போன மாசம் கீதாம்மா,சாம்பு சார் தம்பதி சமேதரமா வீட்டுக்கு வந்தாங்க. அது பத்தி கீதாம்மா பதிவே போட்டாச்சு.விஷயத்துக்கு வரேன். வந்தவங்க அபிஅம்மாவை பார்த்து "நீ பாடுவியாம்மா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாங்க. எனக்கு பக்குன்னு ஆகிபோச்சு.நல்லவேளை அபி சமாளிச்சு "அம்மாவுக்கு பாட்டுவுடத்தான் தெரியும் பாட்டு பாட வராது"ன்னு அவங்களை காப்பாத்திட்டா. உடனே எனக்கு நியாபகம் வந்தது என் கல்யாணத்தின் போது நடந்த பெண்பார்க்கும் கலாட்டா தான்.
அப்போ அவங்க எல்லாம் சிதம்பரத்தில் இருந்தாலும் அவங்க பூர்வீக வீடு என் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி பக்கத்து தெரு தான். அங்க வச்சு தான் பெண்பார்க்கும் படலம் என்பதால் போக்கு வரத்து செலவும் இல்லாமல் நடந்தே போய் விடலாம் என்பதாலும் என் வீட்டில் இருந்து பாட்டி முதல் செல்ல பிராணிகள் வரை எல்லாரும் ஒரு நாள் மாலை பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட கிளம்பியாச்சு. பாட்டி தான் முதலில் பேச்சை ஆரம்பிச்சாங்க. "பொண்ணுக்கு பாட தெரியுமா? ஏன்னா நாங்க பெரிய சங்கீத குடும்பமாக்கும். என் கல்யாணத்துக்கு செம்பை வைத்தியநாத பாகவதர் கச்சேரி, என் புள்ள கல்யாணத்துக்கு கே.பி.சுந்தராம்பா கச்சேரி தெருவ அடச்சி பந்தல் போட்டு..."ன்னு இழுத்து கிட்டே போனாங்க. பாட்டி இந்த விஷயங்களை நாலு பேர் கூடி இருக்கும் எல்லா இடத்திலும் சொல்லி விடுவது வழக்கம். அது கணபதி ஸ்லோகம் மாதிரி அவங்களுக்கு. அதுகுள்ள சுதாரகுநாதன் மாதிரி அமர்க்களமா அபிஅம்மா ஆரம்பிச்சாச்சு. அன்னிகுன்னு பார்த்து அவங்களுக்கு ஜலதோஷமாம். ஏற்கனவே குரல் அபியும் நானும் படத்தில் அபிஅம்மாவா நடிக்கும் ஐஸ்வர்யா குரல் மாதிரி இருக்கும். இதிலே ஜலதோஷம் வேற. அதல்லாம் பிரச்சனை இல்லை. பாட்டிக்கு எதுவுமே பத்து பர்செண்ட் தான் காதில் நுழையும். என்ன நடக்க போவுதோ!
அழகான ராஜாஜியின் கீர்த்தனை "குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா" பாடி சுரம் பாடி முடிச்சப்ப எனக்கு ஜுரம் அடிச்சுது லைட்டா. உடனே பாட்டி பக்கத்தில் இருந்த என் பெரிய அக்காவிடம் "யாரது மூர்த்தி அவனுக்கு என்ன குறையாம்? பொண்ணு என்னவோ பேசி கிட்டு இருந்தாளே"ன்னு கேட்க அக்காவுக்கு வேர்த்து விட்டது. உயிரை விட்டு சுரம் பாடி முடிச்ச பெண்ணை பார்த்து ஏதோ பேசினாளாமேன்னு பாட்டி கேட்டது மட்டும் தெரிஞ்சா இந்த கல்யாணம் பணால் ஆகிடுமேன்னு கவலை. போதா குறைக்கு இன்னும் ஒரு விஷயம் என்னன்னா என் மச்சினன் பேர் மூர்த்தி. உடனே சின்ன அக்கா பாட்டியிடம் "மூர்த்திக்கு என்ன குறை! கிளியை வளர்த்து ஓணான் கையிலே குடுக்கிறோம்ன்னு தான் குறைன்னு முனு முனுக்க எனக்கு செம கோவம் வந்துடுச்சு. ஒல்லியா இருந்தா ஓணானா? இரு வீட்டிலே வந்து உனக்கு கச்சேரி வச்சுக்கறேன்னு நினச்சுகிட்டேன். பாட்டி அப்பவும் "சரி சரி பேசினது போதும் குரல் நல்லா இருக்கு. இந்த காலத்து பிள்ளைகளுக்கு எங்கே கர்நாடக சங்கீதம் தெரிய போகுது. ஒரு சினிமா பாட்டு பாடும்மா"ன்னு சொன்ன போது ஒட்டு மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் அப்படியே வாயடைச்சு போச்சு.
உடனே அபிஅம்மா அப்போ ரொம்ப பிரபலமா இருந்த கார்த்திக் ரேவதி நடிச்ச படத்துல இருந்து என்னவோ ஒரு பாட்டு ஆடியிலே சேதி சொல்லி ஆவணியிலே தேதி வச்ச மன்னவரு மன்னவரு தான்"ன்னு ஏதோ ஒரு பாட்டு. அவங்க இருந்த கோவத்திலே என்னை பார்த்து "மண்ணு அவரு மண்ணு அவரு" தான்னு பாட ஒரு வழியா பெண்பார்க்கும் படலம் முடிந்து கல்யாணம் முடிந்து எல்லாம் நல்லா தான் போய் கிட்டு இருந்துச்சு.
பாட்டி அடிக்கடி சொல்லிக்கும் வாசகம் 'நான் ஒரு ராஜயோக்காரி தெரியுமா"ன்னு தான். அதுக்காகவே நாங்கள் பாட்டியை ராஜயோகம் ராஜயோகம்ன்னு பேர் வச்சு கிண்டலடிப்போம். அப்படிப்பட்ட பாட்டி போய் சேர வேண்டிய காலமும் வந்தது. பாட்டிக்கு எல்லோரும் துளசி தண்ணி ஊத்தியும் இழுத்து கிட்டே இருந்தது. வேற ஒரு பாட்டி "என்னவோ அடி மனசுல ஆசை கிடந்து அடிச்சுகுது அதான் போக மாட்டங்குது"ன்னு அப்போ வந்த ஏதோ கரிசல் காட்டு பட டயலாக் விட எல்லாரும் ஆளுக்கு ஆள் ஒரு யோசனை சொல்ல கடைசியாக ராஜயோக பாட்டிக்கு சங்கீத ஆசை தான் காரணம்னு முடிவுக்கு வந்தாங்க. பாட்டி பரலோகம் அனுப்பனும் செத்த வந்து பாடிட்டு போங்கன்னா ஜேசுதாசை கூப்பிட முடியும். யார் வருவாங்க. சரி எதுனா தேங்கா மூடி பாடகரை கூப்பிட்டு பாடவைத்து சந்தோஷமா அனுப்பி வைக்கலாம் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க அடுப்படியில் சமைத்து கொண்டிருந்த என் ஆத்துக்காரி "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா"ன்னு அபஸ்வரமாக பாடிகிட்டு இருக்க கூடத்தில் "நி நி நி"ன்னு பாட்டி ஈனஸ்வரத்தில் முனகி கொண்டே போய் சேர்ந்தாங்க்க.ராஜயோக பாட்டிக்கு வந்த விபரீதத்தை பார்த்தீங்களா? இது தான் விபரீத ராஜயோகமா? அதுவரை அமாவாசைக்கு மட்டுமே காக்கா பாட்டு பாடி காக்கை வரவழைத்து விரதம் இருந்த என் அப்பா அதன் பின் பவுர்ணமிகும் காக்கா பாட்டு பாடி விரதம் இருப்பது போல் ஆகிவிட்டது.
நான் மெதுவாக அபிஅம்மாவிடம் வந்து "பாட்டி உன் பாட்டை நிப்பாட்டு நிப்பாட்டுன்னு சொல்ல தான் "நி நி நி"ன்னு சொல்லிட்டு செத்து போனாங்க"ன்னு சொல்ல அதுக்கு அவங்க "இல்ல இல்ல நான்பாட்டுக்கு பாடிகிட்டு இருந்தேன். அவங்க அதுக்கு "நீ தானா அந்த குயில்"ன்னு எச பாட்டு பாட நினைச்சு அதுவே அவங்களுக்கு எம பாட்டாயிடுச்சு"ன்னு கூலா சொன்னாங்க.
அதிலே இருந்து அபிஅம்மா பாட்டு பாடுவதில்லை. ஆனா ஸ்வாமி கும்பிடும் போது மட்டும் பாடுவாங்க. அப்படித்தான் ஒரு நாள் வேப்ப மரத்திலே பால் வடியுதுன்னு ஒரு கூட்டம் தெருவிலே ஓடி கொண்டிருந்தது. அதை கேட்ட அபி "அட ராமா எங்க அம்மா ஸ்வாமி கும்பிட்டு பாடும் போது எல்லா ஸ்வாமி படத்தின் கண்ணிலும் ரத்தமே வருமேடா. டிக்கெட் போட்டா ஒன்பது தலைமுறைக்கு உட்காந்தே சாப்பிடலாமேடா"ன்னு சொல்ல அன்றிலிருந்து அபிஅம்மா மனசுக்குள்ளேயே பாட ஆரம்பிச்சிட்டாங்க.
ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா? தம்பி பிறந்த பின் ஒரு தடவை நான் ஊருக்கு வந்தப்ப தம்பி வித்யாசமா தூங்கினான். அபியாவது விரலை வாயில் வைத்து சூப்புவாள். இவனோ வித்யாசமா இரண்டு கட்டை விரலையும் காதில் வைத்து கொண்டு தூங்கினான். ஏன் இப்படின்னு கேட்டதுகு அபி "அப்பா அவன் விரல் சூப்புறான்ப்பா"ன்னு சொன்னா. வாயில் தானே வச்சு சூப்புவாங்கன்னு கேட்டதுக்கு "அம்மா தாலாட்டு பாடுதுன்னு அவன் இப்படி செய்ய ஆரம்பிச்சுட்டான்ன்னு சொன்னா.
இப்படியாக செல்வராகவன் சோழனை ஏழு கண்டம் தாண்டி அடைச்சு வச்ச மாதிரி அபிஅம்மாவின் பாட்டு ஆசையை ஒட்டு மொத்த குடும்பமே அடைச்சு வச்சுட்டோம். இந்த நேரத்தில் தான் கீதாம்மா அந்த பாடகி ஆசையை அபிஅம்மாவிடம் இருந்து "நீ பாட்டு பாடுவியா"ன்னு கேட்டு கிளறி விட்டுட்டாங்க. அவங்க வந்துட்டு போனதில் இருந்து அபிஅம்மா வரும் டிசம்பரில் நான் எதுனா சபாவில் அட்லீஸ்ட் கடவுள் வாழ்த்தாவது பாடியே தீருவேன் என சபதம் எடுத்துட்டாங்க. மங்கம்மா சபதம்???
"கீதாம்மாவை பார்த்தீங்களா? ஷாட்சாத் பார்வதி தேவி மாதிரி என்ன ஒரு தேஜஸ் முகத்திலே. என்னை பார்த்ததும் நான் பாடுவேன்னு டக்குன்னு கண்டு பிடிச்சுட்டாங்க" ன்னு ஒரே கீதாம்மா பேச்சு தான் வீட்டிலே. நான் அதுக்கு "கீதாம்மாவுக்கு இப்படி ஒரு ரசிகை இருப்பது மட்டும் பெங்களூரு அம்பிக்கு தெரிஞ்சா ரொம்ப ரென்சன் ஆகிடுவாருன்னு சொன்னேன். அதுக்கு அபிஅம்மா "அம்பின்னு சொன்ன உடனே தான் நியாபகம் வருது. நீங்க அன்னியன் படத்துல சதா சபாவிலே பாட அம்பி என்னமா ட்ரை பண்ணினார். அது சரியா வரலைன்னு அன்னியனா மாறி எப்படி சான்ஸ் வாங்கினார். அந்த அன்னியன் மாதிரி எனக்கு சபாவிலே நீங்க சான்ஸ் வாங்கி தந்தா என்னவாம்?"ன்னு கேட்க எனக்கு சிரிப்பு தான் வந்தது. அன்னியன் மாதிரி முடி வளர்கலாம். ஆனா நான் சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது. எனக்கும் பேக்குக்கும் பல ஜென்மமாகவே ஸ்னானப்ராப்தி என்பதே கிஞ்சித்தும் இல்லை. இதிலே சிக்ஸ் பேக்குக்கு எங்க போறது.
அப்படியே நான் போய் யங்ஞ்யராமன்(கண்டிப்பா ஸ்பெல்லிங் மிஸ்டேக்) கிட்ட போய் நின்னானும் பூச்சாண்டி பூச்சாண்டின்னு அவர் பேரனுக்கு விளையாட்டு காட்ட கட்டி தூக்கிகிட்டு போனாலும் போவார். நான் பூச்சாண்டி இல்லைன்னு வெத்தலை மேலே சத்தியம் செஞ்சு நான் தான் அன்னியன்ன்னு சொன்னா கூட எந்த சனியனா இருந்தா எனக்கு என்ன என்பது போல பார்ப்பார். எதுனா மிராக்கிள் நடந்து அவர் நல்ல மூட்ல இருந்தா "என்ன வேண்டும்னு கேட்பார். நான் என் மனைவி சபாவிலே பாடனும் இல்லாட்டி நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னா உடனே "கச்சேரி சான்ஸ் இல்லை. வேண்டுமானா குத்து விளக்கு ஏத்து"ன்னு சொல்லுவார். புரியாத மனுஷன். "அய்யோ மாமா நான் குத்து விளக்கு ஏத்துவேன்ன்னு சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை. உங்களை தூக்கி குத்து விளக்கில் ஏத்துவேன்"ன்னு சொல்லி புரிய வைக்க எனக்கு தாவு தீர்ந்துடும்.
அப்பவும் அவர் 'என் சாய்ஸ் குத்து விளக்கு தான். பலபேர் பரலோகம் போவதை விட நான் போய் சேர்ந்துடறேன்"ன்னு சொல்லிடுவார். இதை எல்லாம் அபிஅம்மாவிடம் விளக்கி சொல்லி நான் சான்ஸ் கேட்க இயலாதுன்னு சொன்ன பிறகு "நோ பிராப்ளம். நான் என் அப்பாகிட்டே சொல்லி முத்தமிழ் பேரவையிலே சான்ஸ் வாங்கிக்கறேன். கூட்டம் வர்த்துக்கு மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணிடுங்க. உங்களுக்கு தான் சென்னைல பிளாக்கர்ஸ் எல்லாம் தெரியுமே. நைசா இன்விடேஷன் கொடுத்து அசம்பிள் பண்ணிடுங்க, நான் போய் கச்சேரிக்கு இப்ப முதலே தயாராகிறேன்"ன்னு சொல்லிட்டு போனாங்க.
அய்யோ பாவம் சென்னை பதிவர்கள். வேண்டுமானா இப்படி செய்யலாம். இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாதவங்க லிஸ்ட் எடுத்து இன்விட்டேஷன் அனுப்பிடலாம்ன்னு முடிவு செஞ்சேன். சரி கச்சேரிக்கு தயாராக என்னன்ன கீர்த்தனை சாதகம் பண்ணலாம்ன்னு எழுதிகிட்டு இருக்காங்க. இருங்க என்னன்னு பார்ப்போம்.
1. நல்ல பாக்கு கலர்ல பச்சை ஷேட் அடிக்கிற உடலும் பாக்கு கலர் ஆறு இன்ச் வெள்ளி ஜரிகை பார்டர் (திருபுவனம் பட்டு)
2. புஷ்பராகம் இழைச்ச குண்டு குடை ஜிமிக்கியும், புஷ்பராகம் பன்னிரண்டு கல் இழைச்ச தோடு.
3. துளசி டீச்சருக்கு பிடிச்ச பெண்டண்ட் வித் நெக்லஸ்
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ சாமீ எனக்கு தலை சுத்துது.
March 23, 2010
March 20, 2010
இட்லி + நெய் + ஜீனி 20/03/2010
நான் இன்றைக்கு இத்தனை பெரிய படிப்பாளியாக (??????!!!!!!!) இருக்க நான் படித்த ஔவையார் பள்ளியும் முக்கிய காரணம் என பதிவுலகம் நன்கு அறிந்ததே. என் பள்ளி வாழ்க்கையை அங்கு தான் ஆரம்பித்தேன். இதை கேள்விப்பட்டோ என்னவோ நகராட்சி அந்த பள்ளியை மூடிவிட முடிவு செய்து ஒரு நல்ல நாள் பார்த்து மூடுவிழா நடத்தி என் மீது உள்ள கோவத்தை தீர்த்து கொண்டது. அத்தோடு விட்டார்களா நகராட்சியினர். ஒரு வாரம் முன்பாக அங்கே இருந்த நூலகத்தில் சுவாரஸ்யமாக நித்யானந்தா லீலைகள் படிச்சு கிட்டு இருந்த போது ஔவையார் பள்ளியில் ஏதோ விஷேம் மாதிரி கொடி தோரணம் எல்லாம் கட்டி பிளக்ஸ் போர்டு எல்லாம் வைத்தனர். சரி பள்ளி கூடத்தை திரும்ப திறக்க போகின்றனர் என நினைத்தால் தெருநாய்களுக்கு லுல்லா ஆபரேஷன் செய்யும் விழாவாம். வண்டி வண்டியாக நாய்களை பிடித்து வந்து குடும்ப கட்டுப்பாடு செய்துகிட்டு இருந்தாங்க. சில பேர்வீட்டு நாய்களையும் கூட்டி வந்து நசுக்கி போனார்கள். இதல்லாம் விஷயமில்லை.
இது நடந்தது காலை ஒன்பது மணி இருக்கும். அப்போது ஒட்டன்காலனியில் "மூட்டை"அடித்து விட்டு பிரசவ ஆஸ்பத்திரி மரநிழலில் படுத்து கிடந்த ஒரு மூட்டை பார்ட்டி நாய்களின் சத்தம் தாங்காமல் எழுந்து வந்து என்ன எதுன்னு விசாரிச்சுட்டு போனது. கொஞ்ச நேரம் கழிச்சு தன் மேல் துண்டால் ஒரு தெரு நாயை கட்டி தரதரன்னு இழுத்து கிட்டு வந்தது. நகராட்சி ஊழியர் பேர் என்னன்னு கேட்டதுக்கு அது சொன்ன பதில் "நித்யானந்தா".அடுத்த வேளை மூட்டை அடிக்க காசு இல்லைன்னாலும் அக்குரும்பு பாருங்க.
அங்கு இருந்த எல்லாரும் ஒரு நிமிஷம் குபீர்ன்னு சிரிக்க நான் கேட்டேன் அவனிடம் "ஏன் நித்யானந்தா மேல இத்தனை கொலவெறி?"ன்னு. அதுக்கு அவன் "என் பொண்டாட்டி கோவிச்சுகிட்டு போயிட்டா. அந்த காலிபயலுக்கு நித்தம் ஒரு நடிகை கேக்குதா? அதான் கோவமாயிடுச்சு". ஆக பாருசவேதிதா முதல் இந்த பாமர குடிகாரன் வரை நித்யானந்தா மேல பொறாமை தானே தவிர வேற ஒரு புண்ணாக்கும் இல்லை என்பதே நிதர்சனம். வாழ்க கலாச்சாரம்.
*****************
மயிலாடுதுறை காவிரி பாலத்தை இடித்து புதிதாக கட்ட போகிறார்கள். நூறு வருடம் மேல் ஆகிவிட்டது அந்த பாலம் கட்டி. ரொம்ப சிரமமமாகிவிட்டது அதை இடிக்க. இத்தனைக்கும் அந்த பாலம் நடுவே ஒரு துண்டு இரும்பு கூட இல்லை. வெறும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை தான். JCB வைத்து தட்டி விடலாம் என நினைத்த பொறியாளர்கள் ஏமாந்து போய் பின்னர் வெடி வைத்து தகர்க்கும்படி ஆனது. அந்த காலத்தில் அன்பநாதபுரம் வகையறா கார்காத்தார் பிள்ளைமார்கள் கடைத்தெருவுக்கு வண்டி கட்டி வருவதற்க்காக தங்கள் சொந்த செலவில் கட்டிய பாலம் என்று பேசிகொண்டார்கள். சரி இடிச்சாச்சு? எப்போ கட்டுவாங்க? இடிக்க மட்டும் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இன்னும் கட்ட நிதி வரலைன்னு சொல்லாம இருந்தா சரிதான்.
*********************
நேபாலின் தலைநகரம் போபால், அமலாவை கண்டுபிடித்தவர் ராஜேந்தர் போன்ற எந்த G.K வும் படிக்காமல் நட்ராஜை அழைத்து கொண்டு அபி ஸ்கூல்க்கு போனேன். வரும் ஜூன் மாதம் திறக்க இருக்கும் பள்ளிக்கு இப்போதே அட்மிஷன். தம்பி கிட்ட சொன்னால் வீண் தகராறு வரும் எனக்கும் அவனுக்கும். அதனால் சொல்லாமல் அழைத்து போனேன். வண்டியை வெளியே நிப்பாட்டி விட்டு தம்பியை பார்த்தால் அவன் சீமாச்சு அண்ணா வீடு வரைக்கும் ஓடிகிட்டு இருந்தான்.அவனை துரத்திகிட்டு அபிஅம்மா ஓடிகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரையும் நான் துரத்திகிட்டு ஓடி கடைசியாக நட்டுவை கோழி அமுக்குவது போல அமுக்கினா அவன் "அய்யோ அம்மா கொல்றாங்களே"ன்னு உச்சஸ்தாயில் கத்தி சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருந்த அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் பல் விளக்காமல் முரசொலி படித்து கொண்டு இருந்த உடன்பிறப்புகள் "என்னது கலைஞரை திரும்பவும் அரஸ்ட் பண்னிட்டாங்களான்னு அவசரமாக டீவி பக்கம் தலை திருப்பினார்கள்.
ஒரு வழியாக ஆளுக்கு ஒரு கையை பிடித்து இழுத்து (இழுத்து தான்) வந்தா கால் இரண்டும் மண்ணில் தேய்த்து கொண்டே வந்தான். பத்தாததுக்கு கொஞ்சம் மணலில் புரண்டும் வந்தான். பிரின்சிபால் மேடம் முன்னே அவனை நிறுத்தும் போது விசயகாந்து படத்தில் வரும் பாகிஸ்தானி வில்லன் கிளைமாக்ஸ்ல வருவது போல இருந்தான். ஒத்தை காலில் ஷூவை காணும். சிரிக்க சிரிக்க பேசி என்னை ஏமாத்தி இங்க கூட்டி வந்துட்டியேடா பாவி. நான் என்ன நீ திங்கிற சோத்தில் மண்ணா அள்ளி வச்சேன் என்றெல்லாம் அவன் பாஷையில் திட்டினான்.
பின்னே அந்த பிரின்சிபால் "அடடா என்னங்க உங்களுக்கு பசங்க சைக்காலஜியே தெரியலை. என் கிட்ட விட்டுட்டு போங்க போய் அபியை பார்த்துட்டு வாங்க. இப்படியா rough handle பண்ணுவாங்கன்னு சொன்னாங்க. நானா rough handle பண்ணினேன்.நடந்த கலவரத்தில் என் சட்டையில் கூடத்தான் நாலு பட்டன் போயிடுச்சு. சேதாரம் இரண்டு பக்கமும் தான்.
*************
நான் அபி வகுப்புக்கு போன உடனே அவங்க மேடத்துக்கு ஏக சந்தோஷம்.என்னை தான் எதிர் பார்த்துகிட்டு இருந்தாங்கலாம். அபி பிசிக்ஸ் வகுப்பில் அத்தனை சிரத்தை இல்லையாம். 89 மார்க் தான் வாங்கினாலாம். கவனம் பத்தாதாம்.(என்னை விட பத்து மடங்கு அதிகமாக மார்க் அபி வாங்கியதுக்காக அவளை நான் கண்டிக்க வேண்டும் என நினைத்து கொண்டேன்) அப்படியாக ஒரு பதினைந்து நிமிடம் அபியை பத்தி புகார் படலம் படிச்சாங்க. பின்ன நான் "ஆமாம் மேடம். ஸ்டீல் விலை தினமும் தங்கம் மாதிரி ஏறிகிட்டே போகுது. சிமெண்ட் சொல்லவே வேண்டாம். மரம் விஷம் மாதிரி எகிறுதுன்னு சொல்லிகிட்டே போக மேடம் ரொம்ப குழப்பமாக "நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீங்க சிமெண்ட், கம்பின்னு உளறிகிட்டு இருக்கீங்களே"ன்னு கேட்க நான் "ஆமாம் மேடம்.வேற வேற தொழில் பார்க்கும் இரண்டு பேர் சந்திக்கும் போது அவங்க அவங்க தொழில்ல இருக்கும் சிரமங்களை பேசி மனசை தேற்றிப்பது சகஜம் தானே. நீங்க உங்க தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னீங்க நான் என் தொழில்ல இருக்கும் பிரச்சனை சொன்னேன்"ன்னு சொல்ல மேடம் "ங்கே" ஆகிட்டாங்க.அனேகமாக அடுத்த தடவை அபிக்கு பிசிக்ஸ் மார்க் பிச்சிக்கும். ஹை ஜாலி.
*****************
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பிரின்சி நட்ராஜை அழைத்து வந்தாங்க. பாவம் எந்திரன் படத்துக்கு கியூவிலே நின்னு டிக்கெட் எடுத்த மாதிரி அத்தனை ஒரு பாவமா இருந்தாங்க. என்னன்னு கேட்டதுக்கு "பாவம் இந்த வயசுல குழந்தையை ஸ்கூல்ல போடனுமா? ஒரு பத்து வருஷம் பின்ன போட கூடாதா"ன்னு கேட்டாங்க. அது என்ன கணக்கு பத்து வருஷம்? ஓ அவங்களுக்கு சர்வீஸ் இன்னும் பத்து வருஷம் இருக்கும் போலருக்கு.
**************
உலக கனிமொழி மாநாடு எல்லாம் நடக்க போவுது. என் பங்குக்கு எதுனா கொளுத்தி போட்டா நல்லா இருக்குமேன்னு நினச்சுகிட்டே இருந்தேன். தமிழ் தாத்தா உ.வெ சாமிநாதய்யருக்கு சொந்த வீடுன்னு ஒன்னு இருந்துச்சு மாயவரத்திலே. இப்போ மணிகூண்டு அருகே இருக்கும் வெரைட்டிஹால் ஜவுளி கடை தான் தாத்தாவோட வீடு. ஒரு சேட் அதை வாங்கி ஜவுளி கடை நடத்தி வர்ரார். அந்த வீட்டை மாநாட்டின் ஒரு அம்சமாக அரசு வாங்கி ஒரு மணி மண்டபம் கட்டி நாலுபேர் வந்து காதலிக்கும் இடமா (சென்னை காந்தி மண்டபம் மாதிரி) ஆக்கினா சந்தோஷம். இதை நான் சொன்னதா வெளியே சொல்லிடாதீங்கப்பூ. பின்ன எல்லா சேட்டும் என்னை குண்டுகட்டா ஔவையார் ஸ்கூலுக்கு கூட்டி போயிடுவாங்க! ( அப்பாடா பத்த வச்சாச்சு. இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்:-))
************
Subscribe to:
Posts (Atom)