பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 13, 2010

ஒரு வழியா நட்ராஜ் ஸ்கூல் போயாச்சு!!!

நட்ராஜ் ஸ்கூல் சேர்த்துட்டு வந்த போதே ஜூன் பத்தாம் தேதி திறப்புன்னு தெரியும். அன்னிக்கு முதலே பத்தாம் தேதி பள்ளி கூடம் போகனும் போகனும்ன்னு சொல்லி சொல்லி வந்தாலும் ஒன்பதாம் தேதி நாளை முதல் பள்ளி கூடம் போகனும்னு சொன்ன போது "அப்பா ஒன்பதுக்கு பின்னே பதினொன்னு தானே"ன்னு அப்பாவியாக இல்லை விஷயாளியாக கேட்க எனக்கே கொஞ்சம் பாவமாக தான் இருந்தது. அதற்கு முதல் நாள் வரை யூனிபாஃர்ம், ஷூ, ஸ்கூல் பேக் எல்லாம் வீட்டுக்கு வர வர அவன் "இவனுங்க நம்மை விட மாட்டானுங்க" என தெரிஞ்சுகிட்டான்.

ஒன்பதாம் தேதி இரவு தூங்கின பின்னே இரவு ஒரு மணிக்கு எழுப்பினான்.

"என்னடா தம்பி? உச்சா வருதா?"

"அப்பா நீ தம்பியா இருக்கும் போது (அதாவது நான் அவனை மாதிரி இருக்கும் போது) ஸ்கூல் போக அழுவியா?

இவனை சைக்கலாஜிகலா மாத்திடுறேன் பேர்வழின்னு "ஹய்யோ இல்லவே இல்லை. நான் காலை எழுந்து நானே குளிச்சுட்டு உன் பாட்டிகிட்ட போய் ஸ்கூல் பேக் எல்லாம் வாங்கிகிட்டு, ஸ்நாக்ஸ் பாக்ஸ் எல்லாம் அதிலே வச்சுகிட்டு டாட்டா சொல்லிட்டு நானே சமத்தா ஸ்கூல் சிரிச்சு கிட்டே போவேன்" என சொன்னேன். நான் ஸ்கூல் போன கதை எல்லாம் தான் ஏற்கனவே தெரியுமே உங்களுக்கு நான் எத்தனை சமத்துன்னு. சொல்லிட்டு நினைத்து பார்த்தேன். நியூ கொழும்பு ஸ்டோர்ஸ்ன் மஞ்ச பை தான் ஸ்கூல் பேக்,வார் வச்சு தைத்த டவுசரில் சுட்ட புளியங்கொட்டையோ அல்லது நார்த்தங்காய் ஊறுகாயோ தான் ஸ்நாக்ஸ்.

விலாவாரியா நான் சமத்தா ஸ்கூல் போனதை சொல்லிட்டு கேட்டேன். "இப்ப சொல்லு நீ சமத்தா போவியா ஸ்கூலுக்கு?"ன்னு கேட்க "இல்ல நான் அழுவேன்"ன்னு சொல்லி திரும்பி படுத்து தூங்கிட்டான். என் சைக்காலஜிகல் ட்ரீட்மெண்ட்ல தீய வைக்க. எனக்கு தான் தூக்கம் போச்சு. அவனை எப்படிடா ஸ்கூல் அழைச்சு போவதுன்னு.

காலை ஆறு மணி முதல் கிளம்ப ஆரம்பிச்சு...ஆரம்பிச்சு ..ஆரம்பிச்சு இதோ கிளப்பியாச்சு! சாமி எல்லாம் கும்பிட்டு வாசலில் உட்கார வச்சுட்டு வண்டிய எடுத்து வெளியே வைக்கும் வரை அழுகை தான் படியிலே உட்காந்துகிட்டு.




"சரி ஸ்கூல் போக வேண்டாம்.சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்"ன்னு சொல்லி வண்டியிலே உட்கார வச்சு அவன் தப்பிக்காம இருக்க பின் பக்கம் அவன் அம்மாவும் உட்காந்து வேற வேற வழியா பள்ளி கூடத்துக்கு போயாச்சு. வல்லளார் கோவில் கிட்டயே வண்டிய நிப்பாட்டி தூக்கியாச்சு அவனை. பள்ளி சேர்க்கும் போது செஞ்ச ரகளை நியாபகம் இருந்ததால் அத்தனை முன்னேற்பாடு.



எனக்கே கொஞ்சம் பாவமா இருந்துச்சு. அங்க பயங்கர ரகளைக்கு பின்னே தூக்கி போனா எல்லா குழந்தையும் இவனை மிஞ்சிடும் போல அத்தன அழுகை. கொடுமை என்னான்னா ஒரு அம்மாவும் அழுதுச்சு. பிள்ளையை அழுகிறானேன்னு. அதை விட கொடுமை அந்த வகுப்புகள் எல்லாம் ஜெயில் மாதிரி குழந்தை பேரை கேட்டுட்டு உள்ளே விட்டு சாத்திகிறாங்க அந்த அந்த வகுப்பு டீச்சர்.

அது வரை அழுதவன் ஸ்விட்ச் போட்ட மாதிரி டக்குன்னு நிப்பாட்டினான். நிப்பாட்டிட்டு சொன்னான் "நான் அழுகலை. அதனால என்னை அந்த பசங்க கூட போடாதீங்க, நான் அபி கிட்ட உட்காந்துகறேன்". நானும் வெட்கமே இல்லாம அதையும் கேட்டு பார்த்தேன். அவங்க ஒத்துக்கலை.



அன்று காலை 10.30க்கு அழைச்சு போயிடலாம்னு சொன்னாங்க. அது வரை கோவில்ல உட்காந்து இருந்துட்டு அழைக்க போனோம். சும்மா ஜாலியா முதல் பென்ச்ல "வர்ரான் வர்ரான் வேட்டைகாரன்"ன்னு பாடிகிட்டு இருந்தான் கூட இரண்டு புது நண்பர்களோட.

ஒரு வழியா நிம்மதியா ஆச்சு. அடுத்த நாள் வேற கலர் யூனிபாஃர்ம். அன்றும் அழகா போனான். பின்னே இரண்டு நாள் லீவ். நாளை போக இன்னிக்கே ரெடியாகிட்டான். இப்ப கூட முதுகிலே பேக் மாட்டிகிட்டு தான் தூங்குகிறான். பார்ப்போம். நாளை என்ன செய்கிறான்னு.

19 comments:

  1. //நாளை போக இன்னிக்கே ரெடியாகிட்டான். இப்ப கூட முதுகிலே பேக் மாட்டிகிட்டு தான் தூங்குகிறான்.//

    சிரித்தபடியே வாசித்து முடித்தாயிற்று:)! சமத்துப் பையன் நட்ராஜ். அவனுக்கு என் வாழ்த்துக்கள்!

    **

    இப்படி நீங்க அழும் குழந்தைகளைப் படம் பிடித்திருப்பதை அவங்க பெற்றோர் மட்டும் பார்க்கணும். ப்ளாக் படிக்க மாட்டாங்க எனும் தைரியம்தானே:)?

    ReplyDelete
  2. நண்பரே,

    பள்ளிக்கூடம் போவதாக சொல்லிவிட்டு திருட்டு(?) மாங்காய் பறிக்க போன காலங்கள் ஞாபகம் வந்தது.

    (நானும்நம்மவூர்தான்)

    ReplyDelete
  3. //பேக்,வார் வச்சு தைத்த டவுசரில் சுட்ட புளியங்கொட்டையோ அல்லது நார்த்தங்காய் ஊறுகாயோ தான் ஸ்நாக்ஸ். /

    நானெல்லாம் பொட்டுக்கடலை மிக்ஸ்டு வித் சக்கரை எடுத்துட்டு போவேனாக்கும் ! :))


    பய அழுவுற மாதிரியே ஒரு சீன் கூட போடல போல படியில மட்டும் உக்கார்ந்து லைட்டா ஃபீல் பண்ணுறாரு போல :)))


    கீழ கூட்டமா நிக்கிற குட்டீஸ் போட்டோ நிதர்சன உலகத்தில கல்வி ரொம்ப முக்கியம்ன்னாலும் என்னமோ ஃபீல் பண்ண வைக்குது :(

    ReplyDelete
  4. நட்ஸின் ஸ்கூல் பயணம் ரொம்ப சுவையா இருந்தது. நட்ராஜ் பரவாயில்லை அபி அப்பா, என் தங்கை குழந்தைகளை 1.5 வயசுல கொண்டு போய் ப்ளே ஸ்கூல்ல விட்டுட்டு வரும்போது அவங்க அழுத அழுகை இருக்கே.. அதான் மனசு வலிக்கிது.. :))

    ReplyDelete
  5. நன்றி ஜெயஸ்ரீ.. பள்ளிக் கூடம் போக அழாம இன்ட்ரெஸ்டா போறதுக்கு. லீவு எடுத்துக்கச் சொன்னாலும் அடம் பிடிச்சுப் போறதுக்கு. வீட்டுக்கு வரும் போதே அப்பா வீட்ல இருக்காராம்மான்னு கேட்டுட்டு வரதுக்கு. வரும்போது நான் வீட்ல இருந்தா ஓடி வந்து கட்டிப் பிடிச்சு கன்னத்துல எச்சில் தெரிக்க குடுக்கும் முத்தத்துக்கு. டெய்லி ஸ்கூல் போகறதுக்கு முன்னாடி வீட்ல இருந்து வேலை செய்யுப்பான்னு கேட்டுட்டு போறதுக்கு. நட்டு போஸ்ட்ல இதை சொல்லிக்கனும்னு தோணுச்சு.



    நட்டு பைக்ல சூப்பர் போஸ். பயபுள்ளைய வீட்ல வச்சு எடுக்கும் போத் எவ்ளோ கேர்லஸ் பாருங்க. பின்னாடி கேமரா பேக் அப்படி தூக்கிப் போட்டிருக்கீங்க. அப்படி போட்டா கேமராக்கு நல்லதில்லை.

    அப்புறம் அங்க ஜெயில் மாதிரி இருக்கிற ஸ்கூல் கேட்டைப் பார்த்த உடனே குழந்தைங்க அழறதில நியாயம் இருக்குன்னு தோணுது. ஸ்கூல்னா குழந்தைகள் பார்த்த உடனே லயிக்கும் படியான சூழல் இருக்கனும். ஹ்ம்ம்.. கல்வி வியாபார உலகில அதுக்கெல்லாம் எங்க கவனம் செலுத்தப் போறாங்க

    ReplyDelete
  6. அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும்!
    http://kaniporikanavugal.blogspot.com/ மிக்க நன்றி!

    ReplyDelete
  7. கடேசி படத்தைப் பார்த்துட்டு வாரிசு கேட்டாரு “ஏன் அழுவறாங்க”?

    ”பள்ளிகூடத்துல இருக்கிறாங்க, அதான்”


    “இல்லேப்பா, ஜெயில்ல போட்டு பூட்டி வெச்சிருக்காங்க, அதான் அழுவறாங்க “

    நான் “மூச்”

    ReplyDelete
  8. Nattuvukku oru shottu kudunga yen saarbila. Krishna madiriye avanum poruppa irukkan parunga.

    ReplyDelete
  9. :-) :-)

    கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))//

    கருத்து :-)

    ReplyDelete
  10. Endha school la nattuva sethu irukinga abi appa??? Uniform patha Raj matric madri iruku...

    ReplyDelete
  11. உங்கள் பையன் க்யூட் பேபி. சமத்தா இருக்கான்.

    ReplyDelete
  12. //அதை விட கொடுமை அந்த வகுப்புகள் எல்லாம் ஜெயில் மாதிரி குழந்தை பேரை கேட்டுட்டு உள்ளே விட்டு சாத்திகிறாங்க அந்த அந்த வகுப்பு டீச்சர். /

    kodumai

    ReplyDelete
  13. புள்ளய பொறுப்பா ஆயத்தப்”படுத்தி” பள்ளிக்கு கொண்டுபோய் விட்டுட்டு அழச்சுக்கிட்டு வந்த ஒங்களத்தான் பாராட்டனும்!

    நட்’ராஜுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. ஆஹா... சூப்பர்... ஒரு வழியா ஸ்கூல் சேத்தாச்சு... பாவம் குட்டிஸ்.... பட் உங்க வாரிசு சமத்து தான் போல...
    (ஒரு கொஸ்டின் - நீங்களும் "அபியும் நானும்" பிரகாஷ்ராஜ் மாதிரி விடிய விடிய படிச்சு entrance எக்ஸாம் எழுதினீங்களா? சும்மா ஒரு ஜெனரல் knowledge தான். வேற ஒண்ணும் இல்ல... ஹா ஹா ஹா)

    ReplyDelete
  15. /கீழ கூட்டமா நிக்கிற குட்டீஸ் போட்டோ நிதர்சன உலகத்தில கல்வி ரொம்ப முக்கியம்ன்னாலும் என்னமோ ஃபீல் பண்ண வைக்குது :(/
    பெரிய ரிப்பீட்டு!

    ReplyDelete
  16. //முதல் பென்ச்ல "வர்ரான் வர்ரான் வேட்டைகாரன்"ன்னு பாடிகிட்டு இருந்தான்//
    நீங்க வர்ரப்ப இந்தப் பாட்டைப் பாடிட்டு இருந்தான்னா, அதுக்கு ஏதோ உள்நோக்கம்
    இருக்குன்னு நம்புறேன். அது என்ன?

    ReplyDelete
  17. நட்டுவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    அப்பா போல அம்மாபோல அக்கா மாதிரி ரொம்ப சமத்தா இருக்கான் பையன்.
    நல்ல மனிதனாக வளர்ந்து பெற்றோர்க்கு நல்ல பெயர் வாங்கித் தருவான். வெகு நல்ல பதிவு அபி அப்பா.தந்தைர்தின வாழ்த்துகள்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))