எங்க ஊர்ல பஸ்ட்டாண்டு பக்கத்திலே இருக்கும் வண்டிகாரதெரு மாரியம்மன் ரொம்ப பவர் புஃல் அப்படீன்னு சொல்லுவாங்க. ஆனா பொதுவாவே எனக்கும் அதுக்கும் ஒரு பனிப்போர் ரொம்ப வருஷமாவே. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி கொடுத்த ஒரு செருப்பை அடுத்த நாளே அந்த கோவிலில் இழந்திருக்கேன். அதன் பிறகு செருப்பு காணாமல் போனதை கிட்ட தட்ட ஆறு மாதம் வரை மறைத்து வச்சிருந்தேனென்றால் அதுக்கு என் சாமர்த்தியம் தான் காரணம்(?) பின்னே அது தெரிந்து வேற ஒரு நல்ல செருப்பால் அடி வாங்கினேன். அதிலிருந்தே அந்த கோவில் பக்கம் போனாலே செருப்பை கழட்டி போட்டு அதன் மேல் ஏறி கொண்டு சாமி கும்பிடுவேன். "அதுக்கு பேசாம போட்டுகிட்டே கும்பிட்டு தொலைக்கலாம்"ன்னுமுனுமுனுத்து போன பெருசை பார்த்து "போய்யா வெள்ரு, இந்த அம்பாள் செமத்தியான பவர்ய்யா, செருப்பு போட்டு கிட்டு கும்பிட்டா கணக்கிலே சுழி தான் கிடைக்கும்" என நினைத்து கொண்டேன். (இல்லாட்டியும் சுழி தான் கிடைக்கும்)அதுக்காக அந்த அம்மனை கும்பிடாமல் இருந்தது கிடையாது.
பின்னே ராதா என் செருப்பை பார்த்துப்பான், நான் போய் கும்பிட்டு வருவேன். பின்னே அவன் போய் கும்பிட்டு வருவான். அங்கே செருப்பு காணாம போவது ரொம்ப சர்வ சாதாரணம். அனேகமா மயிலாடுதுறை பதிவர் எல்லோருமே காணா அடிச்சிருப்பாங்க. கேட்டு பாருங்க.இத்தனை ஏன் ஒரு தடவை செருப்பின் மீது நின்று கொண்டிருக்கும் போதே ஒரு செருப்பு திருடன் "கொஞ்சம் தள்ளிக்கோ"ன்னு பக்தி பழமா நான் கும்பிட்டு கிட்டு இருக்கும் போது செருப்பை தள்ளி கிட்டு போனான். அதிலிருந்து அந்த அம்மன் மேல் எனக்கும் என் மேல் அம்மனுக்கும் செல்ல சண்டை ஆரம்பமாகியது.
விதி வலியது. இன்றைக்கு மயிலாடுதுறையின் ரங்கநாதன் தெரு என அழைக்கப்படும் வண்டிகார தெருவில் ஒரு உறவினர் வீட்டு காது குத்தல்.(நான் வந்த பிறகு இது எத்தனையாவது குத்தல்ன்னு கணக்கு போட்டு பார்க்கனும்) காதுகுத்தல் நம்ம சண்டைக்கார அம்மன் கோவில்ல. சாப்பாடு அவங்க வீட்டிலே. இதை கேட்டவுடனே என் பார்வை பரிதாபமாக என் செருப்பு மீது போச்சு. இரண்டு நாள் முன்ன தான் 499.95 க்கு வாங்கினேன். மீதி 5 பைசாவை டிப்ஸாக கொடுத்து வாங்கின செருப்பு. இந்த தடவை ஏமாற மாட்டேன். நானா அம்மனான்னு பார்த்துடுவோம்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியமே வந்துடுச்சு. காலை காதுகுத்தலுக்கு கிளம்பும் போதே சரியா ஸ்கெட்ச் போட்டுட்டேன் மனசுக்குள்ளே. அந்த பூக்கார அம்மாவுக்கு பத்து ரூபாய் கொடுத்து ஸ்பெஷலா பார்த்துக்க சொல்லனும் என்றெல்லாம்.
ஆச்சு காலை 9- 10.30க்கு காது குத்தல். ஜபர்தஸ்த்தா போனேன். அம்மனை ஒரு அலட்சிய பார்வை பார்த்தேன். கோபிநாத் மாதிரி "நீயா நானா?"ன்னு மனசிலே நினைச்சுகிட்டேன். பூக்கார அம்மா கிட்ட பத்து ரூபாய் வெட்டினேன். அது செருப்பை எடுத்து தனியா பாதுகாப்பா வச்சிகிடுச்சு.கோவில் உள்ளே போனவன் திரும்ப வந்து மளிகை கடை பையன் கிட்ட ஒரு ஐந்து ரூபாய் கொடுத்தேன் பார்த்துக்க சொல்லி. திரும்பவும் ஒரு அலட்சிய பார்வை அம்மன் மேலே.
காதுகுத்தல் நடக்கும் போது இரண்டு தடவை வந்து பார்த்தேன். இருந்தது. எனக்கு ஒரு கெட்ட குணம். போட்டின்னு வந்துட்டா ஜெயிக்கனும். அதிலேயே வெறியா இருப்பேன். இன்னிக்கு வீட்டுக்கு இதே செருப்போடத்தான் போவேன்."பார்த்தியா நான் ஜெயிச்சுட்டேன்"ன்னு ஒலிம்பிக் மெடல் மாதிரி செருப்பை தூக்கி பொண்டாட்டி கிட்ட காமிப்பேன். காது எப்ப குத்தினாங்கன்னு எல்லாம் கவலையே படாமல் மனசு செருப்பு மேலயே இருந்துச்சு. விழா முடிந்தது. எல்லாருக்கும் முன்னாடி ஓடி வந்து செருப்பை பார்த்தேன். அப்பாடா ஜெயிச்சாச்சு. அந்த பூக்கார அம்மாவுக்கு இன்னும் ஐந்து ரூபாய் கொடுத்தேன். மளிகை கடை பையனுக்கு இன்னும் ஐந்து ரூபாய் அடித்து விட்டேன். இந்த தடவை ரொம்ப இளக்காரமாக அம்மனை பார்த்தேன். என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்துச்சு.(எடுத்த காரியத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது இந்த பதிவை படிப்பவர்களுக்கு ஒரு மெஸேஜாக சொல்லிக்கிறேன்)
மெதுவா வீடு வந்து சேர்ந்தேன். சைக்கிள் சாவியை சாவி ஸ்டேண்டில் மாட்டினேன்.
"என்னங்க ஏன் டல்லா இருக்கீங்க? செருப்பை தொலைச்சாச்சா"ன்னு கேட்டுகிட்டே வாசல் பக்கம் ஓடினாங்க. செருப்பு இருந்துச்சு.
"பின்ன ஏன் டல்லா இருக்கீங்க?"
"அந்த தெருவிலே கூட்டம் அதிகமா இருக்கும். பார்க் பண்ண முடியாதுன்னு வண்டி வேண்டாம். சைக்கிள்ல போங்கன்னு நீ தான சொன்ன?"
"ஆமாம் அதுக்கு என்ன இப்போ?"
"சைக்கிள் காணாம போச்சு. கோவில் வாசல்ல"
May 23, 2010
May 15, 2010
அன்னை சோனியாவின்...............
- நான் ஒன்னும் சொல்லுவதுக்கு இல்லை. இந்த மாயவரத்தான் பதிவை படிங்க.
*******************
மாயவரம் பஸ்ட்டாண்டு எல்லாம் பிரச்சனை முடிஞ்சு போனதா நினைக்கும் பாமர மக்களே! ஹய்யோ ஹய்யோ உலக வரலாற்றிலே முதன் முறையாக இது வரை மயிலாடுதுறை நகராட்சியில் எட்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எங்க ஊர் பேருந்து நிலையத்துக்காக மட்டுமே. மயிலாடுதுறை நகராட்சி என்பது ஒரு காமடி பீஸ். அப்படி ஆக்கியது அபுல்ஹாசன் முதல் தேன்மொழி வரை எல்லாருமே. ஏன்னா திருப்பூர் கூட மாநகராட்சியாம்? ஆனா 125 வருஷ பழமை வாய்ந்த அந்த ஆங்கிலேயர் ஆட்சியிலேயே மிக சிறந்து விளங்கிய மயிலாடுதுறை இன்னும் நகராட்சியாம். போகட்டும். ஆனா ஒரு தீர்மானத்தை கூட நிறைவேற்றாத ஒரு நகராட்சியை என்ன செய்யலாம்?
நேத்திக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பேசுறார் "கோவில்நிலத்தை எடுப்பது தப்பு"ன்னு. ஆனா பரிமள ரங்கநாதர் என்ன அனாமத்தா? சரி எடுங்க. செய்யுங்கன்னா அதுக்கு எங்க எம் எல் ஏ பொது மக்களுக்கு இடைஞ்சல் வராம ஒரு ஒதுக்குபுறமா பேருந்து நிலையம் வரனும்ன்னு துணை முதல்வருக்கு அறிக்கை விடுறார். என்ன கொடுமை. அதை சட்ட சபையிலே பேச வேண்டியது தானே? எனக்கு குருதி அழுத்தம் அதிகமாகுது. இந்த விஷயம் வேண்டாம். நாளை நான் விளக்கமாக ஒன்லி பேருந்து நிலையம் பத்தி மட்டும் பதிவு எழுதறேன்!
எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருப்பதால் சின்ன பதிவா முடிக்கிறேன்!
May 3, 2010
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ! இன்பத்தில் ஆடுது என் மனமே!!!
வேற என்ன எனக்கு அபிஅப்பா என பதவி உயர்வு கிடைத்த நாள். காலை முதலே அத்தனை ஒரு சந்தோஷம் எனக்கு. அதை விட அபிக்கு சந்தோஷம் அப்பா இந்த வருடம் கூட இருப்பதால். அதைவிட தம்பி நட்ராஜ்க்கு காரணமே தெரியாமல் சந்தோஷம். புளியோதரை, தயிர் சாத பாக்கெட்டுகள் வினியோகம், கோவில், ஆசீர்வாதங்கள், போன் கால்கள், தவிர இந்த வருஷம் கேக்கும் உண்டு!
இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நிலாகுட்டிக்கும், அபிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள். எல்லா வளமும் பெற்று சந்தோஷமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்!!!
இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் நிலாகுட்டிக்கும், அபிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள். எல்லா வளமும் பெற்று சந்தோஷமாய் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்!!!
Subscribe to:
Posts (Atom)