பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 15, 2008

வீரசேகர விலாஸும், மாமாவும், சீட்டு கச்சேரியும் கூடவே ஒரு கல்யாணமும்!!! பாகம் # 1

இங்கே நான் சொல்ல போவது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நான்கு விஷயங்கள் பற்றிய ஒரு கோர்வை நிகழ்வை. எங்கள் ஊரில் அப்படி ஒரு சத்திரம் இருப்பது அனேகமாக இந்த தலைமுறைக்கு தெரிய வாய்பில்லை. அந்த "வீரசேகர விலாஸ்" முக்கியமான வடக்கு வீதி, சின்ன கடை தெருவில் இருந்தும் அதன் வெளித்தோற்ற தன்னடக்கத்தின் காரணமாக அந்த வழியே போய் வருபவர்களை அத்தனை கவர்ந்தது இல்லை.

சாலையில் இருந்து திடீரன உயர்ந்து தோன்றும் அந்த 12கருங்கல் படிகள் வழியே மேலே ஏறினால் மேல் படியில் இருந்து பேருந்து ஓட்டுனரோடு ஒரு சின்ன கை குலுக்கல் நிகழ்த்திவிடலாம். அந்த சத்திரத்தின் மேல் படியில் ஏறி உள்ளே நுழைந்ததுமே வலதும் இடதுமாக மூன்று அடி ஆழ முற்றங்கள் இருக்கும். அதிலே இரு பக்கமும் தண்ணீர் குழாய்கள். அந்த முற்றங்களுக்கு மேல் கூறை ஏதும் கிடையாது. அந்த நடை பாதையை தாண்டினால் அந்த முற்றங்களுக்கு நேர் எதிர் பதமாக வலது இடது பக்கமாக உயர்ந்த திண்ணைகள். ஒவ்வொறு திண்ணையிலும் குறைந்தது ஐம்பது ஐம்பது பேர் படுத்து உறங்கலாம். அந்த திண்ணையை தாங்கும் 18 ரங்கூன் மத்தள தூண்களின் மேல் அந்த தாங்கு கட்டையில் கூட மர வேலைப்பாடு தொட்டு பார்க்க தூண்டும். திண்ணையில் சிமெண்ட் வண்ணம் வலது பக்கம் சிகப்பு, இடது பக்கம் நீலம் என சிமெண்ட் பாலில் மெழுகி குளுமையின் உச்சமாக இருக்கும். அதன் சுவர் அத்தனை வழவழப்பாக இருப்பதற்கு இதோ நாளை காலை நடை பெற போகும் கல்யாணத்திலே எத்தனை பேர் எத்தனை காரணங்கள் சொல்ல போகிறார்கள் என பார்ப்போம். தலை வைத்து படுக்க தலையனை மாதிரி கட்ட பட்டிருக்கும். இப்போது இந்த திண்ணை வரை போதும். ஒரேயடியாக வீர சேகர விலாஸ் பற்றி எழுதினால் இந்த தலைப்பு நம்மை பார்த்து சிரிக்கும்.

அந்த "வீரசேகர விலாஸ்" என்பது நாட்டுகோட்டை நகரத்தார் வீடு தான். ஆனால் அது கல்யாண சத்திரமாகி போனது தனி கதை. காரைக்குடி நகரத்தார், வைத்தீஸ்வரன் கோவில் தரிசனத்துக்கு போகும் போதும், தங்கள் மூதாதையரான பட்டினத்தார் வாழ்ந்த பூம்புகார் என்கிற காவிரி பூம் பட்டினத்துக்கும் போகிற வழியில் இளைப்பாற வேண்டி மயிலாடுதுறையில் கட்ட பட்ட வீடாகத்தான் இருக்க வேண்டும் அந்த சத்திரம்.

எங்கள் வீட்டு திருமணம் எல்லாமே அந்த சத்திரத்தில் தான் நடக்கும். கல்யாண பத்திரிக்கை தவிர வேறு எங்கும் "வீரசேகர விலாஸ்" என்னும் பெயரை நாங்கள் பயன் படுத்தியது கிடையாது. எங்களை பொறுத்த வரை அது செட்டியார் சத்திரம் தான். ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர எல்லா மாதத்திலும் எங்கள் வீட்டு திருமணம் அங்கே கண்டிப்பாக உண்டு. நாளை நடக்க போவது ஒரு அண்ணன் கல்யாணம்.

பெண் வீடு திருப்புகலூர் என்னும் சைவ ஸ்தலமாம். அந்த மணமகள் எங்களுக்கு மிகவும் நெருக்கமான் சொந்தம் தான் என இன்று மாலை வள்ளியம்மை அத்தை விலாவாரியாக "அரை மணி நேரம்' என் அம்மா, பெரியம்மா, சித்தி கூட்டத்துக்கு மத்தியில் உட்காந்து விளக்க போகிறார்கள். இருந்தும் அவர்களுக்கு அது புரிய போவதில்லை என்பது வேறு விஷயம்.

இங்கே வள்ளியம்மை அத்தையை பற்றி சொல்ல வேண்டியது கட்டாயமாக போய் விட்டது. அத்தை ரொம்ப ராசி என்று அத்தையே கூறி கொள்வதாலும் எங்கள் பெரிய தாத்தாவையே நேருக்கு நேர் நின்று "அண்ணா சாப்பிட வாங்க" என கேட்ட சரித்திரம்(?) அவர்களுக்கு இருந்ததாலும் வேறு வழியே இல்லாமல் எல்லோருமே மரியாதை கொடுப்பார்கள். அத்தை என்றால் எங்களுக்கு அத்தை இல்லை, எங்கள் அப்பா, பெரியப்பா, சித்தப்பாவுக்கு எல்லாம் தான் அத்தை. ஆனால் நாங்களும் அத்தை என்றே கூப்பிட்டு பழகி விட்டது.அதனால் கிட்ட தட்ட ஊருக்கே அத்தை. அத்தைக்கு அடையாளம் என பார்த்தால் சிகப்பு கல் 7 கல் வைத்த தோடு, வைர மூக்குத்தி, வெற்றிலை போட்டு சிவந்த உதடுகள், ராசிபுரம் பம்பர் பட்டு புடவை, காலில் முத்து வைத்த மெட்டி, ஆனால் செறுப்பு அணிவதில்லை. தலைமுடி தும்பை பூவாக அள்ளி செறுகப்பட்டு இருக்கும்.கோல்டு பிரேம் போட்ட கண்ணாடி, கிட்டே போனால் வெற்றிலை வாசனையை விட அதன் கூட சேர்த்து போட்ட கிராம்பும், கத்தைகாம்பும் ஒரு வித ரம்மிய வாசானையை கொடுக்கும். கையிலே ஒரு நெளி மோதிரம், சாதாரன வலையல், கழுத்திலே ஒரே ஒரு முறுக்கு சங்கிலி, இத்தனைக்கும் சிகரம் வைத்தது மாதிரி ஒரு சில்வர் வெற்றிலை பெட்டி. அதன் மூடியில் "M. வள்ளியம்மை" என பொறிக்க பட்டிருக்கும். அதன் மூடியை திறந்து பார்த்தால் அது இரண்டாக பிரிக்க பட்டு இருக்கும். அதன் உள்ளே வெள்ளியால் ஆன ஒரு சுண்னாம்பு கரண்டா, வெள்ளியால் ஆன பல்குத்தும் குச்சி, வெள்ளி காதுகுடைப்பான், சின்னதாக ஒரு சிக்கு எடுக்கும் ஒரு வெள்ளி குச்சி இருக்கும். அந்த செல்ல பெட்டியை அத்தையின் கையிலிருந்து பிடுங்கிவிட்டால் அத்தையை அடையாலம் காண்பது மிகவும் கடினம். அத்தைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது காரனமாகத்தான். அத்தைக்கு என்ன தான் வேலை? ஒரு கல்யாணம் நடக்க போவது எனில் அ முதல் ஃ வரை அத்தையின் அதிகாரமே கொடிகட்டி பறக்கும். பெண்ணோ மாப்பிள்ளையோ சத்திரத்தின் உள்ளே நுழையும் முதல் சத்திரத்தை காலி செய்துவிட்டு வரும் போது வேலைக்காரி மடியை தடவி எவர்சிலவர் டம்ளரை வெளியே எடுத்து " என்கிட்ட யாரும் ஏமாத்த முடியாது" அப்படீன்னு சவடால் விட்டு விட்டு சத்திரத்தை காலி செய்யும் வரை அத்தையின் அட்டகாசங்கள் தான். ஆனால் அத்தையின் வெள்ளி சாமன்களிள் ஏதாவது ஒன்று வழக்கம் போல ஒவ்வொறு கல்யாணத்திலேயும் காணாமல் போவது தனி விஷயம்.

சத்திரத்தை பற்றி அறிமுகம் செய்தாகிவிட்டது. நாளை நடக்கும் திருமணம் பற்றியும், அத்தை பற்றியும் சொல்லியாகி விட்டது. மாமாவும் சீட்டு கச்சேரியும் பற்றி இப்போது பார்க்கலாம். இதோ திருவீழிமிழலை கிராமத்தில் இருந்து தென்பாதி மெயின் ரோட்டுக்கு ஆடி அசைந்து வருவது தான் மாமா. அவர் கையிலே பாருங்கள் ஒரு பை, அதிலே வெற்றிலை சமாச்சாரங்கள் அடங்கின ARC ஜுவல்லரியின் ரெக்சின் பேக், அதன் உள்ளே மூலவியாதிக்கான களிம்பு, வெள்ளி பொடிடப்பா, அதை தவிர குழந்தை மாதிரி சுற்றி வைத்திருக்கிறாரே அது நேற்று கும்பகோணத்தில் இருந்து "டவுன் கிளப்பில்" இருந்து வக்கீல் சோமசுந்தரத்திடம் சொல்லி வாங்கி வந்த சீட்டு கட்டு, சிங்கப்பூர் கட்டு. பிளாஸ்டிக் கட்டு. "சுத்து வட்டாரத்திலே ஒருத்தன்கிட்ட கிடயாதுல்ல" என மாமா சொடக்கு போட்டு சொலவது பார்க்க நன்றாக இருக்கும். மாமா ஆற்றை தாண்டி பாலத்தில் வரும் போதே "கோல்டன்" நின்று விடும். மாமாவின் தகவல் பரிமாற்றம் அத்தனை சுத்தம். நேற்று கும்மோணம் போய் வரும் போதே இன்று மதியம் 2 மணி வண்டிக்கு மாயவரம் வரும் விஷயத்தை சொல்லி விடுவார். ஓட்டுனரும் காத்திருப்பார். வந்து பேருந்தில் ஏறி உட்காந்ததுமே ஓட்டுனரிடம் கேட்பார் " ஒன் மொதலாளி ஊர்ல தானே இருக்காரு. சொல்லிடு நான் இன்னிக்கு செட்டியார் சத்திரத்திலே தான் இருப்பேன்ன்னு" இதோ இன்னும் 40 நிமிடத்தில் மாமாவும் வந்து நம் ஜோதியில் ஐக்கியமாக போகிறார்!

22 comments:

  1. வீரசேகர விலாஸில் ஏதாவது கல்யாணம் நடக்காதா? உள்ளே போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுவரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மன்னிக்கவும்... நேற்றுவரை.

    ReplyDelete
  2. அபிப்பா.. வந்தாச்சா.. உடல் நிலை எப்படியிருக்கு.. சவுக்கியம்தானே..

    கல்யாணம், காதுகுத்துன்னாத்தான் சொந்த ஊருக்கு வருவீக போலிருக்கு..

    ராத்திரி சீட்டுக் கச்சேரியா.. ஜமாயுங்க..

    அப்புறம் மறக்கமா போன் பண்ணுங்க.. பேசணும்..

    //அபி அப்பா said...
    PINNUUTTA KAYAVALITHANAM:-))//

    இதெல்லாம் அபிப்பா பண்ணலாமா..

    ReplyDelete
  3. muthu, unmai thamizaa vaanga vanakkm. unmai thamizan phone number mariducha? ring pooha maattangkuthu? pls give me your number

    ReplyDelete
  4. நீங்க பதிவர் சந்திப்புக்கு போகலியா? நீங்க சிறப்பு விருந்தினரா வரீங்கன்னு லக்கிலுக் சார் போட்டிருந்தாரு?

    ReplyDelete
  5. நான் திங்கக்கிழமை வர்றேன்:):):)

    ReplyDelete
  6. நீஈஈஈளமா இருக்கேன்னு படிச்சிட்டு வந்துருப்பாங்க எல்லாரும் அதுகுள்ள என்ன அவசரம் உங்களுக்கு..

    எனக்கு செட்டியார் சத்திரமும் தெரியாது ... :) இதைப்படிச்சுத்தான் தெரிஞ்சுக்கிரேன்..

    ReplyDelete
  7. அபிஅப்பா பன்ச் ஒன்றும் காணோம். ஆனால் பின்னால் வரும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

    நாட்டில இருக்கீங்களா? துபையிலா?
    நாட்டில் மீட்டிங்ல சீப் கெஸ்ட் என்று போர்டு பார்த்தேனே!

    ReplyDelete
  8. ஆமாம் ஸார்..

    மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. தெரிவிக்க மறந்துவிட்டேன்.

    எனது புதிய எண் 9840998725

    ReplyDelete
  9. அண்ணே சின்னகடைத்தெருவுல இருக்கற அந்த சத்திரம் நான் சொல்ற கணக்குப்படி கரீக்டான்னு ஒரு தடவை செக் ப்ண்ணிக்கோங்க!

    பொரிகல்லை கடைக்கு பக்கத்துல
    விஜய் காபி பாருக்கு எதிர்ல
    கமலா காபி அப்பா கடைக்கு பக்கத்துல இதுதானே? (அந்த ஏரியாவை சுத்தி 3 சத்திரம் இருக்கு அதுல இது 1தான் அம்புட்டு ஹைட்டு!)

    :))

    ReplyDelete
  10. அண்ணே, நீங்க என் குருநாதர் மாதிரி:):):) நான்கூட இதே மாதிரி ஒரு விஷயத்தை வெச்சு மூணு எபிசோடு நல்லா தீட்டினேன்:):):)

    ReplyDelete
  11. // இந்த தலைமுறைக்கு தெரிய வாய்பில்லை//

    முத்து(கயல்விழி) பாத்தீங்களா, நீங்க இப்டி சொன்ன உடனே, ஜாலியா தெரியாதுன்னு பின்னூட்டிட்டாங்க:):):)

    ReplyDelete
  12. அபி அப்பா, உடம்பு தேவலையா. கல்யாண கச்சேரி களை கட்டட்டும்.

    ReplyDelete
  13. நானும் ஐக்கியம் ஆகிக்குறேன்...

    ஜோதில... )

    ReplyDelete
  14. மாயவரத்தில் படித்தேன் என்பதால்.

    நானும் உள்ளேன் அய்யா (அபி அப்பா)

    ReplyDelete
  15. சூப்பரா எழுதி இருக்கீங்க.

    அடுத்த பார்ட்டுக்கு வெய்டீஸ்....

    ReplyDelete
  16. //ஆடி, புரட்டாசி, மார்கழி தவிர எல்லா மாதத்திலும் எங்கள் வீட்டு திருமணம் அங்கே கண்டிப்பாக உண்டு. நாளை நடக்க போவது ஒரு அண்ணன் கல்யாணம்.//

    ம்ம்ம்ம், உடம்பு இப்போ எப்படி இருக்கு? மெயிலுக்கும் பதில் வராது, இந்தப் பின்னூட்டத்துக்கும் பதில் வரப் போறதில்லை, ஊர்ப்பக்கம் வந்திருக்கீங்களா என்ன?? அண்ணனுக்கே இப்போத் தான் கல்யாணமா?? ஆச்சரியமா இருக்கே? சஷ்டி அப்த பூர்த்தியா, இல்லை நிஜமாவே கல்யாணம் தானா???

    ReplyDelete
  17. ஆகா வயசாயிட்டாலே மலரும் நினைவுகள் தானா?
    லீவில் புள்ளைகுட்டியக் கவனிக்காம பதிவென்ன கிடக்கு?

    ReplyDelete
  18. அபி அப்பா,

    நான் உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு இது முற்றிலும் வித்தியாசமானது. அருமையான நடை.. தெளிவான நீளமான விளக்கங்கங்கள். மனிதர்களை மட்டுமல்லாது அஃறிணைகளையும் கண்முன் நிறுத்தும் வர்ணனைகள். அருமையாக இருக்கிறது. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  20. என்ன ஆச்சு அபி அப்பா ? வீர சேகர விலாசை தொடருகிற எண்ணம் இல்லையா அல்லது நேரம் இல்லையா? இப்படி எனகேன்னானு கிடப்புல போட்டுட்டுப் போயிட்டிங்க அதை!!! சீக்கிரம் அதை எழுதி முடிங்க...அப்படியே நேரம் இருக்கும் போது புதுசா எழுத ஆரம்பிச்சிருக்கற எங்க பக்கமும் எட்டிப் பார்த்துட்டு ஏதாச்சும் சொல்லிட்டுப் போனா நல்லதே !?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))