிர. கண்காட்சிக்கு உள்ளே வருபவர்களுக்கு 2 திர்காம் தரப்பட்டது. அது மிகவும் குறைவு என்பதால் கூட்டம் அத்தனை இல்லை. ஏன் அந்த 2 திர்காமை விடுவானேன் என நான் சென்றேன்.
வியாழன், வெள்ளி என்றால் மக்கள் வெளியே கிளம்புவதே அறிது. மானாட மயிலாட பார்க்க உக்காந்து விடுவார்கள் அதுவும் கண்காட்சிக்கு 2 திகாம் தான் தருவார்கள் என்றால் யாரும் வர மாட்டார்கள் என்பதால் 5 திர்காமாக தந்தார்கள்.
மூன்றாவது மூத்திர சந்தில் நான் நுழைந்த போது மணி 2.30 ஆகி இருந்தது. இந்த கண்காட்சிக்கு கூட்டம் சேர்க்கும் விதமாக சின்னதிரை நட்சத்தினர் கொண்டுவரப்பட்டிருந்தனர். சில கைலி ஆசாமிகள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். நான் அங்கிருந்த ஒரு கடையில் குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொண்டு பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன். நான் அதை கபளீகரம் செய்துவிட்டு அவர்களிடம் போய் புகைப்படம் எடுத்து கொண்டேன்.
மேடையில் டவுசர் போடுவது எப்படி என்கிற நிகழ்ச்சி வைத்திருந்தனர். டவுசரை 200 வகையாக கூட போட முடியுமாம். யாராவது கேள்விபட்டதுண்டா? 10 வகையான ஒரே டவுசரை போட்டு காட்டினார்கள். ஒரு தாலிபான் பையனைதான் டவுசர் போட காட்சி பொருளாக வைத்து இருந்தார்கள். நம் தமிழ் பசங்க பொது இடத்தில் இதற்கெல்லாம் ஒப்புகொள்ள மாட்டார்கள் என்பதால் தாலியான் பையனை பிடிச்சு போட்டிருந்தார்கள். அவனும் மானம் கெட்டவனாக இருந்ததால் சொரனையே இல்லாமல் இருந்தான். டவுசர் போடுவதை கலையாக பார்த்தால் கலை. கொலையாக பார்த்தால் கொலை. எனக்கு அது கொலையாகவே பட்டது.
அதன் பிறகு வறட்டி தட்டும் போட்டி நடந்தது. சாணியை மட்டும் கொடுத்தவர்கள் அதில் மிக்ஸ் பண்ண வைக்கோல் தரவில்லை. அவர்களிடம் கேட்ட போது "by mistake we forgot to bring the vaikool, we are very sorry" என சொல்லிவிட்டார்கள். குபீர் எலக்கியவாதி தம்பி உமாகதிர் போட்ட "வறட்டி தட்டுவது எப்படி?" என்கிற பதிவு எனக்கு நன்றாக ஞாபகம் இருந்ததால் என்னால் அருமையாக தட்ட முடிந்தது.
இப்படியாக இந்த வெள்ளிகிழமை போனது.
கோவியார் போட்ட இந்த பதிவுக்கும் என் பதிவுக்கும் 6 வித்யாசத்தை கண்டுபிடிங்க.
August 5, 2008
வியாபார காந்தம் அபிஅப்பா!!!!( விஷயமே இல்லாம 150 வது பதிவு)
எனக்கும் ராதாவுக்கும் அந்த டவுசர் பாண்டி காலத்திலேயே அப்படி ஒரு தொழிலதிபர் ஆசை வந்திருக்க கூடாது. நாங்க ஏற்கனவே செஞ்ச பிசினஸ் தான் ஊத்திகிச்சா. சரி இதையாவது நல்ல பண்ணுவோம்ன்னு நான் ராதா சொல்ல சொல்ல ஜாக்கிரதையா கவனிச்சு கிட்டு வந்தேன். கிட்டதட்ட ரா மெட்டீரியல் பர்ச்சேஸ், புரடக்ஷன், டிரேடிங், அட்வர்டைசிங் எல்லாமே நாங்க ரெண்டே பேர் தான் என தீர்மானிக்கப்ப்ட்டது. இந்த தடவை வேற கூட்டு எல்லாம் கிடையாது. நாங்க மட்டுமே.
ரா மெட்டீரியல் பர்ச்சேஸ் எங்கே என முதலில் தீமானித்தோம். மெட்டீரியல் பர்ச்சேஸ் பண்ணும் போது தெரிந்தவர்கள் யாரும் இல்லாத இடமா இருந்தால் உத்தமம் என நாங்கள் தீர்மானித்ததன் விளைவாக சின்ன கண்ணார தெரு சைக்கிள் கம்பனிகளை முடிவு செய்தோம்.
அடுத்து புரடக்ஷன் பேக்டரிக்கான இடத்தை நாங்க ஒருமனதாக தேர்ந்தெடுத்தோம். காரணம் எங்க பிராடக்ட்க்கு அந்த ஒரு இடம் தான் சரியான இடம். அதாவது நல்லத்துகுடி போகும் வழியில் ரயில்வே கேட் இருக்குமே அதிலிருந்து கிழக்கால கொஞ்ச தூரம் போனா நம்ம எல்லேராம் சார் வீட்டின் கொல்லை பக்கமாக, அந்த இடம் தான் நம்ம பேக்டரி.
டிரேடிங் எல்லாம் நம்ம ஸ்கூல் தான். சக வகுப்பு, பக்கத்து வகுப்பு பசங்க தான் கஸ்ட்டமர்ஸ். விளம்பரம் வாய்வழி விளம்பரம் தான். வேற என்ன. கம்பெனிய திறந்து வியாபாரகாந்தமாகிட வேண்டியது மட்டும் தான் பாக்கி.
இப்பவாவது நான் என்ன பிராடக்ட்ன்னு சொல்லியாகனும்ங்க. அதான் காந்த வியாபாரம். ஆமாம் ராதாவுக்கு அந்த காந்த வியாபாரம் மனசிலே உதித்ததுக்கு காரணமே நம்ம மர்ஃபி பாலுதாங்க. அவன் ஒரு நாள் மர்ஃபி ரேடியோவிலே இருக்கும் ஏதோ ஒரு சின்ன காந்தத்தை வைத்து கொண்டு ஒரு பேப்பரில் கொஞ்சம் மண்ணை அள்ளி போட்டுகிட்டு அதன் கீழே வைத்து தேய்த்து பேய் ஆடுது பார் பேய் ஆடுது பார்ன்னு வெறுப்பேத்தியது தான். ஒரு தடவை எங்க கையிலே அந்த காந்தத்தை கொடுத்து இருந்தால் இந்த பிஸினஸ்க்கு நாங்க வந்தே இருக்க மாட்டோம்.
அப்போது கூத்தாநல்லூரில் இருந்து தாஜுதீன்ன்னு எங்க பிரண்ட் ஒருத்தன் வந்து படிச்சான். அவன் கிட்டதட்ட கூகிளாண்டவர் மாதிரி. எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ல மாட்டான். அவன் தான் ராதாவுக்கு காந்தம் தயாரிப்பது எப்படின்னு சொல்லி குடுத்திருக்கான். அதாவது சைக்கிள் நட், வாஷர் போன்றவற்றை ரயில் தண்டவாளத்தில் வைத்து விட்டு அதன் மேல் ரயில் ஓடினால் பின்னே அதை எடுத்தா அது காந்தமா மாறியிருக்கும். அடங்கொய்யாலே!!!
சுக்கிலபட்சம், கிழக்கே சூலம், மேற்கே கத்தி எல்லாம் காலண்டர்ல பார்த்து ஒரு ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நல்ல ராகுகாலத்திலே தங்கர்பச்சான் படத்திலே வரும் சின்ன பசங்க மாதிரி தொள தொள வார் வைத்த டவுசர் போட்ட நாங்க இரண்டு பேரும் ஒருத்தன் தோள் மேலே ஒருத்தன் போட்டுகிட்டு வெறும் காலை புழுதியில் தேச்சுகிட்டே "ரா" மெட்டீரியல் பர்ச்சேசுக்காக போனோம். (சைக்கிள் கம்பெனி வாச்லில் நட், போல்ட் பொறுக்க போவதை "ரா" மெட்டீரியல் பர்ச்சேஸ் என சொல்வது "கபீம் குபாம்"ல போட வேண்டிய குற்றமா என்ன?) கடவுள் முதல் ஐந்தாவது நிமிஷத்திலேயே கண்ணை திறந்தார். முதல் 'நட்' கிடைத்தது. பிறகு ஒரு ஐந்து ஆறு தடவை கண்னை திறந்தார். பின்னே மூடிகிட்டார். சரி முதல் நாள் ஆறு காந்தம் செஞ்சு வித்து காசு பார்ப்போம். பின்னே பத்து காந்தம் பின்னே நூறு காந்தம் இப்படியாக நிறைய காந்தம் செய்து அந்த மர்ஃபி ரேடியோ கம்பனிக்கே வித்து பின்னே பல நாட்டுக்கும் விற்று பெரிய தொழிலதிபர் ஆகிடலாம் என நினைத்து கொண்டே மேல வீதி வழியாக புது தெருவை அடைந்தோம்.
"டேய் ஒரு காந்தம் எத்தினி பைசாவுக்குடா விற்கலாம்? - இது ராதா
"இல்லடா முதல் ஆறு காந்தத்தையும் நாமலே வச்சிகிட்டு "எங்க கிட்ட ஒன்னு இருக்கே, நாங்க காமிக்க மாட்டோமே அப்படீன்னு 3 நாள் நம்ம பசங்களை கதற் விடுவோம். அதன் பிறகு நாம இத காமிச்சா பசங்க நாம சொல்ற பைசாவுக்கு வாங்குவானுங்கடா. 25 பைசாவுக்கு விக்கிலாம்டா" - இது நான். (பத்தீங்களா எங்க டீஸர் அட்வர்டைஸ்மெண்டை!!!)
"டேய் அப்ப முதல் நாளே ஒன்னேகால் ரூபா கிடைச்சிடும். நாம 100 காந்தம் எல்லாம் செஞ்சா 25 ரூவாடா, மாசத்துக்கு 750 ரூவாடா. வருஷத்துக்கு...." அப்படீன்னு சொல்லிகிட்டே ராதா ஒரு வேலி முள்ளை ஒடிச்சுகிட்டு கீழே தெருவிலே உக்காந்து மண்ணில் 750 x12 = ன்னு கணக்கு போட ஆரம்பிச்சுட்டான். நடுவே இந்த 12ம் வாய்ப்பாடு கண்டுபிடிச்ச கம்மணாட்டி யாருடான்னு வேற கேட்டுகிட்டான். பின்னே டேய் 9000 வருதுடான்னு சொல்லிகிட்டே அப்போதே தொழிலதிபர் ஆகிவிட்ட சந்தோஷத்துல மிதக்க ஆரம்பிச்சுட்டோம். இந்த லெட்சனத்திலே டைம் மேனேஜ்மெண்ட் வேற. ரயில் கடந்து போக மொத்தம் 20 செகண்டு தான் ஆகும் ஆக ஒரு தண்டவாளத்துக்கு 50 காந்தம் மொத்தம் 100 காந்தம் ஆக 20 செகண்டுக்கு 25 ரூவாய் சம்பாதிக்கும் நம்ம கம்பனிதாண்டா சூப்பர் கம்பனின்னு பெருமை பட்டுகிட்டோம்.
ரயில் வருவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்ததாலும் இன்னும் எங்க வியாபாரத்தை அதிகரிக்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையும் பேசினோம். ஒரு கட்டத்தில் அத்தனை பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என திகைத்த போது ராதா தான் சொன்னான். "டேய் நாம சைடு பிஸினசும் பண்ணனும்டா"
நான் சொன்னேன் "டேய் ARC மாதிரி அவங்களுக்கு எதிரே பெரிய நகைகடை ஆரம்பிக்கலாம்டா"
அவன் அதுக்கு "சே போடா குருநாதன் செட்டியார் மாதிரி தியேட்டர் ஒன்னு ஆரம்பிக்கலாம்டா.அப்ப தான் நாம ஓசியிலே படம் பார்க்க முடியும்டா.(அட அலுப்பை பயலே) நீ உன் பெயரை கிருஷ்ணன் ன்னு மாத்திக்கோ. என் பேரில் பாதி உன் பேரில் பாதி அதாவது "ராதாகிருஷ்ணன்" ன்னு வச்சிடலாம்"ன்னு சொன்னான். எனக்கு செம கோவம் "டேய் உன் முழு பேரே அதானே. நான் எதுக்கு பேரை மாத்திக்கனும். நீ வேணா காப்பியன்ன்னு மாத்திக்கோ. என் பேரில் பாதி உன் பேரில் பாதி என சேர்த்து "தொல்காப்பியன் திரையரங்கம்"ன்னு வச்சிடலாம்ன்னு சொன்னேன். இப்படியாக பார்ட்னர்ஷிப் முறியும் அளவு போன பின்னே நாங்களே சமாதான படுத்தி கொண்டோம்.
சரின்னு மெதுவா ரயில்வே கேட் கிட்டே போய் தண்டவாளத்தின் மேலே போய் கிழக்காலே போகும் போது தான் அந்த கேட்கீப்பர் கத்தினார். "டேய் யாருடா நீங்க எதுக்கு லைன்ல போறீங்க?" அவரை பார்த்தாலே சவுதியில் தலை வெட்டும் ஆசாமி போல இருந்தார். நல்ல சாராய நெடி. முள்ளு முள்ளா தாடி. நான் பதட்டத்திலே "காந்ந்ந்......."ன்னு சொல்ல ராதா காலை மிதித்து "சார் எங்க பிரண்டு காந்திமதிநாதன் வீட்டுக்கு குறுக்கு பாதையிலே போறோம் சார்"ன்னு சொல்லி சமாளிச்சான். பின்னே மெதுவா நடந்து போய் கேட் கீப்பர் கண்ணு படாம தூரமா போய் சாமியெல்லாம் வேண்டிகிட்டு இந்த தண்டவாளத்திலே 3 நட் அதுக்கு நேரா அடுத்த தண்டவாளத்திலே 3 நட் என வச்சிட்டு நானும் ராதாவும் அந்த சரிவான கருங்கல் மேலே படுத்துகிட்டு தலையை தண்டவாளத்திலே வச்சுகிட்டு ரயில் தரங்கம்பாடியிலிருந்து வருதான்னு கேட்க ஆரம்பித்தோம். ஓடும் ரயிலில் எவன் எவன் என்ன அசிங்கம் பண்ணினானோ நாங்க அந்த இடத்தை என்னவோ எங்க சொர்கமே அதுதான் என்கிற மாதிரி படுத்து கிடந்தோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த 6 நட்டும் காந்தமா ஆக போகிற சந்தோஷத்தில் அதை எடுத்து ஒரு தடவை முத்தம் வேறு கொடுத்துவிட்டு வைத்தோம்.
கொஞ்ச நேரம் கழித்து நான் "ஏன்டா ராதா காலை பிடிச்சு இழுக்கறே"ன்னு கேட்டதுக்கு அவன் "நான் எங்கடா இழுத்தேன் நீ தானே என் காலை பிடிச்சு இழுக்கறே"ன்னு சொல்லிகிட்டே இருக்கும் போது இந்த பங்கி ஜம்ப்பிலே தொங்குவாங்களே அது போல தொங்கிகிட்டு இருந்தோம். அந்த தலை வெட்டி கேட்கீப்பர் எங்களை தலைகீழா காலை பிடித்து தூக்கிகிட்டு (அவர் தான் ஆஜானுபாகுவா இருந்தாரே, நாங்க பொடி பசங்க தானே) தண்டவாளம் வழியா கேட் பக்கமா திட்டிகிட்டே நடந்து போனார். எனக்கு உலகமே சுத்துது. தொள தொள டவுசர் வேறயா மானமே போச்சு.எது எது எங்க எங்க இருக்குதுன்னே தெரியலை. அந்த ஆளு நாலு அடி அங்கயே அடிச்சா கூட பரவாயில்லை. ஆனா கேட்கிட்டே கொண்டு போய் அதை எங்க தெரு ஆளுங்க யாராவது பார்த்துட்டு வீட்டிலே சொல்லிட்டா நம்மை ஊறுகாய் போட்டிடுவாங்களேன்னு பயம். அது தான் மெயின் பயமே. இந்த கூத்திலே ராதா தலைகீழா தொங்குவது பத்தி எல்லாம் கவலைப்படாம கீழே கிடந்த கல்லை எல்லாம் எடுத்து வீசிகிட்டே "டேய் ஜாலியா இருக்குல்லடா இப்பிடி தூக்கிகிட்டு போறது"ன்னு சொல்லிகிட்டு சந்தோஷ பட்டுகிட்டு வர்ரான். கிராதகா, என்னை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டதோட இல்லாம இப்படி பேசினது எல்லாம் எனக்கு எப்படி இருந்திருக்கும்.
இதிலே தலைவெட்டி கேட்கீப்பரோ எங்களை ரயிலை நாங்க கவிழ்க நாங்க சதி செய்ததாகவும் அவர் வந்து ரயிலை காப்பாத்தியதாகவும் சொல்லிகிட்டு வர்ரார். ஆகா ஒரு காந்த தொழிற்சாலை அதிபர்களை, ஒரு வருங்கால தியேட்டர் அதிபர்களை, நகைக்கடை அதிபர்களை இப்படி கேவலம் ரயில் கவிழ்க்கும் சதிகாரர்களை போல நடத்தியது மகா கொடுமை.
நான் ராதாவிடம் தொங்கிகிட்டே கேட்டேன்"எப்படா நம்மை இவன் கீழே விடுவான்?" அதுக்கு அவன் சொன்னான் தொங்கிகிட்டே "டேய் நாம ஞாயித்து கிழமை ராகுகாலத்திலே மாலை4.30க்கு ஆரம்பிச்சோமா 'ரா'மெட்டீரியல் பர்ச்சேசை... இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆறு மணிக்கு ராகுகாலம் முடிஞ்சுடும். நம்மை விட்டுடுவான். நாம ஓடி போயிடலாம்"ன்னு ஏதோ காழியூர் நாராயணன் ரேஞ்சுக்கு சொல்லிகிட்டு வர்ரான்.
நான் அப்ப முடிவு பண்ணினது தான். இனி தொழிலதிபர் ஆசை எல்லாம் வச்சிக்க படாது. அப்படியே வச்சிகிட்டா கூட இந்த நாதாறி ராதா கூட கூட்டணி வச்சிக்க கூடாதுன்னு!
August 3, 2008
எசகு பிசகுன்னா என்ன? அமீரக வலைப்பதிவர் மாநாடு - ஒரு கவரேஜ்!!!
போக முடிவு செய்து ஷார்ஜா போய் சேரும் போது மணி 7 ஆகிவிட்டது. நான் போகும் முன்னமே அய்யனார் தன் கருத்துகளை பேசி முடித்து இருந்தார். ஆனாலும் அந்த அனல் மூச்சுகள் அப்பவும் அந்த ஹால் முழுக்க இருந்தது. இன்னும் கொஞ்சம் லேட்டா போயிருக்கலாமோ?
லியோ சுரேஷ், கவிஞர் ஆசாத், முத்துகுமரன், குசும்பன்(கூடவே அவரின் திருமதியும்)ஜுபைர், சுல்தான் பாய், நண்பன் ஷாஜி, பாலா என்னும் நண்பர், லியோ சுரேஷின் நண்பர், நான் மற்றும் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டோம். (யாராவது விட்டு போச்சா?) தம்பி உமாகதிர், சென்ஷி ஆகியோர் போனில் விசாரித்து கொண்டிருந்தனர். பெனாத்தலார் தாயகம் திரும்பி விட்டார். கோபிக்கு லீவ் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. லொடுக்கு,பாஸ்ட் பவுலர் ஆகியோருக்கு வேறு வேலை இருந்ததால் வரவில்லை.(ஒரு வேளை குசேலனுக்கு டிக்கெட் கிடைத்திருக்குமோ). ஜஸீலாக்கா புது பையன் பர்மிஷன் குடுக்காத காரணத்தால் வரவில்லை. குழந்தையீயம் தலை விரிச்சு ஆடுதுப்பா.
இந்த மாநாட்டின் சிறப்பம்சமே வலைப்பதிவுகளையும், மற்ற பதிவர்களையும், பதிவுகளையும், தன் தன் பதிவுகளையும் பற்றி பேசிக்'கொல்ல'வில்லை. அண்ணாச்சியுன் நூலகத்துக்கு வெகுதூரத்தில் நான் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டேன். ஒருமுறை என்னை அறியாமல் எதுனா படக்கதை புத்தகம் கிடைக்குமா என என் கண்கள் தேடிய போது குசும்பனால் கண்டிக்கப்பட்டேன்.
எல்லா விஷயங்களையும் பற்றி எந்த வித காரசாரமும் இல்லாமல் மெல்லிய நகைச்சுவை இழையோடவே பேசி கொண்டு இருந்தோம். சில சென்சிட்டிவ் விஷயங்களை கூட தொட்டு பேசும் போது தானாகவே வெளியே வந்து விட்டோம். ஜெயலலிதாவின் முதல் அரசியல் பிரவேசம் எப்போது ஆரம்பித்தது பின் அவர் எப்போது லைம்லைட்டுக்கு வந்தார் என்பது பற்றி எல்லாம் கவிஞர் ஆசாத் பேசிகொண்டு இருக்க "நானும் ரவுடிதான் நானும் ரவுடி தான்" என நானும் அந்த ஜீப்பில் ஏறிக்கொண்டேன். இரவு 9.30 வரை பேசி கொண்டிருந்தும் பசிக்கவே இல்லை. ஆனாலும் ஹோட்டலுக்கு போனோம். மிக அருமையான உணவு. அந்த 1.30 மணி நேரம் கூட அதிகமாக பேசி கொண்டே இருந்தோம்.
அப்போது தான் அய்யனார் "சென்ற டிசம்பரில் நாம் கூடிய போது அமீரக வலைப்பதிவர் பட்டரை பற்றி பேசினோமே, அது என்ன ஆச்சு?" என கேட்ட போது அண்ணாச்சி இந்த வருட டிசம்பரிலும் அது பற்றி கட்டாயமாக பேசுவோம் என வாக்களித்தார்.
பின்னே தசாவதாரம் பத்தி பேச்சு போனது. சைவத்துக்கும் வைஷ்னவத்துக்கும் இடையேயான பிரச்சனை பத்தி போன போது நானும் வழக்கம் போல ஜீப்பில் ஏறிக்கும் முயற்சியில் "சைவத்துக்கும் அசைவத்துக்கும் மட்டும் தானே பிரச்சனை, எங்க வீட்டில் மீன் குழம்பு வைக்கலைன்னா மட்டும் தானே சண்டை வரும்" என கேட்க எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்க்க நான் அத்தோடு அந்த ஜீப்பில் ஏறும் முயற்சியை விட்டேன்.
ஒரு வழியாக இரவு 11 மணிக்கு மாநாடு முடிவுக்கு வர நான் நண்பன் ஷாஜி அவர்களின் காரில் வந்து பர்துபாயில் சேர்ந்து பின் டாக்சியில் வீடு வந்து சேர்ந்து குளித்து படுத்தபின் ஒரு விஷயம் மட்டும் மனதை விட்டு நீங்காமல் இருந்தது.
என்ன புரண்டு படுத்தாலும் அந்த நினைவுகள் போகவில்லை. காரணம் அண்ணாச்சி வீட்டில் பார்த்த அந்த 2002 பிப்ரவரி மாத ஜூ.வி. முதல் பக்கத்திலேயே அண்ணாச்சியின் "வாப்பா" ஜப்பார் சார் தமிழீழ தேசிய தலைவர் "தம்பி’ கூட இருக்கும் அட்டைப்பட ஜூவி. இரண்டே முக்கால் மணி நேரம் அவர் தம்பி கூட இருகும் பேட்டி! வாவ் வாவ் வாவ்!!! அத்தனை ஒரு உணர்சிகரமான சந்திப்பு. இரண்டே முக்கால் மணி நேரமும் அரசியலா பேசுவார் என நான் அந்த சந்திப்பின் தலைப்பையே பற்றி யோசித்து படித்து கொண்டிருக்ககையில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் "தமிழ்" பற்றியும் பேசியது பற்றியும் ஜப்பார் சார் சொன்னது எனக்கு உற்சாகமாக இருந்தது.
"எசகு பிசகுன்னா என்னா?" என இவர் கேட்க தம்பியோ பிசகுன்னா பிழைன்னு தெரியும் எசகுன்னா தெரியலையே என சொல்ல வாப்பா விளக்கியிருக்கிறார். எசகுன்னா என்னான்னு! அதாவது பிசகு செஞ்சா எசகு வரும். அதாவது AIDS தமிழ்ல சொன்னா "எதிர்ப்பு சக்தி குறைதல்" இது தான் "எசகு".இதை கேட்ட தேசிய தலைவர் மட்டுமா வியந்திருப்பார்???? சொல்லுங்க மக்கா. என் தூக்கம் கெட்டதுக்கு அண்ணாச்சியும் காரணம் தானே!
உடனே இந்த குருவி மூளை கனவுக்கு போய் விட்டது. "தம்பி"யை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிட்டியது என்று?????
அப்போது நான் கல்லூரி 2ம் ஆண்டு! ராஜீவ் கொலையில் சிக்கிய சுபாசுந்தரம் முதலானவர்களை விடுதலை செய்த வழக்கறிஞர் குழுவில் இருந்த திரு வக்கீல் ராமதாஸ் (மயிலாடுதுறையை சேர்ந்தவர்) அவரின் சீடன் நான் அப்போது. அவரின் மகன் பாரி அவர்கள் "MTA’’ அதாவது மாயூரம் டுட்டோரியல் அக்காடமி என்று வைத்திருந்தார். அதில் எல்லா பாடத்துக்கும் டியூஷன் எடுப்பாங்க. ஆனா நான் சேர்ந்தது வக்கீல் ராமதாஸ் அவர்களின் வகுப்புக்காக. மொத்தம் நாங்க 10 பேர் தான் இருப்போம்.
இதோ இன்றைக்கு அண்ணாச்சி வீட்டில் பார்த்தேனே அது போல நூலகம் அங்கே . அது ஒரு சுரங்கம். நான் அங்கு எடுத்து அதாவது திருப்பி குடுக்காத புத்தகமே எல்லாமே கிட்டத்தட்ட தடை செய்யப்பட்ட புத்தகங்கள் போலத்தான். அதாவது காவிரி நமக்கே சொந்தம் என்கிற புத்தகம். அதாவது உலக நியதிப்படி சட்டப்படி ஒரு ஆறு எங்கே உற்பத்தியாகிறதோ அவர்களுக்கு சொந்தமில்லையாம். அது எங்கே முடிகிறதோ அவர்களுக்கே சொந்தமாம். அப்படித்தான் அதில் சொல்லப்படிருக்கும். அதற்க்கான எல்லா சட்ட விளக்கங்களுடனும் சொல்லியிருக்கும் அந்த புத்தகத்தில். எல்லாமே அது மாதிரியான புத்தகங்கள் தான்.
அதயெல்லாம் விடுங்கள்! ஒரு நாள் " தம்பிகளா ராத்திரி சாப்பிட வேண்டாம், நாம சென்னை கிளம்பனும் நாம ஒரு முக்கிய "உண்ணா விரத போராட்டத்துக்காக" செல்ல நேரிடும்" என்றார். அதாவது அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜியார் அவர்கள் அவரின் டிஜிபி மோகன் தாஸ் என்கிர மீசைக்கார( கேரள)டிஜிபி. மக்களுக்கு எப்படி புரிய வைக்கனும்ன்னா (கவிஞர் ஆசாத் கோவிக்க கூடாது, ஏனானில் பத்மனாபபுர அரண்மனையை குஷ்பு வருஷம் 16 படத்தில் குளித்த இடம் என்று சொல்லி கைட்ஸ் அறிமுகம் செய்ததால் ரொம்ப கோவமா இருக்கார்) இப்போது சீரியல்களில் வரும் நீண்ட முடியுடைய பெண் பிருந்தா தாஸ்ன் அப்பா தான் மோகன் தாஸ்! அந்த மோகன் தாஸ் உத்தரவுப்படி இரவோடு இரவாக "விடுதலைப்புலிகளின்" வயர்லெஸ், மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
காலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி "தம்பி" பனகல் பார்க்கிலே உண்ணா விரதம் இருக்கின்றார். நாங்கள் 10 பேர் முதன் முதலாக அந்த இடத்துக்கு சென்று இருக்கின்றோம். வக்கீலை தனியே அழைத்து பேசுகிரார் தம்பி. முதன் முதலில் அப்போதுதான் பார்த்தேன். பிரம்மித்தேன். பிரம்மித்தேன் அப்படி ஒரு பிரம்மிப்பு. அப்போது என் மாணவர்கள் என வக்கீல் சொல்லும் போது ஒவ்வொறுவருடனும் கை கொடுக்கிறார்.துரதிஷ்டவசமாக நான் அப்போது அங்கே இல்லை. திரும்ப வந்து பந்தலில் உட்காரும் போது மீதி நண்பர்கள் சொன்னார்கள். நான் வாய்ப்பை இழந்த ஒரு முக்கிய நிகழ்வு அது!!! தமிழீழம் மலர்ந்த பின் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டாமலா போகும்? காத்திருப்பேன்!!!
இந்த நிகழ்வுகள் எல்லாம் வந்து இரவு தூக்கம் போயின எனக்கு!
எனக்கு இந்த துபாய் சந்திப்பு நல்ல ஒரு மலரும் நினைவுகளின் தூண்டுகோலாக இருந்தது!!