பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 8, 2013

இது ஒரு பொடி விஷயம்!



உடனே நீங்க இது ஒரு சின்ன விஷயம்னு நினைச்சா நான் அதுக்கு ஜவாப்தாரி இல்லை. நிஜமாகவே "பொடி" விஷயம். இந்த பொடி இருக்க்கே பொடி... அதுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால நட்பு. என்னவோ கலைஞரும் எம் ஜி  ஆரும் நட்பு மாதிரி நினைச்சுக்காதீங்க. நிஜமாகவே நாற்பது ஆண்டு கால நட்பு.

எங்க வீட்டிலே பொடி போடும் ஆட்கள் என பார்த்தா நான் சின்னதா இருக்கும் போது.. அதாவது ஒரு ஆறு அல்லது ஏழு வயசு... என் சித்தப்பா... ராமசாமி ...சித்தப்பா அப்போ இளைஞர்..தீவிர திமுக... அல்லது திமுக தீவிரவாதி எப்படி வேண்டுமானா வச்சுக்கலாம். அவரு கடந்த கி.மு காலத்தில் இருந்தே  இருந்தே அண்ணா பக்தர்.

இப்போ சமீபமா டாக்டர் அன்புமணி சொல்றாரே, ஒரு தலைவனை பார்த்து தான் தொண்டன் கெட்டு போறான்னு அது மாதிரி அண்ணாவை பார்த்து பொடி போடும் பழக்கத்துக்கு ஆளானவர்  சித்தப்பா. அஃப்கோர்ஸ் என் அப்பாவும் தான். காலையில் முறைவாசல் செய்ய வரும் அம்மா முதலில் திண்ணையில் தூங்கும் சித்தப்பா தலையணிக்கு அடில கை விட்டு பொடி டப்பா வை எடுத்து சாக்கடைல போட்டுட்டு தான் அன்றைய சண்டையை ஆரம்பிபாங்க. (என் அம்மா அப்பா கல்யாணத்தின் போது சித்தப்பாவுக்கு பத்து வயது தான்)



அண்ணா மாயவரத்துக்கு பொதுக்கூட்டம் வரும் போது வலது பக்கம் கிட்டப்பாவும் இடது பக்கம் தம்பி தேவேந்திரனும் இருப்பாங்களாம். அண்ணா ரொம்ப வீரியமா பேசிகிட்டு இருக்கும் போது வலப்பக்கம் கை நீட்டி "இதோ இருக்கிறாரே தம்பி கிட்டப்பா" என சொல்லும் அந்த கேப்ல கிட்டப்பா ஒரு சிட்டிகை பொடியை அண்ணாவின் வலது கையில் மணிக்கட்டும் முழங்கை மூட்டுக்கும்  இடையே வைப்பாராம், அடுத்த நொடி...இதோ இருக்கும் தம்பி தேவேந்திரன் என சொல்லி இடக்கை காட்டும் போது அந்த இடைப்பட்ட 2 நொடிகளில் அண்ணா தன் வலக்கையை மூக்கின் அருகில் கொண்டு போய் சர்ர்ர்ர்ரிடுவாராம். இப்படியாக சிலாகிக்கப்பட்ட காலம் அது!

அதல்லாம் சின்ன வயசு. பின்ன எனக்கும் பொடிக்கும் ஆன பழக்கம்னு பார்த்தா நான் 8ம் வகுப்பு படிக்கும் போது தான். எம்.பி ராதாபாய் அம்மாள்.... அதாவது உங்களுக்கு புரியனும்னா இப்ப சினிமாவிலே பாடுறாரே மாணிக்க வினாயகம் அவரோட சொந்த அப்பாவின் சொந்த தங்கை இவங்க. இவங்களும் எம் கே ராதாவும் சேர்ந்து நடிச்ச "மாயா மச்சீந்திரா" விலே எம் ஜி ஆர் ஒரு துணை நடிகர். அப்படின்னா பார்த்துகுங்க. அடுத்து குழந்தையம்மா. இது யாருன்னா நம்ம டி ராஜேந்தரின் பாட்டி. அதாவது டி ஆரின் அம்மா பேபி அம்மாளிம் அம்மா!

இவங்களுக்கு நான் தான் "வெப்பன் சப்ளையர்" . பொடிக்கு நாலணா எனக்கு நாலணா என அக்ரிமெண்ட். ஏன்னா அப்போ ராஜேந்தர் எல்லாம் சினிமாவுக்கு போய்விட்டபடியாலும் என்னை விட்டா அந்த பாட்டிகளுக்கு வேற பார்ட்டி எதும் கடைக்கு போக இல்லை என்பதாலும்...நான் தான் போய் பொடிக்கடைல பொடி வாங்கி வரனும்!

பொடிக்கடைன்னா மாயவரத்திலே  ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைக்கு அடுத்த கடை. மணிக்கூண்டு பக்கத்தில்!

ஒரு நிமிஷம்..மொதல்ல ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடை பத்தி சொல்லிடுறேன். அவருக்கு இது நூற்றாண்டு ஆண்டு. அது ஒரு பக்கம் இருக்கட்டும். மக்கள் கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம தொழில் செய்யனும்னு நினைக்கும் ஒரு ஆத்மார்த்தமான கடை. அவங்க கடையை ஏ. வெங்கட்ராமன் அய்யர் கடைன்னா பழைய ஆளுகளுக்கு தெரியாது. "மர்ஃபி வெங்கட்ராமன் அய்யர் கடை"ன்னு சொன்னா தான் தெரியும். அது என்ன மர்பி? அது ஒரு பேமஸ் ரேடியோங்க. அதுக்கு சிம்பல்ன்னா ஒரு அழகிய குழந்தைதான். அவங்க கடை ஷட்டர்ல அந்த குழந்தை படம் இருக்கும். 1 சி - திருச்சிற்றம்பலம் பஸ்ல இருந்து வரும் பெண்கள் "யாத்தீ கேட்டியா இந்த கூத்தை... இந்த குழந்தை டெல்லி பட்டணமாம். எல்லாரும் கண்ணு வச்சி கண்ணு வச்சி செத்தே போய்டுச்சாம்..பாவம்டீ"ன்னு பேசுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன். இவங்க இப்ப சோனி டீலர்.. காலம் மாறிகிட்டே வருதுல்ல...நிற்க...

அதுக்கு அடுத்த கடை தான் இந்த டி. ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் கடை. அதுக்கு அடுத்த கடைன்னா அது கல்கத்தா விஸ்வநாத்ன்னு ஒரு சேட்டு கடை. ஸ்வீட் கடை. தாடி வச்ச சேட்டு விஸ்வநாத் இருப்பரு. கொசிறு கொடுப்பாரு. நல்லவரு. அதை எல்லாம் விடுங்க. நாம பொடிக்கடைக்கு பொடி நடையா போவும்!

அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க களை கட்டும். ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு. என் அப்பால்லா "டெக்னாலஜி ஈஸ் இம்ப்ரூவ்டு டூ மச்"ன்னு சொல்லி கிட்டு போவாங்க. நாங்க அதை எல்லாம் வேடிக்கை பார்க்க போவோம்.

இப்படியான ஒரு பேமஸ் கடை.... அதிலே போய் "அய்யா நாலணாவுக்கு பொடி கொடுங்க"ன்னு கேட்டா ஏற இறங்க பார்த்துட்டு "ச்சே போடா"ன்னு திட்டுவாங்க. புரியலைல்ல உங்களுக்கு? இருங்க புரியும் படி சொல்றேன்... டாஸ்மாக்ல போய் புதுசா குடிக்க வந்தவன் "சார் ஒரு பெக் பீர் குடுங்க"ன்னு கேட்டா அந்த பணியாளருக்கு எத்தினி கோவம் வரும்? அதான்.. ஓக்கே கேரியான்... மேல போவும்..

"அண்ணே, ராதாம்மாக்கு பொடி வேணும், நெய்ப்பொடி, இன்னிக்கு நெய் கம்மியா ஆனா வேதாரண்யம் கொஞ்சம் ஜாதாவா, லைட்டா "அது" தூக்கலா"

இதான் இன்னிக்கு எனக்கு ராதாம்மா சொன்னது. ராதாம்மாவுக்கு ஒரு ஒரு நாளும் வித வித காம்பினேஷன்ல தேவைப்படும். அது எல்லாம் அவங்க சொன்ன மாதிரி அங்க சொன்னா அவங்களுக்கு புரியும். பொடின்னா நீங்க ஊதித்தள்ளிடலாம்னு நினைக்கும் பொடி இல்லை. ராதாம்மாவுக்கு கொடுப்பது ஒரு நாள் ஊதி தள்ளுவது மாதிரி இருக்கும், ஒரு நாள் பிசின் போல இருக்கும்...இப்படி பல வகை!

ஒரு நாள் கடைக்காரன் என்ன கடுப்பில் இருந்தானோ, அல்லது நான் என்ன கடுப்பில் இருந்தனோ ராதாம்மா சொன்ன காம்பினேஷன் நான் சரியா சொல்லலை போலிருக்கு... போய் பொடியை கொடுத்ததும் 'எலேய் போய் தங்கப்பனை குதிரை வண்டி கட்ட சொல்லுடா"ன்னு சொன்னாங்க. மீண்டும் சைக்கிள்ல வந்து பொடி கடை பக்கத்தில் வந்து தங்கப்பனை "ராதாம்மா வர சொன்னாங்க" என சொன்னதும் "அம்மா கோவமா சொன்னுச்சா சாந்தமா சொன்னுச்சா"ன்னு அவன் வியாக்யானம் பேசுறான்.

ஆச்சு! ராதாம்மா வந்தாச்சு. உடம்பு முழுக்க நகை! வந்து டி ஏ எஸ் ரத்தினம் பட்டிணம் பொடிக்கடை வாசல்ல இறங்குச்சு. ராதாம்மா வந்ததும் ஏ. வெங்கட்ராமன் அய்யர் , கண்ணப்பன் அய்யர், மிட்டாய் கடை சேட்டு, வாதாமரத்து செட்டியார் என எல்லாரும் வந்தாச்சு. பொடியை தூக்கி போட்டு "தங்ங்கப்பா கட்டுடா வண்டிய, எலேய் ... ஒனக்கும் எனக்கும் இனி செத்தா வாழ்ந்தா இல்ல. ஒரு யாவாரம்...அதுல நாயம் இல்லை..என்ன கடை நடத்துற... தோ இங்க சுத்தி இருக்கும் அய்யாங்க எல்லாம் அய்யருமாருங்க எல்லாம் யாவாரம் பார்கலையா... ந்தா.. அந்த வந்தேறி சேட் கம்னாட்டி என்னவா நடத்துறான்"ன்னு சொல்லி கெளம்பிட்டாங்க. சேட்டுக்கு ஏண்டா இங்க வந்தோம்னு ஆகிடுச்சு.

எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. ஆக இதுதான் எனக்கும் பொடிக்கும் உள்ள பந்தம்!

இதை எல்லாம் எதுக்கு சொல்றேன்னா,... கமான்.. கதைக்கு வாங்க.. அப்படியான எனக்கு ஒரு நாள் கண்ணாலம் ஆச்சுது. முதல் நாள் என் மனைவி கேக்குறாங்க. "ஏங்க பொதுவா மனுசன்னு பொறந்தா சில பல கெட்ட பழக்கம் எல்லாம் இருக்கும். நான் ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். அதிலே உங்களுக்கு என்ன பழக்கம் இருக்குன்னு சொன்னா நான் அதுக்கு தக்க மாதிரி வாழ பழகிக்குவேன்"

அட! இது ஒரு புது டெக்னிக்கா இருக்குதேன்னு லிஸ்டை வாக்கி பார்த்தா... அடிங்கொக்க மக்கா,,,,,, எல்லாமே எனக்கு பழக்கம் தான்! பொடி மட்டும் தான் பாக்கி இந்த பக்கிக்கு! சரி எல்லாத்தையும்  டிக் அடிச்சா முதல் ராத்திரி கடேசி ராத்திரியா ஆகிடுமேன்னு.... பொடியை மட்டும் டிக் அடிச்சேன்...

ஒரு வழியா 30 நாள் லீவ் முடிஞ்சு துபாய் போகும் போது கையிலே ஒரு பொட்டலம் திணிச்சாங்க. நானும் எதுனா லெட்டரா இருக்கும்னு நினைச்சு பாக்கெட்ல வச்சுகிட்டு சென்னை வந்துட்டேன். ஏர்போர்டிலே என்னை எல்லா இம்சைகளும் செஞ்சு முடிச்சு பின்ன ஒரு வெள்ளை பேண்ட் சட்டை காரர் "சார் ஹீ ஈஸ் ஹேவிங் சம் பவுடர்... மே பீ தி நெக்ஸ்ட் வர்சன் ஆஃப் ஹெராயின்" என அவன் மேலதிகாரிகிட்ட போட்டு கொடுக்க நான் சர்வ மரியாதையுடன் அழைத்து போகப்பட்டு... நடு நாயகமாக அமர வைக்கப்பட்டு ஆராயப்பட்டு... அந்த வஸ்து அதாங்க "பொடி" மேசை மீது வைக்கப்பட்டு அது என்னைப்பார்த்து சிரித்தது!

அட ஆண்டவா, பொண்டாட்டி ரூவத்திலா கஷ்டம் வரனும்னு நினைச்சு கிட்டு இருந்த போது தான் அந்த ஜிம்மி வந்துச்சு. அது பேர் ஜிம்மியான்னு தெரியாது. ஆனா பொதுவா நாய்ன்னா ஜிம்மி தானே! பேரை விடுங்க. நம்ம ஆராய்ச்சி அதுல வேண்டாம். நானே இக்கட்டிலே இருக்கேன். சரி... அது வந்துச்சு.

மோந்து பார்த்துச்சு. மோந்து பார்த்தா பரவாயில்லை... அது ராதாம்மா மாதிரி உறிஞ்சுச்சு. அவ்ளோவ் தான் "பிஸ்க்...பிஸ்க்...பிஸ்க்"ன்னு தும்மிகிட்டே கயித்தை புடுங்கிகிட்டு ஓடுது. அத்தனை ஆளுங்களும் பின்னாடியே ஓட... எனக்கு படம் வுட்டு போச்சு. மீதி இருந்த அந்த ஒத்தை ஆபீசர் கிட்டே சொல்றேன் " நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் பொடின்னா தும்மல் வரத்தான் சார் செய்யும். என்னய கேட்டா சொல்லியிருப்பனே"

என் அறைக்கு வெளியே ஒரே பூட்ஸ் கால் சத்தம். ஓடிப்போய் உயரதிகாரிய கூட்டிட்டு வராங்கலாம்..... வந்தாரு ரங்காச்சாரின்னு ஒருத்தரு....

"ஹேய் மேன்.. மாயவரத்திலே எங்க"

"மாயவரம் சார்"

"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அங்க எங்க?"

"சார் என்ன வேணும் உங்களுக்கு"

"பூண்டு பொடி இருக்கா? புதுசா கல்யாணம் ஆனவன். அனேகமா பொண்டாட்டி செஞ்சு கொடுத்துருப்பாளே"

"சார் நீங்களும் நம்ம பொடி சாதியா?"

"எஸ் மேன் எஸ்.... உனக்கு டைம் ஆகிடுச்சு ஃப்ளைட்டுக்கு.. ஓடு... வைத்தியநாதன்னு உன் அப்பா பேரை சொல்லி கதறிகிட்டு இருக்கானுங்க ... பை தி பை.... பூண்டு பொடியும், பன்னீர் புகையிலை, கும்மோணம் வெத்தலை மூணும் எடுத்து மேசைல வச்சுட்டு ஓடு.. நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"

நான் சிரித்து கொண்டே பிளைட்க்கு ஓடினேன்!

9 comments:

  1. நான் டூட்டின்னு வந்துட்டா ரொம்ப ஸ்ட்ரிக்ட்"

    //

    :)))

    ReplyDelete
  2. பொடின்னா பொடிதான்.

    ReplyDelete
  3. After a long gap, very nice write up. Hilarious.
    Nalina

    ReplyDelete
  4. அண்ணே நீங்க சத்ரியன்ணே. உங்களுடைய பலம் என்று நான் நினைப்பது டீடெயிலிங் தான். மணிக்கூண்டு பக்கத்தில், மர்பி ரேடியோ, திருச்சிற்றம்பலம் பெண்களின் சம்பாஷனைகள் என அசத்தி உள்ளீர்கள். வாரம் ஒரு கட்டுரை இது போல் எழுதுங்கள். உங்கள் ரசிகர்கள் மீ்ண்டும் தங்கள் வசமே. காலை எட்டு மணிக்கு வேலையில் இருக்கனும். நேற்று கொஞ்சம் வேலை இருந்ததால் ஆன்லைனுக்கு வரமுடியவில்லை. இப்பொழுது இதனை படித்து லேட்டாகிறது என்று தெரிந்தும் பின்னூட்டமிடுகிறேன். நன்றி அண்ணே.

    ReplyDelete
  5. ஆஹா... பொடி பொடின்னு பத்த வச்சுட்டீங்க்ளேஎ கொசுவத்தியை!

    அந்தக் காலத்துலே அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்துலே ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பட்டணம் பொடின்னு ஒன்னு இங்கிலாந்து வரை ஏற்றுமதியாகிப் பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருந்துச்சாம். ஏற்றுமதியின் கூடவே மத்ராஸ் பட்டிணத்திலே நாலு சில்லறை வியாபாரக் கடைகள் . கடைகளைப் பார்த்துக்கிட்டதெல்லாம் என் தாய்மாமன்களில் நாலுபேர்.

    தாத்தா மண்டையைப்போட்டார். மாமன்கள் தின்னே நாலு கடையும் வியாபாரமும் குளோஸ்:(

    அம்மா சொல்லிப் புலம்பும் திண்ணைக் கதையில் ஒட்டுக்கேட்டவை:-)

    ReplyDelete
  6. பொடி கதை நன்று. திருச்சியில் கடை வீதியில் ஒரு பொடி கடை பற்றி எனது பெரியப்பா அடிக்கடி சொல்வார். யார் கடையில் சென்று கை நீட்டினாலும் ஒரு சிட்டிகை பொடி தருவார்களாம்.

    சிறப்பான பகிர்வு நண்பரே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ///அங்க என்ன விஷேஷம்னா காவிரில முழுக்குன்னா இங்க களை கட்டும். ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு///.....சின்ன வயசுல ஆச்சர்யபடுதிய விஷயம்.......ஞாபகபடுத்தியதுக்கு நன்றி மாப்பிளை ..........

    ReplyDelete
  8. Your article took me to those days....Good keep it up.

    ReplyDelete
  9. ஒரு ஆள் (லைஃப் சைஸ்) பொம்மை... ஒரு தொட்டி வச்சுகிட்டு ஒரு உலக்கை வச்சு கிட்டு பொடி இடிப்பாரு///..... உள்ளே என்ன இயந்திரம் வைத்திருப்பார்கள் அசைவுக்கு என்று ஆச்சர்யபடுதிய விஷயம்..மலரும் நினைவுகளை மலரவைத்தது ...

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))